மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 29 ஏப்ரல், 2013

மரக்காணம் கலவரம்: நடந்தது என்ன?- ஜெ. விளக்கம் - பகுதி - 3


போலியான பதிவு எண் கொண்ட வாகனங்கள்:

இந்த விழாவில் கலந்து கொள்ள வந்தவர்கள் பயணம் செய்த வாகனங்களின் பதிவு எண்களை காவல் துறையினர் பின்னர் ஆய்வு செய்து சரிபார்த்த போது, சில வேன்களின் பதிவு எண்கள் போலியானவை எனத் தெரிய வந்துள்ளது. இரு சக்கர வாகனங்களுக்கு வழங்கப்பட்ட பதிவு எண்களை சில வேன்களுக்கு போலியாக பயன்படுத்தி உள்ளனர். எனவே, வேண்டுமென்றே சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை எற்படுத்துவதற்காக திட்டமிட்டுள்ளனர் என்று தெரிய வருகிறது. மேலும், இவ்விழாவினால், கிழக்கு கடற்கரை சாலையில் பல மணி நேரங்கள் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனால் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும், வெளியூர் செல்லும் பயணிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாயினர். 

மேலும் அவசர கால சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டு நோயாளிகள் அல்லலுற்றனர். விழா முடித்து திரும்பிச் சென்றவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டு இரண்டு மணி நேரம் போக்குவரத்தை தடை செய்ததால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேலும், மரக்காணம் அருகில் தீ வைப்பு, வாகனங்கள் மீது தாக்குதல் ஆகிய சம்பவங்கள் நடந்த போது, சாலையில் நிறுத்தப்பட்டிருந்த 300 வாகனங்கள் புதுச்சேரி நோக்கி திருப்பி அனுப்பப்பட்டன. 

அந்த இடத்தில் கழிக்குப்பம் என்ற ஊரை ஒட்டிய சாலையின் ஒரு பக்கத்தில் தலையில் காயங்களுடன் அடையாளம் தெரியாத ஒரு நபரின் உடல் கிடந்தது. வாகனத்தின் மேலிருந்து விழுந்தோ அல்லது வாகனம் மோதியோ மரணம் ஏற்பட்டதற்கான அறிகுறிகள் அந்த பிரேதத்தில் இருந்ததால், இந்திய தண்டனைச் சட்டம் 304(ஏ-ன்கீழ் வாகன விபத்து வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் நடைபெற்ற விசாரணையில், இறந்தவர் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த செல்வராஜ் என்று தெரிய வந்துள்ளது. இந்த மரணம் குறித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள ஐயமும் கருத்தில் கொள்ளப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும். 

மற்றொரு சம்பவத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவேக் என்பவரும் வாகன விபத்தில் இறந்துள்ளார். மரக்காணத்தில் பிரச்சனை உருவாகி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், வாகனங்கள் புதுச்சேரி நோக்கி திருப்பிச் சென்ற போது, ஒரு வாகனத்தில் விவேக் என்பவர் ஏற முயன்ற போது, கவனக் குறைவாக ஓட்டி வரப்பட்ட தனியார் பேருந்து ஒன்று அவர் மீது மோதியுள்ளது. 

இதன் காரணமாக அந்த நபரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்துவிட்டதாக அவரது உறவினர் பிரசன்னா கொடுத்த புகாரின் பேரில், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 304 (ஏ-ன்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பெரும்பாலானவர்கள் குடி போதையில்... 

இவ்விழாவில் பங்கேற்றவர்கள் மரக்காணத்தில் வன்முறையில் ஈடுபட்ட போதும், காவல் துறையினர் மிகுந்த பொறுமையுடன், பொதுமக்கள் நலன் கருதி அச்சம்பவங்களை கையாண்டதோடு, காவல் துறையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளினால் யாரும் காயம் அடையவில்லை. இவ்விழா அமைப்பாளர்கள், விழா சம்பந்தமாக காவல் துறையினர் விதித்த நிபந்தனைகளை தவறாமல் கடைபிடிப்பதாக எழுத்து மூலமாகவும், உயர் அதிகாரிகளிடம் நேரடியாகவும் உத்தரவாதம் அளித்து விட்டு, அவற்றையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு, அந்த நிபந்தனைகளை கடைபிடிக்க எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை. 

வழக்கம் போல பெரும்பாலான நிபந்தனைகளை மீறியதோடு, சட்ட மீறல்களிலும் ஈடுபட்டனர். உதாரணமாக கீழ்கண்ட நிபந்தனைகள் விழா அமைப்பாளர்களால் மீறப்பட்டுள்ளன. விழாவில் பங்கேற்ற தலைவர்கள், விழாவை முடிப்பதற்கு அனுமதிக்கப்பட்ட நேரமான இரவு 10 மணியை கடந்து கூட்டத்தை தொடர்ந்து 11.35 மணி வரை நடத்தினர். இவ்விழாவில் கலந்து கொண்ட பெரும்பாலானவர்கள் குடிபோதையில் இருந்ததோடு, ஒழுங்கற்ற முறையில் நடந்து கொண்டுள்ளனர். விழாவிற்கு சென்றவர்கள் மரக்காணம் உள்ளிட்ட பல இடங்களில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதோடு, பொது சொத்துக்களுக்கும், தனியார் சொத்துக்களுக்கும் பலத்த சேதத்தை விளைவித்தனர்.

தேசிய தலைவர் படங்களின் முகத்தில் சாயம் பூசி...:

மேலும், மாமல்லபுரம் அருகே குழிப்பாந் தண்டலம், அம்மாள் நகர், பூஞ்சேரி, நந்தி மாநகர், காரணை மற்றும் சில இடங்களில் சாலையோரத்தில் இருந்த மற்றொரு கட்சியினரின் கொடி கம்பங்களை உடைத்தும், தேசிய தலைவர் படங்களின் முகத்தில் சாயம் பூசியும், சாதி மோதலை தூண்டும் விதத்தில் நடந்து கொண்டனர். விழாவிற்கு வந்தவர்கள் திறந்த வாகனங்களிலும் சரக்கு வாகனங்களிலும், வாகனங்களின் மேற்கூரையில் ஏறி நடனம் ஆடியும், ஆபாசமான வார்த்தைகளை பேசியும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தனர். 

விழா முடிந்தவுடன் சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு அப்பகுதி முழுவதையும் சுத்தம் செய்து தரவில்லை. புராதன சின்னமான கடற்கரை கோவில் மேல் ஏறி அதில் அவர்கள் கட்சி கொடியை கட்டி புராதன சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்க முற்பட்டனர். பத்து மணிக்குள் கூட்டத்தை முடித்துக் கொள்வதாக விழா அமைப்பாளர்கள் உறுதி அளித்திருந்த போதும், இவ்விழாவில் பங்கேற்ற பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் பேசும் போது, "11 மணிக்குப் பேசறேன், போடு வழக்க. அதெல்லாம் நமக்குக் கவல கிடையாது" என்று கூறியுள்ளார். 

ராமதாஸ் அவர்களின் ‘வழக்குப் போடுங்கள்' என்ற கோரிக்கையை ஏற்று...:

 பத்து மணிக்குள் விழாவை முடித்துக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை உதாசீனப்படுத்திய ராமதாஸ் அவர்கள் மீது ‘வழக்குப் போடுங்கள்' என்ற அவரது கோரிக்கைக்கு ஏற்ப வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றத்தை ஒப்புக் கொண்டு, நீதிமன்றம் அளிக்கும் தண்டனையை அவர் ஏற்றுக் கொள்வார் என்று நான் நம்புகிறேன். 

இளைஞர் பெருவிழா என்று நடத்தப்பட்ட இந்த விழாவிற்கான விளம்பர சுவரொட்டிகளில் சந்தன மரக் கடத்தல் வீரப்பனின் புகைப்படத்தைப் பயன்படுத்தி உள்ளனர். இளைஞர்களை நல்வழிப்படுத்துவதாகக் கூறும் ராமதாஸ், சந்தன மரக் கடத்தல் வீரப்பனை இளைஞர்கள் பின்பற்றி நடக்க வேண்டும் என்று சொல்கிறாரா? இல்லையென்றால் எதற்காக சந்தன மரக் கடத்தல் வீரப்பனின் புகைப்படம் சுவரொட்டிகளில் பயன்படுத்தப்பட்டது? 

தமிழ்நாட்டில், பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்று கூறும் ராமதாஸ், முன்னின்று நடத்திய இந்த விழாவில், பெரும்பாலான இளைஞர்கள் மது குடித்து விட்டுதான் வந்து இருந்தார்கள். இப்படித்தான், திரு. ராமதாஸ் இளைஞர்களை நல்வழிப்படுத்துகிறாரா? கடந்த 28.4.2000 அன்று நடந்த விழாவில் பங்கேற்றவர்கள், மாமல்லபுரம், புதுப்பட்டினம், வாயலூர் காலனி ஆகிய இடங்களில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்துள்ளனர். 26.4.2002 அன்று நடைபெற்ற விழாவின் போதும், மரக்காணத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

ஒழுங்கீனமான முறையில் நடந்து கொள்ளும் போது...:

பொதுவாக, பல்வேறு அரசியல் மற்றும் சாதி ரீதியான அமைப்புகள் சில காரணங்களுக்காக தங்கள் பலத்தை காட்டும் விதத்தில், ஊர்வலம், பொதுக்கூட்டம், மாநாடு, நினைவு தின நிகழ்ச்சிகள் போன்றவற்றை நடத்தும் போது, அந்நிகழ்ச்சிகளுக்கு பெருமளவில் வாகனங்களில் வந்து செல்பவர்கள் குறிப்பிட்ட நேரங்களில் குறிப்பிட்ட சாலை வழியே வந்து செல்லும் போது, காவல் துறையினர் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படாமல் திறந்த வாகனங்களில் ஒழுங்கீனமான முறையில் நடந்து கொள்ளும் போதும், வழி நெடுக சாலையோர உணவகங்களில் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் தகராறுகளில் ஈடுபடும் போதும், மாற்று கட்சி மற்றும் பிற அமைப்புகளின் கொடி மற்றும் அடையாள சின்னங்களைச் சேதப்படுத்தும் போதும், அவர்களை கட்டுப்படுத்துவது என்பது காவல் துறையினருக்கு மிகப் பெரிய சவாலாக இருந்து வருகிறது. 

அதிகமான எண்ணிக்கையில் வாகனங்களில் செல்லும் போது, காவல் துறையினரின் அறிவுரைகளுக்கு அவர்கள் செவி சாய்ப்பதில்லை. இது போன்ற விழாக்களுக்கு காவல் துறையினர் அனுமதி தர மறுத்தால், விழா அமைப்பாளர்கள் உயர் நீதிமன்றத்தை அணுகி, அங்கே சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் நடக்க மாட்டோம், காவல் துறையினருக்கு கட்டுப்படுவோம், அமைதிக்கு ஊறு விளைவிக்க மாட்டோம் என பல்வேறு உத்தரவாதங்களை உயர் நீதிமன்றம் முன்பு அளிக்கின்றனர். உயர் நீதிமன்றமும், இவர்களின் உத்தரவாதங்களை ஏற்றுக் கொண்டு, அவர்களுடைய பின்னணியை புரிந்து கொள்ளாமல், கடந்த காலங்களில் இது போன்ற விழா எப்படி நடத்தப்பட்டது என்பதை பார்க்காமல், சில நிபந்தனைகளின் அடிப்படையில் விழாவிற்கு அனுமதி வழங்குகிறது. ஆனால், விழா நடைபெறும் போது சென்னை உயர் நீதிமன்றம் விதிக்கும் எந்த நிபந்தனைகளையும் இவர்கள் கடைபிடிப்பதில்லை. 

இதுவே, இது போன்ற கூட்டங்களின் போது பிரச்சனைகள் ஏற்பட காரணமாகிறது. மேலும், அவர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் போது, காவல் துறையினர் தலையிட்டு நடவடிக்கை எடுத்து தடுக்கின்றனர். இது போன்ற சமயங்களில் ஒரு தரப்பினர், காவல் துறையினர் அத்துமீறி நடந்து கொண்டதாக குறை கூறுவதும், மற்றொரு தரப்பினர் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குறை கூறுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. 

இந்த அரசு, ஒரு போதும் வன்முறைகளை சகித்துக் கொள்ளாது. தங்கள் சுய லாபத்திற்காக அப்பாவி பொதுமக்களை சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் தூண்டிவிட்டு வன்முறைச் செயல்களுக்கு காரணமாக இருப்பவர்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கு பராமரிப்பிற்கு ஊறு விளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது எந்தவித கருணையும் இன்றி சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

வன்முறையில் ஈடுபடுவோர் மீதும், பொது அமைதிக்கு ஊறு விளைவிப்போர் மீதும் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் இவ்வரசு தயங்காது எனவும் இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். இச்சம்பவங்கள் தொடர்பாக, விழுப்புரம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இதுவரையில் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்குகளில் குற்றவாளிகள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் மரக்காணத்தில், இரண்டு நாட்கள் முகாமிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து, சுமூகநிலை ஏற்படுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் பால் ஆகியவை வழங்கப்பட்டன. மரக்காணத்தில் ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த 9 நபர்களின் கூரை வீடுகள் முழுவதுமாகவும், ஒரு நபரின் கூரைவீடு பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. மாட்டுக் கொட்டகை, பெட்டிக் கடை, வைக்கோல் போர் என 7 நபர்களின் உடைமைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இதர வகுப்பைச் சேர்ந்த ஒருவரின் குடிசை வீடு மற்றும் இருவரின் கடைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. 

இவர்கள் அனைவருக்கும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 50,000 ரூபாய் வழங்கப்படும். இதுவன்றி, கூரை வீடுகளை இழந்த அனைவருக்கும் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித் தரப்படும். இந்தச் சம்பவத்தில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூன்று பேர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 25,000 ரூபாயும், புறநோயாளிகளாக சிகிச்சைப் பெற்று இல்லங்கள் திரும்பியுள்ள 17 நபர்களுக்கு தலா 10,000 ரூபாயும் வழங்கப்படும். இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

நன்றி : தமிழ் இணையப் பத்திரிக்கை
-'பரிவை' சே.குமார்.

மரக்காணம் கலவரம்: நடந்தது என்ன?- ஜெ. விளக்கம் - பகுதி - 2


16 நிபந்தனைகளுடன் அனுமதி:

இது போன்ற கூட்டங்களுக்கு ஏற்கெனவே அனுமதி வழங்கப்படாத தருணங்களில், சம்பந்தப்பட்டவர்கள் உயர் நீதிமன்றம் சென்று தங்களுக்கு சாதகமான உத்தரவுகளை பெற்றுள்ள நிகழ்வுகளை கருத்தில் கொண்டு, வன்னியர் சங்கத்தினருக்கு 25.4.2013 அன்று மேற்படி விழா நடத்துவதற்கு கீழ்க்கண்ட நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி வழங்கியது. 

1- விழாவின் போதோ அல்லது அதற்கு முந்தைய கூட்டங்களிலோ வன்முறையைத் தூண்டும் விதமாகவோ அல்லது பிற வகுப்பினர் மனம் புண்படும்படியாகவோ எவரும் பேசக்கூடாது. 

2- விழாவின் போது வன்முறையை தூண்டும் கோஷங்களை எழுப்பவோ, வன்முறையை தூண்டும் விதமான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி வரவோ கூடாது. 

3- மாநாட்டிற்கு வருபவர்கள் திறந்த வகை வாகனங்களை பயன்படுத்தக்கூடாது. 

4- வாகனங்களின் மேல் கூரையின் மேல் அமர்ந்து வரக் கூடாது. வாகனங்களில் வருபவர்கள் வரும் வழிகளில் கோஷங்கள் எழுப்பக் கூடாது. வாகனங்களில் ஒலி பெருக்கிகள், கட்டாயமாக பொருத்தி வரக் கூடாது. 

5- பிரச்சனைக்குரிய பேச்சுகளை பேசும் பேச்சாளர்களை பேச அழைக்கக் கூடாது. 

6- விழா நடக்கும் இடத்தில் வாகனங்கள் நிறுத்தும் இடவசதிகள், கழிப்பிட வசதிகள், குடிநீர் வசதிகள் மற்றும் வரும் தொண்டர்களின் இதர வசதிகள் குறித்து விழா அமைப்பாளர்கள் தகுந்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும். மேலும், விழா முடிந்தவுடன் அந்த இடம் சுற்றுப்புற சூழல் பாதிப்பின்றி சுத்தப்படுத்தப்பட வேண்டும். 

7- வாகனங்கள் நிறுத்துமிடங்களில் தகுந்த விளக்கு வசதிகள், தற்காலிக பாதுகாப்புத் தடைகள், ஒலி பெருக்கி வசதிகள் செய்து தரப்பட வேண்டும். 

8- மாமல்லபுரத்தில் உள்ள தொல்லியல் துறை சம்பந்தப்பட்ட புராதன சின்னங்களுக்கு சேதம் விளைவிக்கும் எந்த செயலையும் மற்றும் சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவிக்கும் எந்த செயலையும் செய்யக் கூடாது. 

9- விழா தொடர்பான போர்டுகளை காவல் துறையினரின் அனுமதியுடன் பிரச்சனை இல்லாத இடங்களில் அமைத்து, கட்சி தொண்டர்களை நியமித்து அவற்றிற்கு சேதம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஜோதி எடுத்துக் கொண்டு தொடர் ஓட்டமாக வருவதற்கு அனுமதியில்லை: 

10- விழா சம்பந்தமாக பிற மாவட்டங்களில் இருந்து வரும் ஒவ்வொரு வாகனமும் அதில் வரும் தொண்டர்கள் பற்றிய விவரங்களை ஒரு நாள் முன்பு, அதாவது 24.4.2013 அன்று காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறையினருக்கு தெரிவிக்க வேண்டும். 

11- ஒலி பெருக்கிகள் நிகழ்ச்சி நடத்தும் பகுதிகளில் மட்டுமே அமைத்துக் கொள்ளப்பட வேண்டும். பெட்டி வடிவ ஒலி பெருக்கியினை மட்டுமே பயன்படுத்த வேண்டும். 

12- ஜோதி எடுத்துக் கொண்டு தொடர் ஓட்டமாக வருவதற்கு அனுமதியில்லை. 

13- விழாவானது 25.4.2013 அன்று மாலை ஐந்து மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு அன்று இரவு பத்து மணிக்குள் கண்டிப்பாக முடிக்கப்பட வேண்டும். 

14- பொது சொத்துக்களுக்கோ, இதர சொத்துக்களுக்கோ ஏதேனும் சேதம் ஏற்பட்டால் விழா அமைப்பாளர்களே முழு பொறுப்பாளர்கள். அதற்குரிய நிவாரண தொகையை வழங்க வேண்டும். இது தவிர சட்டப்படியாக எடுக்கப்படும் குற்றவியல் நடவடிக்கைக்கும் கட்டுப்பட வேண்டும். 

15- சட்டம் ஒழுங்கை பாதுகாக்க காவல் துறையினரால் அவ்வப்போது வழங்கப்படும் அனைத்து அறிவுரைகளையும் ஏற்று கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும். 

16- மேற்கூறிய நிபந்தனைகளை மீறினால் அதற்கு விழா அமைப்பாளர்களே முழு பொறுப்பாளர்கள். 

இந்த நிபந்தனைகள் அடங்கிய கடிதத்தை திருக்கச்சூர் ஆறுமுகம் 19.4.2013 அன்று ஒப்புதல் கையொப்பமிட்டுப் பெற்றுக் கொண்டுள்ளார். திருக்கச்சூர் ஆறுமுகம் தந்த உத்தரவாதம் மேலும், 20.4.2013 அன்று, காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், இவ்விழா அமைப்பாளர்களை அழைத்து, ஒரு கூட்டம் நடத்தி, அதில் விழா எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது குறித்த உறுதி மொழியையும், சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது என்ற உத்தரவாதத்தினையும் அமைப்பாளர்களான திருக்கச்சூர் ஆறுமுகம் மற்றும் சிலரிடமிருந்து பெற்றுள்ளார். மேலும், இச்சங்கத்தின் தலைவர்கள் காவல் துறை இயக்குநர் மற்றும் காவல் துறை கூடுதல் இயக்குநர் சட்டம் மற்றும் ஒழுங்கு, ஆகியோரை நேரில் சந்தித்து காவல் துறையினர் விதிக்கும் நிபந்தனைகளை கடைபிடித்து விழாவின் போது சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏதுமில்லாமல் பார்த்துக் கொள்கிறோம் என உத்தரவாதம் அளித்தனர். 

காவல் துறையில் உள்ள சுமார் 90,000 காவலர்களை வைத்து எப்பொழுதும் உள்ள பாதுகாப்பு மற்றும் இதர முக்கிய பணிகளுக்கு உண்டான காவலர்கள் போக மீதமுள்ள காவலர்களை கொண்டு, ஒரே நேரத்தில் அடிக்கடி மாநிலத்தில் பல்வேறு இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது என்பது சிரமமான காரியமாகும். கடந்த 25.4.2013 அன்று மாமல்லபுரத்தில் சித்திரைப் பெருவிழா நடைபெற்றது மட்டுமல்லாமல், மாநிலத்தில், திருவண்ணாமலையில் சித்திரா பவுர்ணமியை முன்னிட்டு சுமார் 15 லட்சம் பக்தர்கள் கூடிய நிகழ்ச்சிக்கும், மதுரையில் சுமார் ஐந்து லட்சம் பேர் பங்கேற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிய நிகழ்ச்சிக்கும், சென்னை, சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கும், பெருமளவில் காவல் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருந்தது. 

ஏராளமான காவலர்கள் பாதுகாப்பு இருப்பினும், சித்திரை முழு நிலவு விழாவையொட்டி ஏற்படக்கூடிய சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை கருத்தில் கொண்டு, மாமல்லபுரத்தில், 25.4.2013 அன்று, காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் தலைமையில், மூன்று காவல் கண்காணிப்பாளர்கள், நான்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், ஒரு காவல் உதவி கண்காணிப்பாளர், 25 காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், 47 காவல் ஆய்வாளர்கள், 99 காவல் உதவி ஆய்வாளர்கள், 935 இதர காவல் ஆளிநர்கள், 10 சிறப்பு காவல் படை நிறுமங்கள் மற்றும் ஆயுதப்படை பிரிவுகளைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் என மொத்தம் 1,910 பேர் விழா பாதுகாப்பு அலுவல்களை மேற்கொள்ளுதல், விழாவின் போது போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், விழாவிற்கு வரும் வாகனங்களை அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் நிறுத்தி வைக்கச் செய்தல் போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். 

இத்துடன், இந்த விழாவிற்கு வரும் வாகனங்கள் வரும் சாலைகளிலும், பிரச்சனைக்குரிய பகுதிகளிலும், குறிப்பாக காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவள்ளூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் மொத்தம் 2,724 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டிருந்தனர். வடக்கு மண்டல காவல்துறைத் தலைவர் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேற்பார்வையிட்டு வந்தார். சித்திரை விழாவை முன்னிட்டு, 25.4.2013 அன்று பிற்பகல், வன்னியர் சங்கத்தைச் சார்ந்தவர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வாகனங்கள் மூலம் பிரதான சாலைகளில் மாமல்லபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். 

காவல் துறையினர் அனைத்து சாலைகளிலும் தக்க பாதுகாப்பு அளித்து வந்தனர். வாகனத்தை நிறுத்தி 30 பேர் உணவு மற்றும் மது அருந்திக் கொண்டு....: இந்நிலையில் அன்று பிற்பகல் 1.30 மணியளவில், புதுச்சேரியில் இருந்து கிழக்குக் கடற்கரை சாலை வழியாக வாகனங்களில் தொண்டர்கள் வந்து கொண்டிருந்த போது, விழுப்புரம் மாவட்டம், மரக்காணம், கடையம் தெரு காலனி பேருந்து நிறுத்தம் அருகில் சாலையோரம் மரம் ஒன்றின் கீழ் வாகனத்தை நிறுத்தி சுமார் 30 பேர் உணவருந்திக் கொண்டு இருந்துள்ளனர். அதில் சிலர் மது அருந்திக் கொண்டு இருந்துள்ளனர். 

அப்போது, அக்காலனியைச் சேர்ந்த சிலர் ஏற்கெனவே தகராறு நடந்த இடத்தில் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் என்று கேட்க, வாகனத்தில் வந்தவர்கள் அவர்களை அடித்து துரத்தியுள்ளனர். அவர்கள் காலனிக்கு சென்று தகவல் தெரிவித்ததின் பேரில், அக்காலனியைச் சேர்ந்த சுமார் 200 பேர் மரக்காணம் கிழக்கு கடற்கரைச் சாலைக்கு வந்து சாலையில் கற்களையும், கட்டைகளையும் போட்டு மறியலில் ஈடுபட்டனர். மரக்காணத்தில் வன்முறைச் சம்பவங்கள் நடந்ததையடுத்து, மரக்காணத்திற்கு மேல் மாமல்லபுரம் நோக்கி பாட்டாளி மக்கள் கட்சியினர் வாகனங்கள் சென்றால் வழியில் உள்ள காலனிகளில் பிரச்சனை ஏற்படும் என ஆதி திராவிட இனத்தவர் தெரிவித்தனர். மாற்று வழியில் செல்லுமாறு காவல் துறையினர் அறிவுறுத்தியதை கேட்காமல் விழாவிற்கு வந்தவர்கள் வாகனங்களை சாலையில் நிறுத்தி, வாகனங்களில் இருந்து இறங்க ஆரம்பித்தனர்.

8 வீடுகளுக்கு தீ.. மாட்டுக் கொட்டகைக்கும் தீ:

இதனால், அவ்வழியாக வாகனங்களில் வந்தவர்களுக்கும், காலனியைச் சேர்ந்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். வாகனங்களில் வந்தவர்கள் காலனிக்குள் சென்று எட்டு குடிசை வீடுகள் மற்றும் மாட்டுக் கொட்டகை ஆகியவற்றிற்கு தீ வைத்ததுடன், அவ்வழியே வந்த மூன்று அரசு பேருந்துகள், ஒரு கார் மற்றும் ஒரு இரு சக்கர வாகனம் ஆகியவற்றையும் தீயிட்டு கொளுத்தினர். இது பற்றி தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, "வருண்" வாகன உதவியுடன் தீயை அணைத்துள்ளனர். 

காவல் துறையினர் அங்கு கூடியிருந்தவர்களை கலைந்து செல்லுமாறு கூறியும் அதற்கு செவிமடுக்காமல், அவர்கள் தொடர்ந்து கற்களை வீசியதால் பணியில் இருந்த காவல் ஆளிநர்கள் மூன்று பேர் காயமுற்றனர். சம்பவம் குறித்து அறிந்தவுடன், அங்கு விரைந்த விழுப்புரம் காவல் கண்காணிப்பாளரின் வாகனத்தையும் கல் வீசி தாக்கியுள்ளனர். அந்தக் கூட்டத்தை கலைந்து செல்லும்படி பல முறை எச்சரித்தும், அவர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து கற்கள் வீசி தாக்கியதால், காவல் துறையினர் கண்ணீர் புகை குண்டுகள் வீசி அக்கூட்டத்தை கலைக்க முயன்றுள்ளனர். 

அதன் பின்னரும் அவர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டதால், மேலும் கலவரம் பரவாமல் தடுக்கவும், உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் ஏற்படுவதைத் தடுக்கவும், காவல் துறையினர் உரிய எச்சரிக்கைக்கு பின்பு லேசான பலப்பிரயோகம் செய்த போதும், கலைந்து செல்லாமல் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியினர், வன்முறையில் ஈடுபட்டனர். வேறு வழியின்றி வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு: இதனால் வேறு வழியின்றி, காவல் துறையினர் உரிய எச்சரிக்கைக்கு பின்னர், துப்பாக்கியால் வானத்தை நோக்கி மூன்று ரவுண்டுகள் சுட்டும், ரப்பர் குண்டுகளைப் பயன்படுத்தியும் கூட்டத்தைக் கலைத்தனர்.

 மேலும், விழாவிற்கு சென்றவர்கள் அனுமந்தை சுங்கச் சாவடியில் தகராறு செய்து, கண்ணாடிகள், கேமரா, ஏணி, அறிவிப்பு விளக்குகள், பூந்தொட்டிகள், கம்பி வேலி ஆகியவற்றை சேதப்படுத்தியுள்ளனர். சுங்கச்சாவடி ஊழியர்களும் தாக்கப்பட்டனர். விழுப்புரம் மாவட்டம், கூனிமேடு பகுதியில் ஒரு கடையையும் சேதப்படுத்தியுள்ளனர். மேலும், மாமல்லபுரத்தில் காவல் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை வாகனம் ஒன்றையும் சேதப்படுத்தினர். 

விழாவிற்கு சென்றவர்கள் பல்வேறு இடங்களில் 6 அரசுப் பேருந்துகள், 3 காவல் வாகனங்கள் உள்ளிட்ட 11 வாகனங்களை கல் வீசி சேதப்படுத்தினர். இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தவிர, இவ்விழாவில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு இடங்களில் கல் வீச்சில் ஈடுபட்டதால், பல வாகனங்கள் சேதம் அடைந்தன. ஆனால் இது குறித்து வாகன உரிமையாளர்கள் புகார்கள் எதையும் இதுவரை அளிக்கவில்லை.

நன்றி : தமிழ் இணையப் பத்திரிக்கை

-'பரிவை' சே.குமார்

மரக்காணம் கலவரம்: நடந்தது என்ன?- ஜெ. விளக்கம் - பகுதி - 1

மரக்காணம் கலவரம் குறித்து தமிழக சட்டசபையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏ குரு இன்று காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தமிழக சட்டசபையில் இன்று மரக்காணம் கலவரம் குறித்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்கப்பட்டது. 

பண்ருட்டி ராமச்சந்திரன் (தே.மு.தி.க.), ஜெ.குரு (பா.ம.க.), ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி-, கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்), சரத்குமார் (சமத்துவ மக்கள் கட்சி) உள்ளிட்டோர் விவாதத்தில் பேசினர். 


உறைய விட்டு வாள் எடுத்தா ரத்த ருசி காட்டுவோம்: 

இதற்கு பதிலளித்து முதல்வர் ஜெயலலிதா விரிவான விளக்கம் அளித்தார். அதன் விவரம்: மாமல்லபுரத்தில் 25ம் தேதி வன்னியர் சங்கம் அதாவது பாட்டாளி மக்கள் கட்சி, "சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா" ஒன்றை நடத்த அறிவித்திருந்தது. இவ்விழாவிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பெருந்திரளாக உறுப்பினர்கள் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்து, அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தது. இதில் பங்கேற்கும்படி வன்னியர் சங்கத்தின் சார்பாக, தொலைக்காட்சிகள் மற்றும் நாளிதழ்களில் விளம்பரங்கள் செய்யப்பட்டன. 

"வங்க கடலா, வன்னிய கடலா, ஒரு கோடி வன்னியர்கள் சித்திரை பெருவிழாவிற்கு அலைகடலென திரண்டு வாரீர்" எனவும், "கடல் நீரை அள்ள முடியாது, வன்னியரை வெல்ல முடியாது" எனவும், "நாங்க உறைய விட்டு வாள் எடுத்தா ரத்த ருசி காட்டி வைக்கும் வழக்கம் எங்க குல வழக்கமடா" எனவும், "சோழர் வம்சம் இது சோறு போடும் வம்சம் இது, எதிரிகள் யாரும் வந்தால் கூறு போடும் வம்சம் இது" எனவும் சுவரொட்டிகள் வாயிலாக விளம்பரங்கள் செய்யப்பட்டன. 

இவ்விழாவிற்கு அனுமதி வழங்கக்கூடாது என உத்தரவிடக்கோரி, இந்தியன் மக்கள் மன்றத்தின் தலைவர் மற்றும் பத்திரிகையாளர் வராகி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அம்மனுவை 16.4.2013 அன்று விசாரித்த உயர் நீதிமன்றம், அம்மனு மீது காவல் துறையினர் 19.4.2013க்குள் விழா அமைப்பாளர்களுக்கு விளக்கம் கோரும் குறிப்பாணை ஒன்றை சார்வு செய்து, அதற்கு அளிக்கப்படும் பதில் விளக்கத்தின் அடிப்படையில் விழாவிற்கு அனுமதி வழங்குவது குறித்துத் தீர்மானிக்குமாறு உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தது. 


சாதி உணர்வைத் தூண்டும் விதத்தில் பேசி...:

இதனையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மேற்படி விழா அமைப்பாளர்களுக்கு இவ்விழா நடக்கும் போது இரு சமுதாயத்தினர் இடையே சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட்டதையும்; குறிப்பாக கடந்த 2000 மற்றும் 2010ம் ஆண்டு இவ்விழாவின் போது நடந்த கலவரத்தை சுட்டிக் காட்டியும்; இவ்விழாவிற்கு வந்த தொண்டர்கள் வாயிலாக விழுப்புரம், கடலூர், திருவள்ளூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட்டதையும், இவ்விழாவில் தலைவர்கள் பேசும் போது சாதி உணர்வைத் தூண்டும் விதத்தில் பேசி இருந்ததையும்; அப்பேச்சுக்கள் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியதோடு, இரு சமுதாயத்தினர் இடையே மனக்கசப்பை ஏற்படுத்தியதையும்; இவ்விழா சம்பந்தமாக காவல் துறையினர் அளித்த நிபந்தனைகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டதையும்; கால அவகாசத்தை மீறி இவ்விழாவை நடத்துவதை வாடிக்கையாகக் கொண்டிருப்பதையும்; இதற்கு முன்பு இவ்விழாக்களின் போது நடந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளையடுத்து பதிவு செய்யப்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வருவதையும்; விழாவின் போது அதிகப்படியான கூட்டத்தை கூட்டுவதற்கு போதிய முன்னேற்பாடுகள் எதுவும் செய்யப்படாததையும்; ஒவ்வொரு ஆண்டும் கிழக்கு கடற்கரை சாலையில் பல மணி நேர கடும் வாகனப் போக்குவரத்து நெரிசல் காரணமாக பொதுமக்கள் இன்னலுக்கு ஆளானதையும்; மேற்படி விழா நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் கடற்கரை ஒழுங்கு முறைப் பகுதி என்பதால், அதற்குரிய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை, மாசுக் கட்டுப்பாட்டுத் துறை ஆகிய துறையினர் இடமிருந்து முன் அனுமதி பெறாததையும்; விழா நடக்கும் இடம், தொல்லியல் துறை பராமரித்து வரும் கடற்கரைக் கோவிலுக்கு மிக அருகில் அமைந்துள்ளதையும்; அத்துறையினர் இடமிருந்து அனுமதி பெறாததையும் விவரமாகக் குறிப்பிட்டு, விழாவிற்கு ஏன் அனுமதி மறுக்கக்கூடாது என கேட்டு இதற்கான விளக்கத்தை அளிக்குமாறு விழாவிற்கு அனுமதி கோரியிருந்த திருக்கச்சூர் ஆறுமுகமுக்கு குறிப்பாணை வழங்கப்பட்டது. சட்டம் மற்றும் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பேச மாட்டோம்: இதற்கான பதில் கடிதம், திருக்கச்சூர் ஆறுமுகத்திடமிருந்து காஞ்சிபுரம் காவல் துறையினரால் 18.4.2013 அன்று பெறப்பட்டது. 

அக்கடிதத்தில், இவ்விழாவினால் எந்தவித சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படாது எனவும்; ஜெ.குரு உள்ளிட்ட தலைவர்கள் எவரும் சட்டம் மற்றும் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும், பிற சமூகத்தினர் இடையே பிரிவினையைத் தூண்டும் வகையிலும் எந்த கருத்தையும் தெரிவிக்க மாட்டார்கள் எனவும்; திட்டமிட்டபடி நிகழ்ச்சியைத் துவக்கி, காவல் துறையினர் குறிப்பிடும் நேரத்திற்கு முன்பாக எந்த விதமான கால தாமதமும் இன்றி நிகழ்ச்சி முடித்துக் கொள்ளப்படும் எனவும்; இந்த விழாவின் மூலம் எந்த விதமான சாதி பிரச்சனை மற்றும் சட்டம் ஒழுங்கு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் விழாவில் கலந்து கொள்பவர்களால் ஏற்படாது எனவும்; விழாவில் கலந்து கொள்பவர்கள் அனைவருக்கும் தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும் எனவும்; போக்குவரத்து பாதிக்காத வகையில் பொதுமக்களின் மருத்துவ சேவை மற்றும் அவசர அவசியக் காரியங்களுக்கு சென்று வர வழி அமைத்து தரப்படும் எனவும், விழா நடத்தும் பகுதி முழுவதும் சுற்றுசூழலுக்கு பாதிப்பு இல்லாமல் சுத்தம் செய்து தரப்படும் எனவும்; காவல் துறையினர் விதிக்கும் நிபந்தனைகள் அனைத்தையும் முழுமையாக ஏற்றுக் கொள்வதாகவும்; காவல் துறையினர் வழிகாட்டுதல்படி அமைதியாகவும், கட்டுப்பாட்டுடனும் விழா நடத்தப்படும் என்றும் திருக்கச்சூர் ஆறுமுகம் அந்தக் கடிதத்தில் உறுதியளித்து இருந்தார்.

-நன்றி : தமிழ் இணையப் பத்திரிக்கை
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

மதுரையில் அழகரின் உலா

மனசின் முதல் தொடர்கதை

கலையாத கனவுகள் - 3ம் பாகம் படிக்க...  இங்கே சொடுக்கவும்...



வைகை ஆற்றில் இறங்குவதற்காக மதுரைக்கு வந்த கள்ளழகர், ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவாதாரக் கோலத்தில் காட்சியளித்ததை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 

மதுரையில் இன்று அதிகாலை பூப்பல்லாக்கில் அழகர் மலைக்கு புறப்பட்ட அழகரை மதுரை மக்கள் வழியனுப்பி வைத்தனர். தசாவதாரம், பூப்பல்லக்கில் காட்சியளித்து பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்த கள்ளழகர் இன்று காலை அழகர்கோயிலுக்கு புறப்படுகிறார்.

சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் கடந்த 25ம் தேதி வைகை ஆற்றில் எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து ஆற்றங்கரை வழியே வண்டியூர் சென்று வீரராகவப் பெருமாள் கோவிலில் தங்கினார். 

அங்கிருந்து புறப்பட்ட அழகர், கள்ளழகர் தேனூர் மண்டபத்திற்கு சென்று அங்கு கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு மாலையில் சாபவிமோசனம் அளித்தார். அதன் பிறகு நாரைக்கு முக்தி அளித்து விட்டு அங்கிருந்து வெள்ளிக்கிழமை இரவு ராமராயர் மண்டபத்தை வந்தடைந்த அழகர், அங்கு விடிய, விடிய தசாவதார கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 


மட்சம், கூர்மம், வராகம், வாமனன், நரசிம்மம், உள்ளிட்ட பத்து வித அலங்காரங்களில் காட்சி கொடுத்த அழகரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசித்தனர். பின்னர் மோகினி அவதாரத்திலேயே மண்டகப்படிகளில் தங்கியபடி சனிக்கிழமை இரவு 11 மணியளவில் தல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபம் வந்தார். 

அங்கு கள்ளழகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. திருமஞ்சனமான அழகர் இன்று அதிகாலை 2.30 மணியளவில் பூப்பல்லக்கில் கருப்பணசாமி கோயில் சன்னதி அருகே காட்சியளித்தார். பின்னர் அங்கிருந்து அழகர்கோவில் நோக்கி புறப்பட்ட கள்ளழகரை பக்தர்கள் சேவை செய்து வழியனுப்பினர். 

இன்று காலையில் புறப்படும் கள்ளழகர் பல்வேறு மண்டபங்களில் தங்கி  நாளை அதிகாலை 2 மணிக்கு அப்பன் திருப்பதி சென்றடைகிறார். கள்ளந்திரி வழியாக வழிநெடுகிலும் காட்சியளித்தபடி செல்லும் கள்ளழகர் நாளை காலை 10 மணிக்கு அழகர்கோயில் சென்றடைகிறார். 

ஏப்ரல் 30ம் தேதி உற்சவசாந்தியுடன் சித்திரை விழா நிறைவடைகிறது.

-நன்றி: தமிழ் இணையம்

-'பரிவை' சே.குமார்

அரசியல் பரபரப்பு : விஜயகாந்துடன் திருமா திடீர் சந்திப்பு


மனசின் முதல் தொடர்கதை

கலையாத கனவுகள் - 3ம் பாகம் படிக்க...  இங்கே சொடுக்கவும்...


 tirumavalavan meets vijayakanth

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை கோயம்பேட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். 

மாமல்லபுரத்தில் அண்மையில் நடைபெற்ற வன்னியர் சங்க விழாவிற்கு சென்ற பாமகவினர் மரக்காணம் அருகே தலித் மக்கள் குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தியதோடு, வீடுகள், பேருந்துகளை தீ வைத்து எரித்தனர். இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ், காடுவெட்டி குரு ஆகியோர்தான் காரணம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் குற்றம் சாட்டியிருந்தார். 

இந் நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை இன்று பகல் 12 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் திடீரென சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது பண்ருட்டி ராமச்சந்திரனும் உடன் இருந்தார். அப்போது மரக்காணம் கலவரம் தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது. 

அரசியல் கட்சியினர் அறிக்கை: 

மரக்காணம் வன்முறை தொடர்பாக அரசியல் கட்சிகள் தங்கள் மவுனத்தை கலைக்க வேண்டும் என்றும் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்திருந்தார். திமுக தலைவர் கருணாநிதியை நேற்று சந்தித்து பேசினார். அவரிடம் மரக்காணம் கலவரம் குறித்து விளக்கி கூறினார். இதையடுத்து இன்று காலை இந்திய கம்யூனிஸ்ட் மாநிலத் தலைவர் தா.பாண்டியனை திருமாவளவன் சந்தித்து பேசினார். 

இதையடுத்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிக்கை விடுத்ததோடு, வன்முறைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தார். இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மரக்காணத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக காவல்துறை வழக்குப் பதிவு செய்திருந்தும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படாததற்கு கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில் திருமாளவன் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்துப் பேசியுள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

ஒரு கட்டத்தில் விஜயகாந்த்துடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் திருமாவளவன், நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் விஜயகாந்த் சேர்ந்தால் அதனை ஆதரிக்க வேண்டியிருக்கும். எனவே தேர்தல் கூட்டணி அமைவதற்கு முன்பாகவே விஜயகாந்த்துடன் சமாதான உடன்படிக்கையை மேற்கொண்டால் நன்றாக இருக்கும் என்று கருதிய திருமாவளவன், இன்று அவரை சந்திருக்கலாம் என்று பேசப்படுகிறது.


2ம் தேதி ஆர்ப்பாட்டம்-திருமாவளவன்: 

இந் நிலையில் மரக்காணம் கலவரம் தொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அண்மைக் காலமாக பாமகவினர், அப்பாவி தலித் மக்களுக்கு எதிரான திட்டமிட்ட வன்முறை வெறியாட்டத்தை அரங்கேற்றி வருகின்றனர். வட மாவட்டங்களில் தலித் மக்கள் குறிவைத்துத் தாக்கப்படுவது அதிகரித்து வருகின்றன. தமிழகத்தின் பிற பகுதிகளிலும் சாதி சக்திகளை ஒருங்கிணைத்து ஏழை எளிய தலித் மக்களுக்கெதிராகத் தூண்டிவிடும் ஆபத்தான போக்குகளையும் கடைப்பிடித்து வருகின்றனர். 

நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றிரண்டு தொகுதிகளிலாவது வெற்றிபெற வேண்டும் என்பதற்காக இத்தகைய நடவடிக்கைகள் மூலம் சட்டம் ஒழுங்கைச் சீர்குலைத்து வருகின்றனர். கடந்த 25ம் நாள் மாமல்லபுரத்தில் நடத்திய விழாவில் அப்பாவி வன்னிய இளைஞர்களுக்கு சாதி வெறியை ஊட்டியுள்ளனர். ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் மீது பழிசுமத்த முயற்சிக்கிறார்கள். 

மரக்காணம், கழிக்குப்பம் கிராமங்களில் தலித் மக்களின் 15 வீடுகள் கொளுத்தப்பட்டுள்ளன. தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தியதில் சேட்டு என்பவர் பலியாகியுள்ளார். ஏகாம்பரம் என்பவர் உயிருக்குப் போராடும் நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் பல இளைஞர்கள் காயம் அடைந்துள்ளனர். கூனிமேடு என்னுமிடத்தில் இஸ்லாமியர்களும் பொதுமக்களும் தாக்கப்பட்டுள்ளனர். அரசுப் பேருந்துகளும் கொளுத்தப்பட்டுள்ளன. 


வடமாவட்டங்களில் பல்வேறு இடங்களில் தலித் மக்கள் தாக்குதலுக்குள்ளாகி வருகின்றனர். நேற்று திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே அத்திப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தலித் மாணவர்கள் இருவர் ஈட்டி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சாதி வெறியைத் தூண்டிவரும் பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் வரும் 2ம் தேதி அன்று விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். முற்போக்கு சக்திகள், ஜனநாயக சக்திகள் யாவரையும் ஒருங்கிணைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும். 

தமிழகத்தில் அமைதியை நிலைநாட்ட, சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்க சனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள அனைவரும் விடுதலைச் சிறுத்தைகளின் இந்த அறப்போராட்டத்திற்கு ஆதரவு நல்கிட வேண்டுகிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

நன்றி : தட்ஸ்தமிழ் இணையப் பத்திரிக்கை

-'பரிவை' சே.குமார்.

சூடான அரசியல் : சோனியா, மன்மோகன் ஊடல் - பதவி வேண்டாம்: வைகோ


மனசின் முதல் தொடர்கதை

கலையாத கனவுகள் 3-ம் பாகம் படிக்க...  இங்கே சொடுக்கவும்...



பல்வேறு விவகாரங்களில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இடையே கருத்து வேறுபாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2ஜி விவகாரத்தில் மன்மோகன் சிங் நடந்து கொண்ட விதத்தை சோனியா ஏற்கவில்லை என்றும், அதே போல நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய சட்ட அமைச்சர் அஸ்வனி குமாரின் செயல்பாடுகளையும் அவர் ஏற்கவில்லை என்றும் தெரிகிறது. ஆனால், அஸ்வனி குமாருக்கு மன்மோகன் சிங் ஆதரவாக உள்ளார். நிலக்கரி ஊழல் விவகாரத்தில் சிபிஐயின் நடவடிக்கைகளில் அஸ்வனி குமார் தலையிட்டது உறுதியாகிவிட்டது.

இதனால் அவரை பதவி விலகச் செய்ய வேண்டும் என்பது காங்கிரஸ் தலைவர்களின் கருத்தாக உள்ளது. ஆனால், அவர் பதவி விலகினால் மத்திய அரசால் சிபிஐ தவறாக பயன்படுத்தப்படுகிறது என்ற கருத்து வலுப்பட்டுவிடும் என்பதால் அதை பிரதமர் விரும்பவில்லை.

அதே நேரத்தில் அஸ்வனிகுமார் பதவி விலகாவிட்டால் அது கட்சிக்கும், ஆட்சிக்கும் சேர்த்து பிரச்னையை உருவாக்கும் என சோனியா நினைக்கிறார். மேலும் சமீப காலமாக மன்மோகன் சிங் தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பது கவலை அளிக்கிறது என்று நேரடியாகவே சோனியா விமர்சித்ததாகவும் தகவல்கள் வருகின்றன.

டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் வெள்ளிக்கிழமை மாலையில் கூடிய காங்கிரஸ் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் தான் இந்தக் கருத்தை சோனியா முன் வைத்துள்ளார். இக் கூட்டத்தில் சோனியா, பிரதமர் தவிர, பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. ஆண்டனி, உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே, நிதியமைச்சர் ப. சிதம்பரம், சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மேலும் பிரதமர் மன்மோகன் சிங்கின் தன்னிச்சையாக செயல்பட்டதால்தான் கூட்டணியில் இருந்து திமுக விலக நேர்ந்ததாகவும் சோனியா காந்தி கருதுவதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் பிரதமரை நீக்கும் அளவுக்கு காங்கிரஸ் தலைமையிடம் அதிகாரம் இல்லை என்றும், அந்த அளவுக்கு மன்மோகன் சிங் தனது அதிகாரத்தை நிலை நிறுத்துக் கொண்டுவிட்டதாகவும் சொல்கிறார்கள்.

பதவிக்காக இந்த பாதயாத்திரை இல்லை:  வைகோ

அரசியல் நோக்கத்துடனோ பதவிக்காகவோ இந்த பாதையாத்திரை இல்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். பூரண மதுவிலக்கு கோரி பொள்ளாச்சியில் இருந்து ஈரோடு வரை வைகோ நடை பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இவர் வியாழக்கிழமை மாலை நத்தக்காடையூரில் இருந்து புறப்பட்டு மருதுறை, கே.ஜி.வலசு வழியாக சென்னிமலைக்கு வந்தார். பின்னர் சென்னிமலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அங்கு அவர் பேசியதாவது:


நான் பதவிக்காக இந்த நடைபயணத்தை நடத்த வில்லை. மதுவை தடை செய்யகோரி நடைபெறும் இந்த நடைபயணத்திற்கு ஏராளமான தாய்மார்கள் வரவேற்பு கொடுக்கிறார்கள். நம் எதிர்கால சந்ததியினரை காப்பாற்றவே இந்த நடைபயணம். சென்னிமலையில் கைத்தறி தொழிலை நம்பி ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. நூல் விலை உயர்வு, மின் பற்றாக்குறை போன்ற காரணங்களால் நெசவுத்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

நெசவு தொழிலாளர்கள் தங்களின் 80 சதவீத கூலியை மதுக் கடையில் கொடுத்து விடுகிறார்கள். பதவிக்காக போராடமல் கடைசி வரை நேர்மையை கடைபிடிப்பேன். மது போதை மனிதனின் உடல், ஒழுக்கம் பண்பாட்டை கெடுத்து விடுகிறது. அ.தி.மு.க.- தி.மு.க.வுக்கு மாற்றாக மக்கள் ம.தி.மு.க.வை எதிர் பார்க்கிறார்கள் இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

நன்றி : தமிழ் இணையப் பத்திரிக்கை
-'பரிவை' சே.குமார்

சனி, 27 ஏப்ரல், 2013

கலையாத கனவுகள் - 3


மனசின் முதல் தொடர்கதை

கலையாத கனவுகள் 1-ம் பாகம் படிக்க...  இங்கே சொடுக்கவும்...

கலையாத கனவுகள் 2-ம் பாகம் படிக்க...  இங்கே சொடுக்கவும்...

*******
மாடத்தில் ஏற்றிய மாடவிளக்கு எரிகிறது
மாடம் விட்டு மாடம் விட்டு மாடங்கள்
மாறும் விளக்குகள் மாறவில்லை
மாற்றமிலா சோதியில் ஏற்றிய தீபங்கள்.
-கவிஞர். தமிழ்காதலன்


3. ராக்கிங் ஆரம்பம்...
முன்கதைச் சுருக்கம்...

ஏழைக் குடும்பத்தில் பிறந்து  தந்தையில்லாமல் தாயின் அரவணைப்பில் வாழும் ராமகிருஷ்ணன் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் சேர்கிறான். முதல் நாள் கல்லூரிக்கு செல்லும் அவனை அவனது தாயார் அக்கம் பக்கம் பார்த்து அனுப்பி வைக்கிறாள். அவனும் நண்பர்களுடன் கல்லூரிக்கு சென்று ராக்கிங் பயத்துடன் வகுப்பறையில் அமர்கிறான்...

இனி...
       
முதல் நாள் கல்லூரி வாழ்க்கை வித்தியாசமாக இருந்தது. முதல் நாள் என்பதால் அறிமுகப் படலம்... அறிவுரை என சென்றது. துறைத்தலைவர் எம்.எஸ், பள்ளிப் படிப்பு வேற... கல்லூரிப் படிப்பு வேற... இந்த வயசுதான் உங்களை எல்லாப் பக்கமும் போகத்தூண்டுற வயசு... நீ நல்ல வழியில போனியன்னா நாளைக்கு நல்ல நிலைமையில இருக்கலாம்... இல்லே காலேசுனாலே சண்டியர்தனம் செய்யணுமின்னு அந்தப் பக்கமா போனியன்னா... மூணு வருசம் முடிஞ்சு வெளிய போறப்போ அரியரோட போயி அவஸ்தைதான் படணும்... உன்னோட வாழ்க்கையை தீர்மானிக்கிற தராசு இப்ப உன்னோட கையில இருக்கு... இதை நீ எப்படி பயன்படுத்திக்கிறியோ அப்படித்தான் வாழ்க்கை அமையும் அப்படின்னு பேசி ஒரு நீண்ட லெக்சரைக் கொடுத்தார்.

மாலை கல்லூரி முடிந்ததும் நண்பர்களுடன் கூடி பேசி மகிழ்ந்து வீட்டுக்குப் போனபோது அம்மா அவனிடம் காலேசு எப்படிப்பா இருக்கு... புடிச்சிருக்கா... முதல்ல காலழம்பிட்டு வந்து சாப்பிடுஎன வாஞ்சையாய் முகத்தைத் தடவினாள்.

-----------

புதுமுகங்களும் பழைய முகங்களுமாக கல்லூரி சாலையில் சென்ற காலை வேளை..
.
டேய் சரவணா... இன்னைக்கு சீனியர்ஸ் வருவாங்களேடா... ராக்கிங் பண்ணுவாங்கள்ல... எனக்குப் பயமா இருக்குடா...

என்னடா பயம் வேண்டிக்கெடக்கு... என்ன கேட்டாலும் பயப்படாம சொல்லு போதும்... அப்படிப் பேசினா அவங்க விட்டுடுவாங்களாம்... அக்கா சொன்னுச்சு... அவங்க டிபார்ட்மெண்ட் பசங்களை எனக்குத் தெரியும்... அவங்க வந்தா நாம தப்பிச்சிக்கலாம்... ஆனா ஒண்ணுடா... மதிக்காம மட்டும் நின்னமின்னா நம்மளை ஒரு வழி பண்ணிடுவாங்களாம்...

ரொம்ப ராக்கிங் பண்ணினா டிபார்ட்மெண்ட்ல வந்து சொல்லச் சொல்லி எங்க எம்.எஸ் சார் சொன்னாருடா...

டேய் லூசு... டிபார்ட்மெண்டுக்குப் போனா அப்புறம் அவ்வளவுதானாம். நம்மளை அதுக்கு அப்புறம் கரம்வச்சு அடிப்பாங்களாம்... சும்மா ரெண்டு நாள் மிரட்டிட்டு பின்னாடி பிரண்ட் ஆயிடுவாங்களாம்... அதுவுமில்லாம ராக்கிங் பண்ணுறவனெல்லாம் யாரா இருக்குமின்னு நெனக்கிறே.... அவனுக்க எல்லாம் படிக்காம சுத்துற கோஷ்டியா இருக்கும்... இல்லேன்னா சாதியை வச்சு பொழப்பு ஓட்டுறவங்களோட புள்ளையாவோ, தம்பியாவோ, இல்லை உறவுக்காரனாகவோ இருப்பானுக... அவங்க மேல எப்படி துறைத்தலைவர் நடவடிக்கை எடுக்க முடியும்? அதுவும் இங்க வைரவன்னு ஒருத்தன் இருக்கானாம்... தேர்ட் பிகாம் படிக்கிறான்னு பேர்தானாம்... வகுப்புக்கே போகமாட்டானாம்... மத்த கிளாஸ்லாம் போயி உக்காந்து இருப்பானாம்... எப்பவும் தண்ணிதானாம்... அவங்கிட்ட மாட்டுனா சும்மா விட மாட்டானாம்... மத்தவங்களெல்லாம் பிரச்சினையில்லையாம்... நீ சும்மா பயப்படாத... சமாளிப்போம்... நம்ம அறிவை பாரு எந்தப் பயமுமில்லாம வாறான்...

அவனுக்கென்ன அவங்க அப்பா இங்க வேல பாக்குறாரு... அதனால அவனை ராக்கிங் பண்ண மாட்டாங்க...

எல்லாரையும் பண்ணுவாங்க... இதெல்லாம் ஒரு ஜாலிக்குத்தான்டா...

முதல் பாடவேளை முடிந்ததும் அடுத்த பாடவேளை ஆரம்பிக்கும் முன்னர் பெண்கள் குரூப் ஒன்று  வகுப்பிற்குள் நுழைந்தது. எல்லாரும் அவர்களை பார்த்துக் கொண்டிருக்க,

பழனி... இவங்க யாருடா...

தேர்ட் இயரா இருப்பாங்க... ராக்கிங் பண்ண வந்திருப்பாங்க...

என்னடா சொல்றே..? பொண்ணுக கூட பண்ணுவாங்களா...?"

ம்... பேசாம இருடா... பேசுறதைப் பார்த்தா நம்மளைத்தான் கூப்பிடுவாங்க...

என்ன சீனியருக்கு மரியாதை கொடுக்கத் தெரியாதா... சொல்லித்தான் தெரியணுமா... ம்... எல்லாரும் எந்திரிங்க..வந்த கூட்டத்தின் தலைவி மாதிரி இருந்தவள் சத்தமாக பேச சர்வ நாடியும் அடங்கிப் போக எழுந்து நின்றனர் மௌனமாக...

ம்... நான் ராணி... நாந்தான் இங்க ராணி... புரியுதா... நான் கேக்கிறதுக்கு டக்கு டக்குன்னு பதில் வரலை... கொன்னேபுடுவேன்... ஏய் எந்திரிடி... என்ன சுடிதார் போட்டு வந்திருக்கே.... தாவணி போடனுமின்னு உனக்குத் தெரியாதா... நாளையில இருந்து தாவணியிலதான் வரணும்... உக்காரு... ம்.... பர்ஸ்ட் எதாவது பால்வடியிற முஞ்சியா பாருங்கடி...என்று தேட ஆரம்பித்தவள் ராம்கி மேல் கண்களை நிலைக்குத்தினாள்.

உம் பேர் என்னடா சின்னப்பயலே...?” என்று ராம்கியை கேட்டாள்.

ராம்... ரா... ராமகிருஷ்ணன்...

ராம்... உங்க தாத்தா... ரா... உங்கப்பா... நீ ராமகிருஷ்ணனா...
இல்ல எம் பேரு ராமகிருஷ்ணன்...

ம்... நல்ல பேரு... ஆமா இன்சியல் இல்லாம பொறந்தியா?”

மு.ராமகிருஷ்ணன்... எல்லாரும் ராம்கின்னு கூப்பிடுவாங்க...

இங்க பாருங்கடி... இவரு ராம்கியாம்... ஆமா நிரோஷா எங்க இருக்கா... இந்தக் கூட்டத்துல இருந்தா யாருன்னு காமி... நச்சின்னு செந்தூரப்பூவேக்கு ஒரு குத்து டான்ஸ் போடலாம்...

செந்தூரப் பூவேக்கு குத்து டான்ஸா...?’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு பேசாமல் நின்றான்.

என்ன ஒருத்தியும் இல்லையா...? சரி ராணி விட்டா அழுதுடுவான் போல... பாவம் விட்டுடு...என்று அவளது தோழி சொல்ல...

சரி... இதுக்குப் பதில் சொல்லிட்டு உக்காரலாம்... உனக்கு இங்க இருக்கவங்கள்ல யாரைப் புடிச்சிருக்குன்னு சொல்லு...?

“...”

என்னடா... பொண்ணுங்களே புடிக்காதா...? இப்ப சொல்லலை மவனே... ஜட்டியோட கிரவுண்ட்ல ஓட வேண்டியிருக்கும்...

சொன்னபடி செஞ்சுருவாங்களோஎன்று நினைத்தபடி மெதுவாக தலையைத் தூக்கி அவனுடன் படிக்கும் பெண்களை ஒரு பார்வை பார்த்தான்...

என்னடா லுக்கு விட்டுட்டு பேசாம இருக்கே... அழகிகளா தெரியலையோ?”

யாரையும் பிடிக்கலை...பட்டென்று சொன்னான்.

இங்க பாருங்கடி... இந்த ஆண் அழகனுக்கு இங்க இருக்க அழகிக யாரையும் பிடிக்கலையாம்... அப்ப என்னைய பிடிச்சிருக்கா...

“...”

சொல்லுடா... வாத்தியார் வரப்போறாரு...?”

ம்...

ஹே...என்று எல்லாப் பெண்ணுகளும் கூவ...

ஏய் சங்கி... கேட்டியா மச்சானுக்கு என்னையத்தான் புடிச்சிருக்காம்... இனி உன்னைய நான் மச்சான்னுதான் கூப்புடுவேன்... ஒகேயா.... உக்காரு... ஏய் நீ எந்திரிடி...அவர்களது அதட்டலும் உருட்டலும் அடுத்த ஆசிரியர் வரும் வரை தொடர்ந்தது.

--------------

மதியம் சாப்பிட்டு விட்டு வகுப்பிற்கு வரும் போது டேய் இங்க வாங்கடா...என்றான் மூண்றாம் ஆண்டு மாணவன் ஒருவன்.

ஒருவரோடு ஒருவர் உரசிக் கொண்டு ஒன்றும் பேசாமல் அவங்க கூப்பிட்ட இடத்துக்குப் போக...

என்னடா சீனியருக்கு முன்னால இன் பண்ணி வரக்கூடாதுன்னு தெரியாதோ இன் பண்ணுனதை எடுத்து விடுங்கடா...

மாப்ளே அந்த சின்னப்பய பொசுக்கு பொசுக்குன்னு முழிக்கிறான்... அவனை அங்கிட்டு ஓரங்கட்டிட்டு மத்தவங்களை இங்கிட்டு விடு... டேய்... பச்சை சட்டை உம் பேரு என்னடா...

அறிவு...

உனக்கு மட்டும்தான் அறிவு இருக்குன்னு பேரு வச்சாங்களோ...

இல்ல அறிவழகன்... எல்லாரும் அறிவும்பாங்க... எங்கப்பா இங்கதான் வேல பாக்குறாங்க...

இங்கயா... யாரு..?”

சூப்பிரண்டென்ட் நாகப்பன்...

அந்தாளு மவனா... எங்கள என்னபாடு படுத்துறான் உங்கப்பன்... மவனே நீ மாட்டுனேடா... சரி பாடத்தெரியுமா?”

தெரியாது...

சரி இப்ப தெரிஞ்சிக்க... ம்... பாடு... பாடுறான்னா...

ஆயிரம் நிலவே வா.... ஓர் ஆயிரம் நிலவே வா...

நிறுத்து... இப்ப என்ன பாடினே... ஆயிரம் நிலவே வான்னுதானே.... இருக்கது ஒரு நிலாதானே... அப்புறம் எப்படி ஆயிரம் நிலா வரும்... ம்... எங்கே ஒரு நிலா வர்ற வரைக்கும் பாடு...

எப்படி பாடணும்?”

இப்ப ஆயிரத்தைக் கூப்பிட்டே... அப்படியே இறங்குவரிசையில ஒண்ணு ஒன்னாக் கூப்பிட்டு ஒண்ணுக்கு வாஎன்று சீனியர் சொல்லும் போது அவனது நண்பர்கள் சிரிக்க...

என்னடா சிரிக்கிறீங்க?”

இல்ல மாப்ளே... நீ ஆயிரத்துல இருந்து ஒண்ணுக்கு வரச்சொன்னே... இப்பவே ஒண்ணுக்கு இருக்கப் போற மாதிரித்தா இருக்கான்... ரொம்ப மிரட்டினே பேண்ட் நாஸ்தியாயிடும்...

சரி அப்படி ஓரமா போயி நின்னு நிலாவை கூப்பிடு... டேய் உம் பேர் என்னடா...

பழனி...

அடிவாரமா... இல்ல மலை உச்சியா...

“....”

கோழி பிடிக்கத் தெரியுமா?”

ம்...

அப்ப பிடி...

கோ...கோழி...?”

அதை சுட்டுத் தின்னாச்சு... மயிராண்டி கோழி இருந்தாத்தான் பிடிப்பிங்களோ... சும்மா பிடிச்சுக் காமிடா...என்று அவன் மண்டையில் தட்டினான் நெடுமரமாட்டம் இருந்த ஒருவன்...

இன்னும் அடிப்பாங்களோ என்று நினைத்தபடி பேக்...பேக்...என்று கூப்பிட்டபடி ஒடினான்.

ராம்கி ஓரமாக நின்று நடப்பதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க...

டேய் நீ பர்ஸ்ட் இயரா...?” மரியக்கண்ணுவைப் பார்த்து ஒருவன் கேட்டான்.

ம்...

பேரென்ன?”

மரியக்கண்ணு

உனக்கு யுனிவர்சிட்டி சல்யூட் தெரியுமா?”

தெரியாது...

டேய் மாப்ளே... தம்பிக்கு யுனிவர்சிட்டி சல்யூட் சொல்லிக் கொடு..

இங்க வா... எப்படி அடிக்கணும் தெரியுமா... இப்படி செஞ்சு... இப்படி அடிக்கணும்... புரியுதா?”

அவன் செய்து காண்பித்த யுனிவர்சிட்டி சல்யூட் ஆபாசமாக இருக்க, பேசாமல் தலையைக் குனிந்து கொண்டான்.

புரியுதா... போ... போயி அந்தா வர்றா பாரு பச்சைத் தாவணி அவளுக்கு யுனிவர்சிட்டி சல்யூட் அடிச்சிட்டு வா... போ... போடா

மரியக்கண்ணு படபடக்கும் இதயத்துடன் மெதுவாக அவளை நோக்கி நடக்க ஆரம்பித்தான். என்ன நடக்கப் போகுதோ என்ற படபடப்பில் ராம்கியும் நண்பர்களும் அவன் போகும் பாதையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

(தொடரும்...)
-'பரிவை' சே.குமார்.
(உரிமை : மனசு வலைத்தளம்... அனுமதியின்றி காப்பி செய்யாதீர்கள் நண்பர்களே..) 

பாக்யராஜை பார்த்தா மியூசிக் போட வருமா? - இளையராஜா


‘வில்லன் நடிகர்களுக்கு பாடல் போடவே வராது' என இளையராஜா தெரிவித்துள்ளார். நேற்று சென்னையில் ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் இளையராஜா இசையமைக்கும் ‘சித்திரையில் நிலாச் சோறு' படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. 

விழாவில் சிவகுமார், சத்யராஜ், இளையராஜா, ஆர். சுந்தர்ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் இளையராஜா பேசினார். அப்பொழுது அவர் வில்லன்கள் முகத்தைப் பார்த்தால் இசை அமைக்கவே வராது என்றார். 


இறைவனுக்கு நன்றி:

பொதுவா இந்த அரங்கத்துலயே நடந்த நான் இசையமைத்த படங்களுக்கு நான் வந்ததில்லை, இந்த படத்திற்கு வரவேண்டிய சூழ்நிலையை இறைவன் ஏற்படுத்தி விட்டான். உங்களையெல்லாம் சந்திக்கக் கூடிய பாக்கியம் கிடைத்ததற்கு இறைவனுக்கு நன்றி. 

இசையை கேட்டு நீங்களே முடிவு செய்யுங்கள்:

நான் இசையமைக்கிற படத்தை பத்தி பொதுவா சொல்றதில்லை. இந்த படத்துல இதை பண்ணியிருக்கேன், அதை பண்ணியிருக்கேன்னு பேசறது தேவையில்லாதது. ஏன்னா, இசையை கேட்டால் நீங்களே முடிவு பண்ணிடப் போறீங்க. வில்லனுக்கு பாட்டு.. ரொம்பக் கஷ்டம் சில வில்லன் நடிகர்களுக்கு பாடல் போடறதுக்கு வரவே வராது.  பல நடிகர்களை நீங்க யோசிச்சி பாருங்க. அவங்க பாட்டு பாடினால், அவங்களுக்கு கம்போஸ் பண்றப்ப என்னோட மன நிலை பாட்டுக்கு போகணும் இல்லையா. 

வில்லன் ஹீரோ ஆனால்: 

ஆனால், இதையெல்லாம் மீறி சத்யராஜ் வில்லனா இருக்கிறப்ப ‘என்னம்மா கண்ணு...செளக்கியமான்னு ஆரம்பமாச்சி...அப்புறம் அவர் ஹீரோவானதுக்கப்புறம் ‘தாஸ் தாஸ்...சின்னப்ப தாஸ்னு' டூயட் போடறதுக்கு வசதியா இருந்துச்சி. 

ரொம்பக் கஷ்டம்: 

இப்படித்தான் பாரதிராஜா ‘புதிய வார்ப்புகள்' படம் எடுக்கும் போது பாக்யராஜ்தான் ஹீரோன்னு முடிவு பண்ணாரு. என்னய்யா நாங்கள்லாம் மியூசிக்லாம் போட வேண்டாமா, முகத்தைப் பார்த்தால் மியூசிக் போடணும்னு தோணுமான்னு ஓபனா கேக்கறன். 


ரொம்ப தப்புனு புரிஞ்சது: 

அதுல என்ன தவறுன்னா, பின்னாடி நான் உணர்ந்தது. இவர் அற்புதமான திரைக்கதை அமைப்பவர். இந்தியாவுலயே பேர் வாங்கினவரு. ஒரு கலைஞனை முழுமையாகப் புரிந்து கொள்ளக் கூடிய நேரத்துலதான் அந்த பாராட்டுக்கு அர்த்தம் வருது. 

பாரதிராஜா செஞ்சது சரி: 

புதிய வார்ப்புகள் படத்துல பாரதிராஜா, பாக்யராஜை ஹீரோவா செலக்ட் பண்ணது அந்த படத்துக்கு பெரிய வெற்றியா அமைஞ்சது. பாக்யராஜுக்கும் பெரிய எதிர்காலம் அமைஞ்சது. அது மட்டுமல்ல, பாக்யராஜ் சிறந்த திரைக்கதை ஆசிரியரா இருந்ததாலதான், அவருடைய வாழ்க்கைக்கு, வெற்றிக்கு திரையுலக பயணத்துக்கு மிகப் பெரிய விஷயமா அமைஞ்சதுன்னு உங்க எல்லாருககும் தெரியும். 

பாடம் கற்றேன்: 

அந்த நேரத்துல அப்ப நான் பாக்யராஜை நம்பலை. படத்தைப் பார்த்த பிறகுதான் பாக்யராஜைப் பத்தி தெரிஞ்சுது, அடடா, பெரிய தப்பு பண்ணிட்டோமே, யார் கிட்டட என்ன திறமை இருக்குன்னு தெரியாம நாம எதுவும் சொல்லக் கூடாதுன்னு முடிவெடுத்தேன். அன்றிலிருந்து யாரைப் பற்றியும் எந்த முடிவும் எடுப்பதில்லைன்னு ஒரு பெரிய பாடத்தை பாக்யராஜிடமிருந்து கற்றுக் கொண்டேன்," என பேசினார்.

-நன்றி : தட்ஸ் தமிழ் இணையப் பத்திரிக்கை
-'பரிவை' சே.குமார்

வெள்ளி, 26 ஏப்ரல், 2013

கோபிநாத்தின் பாஸ்வேர்டு - 3


மேடை... சின்ன வயதில் இருந்தே எனக்கு ரொம்பப் பிடிக்கும்! அதில் அமர்ந்து இருப்பவர்களிடம் ஏதோ பெரிய வசீகரம் இருப்பதுபோலத் தோன்றும். மேடைகளில் அமர்ந்திருப்பவர் களில் ஒருவர் கூட்டத்தையே பார்ப்பார். ஒருவர் மிகவும் சீரியஸாக பிட் நோட்டீஸை வாசித்துக்கொண்டிருப்பார். ஒருவர் அருகில் அமர்ந்திருக்கும் விழா வி.ஐ.பி-யிடம் தலைசாய்த்து ஒருக்களித்துப் பேசுவார். அந்த நேரம் ஒருக்களிக்கிற ஆள் ஏற்பாடு பண்ணிய போட்டோகிராபர் கட்டாயம் அந்தப் படத்தை க்ளிக்க வேண்டும். அவருக்கான அசைன்மென்ட் அதுதான். மேடைகளின் பக்கவாட்டில் இரண்டு கூலர் ஃபேன் வைத்திருப்பார்கள். ஆனால், ஃபேன் ஏற்பாடு செய்த அந்த இரண்டு பேரைத் தவிர, யார் மீதும் அந்த ஃபேன் காற்று அடிக்காது.
 இப்போதெல்லாம் மேடையில் விருந்தினர்களின் பின் பக்கம் மெகா டி.வி. திரைகள் ஒளிர்கின்றன. அதில் நிகழ்ச்சியின் பத்திரிகை, திறப்பு விழாக் கட்டட நிர்வாகி, முதலாளி படங்கள், சில இடங்களில் அவர்கள் வீட்டுப் பேரப்பிள்ளைகள் போன் பேசுகிற மாதிரியான போட்டோக்கள்கூட வரும். ஒரு பள்ளிக்கூடத்தில் அந்தப் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளின் புகைப்படங்களைக் காண்பித்தார்கள். அந்தந்த பிள்ளை வரும்போது சம்பந்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கைதட்டிக்கொண்டார்கள்.
20 வருடங்களுக்கு முந்தைய மேடைகள் வேறு மாதிரியானவை. வீட்டில் இருந்து எடுத்துவந்த அப்பாவின் வேட்டி, அம்மாவின் சேலை, அக்காவின் தாவணியைவைத்து ஒரு மாதிரியான டிசைனில் இருக்கும். மேடைகளைவிட, மேடைகளின் பின் பகுதிகள் சுவாரஸ்யமானவை. ஓரமாக ஒளிந்து நின்று, பார்வையாளர்கள் கண்ணில்படாமல் டான்ஸ் ஸ்டெப்ஸ்களை டீச்சர்கள் சொல்லிக் கொடுப்பார்கள். ஒரு நிமிடத்தில் உள்ளே போக வேண்டிய ஐந்து வயது பாரதியாருக்கு மத்தியானம் ஒட்டிய மீசை பாதியாகக் கிழிந்து தொங்கும். கோந்து, சொல்யூஷன் எதுவும் உதவாமல், ஃபெவிகாலை எடுத்து ஒட்டி பாரதியாரை ரெடி பண்ணுவார்கள். 'மீசையில் இனி கை வெச்சே...’ என்று ஒரு கொட்டு விழும். பாரதி அழுதுகொண்டே மேடைக்கு வருவார். கண்கள் விரிய வசனம் பேச வேண்டிய நேரத் தில், ஒட்டு மீசை விழுந்துவிடுமோ என்று கண் களை இறக்கி மேலுதட்டைப் பார்க்க குட்டி பாரதியார் முயல்வார்.
'வசனத்தை மறந்துட்டான்... சொல்லுடா... சொல்லு!’ என்று லில்லி டீச்சர் தடுப்புக்குப் பின்னிருந்து கத்துவது மேடையில் இருக்கும் மைக்கில் பட்டு எதிரொலிக்கும். 'இதுதான் சான்ஸ்’ என்று மேடையில் கடைசி வரை ஒன்றும் பேசாமல் நின்றுகொண்டே டீச்சரைப் பழி தீர்க்கும் பாரதியார்களும் உண்டு. மேடையின் அலங்காரங்களுக்கும் நேர்த்திக்கும் நேர் எதிராகவே பின் மேடைகள் இருக்கும். அப்படி இருந்தால்தான் மேடை திருத்தமாகச் செயல்படும்.
சிறு வயதில் மேடையில் ஏறுவதற்கு முன்னதாகவே மேடையில் ஏறிப் பேசிவிட்டுப் போனவர்களைப் பார்த்துப் பயம் வரும். எங்கள் பள்ளிக்கூடத்தில் பின்னிப் பெடலெடுக் கிற பேச்சுப் புலிகள் திருச்சி பேச்சுப் போட்டியில் கலந்துகொள்வதென்றால், கலவரமாகிவிடுவோம். காக்கி நிறக் கால்சட்டை, நீல நிறத்தில் பட்டை பெல்ட், ஹவாய் ஸ்லிப்பர் செருப்பு என்று நாங்கள் போய் நிற்கும்போது, அதற்கு நேர்மாறான பள பளப்போடு நிற்கிற நகரத்து மாணவர்களைப் பார்த்துப் பயம் வரும்.
அவர்கள் எங்களை இளக்காரமாகப் பார்ப்பது போலவே தோன்றும். ''வானம் பொழிகிறது... பூமி விளைகிறது'' என்று நீலச் சட்டையில் சிவப்பு புள்ளி போட்ட செகப்பான பையன் மொக்கையாகப் பேசினாலும், அது நன்றாக இருப்பதுபோலவே தோன்றும். இந்திய கிரிக்கெட் அணி  ஆஸ்திரேலியாவுக்குச் சென்றால் அம்பேலாகிற மாதிரி, எங்கள் பள்ளிக்கூடத்தில் பின்னியெடுக்கும் எங்களுக்கு, திருச்சி என்பது ஆஸ்திரேலியா மாதிரி. 'டேய்... ஒருத்தனாவது பிரைஸ் அடிக்கணும். இல்லேன்னா, அய்யா நேரா பஸ் ஏறச் சொல்லிருவாரு, மலைக்கோட்டைக்குப் போக முடியாது’ என்று ஒருவருக்கொருவர் தைரியம் சொல்லிக்கொள்வோம்.
'எல்லா இடத்துலயும் ஒரே பேச்சுதானே! ஜெயிச்சாலும் தோத்தாலும் நல்லாப் பேசினோம்னு பேர் வாங்கணும்’ என்று நான் எனக்குள்ளேயே சபதம் போட்டுக்கொள்வேன். என் பெயர் அழைக்கப்படும் நேரம் உணர்ந்ததுபோல அரங்கசாமி அய்யா என் தோளில் கைபோட்டு சகஜமாக்கி என் பயம் விலக்க முயற்சி செய்வார். 'நீ விவேகானந்தர் நினைவு நாள் அன்னைக்குப் பிறந்தவன்டா. அப்ப நீ ஒரு விவேகானந்தன்டா... வீரன்டா!’ என்பார். வில்லன் மூன்று அடி அடித்தவுடன் பனியன் மண்ணைத் தட்டிவிட்டு எழுகிற ரஜினி, அடி வெளுத்தெடுப்பாரே... அப்படி ஒரு வீரம் வரும் எனக்கு. விடுவிடுவென்று ஆஸ்திரேலியா கிரவுண்டில் அச்சமில்லாமல் இறங்கி, 'முத்தான முத்தமிழே...’ என்று முதல் பந்தையே சிக்ஸருக்குத் தூக்குவேன்.
என் நண்பர்கள் இடையிடையே கை தட்டுவார்கள். கைதட்டல் வரவர... பேச்சு வேகம் பிடிக்கும். பயம் தகர்ந்து போகும். சில நிமிடங்களில் எல்லாருமே கை தட்டுவார்கள். மற்ற பள்ளி வாத்தியார்களும் கைதட்டும்போது மலைக்கோட்டை ஏறுவது கன்ஃபார்ம் ஆகும். அரங்கசாமி அய்யா டோனி மாதிரி. அவர் முகத்தில் எந்த ரியாக்ஷனும் இருக்காது. ஆனால், பேசியது நன்றாக இருந்தால், இறங்கி வந்தவுடன்... 'வாடா என் நரேந்திரா’ என்று கட்டிக்கொள்வார்.
மேடை ரொம்பப் பிரமாதமானது. அது தருகிற நம்பிக்கையும் உத்வேகமும் அலாதியானது. இந்த மேடைப் பசியில் அலைகிறவர் களைக் கணக்கு வாத்தியார்களுக்குப் பிடிக் காது. இரவு முழுக்க டிராமா ரிகர்சல் முடித்து விட்டுப் பள்ளிக்கு வந்தால், முதல் பீரியடில் தூக்கம் இழுக்கும். ஆனால், டஸ்டர் பறந்து வந்து மூஞ்சியில் விழும். குளித்த ஈரத்தோடு பவுடர் அப்பியதுபோல முகம் முழுக்க வெள்ளையாகும். ஆனால், இப்போதெல்லாம் டஸ்டரை விட்டு அறைந்தால், மாணவர்களே நியூஸ் சேனலுக்கு போன் செய்துவிடுகிறார் கள்.
மேடைகளை மூடிவிட்டு ஃபார்முலாக்களை மனப்பாடம் பண்ணும் வேலைக்கு எல்லாரும் பழகிவிட்டதால், இப்போது டஸ்டர்களுக்கான வேலை துடைப்பது மட்டுமே. டஸ்டர் அடியில் தொடங்கி, நீளக்குச்சியில் நுனி மட்டும் மேலே விழுகிற அடி வரை எத்தனை வலிகள் பட்டாலும் மேடை மீதான காதல் குறையவே இல்லை.
அப்போதிருந்து இப்போது வரை நிறைய மேடைகள் பார்த்தாயிற்று. நவீன மேடைகள் இன்னும் பரபரப்பானவை. அதிலும் காது மடலுக்குப் பின் இயர்போன் அணிந்துகொண்டு நிற்கிற மேடைகள் ரத்தக் கொதிப்பை அதிகரிக்கும். மேடையின் பின்னால் உதவி இயக்குநர்களுக்கு விழுகிற திட்டுகளில் இருந்து கேமராமேன்களுக்கு அளிக்கப்படும் உத்தரவுகள் வரை அத்தனையும் கேட்கும். மேடையில் நிற்கிற விருந்தினரிடம் கேள்வி கேட்டுக்கொண்டே, பின் மேடையின் அமளிதுமளிகளையும் அனுசரித்துக்கொள்ள வேண்டும்.
இதில் உச்சகட்ட அவஸ்தை என்பது நாம் சொல்வது இயர்போன் வழியாகச் சம்பந்தப்பட்டவருக்குக் கேட்கிறதா என்ற சந்தேகம் வந்துவிட்டால், இயர்போன் மாட்டியிருப்பவன் செத்தான். 'நான் சொல்றது கேட்குதா? அடுத்து நாம மேடைக்குக் கூப்பிடப் போற ஆள திடீர்னு மாத்திட்டோம். நான் சொல்றது கேட்குதா... பாஸ் நான் பேசுறது கேக்குதா... தல கேக்குதா... ஆள் மாறிடுச்சு. பழைய பிளான் இல்ல... கேக்குதா... கேக்குதா..!’ என்று டென்ஷனுக்கு ஏற்ப அவர் சத்தம் அதிகரித்துக்கொண்டே போகும். 'அட ராசா... கேட்குதுடா!’ என்று நான் பதிலுக்குக் கத்த முடியாது.

மேடையில் பதில் சொல்லிக்கொண்டு இருப்பவரின் பேச்சுக்கு ஏற்றபடி முகபாவங்களை வைத்துக்கொள்ள வேண்டும். அடுத்த கேள்வியை மனசுக்குள் தயாரிக்க வேண்டும். 'கேக்குதா... கேக்குதா’வுக்குக் காதைத் தவிர, மனசையோ, மூளையையோ கொடுக்கக் கூடாது. கொடுத்தால் முகபாவம் மாறிப்போகும்... ரணவேதனையாக இருக்கும். காதுக்குள் கத்துகிறவனுக்குப் பதில் சொல்ல முடியாமல், கண் முன்னால் பேசுகிறவருக்குக் காது கொடுக்க முடியாமல்... அது ஒரு 'பிராண சங்கடம்’!
'பாஸ்... பாலசந்தர் சார்கிட்ட, அந்த மேட்டர் கேளுங்க. கேரவன்ல டிஸ்கஸ் பண்ணோம்ல..?! அது..!’ எதுவென்று உடனே ஞாபகம் வராது. 'பாஸ்... அதக் கேளுங்க. தல கேக்குதா... அதக் கேளுங்க... மத்தியானம் பேசுனமே அதுதான்... நான் பேசுறது கேட்குதா..? டே... அவர் இயர் பீஸ் வொர்க் பண்ணுதா பாரு?’ என்றவுடன் ஆடியோ இன்ஜினீயர் வால்யூம் லெவலை ஏற்றிவிடுவார்.
'கேக்குதா..? அதக் கேளுங்க..!’ டங் டங்கென்று தலைமீது பத்து சுத்தியல் மாறி மாறி அடிப்பதுபோல இருக்கும். கழுத்துப் பிடறி நரம்புகள் இழுக்கும். கண்ணுக்குக் கீழ்ப் பகுதி கனமாக இருப்பது மாதிரி தோன்றும். மண்டைச் சுழியில் இருக்கிற முடியைக் கொத்தாகப் பிடித்து யாரோ உலுக்கிக்கொண்டே இருப்பதுபோல வலிக்கும்.
ஆனால், நிகழ்ச்சி முடிந்த பிறகு, பின் மேடையில் ஒருவரை ஒருவர் கட்டியணைத்துப் பாராட்டிக்கொள்வோம். தான் பட்ட சிரமங்களை யாருமே பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். 10 நிமிடங்களுக்கு முன்பு வரை கடுகடுப்பாக இருந்தவர்கள் இப்போது எல்லாம் மறந்திருப்பார்கள். நிகழ்ச்சி நன்றாக வந்துவிட்ட சந்தோஷம் எல்லாவற்றையும் மறக்கடித்துவிடும். மேடையின் சிறப்பே அதுதான்.
எத்தனையோ விதமான மேடைகள் வந்துவிட்டாலும், எந்தக் கூடுதல் அந்தஸ்தையும் எதிர்பார்க்காமல் குழந்தைகள் அணிவகுக்கும் மேடைகளே ரொம்ப அழகாகத் தெரிகின்றன. கண்ணன் பாட்டுக்கு ஆடிக்கொண்டே அப்பாவும் அம்மாவும் எங்கே உட்கார்ந்திருக்கிறார்கள் என்று தன் குட்டிக் கண்களால் தேடும் குழந்தைகளின் பாசமும் பரிதவிப்பும் மேடைக்கு நெகிழ்வான அர்த்தங்களை உருவாக்கிவிடுகின்றன.
கூட்டத்தைப் பற்றிக் கவலைப்படாமல் ஜோடனைகள் இல்லாமல் சமூக விஷயங்களை நாடகமாகவோ, புனைவுகளாகவோ முன்னிறுத்தும் தெருமுனை மேடைகள், மேடைகளின் முக்கியத்துவத்தை முன்னிறுத்துகின்றன. சில வருடங்களுக்கு முன்பு வரை மேடைகளின் வழியே சமூகத்தைப் பார்க்கும் வழக்கமும் வாய்ப்பும் நிறைய இருந்தன. தேரடி மேடைகள், தெருமுனை மேடைகள், அரசியல் மேடைகள், பிரச்னைகள் பிரித்துப் போடும் மேடைகள் என ஏதோ ஒரு மேடையை நோக்கி, தோளில் பிள்ளையை வைத்துக் கொண்டுபோன அப்பாக்களை இப்போது காண முடிவதுஇல்லை.
ஷாப்பிங் முடித்துவிட்டு பைக்கில் வரும்போது தெருமுனை மேடை ஒன்றைப் பார்த்து ‘Noise Pollution’ என்று விமர்சிக்கும் மனிதர்களாக மாறிக்கொண்டு இருக்கிறோம். அறிவியல் கண் காட்சி, 3டி சினிமா மாதிரி அவ்வப்போது பிள்ளைகளுக்கு மேடைகளையும் காட்ட வேண்டும்.
நாளை மேடையில் நின்று பேச வேண்டிய பிள்ளைகளிடம் அதை, ‘Noise Pollution’ ஆக மட்டும் அறிமுகப்படுத்துவது நியாயம் இல்லை!
நன்றி : ஆனந்த விகடன், கோபிநாத்
படங்கள் : கே.ராஜசேகரன், இராஜவிபீஷிகா
-'பரிவை' சே.குமார்