மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 20 ஏப்ரல், 2013

தொடர்கதை : கலையாத கனவுகள் - 2முண்டி அடிக்கும் நினைவுகள் 
முந்தி விரிக்கிறது...
முன்னிரவு பட்டினியில் பசி
பந்தி விரிக்கிறது...

- கவிஞர். தமிழ்க்காதலன்

**********
2.அம்மாவின் ஆசை
முன்கதை:

ஏழைக் குடும்பத்தில் பிறந்து  தந்தையில்லாமல் தாயின் அரவணைப்பில் வாழும் ராமகிருஷ்ணன் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் சேர்வதற்காக விண்ணப்பித்து விட்டு வீட்டில் இருக்கிறான்.

இனி...

ன்ன நாகம்மா... எப்படியிருக்கே... இந்தா உம்மவனுக்கு லெட்டர் வந்திருக்கு...”

“எங்க இருந்து வந்திருக்கு சாமி...”

“காலேசுல இருந்து வந்திருக்கு....”

“காலேசுல இருந்தா... என்னமோ... ஏதோ தெரியலையே... இந்தப் பயலயும் காணாமே... சாமி என்னன்னு கொஞ்சம் பாத்து சொல்லிட்டுப் போங்களேன்...”

லெட்டரைப் பிரித்துப் பார்த்துவிட்டு உம்மவனுக்கு காலேசுல சீட்டுக் கிடைச்சிருக்கு.... வர்ற இருபத்தி ஏழாந்தேதி காலையில பணத்தோட வரச்சொல்லியிருக்காங்க...”

“எம்புட்டுப் பணஞ்சாமி?”

“என்ன யானையிலயா கேக்கப் போறாங்க.... சும்மா எழனூத்தம்பது ரூபாதான் கொண்டாரச் சொல்லியிருக்காங்க...”

“கவருமெண்டு உத்தியோகம் பாக்குற ஒங்களுக்கு இது சும்மா தெரியலாம்... எங்கள மாதிரி அன்னாடங்காச்சிகளுக்கு இது அதிகந்தானே சாமி...”

அவள் சொல்வது அவருக்கு உண்மையாகப்பட ஆமோதிப்பது போல் தலையை ஆட்டினார்.

“சரி... எங்க உன்னோட நாத்தனார்..?”

“ஏஞ்சாமி... பணம் கிணம் வந்திருக்கா...”

“பணமெல்லாம் வரல... அதோட வீட்டுக்காரர் லெட்டர் போட்டிருக்கிறார்.”

“எங்கிட்ட கொடுங்க சாமி... நாங்கொடுத்துடுறேன்...”

“சரி... இந்தா... பயல நல்லாப் படிக்க வையி... அவந்தான் இந்தக் குடும்பத்தை தூக்கி நிறுத்தப் போறவன்...”

“சரி சாமி... இருங்க... மோரு கலந்து தாறேன்... வெயிலுக்கு நல்லாருக்கும்...” என்றபடி உள்ளே சென்று குளிர்ந்த மண் பானைத் தண்ணியில் மோர் கலந்து வந்து கொடுத்தாள்.

----

க்கோவ்.... ராசாத்தி அக்கோவ்... உம்மருமவனுக்கு காலேசுல வந்து சேரச் சொல்லி லட்டர் வந்திருக்கு...”

“ம்... மாப்பிள்ளை பெரிய படிப்பு படிக்கப் போறானாக்கும்...”

“ஆமா... அடியே சுதா.... எம்மவனுக்கு காலேசுல சேரச் சொல்லி லட்டர் வந்திருக்கு... சின்னக்கண்ணு மாமோவ் உங்க பேராண்டிக்கு காலேசுல இடங்கெடச்சிருக்கு... ராசு மச்சான் உங்க மயன் காலேசுக்குப் போகப்போறான்..”

வாசலில் உக்காந்து கொண்டு வருவோர் போவோரிடமெல்லாம் தனது சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டாள் அந்த ஏழைத்தாய்.

“அம்மோவ்... அம்மா... எதுக்கும்மா கூவுறே... அவனுக்கு காலேசுல வந்து சேரச்சொல்லித்தானே லெட்டர் வந்திருக்கு... என்னமோ கலெக்டர் உத்தியோகம் கிடைச்ச மாதிரி எதுக்கு இப்புடி கத்தி ஊரைக்கூட்டுறே... “ அம்மாவை அடக்கினாள் சீதா.

“ஒனக்கு அவன் பெரிய படிப்பு படிக்கப் போறான்னு வயித்தெரிச்சடி... எம்புள்ள நாளக்கி கலக்கிட்டரு ஆகத்தான் போறான்... நீயும் பாக்கத்தான் போறே...”

“ஆமா.... வயித்தெரிச்சல்ல சுருண்டு கெடக்கம்பாரு.... பொட்டப்புள்ள படிக்க வேண்டாமின்னு வீட்டு வேல பாக்கச் சொன்னது நீயி.... இல்லயின்னா நாங்களும் காலேசு போயிருப்போம்... ஆமா எங்க உன்னோட சீமந்த புத்திரன்... இன்னும் ஆளக் காணோம்... இருட்டுக்குள்ள பயந்துக்கிட்டு வேர்க்க விறுவிறுக்க சைக்கிளை ஓட்டிக்கிட்டு வருவான்... வந்ததும் ஆத்தா முந்தானையில மூச்சி தொடக்கிறதும்... எதுக்குச்சாமி இப்பிடி படபடக்க வாறேன்னு நெஞ்சத்தடவி விடுறதும்... இப்பவே ரொம்ப ஓவரா இருக்கு... இனி காலேசு போனா அம்புட்டுத்தான் தரையில காலு ஊன விடமாட்டே...”

“ஆமாண்டி... அதுக்கு என்ன இப்போ... அடுப்பு புகையிது பாரு... போயி ஊதிவிடு....”

சைக்கிள் மணி அடிக்கும் சத்தம் தூரத்தில் கேட்கும் போதே “எம்மவன் வந்துட்டான்... சாயந்தரம் பால ஊத்திட்டு வாங்கிக்கிட்டு வந்த அப்பத்தை எடுத்தா... புள்ள ஒண்ணுகூட திங்காம வந்திருக்கும்...”

“அம்மா.... வரட்டும் வந்தோடனே கொடுக்கலாம்.... தூக்கிக்கிட்டு ஓடி வழியில கொடுக்கப் போறியா... இல்ல நாந் தின்னுடுவேன்னு பயப்படுறியா...”

சைக்கிளை நிப்பாட்டிவிட்டு சீதா சொன்னது போல அம்மாவின் முந்தானையில் வியர்வையை துடைத்தான்.

“அண்ணன்கிட்ட பேசினியா? என்ன சொன்னான்?”

“பணம் அனுப்பி வைக்கிறேன்னு சொன்னுச்சு... எதுக்கும் சின்னம்மாகிட்ட பணம் வாங்கி வச்சிக்க சொன்னுச்சு... பணம் டயத்துக்குள்ள வரலைன்னா.... கட்ட வேணுமில்லன்னு சொன்னுச்சு...”

“ஆமா... ஆ... ஊன்னா அவகிட்ட வாங்க சொல்லிடுவான்... நா இங்க எல்லாத்தையும் போட்டது போட்டபடி போட்டுட்டு இதுக்காக உங்க சின்னத்தா வீட்டுக்குப் போகணுமாக்கும்... சரி நம்ம மாரிக்கண்ணு மாமாகிட்ட சொல்லி வச்சு வாங்கிக்கலாம்... இந்தா இந்த அப்பத்தைத் தின்னு...”

“எதுக்கும்மா மாரியய்யாக்கிட்ட கேட்டுக்கிட்டு... நா வேணா சின்னம்மாக்கிட்ட வாங்கிட்டு வாறேன்...”

“ஏண்டா... மாரிக்கண்ணு மாமா ராசியானவங்க... அவங்க பணம் உனக்கு கட்ட கெடைக்கணுமே...”

“அதுக்காக அவருகிட்ட கேக்கப் போயி கட்டப் பணமில்லன்னு கேட்டா என்ன நெனப்பாரு...”

“ஒண்ணு நெனக்க மாட்டாரு... மூத்தவன் அனுப்புன பணம் வந்துட்டா வாங்க வேண்டாம்... இல்லேன்னா வாங்கிட்டு பணம் வந்தோடனே கொடுத்துடலாம்...”

“ம்... சரிம்மா”

----

ம்பி முத நாலு காலேசுக்குப் போறே... நல்லா சாமிய விழுந்து கும்பிட்டுட்டு துணூறை அள்ளிப் பூசிக்க... அப்பா படத்தையும் கும்பிட்டுட்டு போ... போகும் போது  மாரியாத்தா கோயில்ல இந்த காசை உண்டியல்ல போட்டுட்டு ஆத்தா குங்குமத்தை நெத்தியில வச்சிக்கிட்டு நல்லா படிச்சு பெரியாளா வரணுமின்னு வேண்டிக்க... அப்புறம் அங்கிட்டு இங்கிட்டு திரும்பிப்பாக்காம தலய குனிஞ்சிக்கிட்டே போயிடு... எவளாவது வெறும்கொடத்தோடவும்... வெத்து நெத்தியோடவும் வருவாளுங்க... இந்தா இந்த தண்ணியக் குடிச்சிட்டு அந்தத் திண்டுல கொஞ்சம் ஒக்காரு... அடியேய் சீதா அடுப்படிக்குள்ள நிக்காம வாசப்பக்கமா நின்னு யாரும் வாறாகளா பாரு... தம்பி சீதை ராசியானவ... அவளை பாத்துட்டு விறுவிறுன்னு கோயிலுக்குப் போயிரு...”

“டேய் யாரும் வரல... வேகமா வாடா....” சீதா மெதுவாகச் சொன்னாள்.

“சரிம்மா வர்றேன்...”

பள்ளி மாணவனாக புத்தகப் பை தூக்கிக் கொண்டு போன ராம்கி, புதிய உடையில் கல்லூரி மாணவனாக ஒரு நோட்டை மட்டும் எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

“வாடா... எங்கடா சரவணன்... இன்னும் வரக்காணோம்...” என்றபடி ராம்கியின் தோளில் கை வைத்தான் அறிவு.

“வருவான்டா... ஆமா பழனி மட்டும்தானே எங்கிளாஸ்....”

“ஆமாடா... அவன் இருக்கானுல்ல... அப்புறம் என்ன... டேய் ஒரு வாரத்துக்கு ராக்கிங் பண்ணுவாங்களாம்.... என்ன பண்ணப் போறாங்களோ தெரியலை.... இன்னைக்கு தப்பிச்சிருவோம்.... ஏன்னா இன்னைக்கு செகண்ட் இயர் தேர்டு இயருக்கெல்லாம் லீவு... நமக்கு மட்டும்தான் காலேஜ்...”

“ம்.. அதான்டா எனக்கும் பயமா இருக்கு... சரி எப்படியிருந்தாலும் மூணு வருசத்துக்கு இந்தக் காலேஜ்தானே...”

நண்பர்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பிக்க, ஒரு குழுவாக புதிய அத்தியாயம் நோக்கிப் பயணித்தார்கள்... கல்லூரியில் வகுப்பறை எது என்று அறிந்து அவரவர் வகுப்பறை நோக்கிச் செல்ல...

ராம்கியும் பழனியும் இந்தப் பிரிவு இனி வளர்ந்து கொண்டே போகுமென்பதை உணராமல் வகுப்பிற்குள் நுழைந்தார்கள்.

(தொடரும்)
-'பரிவை' சே.குமார்
copyright : Vayalaan Bligspot -  Don't Copy

6 எண்ணங்கள்:

Kayathri சொன்னது…

கதாசிரியரின் தொடர்கதை முயற்சிக்கு வாழ்த்துக்கள்..கதை நல்லா இருக்கு தம்பி..யதார்த்தமா..கிராமத்து நடைன்னா தம்பிக்கு கேட்கனுமா.. பதிவுகள் பல வழங்க வாழ்த்துக்கள்..

Yaathoramani.blogspot.com சொன்னது…

கதைக் களமும் சொல்லிச் செல்லும் விதமும்
அதிக எதிர்பார்ப்பைத் தூண்டிப்போகிறது
முடித்தவிதம் அருமை
தொடர வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

வணக்கம்,குமார்!அருமை!!ஆரம்பித்ததே என்னமோ போல் இருக்கிறது.அதாவது,ரசனையைச் சொன்னேன்.தொடரட்டும்,தொடர்வோம்!!!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

தொடருங்கள் நாங்களும் தொடர்கிறோம் உங்களை...!

பால கணேஷ் சொன்னது…

கல்லூரிக்குச் செல்லும் வரை இயல்பான நடையில் சொல்லியிருக்கிறீர்கள். ராகிங்கிலிருந்து தப்பித்தார்களா இல்லையா என்பதை அறிய ஆவலுடன் காத்திருப்பு. தொடருங்கள்... தொடர்கிறேன்!

r.v.saravanan சொன்னது…

ஆவலுடன் காத்திருக்கிறேன் அடுத்த பதிவுக்கு தொடருங்கள் குமார்