1993 மும்பை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில், ஆயுதம் பதுக்கிட உதவியதற்காக தண்டனை பெற்ற நடிகர் சஞ்சய் தத், தான் நீதிமன்றத்தில் சரண் அடைவதற்கு மேலும் கால அவகாசம் வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளார்.
இதற்காக அவர் சொல்லும் காரணம், திரைப்படம் எடுப்பதற்காக தன்னை ஒப்பந்தம் செய்துள்ள தயாரிப்பாளர்கள் பெரும் பணம் முதலீடு செய்துள்ளனர்; அவர்களுக்கான படத்தில் தனது காட்சிகள் ஒளிப்பதிவான பிறகு சிறை சென்றால், யாருக்கும் பொருளாதார இழப்பு ஏற்படாது என்பதால், காலஅவகாசத்தை நீட்டித்துத் தர வேண்டும் என்பது.
இவரைப் போலவே, இதே மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், ஆயுதம் பதுக்கிட உதவிய குற்றத்துக்காக "தடா' நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜைபுன்னிசா காஸி என்கிற 71 வயது பெண்மணியும், தான் குடியரசுத் தலைவரிடம் தனக்கு பொதுமன்னிப்பு கோரியிருப்பதாகவும், அதன் முடிவு தெரியும்வரை தனக்கு காலஅவகாசம் தேவை என்றும் உச்ச நீதிமன்றத்தில் மனு கொடுத்திருந்தார். இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
71 வயதான பெண்மணியின் மனுவை நிராகரித்துள்ள நிலையில், சஞ்சய் தத் மனுவையும் நீதிமன்றம் நிராகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், சஞ்சய் தத்துக்காகக் குரல் கொடுக்கவும், அவர் படப்பிடிப்பில் கலந்துகொண்டு, படங்களை முடித்துக்கொடுக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளவும் "பாலிவுட்' (மும்பைத் திரையுலகம்) தயாராக இருக்கிறது. வடஇந்திய அரசியல் தலைவர்களும் ஆதரவாக இருக்கிறார்கள். ஆகவே, சமூகக் கருத்தும், ஊடகக் கருத்தும் எத்தகைய தாக்கத்தை நீதிமன்றத்துக்கு அளிக்கும் என்பதைச் சொல்வதற்கில்லை.
இவ்வாறு தொழிலில் நட்டம் ஏற்படும் என்பதற்காக ஒருவர் சிறை செல்லும் காலத்தைத் தள்ளி வைக்கலாமா? இவ்வாறு ஒவ்வொரு குற்றவாளியும் தான் ஏற்றுக்கொண்ட கடப்பாடுகளை, உறுதிகூறிய ஒப்பந்தங்களை நிறைவேற்றிவிட்டு பிறகு வந்து சிறையில் இருக்கிறேன் என்பது தவறான முன்னுதாரணம் ஆகிவிடாதா?
சஞ்சய் தத், பிரபலமான திரையுலகக் கலைஞர்கள் சுநீல் தத்-நர்கீஸ் தம்பதியின் மகன் என்ற காரணத்தால்தான், அவர் மீது ஆயுதப் பதுக்கல் சட்டத்தில் மட்டும் தண்டனை அளிக்கப்பட்டது. மேலும், இவருக்கு நீதிமன்றம் அளித்த 6 ஆண்டு சிறைத் தண்டனை 5 ஆண்டாகக் குறைக்கப்பட்டது. இவருடைய திரையுலகப் புகழ்தான் இதற்குத் துணையாக இருந்தது.
ஒன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவித்துள்ள நிலையில், மேலும் சில ஆண்டுகள் சிறையில் தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்று நன்கு தெரிந்திருந்தும், அவர் ஏன் புதிய படவாய்ப்புகளுக்கு ஒப்புக்கொள்ள வேண்டும்? இது தெரிந்தே ஒப்பந்தம் செய்ய திரைப்படத் தயாரிப்பாளர்கள் முன்வந்திருந்தால், அது அவர்கள் எத்தகைய பொருளிழப்புக்கும் தயாராக இருந்திருக்கிறார்கள் என்றுதான் கொள்ளமுடியும்.
தான் பொதுமன்னிப்பு கேட்கப் போவதில்லை, சிறைத் தண்டனையை அனுபவிப்பேன் என்று சஞ்சய் தத் பேட்டி அளித்தார். நீதிமன்றம் அனுமதித்துள்ள காலத்தில் சரணடைவேன் என்றும் கூறினார். தற்போது திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு நட்டம் ஏற்பட்டுவிடுமே என்பதற்காக அவர் ஏன் கவலைப்பட வேண்டும்?
நடித்து முடிக்காவிட்டால் தயாரிப்பாளர்களுக்குப் பல கோடி ரூபாய் நட்டம் ஏற்படும் என்பது மெய்யாக இருந்தாலும், இதுபோன்ற கடப்பாடுகள் ஒரு நடிகருக்கு மட்டுமல்ல, குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறை செல்லும் ஒவ்வொரு மனிதருக்கும் இருக்கிறது. எல்லாரும் சிறை செல்வதற்குக் கால அவகாசம் கேட்கத் தொடங்கினால் என்ன ஆகும்?
தன்னுடைய தற்காப்புக்காகத்தான் "ஏகே-56' துப்பாக்கியைத் திருட்டுத்தனமாக வாங்கியதாக சஞ்சய் தத் தனது வாக்குமூலத்தில் கூறியிருக்கிறார். ஒரு பொறுப்புள்ள திரையுலகப் பிரமுகர், மக்களவை உறுப்பினரின் மகன் சட்டவிரோதமாக லைசென்ஸ் இல்லாத துப்பாக்கி வைத்துக் கொள்ளக் கூடாது என்பதுகூடத் தெரியாமல் இருந்திருக்கிறார் என்பதை நம்பவா முடிகிறது? கேட்டால், தனிநபர்களுக்கு "ஏகே-56' துப்பாக்கிக்கு "லைசென்ஸ்' வழங்கப்படாது என்பதால் அனுமதி பெறவில்லை என்று காரணம் வேறு கூறுகிறார்.
அப்படியானால், தற்காப்புக்காக ஆளுக்கு ஆள் திருட்டுத்தனமாக ஆயுதங்கள் வாங்கி வைத்துக் கொள்வதா? அப்படியானால் தீவிரவாதிகள் பிடிபட்டால், தற்காப்புக்காக ஆயுதம் வைத்துக் கொண்டிருந்ததாக வாதிடலாமே, இது என்ன முட்டாள்தனமான வாதம்.
தற்காப்புக்காகத் துப்பாக்கி வைத்திருந்ததால் இந்தியக் குற்றவியல் சட்டத்தின் 96-வது பிரிவின்கீழ் சஞ்சய் தத் குற்றமற்றவர் என்று சாந்தி பூஷண் போன்ற பிரபல வழக்கறிஞர்கள் அவருக்கு வக்காலத்து வேறு வாங்குகிறார்கள்.
லைசென்ஸ் இல்லாமல் தற்காப்புக்காக ஓர் ஆயுதம் வைத்துக் கொண்டிருந்ததற்காக ஐந்து ஆண்டு சிறைத் தண்டனையா என்று கேள்வி எழுப்புவது அபத்தம். "கலாஷ்னிகோவ்' எனப்படும் "ஏகே-56' ரகத் துப்பாக்கியைத் திருட்டுத்தனமாக வைத்திருந்தால், அதற்காக குறைந்தபட்ச சிறைத் தண்டனை ஆறு ஆண்டுகள். அதையேகூட ஐந்தாகக் குறைத்திருக்கிறார்கள்.
அதிலும், மும்பை தொடர் குண்டுவெடிப்புக்குப் பயன்படுத்துவதற்காகக் கொண்டு வரப்பட்ட ஆயுதங்களில் ஒன்று சஞ்சய் தத்திடமிருந்த "ஏகே-56' எனும்போது, தண்டிக்கப்படுவதுதானே நியாயம்? இந்த ஆயுதம் மும்பை குண்டு வெடிப்பு கும்பலுக்கான ஆயுதங்களில் ஒன்று என்று தனக்குத் தெரியாது என்கிறார் சஞ்சய் தத். இருக்கலாம். "லைசென்ஸ்' இல்லாமல், திருட்டுத்தனமாக ஆயுதங்களைப் பெறுபவர்கள் அப்படியொரு சிக்கல் வரக்கூடும் என்று எதிர்பார்க்காதது யார் தவறு?
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிற நம்பிக்கை மக்களுக்கு ஏற்பட வேண்டுமானால், சஞ்சய் தத் போன்ற பிரபலங்கள் தவறு செய்தால் இரட்டிப்பு தண்டனை வழங்கப்பட வேண்டும். அவரவர் லாப நஷ்டங்களுக்காகத் தண்டனையைத் தள்ளிப்போடக் கேட்பதும் அதற்கு ஆதரவுக் குரல் எழுப்புவதும் சட்டத்தின் ஆட்சியையே கேலிக்கூத்தாக்கும் செயல்!
நன்றி:- தினமணி (தலையங்கம்)
-'பரிவை' சே. குமார்
2 எண்ணங்கள்:
பணமும் செல்வாக்கும் இருந்து விட்டால் சட்டமும் வளைந்து விடுகிறது
பெரியவங்க?!சமாச்சாரம்!
கருத்துரையிடுக