மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

மனசின் பக்கம் : அத்தி முதல் ஆங்காரா வரை

Image result for அத்திவரதர்
த்திவரதர் முந்தைய வருகை இந்தளவுக்கு யாருக்குமே தெரிந்திருக்கவில்லை என்ற போது இம்முறை இவ்வளவு பிரபலம் ஆக இணையமே முக்கியப் பங்காற்றியிருக்கிறது. எல்லாத் தெய்வங்களும் தரிசனம் கொடுப்பதில் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாட்டைத்தான் கொண்டிருக்கின்றன... அந்த வரிசையில் அத்திவரதரும் இணைந்திருக்கிறார்... இணைத்திருக்கிறார்கள். இந்த விஷயத்தில் சிவகங்கை மாவட்டக்காரர்களான நாம் மார்தட்டிச் சொல்லலாம் பிள்ளையார்பட்டியில் எதற்கும் பணம் வசூலிக்கப்படுவதும் இல்லை... தரம் பார்த்துத் தரிசனமும் இல்லை... இன்று வரை அப்படித்தான் இருக்கிறது. 

மதுரை அழகர் கோவிலில் ஒரு கொள்ளை... எல்லாவற்றிற்கும் பணம்... பணம்... அதேபோல் திருச்செந்தூர், பழனி என எங்கும் கொள்ளைதான்... கேரளாவில் இந்தக் கொள்ளைகள் இல்லை... எது எப்படியோ நயன்தாரா தரிசனங்களும் ரவுடிகளுக்கு சிவப்புக் கம்பளங்களும் விரித்து அத்தியை தத்தியாக்கி தங்கள் சந்தோஷங்களைப் பெற்றிருக்கிறார்கள் சாமிமார்கள்... 

எங்க ஊரில் புவனேஸ்வரி அம்மன் கோவில் ஒன்று உண்டு... எங்க வீட்டுக்கு அடுத்த தெருவில்... அந்தக் கோவிலைப் பார்க்கும் இலக்கியமேகம் ஸ்ரீனிவாசன் மற்றும் அவரது சகோதரர்கள் (எங்களுக்குள் நான் படிக்கும் போதிருந்தே தொடரும் நட்பு இன்று வரை தொடர்ந்து கொண்டு இருக்கிறது) என மூவரும் அம்மன் மீது பற்றுக் கொண்டு மனம் விரும்பிச் செய்யும் பூஜைகளும் அம்மன் அலங்காரமும் அவ்வளவு அழகாக இருக்கும். இவர்கள் யாரையும் விஜபியாகப் பாவித்து தனியான பூஜைகள் செய்து நான் பார்த்ததில்லை... இவர்களின் அலங்காரத்தில் அம்மனின் முகம் அவ்வளவு அழகாக இருக்கும்... எந்த ஒரு செயலையும் மனசிலிருந்து... அற்பணிப்புடன் செய்தால் அது சிறப்பாகத்தான் இருக்கும். 

அத்தியைப் பொறுத்தவரை அழகான சிரித்த  முகம் எப்பவும் மனதில் நிற்கும் கூடவே நயன்தாராக்களும்... இதில் நயன்தாரா மீது தவறில்லை... அவரும் ஒரு பக்தராய்த்தான் வந்திருக்கிறார் என்பதாய் அங்கிருந்தவர்கள் நினைத்திருக்க வேண்டும்... பூஜையை மறந்து பூவையை ரசித்த போட்டோக்கள் வைரலாகி அத்தியை கேவலமாகப் பேசும்படி வைத்து விட்டார்கள். 

எது எப்படியோ அத்தியின் இந்த வருகை பல விஷயங்களை நமக்குச் சொல்லிச் சென்றிருந்தாலும் குறிப்பாக சாதாரணப் பக்தன் என்பவன் எப்போதுமே தள்ளித்தான் வைக்கப்படுகிறான் அது எந்தக் கோவில் என்றாலும் என்பதைச் சொல்லிச் சென்றிருக்கிறார். வருமானத்தின் கணம் கண்டு வருடம் ஒருமுறை அத்தி தரிசனம் கொடுப்பார் என்ற முடிவு எடுத்தாலும் ஆச்சர்யமில்லை.

Image result for 369 malayalam movie wiki

369 - அப்படின்னு 2018ல் வந்த மலையாளப்படம் பார்த்தேன்... ஒரு டாக்டர் காணாமல் போகிறார்... அதை விசாரிக்கும் காவல்துறையிடம் நாயகி வலிய வந்து மாட்டுகிறார்... அவருக்குத்தான் காணாமல் போன இரவு பதினோரு மணிக்கு மேல் உன்னைச் சந்திக்க வேண்டும் என்று குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார். இந்த விசாரணையில் நாயகியின் காதலன் மீது போலீசுக்கு சந்தேகம்... அதற்கேற்றார் போல் நிகழ்வுகள்... நாயகியை கொல்ல முயற்சி... நாயகியைக் கடத்திச் செல்லுதல்... என விரியும் கதையில் டாக்டர் என்ன ஆனார்...? யார் குற்றவாளி...? இந்தக் கதைக்குப் பின்னே ஒரு முன்கதை இருக்க வேண்டுமே... அது என்ன..? என்பதை கொஞ்சம் த்ரில்லாகச் சொல்லியிருக்கிறார்கள்... நமக்கு ஆரம்பத்திலேயே இவர்தான் குற்றவாளி எனத் தெரிந்து விடுவதாலும் முன்கதையில் சொல்லப்படும் கதையும் பின்னான நிகழ்வுகளும்... நெருக்கமான நண்பர்கள் என்னும் போது குடும்பத்தில் இருப்பவர்களை அறிந்திருக்க மாட்டோமா என்ன.. இந்த இடம் சற்றே சறுக்கல். பொறுமை இருப்பின் பார்க்கலாம்.

சென்ற வார இறுதியில் அதாவது வெள்ளி மாலை துபையில் 'அமீரக எழுத்தாளர் குழுமம்' வாசித்ததைப் பகிர்ந்து கொள்வோமென ஒவ்வொருவரும் தாங்கள் வாசித்த ஒரு புத்தகத்தைப் பற்றி பேசலாம் என ஒரு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அபுதாபியில் இருந்து நாங்கள் செல்ல இயலவில்லை என்ற போதிலும் நிகழ்வு மிகச் சிறப்பாக நடந்திருக்கிறது என்பதை கலந்து கொண்டவர்களின் பதிவுகள் சொல்லிக் கொண்டிருக்கின்றன. பாலையில் இது போன்ற முன்னெடுப்புக்கள் இன்னும் பலரையும் எழுதவும் பேசவும் வைக்கும். மாதம் ஒருமுறை இந்த நிகழ்வு நடத்தப்படும் என்ற முடிவும் வரவேற்கத்தக்கது.

க்ரீத் விடுமுறையில் சகோதரர் வேல் முருகன் அழைப்பின் பேரில் அவரது இல்லத்தில் கூடினோம்... நிறைய விஷயங்களைப் பேசினோம்.. கனவுப்பிரியன் அண்ணனும் நெரூடாவும் வேல்முருகனும் விரிவாக மெகஸ்தனிஸ் முதல் இராமானுஜர் வரை பேசினார்கள்... பால்க்கரசு, இராஜாராம், நௌஷத்கான் என எல்லாருமே விவாதத்தில் கலந்து கொண்டு சீரியசாகவும் மகிழ்வாகவும் மணித்துளிகளை நகர்த்திக் கொண்டிருந்தார்கள். நல்லதொரு விருந்து... அதன் பின் சின்னதாய் ஒரு காணொளி... பின் அது குறித்த விவாதம் என இரவு ஒரு மணி நேரம் நகர்ந்தது. இம்மாதிரியான சந்திப்புக்களே சுற்றிலும் பிரச்சினைகள் இருந்தாலும் கொஞ்சமேனும் ஆசுவாசத்தைக் கொடுக்கிறது.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உணவு
னவு அண்ணனின் அழைப்பின் பேரில் நானும் நெரூடாவும் ஹோட்டலுக்குச் சென்றோம்... மட்டன் சூப் எனச் சொல்லி தேங்காய்ச் சட்டினி கலரில் கொடுத்த போதே சுதாரிச்சிருக்கணும்... அப்புறம் மட்டன் கிரேவி, சிக்கன் கடாய்ன்னு சொல்லி  காரமாக் கொடுங்கன்னு சொன்னதுக்கு இனிப்புக் கோழி கொண்டு வந்தான்... பின்னாலயே மட்டன் வரும்ன்னு நினைச்சி இனிப்புக் கோழியோட புரோட்டாவை... இதுக்கு எனக்குப் பிடிச்ச சீனியும் புரோட்டாவும் சாப்பிடிருக்கலாம். 

அடுத்து கடாய் பெருசாவும் சுண்டவச்ச கொழம்பு மாதிரி கொஞ்சூண்டு கறியும் வர, எடுத்துச் சாப்பிட்டா அதே சுவையில் அதே கோழிக்கறி... கடாய் என்பது கடாய் மட்டும்தான் போல... அதுவும் வெளங்கலை... அண்ணனும் ரொம்பப் பொறுமையாய் எனக்கு நல்லாக் காரம் போட்டு சிக்கன் கொண்டு வா... மட்டன் கேட்டதுக்கும் சிக்கனே தர்றேன்னு கொஞ்சம் கோபமாகவே சொல்ல, மீண்டும் அதே சிக்கன்... இப்போது வேறொரு பாத்திரத்தில்... அதன் மீது மிக்சியில் அடித்த வரமிளகாய் தூவி... அடேய் நாதாரிகளா... சிக்கனை வேகவைத்து ஒரு சட்டியில் வைத்துக் கொண்டு நாம் கேட்பத் எதுவோ அதற்குத் தகுந்தாற்போல் தருகிறார்கள். 

இங்கு பிரியாணி என்றால் அப்படித்தான்... ஒரே சாதம்தான்... மட்டன், சிக்கன், மீன் என எதுவேண்டுமே அதை அந்தச் சாதத்தில் வைத்துத் தந்துவிடுவார்கள்... இவர்கள் சிக்கனிலும் அப்படிப் பண்ணியதுதான் வேதனை... சொல்ல மறந்துட்டேனே கடைசியாக் கொடுத்த சிக்கனுக்குப் பேரு 'ஆங்காரா'. இதுல அதிகமான் காரம் இருக்கும் சாப்பிட்டுருவீங்களான்னு கேள்வி வேற... ஆங்காராவுல 'ஆ' மட்டும்தான் இருந்துச்சு... காரம் இல்லவே இல்லை... அதன் பிறகு வெறுத்துப் போய் டீ சாப்பிட அண்ணனின் இல்லம் அருகில் இருக்கும் டீக்கடைக்குச் சென்றோம்... டீ எப்பவும் போல் அருமை... அங்கயே ரெண்டு புரோட்டாவும் மட்டன் கறியும் சாப்பிட்டிருக்கலாம்... அவ்வளவு நல்லாயிருந்திருக்கும்.


-'பரிவை' சே.குமார்.

3 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அத்தி வரதர் - பக்கா வணிகம் ஆக்கி விட்டார்கள்... நிறைய எழதலாம்... நேரத்தை வீணாக்க விரும்பவில்லை...

பிள்ளையார்பட்டி தகவல் உண்மை...

'பரிவை' சே.குமார் சொன்னது…

ஆமாம் அண்ணா... எனக்கும் நிறைய எழுதவே எண்ணம்... வேண்டாமென விட்டுவிட்டேன்.
மற்ற கோவில்களில் செருப்பு பாதுகாப்புக்கு பணம் பெற்ற போதும் பிள்ளையார்பட்டியில் வாங்கியதில்லை... அதேபோல் மற்ற கோவில்களுக்கு முன்னோடியாய் மதியம் அன்னதானம் எப்பவும்.. இப்பவும் சிறப்பாக நகரத்தார்களால் கொடுக்கப்படுகிறது. அங்கு எல்லாரும் பக்தர்களே... அதில் ஏற்றத்தாழ்வு எப்போதும் இல்லை...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்லதொரு தொகுப்பு.

இங்கே அனைத்தும் வணிகம். ஒன்றும் சொல்வதற்கில்லை.