மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 8 ஜூலை, 2013

பேராசிரியர் பெருமாள் முருகனின் கட்டுரை - பகுதி -2

புதுச்சேரி, பிரெஞ்சு நிறுவனமும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்து மார்ச், 2013, 6,7,8 ஆகிய நாட்களில் நடத்திய ‘இலக்கணம் கற்பித்தல்’ கருத்தரங்கில் ‘இலக்கணம் கற்பித்தல்: ஆசிரிய அனுபவம்’ என்னும் தலைப்பில் பேராசிரியர் வழங்கிய கட்டுரை.

கட்டுரை புதுச்சேரியில் இருந்து வெளியாகும் ‘நற்றிணை’ கலை இலக்கியக் காலாண்டிதழ் ஏப்ரல் - ஜூன் 2013 இல் வெளியாகியிருக்கிறது.

--------------------------
தொடர்ச்சி....

இவற்றை ஒருமுறை வகுப்பில் சொன்னபோது இரண்டு மாணவர்கள் சிரித்துக் கொண்டிருந்தனர். வகுப்பில் மாணவர்கள் சிலர் மட்டும் சிரித்தால் அதற்கும் நாம் நடத்தும் பாடத்திற்கும் சம்பந்தம் இருக்கும் என்பது என் அனுபவம். அவர்களுக்குத் தோன்றும் ஒரு விஷயத்தை ஏதோ காரணத்தின் பொருட்டு ஆசிரியரிடம் சொல்லாமல் அவர்களுக்கு உள்ளேயே பரிமாறிக் கொள்கிறார்கள் என்று பொருள். அம்மாணவர்களை விசாரித்த போது ஒருவர் ‘ஆய் வருதுன்னு சொல்றாங்கய்யா’ என்றார். வகுப்பில் எல்லாரும் சிரித்தனர். இன்னொருவருக்கு வெட்கமாகிவிட்டது. ‘என்னப்பா இது சின்னக் கொழந்தைகளாட்டம்’ என்றேன். ‘நீங்களே ஆட்டம்னு சொல்றீங்கய்யா’ என்றார் வேறொரு மாணவர். நாம் பேசுவதைக் கவனித்தால் நிறைய உதாரணங்களை எடுக்க முடியும். நாம் பயன்படுத்தும் மொழி எப்படி அமைந்திருக்கிறது என்று வரையறைப்படுத்தி விளக்குவதுதானே இலக்கணம். மீண்டும் அம்மாணவரைப் பார்த்து ‘அவசரமாப்பா. வெளிய போயிட்டு வரணுமா’ என்றேன்.

அவர் பதற்றத்தோடு ‘இல்லீங்கய்யா. ஆய் வரும்னு சொன்னங்கய்யா’ என்றார். ‘குழந்தை பூவாய்ச் சிரித்தது’ என்று சொன்னால் அதில் வரும் ‘ஆய்’ என்பது உவம உருபுதானே என்பது அவர் கேட்ட கேள்வி. அந்த உதாரணம் அவருக்குத் தோன்றியிருக்கிறது என்பது எவ்வளவு பெரிய விஷயம். அவர் கேட்ட பிறகே அதைப் பற்றி எனக்கு யோசனை விரிந்தது. ஆய் என்பதைப் போல என்னும் பொருளில் எடுத்துக்கொள்ள முடியுமா? பூவாய் என்பது பூவாக, பூவாகி என வரலாம். ஆக, ஆகி என்றால் அவை உவம உருபுகள் அல்ல. பூவாகவே மாறி என்று பொருள் வரும்போது உருவகத்தன்மை வந்துவிடுகிறது. பூவாய்ச் சிரித்தது, கண்ணாய்க் காத்தான், மாடாய் உழைத்தான் என்றெல்லாம் வருகின்றன. இவ்விடங்களில் ஆய் என்பதைப் போல என்று பொருள் எடுத்தால்தான் பொருந்தும். ஆகவே இன்றைய உவம உருபாக ஆய் என்பதையும் சேர்க்கலாம் என்று தோன்றிற்று. மாணவர் கொடுத்த தரவு இது.


பாடல் முழுக்கக் கலித்தளை அமைந்தமைக்குக் காரிகை உரையில்
செல்வப்போர்க் கதக்கண்ணன் செயிர்த்தெரிந்த சினவாழி
முல்லைத்தார் மறமன்னர் முடித்தலையை முறுக்கிப்போய்
எல்லைநீர் வியன்கொண்மூ இடைநுழையு மதியம்போல்
மல்லலோங் கெழில்யானை மருமம்பாய்ந் தொளித்ததே.

என்னும் பாடல் உதாரணமாகக் காட்டப்பட்டுள்ளது. ‘இது மயக்கமில்லாக் கலித்தளையான் வந்த செய்யுள்’ என்று உரை கூறுகிறது. இப்படி வேறு பாடல் ஏதும் கிடைக்காமையால் நானும் இதையே உதாரணமாகச் சொல்லிக்கொண்டு வந்தேன். ஒருமுறை வகுப்பில் ‘இந்தப் பாடலை அலகிட்டுத் தளை எழுதுங்கள்’ என்று பயிற்சி கொடுத்தேன். ஒரு மாணவர் எழுந்து ‘இதில் நிரையொன்றாசிரியத்தளை வருகிறது’ என்றார். இறுதியடியில் ‘மல்லலோங் கெழில்யானை’ என்பது நிரையொன்றாசிரியத்தளை. மல்லலோங்கு எழில்யானை என்று கொண்டால் கலித்தளைதான். ஆனால் புணர்ச்சி விதிப்படி அவ்விதம் கொள்ள இயலாது. அன்றைக்கு எனக்கு மாணவர்கள் மூலம் கிடைத்த புது விஷயம் இது. அதுமுதல் ‘இந்த ஓரிடத்தில் மட்டும் நிரையொன்றாசிரியத்தளை வரும்’ என்று சொல்லத் தொடங்கினேன்.

சில இலக்கணப் பகுதிகளை மாணவர்களுக்குப் புரிய வைப்பது மிகவும் கடினம். குற்றியலிகரம், குற்றியலுகரம் ஆகியவை அனேகமாக எட்டாம் வகுப்புப் பாட நூலிலேயே வருகின்றன. எதற்கு இவற்றைப் பள்ளிப் பாடத்திட்டத்தில் வைத்திருக்கிறார்கள் என்று புரியவில்லை. தமிழிலக்கியம் பயிலும் மாணவர்களே அறிந்துகொள்ள வேண்டிய பகுதி இது. பிறருக்கு அவசியம் இல்லை. புணர்ச்சி விதி கொண்டு செய்யுளைச் சந்தி பிரித்துப் படிப்பதற்குத் தேவையான இலக்கணம் இது. பிறர்க்கு எதற்கு இது? சிறு வகுப்பிலிருந்து பயின்றாலும் மாணவர்க்குப் புரிய வைப்பது மிகவும் கடினம். குற்றியலுகரத்தைப் புரிய வைத்துவிடலாம். குற்றியலிகரத்தைப் புரிய வைப்பது சாதாரணமல்ல. நன்னூலிலும் சரி, பிற நூல்களிலும் சரி, குற்றியலிகரத்தை முதலில் கொடுத்துவிட்டுப் பின்னரே குற்றியலுகரத்தைக் கொடுத்திருப்பார்கள். இகரம் முதலிலும் உகரம் அடுத்தும் வரும் அகர வரிசை முறையைப் பின்பற்றியதால் போலும் இது. ஆனால் குற்றியலுகரத்தைப் புரிந்துகொண்டால்தான் குற்றியலிகரத்தைப் புரிந்துகொள்ள இயலும். நான் எப்போதும் முதலில் குற்றியலுகரத்தை நடத்திவிட்டுப் பின்னரே குற்றியலிகரத்தைச் சொல்லித் தருவேன்.

குற்றியலிகரம் இரண்டு விதமாகச் செய்யுளில் வரும். கேண்மியா, சொன்மியா ஆகிய சொற்களில் இடம்பெறும் மியா என்னும் அசைச்சொல்லில் இகரம் தனக்குரிய மாத்திரையில் குறைந்து ஒலிக்கும். இதை விளக்குவதே கடினம். அசைச்சொல் என்றால் என்ன, மியா என்பது எப்படி அசைச்சொல் ஆகிறது, அது எப்படி முன்னிலை அசைப் பொருளில் வரும், கேண்மியா சொன்மியா ஆகிய சொற்களுக்குப் பொருள், அவை செய்யுளில் வருமிடங்கள் உள்ளனவா ஆகியவற்றைச் சொன்ன பிறகே மி என்னும் எழுத்தில் வரும் இகரம் தனக்குரிய மாத்திரையில் குறைந்து ஒலிக்கும் என்பதை விளக்க வேண்டும். அதுவும் பூனை போல ‘ம்(இ)யாவ்’ என்று கத்திக் காட்டி இதில் மி என்னும் எழுத்தில் இகரம் முழுவதுமாக ஒலிக்கப்படுவதில்லை, அது போலத்தான் ‘கேண்மியா, சொன்மியா’ ஆகியவற்றிலும் இகரத்தை ஒலிக்கிறோம் என்று சொன்னால் ஓரளவுக்குப் புரியும்.

இன்னொன்று, குற்றியலுகரம் எப்போது குற்றியலிகரமாக மாறும் என்பது. இதை விளக்கும்போது ஒருமுறை வகுப்பில் இப்படிச் சொன்னேன்: 

‘நிலைமொழி ஈற்றில் குற்றியலுகரம் நின்று வருமொழி முதலில் யகரம் வந்தால் குற்றியலுகரத்தில் உள்ள உகரம் இகரமாகத் திரியும்.’

மாணவர்களிடம் ஒருசேரச் சிரிப்பலை பரவியது. ‘தட்டானுக்குச் சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்கிற மாதிரி இருக்குதா?’ என்றதும் ஆமோதித்துச் சிரித்தார்கள். இதை விளக்குவதற்குக் கொடுக்கப்பட்டிருக்கும் உதாரணங்கள்: நாகு+யாது = நாகியாது, கொக்கு + யாது = கொக்கியாது. இவை எங்காவது செய்யுளில் பயின்று வருகின்றனவா? இதுவரை என்னால் அறிய முடியவில்லை. இவ்வளவு சிரமப்பட்டுக் குற்றியலிகரத்தை அறிந்துகொள்ளத் தேவையென்ன என்னும் வினாவை மாணவர் கேட்டால் பெரும்பாலான ஆசிரியர்களுக்கு விடையளிக்கத் தெரியாது. மாணவர்கள் கேட்பதில்லை என்பதுதான் ஆசிரியர்களுக்கு வசதி.

செய்யுளில் குற்றியலிகரம் வந்தால் அதை ஒற்றெழுத்துப் போலக் கருதலாம், அலகிடத் தேவையில்லை என்பதற்காகவே குற்றியலிகரத்தை அறிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. குற்றியலுகரம் போலப் பல இடங்களிலும் குற்றியலிகரம் வருமா? ம்கூம். மிக அரிதாகச் சில இடங்களில் வரும். அவ்வளவுதான். செய்யுளில் இருந்து உதாரணம் காட்டுவதும் கடினம். இன்றைக்குப் புத்தகச் சந்தையில் கிடைக்கும் பழந்தமிழ் இலக்கியப் பதிப்புகளைக் கொண்டு யாப்பிலக்கணத்திற்கு உதாரணம் காட்டுவது இயலாது. திருக்குறளுக்குச் சந்தி பிரிக்காமல் யாப்பிலக்கணப்படி அமைந்த பதிப்பு ஏதும் இன்று கிடைக்கிறதா? புணர்ச்சி விதிகள் பற்றியும் சீர்கள் பற்றியும் எந்தக் கவனமும் அற்று யாப்பிலக்கணத்திற்கு விரோதமான முறையிலான வெளியீடுகளே குவிந்து கிடக்கின்றன. இலக்கணம் கற்பிப்பதற்கான கருவி நூல்கள் போதுமான அளவுக்கு இல்லை என்பதும் இருப்பினும் அவை கிடைப்பதில்லை என்பதும் பெரும் குறை. குற்றியலிகரத்தைப் புரிய வைக்கவும் அதன் பயன்பாட்டை விளக்கவும் நல்ல உதாரணம் ஒரு குறள். எல்லாருக்கும் தெரிந்த குறள்தான் இது. தமிழக அரசுப் பேருந்துகளில் மிகுதியாக எழுதப்பட்டிருக்கும் குறள்களில் இதுவும் ஒன்று.

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.

இது மு.வரதராசனார் கொடுத்துள்ள முறை. இக்குறள் கி.வா.ஜவின் ஆராய்ச்சி உரைப் பதிப்பிலும் காரிகை ஒழிபியலிலும் புணர்ச்சி விதிப்படியும் யாப்பு முறைப்படியும் இப்படி அமைந்திருக்கிறது:

குழலினி தியாழினி தென்பதம் மக்கள்
மழலைச்சொற் கேளா தவர் (66)

இனிது என்னும் உயிர்த்தொடர்க் குற்றியலுகரத்தின் முன் யாழ் என்னும் சொல் வருகிறது. ஆகவே இனிது என்பது இனிதி என்றாகும். தி குற்றியலிகரம் ஆதலால் அதை அலகிடக் கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது. எடுத்தால் தளை தட்டும். இவ்விதம் செய்யுளில் குற்றியலிகரம் வரும் என்று விளக்க வேண்டும். இப்படி விளக்கினால் குற்றியலிகரம் நடத்தவே இரண்டு வகுப்புகள் தேவை. இவ்வாறு கடினமான பகுதிகள், நேரம் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டியவை என்பவற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்டு பாடத்திட்டம் அமைய வேண்டும். இலக்கணம் கற்பித்தலுக்கு நவீன உணர்வுள்ள கருவி நூல்கள் இல்லவே இல்லை. அவையெல்லாம் இருப்பின் இன்னும் எளிமையாக இலக்கணத்தைக் கற்பிக்க முடியும் என்பது என் எண்ணம். அப்படியான நூல்கள் உருவாக வேண்டும் என்பது என் கனவு.

என் அனுபவங்களிலிருந்து தொகுத்துச் சொன்னால் இப்படிச் சொல்லலாம்.

‘இப்படித்தான் இருக்க வேண்டும்’ என்று சொல்வதல்ல இலக்கணம்; இப்படி இப்படி இருக்கிறது என்று வரையறைப்படுத்திக் கூறுவதே இலக்கணம் என்னும் புரிந்துணர்வை மாணவர்க்கு உருவாக்கும் வகையில் இலக்கணக் கற்பித்தல் இருப்பதே நல்லது. நடைமுறையோடும் இலக்கியத்தோடும் தொடர்புபடுத்திக் காட்டல், கழிந்த பழையவற்றையும் புகுந்த புதியவற்றையும் சுட்டிக் காட்டுதல், மாணவர்களை ஈடுபடுத்தல், ஆர்வமூட்டும் பயிற்சிகளை வழங்கல் ஆகியவை இலக்கணக் கற்பித்தலில் அவசியமானவை எனக் கருதுகிறேன். இவை குறிப்பிடத்தக்க வகையில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துபவை என்பது என் அனுபவம்.

‘தோன்றாத் தோற்றித் துறைபல முடிப்பினும் தான்தற் புகழ்தல் தகுதி அன்றே’ என்பது நன்னூல். எனினும் மாணவர்களிடம் எனக்குக் கிடைத்த நற்சான்று ஒன்றை இங்கே பகிர்ந்து கொள்வது தற்பெருமை ஆகாது என நினைக்கிறேன்.

ஆகுபெயர் நடத்தும் போது ஒரு மாணவரிடம் ‘பஸ்ஸுல என்னன்னு கேட்டு டிக்கட் வாங்கின’ என்றேன்.

‘காலேஜ்னு கேட்டு வாங்கினேன்’ என்றார்.

‘உனக்கு டிக்கட் வாங்காம காலேஜ்க்கு எதுக்கு வாங்குன?’ என்றேன்.

‘எனக்குத்தாங்கய்யா வாங்குனன்’

‘காலேஜ்னு எதுக்குக் கேட்ட?’

‘காலேஜ்ல தாங்கய்யா நான் படிக்கறன்’

‘அப்பக் காலேஜ்னு கேட்டாக் காலேஜ்ல படிக்கற உன்னயக் குறிக்குது. அப்படித்தானே. அதுதான் ஆகுபெயர்.’

அதன்பின் மாணவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் ஊர்ப் பேருந்து நிறுத்தங்களைச் சொன்னார்கள். இடவாகு பெயருக்கு ஏராளமான உதாரணங்கள் கிடைத்தன.

அடுத்த சில நாள்களில் அடுக்குத் தொடர் நடத்த நேர்ந்தது. அடுக்குத் தொடருக்கு கொடுக்கப்படும் உதாரணங்கள் ‘பாம்புபாம்பு’, ‘தீதீ’ என்பவைதான். நான் அன்றைக்கு நடைமுறை உதாரணங்கள் பலவற்றைச் சொன்னேன். எடுஎடு, ஓடுஓடு, பிடிபிடி என்று அன்றாடம் வினைச்சொற்களைக் கொண்டு நாம் பேசும் அடுக்குத் தொடர்கள் அனேகம். அவற்றைச் சொல்லிவிட்டு ‘நாம் பேசும்போது கவனித்து அடுக்குத் தொடர்களை எழுதி வாருங்கள்’ என்று சொன்னேன். அப்போது மாணவர் ஒருவர் தாமதமாக வந்தார். தயக்கத்தோடு நின்ற அவரைப் பார்த்து ‘வாவா’ என்றேன். உள்ளே நுழைந்தார். அவரைத் தொடர்ந்து ‘போபோ’ என்றேன். மாணவர்களுக்கு என் நோக்கம் புரிந்தது. பெருமகிழ்ச்சியோடு சிரித்தனர். மாணவர் அவர் இடத்திற்குப் போய் நின்றார். ‘ஒக்காரு ஒக்காரு’ என்றேன். மாணவர்களிடம் மீண்டும் சிரிப்பு. தாமதமாக வந்த மாணவருக்குத் தன்னைக் கேலி செய்து எல்லாரும் சிரிக்கிறார்களோ என்று சந்தேகம் வந்துவிட்டது. தயங்கியபடி அவர் உட்கார்ந்ததும் ‘நோட்ட எடுஎடு’ என்றேன். கரும்பலகையைக் காட்டி ‘எழுது எழுது’ என்றேன்.

அப்போது வகுப்பில் எழுந்த மகிழ்ச்சி ஆரவாரம் என் காதுகளில் இப்போதும் ஒலிக்கிறது. தாமதமாக வந்த மாணவரைப் பார்த்து ‘நீ இன்னைக்கு லேட்டா வந்ததுக்கு ரொம்ப ரொம்ப நன்றி நன்றி’ என்று சொல்லி அவ்வுரையாடலை முடித்தேன். அன்றைக்கு அப்படி ஓர் அற்புதமாக வகுப்பு அமைந்தது. இலக்கண வகுப்பு என்றால் சவக்களை படிந்த முகத்தோடு மாணவர்கள் அமர்ந்திருப்பார்கள் என்னும் பொதுக்கருத்தைத் தூள் தூளாக்கிய அன்றைக்கு என்னை அறியாமல் பெருமிதம் ஒன்று எனக்குள் வந்து சேர்ந்துகொண்டது. வகுப்பில் பெரும்பாலும் பேசாமலே இருக்கும் மாணவர் ஒருவர் அப்போது எழுந்து ‘இலக்கணத்த இப்பிடி யாரும் சொல்லித் தந்திருந்தா கஷ்டமாத் தெரிஞ்சிருக்காதுங்க அய்யா’ என்றார். அதை என் கற்பித்தல் முறைக்குக் கிடைத்த பெரும்பாராட்டாகக் கருதிக் கொண்டிருக்கிறேன்.

இறுதியாக இலக்கணம் குறித்த என் அணுகுமுறை என்ன என்பதைச் சான்று ஒன்றைக் காட்டி முடிக்கிறேன். தமிழ் இலக்கிய மாணவர்கள் பங்கேற்ற பயிற்சி வகுப்பு ஒன்றில் ஒரு கேள்வி வந்தது.

சுவரில், சுவற்றில் – எது சரி?

நான் அவற்றைப் பிரித்துக் காட்டச் சொன்னேன்.

சுவர் + இல் = சுவரில் என்பது சரி.

சுவர் + அற்று + இல் = சுவற்றில் என்பதில் அற்றுச் சாரியை வந்துள்ளது என்றனர்.

ஆகவே அதுவும் சரிதான் என்றேன்.

இன்னும் சொல்லப் போனால் இன்றைய காலத்தில் சுவற்றில் என்பதே மிகச் சரி. ஆனால் நீங்கள் தேர்வில் சுவரில் என்பதுதான் சரி என்று எழுத வேண்டும். அப்போதுதான் மதிப்பெண் கிடைக்கும்.

இப்படிச் சொன்னபோது மாணவர்கள் சிரித்தனர். அவர்களோடு சேர்ந்து நானும்.

-முற்றும்...

நன்றி : பேராசிரியருக்கு...
-'பரிவை' சே.குமார்

2 எண்ணங்கள்:

sivanesan.N சொன்னது…

பழையன கழிதலும் புதியன புகுதலும் காலத்தால் வழுவல.இலக்கண்த்திற்கு உதாரணத்திற்கென்றே ஒரு பழை பாடல் இருக்கும் ஒரு சிலது புரியும் ஒரு சிலது புரியாது.சூழலுக்கேற்ப புரியும் வகையில் இலக்கணம் நடத்துவது சிறந்தது. காலங்கள் பற்றி கூறும்போது உண்டான்,உண்கிறான்,உண்பான் நேற்று இன்று நாளை என்ற திரைப்படத்தின் பெயரை கூறும் போது புரிதல் எளிதாகின்றது.பழங்காலதில் அசிரியர் மிரட்டுதலுடன் பாடம் நடத்தும் போது ஆய் வரும். தாங்கள் பாடம் மழிச்சியில் ஆய் வந்தது.அது இலக்கணத்திற்கு ஆகி வந்தது.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

கற்பித்தல் முறைக்குக் கிடைத்த பெரும் பாராட்டாக அமைந்த நிகழ்வுகளைப் பகிர்ந்தமைக்கு வாழ்த்துகள்..