இந்த முறை ஊருக்குச் சென்றதில் முக்கியமான காரணம் எங்களது புதுவீட்டில் குடி போகும் நிகழ்வுதான். ஊருக்குச் சென்றதும் உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் பத்திரிக்கை கொடுப்பதிலேயே நாட்கள் நகர்ந்தன. அடித்துத் துரத்தும் வெயிலில் பைக்கில் கிராமங்களுக்கு அலைந்து கொடுத்ததில் இங்கிருந்து கொஞ்சம் சிவப்பாக சென்ற உடம்பு அடுப்புக்கரியை அரைத்துத் தேய்த்தது போல் ஆகிவிட்டது. திரும்பி வந்ததும் எங்கள் அலுவலக பி.ஆர்.ஓ, 'மகனே ஊரில் போய் ஓவன்ல உக்காந்திருந்தியா'ன்னு சிரிக்காம கேட்டாருங்கிறது தனிக்கதை.
தேவகோட்டை, காரைக்குடியில் பத்திரிக்கை கொடுக்கும் பணியில் எனது மனைவியும் உதவினார். அவரும் கடந்த ஒரு வருடமாக காரைக்குடிக்கும் தேவகோட்டைக்கும் அழைந்தார். நல்ல அலைச்சல்.... நானாக இருந்தால்கூட இவ்வளவு கஷ்டப்பட்டிருக்க மாட்டேன்... உதவிக்கு என்று யாரும் வராத நிலையில் இருவரும் அலைந்து திரிந்து பத்திரிக்கைகளைக் கொடுத்தோம்.
பத்திரிக்கை கொடுக்க அலைந்ததால் எனது செல்லங்களுடன் நாட்களை கழிக்க முடியாமல் போய்விட்டது. இருவரும் ரொம்ப புலம்பிட்டாங்க.அதிலும் விஷால் வண்டி எடுத்ததும் வாறேன் என்று அழுது அடம்பிடிப்பான்... வெயில் என்று சொல்லி விட்டு விட்டுச் சென்றால் வந்தது 'எதுக்கு துபாயில இருந்து வந்தே... விட்டுட்டு விட்டுட்டுப் போயிடுறே... பத்திரிக்கை கொடுக்கப் போறேன்னு சொல்லிட்டே போயிரு... எங்ககிட்ட இருக்காதே...' என்று அடித்து நொறுக்கிவிடுவான்.
பத்திரிக்கைகள் கொடுத்து முடித்ததும் வீட்டு விழாவுக்கான வேலைகள் ஆரம்பமாகியது. எனது நண்பனின் காரில் மதுரை சென்று வருபவர்களுக்கு கொடுக்க வாளிகள் மற்றும் வீட்டுக்குத் தேவையான சில சாமான்கள் வாங்கச் சென்றோம். மதுரையில் மாமாவின் நெருங்கிய நட்புக்களுக்கு... (எல்லாருமே நமக்கு இப்போ முறை வைத்து அழைக்கிறார்கள்... எல்லாருக்கும் இப்போ நாம மாப்பிள்ளைதான்...) பத்திரிக்கை கொடுத்தோம். மீனாட்சி அம்மன் கோவில் அருகில் புத்தகக்கடை வைத்திருக்கும் மாமா, பழக்கடை மாமாக்கள், தேங்காய்க்கடை மாமா, மெடிக்கல் மாமா, மொத்தக் காய்கறிக் கடை அண்ணன், இலைக்கடை அண்ணன் என அனைவரின் கள்ளமில்லா அன்பும் கவனிப்பும் எங்களை திக்குமுக்காட வைத்தது.
பிறகு மளிகை சாமான்கள், ஐயர், வீடியோ போட்டோ புக்கிங், வாழைமரம், கொட்டகை, சீரியல் லைட்டுகள், தண்ணீர் பாட்டில், வாடகைப் பாத்திரங்கள் என எல்லா ஏற்பாடுகளையும் முடித்து வைத்து எங்களை கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டோம்.
விழா நாளுக்கு முதல் நாள் மாமச்சீர் கொண்டு வந்தார்கள். அன்று இரவு விருந்து சிறப்பாக முடிந்தது. ஸ்ருதிக்கும் விஷாலுக்கும் விழாக் கொண்டாட்டத்தில் மிகுந்த சந்தோஷம்... நம்ம வீடு என்ற ஆனந்தம் அவர்களது முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பாக ஜொலித்தது.
மறுநாள் காலை 4 மணிக்குப் பூஜை ஆரம்பம். மூணு மணிக்கெல்லாம் குளித்துத் தயாராக வேண்டிய கட்டாய்ம். பூஜை செய்ய வந்த சுவாமி எனக்கு குடும்ப நண்பர். முதல் நாள் இரவே எல்லாம் தயார் பண்ணி வைத்துவிட்டு சென்றுவிட்டார். இருந்தும் 3.30 மணிக்கெல்லாம் வந்துவிட்டார். வீடியோ போட்டோ என எல்லாம் தயாராக இருந்தன. நாங்கதான் தயாராக கொஞ்சம் தாமதம்.
பூஜை ஆரம்பித்தது. கொஞ்ச நேரம் ஆர்வமாக கவனித்துக் கொண்டிருந்த விஷாலை தூக்கம் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஆழ்ந்த நித்திரைக்குச் சென்றுவிட்டான். பின்னர் எனது நண்பன் வந்து விஷாலை எழுப்பி, அதைப்பார் ... இதைப்பார்... என்று சொல்லி முழிக்க வைத்தான். பின்னர் கோமாதா பூஜையில் மாட்டைத் தொட விஷாலுக்கும் பாப்பாவுக்கும் கிலி... பயந்து பயந்து தொட்டார்கள். மாடும் எங்க உறவினரின் மாடுதான்... அதுக்கு நிறைய அனுபவம்... வீட்டுக்கு உள்ளே வந்து பழம், பச்சரிசி, வெல்லம் எல்லாம் தின்றுவிட்டுச் சென்றது.
அதன் பிறகு அம்மா, அத்தை இன்னும் சிலர் பால்காய்ச்சி பொங்கல் வைத்தார்கள். நாங்கள் வந்த உறவுகளையும் நட்புக்களையும் வரவேற்று காலைப் பலகாரம் சாப்பிட மாடிக்கு அழைத்துச் சென்றோம். அப்பாவும்... அவ்வப்போது விஷாலும் என் தம்பி மனைவியும் பன்னீர் தெளித்து சந்தனம் கொடுத்து வரவேற்கும் பணியை செய்து கொண்டிருந்தார்கள். பின்னர் வயதில் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி திருநீறு பூசி... அப்பப்பா... கல்யாணத்து அன்னைக்குகூட பொத்தாம் பொதுவுல விழுந்து எந்திரிச்சிட்டேன்... ஆனா குடிபோன அன்னைக்கு தனித்தனியா... தனித்தனியா...ஸ்... அப்பா... நம்ம அம்மணி வேற பொசுக்குப் பொசுக்குன்னு கால்ல விழுந்துருது... (கவனிக்க என் காலில் இல்லை).
மதிய விருந்தும் என்பதால் இடைவெளியில்லாம் ஆட்கள் வரவும் போகவுமாக இருந்தார்கள். வந்தவர்கள் எல்லாருக்கும் வீடு பிடித்திருந்தது. அதைவிட சாப்பாடு ரொம்ப சூப்பர் என்றார்கள். எல்லாப் புகழும் எங்களது இல்லத்தில் தொடர்ந்து சமையல் செய்யும் முத்து அண்ணனுக்கே. எங்க பக்கம் சாப்பாடு என்பது சகலராலும் விமர்சிக்கப்படும்... செட்டிநாட்டுக்காரங்க சாப்பாட்டுக்கே பிறந்தவங்க என்பது எல்லாரும் அறிந்ததுதானே...
பெரிய அண்ணனும் எனது நண்பன் முருகனும் மொய் டிபார்மெண்டை கவனித்துக் கொண்டார்கள். வந்தவர்களுக்கு மறவாமல் வாளி கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்பப்ப எனது சகோதரன் பழனியும் மாப்பிள்ளை கார்த்தியும் உதவினார்கள். குறிப்பாக முதல் நாள் முதல் எல்லா வேலைகளிலும் பொறுப்பாக நின்ற எங்களுக்கு எல்லா உதவிகளையும் முன்னின்று செய்யும் மணி அண்ணனும் எனது ஐத்தான் (அக்கா கணவர்) போஸ் அவர்களும் முதல் நாள் முதல் எல்லா வேலைகளுக்கும் ஓடிக் கொண்டிருந்தார்கள்.
மனஸ்தாபங்களோ சண்டை சச்சரவோ இல்லாமல் எல்லாருமா இருந்து சந்தோஷமாக நடத்திய எங்கள் குடும்ப விழா சந்தோஷங்கள் நிரம்பி வலிய இனிய விழாவாக அமைந்தது. இதே சந்தோஷம் எங்கள் இல்லத்தில் என்றும் நீடித்து இருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய சிலவற்றை இப்போது பார்க்கலாம்.
மதுரையில் இருந்து 'வலைச்சரம்' சீனா ஐயா அவர்கள் அம்மாவுடன் வந்திருந்து வாழ்த்தியது... (இதை வேறோரு பதிவில் சொல்லிவிட்டேன்... இருந்தும் அவரைச் சந்தித்த சந்தோஷத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்லலாம்... தப்பில்லை)
எனது ஆருயிர் நண்பன் டொமினிக் பிராங்க்ளின் நாகர் கோவிலில் இருந்தும் மற்றொரு இனிய நண்பன் கிறிஸ்டோபர் தேனியிலிருந்தும் வந்திருந்தது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. டொமினிக் தனது மனைவியை கூட்டி வரவில்லை என்று நாங்கள் சப்தமிட்டதும் ஒரு வாரத்திற்கு பிறகு மனைவி மகனுடன் வந்திருந்தார்.
மற்றபடி ரத்த சொந்தங்களும் சொந்தங்களும் நட்புக்களும் சென்னை, திருச்சி, கரூர், சிதம்பரம், மதுரை என வெகு தொலைவில் இருந்து வந்து சிறப்பித்தனர். எனது பேராசான் மு.பழனி இராகுலதான் குடும்பத்துடன் வந்திருந்து வாழ்த்தினார். சில நட்புக்களுக்கு சொல்லாமல் மறந்தும்விட்டுவிட்டோம். அப்படி மறந்தவர்களில் எனது முக்கியமான நண்பரும் ஒருவராகிப் போனதில் மிகுந்த வருத்தம்.
வருபவர்கள் இடம் அறிய வேண்டும் என அவசர அவசரமாக பிளக்ஸ் சொல்லி இரவு வந்து அவன் வைக்காமல் அதிகாலை பூஜைக்கு முன்னர் நானும் விஷாலும் வண்டியில் போய்... இருட்டில் மாடிப்படி ஏறி (என்னப்பா இருட்டுக்குள்ள கடை வச்சிருக்காய்ங்க... - விஷால்) கடையில் அவனுங்களை எழுப்பி சத்தம் போட்டுவிட்டு வர, 8 மணிக்கு கொண்டு வந்து ஏனோ தானோ என வைத்துவிட்டுச் செல்ல கொடுத்த அட்வான்ஸோடு வேறு அவனும் கேட்கவில்லை நானும் கொடுக்கவில்லை.
நண்பரான இஞ்சினியர் தண்ணீர் வசதியே இல்லாமல் பண்ணி விட்டார். சரி டிரம்களை வாடகைக்கு எடுத்து மோட்டார் போட்டு பிடித்துக் வைத்துக் கொள்ளலாம் என்றால் பாத்ரூம் வேலைகளையும் முடிக்காமல் வைத்திருந்தார். பிறகு சத்தம் போட்டதும் பின்னாடி இருக்கும் பாத்ரூமை பயன்படுத்திக்கங்க என்றார். கதவு இல்லாம எப்படி என்று கேட்டதும் முதல் நாள் விழா நடந்து கொண்டிருக்கும் போது இரவு வந்திருந்து கதவு போட்டுக் கொடுத்தார்கள். நடக்கும் தூரத்தில் மாமனார் வீடு இருந்ததால் பிரச்சினை இல்லாமல் போய்விட்டது.
இரண்டாம் நாள் தேவகோட்டை கல்லூரிச் செயலாளர் சின்ன சேவுகன் செட்டியாரும் சாந்தி ஆச்சியும் நேரில் வந்து வாழ்த்திவிட்டுச் சென்றார்கள். தேவகோட்டை கனரா வங்கி மேலாளர் அவர்களும் நேரில் வந்து வாழ்த்தினார்.
மூன்றாம் நாள் கறி விருந்தும் சிறப்பாக நடந்து முடிய, காரைக்குடியில் இருந்து தேவகோட்டைக்கு சாமான் அள்ளும் படலம் தொடர, எல்லாம் முடித்து புதுவீட்டுக்குள் வாழ்க்கை ஆரம்பமான போது கடன்கள் மெல்ல தலைதூக்கிப் பார்த்தாலும் நம்ம வீடு என்ற ஒரு சந்தோஷம் எல்லாத்தையும் மறக்கச் செய்துவிட்டது.
வீட்டைக் கட்டிப்பார்ன்னு சும்மாவா சொல்லியிருக்காய்ங்க... பார்த்தாத்தானே தெரியுது.
-'பரிவை' சே.குமார்.
15 எண்ணங்கள்:
வாழ்த்துக்கள்...
ஆயிரம் வாட்ஸ் வரிகளில் ஜொலிக்கிறது... சிரமம் எவ்வளவு என்று முடிவில் புரிகிறது... வாழ்த்துக்கள்...
ஆஹா ஆஹா..... புதுமனை புகும் விழா சிறப்பாக நடந்து இருக்கு.
எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.
சீனா ஐயா அவர்களின் அன்புக்கு எல்லையே இல்லை!!!!
பதிவர் குடும்பமுன்னுதான் நான் எப்பவும் நம்மவர்களை நினைக்கறேன்.
புது வீட்டுக்கு வாழ்த்துக்கள்..
ஆஹா.. குழந்தைகளின் முகங்களில்தான் எவ்வளவு மகிழ்ச்சி.
இதுக்காகவே எத்தனை கஷ்டம் வேண்ணாலும் படலாம்.
பையன் கொடுத்த பல்பும் ஜூப்பரு :-))
புது வீட்டுக்கு மறுபடியும் வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள் சகோ!!
வீட்டை கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார்ன்னு சும்மாவா சொன்னாங்க..
புது இல்லம் அமைவது என்பதும் ஒரு கொடுப்பினை. அதற்காகப் பட்ட கஷ்டங்கள் எல்லாம் புதுமனை புகுவிழா நடக்கையில் மறந்துவிடும். அந்த பரவசத்தை நீங்களும் அடைந்ததில் மிகமிக மிகழ்ச்சி எனக்கு, என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துகள்! (எனக்குக்கூட உங்களை சந்திக்கணும்னு ஆசை உண்டு நிறைய)
விழா சிறப்பாக நடந்தது அறிந்து மகிழ்ச்சி. மீண்டும் என் நல்வாழ்த்துகள்!
வாங்க கோவை நேரம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க தனபாலன் சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க துளசி கோபால் அவர்களே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
//சீனா ஐயா அவர்களின் அன்புக்கு எல்லையே இல்லை!!!!//
உண்மைதான் சென்ற முறை காரைக்குடி வந்தபோது எங்களது இல்லம் வந்து பார்த்துச் சென்றார். இந்த முறையும் நேரில் வந்து வாழ்த்தினார்.
//பதிவர் குடும்பமுன்னுதான் நான் எப்பவும் நம்மவர்களை நினைக்கறேன்.// எல்லாருக்குள்ளும் எதோ ஒரு பந்தம் இருக்குங்க...
வாங்க சங்கவி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க அமைதிச்சாரல் புவனாக்கா...
புள்ளைங்களுக்கு எம்புட்டு சந்தோஷங்கிறீங்க...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க பாலகணேஷ் அண்ணா...
உண்மைதான்... இன்னும் கஷ்டப்பட்டாலும் சுகமான கஷ்டமாத்தான் இருக்கு...
கண்டிப்பா சந்திக்கலாம் அண்ணா... அடுத்த முறை ஊருக்கு வரும்போது கண்டிப்பாக உங்களைச் சந்திக்கிறேன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க மேனகாக்கா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ராமலஷ்மி அக்கா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
பட்ட கஷ்டத்துக்கு ...வீடு அழகா இருக்கு ...
பட்ட கஷ்டத்துக்கு ...வீடு அழகா இருக்கு...
கருத்துரையிடுக