மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 29 மார்ச், 2017

11. என்னைப் பற்றி நான் - ஆர்.வி.சரவணன்

ந்த வாரம் 'என்னைப் பற்றி நான்' என்று தன்னைப் பற்றிச் சொல்லியிருப்பவர் குடந்தையூர் என்னும் தளத்திலும் பத்திரிக்கைகளிலும் எழுதும் ஆர்.வி.சரவணன் அவர்கள்.... ஆர்.வி.சரவணன் என்று சொன்னால் தெரியுதோ தெரியலையோ... குடந்தை சரவணன் என்று சொன்னால் எல்லாருக்கும் தெரியும்.

'இளமை எழுதும் கவிதை நீ' என்னும் நாவலைத் திரைக்கதை வடிவில் வலையில் எழுதி அதைப் புத்தகமாகக் கொண்டு வந்தவர் அடுத்து 'திருமண ஒத்திகை' என்னும் தொடரை தனது தளத்தில் பாதிவரை எழுதி, பின் அதைப் புத்தகமாக்கும் முயற்சியில் இறங்க, அதற்கிடையே அந்தத் தொடர் பாக்யாவில் வரும் வாய்ப்பைப் பெற்றது. மேலும் குமுதத்தில் அடிக்கடி ஒரு பக்க கதைகள் எழுதி வருகிறார்.

தான் பார்த்து... ரசித்த, மற்றவர்களுடன் தன்னுடைய சுவராஸ்யமான உரையாடல்கள் என முகநூலில் ரசிக்கும்படி எழுதுவதாலும் பத்திரிக்கை எழுத்தாளராய் இருப்பதாலும் தற்போது வலையில் எழுதுவதைக் குறைத்து விட்டார். அவரை விடாது விரட்டி, அண்ணே எழுதிக் கொடுங்க என்று சொல்லி... நான் என்னத்தை எழுதப் போறேன் என்று சொன்னவர் ஒரு நாள் எழுதி அனுப்பி வைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

அடிக்கடி உரையாடும் ஒரு அன்பான அண்ணன்... ஆங்... சொல்ல மறந்துட்டேனே... 'சில நொடி சிநேகம்', 'அகம் புறம்' என்ற இரண்டு குறும்படங்களை இயக்கியிருக்கிறார். இதில் நம் வலைப் பதிவர்கள் அரசன், ஆவி, துளசிதரன் அண்ணா உள்ளிட்ட பலர் நடித்திருப்பார்கள். இயக்குநராகும் முயற்சியில் இருக்கிறார்... விரைவில் அவரது எண்ணம் நிறைவேறட்டும்.... 

இனி சரவணன் அண்ணன் அவர்கள் என்னைப் பற்றி நான் என என்ன சொல்கிறார் என்பதைப் பார்க்கலாம்....


ந்த பெயரில் ஒரு கட்டுரை மனசு தளத்திற்காக வேண்டும் என்று நண்பர் குமார் கேட்டதும் என்னை பற்றி நானே எப்படி சொல்றது என்று ....... இழுக்க ஆரம்பித்தேன்.அதுக்காக இன்னொருத்தரை விட்டா சொல்ல வைப்பாய்  என்று மனசாட்சி மீம்ஸ் கிரியேட் பண்ணி கிண்டலடிக்கவே, என்னை பற்றி நானே இங்கே.

நடிகர் தம்பி ராமையா ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில் இப்படி சொல்லியிருந்தார்.

“கடவுள் தனது காலை என் கழுத்தில் மிதித்து கஷ்டங்களிலிருந்து நான் வெளியேற முடியாத படி செய்திருந்தார். அவரே  கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி கொள்ள நினைத்து காலை எடுத்த நொடியொன்றில்  நான் அவரிடமிருந்து விடுபட்டு துள்ளி எழுந்து முன்னுக்கு வந்து விட்டேன் .”

இதை எதற்காக இங்கே சொல்கிறேன்தன்னை நிலை நிறுத்தி கொள்ள வாழ்க்கையில் போராடும்  எல்லா மனிதரும் இந்த நிலையை கடந்து தான் வர வேண்டும்கடவுள் ஆசுவாசப்படுத்தி கொள்வதற்காக காலை எடுத்து கொள்கிறாராபரிதாபப்பட்டு பொழச்சி போனு விட்டுடராரா  என்பது அவருக்கு மட்டுமே தெரியும். இப்படியான நிலையில் நானும் சிக்கியிருக்கிறேன். மீண்டிருக்கிறேன். மீண்டும் நானே சென்று கழுத்தை கொடுத்துமிருக்கிறேன். இப்படியான என் வாழ்க்கை போராட்டத்தில் ஒரு அத்தியாயத்தை மட்டும் இங்கே பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

1991 ஆம் வருடம்.வேலைக்கு சென்று கொண்டிருந்து விட்டு திடீரென்று வேலை இல்லாமல் வீட்டிலிருப்பதை விட கொடுமை வேறேதுனா இருக்கிறதா நினைக்கின்றீர்களா? ஒரு வாரம் சாப்பிடாமலிருந்து விட்டு சாப்பிட ஆரம்பிக்கையில் தட்டை பிடுங்கி வைத்து கொள்வதற்கு நிகரானது இது. எனக்கும் இக் கொடுமை நிகழ்ந்திருக்கிறது.

"என்ன சார் டிகிரி வரைக்கும் படிச்சுருக்கீங்க. இந்த வேலைக்கு வரேன்னு சொல்றீங்களே" அந்த கம்பெனியில் வேலை கேட்டு சென்றிருக்கையில் தான்  என்னிடம் அந்த கம்பெனியின் மேலாளரும், பெண் கேஷியரும் கேட்ட கேள்வி இது.

அவர்களுக்கு என்ன பதில் சொல்வது? யோசிக்க ஆரம்பித்தேன்மனசுக்குள் பிளாஷ் பேக் ஓட ஆரம்பித்தது. சூப்பர்வைசராக நல்ல பொறுப்பில் இருந்து விட்டு முதலாளியின் உறவினர்களின்  டார்ச்சர் காரணமாக தடாலடியாக அந்த வேலையை விட்டு விட்டு நான்வேறு வேலை தேட வேண்டியதாயிற்று.

தம்பி, தங்கை, நான் மூவருமே வேலைக்கு சென்றால் மட்டுமே  குடும்பம் கடன் ஏதுமின்றி பயணிக்கும். ஒருவர் வேலையிலிருந்து நின்று விட்டாலும் குடும்ப பட்ஜெட்டில் துண்டு விழுந்து விடும். இப்படியான சூழலில் பஸ் காசு  கூட  நான் தம்பி தங்கையிடம்  வாங்கி கொண்டு வெளியில் செல்லும் நிலையில் தான் இருந்தேன்.

எல்லா அப்பாவிடமிருந்து கிடைக்கும் அதே சொல் எனக்கும் என் அப்பாவிடமிருந்து கிடைத்தது. தண்டச்சோறு. தம்பி  தங்கை அம்மா எனக்காக  "இது வரைக்கும் உழைச்சு கொடுத்தான் இல்லியா . இப்ப ஒரு ரெண்டுமாசம் வேலையில்லாம இருக்கிறப்ப நாம தானே அவனை  பார்த்துக்கணும்" அப்பாவிடம் விவாதம் செய்ய ஆரம்பித்தார்கள். ஆனாலும் அப்பா எம் மகன்  நாசர் போல் தான் நடந்து கொண்டார். (ஒரு வகையில் அவர் அப்படி நடந்து கொண்டது சரியே. ஏனெனில் என் திறமை பற்றி நான் அறிந்து கொள்ள அவர் ஏற்படுத்தி கொடுத்த வாய்ப்பு இது).ஆகவே விடாப்பிடியாய் ஒரு நாள் காலை வீட்டிலிருந்து வெளியேறினேன்.

இன்று தேடி போகும் வேலை கிடைத்தால் மட்டுமே வீட்டுக்கு வருவது. இல்லை வராமலே இருந்து விடுவது என்ற முடிவுடன் கிளம்பியவனுக்கு நாளிதழில் ஸ்க்ரீன் பிரிண்ட்டிங்  கம்பெனியில் ஆபீஸ் பியூன் வேலைக்கு ஆள் தேவை என்ற விளம்பரம் கண்ணில் பட்டது

இந்த வேலையை பற்றி கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்தில் அந்த ஸ்க்ரீன் பிரிண்டிங்  கம்பெனிக்கு சென்றேன். முதலாளி விவரங்கள் கேட்டு விட்டு அப்ளிகேஷன் எழுதி தர சொல்லி அப்போதே வேலையில் சேர்ந்து கொள்ள சொல்லி விட்டார். சம்பளம் 400 ரூபாய். என் முந்தைய கம்பெனி வேலையை பற்றி  தெரிந்து கொண்ட மேனேஜரும் கேஷியரும்  கேட்ட கேள்வி தான் மேலே நான் குறிப்பிட்டது. அவர்களுக்கு நான் கொடுத்த பதில்.

"எனக்கு ஒண்ணாந்தேதி சம்பளம் வேண்டும். அதற்கு எந்த வேலையாக இருந்தால் என்ன ? நியாயமான வேலையானு மட்டும் பார்த்தால் போதும் " இப்படி சொல்லிய படி கையெழுத்திட்டு என் பணியை ஆரம்பித்தேன்.

அப்பாடா இன்னிக்கு நாம வீட்டுக்கு நிம்மதியா போயிடலாம் என்று பெருமூச்சு விட்ட போது, அவ்வளவு சீக்கிரம் நீ நிம்மதியா இருந்திட முடியுமா என்று கேட்டது காலம். அதுவும் அன்றைய தினம் சாப்பாட்டு நேரத்திலேயே என் நிம்மதி தொலைந்து போனது.வேலைக்கு சேர்ந்த மூன்று மணி நேரத்திலேயே பழக்கமாகி விட்ட அந்த கம்பெனி ஸ்டாப் ஒருவர் இப்படி சொன்னார்.

"இங்க ஒண்ணாம் தேதிலாம் சம்பளம் கிடையாது. கலெக்சன் வரதை பொறுத்து தான் சம்பளம் தருவாங்க. அநேகமா சீனியர் நாங்க எல்லாரும் சம்பளம் வாங்கிய பின்னாடி, நீ சம்பளம் வாங்கறதுக்கு 20 தேதி ஆகிடும்னு நினைக்கிறேன்" இப்படி  அவர்  சொன்ன போது இது என்னடா புது சோதனை என்று தான் தோன்றியதுகொடுமை கொடுமைனு கோவிலுக்கு போனா அங்க ஒரு கொடுமை ஆடிட்டு இருந்துச்சாம்னு சொல்வார்கள். அது போல் தான் இருந்தது. மேனேஜர் மற்றும் கேஷியரும் அதையே உறுதிப்படுத்தினார்கள். கூடவே "நீ வாங்கிக்கிட்டதுக்குப்புறம் தான் நாங்கலாம்  வாங்கிப்போம். கவலைப்படாதே" என்றார்கள்.

அப்பா இதை ஒப்பு கொள்வார் என்று எனக்கு தோன்றவில்லை. ஆகவே ஒரு ஐடியா செய்தேன். அதை ஆரம்ப நாளிலே சொல்ல முடியாது. நம்மை இங்கே நிரூபித்த பின் தான் நம் பேச்சுக்கு மதிப்பிற்கும் என்பதால் அமைதி காத்தேன். வீட்டில் வேலை கிடைத்து விட்டதை சொல்லி அம்மா தம்பி தங்கையை உற்சாகப்படுத்தி விட்டாலும் சம்பள பிரச்னையை சொல்லாமல் உள்ளூர  பயத்துடன் வேலைக்கு செல்ல ஆரம்பித்தேன்.

எனக்கான வேலைகள் காலை வந்தவுடன் ஷட்டர் திறந்து ஆபீஸ் கூட்டி  டேபிள் துடைத்து வைத்து டீ காபி வாங்கி வந்து கொடுத்து அவர்கள் அனுப்பும் இடங்களுக்கு போய் வர வேண்டும். எனக்கான இடம் அலுவலக அறைக்கு வெளியே இருக்கும் ஒரு சேர் . (சாலையை ஒட்டியுள்ள அலுவலக வாசல் அது). முதலாளி சொன்னார். "சரவணன் அங்க தான் உன் சேர். அங்க தான்  உட்காரணும் . பெல் அடிச்சு கூப்பிட்டா உடனே வரணும்." என்றார். சூப்பர்வைசராக இருந்த போது வாட்ச்மன்க்கு இந்த வார்தைகளை நான் சொன்னது என் நினைவுக்குள் வந்து சென்றது. சரி என்று மௌனமாய் தலையாட்டினேன்.

ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. கஷ்டம் என்றால் உள்ளே வேலை செய்யும் ஆட்கள் கிடைச்சாண்டா ஒரு அடிமை என்பது போல்  கொஞ்சம் வேலை வாங்கினார்கள். கூடவே கிண்டல்கள் அதட்டல்கள் வேறுஅனைத்தையும் பொறுத்து கொண்டு முதலாளி, மானேஜர், கேஷியர் மனம் கோணாதவாறு  நடந்து கொண்டேன். அந்த மாதம் முடிகையில் முதலாளியிடம் சென்று என் கஷ்டத்தை சொல்லி, சம்பளத்தில் நான்கில் ஒரு பங்கை முதல் வாரத்தில் கொடுத்து விடுங்கள்மீதத்தை நீங்கள் கொடுக்கும் போது வாங்கி கொள்கிறேன் என்று சொன்னேன். அவரும் சரி என்று சொல்லி விட்டார்மேனேஜர், கேஷியர் கூட இதற்கு மறுப்பேதும் சொல்லவில்லைமாதத்தின் முதல் சனிக்கிழமை வந்தவுடன் எனக்கான ரூபாய் எடுத்து வைத்திருந்தார்கள்.  

முதல் மாதம் எல்லாருக்கும் முன்பாக நான்  சம்பள அட்வான்ஸ் வாங்கி விட்டேன். கேஷியர், "சரவணன் 15 பேர் வேலை பார்க்கிற கம்பெனில முதல் சம்பளத்தை எல்லாருக்கும் முன்னவே வாங்கிட்டீங்க அதிர்ஷ்டக்காரர் " என்றார் சிரித்த படி . நான் சொன்னேன். "எல்லாரையும் விட்டுட்டு வாங்கறது எனக்கு கஷ்டமா தான் இருக்கு. இது பாவம் தான். இருந்தும் என் நிலைமை அப்படி" என்றேன். இருவரும் என் கஷடத்தை உணர்ந்து  ஒத்துக் கொண்டு விட்டாலும்  மற்றவர்கள் காதில் புகை. "பாருய்யா நேத்து வந்தவன் சம்பள அட்வான்ஸ் வாங்கறான். உன்னாலே முடியுதா. அதெல்லாம் காக்காய் பிடிக்கிறவங்களுக்கு தான் வரும் என்று என் காது பட சொல்ல ஆரம்பித்தார்கள். எனக்கு மனசு வலிக்க ஆரம்பித்தது. அவர்களிடம் விளக்கம் சொல்ல போகையில் மானேஜர் கேஷியர் கண்டுக்காதீங்க என்று தடுத்து விட்டார்கள்.

இருந்தும் அவர்கள் அனைவருக்கும் முன்னே நான் அட்வான்ஸ் பெறுவது எனக்கும்  உறுத்தலாக இருந்தது. அதற்கு ஏதேனும் பரிகாரம் செய்ய நினைத்தேன்.

பழைய கம்பெனில பரபரப்பா வேலை பார்த்திட்டு இங்க சும்மா உட்கார்ந்திருப்பது எனக்கே போரடித்தது. ஆகவே நானே சென்று மானேஜர் மற்றும் கேசியரிடம் வலுக்கட்டாயமாக அவர்களது வேலைகளை எல்லாம் கேட்டு வாங்கி செய்ய ஆரம்பித்தேன். அவர்களுக்கு எனது வேலைகள் திருப்தியளித்தது ஒரு புறம் என்றால் அவர்கள் வேலை பளுவும் இதனால் குறைந்தது. இன்னும் சொல்ல போனால் உள்ளே ஸ்க்ரீன் பிரின்டிங் ஊழியர்களிடம் சென்று அவர்களுக்கும் உதவியாய் இருக்க ஆரம்பித்தேன். இதற்கு நல்ல பலன் இருந்தது. என்னை புறம் சொன்னவர்கள் கூட  இரண்டு மாதத்திற்கு பின் என்னிடம் சகஜமாக பழக ஆரம்பித்தார்கள். (ஓரிருவர் மட்டும் அதே கிண்டல் கேலியுடனே பேசினார்கள். அவர்களை மாற்ற முடியாது என்று தெரிந்து போய் விட்டு விட்டேன் ) மானேஜர் கேஷியர் கூட  மதிய வேளையில் சாப்பாட்டுக்காக எனக்காக காத்திருக்க  ஆரம்பித்தார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்கள். மேலும் ஓரிரு மாதங்கள் சென்ற பின் நான் முழுக்க முழுக்க அலுவலக ஏசி அறையிலேயே அமர்ந்து வேலை பார்க்கும்படி ஆகி விட்டது. எனது பியூன்   நாற்காலி எப்போதும் காலியாகவே இருந்தது

முதலாளியின் அம்மா ஒரு நாள் ஆபீஸ் பக்கம் வந்தவர்கள் நான் உள்ளே அமர்ந்திருப்பதை பார்த்து விட்டு மேனேஜரிடம் கேட்டிருக்கிறார்கள் போலிருக்கிறது. அவர் இதை என்னிடம் சொன்னார். நான் பதறி போய் "நீங்க என்ன சொன்னீங்க?" என்று கேட்டேன். எங்களுக்கு உதவியா வேலை பார்த்துகிட்டிருக்கார் னு சொல்லிட்டேன். டோன்ட் ஒர்ரி" என்றார்நான் எப்போதுமே என்னை பற்றி ஒரு பேச்சு வருகிறது என்றால் சம்பந்தப்பட்டவரை  நானே அணுகி என் நிலையை விளக்கி விடுவேன். அதே போல் இது விஷயமாக அம்மாவை சென்று பார்த்து சொன்னேன்.

"சும்மாவே உட்கார்ந்திருக்க என்னாலே முடியலே. அதான் வேலைகளை நானே கேட்டு வாங்கி பார்க்கிறேன். உங்களுக்கு பிடிக்கலனா சொல்லுங்க விட்டுடறேன். என்றேன்.

அதற்கு அவர், " அட என்னப்பா. எனக்கு நீ வேலை பார்ப்பது தெரியாதுல்லஅதனால சொன்னேன். வேலை தான் முக்கியம். அதை எங்க உட்கார்ந்து பார்த்தா என்ன ? என்று சொல்லி விட்டார்.  

எங்கள் கம்பெனிக்கு ஸ்க்ரீன் பிரின்டிங்காக  பிலிம் டெவெலப் செய்து தரும் ஒருவர் எனக்கு அறிமுகமானார்அவரது அலுவலகத்தில் ஞாயிற்றுகிழமை மட்டும் உதவியாய் இருந்து பார்ட் டைம் வேலையும்  (என் முதலாளியிடம் அனுமதி பெற்று) பார்க்க ஆரம்பித்தேன்.

ஞாயிற்றுக்கிழமை  விடுமுறையையும் காசாக்கினேன். அந்த ஒரு நாளுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா . 10 ரூபாய். ( டீ சாப்பாடு தனி. அவரே வாங்கி கொடுத்து விடுவார் ) இப்படியாக ஆறு மாதத்திற்கு மேல் தொடர்ந்து வேலை பார்த்தவனுக்கு, வேறு கம்பெனியில் என் நண்பனின் மூலம் கிளார்க் வேலை கிடைத்து விட்டது. (முதல் தேதி  சம்பளம் கையில் வந்து விடும்)

முதலாளி, மேனேஜர், கேஷியர் மூவருக்கும் இதை நான் சொன்ன போது அவர்கள் சொன்ன வார்த்தைகள்  "நீ வேலையை விட்டுட்டு போறது எங்களுக்கு கஷ்டமா தான் இருக்கு. இருந்தாலும் உனக்கு ஒரு நல்ல நேரம் வரப்ப எங்க கஷ்டத்தை பத்தி நினைக்க கூடாது. குறுக்கே நிக்கறதும்  தப்பு" என்றே சொன்னார்கள். அவர்கள் குறுக்கே நின்னு உன்னை என்ன  பண்ண முடியும்னு நினைக்கறீங்களா?

அங்கே வேலையை விட்டு நான் நிற்கும் போது எனக்கான சம்பள பாக்கி நிறைய இருந்தது. "மொத்தமா என்னால தர முடியாது. வாரா வாரம் சனிக்கிழமை வந்து வாங்கிக்கப்பா" என்று சொன்னார் முதலாளி. நானும் ஒப்புக்கொண்டு அதன் படி ஒவ்வொரு சனிக்கிழமையும் சென்று வாங்கி வந்தேன். அவரும் முழுமையாக செட்டில் செய்து விட்டார்.

அதற்கடுத்த நான்கு வருடங்களில் வேறொரு கம்பெனியில் நான்  ஒரு மேனேஜர் நிலைக்கு உயர்ந்து விட்டேன் என்பதையும் இங்கே சொல்ல வேண்டியது முக்கியானதுஇந்த நிகழ்வின் மூலம் காலம் எனக்கு கற்று கொடுத்தது ஒன்றே ஒன்று தான். எந்த வேலை பார்க்கிறோம் எனபது முக்கியமல்ல. அதில் எந்த அளவுக்கு சிறப்பான பெயர் வாங்குகிறோம் என்பதே முக்கியம்.

சரி தலைப்புக்கு வருவோம். என்னை பற்றி நான் என்றால் தன்னம்பிக்கையும்

விடாமுயற்சியுமே. அதை மூலதனமாக கொண்டு தான் மனைவி, மகன் மகள், அம்மா இவர்களின் ஒத்துழைப்புடன், எனக்கு பிடித்தமான எழுத்து துறைக்குள் குடந்தையூர் என்ற எனது வலைதளத்தின் மூலம் நுழைந்திருக்கிறேன். அதிலிருந்து என் கனவான சினிமா துறைக்கும் முயற்சித்து கொண்டிருக்கிறேன்

வலைத்தள முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியும் அன்பும் என்றென்றும்....

ஆர்.வி.சரவணன்

ன்னைப் பற்றி நான் பகுதி கடந்த மூன்று வாரமாக கருத்துக்களால் களை கட்டுகிறது... அரட்டைக் கச்சேரியின் சுவராஸ்யத்துக்காக வாடிவாசலை திறப்பது போல் இரண்டு நாட்களுக்கு கருத்து மட்டுறுத்தலை நீக்கி விடுவதால் அடித்து ஆடுங்க மக்களே...

இன்னும் பலரை இதில் எழுத வைக்க வேண்டும்... ஆரம்பத்தில் கேட்ட உறவுகள் தற்போது அனுப்பித் தருவதால் புதிதாக இன்னும் யாரையும் தொடர்பு கொள்ளவில்லை. நான் வாசிக்கும்... என்னை வாசிக்கும் எல்லாரையும் எழுத வைக்க வேண்டும். என்னைப் பற்றி நான் மிகப் பெரிய தொடராக அமையும் என்ற நம்பிக்கை இருக்கிறது... எல்லாம் உங்களால்தான் சாத்தியம்... இதுவரை எழுதிய... இனி எழுத இருக்கிற அனைத்து உறவுகளுக்கும் நன்றி.

பதிவை அனுப்பிக் கொடுத்த சரவணன் அண்ணனுக்கு மீண்டும் நன்றி.

Image result for பிறந்தநாள் வாழ்த்து

நேற்று பிறந்தநாளைக் கொண்டாடிய 'காணாமல் போன கனவுகள்' ராஜி அக்காவுக்கும்,  நாளை பிறந்த நாளைக் கொண்டாட இருக்கும் 'மதுரை சரவணன்' வலைப்பதிவர் ஆசிரியர் சரவணனுக்கும் வாழ்த்துக்கள். தனிப் பதிவு எழுத நேரமின்மையின் காரணமாகவே இங்கு வாழ்த்துச் சொல்லியிருக்கிறேன். தாங்களும் வாழ்த்துங்கள் நட்புக்களே....

அடுத்த வாரம் மற்றொரு வலைப்பதிவர் தொடர்வார்...
-'பரிவை' சே.குமார்.

40 எண்ணங்கள்:

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

.....எங்களுக்கு மிகவும் நன்றாக அறிந்த இனிய நண்பர். அவர் வாழ்க்கை, இன்னல்கள், எல்லாம் அறிவோம்....மிகுந்த உழைப்பாளி.நல்ல மனிதர்...குடந்தை சார் உங்கள் கனவுகள் நிறைவேடிட வாழ்த்துகள்....பிரார்த்தனைகள்...

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

நண்பர் குடந்தையூர் சரவணன் அவர்களின் சிரிக்க முகத்திற்குப் பின்னால் இப்படி ஒரு கடினமாக வாழ்க்கைப் புதைத்து இருக்கும் என்று ஒரு நாளும் நினைத்துப் பார்த்ததில்லை
அவரது பதிவினைப் படித்ததும்,அவர் மீதான் நட்பும், மரியாதையும் தன்னால் உணர்வதை உணர முடிகிறது
நண்பருக்கு வாழ்த்துக்கள்
திரைத்துறையிலும் சாதனைகள் படைக்க வாழ்த்துவோம்

பிறந்த நாள் கொண்டாடும் வலைப் பதிவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

மீரா செல்வக்குமார் சொன்னது…

தொடரட்டும்....
வாழ்த்துகள் இருவருக்கும்

அபயாஅருணா சொன்னது…

கடந்து வந்த கஷ்டங்கள் நிஜமாகவே மனத்தைத் தொட்டன . இவை அனைத்தும் மாறி எதிர்காலம்மிக மிக நன்றாக இருக்க என் வாழ்த்துக்கள் ,

G.M Balasubramaniam சொன்னது…

முகம்காணா அறிமுக வலை நட்புகளைப் பற்றி அறிய இது ஒரு வாய்ப்பு வாழ்த்துகள்

Avargal Unmaigal சொன்னது…


தன்னம்பிக்கை & விடா முயற்சிக்கு ஒரு உதாரணமாக சரவனனை எடுத்து கொள்ளலாம். ஒன்றுமட்டும் நிச்சயம் கெளரவம் பார்க்காமல் அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்று கருதாமல், கிடைக்கும் வேலையை செய்து முன்னேற வேண்டும்..பல பேர் அடுத்தவர் என்ன நினைப்பார்கள் என்று நினைத்து கிடைக்கும் வாய்ப்புகளை தவறவிட்டுவிடுவார்கள். என்னை பொறுத்த வரை அடுத்தவர்கள் என்ன நினைத்தால் நமக்கு என்ன? அடுத்தவர்கள் நமக்கு கஷ்டம் என்று வந்தால் ஒருவேளை சாப்பாடுகூட தரமாட்டார்கள் அப்படிபட்டவர்கள் என்ன நினைத்தால் என்ன நினைக்காவிட்டால் என்ன கருதி சென்றுவிடுவேன்



சரவணன் உங்கள் முயற்சிக்கும் உழைப்பிற்கும் தன் நம்பிக்கைக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்

Angel சொன்னது…

இவர் ஆவீ சீனு காதல்போயின் குறும்படத்தில் அந்த கோபக்கார கார் ஓட்டுனர் தானே ? ..
இருங்க முதலில் முழு பதிவும் படித்துவிட்டு வருகிறேன்

Avargal Unmaigal சொன்னது…

வாரம் வாரம் இந்த பகுதி மிகவும் மெருகேறிக் கொண்டிருக்கிறது ஆரம்பித்து வைத்த குமாருக்கு பாராட்டுகள்

Angel சொன்னது…

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ராஜி :)

Angel சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Angel சொன்னது…

வாழ்க்கையில் அனைத்திற்கும் தோல்வி காணும்போது நெகட்டிவ் எண்ணங்களால் சோர்ந்து போகும் மனிதருக்கு இந்த பதிவு ஒரு பாடம் ..
வேலை கிடைப்பது மற்றும் நல்ல சம்பளம் என்பதெல்லாம் இப்போ 2000 துக்கு அப்புறம் எளிதுதான் ஆனால் 90 களில் குறைந்த சம்பளம் மற்றும் வேலை கிடைப்பதே மிக கடினம் என்று கேள்விப்பட்டதுண்டு .அவற்றையெல்லாம் தகர்த்து சாதித்த உங்களுக்கு வாழ்த்துக்கள்

Angel சொன்னது…

கஷ்டத்தை கொடுத்த கடவுளே அதிலிருந்து வெளியே வரவும் அப்படி ஒரு சந்தர்ப்பம் தரலாமென்று காலை எடுத்திருப்பார் மேலும் அந்த சந்தர்ப்பத்தால் உங்கள் வாழ்க்கை செம்மைப்படும் என்பதையும் அவர் அறிந்திருப்பார் ....உங்கள் வாழ்க்கைப்பயணத்தின் பகுதியை மிக அழகாக பகிர்ந்துள்ளதற்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

Angel சொன்னது…

ங்கள் வேலை செய்யுமிடத்தில் அங்குள்ளோரிடம் நேர்மையாக இருந்துள்ளீர்கள் உங்கள் நேர்மைதான் எல்லா நன்மைக்கும் மூல காரணம் அடுத்தது ..எல்லா மனிதர்களுக்கும் பிறரை பற்றி யோசிக்கும் குணம் அமைவது கடினம் மற்றும் அபூர்வம் ..உங்களுக்கு அட்வான்ஸ் சம்பளம் வாங்கும்போது மற்ற ஊழியர்களை நினைத்து வருத்தப்பட்டீர்களே அது பெருந்தன்மையான குணம்

Angel சொன்னது…

மேலும் உங்களுக்கு கிடைத்த முதலாளி மேனேஜர் காஷியர் மூவருமே நல்ல மனசுக்காரங்க .இந்தக்காலத்தில் இப்படிப்பட்டவர்களை காண்பது அரிதே ..நம் கீழ் வீலை புரிபவர் வேறிடம் நல்ல சம்பளத்துக்கு அதுவும் நீங்கள் எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்யும் குணமுள்ளவர் ..அப்படிப்பட்ட ஒருவரை வேறு வேலைக்கு போக அனுமதித்த அந்த மூவரும் மிக்க நல்ல மனசுக்காரங்க ....
உங்கள் விடா முயற்சியும் தன்னம்பிக்கையும் சோர்ந்து போகும் குணமுள்ளோருக்கு பாடமாக அமையும் ..தங்கள் எதிர்கால விருப்பங்கள் இறை ஆசியுடன் நிறைவேறட்டும்

Angel சொன்னது…

//நம் கீழ் வேலை புரிபவர்//

Angel சொன்னது…

அப்புறம் சில நொடி சிநேகம் குறும்படமும் பார்த்திருக்கேன் ..எனக்கு அந்த அப்பாவி ஆவீ காரெக்டர் அதில் மிக அழகாக வெள்ளந்தி மனசை சொல்லியிருக்கும் விதம் பிடித்தது

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் துளசி அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஐயா...
அன்பானவர் அவர் செய்த தொழிலை சிறப்பாகச் செய்ததாலேயே இன்று உயர்ந்திருக்கிறார்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
உண்மைதான்... தன்னம்பிக்கையும் விடா முயற்சியுமே வாழ்வின் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்.
சரவணன் அண்ணனைப் பற்றி ஒரளவுக்கு அறிந்தவன் என்பதால் அவரின் கஷ்டம் நஷ்டம் விடாமுயற்சி எல்லாம் எனக்குத் தெரியும்...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா...
அவரேதான்... ரொம்ப முறுக்கிக்கிட்டு நிப்பாரே...
துளசி அண்ணாவோட ஆங்கில நாடகத்திலும் வருவார்....

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம்...
உண்மைதான்... ரொம்ப நல்லாப் போகுது...
இந்தளவுக்கு இருக்கும் என்று எதிர் பார்க்கவில்லை...
இவ்வளவு மெருகேற தாங்களும் அக்காக்களும் முக்கிய காரணம்....
ரொம்ப சந்தோஷமா இருக்கு...
நன்றி....

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாழ்த்துக்கு நன்றி. (அக்கா சார்பாக)

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அக்கா...
தங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

r.v.saravanan சொன்னது…

என்னை இந்த பதிவு எழுத வைத்தமைக்கு மிக்க நன்றி குமார். மற்ற நண்பர்களின் பங்களிப்புடன் இந்த பதிவு வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. பல நண்பர்களை பற்றி அவர்கள் எண்ணங்கள் பற்றி இதன் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.

r.v.saravanan சொன்னது…

நன்றி துளசிதரன் சார்

r.v.saravanan சொன்னது…

நன்றி ஜெயக்குமார் சார்

r.v.saravanan சொன்னது…

நண்பரே .இந்த பதிவு எழுதுவதற்கு கொஞ்சம் தயங்கினேன். சுய புராணம் என்று சொல்லி விட போகிறார்களோ என்று. உங்கள் கருத்து படித்தவுடன் தயக்கம் நீங்கியது. மிக்க நன்றி. நீங்கள் சொல்லியது போல் தான். அடுத்தவர் காசில் வாழ்வது அடுத்தவரை ஏமாற்றி வாழ்வது இதை தான் கவுரவ குறைச்சலாக நினைக்கிறேன். கஷ்டப்பட்டு உழைத்து அதில் வரும் சம்பளத்தில் வாழ்வதற்கு நிகர் வேறேதுமில்லை.

r.v.saravanan சொன்னது…

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி. ஆம் எல்லாரும் சம்பளம் வாங்கிட்டாங்களா குறையில்லாமல் இருக்கிறார்களா என்று கவனித்து கொள்வது ஒரு மேலாளரின் கடமை மட்டுமல்ல மற்ற ஊழியர்களின் கடமை. இது மனிதாபிமானமும் கூட. மற்ற எல்லாரும் சம்பளம் வாங்காத நிலையில் நான் மட்டும் அட்வான்ஸ் வாங்கி செல்வது கஷ்டமாகவே பட்டது. அதனால் தான் வேலையை விட்டு நிற்கும் போது மீதம் சம்பளத்தை அவர்கள் கொடுக்கும் போது வாங்கி கொண்டேன்.

r.v.saravanan சொன்னது…

உண்மையில் அது தான் எனது கேரக்டர். அதை தான் குறும்படத்தில் ஆவி கேரக்டரில் வருவது போல் அமைத்தேன். இருந்தும் இந்த கதை உண்மையில் நடந்த அனுபவம். நிஜத்தில் அரசனின் கேரக்டர் என்னோடது. படம் வெளியாகி சில ஆண்டுகள் கழித்து நீங்கள் படம் பற்றி குறிப்பிடுவதில் மகிழ்ச்சி. நன்றியும் கூட.

r.v.saravanan சொன்னது…

நன்றி மீரா செல்வகுமார்

r.v.saravanan சொன்னது…

நன்றி அபயா அருணா

r.v.saravanan சொன்னது…

நன்றி ஐயா

Yarlpavanan சொன்னது…

குடந்தை ஆர்.வி.சரவணன் அவர்களின் பதிவு
அருமை - அவருக்கு
எனது வாழ்த்துகள்!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

சரவணன்! உங்களின்சுறுசுறுப்பு ஆர்வம் விடாமுயற்சி தன்னம்பிக்கை எனக்கு எப்போதும் பிடிக்கும்.தடைகளை தாண்டி வெற்றிக் கொடி நாட்டிய உங்களுக்கு வாழ்த்துகள்

r.v.saravanan சொன்னது…

தங்களை போன்ற நண்பர்களின் இந்த ஊக்கம் தான் எனக்கு உற்சாக டானிக்.மிக்க நன்றி சார்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

சரவணன், இன்றுதான் பதிவினைக் காண முடிந்தது. உங்களின் விடாமுயற்சி பாராட்டத்தக்கது. வாழ்த்துகள். பகிர்ந்த குமார் அவர்களுக்கு நன்றி.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

குறிப்பாக சிலவற்றை மட்டும் சொன்னாலும்
விடாமுயற்சி என்ற வார்த்தையின் தெளிவான விளக்கமாய்
அமைந்திட்டது. வாழ்த்துகள் !