மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 29 ஏப்ரல், 2013

மரக்காணம் கலவரம்: நடந்தது என்ன?- ஜெ. விளக்கம் - பகுதி - 2


16 நிபந்தனைகளுடன் அனுமதி:

இது போன்ற கூட்டங்களுக்கு ஏற்கெனவே அனுமதி வழங்கப்படாத தருணங்களில், சம்பந்தப்பட்டவர்கள் உயர் நீதிமன்றம் சென்று தங்களுக்கு சாதகமான உத்தரவுகளை பெற்றுள்ள நிகழ்வுகளை கருத்தில் கொண்டு, வன்னியர் சங்கத்தினருக்கு 25.4.2013 அன்று மேற்படி விழா நடத்துவதற்கு கீழ்க்கண்ட நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி வழங்கியது. 

1- விழாவின் போதோ அல்லது அதற்கு முந்தைய கூட்டங்களிலோ வன்முறையைத் தூண்டும் விதமாகவோ அல்லது பிற வகுப்பினர் மனம் புண்படும்படியாகவோ எவரும் பேசக்கூடாது. 

2- விழாவின் போது வன்முறையை தூண்டும் கோஷங்களை எழுப்பவோ, வன்முறையை தூண்டும் விதமான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி வரவோ கூடாது. 

3- மாநாட்டிற்கு வருபவர்கள் திறந்த வகை வாகனங்களை பயன்படுத்தக்கூடாது. 

4- வாகனங்களின் மேல் கூரையின் மேல் அமர்ந்து வரக் கூடாது. வாகனங்களில் வருபவர்கள் வரும் வழிகளில் கோஷங்கள் எழுப்பக் கூடாது. வாகனங்களில் ஒலி பெருக்கிகள், கட்டாயமாக பொருத்தி வரக் கூடாது. 

5- பிரச்சனைக்குரிய பேச்சுகளை பேசும் பேச்சாளர்களை பேச அழைக்கக் கூடாது. 

6- விழா நடக்கும் இடத்தில் வாகனங்கள் நிறுத்தும் இடவசதிகள், கழிப்பிட வசதிகள், குடிநீர் வசதிகள் மற்றும் வரும் தொண்டர்களின் இதர வசதிகள் குறித்து விழா அமைப்பாளர்கள் தகுந்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும். மேலும், விழா முடிந்தவுடன் அந்த இடம் சுற்றுப்புற சூழல் பாதிப்பின்றி சுத்தப்படுத்தப்பட வேண்டும். 

7- வாகனங்கள் நிறுத்துமிடங்களில் தகுந்த விளக்கு வசதிகள், தற்காலிக பாதுகாப்புத் தடைகள், ஒலி பெருக்கி வசதிகள் செய்து தரப்பட வேண்டும். 

8- மாமல்லபுரத்தில் உள்ள தொல்லியல் துறை சம்பந்தப்பட்ட புராதன சின்னங்களுக்கு சேதம் விளைவிக்கும் எந்த செயலையும் மற்றும் சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவிக்கும் எந்த செயலையும் செய்யக் கூடாது. 

9- விழா தொடர்பான போர்டுகளை காவல் துறையினரின் அனுமதியுடன் பிரச்சனை இல்லாத இடங்களில் அமைத்து, கட்சி தொண்டர்களை நியமித்து அவற்றிற்கு சேதம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஜோதி எடுத்துக் கொண்டு தொடர் ஓட்டமாக வருவதற்கு அனுமதியில்லை: 

10- விழா சம்பந்தமாக பிற மாவட்டங்களில் இருந்து வரும் ஒவ்வொரு வாகனமும் அதில் வரும் தொண்டர்கள் பற்றிய விவரங்களை ஒரு நாள் முன்பு, அதாவது 24.4.2013 அன்று காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறையினருக்கு தெரிவிக்க வேண்டும். 

11- ஒலி பெருக்கிகள் நிகழ்ச்சி நடத்தும் பகுதிகளில் மட்டுமே அமைத்துக் கொள்ளப்பட வேண்டும். பெட்டி வடிவ ஒலி பெருக்கியினை மட்டுமே பயன்படுத்த வேண்டும். 

12- ஜோதி எடுத்துக் கொண்டு தொடர் ஓட்டமாக வருவதற்கு அனுமதியில்லை. 

13- விழாவானது 25.4.2013 அன்று மாலை ஐந்து மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு அன்று இரவு பத்து மணிக்குள் கண்டிப்பாக முடிக்கப்பட வேண்டும். 

14- பொது சொத்துக்களுக்கோ, இதர சொத்துக்களுக்கோ ஏதேனும் சேதம் ஏற்பட்டால் விழா அமைப்பாளர்களே முழு பொறுப்பாளர்கள். அதற்குரிய நிவாரண தொகையை வழங்க வேண்டும். இது தவிர சட்டப்படியாக எடுக்கப்படும் குற்றவியல் நடவடிக்கைக்கும் கட்டுப்பட வேண்டும். 

15- சட்டம் ஒழுங்கை பாதுகாக்க காவல் துறையினரால் அவ்வப்போது வழங்கப்படும் அனைத்து அறிவுரைகளையும் ஏற்று கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும். 

16- மேற்கூறிய நிபந்தனைகளை மீறினால் அதற்கு விழா அமைப்பாளர்களே முழு பொறுப்பாளர்கள். 

இந்த நிபந்தனைகள் அடங்கிய கடிதத்தை திருக்கச்சூர் ஆறுமுகம் 19.4.2013 அன்று ஒப்புதல் கையொப்பமிட்டுப் பெற்றுக் கொண்டுள்ளார். திருக்கச்சூர் ஆறுமுகம் தந்த உத்தரவாதம் மேலும், 20.4.2013 அன்று, காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், இவ்விழா அமைப்பாளர்களை அழைத்து, ஒரு கூட்டம் நடத்தி, அதில் விழா எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது குறித்த உறுதி மொழியையும், சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது என்ற உத்தரவாதத்தினையும் அமைப்பாளர்களான திருக்கச்சூர் ஆறுமுகம் மற்றும் சிலரிடமிருந்து பெற்றுள்ளார். மேலும், இச்சங்கத்தின் தலைவர்கள் காவல் துறை இயக்குநர் மற்றும் காவல் துறை கூடுதல் இயக்குநர் சட்டம் மற்றும் ஒழுங்கு, ஆகியோரை நேரில் சந்தித்து காவல் துறையினர் விதிக்கும் நிபந்தனைகளை கடைபிடித்து விழாவின் போது சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏதுமில்லாமல் பார்த்துக் கொள்கிறோம் என உத்தரவாதம் அளித்தனர். 

காவல் துறையில் உள்ள சுமார் 90,000 காவலர்களை வைத்து எப்பொழுதும் உள்ள பாதுகாப்பு மற்றும் இதர முக்கிய பணிகளுக்கு உண்டான காவலர்கள் போக மீதமுள்ள காவலர்களை கொண்டு, ஒரே நேரத்தில் அடிக்கடி மாநிலத்தில் பல்வேறு இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது என்பது சிரமமான காரியமாகும். கடந்த 25.4.2013 அன்று மாமல்லபுரத்தில் சித்திரைப் பெருவிழா நடைபெற்றது மட்டுமல்லாமல், மாநிலத்தில், திருவண்ணாமலையில் சித்திரா பவுர்ணமியை முன்னிட்டு சுமார் 15 லட்சம் பக்தர்கள் கூடிய நிகழ்ச்சிக்கும், மதுரையில் சுமார் ஐந்து லட்சம் பேர் பங்கேற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிய நிகழ்ச்சிக்கும், சென்னை, சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கும், பெருமளவில் காவல் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருந்தது. 

ஏராளமான காவலர்கள் பாதுகாப்பு இருப்பினும், சித்திரை முழு நிலவு விழாவையொட்டி ஏற்படக்கூடிய சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை கருத்தில் கொண்டு, மாமல்லபுரத்தில், 25.4.2013 அன்று, காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் தலைமையில், மூன்று காவல் கண்காணிப்பாளர்கள், நான்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், ஒரு காவல் உதவி கண்காணிப்பாளர், 25 காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், 47 காவல் ஆய்வாளர்கள், 99 காவல் உதவி ஆய்வாளர்கள், 935 இதர காவல் ஆளிநர்கள், 10 சிறப்பு காவல் படை நிறுமங்கள் மற்றும் ஆயுதப்படை பிரிவுகளைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் என மொத்தம் 1,910 பேர் விழா பாதுகாப்பு அலுவல்களை மேற்கொள்ளுதல், விழாவின் போது போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், விழாவிற்கு வரும் வாகனங்களை அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் நிறுத்தி வைக்கச் செய்தல் போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். 

இத்துடன், இந்த விழாவிற்கு வரும் வாகனங்கள் வரும் சாலைகளிலும், பிரச்சனைக்குரிய பகுதிகளிலும், குறிப்பாக காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவள்ளூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் மொத்தம் 2,724 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டிருந்தனர். வடக்கு மண்டல காவல்துறைத் தலைவர் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேற்பார்வையிட்டு வந்தார். சித்திரை விழாவை முன்னிட்டு, 25.4.2013 அன்று பிற்பகல், வன்னியர் சங்கத்தைச் சார்ந்தவர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வாகனங்கள் மூலம் பிரதான சாலைகளில் மாமல்லபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். 

காவல் துறையினர் அனைத்து சாலைகளிலும் தக்க பாதுகாப்பு அளித்து வந்தனர். வாகனத்தை நிறுத்தி 30 பேர் உணவு மற்றும் மது அருந்திக் கொண்டு....: இந்நிலையில் அன்று பிற்பகல் 1.30 மணியளவில், புதுச்சேரியில் இருந்து கிழக்குக் கடற்கரை சாலை வழியாக வாகனங்களில் தொண்டர்கள் வந்து கொண்டிருந்த போது, விழுப்புரம் மாவட்டம், மரக்காணம், கடையம் தெரு காலனி பேருந்து நிறுத்தம் அருகில் சாலையோரம் மரம் ஒன்றின் கீழ் வாகனத்தை நிறுத்தி சுமார் 30 பேர் உணவருந்திக் கொண்டு இருந்துள்ளனர். அதில் சிலர் மது அருந்திக் கொண்டு இருந்துள்ளனர். 

அப்போது, அக்காலனியைச் சேர்ந்த சிலர் ஏற்கெனவே தகராறு நடந்த இடத்தில் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் என்று கேட்க, வாகனத்தில் வந்தவர்கள் அவர்களை அடித்து துரத்தியுள்ளனர். அவர்கள் காலனிக்கு சென்று தகவல் தெரிவித்ததின் பேரில், அக்காலனியைச் சேர்ந்த சுமார் 200 பேர் மரக்காணம் கிழக்கு கடற்கரைச் சாலைக்கு வந்து சாலையில் கற்களையும், கட்டைகளையும் போட்டு மறியலில் ஈடுபட்டனர். மரக்காணத்தில் வன்முறைச் சம்பவங்கள் நடந்ததையடுத்து, மரக்காணத்திற்கு மேல் மாமல்லபுரம் நோக்கி பாட்டாளி மக்கள் கட்சியினர் வாகனங்கள் சென்றால் வழியில் உள்ள காலனிகளில் பிரச்சனை ஏற்படும் என ஆதி திராவிட இனத்தவர் தெரிவித்தனர். மாற்று வழியில் செல்லுமாறு காவல் துறையினர் அறிவுறுத்தியதை கேட்காமல் விழாவிற்கு வந்தவர்கள் வாகனங்களை சாலையில் நிறுத்தி, வாகனங்களில் இருந்து இறங்க ஆரம்பித்தனர்.

8 வீடுகளுக்கு தீ.. மாட்டுக் கொட்டகைக்கும் தீ:

இதனால், அவ்வழியாக வாகனங்களில் வந்தவர்களுக்கும், காலனியைச் சேர்ந்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். வாகனங்களில் வந்தவர்கள் காலனிக்குள் சென்று எட்டு குடிசை வீடுகள் மற்றும் மாட்டுக் கொட்டகை ஆகியவற்றிற்கு தீ வைத்ததுடன், அவ்வழியே வந்த மூன்று அரசு பேருந்துகள், ஒரு கார் மற்றும் ஒரு இரு சக்கர வாகனம் ஆகியவற்றையும் தீயிட்டு கொளுத்தினர். இது பற்றி தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, "வருண்" வாகன உதவியுடன் தீயை அணைத்துள்ளனர். 

காவல் துறையினர் அங்கு கூடியிருந்தவர்களை கலைந்து செல்லுமாறு கூறியும் அதற்கு செவிமடுக்காமல், அவர்கள் தொடர்ந்து கற்களை வீசியதால் பணியில் இருந்த காவல் ஆளிநர்கள் மூன்று பேர் காயமுற்றனர். சம்பவம் குறித்து அறிந்தவுடன், அங்கு விரைந்த விழுப்புரம் காவல் கண்காணிப்பாளரின் வாகனத்தையும் கல் வீசி தாக்கியுள்ளனர். அந்தக் கூட்டத்தை கலைந்து செல்லும்படி பல முறை எச்சரித்தும், அவர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து கற்கள் வீசி தாக்கியதால், காவல் துறையினர் கண்ணீர் புகை குண்டுகள் வீசி அக்கூட்டத்தை கலைக்க முயன்றுள்ளனர். 

அதன் பின்னரும் அவர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டதால், மேலும் கலவரம் பரவாமல் தடுக்கவும், உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் ஏற்படுவதைத் தடுக்கவும், காவல் துறையினர் உரிய எச்சரிக்கைக்கு பின்பு லேசான பலப்பிரயோகம் செய்த போதும், கலைந்து செல்லாமல் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியினர், வன்முறையில் ஈடுபட்டனர். வேறு வழியின்றி வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு: இதனால் வேறு வழியின்றி, காவல் துறையினர் உரிய எச்சரிக்கைக்கு பின்னர், துப்பாக்கியால் வானத்தை நோக்கி மூன்று ரவுண்டுகள் சுட்டும், ரப்பர் குண்டுகளைப் பயன்படுத்தியும் கூட்டத்தைக் கலைத்தனர்.

 மேலும், விழாவிற்கு சென்றவர்கள் அனுமந்தை சுங்கச் சாவடியில் தகராறு செய்து, கண்ணாடிகள், கேமரா, ஏணி, அறிவிப்பு விளக்குகள், பூந்தொட்டிகள், கம்பி வேலி ஆகியவற்றை சேதப்படுத்தியுள்ளனர். சுங்கச்சாவடி ஊழியர்களும் தாக்கப்பட்டனர். விழுப்புரம் மாவட்டம், கூனிமேடு பகுதியில் ஒரு கடையையும் சேதப்படுத்தியுள்ளனர். மேலும், மாமல்லபுரத்தில் காவல் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை வாகனம் ஒன்றையும் சேதப்படுத்தினர். 

விழாவிற்கு சென்றவர்கள் பல்வேறு இடங்களில் 6 அரசுப் பேருந்துகள், 3 காவல் வாகனங்கள் உள்ளிட்ட 11 வாகனங்களை கல் வீசி சேதப்படுத்தினர். இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தவிர, இவ்விழாவில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு இடங்களில் கல் வீச்சில் ஈடுபட்டதால், பல வாகனங்கள் சேதம் அடைந்தன. ஆனால் இது குறித்து வாகன உரிமையாளர்கள் புகார்கள் எதையும் இதுவரை அளிக்கவில்லை.

நன்றி : தமிழ் இணையப் பத்திரிக்கை

-'பரிவை' சே.குமார்

0 எண்ணங்கள்:

கருத்துரையிடுக

நட்பின் வருகைக்கு நன்றி..!

உங்கள் கருத்தே எழுத்தை மேம்படுத்தும்... மனதில் தோன்றுவதை மறக்காமல் சொல்லுங்கள்...