மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 26 ஆகஸ்ட், 2019

பிக்பாஸ் : பிரித்தாளும் சூழ்ச்சி வெல்லுமா..?

Image result for bigg boss tamil 25th august
பிக்பாஸில் சனியிரவு மதுமிதா பிரச்சினைக்காக கேமராக்கள், மனோதத்துவ சட்ட நிபுணர்கள் பற்றி எல்லாம் பேசிய கமல் நேற்று பிக்பாஸில் இருந்து ஒருத்தரை வெளியேற்றக் குரல் கொடுக்கும் நீங்கள் உலகளாவிய விஷயங்களில் ஏன் குரல் கொடுப்பதில்லை...அவற்றிற்கும் குரல் கொடுங்கள் என அமேசான் காடு பற்றி எரிவது பற்றி பேசினார். காற்றில் இருக்கும் ஆக்சிஸனில் 20% நமக்கு அங்கிருந்துதான் கிடைக்கிறது என்றார். இது போன்ற விஷயங்களுக்குக் குரல் கொடுக்கும் பட்சத்தில் உலகளவில் உங்கள் குரல் எதிரொலிக்கும்... மரம் நமக்கு முக்கியமானது... அதை வெட்டினால் கேள்வி கேளுங்கள். எதுக்குடா கமல் இப்படித் தேவையில்லாமல் பேசுகிறான்னு மத்தவங்க நினைக்கலாம்.. சுயநலமாக இருக்குமோ என்றும் கூட நினைக்கலாம்... ஆமாம் சுயநலம்தான்... இந்த மேடையை விட நல்ல இடம் எனக்குக் கிடைக்காது என்று சொல்லிவிட்டு அகம் டிவி வழியே அகத்துக்குள் நுழைந்தார்.

எல்லாரும் கல்யாணத்துக்குப் போற மாதிரி உடை அணிந்து அமர்ந்திருந்தார்கள்... சாண்டி மட்டும் கல்யாணத்தில் பேண்டு வாசிப்பவர் போன்ற உடையில் இருந்தார். கமல் வர்றாருன்னதும் பெண்களுக்கு மேக்கப் போட ஆள் அனுப்புவாங்க போல, நாலு முகமும் நாட்டரசங்கோட்டைத் தேர் மாதிரி அழகா இருந்தது. ஆண்களுக்கு மேக்கப் போட்டா என்ன போடாட்டி என்ன... மழையில நனைஞ்ச மரங்கொத்தி மாதிரித்தானே இருக்கப் போறாங்க.

இது ஒரு போட்டியின்னு சொல்லி விளையாடுங்கடான்னு அனுப்புனா அங்க போயி உறவு முறை வச்சி ஊட்டி விட்டுக்கிட்டா இருக்கீங்க... கஸ்தூரி போய்க் கலைச்சி விடும்ன்னு பார்த்தா அதைக் கலாச்சி விட்டுட்டீங்க... அது சீக்குக் கோழி மாதிரி சுத்தித் சுத்தி வருது... சரி... வனிதாவை அனுப்பினா வாரிவிடும்ன்னு பார்த்தா எல்லாப் பயலுகளும் சேர்ந்துக்கிட்டு அதை வாரித் தள்ளிட்டிங்க... இனி இருக்க நாப்பது நாலும் இப்படியே போச்சுன்னா இது சுறுசுறுப்பான போட்டியா இருக்காது... சுற்றுலாவுக்குப் போனவங்களோட பேட்டியாத்தான் இருக்கும்ன்னு பிக்பாஸ் முடிவு பண்ணி கமல்கிட்ட சொல்லிட்டாரு போல... தனித்தனியா வாங்கடான்னு சொல்லி ஒவ்வொருவருக்கும் டுவிட் போட்டு கூடவே சாம்பிராணியும் போட்டிருக்கார்... இனிமேலானும் சாமியாட்டம் இருக்குமா... இல்ல எப்பவும் போல சப்பரத்துலதான் சாமி போகுமான்னு பார்ப்போம்.

கமல் முதலில் அழைத்தது சாண்டியை... என்னப்பா தம்பி நீ ஜெயிக்கக் கூடிய குதிரைன்னு சொல்றாங்க... ஆனா வெற்றிங்கிறது ஒருத்தருக்குத்தானே கிடைக்கணும்... அதைப் பங்கிடுதல் நல்லாயிருக்காதுல்ல... நட்புல்லாம் வேணும்தான்... ஆனா கோப்பையை எடுக்க நட்பை கொஞ்சம் விலக்கி வச்சிட்டு விளையாடணும்... குருப்போட ஆடியிருந்தா சாதா சாண்டி மாஸ்டர் சாண்டி ஆயிருக்க முடியாதுல்ல... புரிஞ்சதுல்ல.. புரிஞ்சவன் பிஸ்தா சாப்பிடலாம்... புரியலைன்னா புளியோதரைதான்... போயி நீயே இன்னொரு ஆளை வரச்சொல்லு என்றார். 

சாண்டி : சார் இந்தக் கவின் பயதான் மந்திரிச்சி விட்ட கோழி மாதிரித் திரியிறான்... அவனையே வரச்சொல்றேன்... துணூறு போட்டு விடுங்க.

கமல் : ஓகே...

வெளியில் சாண்டி : டேய் உன்ன நான் மாட்டிவிட்டுட்டேன்டா... (ஸ்கூல் டாஸ்க்ல இருந்து இன்னும் வெளியில் வரலை)

கவின் : ஏண்ணே... இப்படி... நேத்துத்தானே காச்சு காச்சுன்னு காச்சுனாரு... மறுபடியுமா..?

சாண்டி : சீக்கிரம் போடா... இல்லேன்னா சிறிய இடைவேளைன்னு சொல்லிட்டு சீரியல் பாக்கப் போயிருவாரு.

கவின் நம்ம நல்லதையே பேசுவோம்.... யார் சண்டை போட்டாலும் அங்கே உங்க குரல் தனித்து ஒலிக்கிறது... சொன்னதை அவர்கள் புரிந்து கொள்ளும்வரை சொல்லிக் கொண்டே இருக்கிறீர்கள்... ஆனா நீங்க யார்..? உங்க திறமை என்ன..? எதாச்சும் உங்களுக்குத் தெரியுமா... அடுத்தவங்களுக்கு விட்டுக் கொடுத்துட்டுப் போகவா இங்கே வந்தீங்க..? இப்ப சாண்டின்னா காமெடியாப் பேசுவாப்லயே அந்தப் பையனான்னு கேட்கும் அளவுக்கு ஒரு அடையாளமிருக்கு... உங்களுக்கு என்ன அடையாளம் இருக்கு... மைக்கை ஆப் பண்ணுவாரே அவரா..? நல்லாப் பாட்டுப் பாடுவாரே அவரா..? சாண்டி கூட சேர்ந்துக்கிட்டு கலாய்ப்பாரே அவரா..? இல்லை அந்தச் சிவப்புக் கதவுக்கிட்ட உக்காந்து பேசுவாரே அவரா..? அப்படின்னு கேட்டா நல்லாவா இருக்கும். இனி வரும் நாட்களில் உங்க தனித்திறமையைக் காட்டணும்... சரியா.... சிவப்புக் கதவை ஞாபகம் வச்சிக்கங்க.

அடுத்து லாஸ்லியா... நீங்க இங்கு வந்த நோக்கம் என்ன..? பாசம், நேசம், உறவு எல்லாம் தேவைதான்... ஆனா இது ஒரு விளையாட்டு... இங்க உறவுக்குப் பாலம் அமைத்தால் உங்கள் பலம் பலவீனமாகிவிடும்... விளையாட வந்துட்டு சுற்றுலாத்தளம் ஆக்கி வச்சிருக்கீங்க... உங்களுக்குக் கிடைத்த வாய்ப்பு எனக்குக் கிடைக்கலைன்னு எத்தனை பெண்கள் ஏங்குவாங்க... அவங்களுக்குக் கிடைத்திருந்தா உங்களைவிட சிறப்பாய் செய்திருப்பேன்னு கூட நினைப்பாங்க... நீங்க வேறொரு நாட்டில் இருந்து வந்திருக்கீங்க... உங்கள் நாடே உங்கள் வெற்றியை எதிர்பார்க்கிறது. அதை நோக்கி நகருங்கள்... அதைவிடுத்து மற்ற விஷயங்களை நோக்கி நகராதீர்கள்... உங்களுக்கு முன்னர் கிடைத்த கைதட்டு இப்போது குறைந்திருப்பதை உணருங்கள்.

கமல் : வேற எதுவும் சொல்ல நினைக்கிறீர்களா..?

லாஸ்லியா : எதைப் பற்றி யாரைப் பற்றிச் சொல்றீங்கன்னு பொதுவா ஒரு குளூ குடுங்க சார்... நான் பக்குன்னு பத்திப்பேன்.

கமல் : பொதுவாத்தாங்க சொன்னேன்.

லாஸ்லியா : நானும் என்னைச் சுய பரிசோதனை பண்றேன் சார்... இங்கிருக்கும் உறவுகள் உண்மையா... பொய்யான்னு... என்னால புரிஞ்சிக்க முடியலை... இனி புரிஞ்சிப்பேன் சார்.

கமல் : புரியலைன்னு எல்லாம் காரணம் சொல்ல வேண்டாம்... உங்களுக்கு எல்லாமே புரியும் என்பதைவிட விபரமாய்த் தெரியும் என்பதைச் சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.

லாஸ்லியா : கவினா... சேரனா.... யாரைச் சொல்றீங்க... குழம்புது சார்...

ஒரு வழியாக லாஸ்லியா புரியாமலேயே போக, சேரன் வந்தார்... சிறிது நேரம் நின்றார்... கமல் உட்காருங்க என்று சொல்லியிருக்கக் கூடும் என்றே தோன்றுகிறது... ஆசிரியரிடம் பாடத்தைக் கூர்ந்து கேட்கும் பையனைப் போல உட்கார்ந்திருந்தார்... இவரின் பணிவு வெறும் நடிப்பல்ல... அது அவரின் வளர்ப்பிலும் அவர் கற்றுக் கொண்ட விதத்திலும் கிடைத்திருக்கிறது. இந்தப் பணிவே ஒருவனை எந்தவிதத்திலும் முன்னிறுத்தும்.

சேரன் நீங்க இப்ப விளையாட்டைச் சரியாக விளையாடுறீங்கன்னு நினைக்கிறேன்... உங்களுக்கு அது புரியவே ஆறு வாரங்களுக்கு மேலாச்சுல்ல... இனிமே நீங்க எதையும் தெரிஞ்சிக்க வேண்டியதில்லை... ஆனாலும் உங்கள் விளையாட்டை நீங்க விளையாடுங்க என்றார். சேரனும் ஆமா சார்... இறுதிவரை நான் நானாகவே விளையாடுவேன் சார்... வெற்றிக்கான போட்டியில் முன் நிற்கவில்லை என்றாலும் மூன்றாவதாகவாவது வர முயற்சிப்பேன் சார்.. இது இளைஞர் கூட்டம் நிறைந்த போட்டி... அவர்களுடன் என்னால் இணைந்து பயணிக்க முடியாவிட்டாலும் இயன்றதைச் செய்வேன் சார் என்றார்.

சேரனுக்கு முன் வந்த மூவரும் பின் வந்த ஐவரும் சிரித்தபடி சொல்லுய்யா... சொல்லுய்யா... நீ பாட்டுக்கு ஏதாவது கத்திட்டுப் போ... நாங்க எங்க போக்குல போறோம் என்ற மனநிலையிலும் நீ என்ன சொல்றது... நான் என்ன கேக்குறது... நான் பேசுறதை நீ கேளுன்னு எகத்தாள மனநிலையிலும் இருந்தாலும் சேரன் ஒருவரே என்ன சொன்னாலும் அது எனக்கானதுதான்... அதை ஏற்றுக் கொண்டு முன்னோக்கி நடக்க முயற்சிப்பேன் என்பதாய் கமல் முன் அமர்ந்திருந்தார்... இந்தப் பழக்கம் என்றும் நம்மை கீழே தள்ளிவிடாது... மேலேதான் உயர்த்தும்... தன்னை உழலவைக்கும் பிரச்சினைகளில் இருந்து விலகி சேரன் உயர்வார் என்று நம்புவோமாக.

ஷெரின்... உங்க விவேகமும் அடுத்தவங்களுக்கு உதவும் மனப்பான்மையும் உங்களை இறுதிப் போட்டி வரை கொண்டு செல்லும்... இவங்க மனசுல நீங்க இருக்கீங்க (கைதட்டல்) இதை மனசில் வச்சிக்கங்க... ஆனா இந்தக் கைதட்டல் தொடர்ந்து கிடைக்கும்னு நினைக்காதீங்க.... கோபுரத்துல வச்சிருந்தவங்களை ஒரே நாள்ல கீழ தூக்கிப் போட்டவங்கதான் இவங்க... அதை நினைச்சி விளையாடுங்க... வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

வனிதாவிடம் நீங்க மறுபடியும் உள்ள வந்தது உங்களோட விளையாட்டை விளையாடத்தான்... வெளியில வந்த பின்னர் மீண்டும் உள்ளே செல்வதெல்லாம் எல்லாருக்கும் கிடைக்காது... அது உங்களுக்குக் கிடைத்திருக்கிறது... விஜய் டிவி ஒப்பந்தப்படியே உங்களை மீண்டும் அனுப்பியிருக்கிறார்கள். அடுத்த சீசனில் எல்லாம் ஒப்பந்தத்தை காப்பி போட்டு எல்லார் கையிலும் கொடுத்துடலாம்... என்ன எழுதியிருக்குன்னு தெரிஞ்சிப்பாங்க... என்றார்.

வனிதா என்னைக்கு மத்தவங்க பேச்சைக் கேட்டிருக்காங்க... இப்பக் கேக்க... நான் செய்வதே சரின்னு கமலுக்கே பாடம் எடுக்க ஆரம்பிக்க, ஊர்ல சொல்லுவானுங்களே வேலியில போற ஓணானை வேட்டிக்குள்ள விட்டுக்கிட்டு குத்துதே குடையுதேன்னான்னு அது மாதிரி ஆயிப்போச்சு கமலுக்கு... சரி வாழ்த்துக்கள் என விரட்டி விட்டுட்டார். வேறு வழியில்லை... இவர்கள் எல்லாம் இப்படித்தான்... இனிமே மாறு மாறுன்னா... எப்படி மாறுவாங்க..?

வனிதா போன பின்னர் கமல், 'அவங்க பிரச்சினையின்னா வக்கீலாவும் அடுத்தவங்க பிரச்சினையின்னா நீதிபதியாகவும் ஆயிடுறாங்க... இவங்ககிட்ட நாம பேசிப் பலன் என்ன' என்ற போது அவரின் முகத்தில் சிரிப்புக்குப் பதில் வருத்தமே மேலோங்கியிருந்தது.

முகனிடம் நீ உன்னோட ஒவ்வொரு செயலுக்குப் பின்னும் யாராவது ஒருவர் அதீத அன்போட உந்து சக்தியாக இருக்கணும்ன்னு நினைக்கிறே... இது விளையாட்டு... இதிலெல்லாம் இன்னொருத்தரின் நேசம் வெற்றிக்கு அழைத்துச் செல்லும்ன்னு நினைக்காதே... நட்பு வேணும்தான்... அதுக்காக தர்ஷனுக்கு தூக்கிக் கொடுப்பேன்னா.. எதுக்கு விளையாட வரணும் என்றார். உடனே முகன் நான் அன்புக்கு ஏங்குபவன் சார்... இங்க உறவுகள் கிடைக்கவும் உழண்டுட்டேன்... இனி விளையாடுவேன் சார் என்றதும் இந்த முகனை அங்க பார்க்க முடியலையே இனிமேல் பார்க்கலாம்தானே எனச் சொல்லி அனுப்பினார்.

தர்ஷனிடம் ஆரம்பத்தில் தவறுகளைத் தட்டிக்கேட்ட நீங்கள் தற்போது நட்புக்குள் இறங்கி... இறுகி... தவறுகளைச் சுட்டிக்காட்ட மறக்கிறீர்கள்... மக்கள் விரும்புவது அந்தத் தர்சனைத்தான்... இப்ப இருக்க தர்ஷனை அல்ல... முயலாமல் வெற்றியில்லை... புரிஞ்சிப்பீங்கன்னு நினைக்கிறேன் என்றார்.

கஸ்தூரியிடம் பேசிய போதும் வனிதாவிடம் எதிர்கொண்ட நிலைதான் கமலுக்கு... வெளியே இருந்த கஸ்தூரிக்கும் உள்ளே இருக்கும் கஸ்தூரிக்கும் வித்தியாசம் இருக்கு ஏன் என்றதும்... சார்....சார்...வாங்க சார்... மூணு பத்து ரூபா... மூணு பத்து ரூபா... எதையெடுத்தாலும் மூணு பத்து ரூபா சார்... சந்தை முடிஞ்சிட்டா அடுத்த வாரம்தான்... சார்... வாங்க சார்... வாங்கம்மா.. வாங்கிக்கம்மா... வெளியில பத்து ரூபாய்க்கு பட்டாணி கூட வாங்க முடியாதுன்னு வாரச் சந்தையில் வாய் வலிக்க ஒருத்தர் கத்தி வியாபாரம் பண்ணுவாரே (அவருக்கு அது வயித்துப் பாடு) அப்படிப் பேசுனாங்க (இவங்களுக்கு இது பெருமை) என்ன பேசினாங்கன்னு நமக்கும் புரியலை கமலுக்கும் புரியலை... போங்கன்னு பொடரியப் புடிச்சி வெளிய தள்ளிட்டார்.

நாம பேசினதை ஒவ்வொருத்தரும் மனசுக்குள்ள வச்சிக்கிட்டு விளையாடணும் ஆனா செய்வாங்களான்னு பார்ப்போம் என்றார்... இதெல்லாம் நாமினேசன் பண்றதுக்கே கூட்டம் போடுற ஆளுங்க... ஒண்ணுக்கு ஒண்ணு சொல்லி, கமலை கலாய்க்காமல் இருந்தால் சரி.

அடுத்து தர்ஷனிடம் போனில் பேசிய பெண்மணி கமல் சொன்னதையே சொன்னார்... அப்போது கமல் எங்கயோ கேட்ட மாதிரி இருக்கான்னு கேட்டு வைத்தார். கவினிடம் பேசியவரும் எப்பவும் சாண்டி கூட சுத்துறீங்களே.... தனியா உங்க திறமையை எப்பக் காட்டுவீங்க என்பதாய்க் கேட்டார். 

கவின், சாண்டியின் நட்புக் குழுமம் தர்ஷன், முகன், லாஸ்லியாவை கடைசிப் பெஞ்சிற்குத் தள்ளிக் கொண்டிருக்கிறது என்பதே கமலின் பேச்சிலும் காலர் ஆப் த வீக்கிலும் முன்னிறுத்தப்பட்டது. இதுவரை இருந்த சாண்டி இனி மாற வேண்டிய நிலை... கமல் சொன்னது போல் நட்பெல்லாம் வெளியில்... இது விளையாட்டு என்பதை இறுதிப் போட்டி வரை செல்லக்கூடிய போட்டியாளராய் சாண்டி உணர வேண்டிய நேரமிது... செய்வாரா..?

அடுத்தது குருக்களைப் பற்றி... கோவில் குருக்கள்ன்னு நினைச்சிடாதீங்க.. தங்களின் மானசீக குரு.... அதாங்க ஆசான்களைப் பற்றி குருவுக்கு நன்றி டாஸ்க்கில் சொன்னதை வைத்து அவர்களிடம் இவர்களைப் பற்றிக் கேட்டு ஒலிபரப்பினார்கள். சாம்பார் மாதிரி சவச்சவன்னு நகரும் போட்டியில் அது மட்டும்தான் சுண்டவச்ச கருவாட்டுக் குழம்பு மாதிரி சுள்ளுன்னு இருந்துச்சு... விடுவாரா பிக்பாஸ்... மறுபடியும் சுண்ட வச்சிட்டாருல்ல...

கலா மாஸ்டர் பேசும் போது சாண்டியின் குணநலன்களைச் சொல்லி வெற்றி பெறச் சொன்னதுடன் சேரனிடம் தனக்கு அவரின் குணம் பிடிக்கும் என்றார்... கமலை ரொம்பப் பிடிக்கும் என்றார். முகனின் ஆசிரியை அன்புக்காக ஏங்குபவன் அவன்.... நல்ல பாடகன் என்றார். கவினின் ஆசிரியை பழையதை நினைவு கூர்ந்து உன்னைத் தாழ்த்தியவர் முன் நீ வெற்றிவாகை சூடி வாழ்ந்து காட்ட வேண்டும் என்றார். ஷெரினின் ஆசிரியையும்... லாஸ்லியாவின் ஆசிரியரும்... தர்ஷனின் ஆசிரியரும் பழையதை நினைவில் வைத்துப் பேசி வெற்றிக்கு வாழ்த்தினார்கள்.

கஸ்தூரியிடம் பிள்ளைகள் பேசும் போது தாய்மை அழுதது... உடல் நலமில்லாத மகள் எப்படியிருக்கிறாளோ என்ற மனக்கவலை வெடித்தது... போனில் பேசுவதாய் நினைத்து கேள்விகளெல்லாம் கேட்டார். உடனே வெளியே அனுப்புங்க சார் என்று கதறினார்... இது தாயின் குணம் என்றாலும் கொஞ்சம் அதிகமான நடிப்பும் அதில் இருந்தது... நடிகையின்னா நடிப்பு இல்லாமலா எனக் கடப்போம்.

என்னப்பா சேரன் நல்லாயிருக்கியா..? என்ற வாஞ்சையான கேள்விக்கு முன் எப்பவும் போல குறும்புடன் கமலுடன் பேசி அகம் டீவி வழியே அகத்துக்குள் செல்கிறேன் எனச் சொல்லி, நீ தேசிய விருது வாங்கிய இயக்குநர் என்றாலும் எனக்கு என்னுடைய அசிஸ்டெண்ட் சேரன்தாய்யா... நீ உள்ள போயி கஷ்டப்படுறேன்னு இங்க பல இயக்குநர்கள் என்னிடம் புலம்பினாங்க... அவங்ககிட்டச் சொன்னதையே உனக்கும் சொல்றேன்.... எல்லாம் தெரிஞ்சி அனுபவத்துக்காகத்தான் நீ அங்க போயிருக்கே... கக்கூஸ் கழுவுறதும் சன்னல் துடைக்கிறதும் வீடு கூட்டுறதும் கஷ்டமாப்பா... வெளிநாட்டுல அவனவன் வேலையை அவனவன்தான் செய்யிறான்... கார் கழுவ வேலை ஆள் வச்சா அவன் பிஎம்டபிள்யூல வருவான்... அதுக்கும் சேர்த்தும் பணம் கொடுக்கிறதுக்கு நம்மகிட்ட இருக்க காரையெல்லாம் விக்க வேண்டி வரும்... அதனால் நீ எப்பவும் போல இரு... எதற்காகச் சென்றாயோ அதைச் சரியாகச் செய்.... இது உனக்கு புதுமையான அனுபவம்.. அதனால என்ன அனுபவம் புதுமைன்னு ஒரு படத்துக்காக நீ வெளிநாட்டுல இருக்கதா நினைச்சிக்கங்க... வெளிநாட்டுல இருக்கவங்க சாண்டி மாதிரி அழலையா... என்ன படத்தை அவன் பார்க்கும் முன்னால நாம பார்த்திருவோம் என்றார்.

மேலும் உனக்கு அசிஸ்டெண்ட் டைரக்டர் வேலையோட புரடெக்சன் மேனேஜர் வேலையும் கொடுத்தேன்.. நாட்டாமை படத்துக்காக... நீ பட்ட கஷ்டங்களை நான் எப்பவும் மறக்கமாட்டேன்... எப்பவும் நீ எனக்கு மலரும் நினைவுகள்தான்... நீ வாழ்க்கையிலும் வெற்றிபெற பிக்பாஸ்லயும் வெற்றிபெற.உன்னோட குடும்பம் மாதிரி, மனைவி மாதிரி, மூணு மகள்கள் நினைக்கிற மாதிரி நானும் வேண்டிக்கிறேன். இங்க நான் மூணு மகன்னு சொன்னது உள்ளே உன்னுடன் இருக்க லாஸ்லியாவையும் சேர்த்துத்தான்... அப்பா மேல அவளுக்குப் பாசமில்லாமல் எல்லாம் இல்லை... சின்னக் கோபம் அது சரியாகிடும் என்றார்.

மேலும் லாஸ்லியா நீங்க வெளிய வரும் போது கெயின்லியாவா வரணும்... வெளிய வந்ததும் உங்களுக்கு வாய்ப்புக்கள் காத்துக்கிட்டு இருக்கு.... இவ்வளவுதான் இப்பச் சொல்லலாம் என்றார். கவினை மன்மதலீலை இரண்டு என்றும் சாண்டியை காமெடி கிங் என்றும் தர்ஷனை மாதவன் வெர்சன் என்றும் முகனை ஆக்சன் ஹீரோ என்றும் வனிதாவை உள்ளே வெளியே என்றும் வனிதாவை என்றும் கஸ்தூரியை உள்ளே இருக்க மாதிரி வெளியவும் வெளியே இருக்க மாதிரி உள்ளேயும் இருக்க முடியாதவர் என்றும் ஷெரினை அழகி மற்றும் அன்பானவர் என்றும் சொல்லி வாழ்த்தி, கமலையும் பிக்பாஸையும் வாழ்த்தினார்.

ரவிக்குமாரின் நினைவுகளைப் பகிரும் விதமாகப் பேசிய கமல், தனக்குத் தெரியலைன்னா கேட்டுத் தெரிந்து கொள்பவர் இவர்... எப்படி எல்லாரையும் இணைத்துப் பேசினார் பாருங்கள் என்றார். வனிதாவின் குரு பி.வாசு அவர்கள் ஊரில் இல்லை என்பதால் அவரின் குரல் இங்கு வரவில்லை... ஆனால் ஆசி உங்களுக்கு எப்பவும் கிடைக்கும் என்றார்.

அடுத்து நாமினேசன்... சாண்டி, தர்ஷன் காப்பாற்றப்பட, சேரன் தான் போகமாட்டேன் என நம்பிக்கையோடு சொன்னார்... அந்த நம்பிக்கை வீண் போகவில்லை... கஸ்தூரி வெளியே... யார் வெளியே என கார்டு காட்டுவதைப் பார்த்து எல்கேஜி புள்ளை கூட எழுந்து வரும்... இங்கயும் ஒரு நடிப்பு.... ஆத்தாடி முடியலை... கிளம்பும் போது எல்லாரும் நல்லா விளையாடுங்க... சேரன் சார் நான் சொன்னதை ஞாபகம் வச்சி விளையாடுங்கன்னு ரெண்டு தடவை சொன்னாங்க... போட்டோ எடுத்தாங்க... யாரும் அழலை... அதுக்குள்ளயும் போகச் சொல்லிட்டாங்க பாருங்கன்னு வனிதா சொன்னாங்க... சேரனைக் கட்டிப்பிடித்து சாரி சொன்னார் லாஸ்லியா.... எதுக்கு கழுதை என அன்பாய் அணைத்துக் கொண்டார் சேரன்... வெல்கம் பேக் அண்ணா என்ற முகனிடம் நான் போகவேயில்லை வெல்கம் பேக்கா எனச் சிரித்தார் சேரன்... மகிழ்வாய் இருந்தது... மனசுக்கு நிறைவாகவும்...

கஸ்தூரியை மேடைக்கு அழைக்கும் போதே கமலுக்கு கதக்குன்னுதான் இருந்திருக்கும்... என்ன பேசுமோ தெரியலைன்னு... கமல் உள்ளே வெளியேன்னு ஆரம்பிக்கும் போதே அக்கா வாங்க... அம்மா வாங்க... எதையெடுத்தாலும் பத்துரூபா... போனா வராது... அய்யா வாங்க... அம்மா வாங்கன்னு ஆரம்பிச்சி கூரையேறி என்னால் கோழி பிடிக்க முடியாதுன்னு சொல்ல, கமல் கூரையேறில் குந்தி உக்கார்ந்துட்டார்.

பேசினால் ஆபத்து என்பதை உணர்ந்தவராய் நண்பர்களுடன் பேசுங்கன்னு சொல்லி நகர, எல்லாருக்கும் புத்தி சொன்னாங்க... சேரன்கிட்ட நான் சொன்னதை மனதில் வச்சி விளையாடுங்க என மூணாவது தடவை சொன்னார். அப்படி என்னதான் சொன்னாரோ தெரியலை... ஒருவேளை சேரன் தன் முயற்சியில் வெற்றிபெற்றால் கூட இந்தம்மா நான் சொன்னபடி விளையாண்டே வெற்றி பெற்றார்ன்னு டுவிட் பண்ணினாலும் ஆச்சர்யமில்லை.

ரகசிய அறைக்குப் போங்கன்னதும் மறுபடியும் வாங்க அக்கா... வாங்க அம்மாவுக்குப் போக அதான் சொல்லிட்டீங்களே கூரையேறின்னு எனக்கு நல்லாப் புரிஞ்சதுங்க என்றார் கமல். குழந்தையைப் பார்க்கணும்... எனக்கு ரகசிய  அறை வேண்டாம் என்றார்.... தாய்மை மதிக்கப்பட்டது... குறும்படம் காட்டி கும்பிடு போட்டு போகச் சொன்னதுடன் தனக்கும் ஓய்வு தேவை என கமல் போய்விட்டார்.

பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

1 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பணியுமாம் என்றும் பெருமை...