தமிழ்ச் சிற்றிலக்கிய வகையில் கலம்பகமும் ஒன்று. பல்வகைப் பாக்களால் ஆன கலவை என்பதால் கலம்பகம் எனப்பட்டது. இதில் ஓர் உறுப்பாக அமைவதே "களி'. கள்ளை விரும்பிக் குடிப்பவர் அதனை சிறப்பித்துக் கூறுவதாகவோ அல்லது குடி மயக்கத்தில் தாறுமாறாகப் பேசுவதாகவோ செய்யுளைப் பாடுவது "களி' என்னும் உறுப்புக்கு இலக்கணமாம். பின்வரும் இந்தப் பாடலில் மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், இது பொருந்தாதது போல் தோன்றும், ஆயினும் இதன் உறுப்பு சிலேடை வகையைச் சார்ந்ததால், சரியான பொருளையே காட்டுவதாம்.
"புண்ணருந்தச் சம்மதியோம் போதப் புதுமலர்த்தீம்
கண்ணசையுள் ளோம்பொய் கழிறிடோம் - விண்ணவரில்
சூரனிடம் வீரையில்மால் தொட்டவளை விட்டதன்றோ
பாரதம்நன் றாயுணர்ந்து பார்''
இது, நவநீதகிருட்டிணன் கலம்பகத்தில் வரும் 37-ஆவது பாடல். இதன் கருத்தாவது: "பிற உடல்களின் புண் ஆகிய புலாலை உண்ண ஒப்பமாட்டோம். அன்றலர்ந்த பூக்களில் உள்ள இனிய தேனின் மேல் விருப்பம் அதிகம் இல்லை. நாங்கள் இல்லாத ஒன்றை, அதாவது, பொய்யைக் கூறமாட்டோம். தேவருள் ஒருவனாகிய சூரியனின் மீது, வீரையில் எழுந்தருளும் நவநீதகிருட்டிணப் பெருமாள் தான் ஏந்தியுள்ள சக்ராயுதத்தை செலுத்திய வரலாறு பாரதம் அல்லவா?
அதாவது, ஜயத்ரதனை அர்ஜுனன் கொல்லும் முகமாக, சக்ராயுதப் படையை வீசி, சூரியனை மறைத்து இரவு எனக் காட்டும் வண்ணம் நவநீதகிருட்டிணனாகிய கண்ணன் ஆடிய நாடகம் இதுவெனக் காட்டுகிறார் புலவர். எனவே, சொல்லையும் பொருளையும் நன்றாகச் சிந்தித்துப் பார்ப்பாயாக - என்று கூறுவதாய் இப் பா உள்ளது. இங்கே சூரன் என்றது, சூரியனை. பொதுவாக சூரன் எனில் சூரபதுமனைக் காட்டுதல் வழக்கம். சுரராகிய தேவருள் சிறப்பிடம் பெற்றவன் ஆதலின் விண்ணவரில் சூரன் என்றார். சூரனிடம் தொட்ட வளை என்றதால், சூரியன் மீது செலுத்தப்படாமல், அவனை மறைக்குமாறு இடையே செலுத்தப்பட்டது என்பது புலனாகிறது.
நவநீதகிருட்டிணன் கலம்பகத்தின் இந்தப் பாடல், தனிப்பாடல் திரட்டில் உள்ள ஒட்டக்கூத்தரின் பாடலை நினைவூட்டும். அரசனின் அவைக்கு வந்த ஒட்டக்கூத்தரை நோக்கி, சோழன் "களி என்னும் கலம்பக உறுப்பினால் ஒரு பாட்டுப் பாடுக' என்றபோது, இதைப் பாடினாராம்.
"புள்ளிருக்குந் தார்மார்பன் பூம்புகார் வாழ்களியேம்
சுள்ளிருக்குங் கள்ளையுண்டு சோர்விலேம் - உள்ளபடி
சொல்லவா வாலிது ரோபதையை மூக்கரிந்த
தல்லவா மாபா ரதம்''
"வண்டுகள் தங்கும் மாலையை அணிந்த மார்பினனான சோழனது பூம்புகார்ப் பட்டனத்தில் குடியிருக்கும் மகிழ்ச்சியை உடையவர்கள் நாங்கள். மகிழ்ச்சியாகிய கள்ளை உண்பதே அன்றி, மயக்கம் தரும் கள்ளைக் குடித்து நாங்கள் மறதி அடைவதில்லை. உண்மையான விவரத்தைக் கூறலாமா என்றால், மகாபாரதக் கதை யாதெனின், வாலுடைய பாம்பினை வரைந்த கொடியினைக் கொண்ட துரியோதனன், துரோபதையை அவமானம் செய்யக் கருதிய வரலாறு அல்லவா?' என்கிறார் ஒட்டக்கூத்தர். வாலி என்றதும் இராமாயணக் கதாபாத்திரம் மனதில் தோன்றினும், இங்கே துரியோதனனைக் குறித்தது. மூக்கரிதல் என்பது பொதுவான மானக்கேட்டை உணர்த்திற்று. "சுள்' என்றது கடுப்பை உணர்த்தும். முதிர்ந்த கள்ளுக்கு "கடுப்பு' உண்டு என்பதால்! இவ்விரண்டு பாடலுள் முதலில் கூறிய பாடலைப் பாடியவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்.
திருநெல்வேலி மாவட்டத்தின் தென்காசிக்கு அருகிலுள்ளது வீரகேரளம்புதுர். ஊத்துமலை ஜமீன் பகுதி. இவர்களின் குலதெய்வம்தான் அங்கே கோயிலில் வீற்றிருக்கும் நவநீதகிருட்டிணப் பெருமாள். ஊத்துமலை ஜமீனினில் மிகப் புகழ் பெற்றவராக விளங்கியவர் இருதயாலய மருதப்ப தேவர். இவர் காலத்தில்தான் காவடிச் சிந்து பாடிய சென்னிக்குளம் அண்ணாமலை ரெட்டியாரும், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளும் மிக்க புகழ்பெற்று விளங்கினர். இருதயாலய மருதப்பர் காரணத்தால் வண்ணச்சரபம் எழுதியதே இந்த நவநீதகிருட்டிணன் கலம்பகம். இவர் ஆறு கலம்பக நூல்களை இயற்றியுள்ளார். அதிக அளவில் கலம்பகம் பாடியவர் இவர் ஒருவரே! அவற்றில் கண்ணன் என்னும் கருந்தெய்வத்தின் மீதுற்ற காதலால் வண்ணச்சரபம் இயற்றிய நூலே இக் கலம்பகம்!
எழுதியவர் : பொதிகை வளவன்
நன்றி : தினமணி (தமிழ்மணி)
-'பரிவை' சே.குமார்
1 எண்ணங்கள்:
வணக்கம்,குமார்!நன்று.அப்பப்போ தமிழின் பெருமையும் கூறி மகிழச் செய்கிறீர்கள்,நன்றி!
கருத்துரையிடுக