மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 22 ஆகஸ்ட், 2019

பிக்பாஸ் : மனம் கவர்ந்த 'குருவுக்கு நன்றி'

Image result for bigg boss 3 tamil darshan cheran images
'சத்தியமா நீ எனக்குத் தேவையேயில்லை...' பாட்டுத்தான் திருப்பள்ளி எழுச்சியாய்... முந்தைய நாள் சேரனின் பாடலுக்கு ஆடமுடியாதென்றாலும் எழக்கூடச் செய்யாத அவெஞ்சர் குழு இந்தப் பாடலுக்கு அதிரடி ஆட்டம் போட்டார்கள். பாவம் கஸ்தூரி சீக்கு வந்து தேறிய கோழி நடக்குற மாதிரி ஒரு பக்கமா ஆடிக்கிட்டிருந்தாங்க... பிக்பாஸ் இதையெல்லாம் சேரன் பேசும் நல்ல விஷயங்களை, கவின் சேரனுடன் பேசுபவர்களை எல்லாம் பொய் சொல்லி பிரிப்பதை எல்லாம் பாதுகாப்பாய் வெட்டி வைத்துக் கொள்வது போல் வைத்துக் கொள்ளுங்கள்... பார்ப்பவர் உயிருக்கு உத்திரவாதம் இல்லை.

அப்புறம் காலைக்கடனாக எல்லாருக்கும் தர்ஷன் பல குரல் எப்படிச் செய்வதெனச் சொல்லிக் கொடுக்க வேண்டுமென பிக்பாஸ் சொல்ல, தர்ஷன் வகுப்பெடுத்தான்... லாஸ்லியா பூனை எனச் சத்தம் கொடுக்க, கவின் ஜோடிப் பூனையாய் சொக்கி நின்றான். எல்லாரும் குரல் கொடுக்க, சேரன் நாயாய்க் குரைத்தார்.... மோசமில்லை... நல்லாவே இருந்தது... பாவம் கவின் மட்டும் அவனைத் திட்டுவதாய் நினைத்தான் போல... சாண்டி தோளில் சாய்ந்து வெறுப்பேற்றினான்... இவனின் இந்தப் போக்கு மகா கேவலமானது. இவ்வளவு கேவலமானவன் எப்படி கஷ்டப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்திருப்பான்... கஷ்டப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்தவன் கண்டிப்பாக அடுத்தவரைக் கஷ்டப்படுத்த நினைக்கவே மாட்டான். இவன் தப்பிப் பிறந்தவன். 

எல்லாரும் கத்தினாலும் எப்பவும் கத்தும் வனிதாக்கா மட்டும் கத்தவில்லை... தான் யார் என்பதைக் கத்தித்தான் காட்ட வேண்டுமா... தான் சத்தியமாய் பொமேரியன் இல்லை... ராஜபாளையம்தான் என்பதை எல்லாரும் அறிவார்கள் என்பதால் அமைதியாக வேடிக்கை பார்த்தார்.

அதன்பின் சமைக்கும் இடத்தில்... ஆமா எப்பவும் சமைக்கிற மாதிரி சீனைப் போடுறானுங்க... இதையா திங்கிறாங்கன்னு சந்தேகமா இருக்கு... சாப்பாடெல்லாம் வெளியில் இருந்து வந்திருமா அல்லது வந்து சமைத்துக் கொடுத்துட்டுப் போவாங்களா..? என்ற சந்தேகம் ஆரம்பம் முதலே இருக்கத்தான் செய்கிறது... பிக்பாஸ்க்கே வெளிச்சம்.

கஸ்தூரி மீண்டும் வாத்து மடச்சியைப் பற்றி விளக்கம் கேட்க வந்தார்... என்ன மனநிலை இந்தம்மாவுக்கு... முடிந்ததென விட்டொழித்த ஒரு பிரச்சினையை தூங்கி எழுந்தும் தூக்கி வருவதெல்லாம்... ஆத்தாடி இவர்களின் குடும்பங்களில் எப்படி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பார்கள்.... வனிதாக்காவோ முடிந்ததைத் தூக்கி வராதீர்கள் என்று சொன்னார். சென்ற வாரம் கமலும் மக்களும் தன்னை வைத்துச் செய்ததை மனதில் கொண்டு அடக்கி வாசிக்கிறார் என்றே தோன்றுகிறது.

கஸ்தூரி : இல்லை.... நீங்க மூணு பிள்ளை பெத்தீங்கன்னு சொன்னீங்க... எங்க அம்மாச்சிக்கு அம்மாச்சி பத்துப் பிள்ளை பெத்துட்டு நெத்துப்போல இருந்தாங்க.

வனிதாக்கா: இப்ப நான் பத்துப் பெத்துக்கணும்ன்னு சொல்றியா இல்ல... வாத்துன்னு சொல்ல வர்றியா..?

கஸ்தூரி : அதான்... நீங்க வாத்து மடைச்சின்னு நீங்களே நினைச்சிக்கிறீங்க... நான் சொல்ல வர்றது என்னன்னா...

வனிதாக்கா : நீ டுவிட்டர்ல போடுற மாதிரி சுருக்கமாச் சொல்லு... சுற்றி வளைக்காதே...

கஸ்தூரி : மூணு பிள்ளையில்லை முப்பது பிள்ளை பெற்றாலும் நீங்க அழகாத்தான் இருக்கீங்க... வாத்து... வாத்துன்னு சொல்றதெல்லாம் தப்பு.

வனிதாக்கா : அடிப்பாவி நீதானே சொன்னே... இப்ப என்ன குண்டுன்னு 'போட்ராய்' பண்றியா..?

கஸ்தூரி : ஏங்க 'மீர்ர்ரா' வார்த்தை சொல்றீங்க... நீங்க குண்டு இல்லை... ஆனா குண்டாயிருக்கீங்க....

வனிதாக்கா : ஓடிரு... காலையிலயே கடுப்பேத்துனே.. உன்னைய வடைச் சட்டியில ஏத்திருவேன்.

வெளியில்...

சாண்டி : அங்க என்னமோ நடக்குது..?

லாஸ்லியா : டப்பிங் பேசு சாண்டி...

கவின் : அண்ணே நீ போய் என்னன்னு பாரு... இந்த முகனையும் கூட்டிப் போ... நான் லாஸைப் பார்க்கிறேன்.

சாண்டி : நேத்து ராத்திரி காவல் இருக்கச் சொன்னே... இப்ப நெல்லைத் திங்கிற காக்காயை விரட்டுற மாதிரி விரட்டுறே...

மீண்டும் உள்ளே...

கஸ்தூரி : இல்ல வனிதா.... நீங்க அழகிதான்... அதில்லை மேட்டர்.... அந்த வாத்து மடச்சி...

சாண்டி : வனிதா... கதவை அடச்சி விட்டு காலை ஒடச்சி விடேன்...

வனிதாக்கா : திருகிட்டு தூக்கிப் போட்ட தேங்காய் மூடியை விடாம சொரண்டுறா சாண்டி.. முடியல...

சாண்டி : கஸ்தூரி... பேசாம போயிருங்க... வனிதா தூக்கிப் போட்டு மிதிச்சாலும் மிதிப்பாங்க... யானை கால்ல மாட்ன எறும்பாயிருவீங்க...

கஸ்தூரி (மனசுக்குள்) : அப்ப வாத்து மடச்சி.... சரி அப்புறம் தொடர்ந்துக்கலாம்.

மறுபடியும் ஸ்கூல் டாஸ்க் ஆரம்பம். 

இப்ப மூணாவது படிக்கிறாங்களாம்.... ஆனா எல்லாருமே இன்னமும் ப்ரிகேஜியிலதான் இருந்தாங்க... சாண்டி ஸ்பெஷல் சைல்டு போல... இப்ப எல்கேஜி போற பிள்ளைங்களே ரொம்பத் தெளிவாப் பேசுதுங்க... இவனுங்க இன்னமும் 1960களில் இருக்கானுங்க... ஏன் மெச்சூர்டா நடிக்கத் தெரியலை... சிரிக்க வைக்கத்தான் முடியலை என்றாலும் கொஞ்சமேனும் பார்க்கிற மாதிரி நடிச்சாக்கூட பரவாயில்லை... முடியலை... 

சேரன் ஆத்திசூடி வகுப்பெடுத்தார்.... அதையும் கவினும் சாண்டியும் நாசமாக்கிக் கொண்டிருந்தார்கள். ஷெரினுக்கு உடல்நலமில்லை என்ற போதிலும் க்யூட்... முகன் ஆத்திசூடியை ரசிக்கும்படியான ராப் பாடலாக்கினான். பின் நா பிறழ் வரிகளைச் சொல்லிக் கொடுத்து மனப்பாடம் பண்ணிச் சொல்லச் சொன்னார்கள். சாண்டி தெய்வத்திருமகன் விக்ரம் என்பதால் நமக்குத்தான் ரசிக்க முடியலை... லாஸ்லியாவின் 'கும்பகோணம் குரங்கு' சூப்பர். ஷெரின் சொன்னது அழகு... சேரன் ரசித்தார் கூடவே நாமும். வனிதாக்கா டென்சனாயிட்டேன் சார்ன்னு சொல்லிட்டு நம்மளை டென்சனாக்குனாங்க.

பிக்பாஸ் சொன்னபடி ஆசிரியர்களைப் பற்றி பாடல் எழுதிப் பாடச் சொன்னதால் 'முஸ்தபா.... முஸ்தபா...' பாடலை எப்பவும் போல் அழகாய் மாற்றி அருமையாய்ப் பாடினார்கள். கஸ்தூரியை வாசிங்மிஷினில் துவைத்துக் காயப் போட்டார்கள்.... சேரனை அடித்துத் துவைத்துக் காயப்போடுவார்கள் என்று நினைத்தால் 'எதிர்பாராததை எதிர்பாருங்கள்' என கமல் சொல்வது போல் சேரனை துவைக்காமல் தூக்கி வைத்துப் பாராட்டினார்கள்... எங்க ஊரில் எல்லாம் சரியான மழையாம். இது கூட காரணமாக இருக்கலாம்.

கஸ்தூரி மாணவர்களுக்காக ஒரு பாட்டுப் பாடினார்... என்னமோ 'அய்யாவே... அய்யாவே'ன்னு பாடினார்... சேரன் முடிச்சிக்க ஆயாவேன்னு பார்க்க, முடித்துக் கொண்டார். இதை முகன் மற்றும் கவினிடம் டாஸ்க் முடிந்தபின் லாஸ்லியா, கஸ்தூரி உங்களைக் கேலி பண்ற மாதிரி பாடுச்சுன்னு சொல்ல, முகன் அதெல்லாம் இல்லைன்னு மறுத்தான்.

ரொம்ப பொறுமையைச் சோதிக்கும் டாஸ்க் போதும்ன்னு முடிவு பண்ணிட்டாரு போல பிக்பாஸ், டாஸ்க் முடிஞ்சது போட்டோ எடுத்துக்கங்கன்னு சொல்லிட்டாரு... போட்டோ எடுத்து நம்மளைப் போட்டெடுத்த டாஸ்க்கை பழச்சாறு குடித்து முடித்துக் கொண்டார்கள்.

அதன் பிறகு குருநாதர்களைப் பற்றி பகிர்ந்து கொள்ளும் டாஸ்க்... உண்மையில் உருப்படியானதொரு டாஸ்க் இது. மனசுக்குள் மானசீகமாக வைத்திருக்கும் குருநாதர்களைப் பற்றிப் பேச நல்லதொரு வாய்ப்பு... சாண்டி, லாஸ்லியா, கவின், முகன் சொன்னதெல்லாம் நல்லாவே இருந்தது. 

வனிதாக்காவுக்கு குரு இயக்குநர் பி.வாசு என்றார். குடும்ப நண்பர் என்ற முறையில் ஒரு தகப்பனாய் நல்லது கெட்டதில் துணை நிற்பதைப் பகிர்ந்து கொண்டார். இந்தப் பொண்ணு அங்கயும் போயி இதைத்தான் செய்யுதான்னு வாசு அங்கிள் நினைப்பாருன்னு சொல்லியபோது வனிதா இப்படித்தான் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

தர்ஷன் தான் ஓட்டப்பந்தயத்தில் நண்பன் ஒருவனை முந்த முடியாமல் வேறு போட்டிகளில் கலந்து கொண்டு சாம்பியன் விருதை அவனுடன் பகிர்ந்து கொண்டதையும் தனது உடற்கல்வி ஆசிரியர் தனிக் கவனம் எடுத்துச் சொல்லிக் கொடுத்ததால் தேசிய அளவில் இரண்டாமிடம் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்ததை சிரிப்பாய்ச் சொல்லி, கடின உழைப்பு என்றும் உயரத்தில் ஏற்றும் என்பதை எனக்குச் சொல்லிக் கொடுத்த சாரும் அவரின் குடும்பமும் நல்லாயிருக்கணும் என்றார்.

கஸ்தூரி பேச ஆரம்பித்த போது சிறப்பாய்ப் பேசுவார் என்று தோன்றியது... ஆனால் எப்பவும் போல் வதக்காமல் சாம்பாரில் போட்ட வெண்டக்காய் மாதிரி வளவள கொழகொழ ஆக்கிட்டார். பாரதி தெருவுக்கு எப்படிப் போகணும்ன்னு கேட்டா.... நேரே போ.... லெப்ட் எடு....அப்புறம் செகெண்ட் ரைட்... தென் லெப்ட்... மூணாவது ரைட்... கோ ஸ்ரைட்... ஒண்ணு.... ரெண்டு... மூணு... ம்.... அஞ்சாவது தெரு வள்ளுவர் தெரு... அதுல போயும் போகலாம்... இல்ல அதுக்கு அடுத்து அகத்தியர் தெரு அது வழியாவும் வரலாம்... அப்படிப் போயி வள்ளுவர்ன்னா ரைட்... அகத்தியர்ன்னா லெப்ட்... அதுதான் பாரதி தெருன்னு வழி சொன்னா எப்படிப் புரியுமோ அப்படித்தான் அவரின் பேச்சும்... 

மகளின் கதையை அடிக்கடி சொல்வதெல்லாம் மக்கள் மனதில் தனக்கு இடம் வேண்டும் என்பதற்காகத்தான் என்பதை எல்லாருமே அறிவார்கள்... இதை விடுத்து மற்ற விஷயத்தில் கவனம் செலுத்தலாம்... கஸ்தூரியின் குழந்தை கூட இதை மறந்து வாழ நினைத்திருக்கலாம்... மனசளவில் அம்மாவின் பேச்சால் வருந்தக் கூடச் செய்யலாம். ஆனாலும் தான் இல்லாத குழந்தைகளின் மருத்துவச் செலவுக்காய் அறக்கட்டளை நடத்தும் நல்லவிஷயத்தைப் பகிர்ந்து கொண்டதற்குப் பாராட்டலாம்.

ஷெரின் தனக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுத்த ஆசிரியரையும் தன் பதிமூணு வயதில் துள்ளுவதோ இளமை என்னும் திரைக்காவியத்தில் நடிக்க வைத்து, தனக்கு நடிப்புடன் தமிழும் சொல்லிக் கொடுத்த செல்வராகவனையும் நினைவில் நிறுத்தி நன்றி சொன்னார்.  பிக்பாஸ் இல்லத்தில் சத்தமே இல்லாமல் முதல் இடம் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார் ஷெரின்... ஆங்கிலம் கலந்த தமிழும்... அவர் பேசிய விதமும் நம்மை மட்டுமல்ல சக போட்டியாளர்களையும் ஈர்த்தது. ஷெரின் ராக்.

சேரன் ஆசிரியையான தன அம்மா வளர்த்த விதம், மாமா சாமிநாதன் தனது எண்ணம் அறிந்து அதை நோக்கி நகர்த்தியது.... ஒரு சராசரி கிராமத்துக் குடும்பத்தில் சினிமா மீதான கனவோடு தான் இருந்த போது வீட்டில் அதற்கு எதிர்ப்பில்லாமல் இருக்குமா... குடும்பச் சூழலால் பனிரெண்டாவதுக்குப் பின் ஐடிஐயில் படித்து முடித்ததும் வேலைக்கு போக வேண்டும் என்று நின்றார்கள். ஆனாலும் என் எண்ணத்தில் இருந்து மாறாமல் சினிமாவுக்கு வந்து கஷ்டப்பட்டு ஜெயித்து ஊருக்கு சென்றபோது மாமா ரொம்பச் சந்தோஷப்பட்டார். 

அதேபோல் என் குருநாதர் கே.எஸ்.ரவிக்குமார், அவர் இல்லேன்னா சேரன் இல்லை... ஒரு கதை சொன்னதும் என்னை அஸிஸ்டெண்ட் ஆக்கிக்கிட்டார். புரியாதபுதிர் எனக்கு அவரோட முதல்படம்... அவருக்கிட்ட இருந்து நான் கத்துக்கிட்டதைவிட அவர் கத்துக் கொடுத்ததே அதிகம்... ஒரு இயக்குநர் எதுக்கும் கோபப்படாம இருக்கக் கத்துக்கணும்... பொறுமை அவசியம் என்று அவர்தான் சொல்லிக் கொடுத்தார் என்று சொல்லி கே.எஸ்.ரவிக்குமாருக்கு நன்றி சொன்னார்.... சேரன் கிரேட்.

அதன் பிறகு கவின் எப்பவும் போல் லாஸ்லியாவோட லவ்வ ஆரம்பிச்சிட்டான்...  மூணு நாளா தேவாங்காட்டம் இருக்கானாம்... அம்மணி வருந்திக் கேட்டுச்சு... பய லவ்வைச் சொல்லிட்டா அதுக்கு அப்புறம் எத்தனை புள்ளை பெத்துக்கலாம்.... என்னென்ன பேர் வைக்கலாம்... எந்தக் ஸ்கூல்ல படிக்க வைக்கலாம் அப்படின்னு பேசி முடிவு பண்ணலாம்... ஆனா நீங்க (கவனிக்க : லாஸ்லியா வாங்க போங்க போட ஆரம்பித்த பின் கவினும் மரியாதையாப் பேசுறாராம்) கொஞ்சுறீங்க... குழாவுறீங்க... லவ்வ மட்டும் சொல்ல மாட்டேங்கிறீங்க... விதை போட்டாத்தானே செடி வளர்ந்து கிளை பரப்பி மரமாகும்... விதையே போடாம எப்படி மரமாகிறது... புரிஞ்சிக்க மாடேங்கிறீங்கன்னு புலம்பிக்கிட்டு இருந்தான். 

உன்னையெல்லாம் கூவத்துல தூக்கிப் போட்டாலும் அங்க எவளையாச்சும் கூட உக்கார வச்சிக் கடலை போடத்தான் பார்ப்பாய் எனப்பாவமாய் பார்த்துக் கொண்டிருந்தார் சாண்டி.

படுக்கை அறையில் தர்ஷனிடம் லாஸ்லியா பற்றியும் இரவு வெகு நேரம் வெளியில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பது பற்றியும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்த சேரன், அப்பன்னு சொல்றே மகளைக் கூப்பிட்டுப் பேச மாட்டியான்னு நாளைக்கு கமல்சாரே கேட்கலாம்... அதனால கவினுக்கிட்டயே பேசிடலாம்ன்னு பார்க்கிறேன்னு சொல்ல, எனக்கு என்ன் சொல்றதுன்னு தெரியலை... தப்புன்னு தெரியுது... ஆனாலும் பேசினால் சரியாகுமா..? என்றான் தர்ஷன்.

கவின் - லாஸ்லியா விசயத்தை சேரன் பேசப் போனால் கவின் நேரடியாக மோதும் பட்சத்தில் அவர் அவமதிக்கபடுவார்... மரியாதை இழந்து நிற்க வேண்டி வரும்.

ஒருவேளை கவின் நேரடியாக மோதாமல் எப்பவும் போல் பின்னாலிருந்து லாஸ்லியாவைக் குத்தி விட்டால் என்னிடம் பேசாமல் எப்படி அவரிடம் பேசலாம்... என் அப்பா என்றாலே என்னிடம் இந்த விஷயத்தில் பேச உரிமையில்லை... உனக்கு யார் கொடுத்தா இந்த உரிமை என நேரடியாகவே  பேசக்கூடும்.... லாஸ்லியா இப்போது கவின் என்னும் வண்டி ஓட்டியின் கையில் இருக்கும் கண் கட்டப்பட்ட குதிரை என்பதை சேரன் உணர்ந்து ஒதுங்கியிருத்தல் நல்லது.

லைட் அமத்திய பிக்பாஸை யோவ் என்னய்யா... அதுக்குள்ள அமத்திட்டே... பதினோரு மணியாச்சா... அதுக்குள்ளையுமா... ஒரு சண்டையுமில்லாம படுக்கப் போகணுமா... சை நீ எல்லாம் ஒரு பெரிய மனுசனா... இனியாச்சும் அடிச்சிக்கிற மாதிரி டாஸ்க் கொடுய்யா என வாரிக்கொண்டிருந்தார் வனிதாக்கா.

எப்பவும் போல் லைட் அமத்திய பின் தங்கள் காதல் கதையைத் தொடர்ந்தார்கள் கவினும் லாஸ்லியாவும்... படுக்கப் போவோம் வா எனக் கூப்பிட்டான் கவின்.... நீங்க போங்க நான் மேக்கப்பெல்லாம் போட்டுட்டு வாறேன்னு சொன்னாங்க லாஸ்லியா.... படுக்கப் போறதுக்கு எதுக்குய்யா மேக்கப்... சரி பத்திரமா வந்து படுங்க... ரொம்ப நேரம் உக்காந்திருக்காதீங்க... தனிச்சிருக்கது உடம்புக்கு ஆகாதுன்னு சொல்லிக்கிட்டு இருந்தான் காதல் கவின்.. ரொம்ப பாதுக்காக்குறராம்.

சாக்சி இருக்கும் போது நட்புத்தான் என அடித்தும் கமல் கேட்டபோது நண்பேன்டா என அலறியும் சொன்ன லாஸ்லியா இப்போது செய்வது காதல்... இது சும்மா நடிப்பென்று சொன்னார்கள் என்றால் பார்க்கும் நாமெல்லாம் கூமுட்டைகள்தான். கவின் யாரென்பதை லாஸ்லியா உணர்வாரா தெரியாது... கவின் காதல் இளவரசன் என்பது மட்டும் நிச்சயம்... பெண்களைச் சுலபமாக முட்டைக் கண்ணாடிக்குள் விழ வைத்து விடுகிறான். பாவம் சாக்சி... வீட்டில் உக்கார்ந்து 'மனசு வலிக்குது அவ்வ... அவ்வா'ன்னு அழுதுக்கிட்டு கிடப்பார்.

பிக்பாஸ் தொடரும்
-'பரிவை' சே.குமார்.

3 எண்ணங்கள்:

G.M Balasubramaniam சொன்னது…

நானும் பிக் பாஸ் பார்க்கிறேன் எனக்குத்தோன்றாதது எல்லாமுங்களுக்குத் தோன்றுகிறது புரியாதவற்றைப் புரிந்து கொள்ள படித்தால் உங்கள்கருத்தே அதிகம்போல் இருக்கிறது

'பரிவை' சே.குமார் சொன்னது…

ஆமாம் அய்யா..
அப்படியே எழுத முடியாத வண்ணம் தான் எபிசோடு இருக்கு... அதனால் முழுவதும் அப்படியேய் எழுதுவதில்லை... ஆனாலும் நேற்று குருவுக்கு நன்றி சொன்னதை அப்படியேதான் எழுதியிருக்கேன். கஸ்தூரி பேசிய விஷயம் எங்கெங்கோ போனதால் அதை மட்டும் காமெடி ஆக்கி இருக்கேன்...
நன்றி அய்யா கருத்துக்கு.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

// எங்க ஊரில் எல்லாம் சரியான மழையாம். இது கூட காரணமாக இருக்கலாம் //

இன்னும் சிரித்துக் கொண்டு இருக்கின்றேன்...