"புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நடிகை கனகா காலமானார்' என்று, "டிவி' சேனல்கள், நேற்று பிற்பகல் வெளியிட்ட தகவல், தமிழகம் முழுவதும், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், உயிருடன் உள்ள நடிகை கனகா, ""நான் நலமுடன் உள்ளேன். ஆண்களை பிடிக்காததால், திருமணம் செய்து கொள்ளாமல், தனிமையில் வசித்து வருகிறேன். எனக்கு புற்றுநோய் இருப்பதாக கூறி, தேவதாஸ் என்பவர், என் சொத்துகளை அபகரிக்க பார்க்கிறார்,'' என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.
கடந்த, 1989ல் வெளியான, "கரகாட்டக்காரன்' படத்தின் கதாநாயகியாக, தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி, பரபரப்பாக பேசப்பட்டவர் நடிகை கனகா. "புருஷன் எனக்கு அரசன், துர்கா, சாமுண்டி, கும்பக்கரை தங்கையா, தாலாட்டு கேக்குதம்மா, அம்மன் கோவில் திருவிழா, சக்கரைத்தேவன்' உட்பட பல படங்களில், நடிகர்கள், ரஜினி, பிரபு, விஜயகாந்த், கார்த்திக், மம்முட்டி, மோகன்லால் உட்பட பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.
பழம் பெரும் நடிகை தேவிகா இவரது தாய். தேவிகா இறந்த பின், படங்களில் நடிப்பதை கனகா தவிர்த்தார். "கணவர்' என, கூறிய நபர் மற்றும் "ஆவி' அமுதா ஆகியோருடன் ஏற்பட்ட பிரச்னையால், மிகவும் வேதனைப்பட்டார். 2004ல் இருந்து, திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்தார்.
புற்றுநோய்?
இந்நிலையில், "நடிகை கனகா புற்றுநோயால் அவதிப்படுகிறார். கேரளா மாநிலம், ஆலப்புழாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்' என, இரண்டு தினங்களுக்கு முன், தகவல் வெளியானது. இதுகுறித்து, ஆலப்புழாவில் உள்ள தனியார் மருத்துவமனையை தொடர்பு கொண்டபோது, தகவல் உறுதியாகவில்லை. இதனால், நடிகை கனகா எங்கு இருக்கிறார் என, இரண்டு நாட்களாக பரபரப்பு காணப்பட்டது.
பிளாஷ் நியூஸ்:
இந்நிலையில், நேற்று பிற்பகல், "நடிகை கனகா இறந்துவிட்டார்' என, சில தமிழக, "டிவி' சேனல்களில், "பிளாஷ் நியூஸ்' வெளியானது. இது, கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் நடிகை கனகா வீடு உள்ளது. அங்கு, பத்திரிகையாளர்கள் சென்றபோது, கனகா, அவர் வளர்க்கும் பூனைகளுக்கும்,கோழிகளுக்கும் நிதானமாக தீனி போட்டுக் கொண்டு இருந்தார்.
அதிர்ச்சி அடைந்த பத்திரிகையாளர்கள், நடந்த விஷயம் குறித்து அவரிடம் விளக்கம் கேட்டனர். அப்போது நடிகை கனகா கூறியதாவது: நான், ஆலப்புழாவில் சிகிச்சை பெற்று வந்தாக கூறப்பட்டது, தவறான தகவல். நான், சென்னை வீட்டில் தான் இருகிறேன். எனக்கு புற்றுநோய் என, வதந்தி பரவியிருக்கிறது. நல்ல வேளை, "எய்ட்ஸ்' என்று செய்தி வரவில்லை. இந்த வதந்திகளை, என் தந்தை என்று கூறிக் கொள்ளும், தேவதாஸ் என்பவர் தான் பரப்புகிறார். இதையே காரணமாக வைத்து, என்னை சந்தித்து பேசி, என் சொத்துகளை அபகரிக்க பார்க்கிறார். பத்திரிகைகளில் செய்தி வந்ததும், என்னை தேடி ஆலப்புழாவுக்கு அவர் செல்லாமல், என் சென்னை வீட்டிற்கு வர முயன்றதை வைத்து பார்க்கும் போது, அவர் தான் என்னை பற்றி தவறான செய்தி பரப்பியிருக்கலாம் என, சந்தேகப்படுகிறேன். என் அம்மாவுக்கு ஒரு நல்ல கணவனாக, எனக்கு நல்ல தந்தையாக அவர், எந்நாளும் நடந்து கொண்டதில்லை. அம்மா இறந்த பின், எனக்கு பல சிரமங்கள் வந்தன. அவற்றை சமாளித்து, அமைதியாக வாழ்ந்து வருகிறேன். அப்பா என்று சொல்லிக் கொண்டவருக்கு, என்னைவிட, என் சொத்து மீது தான் அதிக கவனம். இதனால் தான், எனக்கு ஆண்களை பிடிக்காமல் போனது; "இனி திருமணம் வேண்டாம்' என, முடிவெடுத்து தனிமையில் வாழ்ந்து வருகிறேன். என் வீட்டில், வேலைக்காரி மட்டுமே உடன் இருக்கிறார். எக்காரணத்தை கொண்டும் என் தந்தை என, கூறிக் கொண்டிருக்கும் தேவதாசை, என் வீட்டிற்குள் அனுமதிக்க மாட்டேன். என் அம்மாவிற்கு அவர் செய்த துரோகத்தை மன்னிக்கவே மாட்டேன். சில நடிகர், நடிகைகளிடம் பேச முயற்சித்தேன். அவர்கள் பேச விரும்பவில்லை; பரவாயில்லை. பத்திரிகைகளில் எனக்கு புற்றுநோய் என செய்தி வந்தது, வருத்தமாக இருக்கிறது. தற்போது, நான் இறந்துவிட்டதாக செய்தி வந்து இருப்பது, அதிர்ச்சியாக இருந்தாலும், உங்களின் (பத்திரிகையாளர்கள்) சந்திப்பால், நான் நல்லபடியாக இருப்பது, மக்களுக்கு தெரிந்துவிடும்; இது சந்தோஷமாக இருக்கிறது; யார் மீதும் நான் வருத்தப்பட்டு என்னவாகப் போகிறது. இவ்வாறு, நடிகை கனகா கூறினார்.
பாசம் எங்கே?:
என்னைச் சேர்ந்தவர்கள் எனக்கூறி கொள்பவர்களுக்கு, என்னைவிட, என் சொத்தின் மீது தான், கவனம் அதிகம் உள்ளது. அவர்களைப் பார்த்தால், வெறுப்பு தான் வருகிறது. மனிதர்களைவிட வளர்ப்புப் பிராணிகள் மீது தான் பாசம் அதிகம் இருக்கிறது. எனவே தான், 35 பூனை, 35 கோழிகளை வளர்த்து வருகிறேன். இவை என்னிடம் பாசமாக உள்ளன. இதுவே எனக்கு மன நிறைவாக உள்ளது. இவ்வாறு, கனகா கூறினார்.
தந்தை பேட்டி:
கனகாவின் தந்தை தேவதாஸ் கூறும்போது, ""கனகாவுக்கு புற்றுநோய் என, பத்திரிகைகளில் செய்தியைப் பார்த்துவிட்டு தான், கனகா வீட்டிற்குச் சென்றேன். என்னை வேண்டாதவனைப் போல நினைக்கிறாள். வேலைக்காரியை விட்டு என்னைத் துரத்திவிட்டாள். என்ன தான் அலட்சியப்படுத்தினாலும், அவள் என் மகள்; அவள் மீதான பாசம் குறையாது. தனிமை தான் அவளை இந்த நிலைக்குக் கொண்டு வந்துவிட்டது,'' என்றார்.
நன்றி : தினமலர்
-'பரிவை' சே.குமார்
5 எண்ணங்கள்:
கனகா நலமாக இருப்பது அறிந்து மகிழ்ச்சி. நம்பிக்கைதான் வாழ்க்கை. நட்புகளை வளர்த்த்க் கொள்ள வேண்டும். அபோது தனிமை இருக்காது.
என்ன உலகம் இது .!!!! தனியாக இருக்கும் பெண்ணின் மன நிலை
புரியாமல் இப்படியும் ஓர் தண்டணையா !! ச்சீ ....கனகா எங்கிருந்தாலும்
நல்லபடியாக வாழ வேண்டும் .கண்மூடித்தனமாக வெறும் வதந்திகளை
நம்பி இப்படி அவசர செய்திகள் வெளியிடும் பத்திரிகைகள் மீது
சட்ட நடவடிக்கை எடுப்பதே முறையாகும் .நன்றி சகோ பகிர்வுக்கு .
சிரமம்படும் வாழும் அவரின் நிலை வருந்தத்தக்கது...
நேரம் கிடைப்பின் :http://dindiguldhanabalan.blogspot.com/2013/07/Try-Training-Success.html
சொந்தம்,பந்தத்தை விட சொத்து என்பதே இப்போ மேல் நிலை வகிக்கிறது!(உண்மையில் கனகா இறந்து விட்டார் என்று வெளியான செய்திகளில் நான் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை.)
கருத்துரையிடுக