மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 13 ஏப்ரல், 2013

தொடர்கதை : கலையாத கனவுகள்


"அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்"
******
தொட்டுவிடும் தூரத்தில் துருவ விண்மீன்
எட்டித்தொட எண்ணமிலா ஏக்கப் பெருமூச்சு
கட்டிக்கொண்ட கண்மணிக்கு தொலைவுகள் தூரம்
பட்டபின்னும் தொட்டபின்னும் புரியாத மனம்
பட்டுக்கிடக்கிறது பழைய நினைவுகளில்..!
-கவிஞர். தமிழ்க்காதலன்

 1.   படிப்பே பிரதானம்
 1996-ஆம் வருடம்...

மாடு,ஆடுநாய்கோழிகளின் சத்தத்துடன் அழகான கிராமத்துக் காலைப் பொழுது...

"என்னடா குட்டி போட்ட நாயாட்டம் சுத்தி சுத்தி வாறே..."

"இன்னைக்கு ரிசல்ட் வருதுல்லம்மா... அதான் பயமா இருக்கு"

"என்னடா பயம் வேண்டிக்கெடக்கு... பாஸ் பண்ணிருவல்ல... ஒங்கப்பன் போனதுக்கு அப்பறம் பாலு யாவாரம் பாத்துத்தான் ஒங்கள படிக்க வக்கிறேன்... மூத்தவன் குடும்ப சூழ்நிலையால படிக்க முடியல... அக்கா படிச்சா... பொட்டபுள்ளய காலகாலத்துல கரை சேக்குற காரியத்தை பாக்காம படிக்க வச்சி அழகு பாக்குறியோன்னு அங்காளி பங்காளிக சத்தம் போட்டதால படிப்ப நிப்பாட்டி வீட்டுல இருக்க வச்சிட்டேன். நீயாவது நல்லா படிக்கணுங்கிறது என்னோட கனவுடா... அதுல மட்டும் மண் அள்ளிப் போட்டுறாதேடா..."

"ஐய்யோ அம்மா... ...ஊன்னா புராணம் வாசிக்க ஆரம்பிச்சிருவே..."

"ஆமாடா... நாஞ் சொல்றது ஒனக்கு புராணமாத்தான்டா இருக்கும்... காலேசு படிக்கப் போறமுன்னு தெனாவெட்டு வந்திருச்சா..."

"அதெல்லாம் இல்லம்மா... நல்ல மார்க் வாங்கணுமேன்னு கவலையா இருக்கும்மா... நீங்க வேற தேவையில்லாம பேசி டென்சனாக்கிட்டிங்க..."

"நா... பேசுற ஒங்களுக்கு தேவையில்லாததுதான்... நாயி படிச்சா நாளைக்கு ஒம் பொண்டாட்டி புள்ள மதிக்கும்... இல்லயின்னா கேவலந்தான் படணும்... எனக்கா நாளக்கி சம்பாதிச்சு போடப்போறே... எங்கிட்டு கெடக்கே எடுபட்ட சிறுக்கின்னு கூட கேக்குறியோ இல்லையோ.... யாரு கண்டா... சரி சரி கஞ்சிய குடிச்சிட்டு சித்தம் போக்கு செவம் போக்குன்னு சுத்தி வா... எனக்கு வேல கெடக்கு... ஒனக்கு கஞ்சிய ஊத்திட்டு நா போயி மாடுகளை அவுத்து விட்டிட்டு வாறேன்..."

"சரிம்மா..."

---

இப்ப இருப்பது போல் இணையதள வசதி அவ்வளவு பிரபலமாகவில்லை. தேர்வு முடிவுகள் எல்லாம் நாளிதழ்கள் மூலமாகத்தான் அறிய வேண்டும். மதியம் இரண்டு மணிக்கெல்லாம் மாலைமலர் சிறப்புப் பதிவில் முடிவு வந்துவிடும் என்பதால் முதல் நாளே கருணாநிதி அண்ணன் பெட்டிக்கடையில் சொல்லி வைத்திருந்தான். இருந்தாலும் இருப்புக் கொள்ளாமல் ஒரு மணிக்கெல்லாம் சைக்கிளில் தேவகோட்டை நோக்கி விரையலானான்.

ரிசல்ட் வந்து மார்க் சீட்டும் வாங்கியாச்சு... முன்னூற்றி அறுபது மார்க் வாங்கியிருந்தான். விவரம் தெரிந்த நண்பர்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சாத்தான் நல்லது என்று சொல்லி அவனையும் அதற்கே அப்ளிகேசன் போடு என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அதற்கு சிலவாகும் என்றும் சொன்னதால் அம்மாகிட்ட கேட்டுத்தாண்டா சொல்லணும் என்று சொல்லிவிட்டான்.

"அம்மா... என் பிரண்டெல்லாம் கம்ப்யூட்டர் சயின்ஸ்ல சேரப் போறாங்களாம்."

"என்ன பூட்டரோ படி... வேணாங்கல... நாலு பேருமாதிரி நீ நல்லா இருக்கணும்... அதுவும் ஒம்மாமனுக்கு முன்னால நாலெழுத்து படிச்சு உசந்து நிக்கணும்... இந்த ஸ்கூலுல சேக்கப் போகும்போது படிச்சவன் அவந்தான்னு ஒதவி கேக்கப் போனா வேலயிருக்குன்னு சொல்லி வரமாட்டேனுட்டான்... அன்னைக்கு நா ஒன்னய குறுக்கால நடந்து கூட்டிக்கிட்டு போயி கஷ்டப்பட்டு சேர்த்தேன்... அத மறந்துறாத... அதுதான் முக்கியம்..."

"படிப்பேம்மா... ஆனா கம்ப்யூட்டர் படிப்புக்கு அதிகம் செலவாகுமாம்..."

"எம்புட்டாம்... கூடையிலயா கேக்கப்போறாங்க..."

"இல்ல நம்ம சரவணன் அக்கா படிக்கிறாங்க... அவங்க சொன்னாங்க ஒரு செமஸ்டருக்கு ஆறாயிரத்துக்கு மேல கொடுக்க வேண்டியிருக்குமாம்... "

"வருசத்துக்கா...?"

"வருசத்துக்கு ரெண்டு செமஸ்டராம்... பன்னெண்டாயிரம்... அப்புறம் மத்த செலவு..."

"அம்புட்டுக்காசுக்கு ஆத்தா நா எங்கய்யா போவேன்... குருவி சேக்கிறமாதிரி சீதை கல்யாணத்துக்குத்தான் சேத்துக்கிட்டு வாறேன். அதை எடுத்துக் கொடுத்துப்புட்டா நீ படிச்சு முடிக்கிறவரைக்கும் அவள கரை சேக்காம இருக்க முடியாதேய்யா... அண்ணங்கிட்ட கேளு... நாளக்கி சரவணன் வீட்டுக்கு போகும் போது போன்ல அண்ணன கூப்பிட்டு விவரம் சொல்லு... அவன் என்ன சொல்றான்னு கேக்கலாம்...ம்... சரியா..."

"ம்..."

----

"டேய் உங்கண்ணன்கிட்ட அம்மா பேச சொன்னாங்கன்னாய்... பேசுடா"

"வேணான்டா... அதையும் வீணாவுல செரமப்படுத்திக்கிட்டு... பேசாம பிஸிக்ஸ் சேர்ந்திடலாமுன்னு நினைக்கிறேன்... அது போதுன்டா..."

"சரி... உனக்கு எது சரியின்னு படுதோ அதை செய்யிடா..."

ம்... குடும்ப சூழலையும் பாக்கணுமில்ல... அக்காவுக்கு எப்ப வேணுமின்னாலும் கல்யாணம் வைக்கலாம்...

"ம்.... சரி... அப்புறம் நாளக்கி காலேசுல அப்ளிகேசன் கொடுக்கிறாங்களாம்... காலயில பத்து மணிக்கெல்லாம் அறிவு வரச் சொல்லியிருக்கான்... அவங்க அப்பா சொன்னாராம்..."

அறிவு அப்பா காலேசு ஆபீஸ்லதான் வேலை செய்யிறார். அதனால அவன் மூலமா நினைக்கிற குரூப் வாங்கிரலாமுன்னு சொல்லியிருந்தான்.

"சரிடா... எங்க வரணும்?"

"கரெக்டா 9.45க்கு காலேசு எண்ட்ரண்ஸ்க்கிட்ட வந்திடு..."

"சரிடா"

"சீக்கிரமா வந்தா செம்மேரிசுக்கு எதிர்த்தாப்புல இருக்க கடைக்கிட்ட நில்லு. நாங்க வந்திடுறோம்..."

"ம்..."

---

மறுநாள் காலை 10 மணி...

முன்னதாகவே செம்மேரிசுக்கு எதிர்த்த டீக்கடையில் நிற்க, நண்பர்கள் ஒவ்வொருவராய் வர ஆரம்பித்தனர் எல்லாரும் வந்ததும் சைக்கிள் மீண்டும் கிளம்பி செம்மேரிசை ஒட்டியிருக்கும் ரோட்டில் திரும்ப ஸ்ரீ சேவுகன் அண்ணாமலைக் கல்லூரி நுழைவு வாயில் வளைவும் அதன் அருகில் இருந்த கல்லறையும் வரவேற்க சைக்கிளை மிதித்தனர்.

தன் வாழ்வின் புதிய அத்தியாயம் இங்கு ஆரம்பமாகப் போகிறது என்பதை அறியாமல் கல்லூரி நோக்கி நண்பர்களுடன் பயணித்தான் கதையின் நாயகன் ராம்கி என்ற ராமகிருஷ்ணன்.

-தொடரும்...

****************************


என்னை எழுத்தாளனாக ஆக்கிப் பார்த்து... எனது கதைகளைப் படித்து நிறை குறைகளை எடுத்துச் சொல்லி... இன்னும் என்னை எழுதத் தூண்டும் எனது கல்வித்தந்தை பேராசிரியர். மு.பழனி இராகுலதாசனுக்கும் என் கதை பத்திரிக்கைகளில் வந்தால் படிக்கத் தெரியாவிட்டாலும் என் அப்பா எழுதிய கதை என்று புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு வீதியெங்கும் விளம்பரம் செய்யும் என் செல்ல மகளுக்கும் இக்கதையை சமர்ப்பிக்கிறேன்....

கதைக்கான படம் நான் வரைந்து தருகிறேன் என்று சொல்லி முன்வந்த நண்பன் குடும்ப சூழலால் வரைய முடியாமல் போனதற்காக வருத்தப்பட்டு மின்னஞ்சல் அனுப்பியுள்ளான். வருத்தமில்லை நண்பா என்று சொன்னதுடன் வேறு படங்க்ளை இணையத்தில் இருந்து சுட்டுப் போட மனமில்லாமல் படம் இல்லாமலே கதையை போட நினைத்துள்ளேன். நண்பன் முதலில் பிரச்சினையில் இருந்து மீளட்டும் அதுவே போதும்..

என் அன்பு நண்பன் மகாகவிஞன்... சிலம்பூர் கவிவேந்தன் தமிழ்க்காதலனின் கவிதைகளும் கதையுடன் பதியப்படும். அதற்கு ஒத்துக் கொண்ட (என்ன ஒத்துக்கிறது... கொடுடான்னா கொடுக்கப் போறான்...) நண்பனுக்கு நன்றி.

-'பரிவைசே.குமார்

28 எண்ணங்கள்:

தமிழ்க்காதலன் சொன்னது…

என் பிரியமான தோழரும், மிகச்சிறந்த கதை ஆசிரியருமான குமாருக்கு வணக்கம், தங்களின் செம்மையான தமிழ் வரிகளுக்குள் ஒட்டிக்கிடக்கும் உயிரோட்டமுள்ள சங்கதிகளுக்கு என்றுமே இரசிகன் நான்.

எமது மனமுவந்த பாராட்டுக்கள் மென்மேலும் வெற்றிபெற, வாழ்த்துக்கள்.

பால கணேஷ் சொன்னது…

மிக இயல்பான, ரசிக்க வைக்கும் ஆரம்பம் குமார்! தகப்பனில்லாத ஒரு ஏழை மாணவனின் குடும்ப சூழல் கண்முன்னே விரிகிறது உஙகள் எழுத்துக்களில். தொடர்ந்து அசத்துங்க! உங்களுக்கு என் நல்வாழ்த்துகள்! தேவகோட்டையில் தே பிரித்தோ பள்ளியில் நான் 10, +2 படித்த காலங்கள் மீண்டும் நினைவில் நிழலாடி மகிழ வைத்த‌ன இதைப் படிககையில்....! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

'பரிவை' சே.குமார் சொன்னது…

நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் கருத்து கணிப்பொறி பிரச்சினையில் ஒரே பதிவு பல முறை பதிவாகியிருந்ததால் அழிக்கும் போது அழிந்துவிட்டது....

மன்னிக்கவும் நண்பா.... உங்கள் தொடர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா.

'பரிவை' சே.குமார் சொன்னது…

அன்பு நண்பன் தமிழ்க்காதலனுக்கு...

நீண்ட நாட்களுக்குப் பிறகு உனது கருத்து எனது வலையில்...

உனது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க பால கணேஷ் அண்ணா...

தங்களின் மேலான வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா....

ராமலக்ஷ்மி சொன்னது…

தொடருங்கள். கதை அருமை.

கதையை சமர்ப்பித்த விதம் நெகிழ்வு.

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

Unknown சொன்னது…

வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்...

தொடர்ந்து படித்து எனது கருத்துக்களை தெரிவிக்கிறேன்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ராமலக்ஷ்மி அக்கா

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
முதல் முயற்சி உங்களது மேலான நிறை குறைகளை தொடர்ந்து சொல்லுங்கள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க கே.ஆர்.பி. அண்ணா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
முதல் முயற்சி உங்களது மேலான நிறை குறைகளை தொடர்ந்து சொல்லுங்கள்.

சீனு சொன்னது…

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... தங்கள் வாசகர் வட்டத்தில் இணைந்து கொண்டேன்.... தொடர்ந்து எழுதுங்கள்... தொடர்கிறோம்...

சாந்தி மாரியப்பன் சொன்னது…

உற்சாகமான ஆரம்பம். தொடருங்கள்.

dheva சொன்னது…

தம்பி... இப்போதான் படிக்க ஆரம்பிச்சு இருக்கேன்...!

கண்டிப்பா என் கருத்துக்கள தெரிவிக்கிறேன். அழகான ஆரம்பம்...!

மோ. கணேசன் சொன்னது…

படித்தேன் நண்பா...

இன்னும் நன்றாக எழுத வேண்டுகிறேன்... இன்னும் இன்னும் எதிர்பார்க்கிறேன் உன்னிடம்...

புரிந்துகொள்வாய் என நினைக்கிறேன்...

வாழ்த்துக்கள் நண்பா...

r.v.saravanan சொன்னது…

தங்களின் தொடர்கதைக்கு வாழ்த்துக்கள் குமார் கலையாத நினைவுகள் தலைப்பு எங்கள் மனதில் அழியாத ஒன்றாய் அமைய இதய பூர்வமாய் வாழ்த்துகிறேன் தொடர்கிறேன்

Asiya Omar சொன்னது…

கலையாத கனவுகள்,பெயரே அருமை.இந்த தொடர் கதையும் உங்கள் பெயர் சொல்லும் படியாக இருக்க வாழ்த்துக்கள் சகோ.தொடருங்கள்..

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

உங்கள் வலைப்பூ பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நன்றி, லிங்க் இதோ http://blogintamil.blogspot.in/2013/04/blog-post_18.html

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ராமலஷ்மி அக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
என் பொண்ணு எனக்கு உயிர்... என் ஐயாவுக்கு நானென்றால் உயிர்,,, அதனால் நான் விரும்பும் என்னை விரும்பும் உறவுகளுக்கு சமர்ப்பித்தேன்....

நன்றி....

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க செந்தில் அண்ணா...
நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் வருகை....
கதைக்கு தொடர்ந்து உங்கள் கருத்து வரட்டும் அண்ணா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சீனு சார்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
என்னுடைய வலைப்பதிவை உங்கள் வாசிப்பு வட்டத்தில் இணைத்துக் கொண்டமைக்கு நன்றிகள்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க புவனா அக்கா...
தொடர்கதை எழுதுவதில் நீங்கள் குரு... கடல்...
எனக்கு இது முதல் முயற்சி...
உங்கள் கருத்துக்கள் எனக்கு உரமாகட்டும்..
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க தேவா அண்ணா...
கண்டிப்பா உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்..
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வா தோழா...
புரிகிறது தோழா...
கண்டிப்பாக முயற்சிக்கிறேன்..
உன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சரவணன் அண்ணா....
நல்ல கதையாக தர முயற்சிக்கிறேன் அண்ணா....
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஆசியா அக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
உங்கள் வாழ்த்துக்கள்தான் தொடர்ந்து எழுத வைக்கிறது அக்கா....

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க புவனா அக்கா....
அறிமுகத்துக்கு நன்றி அக்கா...
பார்த்து கருத்தும் இட்டு விட்டேன்...

Menaga Sathia சொன்னது…

கதை + எழுத்து நடை ரொம்ப நல்லா விறுவிறுப்பா இருக்குங்க...வாரத்தில் 3 நாள் இந்த் தொடரை போடுங்க.நல்லாருக்கு.வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்..

Kayathri சொன்னது…

தம்பி ஆரம்பமே அசத்தல்...வாழ்த்துக்கள்...

காயத்ரி வைத்தியநாதன் சொன்னது…

நல்ல முயற்சி பாராட்டுக்கள்..

//என் அப்பா எழுதிய கதை என்று புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு வீதியெங்கும் விளம்பரம் செய்யும் என் செல்ல மகளுக்கும் இக்கதையை சமர்ப்பிக்கிறேன்....// பரவாயில்ல தம்பிக்கு ஒரு பப்ளிகேசன் தயாரா இருக்கு...

//அன்பு நண்பன் மகாகவிஞன்... சிலம்பூர் கவிவேந்தன் தமிழ்க்காதலனின் கவிதைகளும் கதையுடன் பதியப்படும். அதற்கு ஒத்துக் கொண்ட (என்ன ஒத்துக்கிறது... கொடுடான்னா கொடுக்கப் போறான்...) நண்பனுக்கு நன்றி.// அதான கொடுக்கலேன்னா தம்பி எடுக்கப்போற.கதையில் நட்பின் பதிவை அறிமுகப்படுத்தும் வித்தியாச முயற்சிக்கு பாராட்டுக்கள்..:)