மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 27 ஏப்ரல், 2013

கலையாத கனவுகள் - 3


மனசின் முதல் தொடர்கதை

கலையாத கனவுகள் 1-ம் பாகம் படிக்க...  இங்கே சொடுக்கவும்...

கலையாத கனவுகள் 2-ம் பாகம் படிக்க...  இங்கே சொடுக்கவும்...

*******
மாடத்தில் ஏற்றிய மாடவிளக்கு எரிகிறது
மாடம் விட்டு மாடம் விட்டு மாடங்கள்
மாறும் விளக்குகள் மாறவில்லை
மாற்றமிலா சோதியில் ஏற்றிய தீபங்கள்.
-கவிஞர். தமிழ்காதலன்


3. ராக்கிங் ஆரம்பம்...
முன்கதைச் சுருக்கம்...

ஏழைக் குடும்பத்தில் பிறந்து  தந்தையில்லாமல் தாயின் அரவணைப்பில் வாழும் ராமகிருஷ்ணன் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் சேர்கிறான். முதல் நாள் கல்லூரிக்கு செல்லும் அவனை அவனது தாயார் அக்கம் பக்கம் பார்த்து அனுப்பி வைக்கிறாள். அவனும் நண்பர்களுடன் கல்லூரிக்கு சென்று ராக்கிங் பயத்துடன் வகுப்பறையில் அமர்கிறான்...

இனி...
       
முதல் நாள் கல்லூரி வாழ்க்கை வித்தியாசமாக இருந்தது. முதல் நாள் என்பதால் அறிமுகப் படலம்... அறிவுரை என சென்றது. துறைத்தலைவர் எம்.எஸ், பள்ளிப் படிப்பு வேற... கல்லூரிப் படிப்பு வேற... இந்த வயசுதான் உங்களை எல்லாப் பக்கமும் போகத்தூண்டுற வயசு... நீ நல்ல வழியில போனியன்னா நாளைக்கு நல்ல நிலைமையில இருக்கலாம்... இல்லே காலேசுனாலே சண்டியர்தனம் செய்யணுமின்னு அந்தப் பக்கமா போனியன்னா... மூணு வருசம் முடிஞ்சு வெளிய போறப்போ அரியரோட போயி அவஸ்தைதான் படணும்... உன்னோட வாழ்க்கையை தீர்மானிக்கிற தராசு இப்ப உன்னோட கையில இருக்கு... இதை நீ எப்படி பயன்படுத்திக்கிறியோ அப்படித்தான் வாழ்க்கை அமையும் அப்படின்னு பேசி ஒரு நீண்ட லெக்சரைக் கொடுத்தார்.

மாலை கல்லூரி முடிந்ததும் நண்பர்களுடன் கூடி பேசி மகிழ்ந்து வீட்டுக்குப் போனபோது அம்மா அவனிடம் காலேசு எப்படிப்பா இருக்கு... புடிச்சிருக்கா... முதல்ல காலழம்பிட்டு வந்து சாப்பிடுஎன வாஞ்சையாய் முகத்தைத் தடவினாள்.

-----------

புதுமுகங்களும் பழைய முகங்களுமாக கல்லூரி சாலையில் சென்ற காலை வேளை..
.
டேய் சரவணா... இன்னைக்கு சீனியர்ஸ் வருவாங்களேடா... ராக்கிங் பண்ணுவாங்கள்ல... எனக்குப் பயமா இருக்குடா...

என்னடா பயம் வேண்டிக்கெடக்கு... என்ன கேட்டாலும் பயப்படாம சொல்லு போதும்... அப்படிப் பேசினா அவங்க விட்டுடுவாங்களாம்... அக்கா சொன்னுச்சு... அவங்க டிபார்ட்மெண்ட் பசங்களை எனக்குத் தெரியும்... அவங்க வந்தா நாம தப்பிச்சிக்கலாம்... ஆனா ஒண்ணுடா... மதிக்காம மட்டும் நின்னமின்னா நம்மளை ஒரு வழி பண்ணிடுவாங்களாம்...

ரொம்ப ராக்கிங் பண்ணினா டிபார்ட்மெண்ட்ல வந்து சொல்லச் சொல்லி எங்க எம்.எஸ் சார் சொன்னாருடா...

டேய் லூசு... டிபார்ட்மெண்டுக்குப் போனா அப்புறம் அவ்வளவுதானாம். நம்மளை அதுக்கு அப்புறம் கரம்வச்சு அடிப்பாங்களாம்... சும்மா ரெண்டு நாள் மிரட்டிட்டு பின்னாடி பிரண்ட் ஆயிடுவாங்களாம்... அதுவுமில்லாம ராக்கிங் பண்ணுறவனெல்லாம் யாரா இருக்குமின்னு நெனக்கிறே.... அவனுக்க எல்லாம் படிக்காம சுத்துற கோஷ்டியா இருக்கும்... இல்லேன்னா சாதியை வச்சு பொழப்பு ஓட்டுறவங்களோட புள்ளையாவோ, தம்பியாவோ, இல்லை உறவுக்காரனாகவோ இருப்பானுக... அவங்க மேல எப்படி துறைத்தலைவர் நடவடிக்கை எடுக்க முடியும்? அதுவும் இங்க வைரவன்னு ஒருத்தன் இருக்கானாம்... தேர்ட் பிகாம் படிக்கிறான்னு பேர்தானாம்... வகுப்புக்கே போகமாட்டானாம்... மத்த கிளாஸ்லாம் போயி உக்காந்து இருப்பானாம்... எப்பவும் தண்ணிதானாம்... அவங்கிட்ட மாட்டுனா சும்மா விட மாட்டானாம்... மத்தவங்களெல்லாம் பிரச்சினையில்லையாம்... நீ சும்மா பயப்படாத... சமாளிப்போம்... நம்ம அறிவை பாரு எந்தப் பயமுமில்லாம வாறான்...

அவனுக்கென்ன அவங்க அப்பா இங்க வேல பாக்குறாரு... அதனால அவனை ராக்கிங் பண்ண மாட்டாங்க...

எல்லாரையும் பண்ணுவாங்க... இதெல்லாம் ஒரு ஜாலிக்குத்தான்டா...

முதல் பாடவேளை முடிந்ததும் அடுத்த பாடவேளை ஆரம்பிக்கும் முன்னர் பெண்கள் குரூப் ஒன்று  வகுப்பிற்குள் நுழைந்தது. எல்லாரும் அவர்களை பார்த்துக் கொண்டிருக்க,

பழனி... இவங்க யாருடா...

தேர்ட் இயரா இருப்பாங்க... ராக்கிங் பண்ண வந்திருப்பாங்க...

என்னடா சொல்றே..? பொண்ணுக கூட பண்ணுவாங்களா...?"

ம்... பேசாம இருடா... பேசுறதைப் பார்த்தா நம்மளைத்தான் கூப்பிடுவாங்க...

என்ன சீனியருக்கு மரியாதை கொடுக்கத் தெரியாதா... சொல்லித்தான் தெரியணுமா... ம்... எல்லாரும் எந்திரிங்க..வந்த கூட்டத்தின் தலைவி மாதிரி இருந்தவள் சத்தமாக பேச சர்வ நாடியும் அடங்கிப் போக எழுந்து நின்றனர் மௌனமாக...

ம்... நான் ராணி... நாந்தான் இங்க ராணி... புரியுதா... நான் கேக்கிறதுக்கு டக்கு டக்குன்னு பதில் வரலை... கொன்னேபுடுவேன்... ஏய் எந்திரிடி... என்ன சுடிதார் போட்டு வந்திருக்கே.... தாவணி போடனுமின்னு உனக்குத் தெரியாதா... நாளையில இருந்து தாவணியிலதான் வரணும்... உக்காரு... ம்.... பர்ஸ்ட் எதாவது பால்வடியிற முஞ்சியா பாருங்கடி...என்று தேட ஆரம்பித்தவள் ராம்கி மேல் கண்களை நிலைக்குத்தினாள்.

உம் பேர் என்னடா சின்னப்பயலே...?” என்று ராம்கியை கேட்டாள்.

ராம்... ரா... ராமகிருஷ்ணன்...

ராம்... உங்க தாத்தா... ரா... உங்கப்பா... நீ ராமகிருஷ்ணனா...
இல்ல எம் பேரு ராமகிருஷ்ணன்...

ம்... நல்ல பேரு... ஆமா இன்சியல் இல்லாம பொறந்தியா?”

மு.ராமகிருஷ்ணன்... எல்லாரும் ராம்கின்னு கூப்பிடுவாங்க...

இங்க பாருங்கடி... இவரு ராம்கியாம்... ஆமா நிரோஷா எங்க இருக்கா... இந்தக் கூட்டத்துல இருந்தா யாருன்னு காமி... நச்சின்னு செந்தூரப்பூவேக்கு ஒரு குத்து டான்ஸ் போடலாம்...

செந்தூரப் பூவேக்கு குத்து டான்ஸா...?’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு பேசாமல் நின்றான்.

என்ன ஒருத்தியும் இல்லையா...? சரி ராணி விட்டா அழுதுடுவான் போல... பாவம் விட்டுடு...என்று அவளது தோழி சொல்ல...

சரி... இதுக்குப் பதில் சொல்லிட்டு உக்காரலாம்... உனக்கு இங்க இருக்கவங்கள்ல யாரைப் புடிச்சிருக்குன்னு சொல்லு...?

“...”

என்னடா... பொண்ணுங்களே புடிக்காதா...? இப்ப சொல்லலை மவனே... ஜட்டியோட கிரவுண்ட்ல ஓட வேண்டியிருக்கும்...

சொன்னபடி செஞ்சுருவாங்களோஎன்று நினைத்தபடி மெதுவாக தலையைத் தூக்கி அவனுடன் படிக்கும் பெண்களை ஒரு பார்வை பார்த்தான்...

என்னடா லுக்கு விட்டுட்டு பேசாம இருக்கே... அழகிகளா தெரியலையோ?”

யாரையும் பிடிக்கலை...பட்டென்று சொன்னான்.

இங்க பாருங்கடி... இந்த ஆண் அழகனுக்கு இங்க இருக்க அழகிக யாரையும் பிடிக்கலையாம்... அப்ப என்னைய பிடிச்சிருக்கா...

“...”

சொல்லுடா... வாத்தியார் வரப்போறாரு...?”

ம்...

ஹே...என்று எல்லாப் பெண்ணுகளும் கூவ...

ஏய் சங்கி... கேட்டியா மச்சானுக்கு என்னையத்தான் புடிச்சிருக்காம்... இனி உன்னைய நான் மச்சான்னுதான் கூப்புடுவேன்... ஒகேயா.... உக்காரு... ஏய் நீ எந்திரிடி...அவர்களது அதட்டலும் உருட்டலும் அடுத்த ஆசிரியர் வரும் வரை தொடர்ந்தது.

--------------

மதியம் சாப்பிட்டு விட்டு வகுப்பிற்கு வரும் போது டேய் இங்க வாங்கடா...என்றான் மூண்றாம் ஆண்டு மாணவன் ஒருவன்.

ஒருவரோடு ஒருவர் உரசிக் கொண்டு ஒன்றும் பேசாமல் அவங்க கூப்பிட்ட இடத்துக்குப் போக...

என்னடா சீனியருக்கு முன்னால இன் பண்ணி வரக்கூடாதுன்னு தெரியாதோ இன் பண்ணுனதை எடுத்து விடுங்கடா...

மாப்ளே அந்த சின்னப்பய பொசுக்கு பொசுக்குன்னு முழிக்கிறான்... அவனை அங்கிட்டு ஓரங்கட்டிட்டு மத்தவங்களை இங்கிட்டு விடு... டேய்... பச்சை சட்டை உம் பேரு என்னடா...

அறிவு...

உனக்கு மட்டும்தான் அறிவு இருக்குன்னு பேரு வச்சாங்களோ...

இல்ல அறிவழகன்... எல்லாரும் அறிவும்பாங்க... எங்கப்பா இங்கதான் வேல பாக்குறாங்க...

இங்கயா... யாரு..?”

சூப்பிரண்டென்ட் நாகப்பன்...

அந்தாளு மவனா... எங்கள என்னபாடு படுத்துறான் உங்கப்பன்... மவனே நீ மாட்டுனேடா... சரி பாடத்தெரியுமா?”

தெரியாது...

சரி இப்ப தெரிஞ்சிக்க... ம்... பாடு... பாடுறான்னா...

ஆயிரம் நிலவே வா.... ஓர் ஆயிரம் நிலவே வா...

நிறுத்து... இப்ப என்ன பாடினே... ஆயிரம் நிலவே வான்னுதானே.... இருக்கது ஒரு நிலாதானே... அப்புறம் எப்படி ஆயிரம் நிலா வரும்... ம்... எங்கே ஒரு நிலா வர்ற வரைக்கும் பாடு...

எப்படி பாடணும்?”

இப்ப ஆயிரத்தைக் கூப்பிட்டே... அப்படியே இறங்குவரிசையில ஒண்ணு ஒன்னாக் கூப்பிட்டு ஒண்ணுக்கு வாஎன்று சீனியர் சொல்லும் போது அவனது நண்பர்கள் சிரிக்க...

என்னடா சிரிக்கிறீங்க?”

இல்ல மாப்ளே... நீ ஆயிரத்துல இருந்து ஒண்ணுக்கு வரச்சொன்னே... இப்பவே ஒண்ணுக்கு இருக்கப் போற மாதிரித்தா இருக்கான்... ரொம்ப மிரட்டினே பேண்ட் நாஸ்தியாயிடும்...

சரி அப்படி ஓரமா போயி நின்னு நிலாவை கூப்பிடு... டேய் உம் பேர் என்னடா...

பழனி...

அடிவாரமா... இல்ல மலை உச்சியா...

“....”

கோழி பிடிக்கத் தெரியுமா?”

ம்...

அப்ப பிடி...

கோ...கோழி...?”

அதை சுட்டுத் தின்னாச்சு... மயிராண்டி கோழி இருந்தாத்தான் பிடிப்பிங்களோ... சும்மா பிடிச்சுக் காமிடா...என்று அவன் மண்டையில் தட்டினான் நெடுமரமாட்டம் இருந்த ஒருவன்...

இன்னும் அடிப்பாங்களோ என்று நினைத்தபடி பேக்...பேக்...என்று கூப்பிட்டபடி ஒடினான்.

ராம்கி ஓரமாக நின்று நடப்பதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க...

டேய் நீ பர்ஸ்ட் இயரா...?” மரியக்கண்ணுவைப் பார்த்து ஒருவன் கேட்டான்.

ம்...

பேரென்ன?”

மரியக்கண்ணு

உனக்கு யுனிவர்சிட்டி சல்யூட் தெரியுமா?”

தெரியாது...

டேய் மாப்ளே... தம்பிக்கு யுனிவர்சிட்டி சல்யூட் சொல்லிக் கொடு..

இங்க வா... எப்படி அடிக்கணும் தெரியுமா... இப்படி செஞ்சு... இப்படி அடிக்கணும்... புரியுதா?”

அவன் செய்து காண்பித்த யுனிவர்சிட்டி சல்யூட் ஆபாசமாக இருக்க, பேசாமல் தலையைக் குனிந்து கொண்டான்.

புரியுதா... போ... போயி அந்தா வர்றா பாரு பச்சைத் தாவணி அவளுக்கு யுனிவர்சிட்டி சல்யூட் அடிச்சிட்டு வா... போ... போடா

மரியக்கண்ணு படபடக்கும் இதயத்துடன் மெதுவாக அவளை நோக்கி நடக்க ஆரம்பித்தான். என்ன நடக்கப் போகுதோ என்ற படபடப்பில் ராம்கியும் நண்பர்களும் அவன் போகும் பாதையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

(தொடரும்...)
-'பரிவை' சே.குமார்.
(உரிமை : மனசு வலைத்தளம்... அனுமதியின்றி காப்பி செய்யாதீர்கள் நண்பர்களே..) 

2 எண்ணங்கள்:

பால கணேஷ் சொன்னது…

ராகிங்கை இவ்வளவு இயல்பான வசனங்களோட நேர்ல பாக்கற மாதிரி எழுதியிருக்கீங்களே... காலேஜ் டைம்ல மாட்டின அனுபவம் உண்டோ? கதை கொஞ்சம் வேகமெடுக்கறாப்பல தெரியுது. நன்று!

Unknown சொன்னது…

வணக்கம்,குமார்!///காலேஜ் ..................ராக்கிங்(பகிடி வதை)இப்பல்லாம் கொஞ்சம் வரம்பு மீறிய மாதிரி .....................////இது பரவால்ல!