மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 6 ஜூலை, 2013

கலையாத கனவுகள் - 4

முன்கதைச் சுருக்கம்...

ஏழைக் குடும்பத்தில் பிறந்து  தந்தையில்லாமல் தாயின் அரவணைப்பில் வாழும் ராமகிருஷ்ணன் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் சேர்கிறான். முதல் நாள் கல்லூரிக்கு செல்லும் அவனை அவனது தாயார் அக்கம் பக்கம் பார்த்து அனுப்பி வைக்கிறாள். அவனும் நண்பர்களுடன் கல்லூரிக்கு சென்று ராக்கிங் பயத்துடன் வகுப்பறையில் அமர்கிறான்... சில பெண்கள் வகுப்பறைக்கே வந்து மிரட்டிவிட்டுச் செல்ல... கல்லூரி ரவுடியிடம் மாட்டிக் கொள்கிறார்கள். ..

இதற்கு முன்னான பகுதிகளைப் படிக்க....

கலையாத கனவுகள் 1-ம் பாகம் படிக்க...  இங்கே சொடுக்கவும்...

கலையாத கனவுகள் 2-ம் பாகம் படிக்க...  இங்கே சொடுக்கவும்...

கலையாத கனவுகள் 3-ம் பாகம் படிக்க...  இங்கே சொடுக்கவும்...

இனி...

4. ராக்கிங் ராஜாங்கம்

பச்சைத் தாவணியை நோக்கி படபடக்கும் இதயத்துடன் நடந்து சென்றான் மரியக்கண்ணு. “மணி... அவனைக் கூப்பிடு... பெரிய ஆளா இருக்கான்... இவன் பாட்டுக்கு அவகிட்ட யுனிவர்சிட்டி சல்யூட் அடிச்சு செருப்படி வாங்கிடமா...”

“டேய் சத்யராஜ்...”

“அவன் மரியக்கண்ணுன்னு சொன்னான்...”

“வளர்ந்து இருக்கானுல்ல... அதான்... மரியக்கண்ணை சத்தியராஜ் ஆக்கிட்டேன்... டேய்... வளர்ந்து கெட்டவனே இங்க வா” என்று அவனைக் கூப்பிட்டான்.

“டேய் இங்க வா... உன் பேரு என்ன?”

“அண்ணாத்துரை...”

“ம்... நீ எங்களை அண்ணான்னு கூப்பிட்டா நாங்களும் உன்னைய அண்ணான்னு கூப்பிடனுமோ?” சிகரெட் புகையை அவன் முகத்தில் ஊதியபடி சிரித்தான் வைரவன். கல்லூரியின் முதல் தாதா. யாருக்கும் பயப்படமாட்டான். ஆசிரியர்களுக்கு இவன் வகுப்பிற்குள் வந்தால்தான் பயம். எப்பவும் தண்ணியில்தான் இருப்பான். அடிதடி என்றால் முதல் ஆளாய் நிற்பான். தள்ளாட்டமாய் எழுந்தவன் ‘...க்காலி... என்ன பர்ஸ்ட் இயர்லயே எகிறுறே...? இனி நாங்க உன்னைய சின்னானுதான் கூப்பிடுவோம்... நெஞ்சை நிமித்துறே... நெஞ்சே இருக்காதுடி...” என்றபடி அவனை தள்ளினான்.

“இப்ப என்ன வேணும் உங்களுக்கு... எம் பேரு அண்ணாத்துரை... அண்ணான்னு கூப்பிடுறது... டேய்யின்னு கூப்பிடுறதும் உங்க விருப்பம்...”

“என்னடா... எகத்தாளமா பேசுறே?”

“எகத்தாளம் எல்லாம் பேசலை... நீங்க கேட்ட்துக்கு சொன்னேன்... என்ன செய்யணும் சொல்லுங்க செய்யிறேன்...”

“...க்காலி... எல்லாரும் பம்முறாய்ங்க... நீ துள்ளுறே... ஆமா எந்த ஊருடா நீயி... எங்ககிட்ட பகைச்சுக்கிட்டா உன்னய செட்டைய ஒடிச்சுப்புடுவோம்...”

“....”

“என்னடா பேசாம நிக்கிறே?”

“ஒண்ணுமில்லண்ணே...”

“நீச்சலடிக்கத் தெரியுமா?”

“தெரியும்...”

“அப்ப அடி...”

“இங்கயா?”

“இங்கதான்... அடிடா...”

“தண்ணியிலதான் அடிக்க முடியும்... தரையில அடிடான்னா... எப்படிங்க... கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்க”

“என்ன எங்களுக்கே பாடம் நடத்துறியா...? ம்... இந்தா போறா பாரு ஊதா தாவணி அவளுக்கு ஒரு முத்தம் கொடுத்துட்டு வாறியா.. கிளுகிளுப்பா இருக்கும்... அடிடான்னா...”

“இல்ல டிரஸ் அழுக்காயிடும்... நான் பண்ண மாட்டேன்...”

“பண்ணுடான்னா...” என்று அவனை ஒருவன் தள்ளிவிட, மற்றொருவன் மண்டையில் தட்டினான்.

திரும்பி முறைத்தவன் “பூபாலன் தெரியுமா?” என்றான்.

“பூபாலனா... உனக்கு அவரு என்ன வேணும்...?” எதோ சாமி பேரைக் கேட்டு கன்னத்தில் போட்டுக் கொள்வது போல கையிலிருந்த சிகரெட்டை எறிந்துவிட்டு அவசரமாய்க் கேட்டான் வைரவன்.

“அவரு தம்பிதான் நான்...”

“பூபாலண்ணன் தம்பியா நீயி... அதை ஏன்டா நீ முன்னமே சொல்லலை...”

“அவரைச் சொல்லி தப்பிக்க நினைக்கலை...”

“ம்... அப்ப காலேசுக்கு அடுத்த ரவுடி வந்தாச்சு...”

“நா... படிக்கத்தான் வந்திருக்கேன்... ரவுடித்தனம் பண்ண வரலை... இப்ப என்ன நீச்சல் அடிக்கனும்... அடிக்கிறேன்...”

“நீச்சலா... நீயா... இன்னைக்கு நீச்சலடிப்பே... நாளைக்கு பூபாலண்ணன் எங்களை அடிக்கும்... நீங்க போங்கடா... இனி ஒருபய உங்க்கிட்ட வராம நான் பாத்துக்கிறேன்... ஆமா ஓரமா நின்னகட்டையா உன்னோட பேரென்ன சொல்லிட்டுப் போ...”

“ராமகிருஷ்ணன்”

“ராம்கியா... சரி... இனிமே நாம பிரண்ட்ஸ்... ஓகேவா... ஆனா மொத ஒரு மாசத்துக்கு எவனும் இன் பண்ணிக்கிட்டு வரக்கூடாது”

“சரிண்ணே...”

 “ம்... தாங்க்ஸ் அண்ணே...” என்ற ராம்கிக்கு இதே வைரவனுக்காக ஒருநாள் தானும் தடியை கையில் எடுக்க வேண்டி வரும் என்பது அப்போது தெரியாது... சினேகமாக அவனிடம் சிரித்து விடை பெற்றான்.

(தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

2 எண்ணங்கள்:

sathishsangkavi.blogspot.com சொன்னது…

சுவாரஸ்யமாக தொடர்கிறது...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சங்கவி....

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.