மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2018

மனசு பேசுகிறது : கருவாச்சி காவியம்

Image result for karuvachi kaviyam

ருவாச்சி காவியம்...

சிரமப்பட்ட ஒருத்தி சிதைந்து போகாமல் வாழ்ந்து காட்டும் கதையே கருவாச்சி காவியம் என்றாலும் ஒருத்திக்கு இத்தனை துன்பங்களா என்ற வலிதான் கதை நெடுகிலும் நம்மை ஆக்கிரமித்துக் கொ(ல்)ள்கிறது. 

சொக்கத்தேவன்பட்டி என்ற கிராமமே கதைக்களம். கதையின் நாயகி கருவாச்சி.

கருப்பான பெண்களைக் கிராமங்களில் கருவாச்சி என பட்டப் பெயரிட்டு அழைப்பதுண்டு. இந்தக் கதையைப் பொறுத்தவரை நாயகியின் பட்டப்பெயரல்ல இது... அவளின் பெயரே இதுதான் என்றாலும் அவள் ஒரு கருப்பிதான்... 

எது நல்லது எது கெட்டது எனப் பிரித்தறியத் தெரியாத கருவாச்சி, முன் பகைக்கு பலிகடாவாக்கப்படுகிறாள். தகப்பன் இல்லை.. தாயின் வளர்ப்பு... அன்னாடங்காச்சிக் குடும்பம்... ஆண் துணையாய் தங்களோடு ஒட்டிக் கொண்ட கோண வாயன்... இதுதான் அவளின்  வாழ்க்கைக் கதையின் ஆரம்பம். 

நாந்தான் வாழலை... என் மக வாழ்க்கையும் இப்படியா ஆகணுமென துடிக்கிறா... துவளுறா...  போராட்டமே வாழ்க்கையாகிப் போன ஆத்தாக்காரி பெரியமூக்கி. 

யாரழுதாலென்ன கடவுள் போட்ட கணக்கை மாத்தியா எழுத முடியும்... உம் பொறப்பே இப்படித்தான்னு எழுதிப்புட்டான்... இதுல கருவாச்சியும் பெரியமூக்கியும் விதிவிலக்கா என்ன.. 

கருவாச்சியைக் கட்டி கழுத்தறுத்தவன் கட்டையன்... முறைக்கு மாமன் மகன்தான் என்றாலும் மனிதத் தன்மையற்ற மிருகம் அவன்.

கட்டிய பத்து நாளில் அவன் பண்ணின கொடுமைகள் சொல்லி மாளாது... கொதிக்கும் பாறை... கிணறு... கருவைமுள் என அவளைப் படுக்க வைத்து தன் இச்சையை மட்டுமல்ல முன் பகையையும் தீர்த்துக் கொள்கிறான். 

அவனின் அப்பன் சடையத்தேவரும் இந்த விஷயத்தில் சண்டாளனே... தன் அண்ணன் மகளைக் கொன்றவனின் அக்காள் மகளைப் பலி வாங்கி சிரிக்கிறான் பல்லிடுக்கில் வழியும் ரத்தத்தோடு...  

பதினோரு நாள் வாழ்வின் முடிவில் கட்டையன் பஞ்சாயத்தில் சொல்வது அவ பொம்பள இல்லை... அத்து விட்டுடுங்க என்பதுதான்.

கட்டையன் சொன்னதை மறுக்காது அத்துவிடச் சொல்றா கருவாச்சி தவிச்சி நிக்கும் ஊருச்சனம் முன்னாடி.  

பாத்திர பண்டம் வரை எல்லாம் எடுத்துக் கொடுத்தாலும் தாலியைக் கொடுக்க மறுக்கிறா... தனியே எதிர்த்து நிக்கிறா...

அந்தப் பிரிவுல ஊரு தவிக்குது.... தாயி துடிக்கிறா... கருவாச்சி மட்டும் தவிக்கவுமில்லை  துடிக்கவுமில்லை... வாழ்ந்து காட்டணுங்கிற வெறி மட்டுமே தலைக்கு மேல தனிச்சி நிக்கிது.

அப்படியே இருடின்னு விட்டுப் போக ஆத்தாவுக்கு மனசில்லை... சொந்தத்துல மாப்பிள்ளை பாக்குறா... விவரம் தெரிஞ்சதும் முழுகாம இருக்கேன்னு முறிச்சி விடுறா கருவாச்சி.

கருவாச்சி மேல கரிசனமிருந்தாலும் கட்டையனுக்குப் பயப்படுது ஊர்சனம்... நல்லதைவிட கெட்டதைப் பார்த்துப் பயப்படுறதுதானே மனுசப்பயக வேலை... கட்டையனுக்கு நரிகளும் துணை நிக்கிதுக.

எத்தனை பிரச்சினைகள் கட்டையனால்... எதற்கும் அஞ்சவில்லை... மல்லுக்கு நிற்கவும் இல்லை... பணிஞ்சு போகவுமில்லை... வேலுநாச்சியாய் நின்று மிருகங்களுக்கு மத்தியில் மனுஷியாய் ஜெயிக்கிறாள்.

ஆத்தாவின் மரணம் அவளை ஆட்டிப் பார்த்தாலும் அவளுக்குள் இருக்கும் வாழணுங்கிற... வாழ்ந்து காட்டணுங்கிற தீ அணையலை... அந்த நெருப்பு அவளை வயித்துப் புள்ளையோட வாழ வைக்கிது.

பவளம், மருத்துவச்சி, வளவிக்கார செட்டியார், கனகு, உருமாப் பெருமாத் தேவர் என உறவுகளின் அன்பில் உத்வேகத்தோடு நகர்த்துகிறாள்.

வேலை பார்த்தால் சாப்பாடு என்ற நிலையில் நிறை மாதத்தில் வேலை பார்த்துத் திரும்பும் போது மழையில் சிக்கி காட்டுக் குடிசையில் தனியே பெற்றெடுக்கிறாள் சிங்கத்தை... அழகு சிங்கத்தை. 

கட்டையனின் பகை கொடுக்கும் பிரச்சினைகள்... கோணவாயனை, பிள்ளைபோல் வளர்த்த கிடாயை என பரவலாகித் தாக்க... அடிபட்டும் வேங்கையாய் எகிறாமல் காலம் வெல்லும்... எதிரியைக் கொல்லும் என்ற நம்பிக்கையில் அடக்கியே வாசிக்கிறாள்.

சொந்த ஊரில் சாணி பொறுக்கி வரட்டி தட்டும் பெண்ணோடு கோண வாயனுக்கொரு காதல் இருந்திருக்கிறது... போதும் இந்த ஊரென அவளைத் தேடி, அத்துக் கொண்டு போகும் மாடென கருவாச்சியை அநாதையாய் விட்டுப் போகிறான்... போனவன் திரும்பி வருகிறான் காதலி சித்தி ஆன கதை சுமந்த கண்ணீரோடு.

வளவிக்காரச் செட்டியார் மூத்த மக கனகு கல்யாணத்துக்கு கைமாத்தா கருவாச்சி ஆத்தா கொடுத்த தங்கச் சங்கிலியை,  அழகு சிங்கத்துக்குப் போட்டு அழகு பார்க்க வருகிறது வினை.

கனகுக்குப் பிள்ளையில்லை எனக் காரணம் காட்டி போட வேண்டிய வைர மோதிரத்தையும் வட்டியாய் கொழுந்தியா பவளத்தையும் கேட்கிறான் வக்கத்த மாப்பிள்ளை.

செட்டியாரு தவிப்பைப் பார்த்து கருவாச்சி மீண்டும் நகையை அவரிடமே கொடுக்க வக்கத்த பயலுக்கு வைர மோதிரமாகிறது. 

வைரமோதிரமும் கொழுந்தியாளும் கிடைத்த சந்தோஷத்தில் ஊர் திரும்பும் மாப்பிள்ளை, கோழிக்கறி ருசியில் கல்லென வைரத்தைக் கடிச்சித் தின்னு திரும்பாத ஊருக்குப் போகிறான்.

ஒத்த மக வாழ்க்கையோட போவேண்டியது ரெட்டை மக வாழ்க்கையோட விளையாடிருச்சேன்னு உயிரை விட்டுடுறாரு செட்டியாரு. கனகுக்கும் பவளத்துக்கும் பிடிமானத் தேராகிறாள் கருவாச்சி.

அப்பனில்லாது வளர்ந்த பிள்ளை, குடும்பம் பொறுப்புணர்ந்து பிழைப்பானென நினைத்தால் அது தறுதலையாகி தறிகெட்டு நிற்கிறது. பெரும்பாலும் அம்மாவின் கஷ்டம் பார்த்து வளர்ந்த பிள்ளைகள் எல்லாருமே அழகு சிங்கங்களாய் இருப்பதில்லை என்பதே உண்மை.

கட்டையனுக்கு இரண்டாந்தாரமாக வருகிறாள் பேயம்மா என்ற திம்சு. ஊருக்குள்ள நல்லவளா நிக்குற நாகப்பாம்பு... மாமானாரை... கணவனை ... அழகு சிங்கத்தை என ஒரு குடும்பத்தையே தழைக்காது கிள்ளியெறிகிறாள் பாசமெனும் வெசம் கொடுத்து... 

எல்லாரையும் எரிச்ச பாவியின் ஜம்பம் கருவாச்சிக்கிட்ட மட்டும் செல்லலைன்னாலும் தன் கதை தெரிந்தவளை விடுதல் நலமாகுமா என்பதால் வீடு வரைக்கும் பறித்து வீதிக்குத் துரத்துறவ கட்டையனையும் மொட்டை மரமாக்கி கவர்ந்து செல்கிறாள் சொத்துக்களை.

மூத்தமகன்னு ஒத்த உறவாய் நின்ற கோண வாயனும் பாம்பு கடிக்குப் பழியாக, இழப்புக்களே வாழ்க்கையாகிப் போன பேதை தனிச்சி நிக்கிறா... ஆனா தவிச்சி நிக்கலை.

எத்தனை முறை வீழ்ந்தாலும் நான் சாகமாட்டேன் என ஒவ்வொரு முறையும் வீரியமாய் எழுகிறாள்.

பஞ்சத்திலும் சாயவில்லை பத்தினி கருவாச்சி... திக்கற்றோருக்கு தெய்வமாய் உயர்ந்து நிற்கிறாள்.

பொம்பள இல்லய்யா அவ என கூசாது பொய் சொன்ன கட்டையன், அவ காலில் விழுகிறான் குஷ்டரோகியாய்...

ஆம்பள பொட்டச்சி கால்ல விழக்கூடாது மாமான்னு தன்னை வாழவிடாது அழிக்க நினைத்தவனை அணைத்துக் கொள்கிறாள் கருவாச்சி.

வீம்பும் வீராப்பும் உடம்புல தெம்பிருக்கும் வரைதான் என்பதை கட்டையனும்... வைராக்கியம் ஆயுசு வரைக்கும் என்பதை கருவாச்சியும் சொல்லாமல் சொல்கிறார்கள்.

பஞ்சத்தின் கோரத் தாண்டவத்தில் ஊர் சிக்கிக் கிடக்க, வாழ்நாளெல்லாம் அழுத கருவாச்சி, இனியாச்சும் சிரிக்கட்டுமேன்னு வெறித்துக் கிடந்த வானம் அடித்துப் பொய்கிறது.

திம்சு பேச்சைக் கேட்டு அவ அண்ணன் வீட்டோட மாப்பிள்ளையாய் இருக்கும் மகன் நினைப்பில் அவனைப் பார்க்கப் போனவள் வீரனாய் வாழ வேண்டியவனை கிறுக்கனாய்ப் பார்க்கிறாள்.

தன்னை படாத பாடு படுத்தியவன்... பொம்பளை இல்லைன்னு சொன்னவன்... வாழ விடாமல் ஆட்டிப் பார்த்தவனை இறுதிக் காலத்தில் காக்கிறவள் மகனை மட்டும் விட்டு விட்டு வந்ததேனோ... பார்த்துப் பார்த்து வளர்த்துப் பதராப் போச்சேங்கிற வலியின் விளைவுதானோ என்னவோ... கருவாச்சி மனசு யாருக்குத் தெரியும்..?

அருமையான எழுத்து நடை... கிராமத்துப் பேச்சு வழக்கு... பிரச்சினைகளோடு பயணிக்கும் கருவாச்சிக்குப் பின்னே என்னாகுமோ தெரியலையே... கடவுளே கண் இல்லையாவென நம்மையும் ஓட வைக்கிறார் வைரமுத்து.

பேன் பார்ப்பது... வைத்தியம் பார்ப்பது... கருவாட்டுக் குழம்பு வைப்பது... பருத்திப் பால் செய்வது... உடல் அழுத்தி விடுவது... என இன்னும் நிறைய விஷயங்களை ரொம்ப விரிவாய்ப் பேசுகிறார் வைரமுத்து... விவரணைகள் எப்போதும் அழகுதான்... வர்ணிப்புக்கள் நம்மை ஈர்க்கிறது என்றாலும் பக்கம் பக்கமாய் நகரும் போது கதையில் தொய்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே.

எங்கிருந்தோ சாமியார் ஒருவர் கருவாச்சியைத் தேடி வந்து அவளின் விளக்கம் கேட்டு காலில் விழுதல்... திம்சு பற்றிச் சொல்லிச் செல்லும் கிழவி... எனச் சில இடங்களில் சினிமாத்தனம். 

120 வீடுகளே உள்ள ஊரில் பேரனின் முகம் பார்த்ததில்லை என்று சொல்லும் சடையத் தேவர்... மாமனின் குரலைக் கேட்டதில்லை எனச் சொல்லும் கருவாச்சி என சில ஏற்க முடியாத விஷயங்கள்.

எது எப்படியோ என்றாலும் ஒரு நல்லதொரு வாழ்க்கைக் கதையை சிறப்பாகச் சொல்லியிருக்கிறார் வைரமுத்து.

குறிப்பாக காமத்தைச் சிதறவிட நிறைய இடமிருந்தும் நாசூக்காய் நகர்த்திச் செல்லுதல் அழகு.

நகை செய்யும் போது நடப்பவற்றை அழகாய் விவரித்திருக்கிறார்... அதற்கும் பிரச்சினை வந்திருக்கிறது சாதி வடிவில்... விளக்கம் வேறு கொடுத்திருக்கிறார். கதையை கதையாய் பார்த்தோமேயானால் அங்கு சாதி சதிராட வேண்டிய அவசியமில்லை.

ஒருவரின் எழுத்தின் வீரியத்தை வாசிப்பவர் சொல்ல வேண்டும்.. எழுதியவர் நானே சிறப்பாய் எழுதினேன் என்று சொல்லிக் கொள்ள வேண்டியதில்லை என்பதை வைரமுத்துக்கள் மட்டுமல்ல நாம் எல்லாருமே உணர வேண்டும்.

கருவாச்சி காவியம் வாசிக்க வாசிக்க ஈர்த்துக் கொள்ளும் என்பது உண்மை... வாசித்தால் மொழி நடையில் சொக்கிப் போவீர்கள் என்பதும் உண்மை.

-'பரிவை' சே.குமார். 

4 எண்ணங்கள்:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல விமர்சனம். நானும் படித்து ரசித்திருக்கிறேன்.

ஸ்ரீராம். சொன்னது…

புத்தகக் கண்காட்சியில் அதிகம் விற்பனையாகும் நூல் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். படிக்கும் பொறுமைஇருந்ததில்லை.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

படித்து ரசித்திருக்கிறேன் நண்பரே

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மறுமுறையும் ரசித்தேன்...