மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 24 ஏப்ரல், 2013

தமிழ் சினிமா பாதிப்பால் பெற்றோரைக் கொலை செய்த மாணவர்கள்

குருவி மற்றும் அயன் போன்ற சினிமா படங்களைப் பார்த்து இரட்டை கொலைக்கான ஐடியாக்களை அறிந்து கொண்டதாக கைது செய்யப்பட்ட இலங்கை செங்கலடி மத்திய மகாவித்தியாலய மாணவர்கள் தெரிவித்துள்ளனர். கொலையில் அவர்களது மகள் தக்ஸிகாவுக்கும் பங்குள்ளதாக கூறியுள்ளனர். 

சென்ற வாரம், 47 வயதான சிவகுரு ரகு மற்றும் 41 வயதுடைய அவரது மனைவி சுந்தரமூர்த்தி விப்ரா கூரிய ஆயுதங்களினால் படுக்கையறையில் வெட்டியும் குத்தியும் மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்கள். 

கொல்லப்பட்டவர்களது இளைய மகள் ரகு தக்ஸிகா அவரது காதலன் சிவநேசராசா அஜந் அவரது நண்பர்களான புவனேந்திரன் சுமன் மற்றும் குமாரசிங்கம் நிலக்சன் ஆகியோரை சந்தேக நபர்களாக கைது செய்துள்ளது போலீஸ். 

மட்டக்களப்பு - செங்கலடி நகரில் நடந்த இந்த இரட்டைக் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளிகள் மேலும் பல தகவல்களை தெரிவித்துள்ளனர். குருவி மற்றும் அயன் போன்ற சினிமா படங்களைப் பார்த்து இந்த கொலைக்கான முன்மாதிரியை அறிந்துகொண்டதாக கைது செய்யப்பட்ட செங்கலடி மத்திய மகாவித்தியாலய மாணவர்கள் தெரிவித்துள்ளனர். 


ரகு தம்பதியினரை மர்மமான முறையில் கொலை செய்வதற்கு ஏற்கனவே இவர்கள் திட்டமிட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது. கடந்த மார்ச் 27 அன்று தூக்க மாத்திரையை உட்கொள்ளச்செய்துவிட்டு தலையணையால் அமுக்கி கொலை செய்த பின்னர் தகப்பனை கிணற்றுக்குள் போட்டு கொலை செய்வதாக திட்டம் ஒன்றை அவர்களது மகள் தக்ஸிகா மேற்கொண்டிருந்தாராம். 

அப்போது ரகு தனது மனைவியைக் கொன்றுவிட்டு தான் தற்கொலை செய்துவிட்டார் என தகவல் வெளியாகும் இதன் மூலம் தாம் தப்பிக்கொள்ளலாம். தமது காதலும் சிரமமின்றி நிறைவேறும் என இவர்கள் எண்ணியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் அத்திட்டம் வெற்றியளிக்காததால் அவர்களை வெட்டி கொலை செய்வதென காதலர்கள் இருவரும் முடிவு செய்ததாக விசாரணைகளிலிருந்து தெரியவந்திருக்கிறது. 

கொலை செய்வதற்கான நுட்பத்தை அறிந்து கொள்வதற்காக இணையத்தளங்களை பயன்படுத்தியுள்ளதாக கைதுசெய்யப்பட்டுள்ள மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இக்கொலைச் சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணைகள் மூலம் பல்வேறு திகிலூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மகளின் காதல் விவகாரத்தை விரும்பாத தந்தை ரகு பலமுறை எச்சரிக்கை செய்ததுடன் காதலனை தாக்கியுள்ளார். 

இதையடுத்து காதலுக்கு பெற்றோர் இடையூறாகவேயிருப்பார்கள் என்று முடிவு செய்த இவர்கள் வஞ்சந்தீர்க்கும் எண்ணத்துடன் செயற்பட்டு வந்துள்ளனர். இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பாக மக்கள் மத்தில் பல்வேறு ஊகங்கள் உலாவின. முன்னாள் ஆயுதக்குழுக்களுடன் தொடர்புடையவர்கள் யாராவது சம்மந்தப்பட்டிருக்கலாம்? குடும்பத்தில் யாராவது பின்னணியிலிருந்திருக்கலாம்? வர்த்தகப் போட்டியாக இருக்கலாம் என்று சந்தேகம் நிலவின. 

இருந்தபோதிலும் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபரான இளைய மகள் தக்ஸினாவின் நடவடிக்கைகள் முகபாவங்களைக் கண்டு மரணச் சடங்கிற்கு வந்த பலருக்கும் அவளின் மீது சந்தேகம் ஏற்பட்டது. 

இது தொடர்பான மரண விசாரணை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி ரி.கருணாகரன் முன்னிலையில் நடைபெற்றது. மரண விசாரணை சாட்சியங்கள் மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கையின் படி இரண்டு மரணங்களும் கொலை என தீர்ப்பளிக்கப்பட்டது. 

இவர்களிடம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தக்ஸினா ஒன்றுக்கு மேற்பட்ட சிம்களை பயன்படுத்தி வெவ்வேறு தொடர்புகளை ஏற்படுத்தியிருந்ததாக தெரிகிறது.. 


தக்ஸினா சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட பின்பு போலீசாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில்.. 

நான் அஜந் என்பவரை காதலித்தது உண்மை. முகமூடி அணிந்து அவர்களை மிரட்டுவதற்காகவே அவர்களை வர சொன்னனே தவிர கொலை செய்யும் நோக்கத்திற்காக அல்ல. இவர்களது நடமாட்டத்தை கண்டு நாய் குரைத்ததும் வெளியே வந்து நாயை அடக்கி விட்டு மீண்டும் வீட்டிற்குள் வந்து பார்த்த போது அம்மா இறந்து கிடந்தார் அப்பாவை அஜந் அடித்துக் கொண்டிருந்தார் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் வசிக்கும் பாட்டனார் வந்த வேளை மூவரையும் அனுப்பிவிட்டு நான் பயத்தினால் எனது அறையை பூட்டிவிட்டு தூங்கிவிட்டேன்' , என தெரிவித்துள்ளார். 

கொலையாளிகள் வெளியேறிய பின்னர் கையுறைகள் முகமூடிகள் கொலை சம்பவத்தின் போது இவர்கள் அணிந்திருந்த ஆடைகள் அம்மன்புரம் பிரம்பு புதருக்குள் புதைக்கப்பட்டிருந்தன.

-நன்றி : தமிழ் இணையப் பத்திரிக்கை
-'பரிவை' சே.குமார்

3 கருத்துகள்:

  1. இன்றைய படங்கள்-மனதை எந்தளவு ஆக்கிரமித்து கெடுத்துள்ளன...

    பதிலளிநீக்கு
  2. சினிமாவை கோடிக்கணக்கானவர்கள் பார்கிறார்கள் எல்லோரும் கொலை செய்கிறரர்களா.

    பதிலளிநீக்கு
  3. உலகம் உருப்படுராப்ல தெரியலையே நண்பா...

    பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

உங்கள் கருத்தே எழுத்தை மேம்படுத்தும்... மனதில் தோன்றுவதை மறக்காமல் சொல்லுங்கள்...