மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 22 நவம்பர், 2013நாயகன்: சச்சின்... சச்சின்...


ச்சின் என்ன செய்தார்? அவருக்கு பாரத் ரத்னா கொடுப்பது முறையா என்ற பரபரப்பு பட்டிமன்றங்கள் பத்திரிக்கைகளில் மட்டுமின்றி பட்டி தொட்டியெல்லாம் விவாதிக்கப்படுகின்றது, இங்கு தனி மனிதனைப் பற்றிப் பேசப்போவதில்லை. கிரிக்கெட்டில் சச்சினை எனக்குப் பிடிக்கும்... எவ்வளவு பிடிக்கும்... ரொம்பப் பிடிக்கும் என்பதைச் சொல்லும் பகிர்வுதான் இது.

பள்ளியில் படிக்கும் காலத்தில் எங்களுக்கெல்லாம் கிரிக்கெட் அவ்வளவாக அறிந்த விளையாட்டு இல்லை. எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் பித்திக்காய் (கோழிக்குண்டு), கிட்டிப்புல், பம்பரம் இப்படி கிராமிய விளையாட்டுக்கள்தான். கிரிக்கெட் எங்களுக்கு அவ்வளவாக பரிட்சையம் இல்லாததற்கு முக்கிய காரணம் எங்கள் ஊருக்குள் தொலைக்காட்சிப் பெட்டி வராததே. இந்தியா கிரிக்கெட்டில் வென்றது தோற்றது என்பதை  ரோடியோ செய்தியில் சரோஜ் நாராயணசுவாமி சொல்லும் போது கேட்பதுடன் கிரிக்கெட் என்பது முடிந்து விடும்.

மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் போது கிரிக்கெட்டின் மீது மெல்ல மெல்ல ஆர்வம் வந்தது. தேவகோட்டையில் நண்பர்கள் வீட்டிற்குச் சென்று தூர்தர்ஷன் ஒளிபரப்பும் போட்டிகளை பார்க்க ஆரம்பித்தோம். எங்கள் ஊரில் எங்க சித்தப்பா வீட்டில்தான் முதன் முதலில் தொலைக்காட்சி வாங்கினார்கள். வெள்ளிக்கிழமை ஓளியும் ஓலியும் ஞாயிறன்று மாலைச் சினிமா மட்டுமே பார்க்கச் செல்வோம். அப்புறம் வீட்டில் நானும் தம்பியும் நச்சரிக்க ஆரம்பிக்க எங்கள் வீட்டுக்கும் பிபிஎல் கருப்பு வெள்ளை தொலைக்காட்சி வந்தது,

அசார், மனோஜ் பிரபாகர், சச்சின், ஜடேஜா, கும்ளே, ஸ்ரீநாத், வெங்கடபதி ராஜூ என வீரர்கள் பெயரெல்லாம் மனப்பாடம் ஆகிவிட கிரிக்கெட் பைத்தியம் ஆகிவிட்டோம். எந்தப் போட்டி என்றாலும் சச்சின் களத்தில் நின்றால் சோறு தண்ணி தேவையில்லை. அப்பொழுதெல்லாம் தூர்தர்ஷனில் மட்டும்தான் போட்டிகளைப் பார்க்க முடியும். அதுவும் ஸ்ரீலங்காவில் போய் விளையாண்டால் தூர்தர்ஷனில் பெரும்பாலும் ஒளிபரப்ப மாட்டார்கள், அப்போது ஸ்ரீலங்காவில் இருந்து ஒளிபரப்பாகும் ரூபவாஹினியை பிடித்து புள்ளிப் புள்ளியாகத் தெரிந்தாலும் பார்த்த நாட்கள் ஏராளம்.

கல்லூரிக்குச் சென்ற பிறகு எல்லாப் போட்டிகளையும் நண்பர்கள் வீட்டிலோ அல்லது அக்கா வீட்டிலோ கேபிள் இணைப்பில் பார்த்துவிட்டுத்தான் வீட்டுக்குப் போவேன். எந்தப் போட்டி என்றாலும் சச்சின் களத்தில் கடைசி வரை நிற்க வேண்டும் என்று மனசு எப்பவும் வேண்டிக் கொண்டே இருக்கும். களத்தில் இறங்கி எல்லாப் பக்கமும் ஒரு முறை பார்வையை ஓடவிட்டு குனிந்து எழுந்து பேட்டை பிடிக்க ஆரம்பித்ததும் எதிர் அணி வீரர் வீசும் ஒவ்வொரு பந்தும் நான்கு ரன்னுக்கான கோட்டில்தான் கிடக்க வேண்டும் என்று மனசு துடிக்க ஆரம்பித்துவிடும்.


சில போட்டிகளில் இன்றைக்கு சச்சின் நின்றால்தான் வெற்றி பெற முடியும் என்று நினைத்து ஆவலோடு இருக்கும் பட்சத்தில் வந்த வேகத்தில் திரும்பிவிடுவார். எங்க வீட்டில் எல்லாருமாக அமர்ந்து பார்க்கும் போது எங்கப்பா, ஆமா வந்து கிழிச்சிப்புட்டாருல்லன்னு சச்சினை திட்டினால் அவ்வளவு கோபம் வரும். எனக்கு மட்டுமல்ல என் தம்பிக்கும்தான். மற்ற விஷயங்களில் இருவரும் அடித்துக் கொண்டாலும் சச்சின் என்று வரும் போது ஒரே பாதையில்தான் பயணிப்போம்.

சச்சின் வெளுத்து வாங்கிய போட்டிகள் எண்ணிலடங்காதவை.. கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்ததில் இருந்து எல்லாப் போட்டிகளையும் ரசித்துப் பார்த்து சந்தோஷப்பட்டிருக்கிறேன். காரைக்குடியில் நண்பனின் அறைக்கு விசுவல் பேசிக் படிக்கச் சென்ற அன்றுதான் ஷார்ஜாவில் ஆஸ்திரேலியாவுடனான போட்டி. குறிப்பிட்ட ரன்னை 40 ஓவருக்குள் அடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அப்படி அடித்தால் இறுதிப் போட்டிக்குச் செல்லலாம் என்ற நிலையில் களம் இறங்கியது இந்திய அணி. நாங்கள் படிக்க வந்தோம் என்பதெல்லாம் பொய் அந்தப் போட்டியை பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் வந்தோம் என்பதே உண்மை. அறைக்கு அருகில் இருக்கும் டீக்கடையில் போய் அமர்ந்து போட்டியை பார்க்க ஆரம்பித்தோம். 

டீக்கடையில் கிரிக்கெட் பார்ப்பதற்கென்றே சரியான கூட்டம்...  சச்சின் விளாசிக் கொண்டிருக்கிறார்... ஷேன் வார்னேயின் பந்தெல்லாம் எல்லைக் கோட்டை தாண்டிப் போய்க் கொண்டிருக்கிறது. இப்போது இங்கு சில சமயங்களில் புழுதிப் புயல் அடிப்பதைப் பார்த்திருக்கிறேன். அன்று ஷார்ஜாவில் புழுதி காற்றுடன் சச்சின் என்ற புயல் அடித்த அடியை எந்த ரசிகனாலும் எப்பொழுதும் மறக்க முடியாது. எனக்கும் அப்படித்தான்... என்ன ஒரு ஆட்டம்.... சச்சினின் மிகச்சிறந்த ஆட்டம் அதுதான் என்பது என் எண்ணம்.

இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற வைத்துவிட்டுத்தான் வெளியேறினார். அவர் வெளியேறியதும் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. இருந்தும் அணியை இறுதிப் போட்டிக்கு கொண்டு சென்றதால் அன்றைய தினம் எல்லோருக்கும் சந்தோஷ தினம்தான். இந்த முறை அதற்கு நேர் மார்... இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றாலும் சச்சின் என்ற ஜாம்பவானின் கிரிக்கெட் வாழ்க்கை முற்றுப் பெறுவதால் சந்தோஷக் கொண்டாட்டம் இன்றி இருந்தது. அன்று ஒரு வர்ணனையாளர் சொன்னார் தோத்துப் போனாலும் ரசிகர்கள் சந்தோஷமாக இருப்பதை இங்கு பார்க்கிறேன்... காரணம் சச்சின் என்றார். இன்றும் அவர் வெற்றி பெற்றாலும் ரசிகர்கள் அமைதியாக இருப்பதை இப்போது பார்க்கிறேன் காரணம் சச்சின் என்று சொல்லியிருக்கலாம் 

இப்படி எத்தனையோ போட்டிகள்... எவ்வளவு ரன்கள்.... சச்சின் களத்தில் என்றால் டெஸ்ட் போட்டியைக்கூட பார்த்த காலம் உண்டு. 97, 98, 99 இப்படியான ரன்களில் சச்சின் அவுட்டாகி வெளியேறிய நாட்களில் எல்லாம் அதன் பிறகு கிரிக்கெட் பார்க்காமல் தொலைக்காட்சியை அணைத்துவிட்டு எழுந்து சென்ற நாட்களும் உண்டு. 17, 33 70க்கு மேல் இப்படி சில ரன்களில் சச்சில் களத்தில் நிற்கும் போது இந்த ரன்னைக் கடந்து விடவேண்டும் என்று சாமியை வேண்டிய போட்டிகள் நிறைய உண்டு. இந்த ரன்களில்தான் அதிக முறை அவுட்டாகி வெளியேறியிருக்கிறார்.


ஜிம்பாப்வேயின் ஓலாங்கோ, தொடர்ந்து சச்சின் விக்கெட்டை வீழ்த்து தனது சடை முடியை சிலுப்பிக் கொண்டு திரிய ஆரம்பிக்க, என்னடா இவன்கிட்ட விக்கெட்டை விட்டுடுறாரே... அடிக்க மாட்டேங்கிறாரேன்னு வருத்தப்பட, அதுக்கும் ஒரு போட்டியில் சரியான பதிலடி கொடுத்தார். அன்றைக்கு ஓலாங்கோ வீசிய அனைத்துப் பந்துக்களையும் விளாசினார். 4 ஓவரில் 40 ரன்களைக் கொடுத்துவிட்டு பரிதாபமாக எல்லைக் கோட்டருகே நின்ற ஓலாங்கோ, சச்சின் அவுட்டானதும்தான் பந்து வீசவே வந்தார். தன்னை கேலி பண்ணுபவர்களுக்கு அவர் எப்போதுமே வாயினால் பதில் சொல்லியதில்லை. களத்தில் அவர்களுக்கு அவரது பேட் பதில் சொல்லிவிடும்.

ஒவ்வொரு உலக கோப்பையின் போதும் இந்த முறை இந்தியா வாங்க வேண்டும் என்று நினைத்து நினைத்து எல்லாம் கனவாகிப் போக சென்ற முறை இதுதான் சச்சினின் கடைசி உலகக் கோப்பை இந்த முறை இந்த சாதனை நாயகனுக்காக இந்தியா கோப்பையை வெல்ல வேண்டுமென வேண்டாத தெய்வம் இல்லை. போட்டியில் சச்சின் சோபிக்கா விட்டாலும் இளம் வீரர்கள் திறமையாய் விளையாண்டு வெற்றி பெற்றதும் கோப்பயுடன் போட்ட ஆட்டமும் சச்சினை தூக்கிக் கொண்டு வலம் வந்ததும் இன்னும் நெஞ்சுக்குள் நீங்காமல்.

இருநூறு ரன்னை நோக்கி சில வீரர்கள் ஓடிக்கொண்டிருக்க, இவரெல்லாம் அவ்வளவு ரன் அடிக்கிறது சாத்தியமில்லை என்ற பேச்சுக்கள் பரவலாக இருக்க, சாதித்துக் காட்டினார் சச்சின். இன்றைக்கு சேவாக் 219 ரன்னுடன் முதல் இடத்திலும் ரோகித் 209 ரன்னுடன் இரண்டாவது இடத்திலும் இருந்தாலும் 200 எட்டக்கூடிய ரன்தான் என உலகுக்கு காட்டிக்கொடுத்தவர் சச்சின். இருருநூறை எட்டிய மூவருமே இந்தியர்கள் என்பதில் நமக்குப் பெருமையே.

கடைசிப் போட்டி... அவருக்கு மட்டுமல்ல... என்னைப் போன்றவர்களுக்கும் மிகவும் துயரமான போட்டிதான்... தன் இருபத்து நான்கு வருட கிரிக்கெட் வாழ்க்கையில் அன்றுதான் அதிக நேரம் பேசியிருக்கிறார். அவர் அழுதபோது ரசிகர்களை மட்டுமல்ல... இந்தியர்களை மட்டுமல்ல... உலகத்தையே மனம் கலங்க வைத்த பேச்சு அது... ம்.. அழ வச்சிப்புட்டானய்யா... அழ வச்சிப்புட்டானய்யா... கடைசியில் தனியாளாக ஆடுகளத்துக்குள் வந்து அதைத் தொட்டுக் கும்பிட்டுச் சென்றதை இன்னும் மறக்க முடியவில்லை.

இந்தியாவில் கிரிக்கெட்டை இவ்வளவு பிரபலமாக்கிய பெருமை சச்சினைத்தான் சாரும். சின்னக் குழந்தையும் ரசித்துப் பார்க்க ஆரம்பித்ததும் கட்டையில் செய்த பேட்டால் பந்தை அடித்து விளையாடிக் கொண்டு திரிவதும் சச்சினால்தான். கிரிக்கெட்டுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். தன் மீது எந்த ஒரு தவறான செய்தியும் வராமல் விளையாண்டு காட்டியவர். எந்தப் போட்டியிலும் எதிரணியியனரிடமோ நடுவரிடமோ விக்கெட்டுக்காக சண்டையிட்டதில்லை. தனக்கு அவுட் என்று தெரிந்தால் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடும் வீரர்களில் இவரே முதலாமவர்.

அனைவருக்கும் பிடித்த சச்சின்... தன் இறுதி மூச்சு வரை 'சச்சின்... சச்சின்...' என்ற ரசிகர்களின் குரல் கேட்டுக் கொண்டே இருக்கும் என்றார். எங்களுக்கும் கடைசிவரை சச்சின் சச்சின் என்ற உங்கள் நினைவு இருந்து கொண்டேதான் இருக்கும். 

சச்சின் சாதித்ததையும் செய்தாரா செய்யவில்லையா என்பதையும் பற்றிப் பேச எனக்குத் தோன்றவில்லை... சச்சின் என்ற மனிதனை எனக்குப் பிடிக்கும் என்பதை மட்டுமே சொல்லத் தோன்றுகிறது. சச்சின் உன்னை மட்டுமே எனக்குப் பிடிக்கும். இனி கிரிக்கெட் எனக்குள் மெல்லச் சாகும்.


-'பரிவை' சே.குமார்.

8 கருத்துகள்:

 1. பிடிக்கும்... பிடிக்கும்... ரொம்பப் பிடிக்கும்...

  சச்சின்... சச்சின்...

  பதிலளிநீக்கு
 2. சச்சின் உன்னை மட்டுமே எனக்குப் பிடிக்கும். இனி கிரிக்கெட் எனக்குள் மெல்லச் சாகும்.

  எனக்கும்தான்

  பதிலளிநீக்கு
 3. கண்டிப்பாக சச்சினைப் பிடிக்காதவர் உண்டோ! ரசிகர்களின் நாடியை உயர்த்தி விட்டு உசுப்பி விடும் விளையாட்டுக்காரர். ஒரு காலத்தில் சச்சின் அவுட் என்றால் அதுக்கு மேல பார்க்க என்ன இருக்குனு எல்லா பஞ்சாயத்து டிவியும் ஆப் பண்ணிட்டு வீட்டுக்கு போயிடுவாங்க. சார்ஜா போட்டியில் வெற்றி பெற்ற போது ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ்வாக் நாங்கள் இந்தியாவிடம் தோற்கவில்லை சச்சினிடம் தோற்று விட்டோம் என்று கூறியது இன்னும் காதுகளில் ஒலிக்கிறது. அற்புதமான பகிர்வுக்கு நன்றி சகோதரர்..

  பதிலளிநீக்கு
 4. நம்மை போன்ற புழுதிக்காட்டு ரசிகர்களின் பார்வையில் சச்சின் பதிவு அருமை குமார் ...!

  பதிலளிநீக்கு
 5. உங்கள் பார்வையில் சச்சின்.... மிக அருமை குமார்.....

  த.ம. 3

  பதிலளிநீக்கு
 6. தல எனக்கு சச்சின் எல்லாம் பிடிக்காது நாம திராவிட் தான் எப்பவும் ஆனாலும் அவரது சாதனை சூப்பர் உங்க பார்வையும் தான்

  பதிலளிநீக்கு
 7. குட்டி சச்சின் உருவாகிறார் என்று சொல்கிறார்கள்,பார்ப்போம்!

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...