மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 29 ஜூலை, 2013

எங்க ஊருத் திருவிழா

சின்ன வயதில் திருவிழாக்கள் என்றாலே சந்தோஷம் சொல்லிமாளாது. எங்கள் பக்கம் பங்குனியில் ஆரம்பிக்கும் கோவில் திருவிழாக்கள் ஆடி மாதம் வரை தொடர்ந்து கொண்டே இருக்கும். பெரும்பாலும் கிராமங்கள் முதல் நகரம் வரை மாரியம்மன் கோவில் செவ்வாய் உற்சவவிழா நடக்கும். குறிப்பிட்டுச் சொன்னால் கோட்டூர், அருணகிரிப்பட்டணம், கோட்டையம்மன் கோவில், காரைக்குடி மாரியம்மன் கோவில் திருவிழாக்கள் சுற்று வட்டார மக்கள் எல்லாம் கொண்டாடும் திருவிழாக்களாகிவிட்டன. இதனிடையே ஆனி மாதம் ஊர் கூடி வடம் பிடிக்கும் சிறப்பான கண்டதேவி தேரோட்டம் வேறு (சாதிப்பிரச்சினையில் சிக்கி இப்போது தேரோட்டம் நடப்பது என்பது அரிதாகிவிட்டது) . எத்தனை விதமான சந்தோஷங்களைக் கொடுத்த திருவிழாக்களை அனுபவித்திருக்கிறோம்.

நாங்கள் படிக்கும் போது எங்கள் ஊரில் அவ்வளவாக திருவிழா நடைபெறாது. பக்கத்து ஊர்களில் நடக்கும் திருவிழாக்களுக்குத்தான் செல்வோம். எங்கள் ஊரிலும் வருடா வருடம் வைகாசி மாதம் முதல் நாள் இரவு ஒன்பது மணிக்கு மேல் திருவிழாவிற்கான கூட்டம் கோவிலின் முன்பு கூட்டப்படும். உக்கார்ந்து காரசாரமாகப் பேசி கடைசியில் ஒரு சிலரின் பிடிவாதத்தால் இந்த வருடம் செவ்வாய் கிடையாது என எல்லாரும் ஒருமனதாய்(!) தீர்மாணித்து கலைந்து செல்ல கூட்டம் மட்டுமல்ல செவ்வாய் போட்டுவிடுவார்கள் என ஆவலாய் கோழிக்கூட்டின் மேல் கொட்டக் கொட்ட அமர்ந்திருக்கும் எங்களின் சந்தோஷமும் நமுத்துப் போகும். மற்ற ஊர்களுக்குப் போகும் போது என்னப்பா இந்த வருசமும் உங்க ஊரில் திருவிழா இல்லையா? எப்பத்தான்டா செவ்வாய் போடுவீங்க? என்று நக்கலாகக் கேட்பார்கள். பதில் சொல்லாமல் சிரித்தே மழுப்பி விடுவோம்.

பத்துப் பதினொன்னு படிக்கும் போது திருவிழாக் கொண்டாட வேண்டும் என பசங்களெல்லாம் ஒரு குழுவாக கிளம்பி அதில் கொஞ்சம் வெற்றியும் கண்டோம். கல்லூரியில் படிக்கும் போது எதிர்ப்பாளர்களை எதிர்த்து நின்று பிரச்சினையை போலீஸ் ஸ்டேசன் வரைக்கும் கொண்டு சென்று வெற்றிக் கொடி நாட்டினோம். அதன் பின்னான வருடங்களில் இந்த வருசம் வெளச்சல் இருந்ததா இல்லையா... முடியுமா முடியாதா... கண்மாயில் தண்ணீர் இருக்கா இல்லையா... என எதைப்பற்றியும் யோசிக்காமல் வருடம் வருடம் வைகாசி மாதம் செவ்வாய் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கண்மாயில் தண்ணீர் இல்லை என்றால் இப்போது ஊரில் குடிநீர்த் தொட்டி இருப்பதால் கண்மாய்க்கு பைப் இழுத்து வைத்திருக்கிறோம். குழி வெட்டி நிரப்பிக் கொள்வோம். முன்பு எங்கள் கண்மாயை ஒட்டி இருக்கும் தோட்டத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து சேர்ப்போம்.

(கோவில் கட்டுமானப் பணி நடந்து கொண்டிருந்த போது எடுத்த படம்)

வைகாசி மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழழை அம்மனுக்கு காப்புக்கட்டுவதில் இருந்து எங்க ஊர்த் திருவிழா தொடங்கும். தினமும் மாலை கண்மாயில் இருந்து சாமிக்கரகம் எடுத்து வந்து கோவிலில் வைத்து பூஜைகள் செய்து கொண்டைக்கடலை, பானக்கம் எல்லாம் கொடுத்து மொளக்கொட்டி இரவு மீண்டும் கரகத்தை கண்மாயில் கொண்டு போய் கொட்டிவிட்டு வருவோம். அந்த ஒரு வாரமும் இப்படித்தான். திங்களன்று இரவு வாழைமரம், தோரணம் எல்லாம் விடியவிடியக் கட்டுவோம். அடுத்தநாள் அதாவது செவ்வாய்க்கிழமை அன்றுதான் திருவிழா, அசைவச் சாப்பாட்டுக்கான சமையல், கரகம் வைக்க வேப்பிலை கொண்டு வருதல் என பரபரப்பாக நாளாக இருக்கும். அன்று இரவு அம்மனுக்கு கரகம் எடுத்தல், எல்லாருடைய வீட்டிலும் கரகம் வைத்து இருப்பார்கள். வீடு வீடாக மேளதாளத்துடன் சென்று அழைத்து வந்து கோவிலில் இறக்கி வைப்பார்கள். மறுநாள் காலை சாமி கும்பிட்டு கரகத்தை தூக்கி வழியெங்கும் மொளக்கொட்டி சாமிக் கரகம் எடுப்பவரை ஆட வைத்து கண்மாயில் எல்லாக் கரகங்களையும் கொட்டிவிட்டு குடங்களில் தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்து கோவிலில் சாமி கும்பிடுவோம்.

ஆரம்பத்தில் நம்ம ஊரில் செவ்வாய் போட்டால் போதும் எல்லா ஊரிலும் போல் நம்ம ஊரிலும் மைக்செட் பாட வேண்டும் என்றுதான் நினைத்தோம். அப்புறம் படிப்படியாக செவ்வாயின் போது வெள்ளிக்கிழமை விளக்குப்பூஜை ஏற்பாடு செய்தோம். அப்படியே திருவிழா அன்று காலை பால்குடம் எடுக்க வைத்தோம். இப்ப எங்கள் ஊர் செவ்வாய் சிறப்பான திருவிழாவாக ஆகிவிட்டது. 

திருவிழா அன்று கையிருப்பைப் பொருத்து நாடகம். கரகாட்டம், ஒயிலாட்டம், திரைப்படம் என எதாவது ஒன்று இரவு முழுவதும் நடத்தப்படும். கடந்த சில வருடங்களாக வாணவேடிக்கையும் உண்டு. சிறிய கிராமம்.... எல்லாருமே உறவுகள்... மனசுக்குள் கோபதாபங்கள் இருந்தாலும் எல்லாம் மறந்து சந்தோஷமாக எல்லாரும் நின்று செவ்வாய் கொண்டாடுவது என்பதில் ஒரு அலாதி சுகம்தான்.

எல்லா ஊரிலும் கோவில்கள் கோபுரத்துடன் அழகாக இருக்கின்றன். நம் ஊரில்தான் இன்னும் ஓட்டுக் கொட்டகையில் இருக்கு என்று இளைஞர்களான நாங்கள் தூபம் போட எங்களுடன் ஒத்துப் போகும் சில பெரியவர்கள் ஆமோதிக்க கூட்டத்தைக் கூட்டி வீட்டுக்கு இவ்வளவு வரி என்று சொல்லி வேலை ஆரம்பித்து இப்போ முடியும் தருவாயில்...

சென்ற வருடம் கோவில் கட்டுமானப்பணிக்காக ஒரு கரகம் வைத்து சாமி கும்பிட்டோம். இன்னும் வேலை இருப்பதால் இந்த வருடமும் விடாமல் ஒரு கரகம் வைத்து சாமி கும்பிட்டார்கள். இப்பொழுது வேலைகள் முடிந்து பெயிண்ட் அடிக்கும் பணிகள் நடக்கின்றன. ஆவணி 30ந்தேதி கும்பாபிஷேகம் செய்ய இருக்கிறார்கள்.

என்றோ நாங்கள் பற்றவைத்த நல்ல நெருப்பு இன்று ஜோதியாய் எங்கள் ஊரில் ஒளி வீசுகிறது. தொடர்ந்து ஒளிவீசும் என்ற நம்பிக்கையோடு நாங்கள்...

திருவிழாக்கள் என்ற தலைப்பில் சிலவற்றைப் பற்றி பகிர நினைத்து எங்க ஊர்த்திருவிழாவிலேயே நின்றுவிட்டது. மற்றொரு முறை திருவிழாக்கள் பற்றி பகிர்ந்து கொள்கிறேன்.

மீண்டும் ஒரு தலைப்பில் பேசுவோம்....
-'பரிவை' சே.குமார்.

7 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கூட்டு முயற்சியால் நல்லதொரு செயல்... கும்பாபிஷேகமும் சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்...

Unknown சொன்னது…

இவ்வளவு காலம் ஆயிற்று,ஊர் சாமிக்கு கோயில் கட்ட.நல்ல விடயம்,கீற்றுக் கொட்டகை சாமிக்கு கல்லால் கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்துவது.அந்த சாமி ஊர் மக்கள் அனைவருக்கும் நல்லது செய்யும்!

பெயரில்லா சொன்னது…

வணக்கம்

கோயில்கும்பாபிஷேகம் திருவிழாவும் சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

சாந்தி மாரியப்பன் சொன்னது…

சிறு பொறிதானே பெரு நெருப்பாக உருவெடுக்கிறது. நீங்கள் அனைவரும் ஏற்றி வைத்த தீபம் என்றென்றும் ஒளி வீசும்.

அருமையான பகிர்வு. மைக் செட்டுக்குப் பதிலா விளக்குப்பூஜை ஏற்பாடு செஞ்சது பிடிச்சிருந்தது.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

திருவிழா என்றாலே கொண்டாட்டம்தான் இல்லையா ? அருமை...!

இராஜராஜேஸ்வரி சொன்னது…

என்றோ நாங்கள் பற்றவைத்த நல்ல நெருப்பு இன்று ஜோதியாய் எங்கள் ஊரில் ஒளி வீசுகிறது. தொடர்ந்து ஒளிவீசும் என்ற நம்பிக்கையோடு நாங்கள்...

வாழ்த்துகள்...!

கோமதி அரசு சொன்னது…

நல்ல நெருப்பு இன்று ஜோதியாய் எங்கள் ஊரில் ஒளி வீசுகிறது. தொடர்ந்து ஒளிவீசும் என்ற நம்பிக்கையோடு நாங்கள்...//

தொடர்ந்து ஒளிவீசட்டும்.