இதுவரை புத்தக விமர்சனம் என்று ஒன்று செய்ததில்லை. இது நண்பனின் புத்தகத்தை எனது பாணியில் விமர்சிக்கும்.... விமர்சிக்கிற அளவுக்கு நான் என்ன எழுத்தில் கரை கண்டவனா என்ன.... நானெல்லாம் இப்பொழுதுதான் எழுத ஆரம்பித்திருக்கிறேன். ஆனால் நண்பரோ படிக்கும் காலத்திலேயே தாமரை, செம்மலர் என கலக்கியவர். அவரது புத்தகத்தில் இருக்கும் கதைகள் என்னைக் கவர்ந்த விதத்தை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்... அவ்வளவுதான். இதை விமர்சனமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இருவரும் கல்லூரியில் ஒன்றாக சுற்றியவர்கள்... இப்போதும் அதே நட்போடு இருப்பவர்கள்.... எனவே அவரது கதைகளை விமர்சிக்கவில்லை. என் நண்பனின் கதைகளை வியந்து பாராட்டுகிறேன்.
எனது அருமை நண்பர் முனைவர். கரு.முருகன், தேவகோட்டை ஸ்ரீசேவுகன் அண்ணாமலைக் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக இருக்கிறார். சிங்கப்பூர் தமிழ்ச் சிறுகதைகள் குறித்த ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். நல்ல சிந்தனையாளர், பேச்சாளார். பட்டி மன்றங்களிலும் கவியரங்கங்களிலும் கலக்கி வருகிறார்.
விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர், கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்த குடும்பம் என்பதால் இவரது கதைகளில் கிராமிய மணம் வீசுகிறது. இந்தச் சிறுகதைப் புத்தகம் 2007ல் வெளியாகிவிட்டது என்றாலும் வெளிநாட்டு வாழ்க்கையில் வருடம் ஒரு முறை போகும் போது படித்திருந்தாலும் இதைப் பற்றி பகிர வேண்டும் என்பதாலேயே இந்த முறை புத்தகத்தை எடுத்து வந்தேன்.
விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர், கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்த குடும்பம் என்பதால் இவரது கதைகளில் கிராமிய மணம் வீசுகிறது. இந்தச் சிறுகதைப் புத்தகம் 2007ல் வெளியாகிவிட்டது என்றாலும் வெளிநாட்டு வாழ்க்கையில் வருடம் ஒரு முறை போகும் போது படித்திருந்தாலும் இதைப் பற்றி பகிர வேண்டும் என்பதாலேயே இந்த முறை புத்தகத்தை எடுத்து வந்தேன்.
அணிந்துரை வழங்கியிருக்கும் எங்கள் குரு மகா சன்னிதானம் குன்றக்குடி தவத்திரு பொன்னம்பல அடிகளார் அவர்கள், 'சொல்ல விளங்கும் கருத்தை உயிர் அணுவைப் போல் உள்ளே வைத்து விளக்கும் ஆற்றல் பாராட்டத்தக்கது' எனத் தெரிவித்துள்ளார்.
திரு. சா.கந்தசாமி அவர்கள் தனது முன்னுரையில் நீண்ட நாவலாக எழுதக் கூடிய குடும்பத்தின் சரித்திரத்தை ஆசிரியர் சிறுகதையாக எழுதியுள்ளார் என்று கூறியிருக்கிறார். இதில் இருக்கும் எல்லாக் கதைகளையும் பற்றி எழுதினால் நீண்ட பதிவாகிவிடும் என்பதால் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல என்னைக் கவர்ந்த கதைகளில் சிலவற்றைப் பற்றி எழுதுகிறேன்.
முதல் கதையான 'தொலைதூர உறவுகள்' என்பதே புத்தகத்தின் தலைப்பாகவும் அமைந்திருக்கிறது. இன்றைய குடும்ப உறவுகளின் நிலையை அப்பட்டமாக படம்பிடித்துக் காட்டும் சிறுகதையாக இந்தக் கதை அமைந்திருப்பது சிறப்பு. இன்று எல்லாக் குடும்ப உறவுகளுமே கணிப்பொறி வழியாகத்தான் அன்பைப் பரிமாறிக் கொண்டு வாழ்கிறார்கள் என்பதை அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறார். இன்றைய தலைமுறை கணிப்பொறி, நேற்றைய தலைமுறை தொலைபேசி வழி உறவில்தான் வாழ்கிறது என்று சொல்லி முடித்திருக்கிறார்.
'அதுதான் வேணும்' என்கிற கதையில் தாழ்ந்த சாதிக்கரப்பயலுக்கு என் பெண்ணைக் கட்டித்தருவேன் என்று சொல்லும் அரசியல்வாதி, பெண் கேட்டு தாழ்ந்த சாதிப் பையன் வரும் போது அவனை விரட்டுவதும் பின்னர் தாழ்ந்த சாதிக்காரனுக்கு கொடுக்கிறேன்னு சொன்னேன்... ஒண்ணுமில்லாதவனுக்கு கொடுக்கிறேன்னு சொல்லலையே என்று அந்தஸ்து குறித்து பேசுவதாக முடித்திருக்கிறார். எல்லாருக்கும் அதுதான் வேணும் என்ற எண்ணம் எழத்தானே செய்கிறது. இந்தக் கதை எங்களது பேராசான். மு.பழனி இராகுலதாசன் அவர்களால் மேம்படுத்தப்பட்டு தாமரை இதழில் வெளியானது என்பதை தனது என்னுரையில் நண்பர் தெரிவித்திருக்கிறார்.
மற்றொரு கதையான 'நுனிப்புல்'லில் வெளிநாட்டில் இருக்கும் மகனுடன் விவசாயியான அப்பா போனில் பேசுவதுபோலும் அப்பாவின் கோபத்தையும் பையனின் வெளிநாட்டு வாழ்க்கையின் வேதனைகளையும் அழகாகப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார்.
சாதகப் பறவைகளில் ஜாதகம் பார்த்து நல்ல நேரம் பொருத்தம் என வாழும் குடும்பத்தின் தலைவன் ஜாதகத்தில் புலியான ஒருவரிடம் தனது மகனின் ஜாதகத்தை பார்க்க வருகிறார். அங்கே ஜாதகம் பார்க்கும் ஐயரோ சாதகம் சரியில்லாத பெண்ணைக் கட்டி சந்தோசமாக வாழ்ந்து வருவதைக் கேட்க நேரிட ஜாதகம் பார்க்காமலே திரும்புவதாக முடித்திருக்கிறார்.
மேலும் இந்தத் தொகுப்பிலுள்ள தவளைகள், உப்பு. பூமராங், சுழல், ஆனந்த மடம், நரிப்பல்லு, அ(ச்)சோக மரங்கள், வேரில்லாத மரங்கள் என ஒவ்வொரு கதையிலும் சமூக அவலங்களைக் கோடிட்டுக் காட்டியிருக்கிறார். இந்த சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் 19 சிறுகதை முத்துக்கள் இருக்கின்றன. அழகான எழுத்து நடையில் அருமையான கதைகளின் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது இந்தத் 'தொலைதூர உறவுகள்'.
இந்தத் தொகுப்பில் இருக்கும் கண்ணகி என்ற கதை கல்லூரியில் படிக்கும் போது பரக்கத் அலி என்ற நண்பர் நடத்திய கவி'தா' என்ற கையெழுத்துப் பிரதியின் சார்பாக நடத்த சிறுகதைப் போட்டியில் பேராசிரியர் அய்க்கண் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு 'பல்லக்கில் ஏறும் பட்டங்கள்' என்ற சிறுகதைத் தொகுப்பில் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சிறுகதைத் தொகுப்பை சென்னை, பாண்டி பஜார், மாசிலாமணி தெருவில் இருக்கும் சேது அலமி பதிப்பகத்தார் வெளியிட்டிருக்கிறார்கள். இவர்கள் புதிய எழுத்தாளர்களின் கதைகளை வெளியிட்டு அவர்களுக்கு நல்லதொரு விலாசம் தருபவர்களாக இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்களது நல்ல பணி தொடரட்டும்.
கதைகளை எழுதிய நண்பர் அவற்றை பேராசியர் முனைவர். வ,தேனப்பன் அவர்களிடம் கொண்டு காண்பிக்க அவரும் பொறுமையாகப் படித்து அவற்றைச் செம்மைப்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கும் தனது முன்னுரையில் நூலாசிரியர் நன்றியைத் தெரிவித்துள்ளார்.
நண்பரின் இரண்டாவது படைப்பு இது. இதன் பிறகும் இலக்கணம் சம்பந்தமான புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார். அவரின் ஆழ் மனதில் புதைந்து கிடக்கும் இன்னும் இதுபோன்ற எண்ணற்ற சிறுகதைகளை அவர் தொகுப்பாக கொண்டு வர வேண்டும் என்பதே எனது விருப்பம்.
தொலைதூர உறவுகளைத் தந்தவர்....
தொலைதூர உறவுகளைத் தந்தவர்....
நன்றி.
-'பரிவை' சே.குமார்
1 எண்ணங்கள்:
நல்ல விமர்சனம்... உங்களது விருப்பமும் நிறைவேறட்டும்... முனைவர். கரு.முருகன் அவர்களுக்கும் தங்களுக்கும் பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...
கருத்துரையிடுக