மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 25 ஜூலை, 2013

'ரெங்கநாயகி என்று பாடிய வாலிக்கு அதிமுகவிலிருந்து யாரும் அஞ்சலி செலுத்தலையே...' கருணாநிதி


ரெங்கநாயகி என்ற தலைப்பிலே கவிதை பாடியவர் கவிஞர்வாலி. ஆனால் அவர் மறைந்த நிகழ்ச்சிக்கு அதிமுகவினர் யாரும் வரவில்லை என்றால் என்ன காரணமோ தெரியவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட கேள்வி பதில் பாணி அறிக்கை.. 

கேள்வி: காவியக் கவிஞர் வாலியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த அ.தி.மு.க. சார்பில் யாருமே வந்ததாகத் தெரியவில்லையே? 

கருணாநிதி: கவிஞர் வாலி, புரட்சி நடிகர் எம்.ஜி.ஆருக்கு மிகவும் வேண்டியவர். இன்றைய முதல்வர் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற போது, வார இதழ் ஒன்றில் ரெங்கநாயகி என்ற தலைப்பிலே கவிதை பாடியவர். அவர் எந்த அரசியல் கட்சியையும் சேராதவர். அனைவரிடமும் அன்பாகப் பழகக்கூடியவர். அவர் மறைந்த நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க.வினர் யாரும் வரவில்லை என்றால், அதற்கு என்ன காரணமோ தெரியவில்லை. 

கேள்வி: சென்னையில் குடிநீர் இல்லாமல் மக்கள் அவதிப்படுகிறார்களே, அதைப்பற்றி அ.தி.மு.க. அரசு கவலைப்படுவதாகத் தெரியவில்லையே? 

கருணாநிதி: அண்ணா நகர் மண்டலத்தில் குடிநீர் இன்றி மக்கள் தவிப்பு. வாரம் ஒரு முறை மட்டுமே வருகிறது தண்ணீர் லாரி என்ற தலைப்பில் நாளேடு ஒன்றில் வெளியிட்டுள்ள செய்தியில், சென்னை மாநகராட்சி, அண்ணா நகர் மண்டலத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர்த் தட்டுப்பாட்டால் பகுதிவாசிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அண்ணா நகர் மண்டலத்தில் உயர் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், செல்வந்தர்கள் வசிக்கும் பகுதிகளில் குடிநீர் விநியோகம் தங்குதடையின்றி நடந்து வருகிறது; ஆனால் அப்பாராவ் தோட்டம், அவ்வைபுரம், அருணாசலம் தெரு, பிள்ளையார் கோவில் தெரு உள்ளிட்ட அடித்தட்டு, நடுத்தர மக்கள் வசிக்கும் ஷெனாய் நகர் பகுதிகளில், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக, வீடு மற்றும் தெருக் குழாய்களில் குடிநீர் வருவதில்லை. 

ஷெனாய் நகர் பகுதிவாசிகள், நள்ளிரவு நேரங்களில், குடிநீருக்காக காலிக் குடங்களுடன் அலைந்து கொண்டிருக்கின்றனர். அதேபோல், அண்ணா நகர், பெரிவரி சாலை 7வது பிரதான சாலையில் உள்ள குடிசை மாற்று வாரியகுடியிருப்புப் பகுதிகளில் உள்ள தெருக் குழாய்களில், கடந்த இருபது நாட்களுக்கு மேலாகதண்ணீர் வரவில்லை. வாரத்திற்கு ஒரு முறைதான் லாரிகள் வருகின்றன. அந்தப்பகுதிவாசிகள் சாலை மறியல் நடத்தியும் பயனில்லை. 

அமைந்தகரை, பூவிருந்தவல்லிநெடுஞ்சாலையை ஒட்டியுள்ள திருவீதியம்மன் கோவில் தெருவிற்கும் கடந்த 2 மாதங்களுக்குமேலாக, லாரிகள் மூலம் வாரத்திற்கு ஒருநாள்தான் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. அதுவும்,குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குடங்களுக்கு மட்டும்தான் என்று எழுதப்பட்டுள்ளது. ஏட்டில் இவ்வளவுதான் வந்துள்ளது; உண்மை இதை விட மிகவும் மோசம்! 

கேள்வி: அன்னிய முதலீட்டிற்கு தாங்கள் கடுமையாக எதிர்ப்பினைத் தெரிவித்ததைப் போல மத்திய உள்துறை அமைச்சகமும் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறதே? 

கருணாநிதி: பத்திரிகை, செய்திச் சேனல்கள், ரேடியோ ஆகிய துறைகளில் அன்னிய முதலீட்டின் அளவை 26 சதவிகிதத்திலிருந்து 49 சதவிகித மாக உயர்த்த மத்திய வர்த்தக அமைச்சகம் எடுத்த முடிவைப் பற்றி, இந்தத் துறையில் அன்னிய முதலீட்டை அதிகரிப்பது, மிகவும் ஆபத்தான போக்கு, உள்துறை அமைச்சகம், இதற்குக் கடும் ஆட்சேபத்தைத் தெரிவிக்கும் என்றும், பத்திரிகை உள்ளிட்ட துறைகளில் வெளிநாட்டு நிறுவனங் களை அனுமதிப்பது, உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாக செய்தி வந்துள்ளது. அன்னிய முதலீட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சிகள் எல்லாம் தொடர்ந்து அறிக்கை விடுத்த பிறகு, நேற்றைய தினம் நம்முடைய மாநில முதல்வர்கூட அதைக் கண்டித்து அறிக்கை விடுத்திருக்கிறார். 

கேள்வி: இந்த ஆட்சியில் மணல் கடத்தல் அதிகமாவதைப் பற்றி தொடர்ந்து செய்திகள் வருகின்ற நிலையில், நெல்லையில் மணல் லாரியைத் தடுத்த தாசில்தார் மீதே தாக்குதல் நடந்ததாகச் செய்தி வந்திருக்கிறதே? 

கருணாநிதி: நெல்லை அருகே நாங்குனேரியிலும், மற்றப் பகுதிகளிலும் திருட்டு மணல் லாரிகளில் ஏற்றிச் செல்வது பற்றி தொடர்ந்து செய்திகள் வந்தபோதிலும் அ.தி.மு.க. அரசு அதைக் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. கடந்த ஆண்டு இதே ஜூலை மாதத்தில், 24ஆம் தேதியன்று மணல் கடத்திய பிரச்சினையில் போலீஸ் துப்பாக்கிச் சூடே நடைபெற்று ஒருவர் இறந்தார். தற்போது 16ஆம் தேதியன்று மணல் அள்ளிய லாரி ஒன்று நாங்குனேரி ஊருக்குள் சென்று கொண்டிருந்த போது, சரவணன் என்ற தாசில்தார் அதைத் துரத்தியதாகவும், லாரி வேகமாகச் சென்றதால் அங்கே சென்று கொண்டிருந்த ஒரு இருசக்கர வாகனத்தில் மணல் லாரி மோதி, சுடலைக்கண்ணன் என்ற சிறுவன் பலியாகியிருக்கிறான். மணல் லாரியிலிருந்து இறங்கியவர்கள் தாசில்தார் சரவணனைத் தாக்கியிருக்கிறார்கள். காயமடைந்த தாசில்தார் சிகிச்சை பெற்று வருகிறார்... 

கேள்வி: தமிழக அரசின் தலைமைச் செயலாளரை நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருப்பது அரசுக்கு அவமானம் அல்லவா? 

கருணாநிதி: அவமானம் எனக் கருதினால்தானே அவமானம்! காவல் துறையில் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான ஒரு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகம் உட்பட நான்கு மாநிலத் தலைமைச் செயலாளர்கள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென்று 25-4-2013இல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இது தொடர்பாக எந்தவிதமான பதில் மனுவும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாததால், 16-7-2013 அன்று உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நேரத்தில், "தமிழகம் உள்ளிட்ட நான்கு மாநிலத் தலைமைச் செயலாளர்கள் 31-7-2013 அன்று உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி, காவல் துறையில் சீர்திருத்தம் தொடர்பான தங்கள் விளக்கத்தை அளிக்க வேண்டும்" என்று நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். மேலும் அவர் "கோர்ட் உத்தரவை அவமதிக்கும் அதிகாரிகள் தண்டிக்கப்பட்டால்தான் இதுபோன்ற தவறுகள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்கும்" என்றும் கூறியிருக்கிறார். 

அதுபோலவே, ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்தி நிர்ணயிக்க வேண்டுமென்று ஒரு வழக்கு. அந்த வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டு, கடந்த மே மாதம் 6ஆம் தேதியன்று இரண்டு மாதங்களுக்குள் ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்தி நிர்ணயித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். ஆனால் தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யாமல் மேலும் அவகாசம் கோரியிருக்கிறார்கள். 

அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் சார்பில் மேலும் அவகாசம் கேட்ட காரணத்தால், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களது கடும் கண்டனத்தைத் தமிழக அரசுக்குத் தெரிவித்ததோடு, தமிழக அரசுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்திருக்கிறார்கள்.

-செய்திக்கு நன்றி : தட்ஸ் தமிழ் இணையம்
-படத்துக்கு நன்றி : கூகிள் இணையம்
-'பரிவை' சே.குமார்.

0 எண்ணங்கள்: