மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 29 ஆகஸ்ட், 2019

பிக்பாஸ் : தெருக்கூத்து

Image result for bigg boss 3 28th august 2019
'கட்டிக்கிடும் முன்னே நாம ஒத்திகைய பாக்கனும்டி..
கத்துக்கடி மாமங்கிட்ட அத்தனையும் அத்துபடி...
விடமாட்டேன் பொண்ணே நானே...
உன்னப் பிச்சி தின்னப் போறேன் மானே...'

பாடல் திருப்பள்ளி எழுச்சியாய்... கேமரா கவின் மற்றும் லாஸ்லியாவைப் படம் பிடித்து மகிழ்ந்த பின் முகன், லாஸ்லியா, சாண்டியின் நடனத்தில் லயித்தது. 

ஆட்கள் குறையக் குறைய நடனமாடுவதும் குறைந்து விட்டது... பிச்சிப்போட்ட இடியப்பம் மாதிரி சாக்சி, கஸ்தூரியெல்லாம் ஆடுன இடத்துல ரெண்டே ஸ்டெப்பை வைச்சிக்கிட்டு லாஸ்லியா மட்டுமே தினம் தினம் ஒரே நடனத்தை ஆட வேண்டியிருக்கு.

கிராமங்களில் அம்மன் திருவிழாவில் கரகத்தை வைத்து முளக் கொட்டுவார்கள்... அதைச் செய்தார்கள்... சாண்டி பிக்பாஸைப் பற்றி பாடல் பாடினார்... சேரன் முளக்கொட்டுப் பாட்டுச் சொன்னார். முன்னரே பயிற்சி கொடுக்கப்பட்டிருக்கும் போல எல்லாரும் ஒரே மாதிரி ஆடினார்கள்.

சினிமாவில் நாயகன் எனக்கு இன்னொரு கதை இருக்குன்னு சொல்வதைப் போல லாஸ்லியாவிடம் ஒரு கதையை ஆரம்பித்தார் கவினார்... எனக்கு மூணு வருசமா ஒரு காதல் இருந்துச்சு... ஆனா அது முப்பத்தாறு மாசத்துல முழுசா நாலு மாசம்தான் மகிழ்வான காதலாய் இருந்தது. மற்ற மாதங்களில் எல்லாம் சந்தேகங்களும் பிரச்சினைகளுமாய்த்தான் இருந்தது. அதனால் அது எனக்கு பிரச்சினையான காதல்தான் எனச் சொல்லிக் கொண்டிருந்தார். இதை ஏன் சாக்சியிடம் சொல்லவில்லை என்று யோசிப்போம் என்பதால் அவரே அதற்கும் பதில் வைத்திருந்தார்.

கவின் : எனக்கு அது உண்மையிலேயே பிரச்சினையான ஒரு காதல்தான்ப்பா...

லாஸ்லியா : ம்...

கவின் : இங்க வரும் முன்னால அவங்க போகாதேன்னு சொன்னாங்க... அதையும் மீறி வந்தேன்.

லாஸ்லியா : ம்...

கவின் : கிளம்புறப்போ அவங்களுக்குப் போன் பண்ணினேன்... ஆனா அவங்க எடுக்கலை...

லாஸ்லியா : ம்...

கவின் : என்னமோ உங்கிட்ட சொல்லணும்ன்னு தோணுச்சி சொல்லிட்டேன்.

லாஸ்லியா : ம்...

கவின் : நல்லா யோசிப்பா... உனக்கும் தெரியணும்ல்ல... ஏன்னா நாளைக்கு நாம சேர்ந்து வாழணுமுல்ல...

லாஸ்லியா : ம்...

கவின் : என்னாச்சு... ஏன் ஒரு மாதிரி ஆயிட்டே...

லாஸ்லியா : எதாயிருந்தாலும் வெளியே போய் பேசிக்கலாம்.

கவின் : இல்லப்பா... நீ யோசிக்கணும்ன்னுதான் சொன்னேன்... இதயம் உடைச்சிருச்சா..?

லாஸ்லியா : ஒரு மண்ணும் உடையலை... வெளிய போயி பேசுவோம் மரமண்டை... இல்லேன்னா அந்தாளு இந்தச் சனிக்கிழமையும் நம்மளைத்தான் வச்சி ஆத்துவாரு...

இந்த உரையாடலுக்குப் பின் கவின் முகம் கொஞ்சம் பிரகாசமாகவே இருந்தது. லாஸ்லியாவின் முகத்தில்தான் யோசனை ரேகைகள்... 

கவினைப் பொறுத்தவரை பிக்பாஸ்க்குள் வரும் வரை ஒரு காதலி இருந்திருக்கிறார்... அவரைப் புறந்தள்ளிவிட்டுத்தான் வந்திருக்கிறார்... இங்கு சாக்சியுடன் காதல் செய்தார்... அதே நேரம் லாஸ்லியாவுக்கும் அம்பு விட்டார். இந்த அம்பு அன்பானபோது சாக்சியைப் புறந்தள்ளினார். அடுத்த ஆள் உள்ளே நுழையும் போது லாஸ்லியாவைப் புறந்தள்ளமாட்டார் என்பது என்ன நிச்சயம்...? மூன்று வருடக் காதல் என்பது உண்மையானதுதானா அல்லது எல்லாமாய் இருந்தோம் என்றதன் பின்னே அவர் பிரச்சினைக்குரியது என்னும் போது அப்பெண்ணுடனான உறவு எப்படியானது..? லாஸ்லியாவுக்காக அவரை நிராகரிக்கிறாரா..?

இங்கே இன்னொன்றையும் யோசிக்க வேண்டும்... லாஸ்லியாவுடன் நெருங்கிப் பழக ஆரம்பித்து கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் ஆன நிலையில் இதுவரை சொல்லாத பிரச்சினைக்குரிய காதலை இப்போது சொல்வானேன்..?

இந்த வாரம் கிராமத்து டாஸ்க்.... பெரும்பாலும் கிராமியக் கலைகளைச் சொல்லிக் கொடுத்து, அதைப் பயிற்சி செய்து இவர்கள் இரு குழுவாகப் பிரிந்து நிகழ்ச்சி நடத்தி முடித்துப் படுக்கும் போது அதிக நேரமும் சோர்வுமாய் நாட்கள் நகரும். இந்த நேரத்தில் சொன்னால் லாஸ்லியாவால் இது குறித்த சிந்தனைக்குள் அதிகம் மூழ்க முடியாது. வெளியில் போய் பேசிக் கொள்ளலாம் என்று சொல்லியவள் இதை இப்போது பெரிதாக எடுக்கக்கூடிய சூழலும் இல்லை... ஒருவேளை அப்படி ஒரு காதல் இருந்ததை... அந்த உறவு நல்லதொரு உறவாக இல்லாத பட்சத்தில் லாஸ்லியா பிரச்சினையாக்கும் போது நான்தான் முன்னமே உன்னிடம் எல்லாம் சொன்னேனே எனச் சொல்லித் தப்பிக்கவும் முடியும். கூட்டிக் கழித்துப் பார்த்தால் கவின் கணக்குப் பண்ணுவதில் கில்லாடி.

நேற்று பொம்மலாட்டம் சொல்லிக் கொடுத்த பெரியவர்தான் இன்று தர்மபுரியில் பத்து வயது முதல் தெருக்கூத்தில் ஆட ஆரம்பித்து கிட்டத்தட்ட நாப்பது வருடங்களாக அந்தக் கலையைப் பாதுகாத்து வரும் திரு.ராமலிங்கம் அவர்களின் குழுவைக் கூட்டி வந்து அறிமுகம் செய்து வைத்தார். இவர்கள் ஆடும் தெருக்கூத்துக்குப் பெயர் கனியன் கூத்து என்றார். 

இக்குழுவில் ராமலிங்கம் அவர்களின் மூத்த மகன் இன்சினியரிங் முடித்துவிட்டு அப்பாவுடன் இந்தக் கலை முடிந்து விடக்கூடாது என்பதால் கூத்தாட வந்திருப்பதாகச் சொன்னார். அவர்தான் மந்திரி வேஷம் கட்டுகிறார். ராமலிங்கம் ஐயா அவர்கள் தங்கள் பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைத்திருக்கிறார் என்று கேட்கும் போது மகிழ்வாய் இருந்தது. ராணி வேசம் போடுபவர் அவரின் தம்பி மகன் என்பது கூடுதல் செய்தி.

சேரனும் முகனும் கோமாளியாகப் பயிற்சி எடுத்துக் கொண்டார்கள்.. கற்றுக் கொள்ள வேண்டும் என்ற தீவிரம் சேரனுக்குள்... அதுவாகவே வரும் சிரிப்போடு கோமாளியாகவே மாறினார் முகன்.

ராணியிடம் பயிற்சி எடுத்தவர்கள் சாண்டியும் ஷெரினும்... சாண்டி கலக்க... ஷெரின் நீண்ட வசனத்தைச் சொல்லிக் கொடுத்த போது நான் இப்பத்தான் தமிழ்ல்ல ஆனா... ஆவன்னாப் படிக்கிறேன்.. ஆத்திசூடியே வாயில் வரலை... அதற்குள்ள சிலப்பதிகாரத்தையும் சீவக சிந்தாமணியையும் சொல்லிக் கொடுக்குறீங்களேன்னு கேட்டதும் எல்லாரும் சிரித்தார்கள்.

ராஜவிடம் வனிதாவும் தர்ஷனும் பயிற்சி எடுத்தார்கள்... டாஸ்க் என்று வந்தால் தர்ஷன் கமலஹாசனாக மாறிவிடுவார். கர்ஜிக்கும் குரலில் அவரின் பயிற்சி எடுத்த முறை செம... வனிதாவும் பயிற்சி எடுத்துக் கொண்டார்.

மந்திரியிடம் பயிற்சி எடுத்தது காதல் ஜோடி... கவினிடம் ஒரு ஈடுபாடு இருந்தது... பாவாடை தாவணியில் ஆடிய லாஸ்லியா அழகுதான்.

பயிற்சி முடித்து சேரன், கவின், தர்ஷன், ஷெரின் என ஒரு அணியும் வனிதா, முகன், சாண்டி, லாஸ்லியா என ஒரு அணியும் பிரிந்து ஆளுக்கொரு தலைப்பில் தெருக்கூத்துக்குத் தயாரானார்கள். போக்குவரத்து நெரிசல் குறித்து வனிதா அணியும் மழை வெள்ளம் பாதிக்கக் காரணம் நீர்நிலைகளை எல்லாம் பட்டாப் போட்டதுதான் என்பதைக் குறித்து சேரன் அணியும் கூத்து நடத்தினார்கள்.

அவரவர் தலைப்பில் நல்லாவே செய்தார்கள்... 

வனிதா அணியைப் பொறுத்தவரை கோமாளியாக முகன் கலக்கினார்.... ராணியாக சாண்டியும் செம.... மந்திரியாக லாஸ்லியாவும் எமதர்மராஜாவாக வனிதாவும் நல்லாவே செய்தார்கள். பாட்டில் கவனம் செலுத்திய அளவு இறுதிக் காட்சியில் கவனம் செலுத்தவில்லை... 

சேரன் அணியைப் பொறுத்தவரை தர்ஷன் கலக்கினார்... கூடவே கவினும் மந்திரியாய்.... ஷெரின் ராணியாய் வந்து போனார்... இந்த வயதில் சேரன் கோமாளியாக நடிப்பது என்பது பெரிய விஷயம்... முடிந்தவரை பண்ணினார். இறுதியில் ஷெரினைத் தூக்கிய தர்ஷன் டேய் கடைசி வசனத்தைச் சொல்லுடா....கனமா இருக்கா தூக்க முடியலை என்றது கலக்கல்... முடிவில் சேரன் பேசிய வசனங்கள் அருமை. 

மற்றபடி தெருக்கூத்துக் கலைஞர்கள் அளவுக்குச் செய்ய முடியாதென்றாலும் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள். கவினை வாழ்த்தினார் ராமலிங்கம் ஐயா... சேரன் அணி வெற்றி.

ஓப்போ புதிய போன் அறிமுகத்துக்காக போட்டோ எடுக்கும் டாஸ்க்... 

சேரனும் முகனும், சாண்டியும் லாஸ்லியாவும், கவினும் ஷெரினும் என மூன்று அணிகள்... தர்ஷன் மற்றும் வனிதா நடுவர்கள். 

ஐந்து படங்கள் எடுத்து அதை வைத்துக் கதை சொல்ல வேண்டும். லாஸ்லியா சொன்ன கதை அவ்வளவாக எடுபடவில்லை... கவின் சொன்ன கதை கொஞ்சம் பரவாயில்லை... போட்டோக்கள் நல்லாவே இருந்தது. சேரன் அழகான ஒரு கதை சொன்னார்... மற்ற அணியினரைப் போல் போட்டோ பிரேமுக்குள் மாடலை நிறுத்தாமல் எடுத்தது சிறப்பு... அந்தப் படங்களுக்குத் தகுந்த கதையாய் அமைந்தது அதைவிடச் சிறப்பு. வெற்றியாளர்கள் இவர்களே.

வனிதா கூட 'டைரக்டர் டச்' எனப் பாராட்டினார். மிகச் சிறந்த கதை சொல்லி சேரன் என்பது எல்லாருக்கும் தெரிந்ததே... இந்த வெற்றி அவருக்கு ரொம்ப மகிழ்வைக் கொடுத்திருக்கும்  போல இரண்டு கைகளையும் தூக்கி ஏற்றுக் கொண்டார். தோல்வியில் துவளும் போது சிறியதொரு வெற்றி கூட பழங்கஞ்சி சாப்பிட இடத்தில் பிரியாணி சாப்பிடுவது போல்தானே.

பிள்ளையை நினைத்து ராத்திரி ரெண்டு மணிக்கு வெளியில் உட்கார்ந்து புலம்பிக் கொண்டிருந்தார் சாண்டி. நாங்கள்ல்லாம் வருடக் கணக்கில் புலம்பிக் கொண்டிருக்கிறோம் கேட்கத்தான் ஆளில்லை... ஒரு கட்டில் வாழ்க்கை மிகவும் மோசமானது சாண்டி எனச் சொல்லத் தோன்றியது.

பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

3 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

// தோல்வியில் துவளும் போது சிறியதொரு வெற்றி கூட... //

வெற்றியை விடுங்க... அது அவரவர் மனதை பொறுத்து...! மீண்டும் ஒரு சின்ன அங்கீகாரம் கிடைக்கும் போது, அந்த மகிழ்ச்சியே, வெற்றி பெற்ற மகிழ்ச்சிக்கு பக்கத்தில் கூட வரமுடியாது...

'பரிவை' சே.குமார் சொன்னது…

ஆமாம் அண்ணா...
அதுதான் உண்மை...
அதற்குத்தானே அவரும் காத்துக் கொண்டிருக்கிறார்.

ஸ்ரீராம். சொன்னது…

காதல் என்பது செம பொழுதுபோக்கு ஆகிவிட்டது போல...