மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 16 அக்டோபர், 2015

மனசு பேசுகிறது : அபுதாபியில் மையம் கொண்ட புயல்

டந்த வாரத்தில் ஒருநாள் கில்லர்ஜி அண்ணாவிடம் இருந்து போன்... 'அபுதாபியில் ஒரு விஐபி புயல்  மையம் கொண்டிருக்கிறது... அடுத்த புதன் மாலை 7 மணிக்கு மதினா சயீதில் மையம் கொள்ள இருக்கிறது. அப்போது நாம் அந்த விஐபி புயலைச் சந்திக்க இருக்கிறோம்... ரெடியா இருங்க...' என்றார். நான் யாரென்று கேட்கவுமில்லை அவர் சொல்லவுமில்லை. ஆனால் அவரின் பதிவில் ஒரு வரியில் விஷயம் சொல்லியிருந்தார். அதனை மனதில் கொண்டு அவராகத்தான் இருக்கும் என்று நினைத்ததோடு வேலை, விடுமுறை என்ற வட்டத்துக்குள் சிக்கி புதன் கிழமை என்பதை மட்டும் மனதில் நிறுத்தி இயந்திர வாழ்க்கைக்குள் எப்பவும் போல் பயணித்துக் கொண்டிருந்தேன்.

மீண்டும் ஞாயிறன்று கில்லர்ஜி அண்ணாவிடம் இருந்து போன்... 'என்ன புதன்கிழமை... விஐபி...' என அவர் ஆரம்பித்ததும் 'அண்ணா மறக்க மாட்டேன்... சரியாக 7 மணிக்கு அங்கேயிருப்பேன்' என்றேன். 'ஆமா விஐபி யாருன்னு நீங்களும் கேக்கலை... நானும் சொல்லலை' என்றார். 'ஆமாம் கேட்கலைதான்... அவருதானே அண்ணா...'  என்று நான் சொன்னதும் 'எப்படி... சரியாச் சொல்லீட்டிங்க...' என்றார். 'நீங்கதான் உங்க பதிவில் ஒரு க்ளூ கொடுத்திருந்தீங்களே' என்றேன். 'அதுசரி சரியாப் பிடிச்சிட்டீங்க' என்று சிரித்தார்.

('பன்முகப் படைப்பாளி' கில்லர்ஜி மற்றும் 'ஆன்மீகப் படைப்பாளி' தஞ்சையம்பதி என்ற மலைகளுடன் நானும்)
அந்தப் புதன்... அதாங்க சென்ற புதன்.... 

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள்.... அப்படி ஒரு புதன்... வாழ்வின் வசந்தமாய் அவரைச் சந்திக்க அலுவலகத்தில் இருந்து வந்ததும் மனைவியிடம் ஸ்கைப்பில் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு அவசர அவசரமாய்க் கிளம்பினேன்.  என்னைப் பொறுத்தவரை சரியான சமயத்தில் செல்ல வேண்டும் என்று நினைப்பேன்.  நமக்காக நம்மை வரச் சொன்னவர்களோ நாம் வரச் சொன்னவர்களோ காத்திருக்கக் கூடாது என்று நினைக்கும் ரகம். சொன்ன நேரத்திற்கு முன்னதாகவே அங்கு சென்றேன். அண்ணனை போனில் கூப்பிட அவரும் என்னிடம் சொன்ன நேரத்திற்கு சரியாக வந்து சேர்ந்தார்.

இங்கு சும்மாவே டிராபிக் சலங்கை கட்டி ஆடும்... அதுவும் அடுத்த நாள் விடுமுறை என்றால் கேட்கவே வேண்டாமல்லவா..? நீண்ட தூரத்தில் இருந்து வந்து அபுதாபி டிராபிக்கில் நீந்தி மதினா சயீத் ஷாப்பிங் மாலில் இருக்கும் சரவணபவன் ஹோட்டல் அருகில் தனது மகள், மாப்பிள்ளை மற்றும் செல்லக்குட்டி வர்ஷிதாவுடன் கொஞ்ச நேரத்தில் வந்து சேர்ந்தார் அந்த விஐபி...

யார் அந்த விஐபி என்றுதானே கேட்கிறீர்கள்...

இருங்க சொல்றேன்...

நம்ம செல்வராஜூ ஐயாதான் அபுதாபியை மையம் கொண்ட விஐபி புயல்...

(ஐயா. துரை செல்வராஜூ அவர்களின் பேச்சை ரசித்தபடி நான்)
குவைத்தில் இருந்து மகள் வீட்டிற்கு அபுதாபி வந்தாலும் எங்களையும் காண வேண்டும் என தேடி வந்திருந்தார் தஞ்சையம்பதி என்னும் தளத்தில் ஆன்மீகம் மட்டுமின்றி அனைத்துப் பதிவுகளையும் விரிவாய் விளக்கமாய் எழுதும் அன்பு ஐயா திரு. துரை செல்வராஜூ அவர்கள். அம்மாவும் தம்பியும் வந்தபோதே ஐயாவின் மாப்பிள்ளை, மகள் மற்றும் பேத்தியை சந்திருப்பதால் அவர்கள் எங்களுடன் ரொம்ப அன்பாகப் பேசினார்கள். 

நானும் அண்ணனும் அவர் வரும்வரை பதிவர் விழா, பதிவர்கள், எழுத்து என பேசிக் கொண்டே இருந்தோம். கில்லர்ஜி அண்ணாவின் கெட்டப் மாற்றத்தைப் பார்த்து கமலஹாசன் அடுத்த படத்துக்காக தன்னை மாற்றி இப்படி இங்கு வந்திருக்கிறாரோ என பலர் வந்து பார்த்துப் பார்த்துச் சென்றார்கள்... என்ன மாற்றம்ன்னுதானே கேட்கிறீர்கள். போட்டோவைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஐயா வந்த பின் எங்களை கட்டி அணைத்து அவரின் அன்பைப் பகிர்ந்து கொண்டார். அந்த அணைப்பில் ஒரு தந்தையின் பாசம்... இது நமக்கு தமிழ் கொடுத்த ஒரு உறவு... உணர்வு. பின்னர் ஐயா பேச... நாங்கள் இருவரும் மாணவர்களாய் மாறினோம்.  கில்லர்ஜி அண்ணா அப்போ அப்போ கேள்விக்கு பதில் சொல்லும் மாணவர் ஆனார். நானோ கேட்டுக் கொண்டிருக்கும் மாணவனாய் மட்டுமே...

பதிவுலகில் ஆரம்பித்த பேச்சு பதிவர் விழாவுக்கு வந்து இன்னும் சில பேச்சுக்களின் வழியாக நகர்ந்த நேரத்தில் ஐயாவின் மாப்பிள்ளை... போட்டோவாக எடுத்துத் தள்ளினார். பின்னர் சரவணபவனுக்குள் நுழைந்து டிபன் சாப்பிட்டுக் கொண்டே பேச்சைத் தொடர்ந்தோம். மீண்டும் வெளியில் வந்து அமர்ந்து பேச ஆரம்பித்தோம். கில்லர்ஜி அண்ணா சொன்னது போல் ஓராயிரம் பதிவுகளுக்கான தகவல்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டார்... ஐயாவின் தாத்தாவில் ஆரம்பித்து... உவேசாவில் அமர்ந்து... கலைஞரில் நின்று... ஐயா கிராம அதிகாரியாக பணி எடுத்ததில் இளைப்பாறி... இன்னும் இன்னுமாய் நிறையப் பகிர்ந்து கொண்டார்கள்.

('அண்ணா' கில்லரும் 'ஐயா' தஞ்சையம்பதியும்)
அவர்தான் பேசினார்.... நாங்கள் கேட்டுக் கொண்டே இருந்தோம் என்பதைவிட அவரது பேச்சின் வீச்சை ரசித்தோம்... எனது கதைகளை முழுமையாகப் படிக்க முடிவதில்லை... அழுது விடுவேன் என்றார். இதுதான் எனது கதைகளுக்கு கிடைத்த அங்கீகாரம்... இதை எனது நண்பன் பல முறை சொல்லியிருக்கிறான்... இப்போதெல்லாம் நான் எழுதினால் அதை அவன் படிக்க நேர்கையில் என்னடா உன்னோட கதையின் கடைசி பாராதான் அழுக வைக்கும்... அது மிஸ்ஸிங் என்பான். உடனே மாற்றுவேன். அதையே ஐயாவும் சொன்னார். எனது இரண்டு தொடர்கதையையும் பாராட்டினார் எனக்கு ரொம்பச் சந்தோஷமாக இருந்தது. 

அழ வைப்பது கஷ்டமா... சிரிக்க வைப்பது கஷ்டமா... (முத்து நிலவன் ஐயாவுக்கு பட்டிமன்றத் தலைப்பு ரெடி) என கில்லர்ஜி அண்ணாவும் ஐயாவும் ஒரு விவாத மேடை நடத்தினார். நான் அப்போதும் பார்வையாளனாய் அமர்ந்திருந்தேன். முடிவில் சிரிக்க வைப்பது சுலபம் அழ வைப்பதே கஷ்டம் என தீர்ப்பளிக்க, அப்பா நம்ம கதையில் அழத்தானே வைக்கிறோம் நமக்கே வெற்றி என சந்தோஷம். ஆரம்பத்தில் எனது கதைகளைப் படித்த நண்பர் ஒருவர் நீங்க பாஸிட்டிவ்வா கதை எழுதுங்க எல்லாக் கதையுமே நெகட்டிவாவே இருக்கு... உங்களுக்கு நல்லாவே எழுதத்  தெரியாதா என்றெல்லாம் சண்டையிட்டிருக்கிறார். ஆனால் இன்று உணர்வுப் பூர்வமான கதைகளைத்தான் ஐயா தன்னை அழ வைத்தது என்றார். அதுவே பெரிய பரிசுதானே.

கில்லர் அண்ணாவைப் பற்றி புகழாதவர் யார் சொல்லுங்கள்... கலந்து கட்டி அடித்து ஆடுவதில் சிக்ஸராக விளாசுபவர். ஐயாவும் அவரை இப்படித்தான் புகழ்ந்தார். மேலும் அண்ணாவின் தலைக் கண்ணாடியைப் பற்றியும் சொன்னார். அண்ணாவின் வரலாறு முக்கியம் என்பதை ஐயா அடிக்கடி சொன்னார். தன்னோட பதிவுக்கு கூட வரலாறு முக்கியம்ன்னுதான் தலைப்பிட்டிருக்கிறார்.

(அண்ணா கில்லர்ஜியின் கெட்டைப் பார்த்து ரசிக்கும் ஐயா)

ஐயாவின் பகிர்வைப் படிக்க... வரலாறு முக்கியம். 

நீண்ட நேர உரையாடலுக்குப் பிறகு ஐயா கிளம்ப, கார் வரை வந்து கில்லர்ஜி அண்ணா வழி அனுப்பிச் செல்ல என்னை காரில் ஏற்றி எனது அறை அருகில் கொண்டு வந்து விட்டுச் சென்றார்கள். மிகச் சிறப்பான சந்திப்பு... ஐயாவுடன் ஒரு எதிர்பாராத சந்திப்பு... மிகவும் சந்தோஷமான சந்திப்பு... மீண்டும் கிடைக்குமா என்ற ஆவலுடன் நாங்கள்...

படங்கள் உதவி (நன்றி) : திரு. கில்லர்ஜி அண்ணா.
-'பரிவை' சே.குமார்.

31 எண்ணங்கள்:

KILLERGEE Devakottai சொன்னது…

வணக்கம் நண்பரே அசத்தலான பதிவு
அருமையாக விவரித்த விதம் அழகு உண்மையிலேயே நிறைய விடயங்களை ஜி நமக்கு அளித்து விட்டார் 80 மறுக்க முடியாது வாழ்க்கையில் கடைசிவரை பாடம் படிக்கும் மாணாக்கள் நாம் 80 எமது கருத்து அது அன்று எனக்கு மீண்டும் ஊர்ஜிதமாகியது

என்னைப்பற்றி மன்முகப் படைப்பாளி என்று குறிப்பிட்டதில் படைப்பாளி 80தை தவறுதலாக தட்டச்சு செய்து விட்டீர்களோ...
பன்முகம் உண்மையே... எனக்கு அடிக்கடி அந்த பழக்கதோஷம் உண்டு

நான் அனுப்பிய புகைப்படத்தை கருப்பு வெள்ளையாக மாற்றியதில் கூடுதல் அழகு கிடைத்து இருக்கின்றது நன்றி

தமிழ் மணம் 2

'பரிவை' சே.குமார் சொன்னது…

அண்ணா...
தங்கள் கருத்துக்கு நன்றி....
ஆம் நாம் மாணாக்கர்களே....
தாங்கள் மன்முகப் படைப்பாளி இல்லை... சிறப்பான பன்முகப் படைப்பாளி...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சந்திப்பு பற்றிய அவர்கள் இருவரது பதிவும் படித்து முடித்த போதெ உங்கள் பதிவு எப்போது வரும் என காத்திருந்தேன்.

சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது அறிந்து மகிழ்ச்சி. தொடரட்டும் நட்பு!

துரை செல்வராஜூ சொன்னது…

அன்பின் குமார்...
அன்றைய தினம் - தாங்களும் கில்லர் ஜி அவர்களும் காட்டிய அன்பு ஈடு இணையற்றது.. மெய்மறந்து போனேன்..

மறக்க இயலாத தருணங்கள் அவை.. மீண்டும் மீண்டும் சிந்திக்கும் போது -பிரமிப்பாக இருக்கின்றது..

இதற்கு என்ன செய்யப் போகின்றோமோ!.. என -
எண்ணச் செய்கின்றது தங்கள் பதிவு

வாழ்க நலம்..

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்

வாழ்த்துக்கள் சந்திப்பு இனிதே நடைபெற்றமைக்கு...த.ம4

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

தி.தமிழ் இளங்கோ சொன்னது…

உங்கள் மூவரையும் ஒரு சேரப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. இப்போதெல்லாம் தமிழ் வலைப்பதிவர்களின் சந்திப்பு ஆங்காங்கே நடைபெற்று வருவது மகிழ்ச்சியான செய்தி. ‘வரலாறு முக்கியம்’ என்று எல்லோரும் நினைக்க ஆரம்பித்து விட்டார்கள் போலிருக்கிறது.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

உங்கள் மூவரின் சந்திப்பைப் பற்றிப் படிக்கும்போது மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. பணிநிமித்தம் தொலைதூரம் சென்றுள்ள உங்களுக்கு அந்த சந்திப்பின்போது கிடைத்த அனுபவத்தைப் பகிர்வது என்பது அலாதியானது. உங்கள் மகிழ்ச்சியுடன் நாங்களும் கலந்துகொள்கிறோம்.
வாய்ப்பு கிடைக்கும்போது மகாமகத் தீர்த்தவாரி கோயில்களைக் காண அழைக்கிறேன்.
http://drbjambulingam.blogspot.com/2015/10/2016.html

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

புயலா அவர்
தென்றல்
வீசு தென்றல் காற்று
பழகுதற்கு இனியவர்
அருமையான சந்திப்பு நண்பரே
நன்றி

சசிகலா சொன்னது…

நல்லதொரு சந்திப்புகள் தொடர வாழ்த்துகள் சகோ.

Unknown சொன்னது…

புதுகைக்கு வராமலே புதுமையான சந்திப்பா ?ரசித்தேன் குமார் ஜி :)

சாரதா சமையல் சொன்னது…

அருமையான நண்பர்கள் சந்திப்பு குமார். உங்கள் சந்திப்பு மீண்டும் தொடர வாழ்த்துக்கள் !

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

சந்திப்பு பற்றி அவர்களது பதிவுகள் வாசித்ததும் உங்கள் பதிவும் வருமெனக்காத்திருந்தோம். சுவையான பதிவு. ம்ம் நல்ல தருணங்கள்...இந்த இன்பமான தருணங்கள் நிலைத்து நீடிக்கட்டும்...

வாழ்த்துகள்!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

ஐயா திரு. துரை. செல்வராஜூ அவர்களை சந்தித்த விவரத்தை மகிழ்ச்சியாய் பகிர்ந்தீர்கள். படித்ததில் எனக்கும் மகிழ்ச்சி!

Unknown சொன்னது…

மூவரையும் கண்டேன்! முகமும் அகமும் மலர! வாழ்க வளமுடன்!

இராய செல்லப்பா சொன்னது…

தம்பி கில்லர்ஜி அவரகளை புலவர் ராமானுஜம் ஐயா அவரகள் வீட்டில் சந்தித்திருக்கிறேன். அன்பும் தமிழும் அவரின் இரு கண்கள் என்று உணர்ந்தேன். மதிக்கப்பட வேண்டிய பதிவர். - இராய. செல்லப்பா

balaamagi சொன்னது…

மகிழ்ச்சியான சந்திப்பைப் பகிர்ந்த விதம் அருமை,
வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
நாங்கள் தங்களின் அன்பில் நனைந்தோம் என்பதே உண்மை...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ரூபன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா
ஆம் வரலாறு முக்கியம்ன்னு நினைக்கிறாங்கதான்..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
கண்டிப்பாக வாசிக்கிறேன் ஐயா..

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தென்றல் இங்கு வரும்போது எங்களுக்குப் புயல் ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஜி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அம்மா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துளசி சார் / கீதா மேடம்...
கில்லர் அண்ணாவுக்கு முன்னரே நான் பதிவு போட்டாச்சு...
தாங்கள் வரத்தான் தாமதம்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நண்பரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
மீசைக்காரர்தான் இருந்தாலும் பாசக்காரர்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Menaga Sathia சொன்னது…

நல்லதொரு சந்திப்பு தொடரட்டும்,வாழ்த்துக்கள் சகோ!!