மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 19 ஆகஸ்ட், 2019

மனசின் பக்கம் : ரெண்டு கதைகள்

கொஞ்ச நாளாவே எழுதும் மனநிலை சுத்தமாக இல்லை... குறிப்பாய் சிறுகதைகள்... மரப்பாலம் நாவல் வாசித்து அது குறித்து எழுத நினைத்து இதுவரை ஒரு வரி கூட எழுதவில்லை. இதன் காரணமாகவே பிக்பாஸ் மற்றும் மனசின் பக்கமாய் எதாவது எழுதிக் கொண்டிருக்கிறேன். எங்கே எழுத்தை விட்டு விலகிப்  போய் விடுவோமோ என்ற எண்ணத்தில்... 

என் பிக்பாஸ் பதிவுகள் பெரும்பாலும் நகைச்சுவையாய் எழுதிப் பார்ப்பதாய்த்தான் இருக்கிறது. பிக்பாஸை உயர்த்தும் பதிவாக இல்லாமல் என் எழுத்துக்கு தீனி கொடுக்கும் பகிர்வாய்த்தான் அதைப் பார்க்கிறேன்... பலர் அதை ஏன் எழுதுகிறாய் என்கிறார்கள்... சிலரோ எழுது என்கிறார்கள்... எனக்குள் இருக்கும் தேக்கநிலையை நீக்கும் பொருட்டே தொடர்ந்து பிக்பாஸ் எழுதுகிறேன். 

சிறுகதை எழுதும் எண்ணம் வந்தாலும் ஆரம்பிக்க ஏதோ ஒரு திணறல் என்னுள்... மனசு நல்லாயிருந்தாத்தான் எழுத்தும் வரும் போல... தடைகளை உடைக்க சனியில் ஒன்று ஞாயிறில் ஒன்றென இரண்டு கதைகள் எழுதினேன்... என் பாணி எழுத்தாய் அமைந்ததா என்பது சந்தேகமே என்றாலும் நீண்ட தேக்கநிலையை உடைக்கவாவது முடிந்ததே என்ற சந்தோஷம். 

முதல் கதையை நீண்ட நாளைக்குப் பிறகு ஒரு வார இதழுக்கு அனுப்பியிருக்கிறேன். அந்தக் கதைகளில் சில பாராக்கள் பார்வைக்கு...

கதை 1 :

"இல்ல... அத்திக்கு முன்னால ஒரு நிமிசங்கூட முழுசா நிக்கலை... இவ்வளவு தூரம் பார்த்திருக்கியேன்னு ஆச்சர்யமா இருக்கு... உண்மையிலேயே இதெல்லாம் இப்பத்தான் பார்த்தியா... இல்ல டிவி, வாட்ஸப், பேஸ்புக்ல பார்த்ததை வச்சிச் சொல்றியா..?"

"நல்லாத்தான்... நீங்க பாக்கலையாக்கும்... அந்த முகத்துல அப்படி ஒரு அழகு... ஆமா நயன்தாரா பக்கத்துல நின்னு பாத்திருப்பாதானே..?"

"மறுபடியும் அங்க போயாச்சா... விஜபிகள் எல்லாம் அப்படித்தான்... போட்டோவே எடுத்திருப்பா... விடுவியா... இந்தா பூ வாங்கி வச்சிக்க..."

"ஆத்தாடி இன்னைக்கு மழைதான் வரப்போகுது... என்னைக்குமில்லாத திருநாளா இன்னைக்கு பூ வாங்கிக்கச் சொல்றீங்க..." சிரித்தபடி ஹோட்டலை விட்டு வெளியில் வந்தவள் பேருந்து நிலையம் அருகே கூடையில் வைத்துப் பூ விற்ற அம்மாவிடம் வாங்கித் தலையில் வைத்துக் கொண்டாள்.

மல்லிகைப்பூ வைத்தால் பெண்கள் ஒரு அழகுதான்.

"என்னம்மா... அத்திவரதரை எத்தனை முறை கும்பிட்டீங்க...?" பூக்கார அம்மாவிடம் மெல்லக் கேட்டாள்.

"அட ஏம்மா நீ வேற... அங்க போயி மணிக்கணக்கா நின்னு கும்பிட்டுட்டு வந்தா எம்பொழப்ப யார் பாக்குறது...? அவரு எங்க போப்போறாரு... இங்கதானே குளத்துக்குள்ள இருக்கப் போறாரு..." என்றாள்.

"உலகத்துச் சனமே வருது... நீங்க பாக்கலையா..."

"உங்களுக்குத்தான் அத்திவரதர் பெருசு... கிளம்பி வந்து மணிக்கணக்காக நெரிச்சல்ல நின்னு மிதிபட்டு... இடிபட்டு அவரைப் பாத்துட்டுப் போறீங்க... எங்களுக்கு அவர் இங்கயிருக்க மத்த தெய்வங்க மாதிரித்தான்... நம்ம பொழப்பையும் பாக்கணுமில்லம்மா... அதைப் போட்டுட்டுப் போனா யாரு படியளப்பா..?"


கதை 2 :

"வாங்கத்தான்..." சேலைத் தலைப்பால் முகம் துடைத்தபடி வரவேற்றாள் புவனா.

"ம்...  ஏன் இப்படி வேர்த்திருக்கு...?" என்றபடி அந்த ஓட்டு வீட்டுக்குள் நுழைத்தான் ராகவன். ஒட்டடை கூட அடிக்காமல்... தரையெல்லாம் சிமிண்ட் பெயர்ந்து சுவரெல்லாம் ஒவடு ஏறிப்போய் இருந்தது. மூலையில் ஒரு நாற்காலியில் பாயும் தலையணையும் அடிக்கி வைக்கப்பட்டிருந்தது. அதன் அருகே பச்சைக்கலர் தகர சேர் ஒன்று மடக்கி வைக்கப்பட்டிருந்தது. வேகவேகமாக அதை எடுத்து விரித்துப் போட்டாள். 

"உக்காருங்கத்தான்... பின்னால கசால கூட்டிக்கிட்டு இருந்தேன். கார்ச்சத்தம் கேக்கவும்தான் ஓடியாந்தேன்... கல்யாண மண்டபத்துல பாக்கும் போது கூட வாரேன்னு சொல்லல..." முகமெல்லாம் பூரிப்பாய்க் கேட்டாள்.

"ஆமா... மண்டபத்துல எங்க பேச நேரமிருந்துச்சு... கசகசன்னு ஒரே கூட்டம்... இதுல என்னைய மொய் எழுதுற இடத்துல வேற உக்கார வச்சிட்டாங்க.... அப்புறம் எங்கிட்டுப் பேசுறது.. நேத்தைக்கு விருந்துக்கு நீ வருவேன்னு எதிர் பார்த்தேன்... அவரு மட்டுந்தான் வந்திருந்தார்..."  

"இதுகளப் போட்டுட்டு வரமுடியாது... அதான் அவுகள மட்டும் போகச் சொன்னேன்..."

"இன்னைக்கு ராத்திரி பஸ்லதான் டிக்கெட் புக் பண்ணியிருக்கேன்... வந்தது வந்துட்டோம்... அப்படியே உன்னையும் பார்த்துட்டுப் போகலாம்ன்னு தோணுச்சு... மத்தியானம் அங்க பழக்கமான ஒருத்தரோட மாமா வீட்டுக்குப் போகணும்... அதான் காலையிலயே வந்தேன்... அடுத்து எப்ப வருவேன்னு தெரியாது... அடிக்கடி வர்ற மாதிரியா இருக்கு..."

"ம்... " என்றவள் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.

தண்ணீரைக் குடித்துவிட்டு "ஆமா... அவரு... பசங்கள்லாம் எங்க..." என்றான்.

"அவருக்கு இன்னைக்கு கடை லீவுதான்... எங்கயோ வெளிய போறேன்னுட்டுப் போனார்... பெரியவளுக்கு கிளாஸ்... சின்னவ பிரண்ட் வீட்டுல படிக்கப் போறேன்னு பொயிட்டா..."

"ம்... நீ எப்படியிருக்கே..?"

"இருக்கேன்... நல்லாயிருக்கேன்னு சொல்ல முடியாட்டியும் நடமாடிக்கிட்டு இருக்கேன்ல..." சோகமாய்ச் சிரித்தவள், "காபி போடவா...?" என்றாள்.

"ம்... போடு... உன்னோட காபி வேண்டான்னு சொல்ல முடியுமா..?" சிரித்தான்.

காபியைக் கொடுத்து விட்டு "அபி எதுவும் சொல்லி விட்டாளா...?" மெல்லக் கேட்டாள்.

"ஒண்ணும் சொல்லலையே... ஏங்கேக்குறே...?"

"இல்ல... கஷ்டம்ன்னப்போ கொடுத்தீங்க... இத்தன வருசமா திருப்பிக் கொடுக்காம வச்சிருக்கோம்... அதான் இங்க வரும் போது போயிக் கேட்டுட்டு வாங்கன்னு உங்ககிட்ட சொல்லி விட்டாளாக்கும்ன்னு கேட்டேன்..."
-'பரிவை' சே.குமார்

18 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கதை 1 :- இன்று வீட்டில் நடைபெற்ற உரையாடலின் ஒரு பகுதி :-

இத்தனை பேர்கள் அத்தி வரதரை தரிசித்து வந்தார்களே, அவர்களின் நோக்கம் என்னவாக இருக்கும்...?

அது நமக்கு தேவையில்லாதது... இரக்கத்தை செயலில் காட்டும் பக்கத்து வீட்டு அம்மாவால், அங்கு சென்றும் கூட தரிசனம் செய்ய முடியவில்லை...

விவசாயி, தொழிலாளி, உழைப்பாளி - இவர்களுக்கு எந்த தரிசனமும் தேவையில்லை...

...

...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கதை 2 :- எதிர்பார்க்காத திருப்பம் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

// பலர் அதை ஏன் எழுதுகிறாய் என்கிறார்கள்... சிலரோ எழுது என்கிறார்கள்... //

பலரின் கருத்து போல் நடந்து கொள்ள வேண்டுமென்றால், நீங்கள் நொடிக்கு நொடி மாற வேண்டி வரும்... தேவையா நமக்கு...?

கைபேசியில் கருத்துரை இடுவதால், இத்தனை கருத்துரைகள்... மன்னிக்கவும்...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

கதை 1 அத்திவரதர் அன்றாடங்காய்ச்சிகளுக்கு தூரத்திலேயே இருந்துள்ளார்.
கதை 2 பொருளாதாரச் சிக்கலோ?

'பரிவை' சே.குமார் சொன்னது…

இதுதான் அண்ணா உண்மை...
உழைப்பாளிகள் காத்திருக்கப் போவதில்லை.
அதுதான் அந்த பூக்கார அம்மாவின் பதிலாய்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

திருப்பமெல்லாம் இல்லாமல் கணவன்-மனைவி உரையாடல், திருமணத்துக்குச் சென்ற இடத்தில் சகோதரனுடன் உரையாடல், அத்தை மகள் வீட்டில் அவருடன் உரையாடல் என நகரும் கதையில் நினைவுகளுடன் பயணிக்கிறான் நாயகன் அவ்வளவே.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...

உண்மைதான்... அதனால்தான் என் போக்கில் எப்பவும் எழுதுவதுண்டு...

மூணு கருத்து வந்திருக்கு.. மன்னிப்பெதற்கு... மொபைல்லயே கருத்துப் பதிங்க... அப்பத்தான் அதிக கருத்து வரும்... :)

நன்றிண்ணா.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஐயா....
அத்திவரதர் தரிசனம் விஜபி வருகையைப் பற்றி பேசுகிறது.
பொருளாதாரச் சிக்கல் அதிகமாகப் பேசப்படவில்லை...
நன்றி ஐயா.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

இரண்டு கதைகளுக்கான சில வரிகள் முழுக்கதையை வாசிக்க ஆர்வல் தருகிறது.

பிக் பாஸ் - உங்களுக்குப் பிடித்திருப்பதை எழுதுங்கள். பிடித்தவர்கள் படிக்கட்டும்! பிடிக்காதவர்கள் படிக்காமல் போகலாம்!

ஸ்ரீராம். சொன்னது…

அத்தி வரதர் கதை வித்தியாசமான ஆனால் உண்மையான நிலையைச் சொல்லும் சிந்தனை.

அடுத்த கதை நானும் ட்விஸ்ட் இருக்கும் என்று எதிர்பார்த்தேன்.

பத்திரிகையில் வெளிவரட்டும். வாழ்த்துகள்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

இரு கதைகளுமே ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல இருக்கிறது! மிக நன்றாக இருக்கிறது இந்த சாம்பிள் வரிக்ளே!

வாழ்த்துகள் குமார்.

துளசிதரன்

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

குமார் உங்களுக்கு இருக்கும் சுணக்கம் போலத்தான் எனக்கும் இருக்கிறது. ஆனால் சுணக்கம் பல வேலைகளினாலும், மனதில் வந்து விழும் உரையாடல்கள், வசனங்கள், கருத்துகளை எழுத்தாக்க முடியாமல் சென்று கொண்டிருக்கிறதே நேரம். நீங்கள் சொல்வது போல் மனம் நன்றாக இருந்தால்தான் எழுத இயலும்.

முதல் கதை செம. அத்தியின் கதை...உண்மை அதுதானே...அழகான கருத்துள்ள கதை..

இரண்டாவது கதையும் அது போல அருமை...ஏதோ இருக்கிறது கதைக்குள் என்று தெரிகிறது.

பத்திரிகையில் வெளிவர வாழ்த்துகள் குமார்.

கீதா

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

பிக்பாஸ் எழுதுங்கள் குமார். உங்கள் எழுத்தை அது வலுவாக்கட்டும்!!! பிறருக்காகவா எழுத இயலும்? நம் மனதிற்காகத்தானே எழுதுகிறோம்...எழுதுங்கள் குமார். நானும் அவ்வப்போது வாசிக்கிறேன்.

கீதா

'பரிவை' சே.குமார் சொன்னது…

கருத்துக்கு நன்றி அண்ணா....

சேரன் உள்ளிருக்கும் வரை எழுதுவேன் அண்ணா... அதன் பின் எழுத மாட்டேன் என்றுதான் நினைக்கிறேன்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

அத்திவரதர் விஜபி தரிசனம் பற்றிப் பேசும் கதை அண்ணா... அதைத்தான் பத்திரிக்கைக்கு அனுப்பியிருக்கிறேன்.

அடுத்த கதை... சும்மா எழுதிப் பார்த்தது... ட்விஸ்ட் எல்லாம் இல்லை... ஆனா முடிவு எப்பவும் போல இருக்கும்.

நன்றி அண்ணா.

'பரிவை' சே.குமார் சொன்னது…

தங்கள் கருத்துக்கு நன்றி அண்ணா

'பரிவை' சே.குமார் சொன்னது…

உண்மை அக்கா...
மனநிலை சரியில்லாத போது எப்படி எழுத முடியும்..?
தங்கள் கருத்துக்கு நன்றி அக்கா.

'பரிவை' சே.குமார் சொன்னது…

ரொம்ப நன்றி அக்கா...
சேரன் இருக்கும்வரை பிக்பாஸ் தொடரும்.. அதன் பின் எழுதும் எண்ணமில்லை... பார்க்கும் எண்ணமும்தான்...