மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2019

பிக்பாஸ் : குட்டு வைத்த கமல்

Image result for bigg boss 3 tamil 24th august 2019
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் முன்னர் 'அறுபது கேமராக்கள் என்று சொன்னோம்... இங்க வந்து பார்த்தாத்தான் தெரியுது... அறுபதைவிட அதிக கேமராக்கள் இருக்கின்றன் என்பது... இத்தனை கேமராக்கள் வைத்து இருபத்தி நான்கு மணி நேரம் எல்லாத்தையும் எடுத்து அதில் தேவையில்லாதவற்றைத் தவிர்த்து எது தேவையோ அதை மட்டும் உங்களுக்கு ஒரு மணி நேரத்தில் வழங்குதல் என்பது சாதாரண வேலை இல்லை இவர்களின் பணி மகத்தானது' என கேமராக்கள் சூழ் அறைக்குள் நின்று கமல் பேசினார்.

மேலும் இங்கு மனநல மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள், சட்ட வல்லுனர்கள் என எல்லாரும் இருப்பதாகவும் அவர்களுடன் தங்களின் எடிட்டிங் குழுவும் இணைந்துதான் எதை மக்களுக்குக் காட்ட வேண்டும் என முடிவு செய்வதாகச் சொன்னதுடன் காட்டாத நிகழ்ச்சிகளை வைத்து இது இப்படி நடந்திருக்கும் அப்படி நடந்திருக்கும் என நீங்களாகவே ஒரு முடிவெடுத்து கற்பனையாய் எழுதுகிறீர்கள்... அதெல்லாம் உண்மையில்லை... ஹிந்தி பிக்பாஸில் எல்லாம் நிறைய விஷயங்கள் ஒளிபரப்பப் படுகின்றன... கெட்ட வார்த்தைகளைக் கூட 'பீப்' போட்டு ஒளிபரப்புகிறார்கள். இங்கு கலாச்சாரம், பண்பாட்டைக் கருத்தில் கொண்டு எது தேவை என்பதை முடிவு செய்து அதை மட்டுமே மக்களுக்கு காட்டுகிறோம். 

தண்ணியில்லாத சமயத்தில் ஜலக்கிரீடை எதற்கு என நான் சொன்னதை நிர்வாகம் ஏற்றுக் கொண்டதாலும் அவர்களின் சட்ட திட்டங்கள் எனக்குப் பிடித்ததாலுமே இந்த நிகழ்ச்சியை நடத்த ஒப்புக் கொண்டேன். உங்கள் விமர்சனம் நேர்மையாய் இருக்கும்பட்சத்தில் அதில் சொல்லியிருப்பதை நாங்கள் எடுத்துக் கொள்வோம்... வேண்டுமென்றே சொல்லப்படும் எதிர்மறைக் கருத்துக்களைக் கண்டு கொள்ளாமல் கடந்து போய்விடுவோம் என பெரிய விளக்கம் கொடுத்தார்... இது மதுமிதா பிரச்சினைக்காக பேசியதுதான் என்ற போதிலும் அவர்களின் உழைப்பு பாராட்டுக்குரியது. கமல் சார் ஒரு மகளிர் அணி உறுப்பினரையும், ஒரு இணைய விமர்சகரையும், யுடியூப் விமர்சகர்களையும் அங்க உட்கார வைச்சீங்கன்னா நல்லாயிருக்கும். குறிப்பா யுடியூப்ல கட்டுற கட்டுக்கதைகளும் போடுற புரோமோக்களும் முடியலை சார்...

நேசத்திலும் பாசத்திலும் நனைஞ்சிக்கிட்டும் வழுக்கிக்கிட்டும் கிடக்காங்க.. இது விளையாட்டு என்பதை எல்லாருக்கும் உணர்த்த வேண்டும் என்று கமல் சொன்னபோதே இன்று 'தகிட... தகிட...' இருக்குன்னு தோணுச்சு... மனிதர் வச்சிச் செஞ்சிட்டார்... சில வாரங்களுக்குப் பிறகு கமலின் அருமையானதொரு பிக்பாஸ் நிகழ்வு.

அகம் வழி அகத்துக்குள் போகும் முன் வெள்ளி நிகழ்வுகள் காட்சியாய்...

'போராடினால் நாம் வெல்லலாம்' பாடல் திருப்பள்ளி எழுச்சியாய்... தினம் ஆடி போரடிச்சிருச்சு போல... அதனால வெள்ளிக்கிழமை கொஞ்சம் தூங்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டாங்க போல யாருமே எந்திரிச்சி ஆடலை.... இறுதியில் சும்மா கைகாலை ஆட்டினாங்க... கவினும் லாஸ்லியாவும் இப்பல்லாம் இரவு அதிக நேரம் பணி செய்வதால் காலையில் எழ முடியவில்லைதான்.

பசங்களும் சேரனும்... (கவனிக்க) பசங்களுடன் சேரன் அமர்ந்திருந்தது வித்தியாசமாய்த் தெரிந்தது. எப்பவுமே காவல் தெய்வம் போல் தனித்து இருக்கும் ஆள்... உற்சவ மூர்த்திகளுடன் உற்சாகமாக இருந்தது ஆச்சர்யமே. 

உலகத்தில் முதன் முதலாக குஷன் ஷோபாவில் அமர்ந்து கஸ்தூரி யோகா பண்ணிக்கிட்டு இருந்தாங்க... அது நடிப்பு இல்லைன்னு சொன்னா அப்புறம் நடிப்புங்கிறது எதுங்கிற கேள்வி வரும்... மீரா மாதிரியே இருக்கு பாருங்க என எல்லாரும் கேலி பண்ணிச் சிரிச்சிக்கிட்டு இருந்தாங்க. கமல் நேற்றுக் குறிப்பிட்டது போல் எல்லாருக்கும் பாசமழை பெய்கிறது... அனைவரும் ஒரே குடைக்குள் நிற்பது பார்க்க நல்லாயிருக்கு.... வனிதாவும் கஸ்தூரி மட்டும் தனித்தனியே நனைந்து கொண்டிருக்கிறார்கள்.

சும்மாதானே இருக்கீங்க... யமாகா பைக்குக்கு மாடலா நின்னு போட்டோவுக்கு போஸ் கொடுங்க, யாரு ஜெயிக்கிறீங்கன்னு பார்ப்போம்... ஆனா இதுக்கும் நடுவர் சேரன்தான் என்று சொன்னார் பிக்பாஸ். ஊர்ல மொய் எழுதுறதுக்குன்னே ஒருத்தனை பிக்ஸ் பண்ணி வச்சிருப்பானுங்க.... எங்க உறவுகளில் எங்கப்பாதான் ஆரம்ப காலங்களில்....அப்புறம் கல்லூரி படிக்கும் போதில் இருந்து ஊரில் இருக்கும் வரை நான்... இப்பவும் திருமணங்களுக்குப் போனா உக்கார வச்சிருறாங்க என்பது தனிக்கதை... எவ்வளவு மறுத்தாலும் பொட்டி நம்ம கைக்குத்தான் வரும்... அப்படித்தான் பிக்பாஸ் வீட்டுல சேரனை தலைவர்ன்னு பிக்ஸ் பண்ணி வச்சிருக்காங்க... நடுநிலையான முடிவு சொல்லும் நடுவர் என்ற பெயர் எடுத்திருப்பதால் இருக்கலாம். அந்தப் போட்டியில் தர்ஷன் வெற்றி பெற, கேக்கும் ஜாக்கெட்டும் பரிசாகப் பெற்றான்.

கேக் வெட்டி எல்லாருக்கும் கொடுக்கும்போது ஷெரின் தனித்தே நின்றார். ஊடல் இன்னும் கூடலைத் தொடவில்லை போலும். சேரன்தான் ஷெரினுக்குக் கொடுடான்னு சொன்னார்... ஷெரின் பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் கொஞ்சமே கொஞ்சம் கேக்கை எடுத்துக் கொண்டார். பின்னர் இருவரும் தெற்கு வடக்காக நகர்ந்தனர்.

'மேடம் உங்ககிட்ட பேசலாமா...?' என ஊடலுக்கு முடிவு கட்ட, தர்ஷனே ஈகோவை உடைத்து ஷெரினிடம் கேட்டான். 'பேசலாமே... காபி வேணுமா உனக்கு..?' என காபி எடுக்கப் போனார். அங்கே வனிதா வாயில் வசம்பு தேய்த்து வசமாய் நின்றார்... ஆத்தாடி இப்பத்தான் பேசலாம்ன்னு முடிவு பண்ணியிருக்காங்க... வெட்டி விட எதாவது சொல்லுமேன்னு நமக்குள் தோன்ற, தர்ஷனுக்கும் இது தோன்றியது போல அவனே சமையல் ஏரியா வந்துவிட, வனிதா வாயை மூடிக்கொண்டார். அவரின் மிஷன் ஷெரின் இந்த முறையும் மிஸ்ஸிங்.... சிரித்துக் கொண்டே ஷெரின் காப்பியை நீட்ட, அதான் சிரிச்சிட்டேயில்ல பிரச்சினை முடிந்ததுன்னு தர்ஷன் நகர, கிரேஸி மேன் என ஷெரின் சிரித்தார். ஷெரின்... ஷெரின்தான்.... சிரிப்பால் அள்ளுகிறார்.

பின்னர் இருவரும் அமர்ந்து பேச, இருவருக்குள்ளும் வெட்கத்தின் சாரல்... புன்னகையில் புரிந்துணர்த்தல் பூத்துக் கொண்டேயிருக்க, ஈகோ என்னும் காய்ந்த சருகு மெல்லக் காற்றில் பறந்து பிக்பாஸ் இல்லம் விடுத்து வெளியானது. தர்ஷன் ரொம்பச் சந்தோஷமா இருக்கான்டா என சாண்டி கமெண்ட் அடித்துக் கொண்டிருந்தார். இருவரும் சேர வேண்டும் என்ற சேரனின் முயற்சி வெற்றியில் முடிந்ததில் மகிழ்ச்சியே. நாங்க இப்பவும் சொல்வோம் ஜென்டில்மேன் சேரன்.

அகம் டிவி வழியே அகத்துக்குள் கமல்....

ஷெரின் தலைவியாக இருந்தபோது நட்புக்கெல்லாம் அடிபணிந்து போகாமல் சரியான முடிவுகளை எடுத்ததால் ஜொலித்தார் எனப் பாராட்டினார் கமல். உண்மையில் இந்தப் பாராட்டுக்குரியவர்தான் ஷெரின்... சேரனை எதிர்த்து வனிதா பேசியபோது மற்றவர்கள் எனில் அக்கா சொல்வதில் உடன்படுகிறேன் என மாற்றிப் பேசியிருப்பார்கள்... ஆனால் ஷெரின் முடிவாய் நின்றார்... கஸ்தூரி - வனிதா விவகாரத்தில் கூட சிறப்பாக தீர்த்து வைத்தார். சிறப்பான தலைவர் ஷெரின் என்பதில் சந்தேகமேயில்லை.

தலைவராய் ஆன சேரனுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.... தான் டாஸ்க்கில் எப்படி நடித்தாலும் சரியில்லை என்று புறம் தள்ளிய நிலையில் எதிர்பார்ப்பு இருப்பதை தப்பென்று சொல்லமுடியாது... இந்த வாரம் அதற்கும் மரியாதை கிடைத்தது இரட்டிப்பு சந்தோஷம் சேரனுக்கு இல்லையா எனப் பாராட்டினார். சேரனும் ஏற்றுக் கொண்டார்.

அடுத்து பள்ளிக்கூட டாஸ்கில் கஸ்தூரியை சத்துணவு ஆயா என்று சொன்ன சாண்டியை விட்டு விளாசினார். சத்துணவு ஆயாக்கள் கேலிக்குரியவர்கள் அல்லர் அவர்கள் மாதாக்கள்... அதுவும் ஜெகன்மாதாக்கள் என்றும் அவர்களாலே ஏழைப்பிள்ளைகள் பலர் படித்தார்கள் என்றும் அவர்களின் புகழைப் பேச, சார் நானும் சத்துணவு சாப்பிட்டு வளர்ந்தவன்தான் என சாண்டி சரண்டராகி மன்னிப்புக் கேட்க, கமல் அந்த விஷயத்தைக் கடந்து அடுத்ததுக்குச் சென்றார். 

ஆயாக்கள் குறித்துப் பேசும்போது சேரன், காமராஜர் கொண்டு வந்த இந்தத் திட்டத்தால்தான் சார் பல ஏழைப்பிள்ளைங்க ஒருவேளை சோறு கிடைக்குதுன்னு படிக்க வந்தாங்க என்றார். ஆம் காமராஜர் ஆரம்பித்து எம்ஜிஆர் தொடர்ந்த இத்திட்டம் உலகமே போற்றும் திட்டமாய் இருந்தது என்றார் கமல்.

கமல் அடுத்ததாய் லக்ஸூரி பட்ஜெட் டாஸ்க்ல 500 புள்ளிகள் குறையக் காரணம் என்ன தெரியுமா..? என்று கேட்டதும் ஷெரின் யாரோ மைக்கை கழட்டிட்டு பேசியிருக்காங்க என்றார் மெல்ல. யார் அந்தப் புள்ளிகள் அப்படி கமல் கேட்க, சாண்டி மற்றும்  கவினாக இருக்கும் சார் என்றார்... ஆனால் அது கவினும் லாஸ்லியாவும். 

விளக்கணைத்தபின் தொடரும் இவர்களின் பேச்சு நெடுநேரம் தொடர்கிறது. அப்படி ஒரு இரவில் சேரன் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது கவின் முதலில் மைக்கை ஆப் பண்ணிவிட்டு லாஸ்லியாவிடம் சொல்லி அதையும் ஆப் பண்ணி வைத்துவிட்டு ரகசியம் பேசுகிறார்கள். நமக்குக் காட்டியது இந்த ரகசியம் மட்டுமே என்றாலும் வேறு எதேனும் ஊட்டப்பட்டிருக்கலாம் அதனால்தான் இது விதி மீறல்... இதைத் தொடர்ந்தால் தண்டிக்கப்படுவீர்கள்... அப்படி என்ன ரகசியம் பேச வேண்டியிருக்கு... அப்படி ரகசியம் எனில் வெளியில் போய்ப் பேசலாமே என்று சற்று கோபமாகவே கடிந்து கொண்டார்.

கவின் நீங்க டெக்னிக்கல் டீமுக்கு வந்துருங்க... மைக்கெல்லாம் எப்படிக் கழட்டி ஆப் பண்றதுன்னு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கு... அதை அவங்களுக்கும் வேற சொல்லிக் கொடுக்கிறீங்க... நீங்க நினைக்கலாம் நாங்க பார்க்கமாட்டோம்ன்னு ஆனா வீ ஆர் வாட்சிங்... அதை மறந்துடாதீங்க... எனச் சொன்னபோது கவின் லாஸ்லியா முகத்தில் சவக்களைதான் தெரிந்தது. அறுபது கேமராக்கள் இருக்கு என்றாலும் சில நேரத்தில் ஆர்வக்கோளாறில் தவறு செய்து விடுகிறார்கள். காதலுக்கு கண் இல்லை என்பதை நிரூபித்திருக்கிறார்கள் அவ்வளவுதான்.

சாண்டிக்கும் கவினுக்கும் கமல் அதிக இடம் கொடுக்கிறார்... அவர்கள் என்ன செய்தாலும் கண்டிப்பதில்லை என்ற பேச்சு விமர்சனங்களில் அதிகம் வருவதைப் பார்த்து இந்த வாரம் இருவருக்கும் ஆரம்பத்திலேயே சாம்பிராணி போட்டு தவறு என்றால் அது யார் செய்தாலும் நான் கேட்பேன் எனத் தன் செயலில் அதிதீவிரமாகவே காட்டுக் காட்டினார் கமல்.

அடுத்ததாக சேரனிடம் வந்தவர், அவர் கவினுக்கும் லாஸ்லியாவுக்கும் அறிவுரை சொன்னதைப் பற்றிக் கேட்டார். இந்தப் பேச்சு சமூக வலைத்தளங்களில் சேரனுக்கு நல் மதிப்பைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது. கமலும் இந்தப் பேச்சை விரும்பியிருக்கிறார் என்பது பேச்சில் தெரிந்தது. இதை அவர்கள் ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா சேரன் எனக் கேட்க, நான் சொல்லும் போது இருவரும் ரொம்பத் தன்மையுடன் கேட்டுக் கொண்டார்கள் சார் என்றார் சேரன். உடனே கவினிடமும் லாஸ்லியாவிடமும் பேச, இருவரும் அவர் சொன்னது சரியான அறிவுரையே என்றாலும் நாங்கள் முழுமையாக அதை உள்வாங்கிச் செயல்படுத்த சில நாளாகும் என்றார்கள்.

சேரனை லாஸ்லியா நாமினேட் பண்ணிய விஷயத்தைப் பற்றிப் பேசும் போது சேரனிடம் இது உங்களுக்கு முன்னமே தெரியுமா எனக் கேட்க எனக்குத் தெரியும் சார்... ஆனா அவகிட்ட இதைப் பற்றிப் பேசலை என்றார். தெரியுமா... நீங்க பெரிய நடிகருங்க... இதுக்கும் உங்களுக்கு விருது கொடுக்கணும்... ஆமா கஸ்தூரிக்கிட்ட அவ என்னை நாமினேட் பண்ண மாட்டான்னு சொன்னீங்கதானே என்றார். உடனே கஸ்தூரியும் ஆமா சார்... சொன்னார் சார்.... நாமினேட் பண்ணினது தெரிஞ்சும் யார்க்கிட்டயும் சொல்லலை சார் என்றார்.... ஆமா அவர் உங்ககிட்ட சொல்லிக்கிட்டு இருந்தார்... அவங்க அங்க நாமினேட் பண்ணுனாங்க... அப்புறம் வந்து அழுதாங்க... என்றார் கமல். இல்லை சார் அவ செய்ய மாட்டேன்னு சொல்லியிருந்தா... ஆனா இது விளையாட்டு... இதுல பாசம், நேசமெல்லாம் அப்புறம்தான்... அவ செஞ்சதை ஏத்துக்கிறேன் என்றார்.

லாஸ்லியாவும் தன் பக்க நியாயத்தை விளக்கினார்... அவர் ஆண்கள் பெண்களைப் பயன்படுத்திக்கிறாங்கன்னு சொன்னப்போ தட்டிக் கேக்கலை அதனால அவர் மீது கோபம்... மற்றவங்க மேல சொல்றதுக்கு ஒண்ணுமில்லை... ஒரு காரணமும் இல்லாம ஒருத்தரைச் சொல்லி, அதனால அவங்க வெளிய பொயிட்டா என்னால தாங்க முடியாது சார்... அதான் காரணம் இருந்ததால் அவரைச் சொன்னேன் என்றார். சேரனும் ஏற்றுக் கொண்டார். 

உடனே சேரனிடம் நீங்க அவங்களை நாமினேட் பண்ணியிருக்கீங்களான்னு கமல் கேட்க, முதல் வாரம் பண்ணினேன் சார்... இந்த மாறுபட்ட முகங்களுக்குள்ள இந்தக் குழந்தைகள் இருக்க வேண்டான்னு தர்ஷனையும் அவளையும் சொன்னேன்... இதை தர்ஷன்கிட்டயும் சொல்லியிருக்கிறேன் என்றார். அப்போது கஸ்தூரி அவர் நாமினேட் பண்ணுனது பாஸிட்டிவ் காரணம் சார்... நான் அதை வெளியில் இருந்து பார்த்தேன் என்றார்.

இந்த விஷயத்தில் கவினுக்கும் தொடர்பு இருக்கு... அவர்கிட்டயும் கேட்கணும் என்ற கமல், என்ன கவின் நீங்க சொல்லுங்க என்றதும் சிரித்த கவின், தன்னிடம் சொன்ன போது ரொம்ப ஷாக்க இருந்துச்சு... ஏன்னா முதல்நாள் என்னிடம் அவரைப் பண்ணமாட்டேன்னு சொன்னா என்றான். கவினைப் பொறுத்தவரை தனக்குப் பிடிக்காதவர்களை நாமினேட் பண்ணச் சொல்லி மற்றவர்களை வற்புறுத்தி வருகிறார். இதுதான் சேரன் நாமினேசனிலும் நடந்தது. அதற்காகவே கமல் கவினை இதற்குள் இழுத்தார்.

சேரன் லாஸ்லியாவுக்காக சாப்பிடக் காத்திருந்த பேச்சு தொடர்ந்த போது தர்ஷனிடம் நீங்கதானே போய் லாஸ்லியாவிடம் சொன்னீங்க என்று கேட்ட கமல் ... உங்களுக்குப் பசியில்லையா இல்ல மனமில்லையா என்பதாய் லாஸ்லியாவிடம் கேட்க, நாமினேட் பண்ணிய வருத்தத்தில் அவருடன் அமர்ந்து சாப்பிட மனமில்லை என்றார். வனிதாதான் அங்க இருந்தாங்க... அப்ப வனிதாவைக் கேட்போம் என வனிதாவை கேட்டதும் பார்வையாளர்கள் கத்த, நாமதானே கேட்டோம் பேச விடுங்க என்று சொல்லி பேசச் சொன்னார். 

வாத்து பிரச்சினையை கையிலெடுத்துப் பேசிய கமலையே போதும் விடுங்க சாமிகளான்னு சொல்லும் அளவுக்கு கானக்குயில் கஸ்தூரியும் வனிதாவும் பண்ணிட்டாங்க... கஸ்தூரி வாத்துன்னு தனித்துச் சொன்னதை எல்லாருமே பார்த்தோம்... இருந்தும் தான் சொல்லவில்லை எனச் சாதித்தார். வனிதா பேசும் முன் எனக்கு வாய்ப்பு வேண்டும் இல்லை என்றால் என்னை பேச விட மாட்டீங்கன்னு மொக்கை வேறு போட்டார். ஒருவரை மனதும் வருந்தும்படி நேரடியாக பட்டப்பெயர் வைத்துத் தாக்காதீங்க.... வேணும்ன்னா அவங்களுக்குத் தெரியாம பேர் வச்சிக் கூப்பிடுங்க.... தெரியலைன்னா கவின்கிட்ட கேட்டுக்கங்க... என்ன கவின் சரிதானே... என்றார் கமல். 

கவின் - லாஸ்லியா செய்வது கமலுக்குப் பிடிக்கவில்லை போலும் இருவருமே அதிக முறை நேற்றைய நேரடித்தாக்குதலுக்கு ஆளானார்கள்.

வாராவாரம் யார் ஒழுங்கா விளையாடலைன்னு கேட்டதும் ஒரு பூகம்பமே வெடிக்குதே ஏன்... இதுல டாஸ்க்ல யார் ஒழுங்கா விளையாடலைங்கிறதுதான் கேள்வியே ஒழிய, அந்த வாரம் முழுமைக்கும் என்பதாய் நீங்க எடுத்துக் கொள்வது சரியல்ல... இனிமேலேனும் மாற்றிக் கொள்ளுங்கள் என்ற கமல் சரி இந்த வாரம் யார் சரியா விளையாடலைன்னு ஒவ்வொருவரும் மனதில் உள்ளதைச் சொல்லுங்க பார்ப்போம் என்றார்.

கஸ்தூரியும் வனிதாவும் அவர்கள் பின்னே வாத்துவும் என கவின் சொல்ல, தலைவன் எவ்வழியோ தலைவியும் அவ்வழியே என லாஸ்லியா சொல்ல, யாரைக் கேட்டாலும் இதைத்தான் சொல்லுவாங்க சார்... இங்க அப்படியே பழகிட்டோம் என உண்மையை உரக்கச் சொன்னான் முகன். தர்ஷனும் அதே இருவர்... கஸ்தூரி தன்னையும் வனிதாவையும்... சேரன் மூவர் என்று சொல்லி சாண்டியையும் உள்ளிழுத்து கஸ்தூரி விடுத்து சாண்டி, வனிதா என்றார்... அவர் சொன்ன காரணம் சரி... ஷெரின் முகன் மற்றும் கஸ்தூரி... வனிதா எதிர்பார்த்தது போல சேரனையும் கஸ்தூரியையும் சொன்னார்.

ஷெரின் முகனைச் சொன்னதும் கஸ்தூரி முகன் அருமையாப் பண்ணினார் என ஒரு குட்டி லெக்சரே அடித்தார். ஆனால் கமல் உள்பட யாருமே கேட்க நினைக்கவில்லை... டுவிட் போடுற அம்மா உள்ள போயி நாவால் நாவல் எழுதிக்கிட்டு இருக்கு... முடியலைடா சாமி.

கமல் எல்கேஜி பிள்ளைங்க ஸ்டிரைக் எல்லாம் பண்ண மாட்டாங்க வனிதா என்றதும் நான் அறிவார்ந்த குழந்தை சார் என்றார் வனிதா... அப்படியே என்றாலும் பஸ் மீது ஏறி நின்றெல்லாம் போராட முடியாது... நீங்க செய்தது தவறு எனக்குட்டினார். 

எனக்குப் பயமா இருக்கு சார் என்ற வனிதாவிடம் பயப்படாதீங்க... பயப்படவே கூடாது என்றார் கமல்... பார்வையாளர்கள் சிரிக்க, போனவாரம் என்னாலதான் பர்னிச்சர் உடைஞ்சதுங்கிறதுக்காகவே இந்தவாரம் அடக்கி வாசிச்சேன் சார் என்றவரிடம் அடிச்சி ஆடுங்க ஆனா அது மத்தவங்களை உடைச்சிடாமப் பாத்துக்கங்க என்றார்.

இது விளையாட்டு இதில் பாசத்துல வழுக்காதீங்க என்றும் அறிவுரை சொல்லத் தவறவில்லை.

மொத்தத்தில் வனிதா கஸ்தூரியே இந்த வாரம் ஒழுங்காக விளையாடாதவர்கள்... ஜெயில் வேண்டாம்... வேறு என்ன தண்டனை கொடுக்கலாம் என்ற போது ஒவ்வொருவரும் ஒன்று சொல்ல, ரெண்டு பேரையும் ஒரு மணி நேரம் எதுத்து எதுத்து உக்கார வச்சி, பேசவே கூடாதுன்னு சொல்லணும் சார் என்றார் சாண்டி. பின்னிட்டீங்க போங்க என ரசித்தார் கமல். 

நாமினேசனில் நீங்க வருவீங்கன்னு எதிர்பார்த்தீங்களா தர்ஷன் என்றதும் வனிதாக்கா வந்ததும் எதிர்பார்த்தேன் சார் என்றது அல்டிமேட் அட்டகாசம்.

வனிதாவுக்குப் பயந்திருந்த அவெஞ்சர்ஸ் அணி தைரியமாகப் பேசியது வரவேற்கத்தக்கது.

நால்வரில் ஒருவரைக் காப்பாற்றணுமே... அதையும் நாளையே செய்வோமென கமல் கிளம்பிவிட, வீட்டுக்குள் சாப்பாட்டை ஒரு கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஸ்பெஷல் ஐட்டமா பிக்பாஸ் அனுப்பியிருப்பார் போல.

ஷெரின் தர்சனுடன் சண்டே சார் என்றபோது சண்டே இல்லையே இன்னைக்கு சாட்டர்டேதானே என்றது கமலுக்குள் இருக்கும் கிரேஸி... 

அப்புறம் லாஸ்லியாவிடம் எதுக்குங்க முகத்தைத் தூக்கி வச்சிக்கிட்டு சிரிச்சி மழுப்புறீங்க..., நீங்க அணி மாறிடீங்களா... நான் அப்பா பொண்ணைச் சொல்லலைங்க... கிளினீங் டீம்ல இருந்து எப்ப வாசிங் டீமுக்கு மாறுனீங்க.. முகத்தைத் தூக்கி வச்சிக்கிறேன்னு கேட்டப்போ அவரு குனிஞ்சிக்கிட்டுத்தானே பாத்திரம் கழுவுனார்... என பேசியதெல்லாமே செம... 

சில வாரங்களுக்குப் பிறகு முழு நிகழ்ச்சியையும் கமல் ரசிக்க வைத்தார்... லவ் யூ கமல்.

ஆரம்பத்தில் பேசும் போது தேவையானவற்றைத் தொகுத்து ஒரு மணி நேரத்தில் கொடுக்கிறோம் என்று சொல்ல வந்த கமல், தேவையில்லாதவற்றைத் தொகுத்து உங்களுக்கு வழங்குகிறோம் என மாற்றிச் சொன்னார். ஆண்டவருக்கும் அடி சறுக்கும்தானே.

சேரன், தர்ஷன், சாண்டி மூவருக்கும் கைதட்டல் அதிகம் கிடைத்தது... சேரனின் நடவடிக்கைகளே அவரை மக்கள் மனதில் நல்ல இடத்தில் வைத்திருக்கிறது. வனிதாவுக்கு எதிர்ப்பு நிறைய இருக்கு... அது அவரைப் பேசவிடாமல் கைதட்டுவதில் தெரிகிறது. கவின் எப்போதும் கமல் பேசும்போது யாருக்கு கைதட்டல் அதிகம்... யாருக்கு எதிர்மறையான கைதட்டல் என யோசிப்பான்... இந்த முறை தனக்கு கைதட்டல் வரவில்லை என்பதை கண்டிப்பாக திறனாய்வு செய்வான் என்றே தோன்றுகிறது.

லாஸ்லியாவைப் பொறுத்தவரை மனசுக்குப்பட்டதைச் செய்கிறேன் என மக்கள் மனதில் இருந்து இறங்கிப் போய்க் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் இருந்த கைதட்டல் அவருக்கு இல்லை என்பதையும் தன்னை கமல் திட்டும்போது அதிக கைதட்டல் வருவதையும் உணர்ந்து வரும் வாரத்தில் மாறவில்லை என்றால் இறுதிவரை நகர்தல் கடினமே.

இன்று என்ன நடக்கிறதெனப் பார்ப்போம்.

பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

3 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

// ஆண்டவருக்கும் அடி சறுக்கும்தானே... //

நுண்ணிய கவனிப்பு...!

vimalanperali சொன்னது…

விவரிப்பின் ஆழம்!

Yarlpavanan சொன்னது…

அருமையான விவரிப்பு