மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 19 நவம்பர், 2013

நண்பேன்டா : திருநாவுக்கரசு

நண்பேன்டாவை வாசிக்கும் முன்...

ரொம்ப சந்தோஷம் முத்துநிலவன் ஐயா....

நேற்று மூத்த கிராமிய இசைக் கலைஞர் திரு. முத்துமாரி அவர்கள் குறித்த பகிர்வை பகிர்ந்திருந்தேன். அந்தப் பதிவைப் பற்றி தனது வலைத்தளத்தில் திரு. முத்துநிலவன் ஐயா அவர்கள் சொல்லி அதற்கான இணைப்பையும் கொடுத்திருக்கிறார்கள். இது போன்ற பாராட்டுக்கள் கிடைக்கும் போது கிடைக்கும் சந்தோஷத்திற்கு ஈடு இணை ஏது..  ஐயா தனது பகிர்வில் கீழ்க்கண்டவாறு சொல்லியிருக்கிறார்.

திரு சே.குமார்  அவர்களின் வலைப்பதிவை நீங்கள் அவசியம் படிக்க மட்டுமல்ல, அவரது நிகழ்ச்சி ஒன்றை விடியோப் பதிவாகவும் பார்க்க அன்புடன்  நம் நண்பர்களை அழைக்கிறேன்.

நன்றி நண்பர் சே.குமார் அவர்களே!  தொலைதூரத்தில் இருந்துகொண்டு அந்தக் கிராமியக் குயிலை நினைத்துக் கொள்கிறீர்களே இதுதான் நம பாவலர் ஓம் முத்துமாரியின் உண்மையான சொத்து!      நீங்கள் வாழ்க!
இதைப் படிக்கவும், ஒரு தமிழறிஞரின் தளத்தை தொடர்ந்து வாசிக்கவும் இங்கே சுட்டுங்கள்...

--------------------


ங்கள் நண்பர் குழுமத்தில் மூத்தவன். திருநா என எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்டவன். பேண்ட் போட்டு வருவதைவிட வேஷ்டியில் வருவதையே அதிகம் விரும்பும் தமிழன். அரசியல் பேச்சென்றால் அல்வா சாப்பிடுவது போல் இவனுக்கு. எங்களுக்கு பொழுது போக வேண்டும் என்றால் இவனையும் முத்தரசையும் கோர்த்துவிட்டு விட்டால் போதும் அரசியல் பேச்சு அனல் பறக்கும். எங்களுக்கும் நன்றாக பொழுது போகும். 

ஆதியுடன் திருவாடனையில் படித்து அவனுடன் கல்லூரிக்கு வந்தவன். இருவருக்குள்ளும் நெருங்கிய நட்பு உண்டு. ஆதி ஒரு பிரிவேளை வரவில்லை என்றால் இவனும் வரமாட்டான். இருவரும் கல்லூரிக்கு அருகில் இருக்கும் முந்திரித் தோட்டத்தில் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள். எல்லாருடனும் பங்காளி, மாப்பிள்ளை என்று பாசமுடன் பழகும் நண்பன். என்னை எப்போதும் சின்னப் பங்காளி என்றுதான் அழைப்பான். இவனுக்கு எப்போதுமே வம்பிழுக்கப் பயன்படும்படும் ஒரே மாப்பிள்ளை நவநீதன்தான்.

சட்டையின் இரண்டு பட்டன்களைக் கழற்றி விட்டுக் கொண்டு காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு வருசம் முதல் கொண்டு சொல்லி அரசியல் பேசினான் என்றால் மற்றவர்கள் அவன் பேசுவதை மட்டும் கேட்டுக் கொண்டே இருப்போம். திமுக என்றாலே பாவற்காய் சாப்பிட்டது போலாகிவிடும். இவனுக்கு எதிர்மறையானவன் முத்தரசு, அவனுக்கு திமுக என்றால் ஜிலேபியை சீனியில் தொட்டுச் சாப்பிடுவது போல. இவர் தாக்க... அவர் தூக்க... தேவகோட்டை பேருந்து நிலையத்தில் ஆரம்பித்து வைத்தோம் என்றால் கல்லூரி வாசல் வரை தொடரும். சில நேரங்களில் பேச்சின் வேகம் கூடும் போது மாப்ளே ஆரம்பிச்சிட்டாய்ங்கடா... இனி முட்டி மோதுவாய்ங்க... வா... நாம முன்னால போவோம் என எனது சைக்கிளை வேகமாக தள்ள ஆரம்பித்துவிடுவான் நவநீதன். என்னடா மாப்ளே,  நீ அந்தப் புள்ளைய பாக்கணுமுன்னா போடா... எங்க சின்னப் பங்காளிய எதுக்கு இழுக்குறே...  பங்காளி கவனி பங்காளி... என கத்திவிட்டு இன்னைக்கு கருணாநிதி இப்படி சொல்லியிருக்காரே இதை அன்னைக்கே அண்ணா... என்று மீண்டும் அரசியலை ஆவேசமாகப் பேச ஆரம்பித்துவிடுவான்.

ஆதி செய்யும் ஒவ்வொரு செயலிலும் இவன்தான் அவனுக்குப் பின்னால் நிற்பான். தீபாவளி சமயத்தில் வெடி வைப்பதாகட்டும், ஏப்ரல் மாதத்தில் இங்க் அடிப்பதாகட்டும், விசில் ஊதுவதாகட்டும் எல்லாவற்றிலும் இவன் பின்னால் இருப்பான். பெண்களுடன் யார் பேசினாலும் இவனுக்குப் பிடிக்காது. என்னடா அவளுக கூட பேசிக்கிட்டு இருக்கே... வாடான்னா... என்று கத்த ஆரம்பித்துவிடுவான்.

இவனது ஊர் திருவாடனைக்குப் பக்கத்தில் கிளியூர், இங்கும் எங்கள் குழு சென்று இரு நாட்கள் அவர்கள் வீட்டில் தங்கி கண்மாயில் குளித்து வயல்வெளியில் சுற்றி ஆட்டம் போட்டு வந்தது. எல்லாருக்கும் மிகவும் பிடித்த நண்பன். படிப்பு விசயத்தில் எதற்கும் கவலைப்படமாட்டான். டேய் அரியருக்கு நல்லா படிச்சிட்டு போயி எழுதுடா என்றால் மாப்ளே நவம்பர் இல்லைன்னா மேயில எழுதலாம் விட்டுத் தள்ளு. மூணு வருசம் முடிஞ்சு போகும்போது அரியரில்லாமல் போனால் போதும் என்பான்.

படிப்பை முடித்துவிட்டு குடும்பச் சூழல் காரணமாக மேற்கொண்டு படிக்காமல் சிங்கப்பூர் சென்று விட்டான். அதன் பிறகு எங்களுக்குள் எப்போதாவது கடிதப் போக்குவரத்து இருந்தது. அவனது திருமணத்துக்கு நானும் எனது ஆருயிர் நண்பன் முருகனும் போய் விட்டு வந்தோம். மீண்டும் சிங்கப்பூர் சென்றான். இப்போது நான் ஊருக்குப் போகும் போது அவன் ஊரில் இருப்பதில்லை. பார்த்து ரொம்ப நாளாச்சு... மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையை மனசில் சுமந்தபடி எங்களது மூத்த பங்காளியின் நினைவுகளை மீட்டுகிறேன்.

நண்பேன்டா தொடரும்....
-'பரிவை' சே.குமார்.

8 எண்ணங்கள்:

அ.பாண்டியன் சொன்னது…

வணக்கம் சகோதரரே,
தங்கள் பதிவை கவிஞர் முத்துநிலவன் அய்யா பகிர்ந்ததும் கண்டதும் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அய்யா அவர்களுக்கு ஒரு பதிவு பிடித்து விட்டால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் எடுத்து தங்கள் தளத்தில் பதிவிட்டு மறவாமல் நன்றியும் கூறி விடுவார். தங்கள் நண்பர்கள் பற்றிய பதிவு மனதுக்குள் மத்தாப்பு பூக்கிறது. பெரிய பங்காளியை மீண்டும் விரைவில் காண எனது வாழ்த்துக்கள். நல்லதொரு பகிர்வுக்கு நன்றி..

இராஜராஜேஸ்வரி சொன்னது…

நன்றி நண்பர் சே.குமார் அவர்களே! தொலைதூரத்தில் இருந்துகொண்டு அந்தக் கிராமியக் குயிலை நினைத்துக் கொள்கிறீர்களே இதுதான் நம பாவலர் ஓம் முத்துமாரியின் உண்மையான சொத்து! நீங்கள் வாழ்க!

வாழ்த்துகள்..!

Unknown சொன்னது…

பாடசாலை/கல்லூரிக் காலம் அலாதியானது!நன்றே அனுபவித்திருக்கிறீர்கள்,நண்பர்கள் குழாத்துடன்!பகிர்வுக்கு நன்றி!!!

ஸ்ரீராம். சொன்னது…

இளமைக்கால நட்புகள் இன்னும் தொடர்பில் இருப்பதே பெரிய விஷயம் குமார். தினமும் பார்க்க முடியாவிட்டாலும் அவ்வப்போது சந்தித்துக் கொள்ள முடிவதே பெரிய விஷயம்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

கல்லூரி நட்பு எப்போதும் நினைவுகூரத் தக்கது. நண்பர்களுடன் இருந்தாலும் நான் அதிகம் பேச மாட்டேன் மற்றவர்கள் பேசுவதையே கேட்டுக் கொண்டிருப்பேன்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சில நினைவுகள் மறக்கவே முடியாது... நினைத்தாலே இனிக்கும்...

திரு. முத்துநிலவன் ஐயா அவர்களை சிறப்பித்தமைக்கு பாராட்டுக்கள்... நன்றி...

மனோ சாமிநாதன் சொன்னது…

ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு விதமாய் நட்புக்கள் ஏற்பட்டுக்கொண்டேயிருந்தாலும் இளமைக்காலத்து நட்பின் இனிமை என்றுமே திரும்ப வருவதில்லை!! பதிவு அருமை!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நண்பேண்டா......

நண்பர்கள் நினைவில் எப்போதும் நீங்காது.....

த.ம. 4