மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 27 ஜூலை, 2013

மனசின் பக்கம்... கொஞ்சம் வலி கொஞ்சம் சுயம்

தேவகோட்டையில் நேற்று முன்தினம் பட்டப்பகலில் வீடு புகுந்து செட்டியாரைக் கொலை செய்து ஆச்சியை கத்தியால் குத்தி நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றிருக்கிறது ஒரு கும்பல். இது இப்போது தேவகோட்டைப் பகுதியில் அடிக்கடி நிகழும் நிகழ்வாகிவிட்டது. கொலையாளிகளைக் கண்டுபிடிக்கச் சொல்லி அவர் சார்ந்த கட்சியும், செட்டியார்களும், சமுதாய அமைப்புக்களும் நேற்று போராட்டம் நடத்தியிருக்கின்றன. சட்டம் ஒழுங்கை சரி செய்வோம் என்று சொல்லும் காவல்துறையினர் ஒரு சாராருக்குப் பல்லக்குத்தூக்கிகளாகவே பலகாலமாக இருந்து வருகின்றனர். லஞ்சம் கொடுத்தால் வேலை என்றே தொந்தி தூக்கிய போலீசாரும் உலா வருகின்றனர். போக்குவரத்துப் பிரச்சினையையே சரி செய்யாத காவல்துறை இது போன்ற கொலைகளைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது.

*****

பாராட்டு விழாக்களுக்காக படப்பிடிப்பை ரத்து செய்து தங்கள் அன்பைக் காட்டும் தமிழ்த் திரைப்பட உலகம் மூன்று தலைமுறைக்கு பாட்டு எழுதிய வாலிபக் கவிஞன் வாலியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தியவுடன் அவரது இறுதி ஊர்வலத்தன்று அவரவர் படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருந்தனர் என்றும் அந்த மூத்த கவிஞனுக்கு ஒரு இரங்கற்கூட்டம் கூட நடத்தப்படவில்லை என்றும் பத்திரிக்கைகளில் படித்தபோது நடிகர்கள் நடிகர்கள்தான் என்பது அப்பட்டமாகத் தெரிந்தது.

                                   *****

நண்பர் ஸ்டார்ஜன் இண்டிபிளாக்கரில் சிறந்த பிளாக்கருக்கான போட்டி இருக்கு நீங்களும் பதிந்து வையுங்கள் குமார் என்று சாட்டில் தெரிவித்தார். நானும் சரியென்று சொல்லி இதுவரை அந்தத் தளத்திற்குச் செல்லாததால் இரண்டு தினம் முன்னர் அங்கு சென்று முதலில் எனது வலைப்பூவை இணைத்து அனுமதி வாங்க நினைத்து அதற்கான முஸ்தீப்புக்களைச் செய்தேன். உடனே எனது மின்னஞ்சல் முகவரிக்கு காத்திருங்கள் என்று தகவல் வந்தது. நேற்று மீண்டும் எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது அதில் உங்கள் வலைப்பூவை எங்களுடன் இணைக்க முடியாது... அனுமதி நிராகரிக்கப்பட்டதுன்னு வந்துச்சு... என்னடான்னு அங்கிட்டு இங்கிட்டு எல்லாப் பக்கமும் போய் பார்த்த அசல் பதிவுகளைவிட நகல் பதிவுகள் அதிகமிருக்குன்னு அவங்க இணைச்ச இணைப்புல போனப்போ சொன்னுச்சு. நானும் படித்ததில் பிடித்தது, சினிமா செய்திகள் என கொஞ்சம் படித்தவற்றைப் பகிர்வேன். அப்படியிருக்கலாமுன்னு போய் பார்த்தா நான் எழுதிய கதைகள், கவிதைகள், கட்டுரைகள், ஊருக்குப் போறேன்னு சொன்ன பதிவுகள் அனைத்தையும் நகல்ன்னு சொல்லிருச்சு. அடப்பாவி மக்கா எழுதவன் அசலா இருக்க நகலாமே நகல்ன்னு நமக்கு இண்டிபிளாக்கர் என்ன கொடுத்தாலும் வேண்டாம் மக்கான்னு வந்துட்டேன்.

                                   *****

எங்கள் ஊருக்கு அருகில் ஒரு பையன் காதல் திருமணம் செய்திருக்கிறான். அவனும் பெங்களூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறான். அந்தப் பெண் கர்ப்பிணியாக இருந்ததால் ஊரில்தான் இருந்திருக்கிறது. இரட்டைக் குழந்தை என்பதை ஸ்கேனில் தெரிந்து ரொம்ப சந்தோஷமாக இருந்திருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்னர் வலி எடுக்க அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். முதல் குழந்தை எடுக்கும் போது என்ன செய்தார்களோ தெரியவில்லையாம். அந்தப் பெண் இறந்து போக, கொஞ்ச நேரத்தில் வயிற்றுக்குள் இருந்த குழந்தையும் இறந்து போச்சாம். இந்தக் கொடுமையில் மேலும் ஒரு கொடுமையாக வெளியில் எடுக்கப்பட்ட குழந்தையும் இறந்து போச்சாம். மூவரையும் பறி கொடுத்த குடும்பம் கதறித்துடித்து பெங்களூரில் இருந்த பையனுக்கு இலைமறை காயாக விவரத்தைச் சொல்லாமல் போட்டு உடைக்க, அவனும் இரயிலுக்கு உயிரைக் கொடுத்துவிட்டானாம். என்ன சொல்வது இங்கு நடத்த தவறுக்கு காரணம் படைத்தவனா இல்லை மருத்துவர்களா... இந்தச் செய்தி கேட்டது முதல் கஷ்டமா இருக்கிறது. நால்வரின் ஆத்மாவும் சாந்தியடையட்டும்.

                                   *****

போன வாரம் யூரிக் ஆசிட் பிரச்சினையால் கால் நடக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டுப் போனேன். மருத்துவம் மாத்திரை என எடுத்தும் வலி குறைந்திருந்தாலும் இன்னும் சில சமயங்களில் வலி இருக்கிறது. அதைச் சாப்பிடாதே... இதைச் சாப்பிடாதே என மருத்துவர் ஒரு லிஸ்டே கொடுத்தார். அதெல்லாம் பார்த்தால் எதையும் சாப்பிட முடியாது போல. இந்த வயதிலேயே எல்லாத்தையும் ஒதுக்கிட்டு சோறு மட்டும் எப்படி சாப்பிடுவது... யூரிக் ஆசிட்டைக் குறைக்க எதாவது தமிழ் மருத்துவம் இருக்கா... என்ன மருந்து சாப்பிடலாம்... தெரிந்த நண்பர்கள் சொல்லுங்களேன். நானும் முயற்சிக்கிறேன்.

                                   *****

அப்புறம் சாரு விமர்சகர் வட்டம் ஒரு சிறுகதைப் போட்டி அறிவிச்சிருந்தாங்க... சரி நம்மளும் கலந்துக்கலாமுன்னு முன்னாடி எழுதிய ஒரு கதையை அனுப்பி வச்சேன். அவங்களும் போட்டியில சேர்த்துக்கிட்டாங்க... அவங்க பக்கத்துல பதிஞ்சிருக்காங்க... அங்க போயி படிச்சிட்டு கதை பிடிச்சிருந்தா 'Rate UP' கொடுங்க.... பிடிக்கலைன்னா 'Rate Down' கொடுங்க... பின்னூட்டம் தேவையில்லை... அப்படியே போட்டாலும் என்னோட பெயரை அங்கு குறிப்பிட வேண்டாம். காரணம் ஆசிரியர் யார் என்பது வெளியில் தெரியக்கூடாது என்பதே முக்கியமான நிபந்தனை. அந்த நிபந்தனையை என் நண்பர்கள் அடிச்சு உடச்சிட்டாங்க. இருந்தாலும் நீங்களும் உடைச்சுடாதீங்கன்னு முன்னெச்சரிக்கையா சொல்லிக்கிறேன். அப்புறம் அங்க ஒரு நண்பர் முதல் மரியாதை கதையை காபி பண்ணியிருக்கதா சொல்லியிருக்கார். நானும் பலமுறை முதல் மரியாதை பார்த்திருக்கிறேன். கதை இப்படின்னு என்னக்குத் தெரியலை... முதல் மரியாதை மாதிரி இருக்கானு எனக்குச் சொல்லுங்க உறவுகளே... அங்கே செல்ல இணைப்பு இதோ... 
                        நெஞ்சம் மறப்பதில்லை 

                                   *****

கால் வலியால் நிறைய எழுத வேண்டியவைகளை ஒதுக்கி வச்சாச்சு. அதில் தொடர்கதையும் தொடராமல் கிடக்கு... அதற்கான பகுதிகள் எழுதப்படாமலே கிடக்கிறது. வாரம் ஒரு நாள் எதாவது தலைப்பில் ஒரு கட்டுரை எழுதலாம் என ஆரம்பித்து இரண்டு வாரம் எழுதியாச்சு. இந்த வாரம் அதுவும் கோவிந்தா... வேலையிலும் கொஞ்சம் பிரச்சினை... வேறு கம்பெனிக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்... கடவுள் புண்ணியத்தில் கிடைத்தால் பல கஷ்டங்கள் நீங்கும். பார்க்கலாம்.

நன்றி மீண்டும் மற்றுமொரு மனசின் பக்கத்தில் சந்திப்போம்.

-'பரிவை' சே.குமார்.

18 கருத்துகள்:

 1. பாவம் அந்த இளைஞரும், அவர் குடும்பமும். ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன். அப்புறம் உங்க கால்வலி குணமாகவும் வேண்டிக்குறேன் சகோ!

  பதிலளிநீக்கு
 2. இண்டிபிளாக்கர் தமிழ் தளங்களுக்கு மதிப்பில்லை... முதலில் உடம்பை கவனித்துக் கொள்ளவும்... மற்றவை அப்புறம்... நன்றி...

  பதிலளிநீக்கு
 3. //மூத்த கவிஞனுக்கு ஒரு இரங்கற்கூட்டம் கூட நடத்தப்படவில்லை என்றும் பத்திரிக்கைகளில் படித்தபோது நடிகர்கள் நடிகர்கள்தான் என்பது அப்பட்டமாகத் தெரிந்தது//
  உண்மைதான். ஆடும் வரை கூட்டம் வரும். ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும்

  பதிலளிநீக்கு
 4. யூரிக் ஆசிட் பிரச்சனை.புதிதாக இருக்கிறதே!

  பதிலளிநீக்கு
 5. கதை வாசிக்கிறேன்.

  செய்தி 4 வருத்தம் அளிக்கிறது.

  உடல் நலம் பார்த்துக் கொள்ளுங்கள்.

  பதிலளிநீக்கு
 6. நோய் குறித்து விபரமாக எழுதுங்க.

  பதிலளிநீக்கு
 7. உங்க கால்வலி கவனித்துக் கொள்ளவும்

  பதிலளிநீக்கு
 8. வாங்க ராஜி அக்கா...
  தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
  கால்வலி கவனமாய்த்தான் பார்த்து வருகிறேன்...

  பதிலளிநீக்கு

 9. வாங்க தனபாலன் சார்
  ஆமாம்....இண்டிபிளாக்கரில் தமிழ் தளங்களுக்கு மதிப்பில்லைதான்...
  வெளிநாட்டு வாழ்க்கை... ம்.... பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்....
  அதிகம் எழுதுவதில்லை.
  தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 10. வாங்க முரளிதரன் அண்ணா...
  உண்மைதான் ஆடும் வரைதான் எல்லாமே...


  ம்... நம் உடம்பில் யூரிக் ஆசிட் அதிகபட்சமாக 7mg/dl வரை இருக்கலாம். ஆனால் எனக்கு 10.67 இருக்கு. இதனால் கை கால் முட்டிகளில் வலி வருகிறது. வந்தால் சாதாரண வலி இல்லை. உயிர் போற வலி. 2 வருசத்துக்கு முன் இங்கு கட்டைவிரல் அருகில் வந்தது. இங்கு சரியாகாமல் மதுரை வந்து மாமாவுக்கு தெரிந்த மருத்துவரிடம் பார்த்து சரி செய்தேன். பின்னர் வரவில்லை. தற்போது மீண்டும்....

  தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு

 11. ம்... நம் உடம்பில் யூரிக் ஆசிட் அதிகபட்சமாக 7mg/dl வரை இருக்கலாம். ஆனால் எனக்கு 10.67 இருக்கு. இதனால் கை கால் முட்டிகளில் வலி வருகிறது. வந்தால் சாதாரண வலி இல்லை. உயிர் போற வலி. 2 வருசத்துக்கு முன் இங்கு கட்டைவிரல் அருகில் வந்தது. இங்கு சரியாகாமல் மதுரை வந்து மாமாவுக்கு தெரிந்த மருத்துவரிடம் பார்த்து சரி செய்தேன். பின்னர் வரவில்லை. தற்போது மீண்டும்....

  தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு

 12. வாங்க ராமலக்ஷ்மி அக்கா....
  வாசியுங்கள்... உங்கள் கருத்தை சொல்லுங்க....
  இரண்டு செய்திகள் வருந்தத் தக்கவைதான்....
  கண்டிப்பாக உங்களது அன்பினால் எனது கால்வலி சரியாகும்....

  தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 13. வாங்க ஜோதிஜி அண்ணா....
  நம் உடம்பில் யூரிக் ஆசிட் அதிகபட்சமாக 7mg/dl வரை இருக்கலாம். ஆனால் எனக்கு 10.67 இருக்கு. இதனால் கை கால் முட்டிகளில் வலி வருகிறது. வந்தால் சாதாரண வலி இல்லை. உயிர் போற வலி. 2 வருசத்துக்கு முன் இங்கு கட்டைவிரல் அருகில் வந்தது. இங்கு சரியாகாமல் மதுரை வந்து மாமாவுக்கு தெரிந்த மருத்துவரிடம் பார்த்து சரி செய்தேன். பின்னர் வரவில்லை. தற்போது மீண்டும் வலி இந்த முறை இடது கால் முட்டி, 3நாள் நடக்க முடியாமல் மருத்துவ விடுப்பில் இருந்தேன். இப்போ இன்னும் லேசான வலி இருக்கு... வேகமாக இல்லாவிட்டாலும் நடக்க முடிகிறது. சாப்பாட்டில் பயறு, பருப்பு, முட்டைக்கோஸ், உருளை, கத்திரி, பால், தயிர் இப்படி நிறைய ஜட்டங்களை சாப்பிடக்கூடாதாம்....
  இந்த வயசு எல்லாம் சாப்பிடும் வயசு... சரி கொஞ்ச நாள் இருந்து பார்க்கலாம்.
  தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 14. வாங்க சரவணன் அண்ணா....
  கண்டிப்பாக பார்த்துக் கொள்கிறேன்..
  தங்களின் அன்புக்கு நன்றி.
  தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 15. பகிர்வு நன்று.உடல் நிலையைக் கவனித்துக் கொள்ளுங்கள்.வேறு கம்பனியில் வேலை கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
 16. தங்கள் உடம்பை கவனித்துக் கொள்ள்வும்...

  4ஆம் செய்தி வருத்தமாய் இருக்கு..

  பதிலளிநீக்கு
 17. யூரிக் ஆசிட்

  எலுமிச்சை சாறிலேயே
  சரிசெய்யலாம் ..!


  http://www.lankasritechnology.com/view.php?202609F220eZnBd24eaemOlJ4cbdQCAAcddceKMQMdbc4JlOmae42dBnZ3e023F90602

  பதிலளிநீக்கு
 18. செய்திகள் மனவருத்தம் தருகிறது.
  உடல் நலம் விரைவில் குணமடைய வாழ்த்துக்கள். நல்ல வேலை கிடைக்க வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

உங்கள் கருத்தே எழுத்தை மேம்படுத்தும்... மனதில் தோன்றுவதை மறக்காமல் சொல்லுங்கள்...