மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 17 ஏப்ரல், 2013

ஸ்டாலின் சந்திக்காமல் சென்றது குறித்து அழகிரி பதில்


அண்மையில் மதுரையில் சுற்றுப் பயணம் செய்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திமுகவின் தென்மாவட்ட அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரியை சந்திக்காமலேயே புறக்கணித்துச் சென்ற விவகாரம் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் நிலையில், இன்று அதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அதுபற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று முணுமுணுத்தபடியே செய்தியாளர்களைத் தவிர்த்துச் சென்றார்.

இன்று மதுரையில் நாராயணபுரம் பகுதியில் ரயில்வே பயணிகள் முன்பதிவு மையம் ஒன்றை திறந்து வைக்க வந்திருந்த மு.க. அழகிரி, பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது அவர், அண்மையில் என்னைச் சந்தித்த கனிமொழி, என் சகோதரி என்ற முறையிலேயே என்னைச் சந்தித்தார். கனிமொழியும் அப்படித்தான் கூறியிருக்கிறார் என்பதால், இதற்கு மேலும் இந்தச் சந்திப்புக்கு விளக்கம் ஏதும் தேவையில்லை என்றார்.

மேலும், மதுரையில் நான் கொண்டு வந்த பல திட்டங்களை அதிமுக அரசு முடக்கிவிட்டது. எதிர்க்கட்சிகளை மாநகராட்சியிலும், சட்டமன்றத்திலும் பேசவே அனுமதிக்க மறுக்கிறார்கள். இங்கே மதுரையில் 16 கழிப்பறைகளைக் கட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இலவச பயன்பாட்டுக்காகவே திறந்துவைத்தேன். அவை எல்லாவற்றையும் மதுரை மாநகராட்சி மேயர் இப்போது கட்டணக் கழிப்பிடங்களாக மாற்றி விட்டார். மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் சரியான வழியைக் கடைப்பிடிக்கவில்லை என்றார்.

பின்னர் அண்மையில் மதுரை வந்திருந்த ஸ்டாலின், தங்களைச் சந்திக்காமலேயே சென்றுவிட்டாரே என்று கேள்வி எழுப்பினர் செய்தியாளர்கள். அதற்கு அவர், அதுபற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று முணுமுணுத்தபடியே பதில் ஏதும் அளிக்காமல் சென்றார்.

நன்றி:- தினமணி
-'பரிவை' சே. குமார்

0 எண்ணங்கள்: