மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 19 நவம்பர், 2019

சி.சு.செல்லப்பாவின் 'வாடிவாசல்'

Image result for சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல்
வாடிவாசல்...

வாடிவாசல்ங்கிறது சல்லிக்கட்டுக் காளையை அவிழ்த்து விடும் இடம்தானே..?

இந்த வாடிவாசலில் என்ன கதை இருந்து விடப்போகிறது என்று நினைத்தால் அது அபத்தம்... வாடிவாசல் சொல்லும் ஆயிரம் கதைகள்... 

ஆம்... அவிழ்த்து விடப்படும் மாட்டுக்கும் அதைப் பிடிக்கக் காத்திருக்கும் மனிதனுக்கும் இடையேயான சிறு தடுப்புத்தான் இந்த வாடிவாசல்.

மாடு உள்ளிருந்து சீறி வருவது இந்த வாசல் வழிதான்... அதற்கு யார் மீதும் எந்தத் தனிப்பட்ட கோபமும் இருந்ததில்லை... வெளிவரும் போது அதைப் பிடிக்கக் காத்திருப்பவர்களுக்கும் அந்த மாட்டின் மீது எந்த ஒரு கோபமும் வெறுப்பும் இருந்ததில்லை... ஆனாலும் இருவரும் மோதுகிறார்கள்... அதை எப்படியும் அடக்கித் தன் ஆண்மையை நிரூபிக்க வேண்டும் என்று காத்திருப்பவனும் அவனிடம் பிடிபடாமல் வெளியேற வேண்டும் என்று வெளியே வரும் காளையும் தங்களுக்குள் நடத்தும் போராட்டம் அரங்கேறுவது இந்த வாடிவாசல் முன்னேதான்.

சல்லிக்கட்டு நம் வீர விளையாட்டு என்று தொலைக்க இருந்ததை... தொலைவில் நகர்ந்ததை... மீண்டும் கொண்டு வந்த போராட்டத்தை நம்மால் மறக்க இயலுமா..? அதுபோல்தான் வாடிவாசல் வழி வந்த மாட்டை அடக்கித் தன்னை நிரூபித்தவன் அந்த நாளை எப்போதும் மறக்கமாட்டான். பரிசாய்க் கிடைப்பது குடமோ, பாத்திரமோ, கட்டிலோ, தங்கச் சங்கிலியோ எதுவாகினும் தன் வீரம் நிரூபிக்கப்பட்ட நாள் அவனுள் எப்போதும் மகிழ்வைப் பூக்கவைக்கும் நாளல்லவா..?

சல்லிக்கட்டு / மஞ்சுவிரட்டு, எருதுகட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு, வண்டிப் பந்தயம், கைப்புறாப் பந்தயம் என மாட்டுக்கும் மனிதனுக்குமான நிகழ்வுகள் எங்கள் பக்கம் அதிகம். திருவிழாவுக்கும் பொங்கலுக்கும் இவற்றை நடத்தும் ஊர்கள் அதிகம். பந்தயம் பார்க்க காலையில் சைக்கிளில் வெகுதூரம் போய்க் காத்திருந்த நாட்கள் எல்லாம் மறக்க முடியாதவை.

முன்பெல்லாம் மஞ்சுவிரட்டில் மாட்டைப் பிடித்து அடக்குவார்கள்... இப்போதெல்லாம் அதற்கும் ஒரு எல்கை வகுக்கப்பட்டு திமிலில் ஒருவன் விழுந்துவிட்டால் மற்றவர்கள் அந்த மாட்டைத் துன்புறுத்தக் கூடாதென்றும் திமிலில் விழுந்தவனைத் திமிறித் தள்ளி எல்கையைத் தாண்டிவிட்டால் மாடு வெற்றி என்றும் அந்த எல்கை வரை பிடித்த திமிலை விடாது திமிரோடு போராடி மாட்டோடு கடந்துவிட்டால் அந்த வீரன் வெற்றி பெற்றான் என்றும் முடிவாகிறது.  கோட்டை அடையுமுன்னே 'மாடு பிடிமாடு' என்றோ 'மாடு பிடிபட்டது' என்றோ அறிவித்து விடுவார்கள் பஞ்சாயத்தார்கள்.

வடமாடு மஞ்சுவிரட்டில் ஒரு திடலில் குறிப்பிட்ட நீளத்தில் கயிறு கட்டப்பட்டு, அதன் ஒரு முனை முழக்குச்சியிலும் மறுமுனை மாட்டின் கழுத்திலும் கட்டப்பட்டிருக்கும்... சுற்றிலும் மரத்தடுப்பு... அதன் பின்னே வேடிக்கை பார்க்கும் மனிதர்கள்.. உள்ளே கயிற்றின் நீளம் எவ்வளவு இருக்கோ அவ்வளவு நீளம் சுற்றிச் சுற்றி வரும் மாடு. அதைப் பிடிக்க எல்லாப் பக்கமும் ஓடி விளையாடும் மாடு பிடி வீரர்கள்... சல்லிகட்டைப் போல கலவையாக இல்லாமல் ஒரு குழுவாக இறங்குவார்கள்... இதை நடத்துபவர்கள் மாட்டுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் பாக்கு வைத்து அழைத்து வருவார்கள்.

எருதுகட்டு என்பது நீண்ட வடத்தில் கட்டபட்ட மாட்டை, வடத்தை இழுத்துக் கொண்டு ஓட, அதன் பின்னே ஓடும் மாட்டை ஒரு மாடுபிடி வீரர்கள் பிடிக்க முயற்சிப்பார்கள். சில நேரங்களில் மாடு நின்று விளையாடும்... சில நேரம் வேகமெடுத்து ஓட வடத்தைப் போட்டு விட்டு ஓடும் நிலமையெல்லாம் வரும்... மாடு கூட்டத்துக்குள் புகுந்து துவம்சம் செய்யவும் கூடும்... வடம் இழுத்து ஓடுபவர்கள் கொஞ்சம் வலுவாக இருக்க வேண்டும்... வடமும் மிக நீளமாக இருக்க வேண்டும். 

கைப்புறாப் பந்தயம் என்பது மாட்டை பிடித்து விரட்டிக் கொண்டு ஓட வேண்டும்... ஏறக்குறைய ஓட்டப்பந்தம் போல, குறிப்பிட்ட தூரம் என்பது இலக்கு... அதிகமான பரிசுத்தொகை இருக்காது... சில ஊர்களில் ஐந்து கிலோ வெல்லம் முதல் பரிசாக வைக்கப்படும்.

வண்டிப் பந்தயம் என்பது பல தரப்பட்ட நிலைகளில் அதாவது கரிச்சான், சின்ன மாடு, நடு மாடு, பெரிய மாடு என்ற நிலையில் வைக்கப்படும். போய் வரும் தூரம் கூட கூடுதல் குறைச்சலாகத்தான் இருக்கும். வண்டியில் சாரதி மற்றும் பக்கசாரதி இருவர் இருப்பார்கள். எல்லைக் கோட்டைத் தொட்டு கொடி வாங்கித் திரும்பவும் கிளம்பிய இடத்துக்கு வர வேண்டும். இதில் பரிசுத் தொகை அதிகமிருக்கும்.

நாம வாடிவாசலுக்கு முன்னால நின்னுக்கிட்டு நிறையப் பேசிட்டோம்... மாடு அவிழ்த்து விட ஆரம்பிச்சிட்டாங்க.. வாங்க மாடு பிடிக்க வந்த கதையைப் பார்க்கலாம்.

பிச்சியும் அவன் மைத்துனன் மருதனும் கிழக்கே இருக்கும் உசிலனூரில் இருந்து பிரசித்திபெற்ற செல்லாயி சாட்டுக்கு மாடு பிடிக்க (பேச்சு வழக்கில் மாடு அணைய) வந்திருக்கிறார்கள். அவர்களின் வீரமும் விவேகமும் அந்த ஊரைச் சேர்ந்த கிழவனுக்குப் பிடித்துப் போக, சில மாடுபிடி தந்திரங்களையும் நுணுக்கங்களையும் சொல்லிக் கொடுக்கிறான். அவர்களுக்குள் ஒரு நெருக்கம் ஏற்படுகிறது.

பேச்சு வாக்கில் கிழக்கே பிரபலமான மாடு பிடிக்கும் வீரனான அம்புலியைப் பற்றிச் சொல்லும் கிழவன், அவன் மாடு குத்தி மருத்துவம் பார்த்தும் பலனில்லாமல் செத்ததைச் சொல்லி வருந்துகிறான். அவனின் மகன்தான் பிச்சி என்பதையும் சாகும் தருவாயில் தன்னைக் குத்திய மாட்டை எப்படியும் அணைந்து வெற்றி வீரனாகவேண்டும் என அப்பன் சொன்னதாலேயே கிழக்கே இருந்து இந்த ஊர் ஜமீன்தார் வாங்கி வந்திருக்கும் காரியைப் பிடித்து அப்பனின் வீரத்தை தன் மூலமாக நிரூபிக்க மச்சினனுடன் வந்திருக்கிறான் என்பதையும் கிழவன் அறிகிறான்.

கிழவன், பிச்சி, மருதனின் பேச்சு... எதிர்த்து நிற்கும் முருகுவுடன் சின்ன மல்லுக்கட்டு... அவ்வப்போது துள்ளி வரும் காளைகளில் மற்றவர் பிடிக்க அஞ்சும் காளைகளாய்ப் பார்த்துப் பிடித்து பரிசை தட்டிச் செல்லுதல்... ஊர்க்காரர்களின் நக்கல் நையாண்டி... ஜமீன்தாரின் மிடுக்கு.... காளைகள் குறித்த குறிப்பு... வாடிவாசலில் கொம்பு தீட்டி நிற்கும் காளைகளுக்கும் வீரர்களுக்கும் நடக்கும் போராட்டம் எனக் கதை நம்மை வாடிவாசல் முன்னே கட்டிப் போடுகிறது... திமிறும் காளை போல அடங்க மறுக்கும் எழுத்து அடித்து ஆடுகிறது... சல்லிக்கட்டுப் பொட்டலில் புழுதி பறக்க நிகழும் நிகழ்வை ரசிப்பது போல 'வாடிவாசல்' நம்மை வசமிழக்கச் செய்கிறது.

காரியை அடக்கவென வந்தவன் அதை அடக்கினானா...? 

ஜமீன்தார் என்ன செய்தார்...? 

காரி திமிறி நின்றதா..? 

காரி என்ன ஆனது...? 

பிச்சி என்ன ஆனான்..? 

மருதனும் கிழவனும் முருகுவும் என்ன செய்தார்கள்...? என்பதையெல்லாம் ஒரு சோகமான முடிவுடன் சொல்லி முடிக்கிறது வாடிவாசல்.

மாடு பிடிப்பவனும் மாட்டுக்காரனும் ஒரே சாதி என்றாலும் இருவருக்குள்ளும் இருக்கும் ஏற்றத்தாழ்வு மிகச் சிறப்பாக படம் பிடித்துக் காட்டப்படுகிறது. சி.சு.செல்லப்பா அவர்கள் மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறார். மாடுகளோடு வாழ்ந்த, வாழ்கிற மனிதர்கள்... சல்லிக்கட்டு, பந்தயமெல்லாம் சலிக்காமப் பார்க்கிறவங்க... கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நாவல்... அப்ப மற்றவர்கள்...? அவர்களும் வாசிக்க வேண்டிய நாவல்தான்... வட்டார வழக்கில் வாடிவாசலை வாசிப்பது ஒரு சுகம்.

Image result for சல்லிக்கட்டு

சல்லிக்கட்டுப் பற்றி தமிழில் வந்த மிகச் சிறந்த குறுநாவல் இது. சி.சு.செல்லப்பா அவர்கள் 1959ல் சந்திரோதயம் பத்திரிக்கையில் எழுதியதை, கொஞ்சம் விரித்து எழுதிக் குறுநாவலாய் அப்போது தான் தொடங்கியிருந்த எழுத்து என்னும் இதழின் சந்தாரார்களுக்கு இலவசமாக அனுப்பினார். இதன் இரண்டாம் பதிப்பு வெளிவந்ததா இல்லையா என்பது தெரியாத நிலையில் 1992-ல் பீகாக் பதிப்பகம் வெளியிட்ட 'வாடிவாசல்' சிறுகதைத் தொகுப்பில் இக்குறுநாவல் இடம் பெற்றது. அதன் பின்னர் 1994-ல் இந்தியா டுடே வெளியிட்ட சிறப்பு மலரில் வெளிவந்தது. ஜனவரி-2019ல் காலச்சுவடு இப்புத்தகத்தின் 23வது பதிப்பைக் கொண்டு வந்துள்ளது. இந்தப் பதிப்பில் இந்தியா டுடேயில் கே.எம்.ஆதிமூலம் அவர்கள் வரைந்த கோட்டோவியங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

முதல் பதிப்பில் சி.சு.செல்லப்பா அவர்கள் எழுதிய முன்னுரையுடன் 'எதிர்ப்புச் சலனங்களின் களம்' என எழுத்தாளர் பெருமாள் முருகன் ஆறாம் பதிப்புக்கு எழுதிய முன்னுரையும் இந்தப் பதிப்பில் இடம் பெற்றிருக்கின்றன. 

'சல்லிக்கட்டு ஒரு வீர நாடகம். அது விளையாட்டும் கூட. புய வலு, தொழில்நுட்பம், சாமர்த்தியம் எல்லாம் அதுக்கு வேண்டும். தான் போராடுவது மனிதனுடன் அல்ல, ரோஷமூட்டப்பட்ட ஒரு மிருகத்துடன் என்பதை ஞாபகத்தில் கொண்டு வாடிவாசலில் நிற்க வேண்டும் மாடு அணைபவன். அந்த இடத்தில் மரணம்தான் மனிதனுக்குக் காத்துக் கொண்டிருக்கும்.' 

'காளைக்குத் தன்னோடு மனுஷன் விளையாடுகிறான் என்று தெரியாது. அதற்கு விளையாட்டிலும் அக்கறை இல்லை. அதை மையமாக வைத்துப் புனையப்பட்ட இந்தக் கதையில் சல்லிக்கட்டு பற்றிய வர்ணனை தத்ரூபமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது... நுட்பமாகவும் கூட. ஒரு குறிப்பிட்ட வட்டாரத்துப் பேச்சு வழக்கிலேயே முழுக்க முழுக்க எழுதப்பட்டிருப்பது சிலிர்ப்பு ஏற்படுத்தும் கதை' என சி.சு. செல்லப்பா எழுத்துப் பத்திரிக்கையில் இக்குறுநாவல் பற்றிக் கொடுத்த விளம்பரத்தில் சொல்லியிருக்கிறார். இதுவும் காலச்சுவடு பதிப்பில் இணைக்கப்பட்டிருக்கிறது.

'சி.சு.செல்லப்பா வாடிவாசலைத் தொடங்கி வளர்த்துச் செல்லும் விதம், பாத்திரங்களை அதனூடே உருவாக்கும் நுட்பம், படைப்பு எட்டக்கூடிய விரிவு பற்றிய உணர்வு அனைத்தும் உயர்ந்த படைப்பாளராக அவரைக் காட்டுகின்றன. சல்லிக்கட்டை மிருகவதை என்றும் காட்டுமிராண்டி விளையாட்டு என்றும் விமர்சிக்கும் ஜீவகாருண்ய நேசர்கள், சல்லிக்கட்டை வெவ்வேறு தளங்களில் வைத்துப் பார்க்கும் பார்வையைக் கொண்ட வாடிவாசலை ஒருமுறையேனும் வாசித்துப் பார்க்க வேண்டும்' என எழுத்தாளர் பெருமாள் முருகன் தனது முன்னுரையில் தெரிவித்திருக்கிறார்.

'இந்தப் புத்தகத்தின் பக்கங்களை மூடி வைத்துவிட்ட பிறகும் அந்தக் காளையும் மனிதனும் வாடிவாசலும் உங்கள் நினைவில் இருந்து கொண்டேயிருக்கும்' என்று தன் முன்னுரையில் சி.சு.செல்லப்பா சொல்லியிருக்கிறார். அது முற்றிலும் உண்மை. காரியும் பிச்சியும் வாடிவாசலும் நம் கண்களைவிட்டு அகலாது.

Image result for சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல்

எழுத்தாளரைப் பற்றி...

எழுத்தாளர் சி.சு.செல்லப்பா அவர்கள் செப்டெம்பர்  29 - 1912-ல் வத்தலக்குண்டு அருகிலுள்ள சின்னமனூரில் பிறந்தார். 

சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல், மொழிபெயர்ப்பு, விமர்சனம் என எல்லாவற்றையும் எழுதினார். 

தினமணி மற்றும் சந்திரோதயத்தில் உதவியாசிரியராய் பணியாற்றினார். 

எழுத்து இதழைக் கடும் பொருளாதார நெருக்கடியிலும் பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து நடத்தினார். 

பணம், பரிசு, புகழ் போன்றவற்றின் பின் எப்போதும் பயணிக்க விரும்பாத படைப்பாளி. 

புகைப்படம் எடுப்பதில் அதீத ஆர்வம் கொண்டவர். 

டிசம்பர் 18 - 1998-ல் இயற்கை எய்தினார்.

சகோதரர் பிலால் அமீரக எழுத்தாளர் குழும வாசித்ததைப் பகிர்ந்து கொள்வோம் நிகழ்வில் 'வாடிவாசலை' லயித்துப் பேசினார். அதன் பாதிப்பால் ஷார்ஜா உலகப் புத்தகக் கண்காட்சியில் வாடிவாசலை வாங்கி வாசித்தேன்... வாசித்து முடிக்கும்வரை கீழே வைக்க மனமில்லை... அவ்வளவு அருமையான எழுத்து.

வாடிவாசல் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய குறுநாவல்.

வாடிவாசல்
சி.சு.செல்லப்பா
காலச்சுவடு பதிப்பகம்.
விலை. ரூ. 90
-'பரிவை' சே.குமார்.

3 எண்ணங்கள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமையான விமர்சனம் நண்பரே
அவசியம் வாங்கிப் படிப்பேன்

Yarlpavanan சொன்னது…

அருமையான கண்ணோட்டம்
பாராட்டுகள்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சிறப்பு...