மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 11 ஜூலை, 2013

நாகர்கோவிலில் இரு மழைநாள்... (தொடர்ச்சி)

முதல் நாள் கன்யாகுமரியில் சுற்றிவிட்டு வந்து இரவுச் சாப்பாட்டை முடித்து குளிரும் இரவில் முதல் நாள் தூங்காத பயணக்களைப்பும்  சேர போர்வைக்குள் சுருண்டு சுகமாய் (எங்க பக்கம் கூதலுக்கு நல்லா தூக்கம் வரும்ன்னு சொல்வாங்க)  தூங்கி எழும்போதே சோவென்று பெய்து கொண்டிருந்த  மழை எங்கும் போக விடாதோ என எங்களுக்குள் கலக்கத்தைக் கொடுத்தது. வரவும் போகவுமாக மழை இருக்க எப்படியும் சுற்றச் செல்வது என நாங்கள் தயாரானோம். நண்பர் தெரிந்த நபரின் அம்பாஸிடர் காரை வாடகைக்கு பேசியிருந்தார். லேசான தூறலில் நாங்கள், நண்பரின் குடும்பம் மற்றும் நண்பரின் கொழுந்தியாள் மகள் என காரில் பயணித்தோம்.

முதலில் நாங்கள் சென்ற இடம் உதயகிரி கோட்டை, காரை ரோட்டில் நிப்பாட்டினால் அதற்கும் பார்க்கிங் பணம் பெற்றுக்கொண்டார்கள். (ரோட்டில்தான் பார்க் பண்ண வேண்டும்... வேறு பார்க்கிங் வசதியில்லை) எல்லாருக்கும் டிக்கெட் எடுத்து உள்ளே நுழைந்த போது மழை வேகமாகப் பெய்ய சற்று ஒதுங்கினோம். பின்னர் சில மயில்கள், மான்கள், மீன் தொட்டில்கள், கூண்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த குருவிகள் என சிலவற்றைப் பார்த்து சந்தோஷப்பட்டுக்கொண்டோம்...எங்க ஊர் பக்கம் கண்மாய்க்குள் இருக்கும் கருவைக்காடு போல மரங்களடர்ந்து வனாந்திரமாக இருந்து. கேரளாவில் இருந்து வண்டியில் இரு கல்லூரி (பள்ளி???) ஜோடி வந்திருந்தது. நாங்கள் அவர்கள் பின்னே வருகிறோமா என திரும்பித்திரும்பி பார்த்தார்கள். பின்னர் மரங்களுக்கு இடையே மாயமாய் மறைந்துவிட்டார்கள். நாங்கள் நொந்து போய் வெளியேறினோம். காதலர்கள் வந்து போக நல்ல இடம்... கண்களில் விளக்கெண்ணைய் ஊற்றிக் கொண்டு கவனிக்க ஆட்கள் இல்லை... 

அங்கிருந்து பசுமை நிறைந்த பாதையில் பயணித்து பத்மநாபபுரம் அரண்மனையை அடைந்தோம். காரை நிறுத்தி இறங்கியதும் காபி வேண்டும் என்றார்கள். அங்கிருந்த சேட்டன் கடை நன்றாகத் தெரிய, சேச்சி வேறு வாங்க.. வாங்கன்னு அன்பாகக் கூப்பிட உள்ளே நுழைந்தோம். காபி வந்தது... இதமான வானிலையில் சூடான காபி அருந்துவதே ஒரு சுகம்தான் என நினைத்து வாயில் வைத்தால் உவ்வே... மாட்டுக் கோமயம் நல்லாயிருக்கும்... ஒரு காபி 15 ரூபாய் என்று நினைக்கிறேன். யாருக்குமே இறங்கவில்லை... காபி கேட்டவர்கள் பரிதாபமாக முழித்தார்கள். 


பின்னர் அரண்மனை வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் கூட்டமில்லை... செருப்பை கழட்டி வைத்துவிட்டு (அதற்கும் காசுதான்) டிக்கெட் வாங்கி அரண்மனையை பார்வையிட நுழைந்தோம். ஒவ்வொரு இடத்தையும் அழகாக விளக்கினார்கள். மிகவும் சுத்தமாக இருந்தது. சுற்றி சுற்றிப் பார்த்தோம்... பொறுமை இழந்த விஷால் 'வாங்கப்பா போகலாம்' என்றான்... இந்த வீட்டைப் பார்த்து நாம இதே மாதிரி இன்னொரு வீடு கட்டலாம் என்று சொன்னதும் மீண்டும் சந்தோஷமாய் நடந்தான். கொஞ்ச நேரம் போனதும் சும்மா சுத்திச் சுத்தி வருவது அவனுக்குப் பிடிக்காமல் அடம் பண்ண ஆரம்பித்தான். அதட்டலுக்கு அடி பணிய மறுத்தவன் மெதுவாக அருகில் வந்து 'இந்த வீடு நல்லா இல்லை... நம்ம வீடே போதும்... வாங்க போகலாம்...' என்றானே பார்க்கலாம். எங்களால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. 

பத்மநாபபுரம் முடித்து தொட்டிப்பாலம் நோக்கிப் பயணித்தோம். நல்ல பசி இடையில் ஒரு ஊரில் சாப்பிட்டோம். ஊர் பேர் மறந்து போச்சு... ஒரே ஒரு ஹோட்டல்தான் இருந்தது. மோட்டா அரிசிச் சோறு... எதுவுமே வாய்க்கு வெளங்கலை... பசிக்கு மட்டுமே சாப்பிட்டோம் ருசிக்கு அல்ல... தொட்டிப்பாலம் போய் டிக்கெட் எடுத்து உள்ளே போகும் போது அங்கிருந்த பெண்ணுக்கும் எங்களுக்கும் கடுமையான வாக்குவாதம் நண்பர் எகிறிவிட்டார். இதை ஒரு பதிவாகவே பகிரலாம்...

பாலத்தில் நடக்கும் போது மழை தூற ஆரம்பித்தது. நடந்து சென்று மீண்டும் திரும்பி அதிலேயே நடந்து வந்தோம்...லேசான தூறலில் நனைந்தபடி பாலத்தைக் கடக்கும் போது சந்தோஷமாய் இருந்தது. பாலத்தில் நடக்கும் போது கொஞ்சம் பயமாத் இருந்தது. ஸ்ருதி விஷாலுக்கு துளியும் பயமில்லை. நான் விஷாலை கையில் பிடித்திருந்தேன்... என் பாதுகாப்புக்கா... அவன் பாதுகாப்புக்கா... சரி விடுங்க இரண்டுக்குமாகத்தான்... பாலத்தின் மேலிருந்து கீழே ஆற்றைப் பார்க்கும் போது பயமாத்தான் இருந்தது. திரும்பும் போது சில அன்னாசிப் பழங்களையும் அயனி சக்கை என்ற பழத்தையும் வாங்கிக் கொண்டு நேராக திற்பரப்பு அருவியை நோக்கி பயணப்பட்டோம்.


திற்பரப்பில் தண்ணீர் வெள்ளமெனக் கொட்டியது. நாங்கள் குளிக்க இறங்கியபோது சரியான மழை வேறு... அருமையான குளியல்... கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆனந்தக் குளியல். அதன்பின் கடைகளில் சாமான்கள் கொள்முதல்... இங்கு பாப்பாவுக்கு கீ-செயின் வாங்கிக் கொடுத்து கன்யாகுமரி வருத்தத்தை சரிசெய்தோம். பின்னர் காபி சாப்பிட்டுவிட்டு வீட்டை நோக்கிப் பயணித்தோம். 

வீடு வந்து சேர்ந்ததும் நானும் நண்பரும் கடைக்குச் சென்று நேந்திரங்காய் சிப்ஸ்ம், புரோட்டாவும் வாங்கி வந்தோம். எல்லாருமாக சந்தோஷமாக சாப்பிட்டுவிட்டு ஊருக்கு கிளம்பினோம். நண்பனும் தங்கையும் ஆளுக்கு ஒரு வண்டியில் எங்களை கூட்டி வந்தார்கள். நாங்கள் பேருந்தில் ஏற மழை அடித்துப் பெய்ய ஆரம்பித்தது. அவர்கள் நனைந்து கொண்டே சென்றார்கள். மீண்டும் உறக்கத்துடன் பயணம்... அடித்துப் பெய்த மழை திருநெல்வேலி எல்லைக்குள் நுழைந்ததும் போன இடம் தெரியவில்லை. அதிகாலை தேவகோட்டைப் பேருந்து நிலையத்தில் இறங்கிய போது வெப்பக் காற்று முகத்தில் அடிக்க... ஆட்டோப் பிடித்து வீடு வந்து சேர்ந்தோம்.

மொத்தத்தில் நாகர்கோவில் பயணம் நண்பன் மற்றும் தங்கையின் அன்பான உபசரிப்பிலும் மகிழ்வான் சுற்றுலாவிலுமாக எங்கள் மனதில் இனித்தது.

(எடுத்த போட்டோக்களை கணிப்பொறியில் சேமித்த ஞாபகத்தில் வந்துவிட்டேன்... தேடும் போதுதான் தெரிகிறது சேமிக்கவில்லை என்பது... இவை இணையத்தில் எடுத்தவை)

-'பரிவை' சே.குமார்.

6 எண்ணங்கள்:

துளசி கோபால் சொன்னது…

நாங்க போய் வந்த இடங்களை இன்னொரு முறை உங்கள் பதிவின் மூலமாப் பார்த்தேன்:-)

பகிர்வுக்கு நன்றி

கூடல் பாலா சொன்னது…

பயண அனுபவம் பகிர்ந்த விதம் அருமை!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துளசி கோபால் அக்கா...

நல்ல பயண அனுபவமாக இருந்தது. நாட்கள் இரண்டு என்பதால் நிறைய சுற்ற முடியவில்லை...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க கூடல் பாலா அண்ணா.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

sathishsangkavi.blogspot.com சொன்னது…

அருமையான அனுபவம்...

சாந்தி மாரியப்பன் சொன்னது…

சூறாவளிச் சுற்றுப்பயணமா இருந்திருக்கும் போலிருக்கே. ஆனாலும் ஓரளவு கவர் செஞ்சுருக்கீங்க. அடுத்த தடவை போகும்போது நாகராஜா கோயிலுக்கும் போயிட்டு வாங்க.

அயினி பிடிச்சிருந்ததா?.. அன்னாசிச்செடிகளையும் கண்டிருப்பீங்கன்னு நம்பறேன்.

பையன் நல்லாவே பல்பு கொடுக்கறார். ரசிச்சேன் :-))