மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 23 அக்டோபர், 2015

மனசின் பக்கம் : அகமும் புறமும்

லைப்பதிவர் மாநாடு வெற்றிகரமாக முடிந்திருக்கிறது. எதிர்பார்த்ததைவிட மிகச் சிறப்பாக நடந்த விழாவில் அன்பு நிறைவாகவும் பணம் பற்றாக்குறையாகவும் அமைந்துவிட்டதென பகிர்வுகள் பார்க்க நேர்ந்தது. பணத்தைப் புரட்டி விடலாம் என்ற நம்பிக்கை புதுகை நண்பர்களிடம் இருக்கிறது. இருப்பினும் வலைப்பதிவர் கையேட்டினை பணம் கொடுத்து வாங்கி உதவுங்கள் என்று சொல்லியிருந்தார்கள். அதை நாம் செய்யலாமே... பற்றாக்குறை முழுவதையும் நிவர்த்தி செய்ய முடியாவிட்டாலும் கையேட்டை பணம் கொடுத்துப் பெறுவதால் நண்பர்களின் சுமையை நம்மால் முடிந்த அளவு குறைக்கலாம் அல்லவா? சிறப்பாக நடத்தியவர்களுக்கு பணப் பற்றாக்குறையை ஈடு செய்யவது என்பது பெரிய விஷயமில்லை... இருந்தாலும் நம் குடும்ப விழா நாமும் நம்மாலான உதவியைச் செய்யலாம் அல்லவா? செய்வோம் என்ற நம்பிகையோடு மிகச் சிறப்பாக விழா நடத்திய புதுகை நண்பர்களை வாழ்த்துவோம்.


*
லைப்பதிவர் கையேட்டில் வாசிக்க வேண்டிய பதிவர்கள் என பிரித்துப் போட்டிருப்பதாக ஐயா ஒருவர் பதிவில் தெரிவித்திருந்தார். அது ஏன் அவ்வாறு செய்தார்கள் எனத் தெரியவில்லை. நான் கையேடும் பார்க்கவில்லை. ஒருவேளை பதிவுலகம் வரும் புதியவர்கள் வலைத்தளம் அமைப்பது எப்படி என்ற தொழில் நுட்பங்களைப் தனபாலன் அண்ணா, நண்பர் தங்கம் பழனி உள்ளிட்ட பதிவர்களின் பதிவுகளைப் படிப்பதன் மூலம் அறியலாம் என்று போட்டிருக்கிறார்களா... அல்லது இவர்களின் எழுத்துக்கள்தான் பிரபலமானவை என்று போட்டிருக்கிறார்களா... என்பது தெரியவில்லை. விவரம் தெரியாமல் எதையும் பேசக் கூடாது... ஐயாவும் விவரமாக எழுதவில்லை. என்ன இருந்தாலும் இது நம் வீட்டு விழா... எந்த விழா என்றாலும் நிறை குறைகள் இருக்கத்தான் செய்யும்...  பார்த்துப் பார்த்துச் செய்யும் சின்னச் சின்ன வீட்டு விசேசங்களில் கூட குறைகள் வரத்தான் செய்யும். எல்லாம் நிறைவாய்... எல்லாருடைய மனசுக்கும் நிறைவாய் செய்வதென்பது கடினமான ஒன்று. குறைகளைக் களைந்து நிறைகளைப் பகிர்வோம். அப்புறம் கவிதைகள் எழுதி படங்களுடன் அழகாய் காட்சிக்கு வைத்திருந்தார்கள்... நம்ம கவிதை எல்லாம் அதில் இருந்ததா என்று தெரியவில்லை... போன நண்பர்கள் யாரும் இதுவரை சொல்லவில்லை... அப்படியென்றால் இல்லை என்றுதானே அர்த்தம்... சரி யார் யார் கவிதைகள் அதில் இடம் பெற்றன என ஒரு பகிர்வை முத்து நிலவன் ஐயா பகிர்ந்தால் நல்லா இருக்கும்... செய்வீர்களா?
*
லைப்பதிவர் மாநாட்டில் தமிழ் இணையப் பல்கலைக் கழகம் நடத்திய போட்டிகளுக்கு வந்த கட்டுரைகள், கவிதைகளில் பரிசு பெற்றவையுடன் நல்லா எழுதியிருக்கிறார்கள் என்ற நிலையில் உள்ளவற்றைத் தொகுத்து மின்னூலாக்க திட்டமிட்டிருக்கிறார்களாம். வரவேற்கத்தக்க செய்தி... வாழ்த்துக்கள்.  எனது கட்டுரையை மின்னூலாக்கலாம் என்று  எழுத்தாளரின் ஒப்புதல் மின்னஞ்சல் வேண்டும் எனக் கேட்டிருக்கிறார்கள். இதில் மின்னூலாக்க இருக்கும் கட்டுரைகளைத் தேர்வு செய்து அவர்களுக்கு மட்டும் மின்னஞ்சல் அனுப்பி ஒப்புதல் பெறலாம் என்று நினைக்கிறேன். இல்லை என்றால் அனைவருக்கும் மின்னூலாக்கும் ஆசை இருக்கும்... எல்லோரும் ஒப்புதல் மின்னஞ்சல் அனுப்புவோம். கவிதைப் பகிர்வைப் போல் என்னுடையது ஆகவில்லை... உன்னுடையது ஆகவில்லை... என்ற மன வருத்தங்கள் வரலாம். எனவே முதலில் தேர்வு செய்து எழுதிய நண்பர்களிடம் கேட்கலாம்... அவர்கள் வேண்டாம் என்றால் அடுத்தவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்பதே என் தனிப்பட்ட விருப்பம். இதை முத்து நிலவன் ஐயாவும் நம் புதுகை நண்பர்களும்தான் செய்ய வேண்டும். 

*
ங்கள் கதைகள் அழ வைக்கின்றன என்று அன்பு ஐயா செல்வராஜூ அவர்கள் சொன்னார்கள் என்று முன்பே எழுதியிருந்தேன்... அதே வேளையில் சினிமா விமர்சனம் எல்லாம் எழுதுறீங்க... அது எதற்கு குறைத்துக் கொள்ளலாமே என்றும் சொன்னார். உண்மைதான் இதை ஐயா சொல்லும் முன்னே என் நண்பன் தமிழ்க்காதலும் போனில் பேசும்போது திட்டியிருக்கிறான்... ரொம்ப அன்பாக ஆரம்பித்து (மூதேவி அன்புதானேங்க) நல்லா எழுதுறே... அதே வழியில போடான்னு சொன்னா எதுக்கு சினிமாப் பின்னாடி போறேன்னு மானே... தேனே... பொன்மானே... எல்லாம் போட்டு அடிக்கடி திட்டுவான்... திட்டுறான்... திட்டுகிறான்... இனி சினிமா விமர்சனங்களைக் குறைக்கலாம்... இருந்தாலும் அப்ப அப்ப நம்ம தளம் இருக்குன்னு எல்லாருக்கும் காட்டுறதே சினிமாப் பகிர்வுகள்தான்... ஏன்னா கதை, கவிதை, கட்டுரைகளுக்கு எல்லாம் இங்கு ஒரு சிலரைத் தவிர பலருடைய பகிர்வுகளுக்கு நல்ல மார்க்கெட்டிங் இல்லை என்பதே உண்மை... சிறுகதை பகிர்ந்தால் 100 பேர் பார்த்தால் சினிமா என்றால் 1000 பேர் வாசிக்கிறார்கள். எனவே சோற்றில் ஊறுகாய் போல அப்ப அப்ப நாமும் வலையில் நிலைத்து நிற்க இதையும் செய்ய வேண்டித்தான் இருக்கிறது. இந்த மனநிலை தவறு என கில்லர்ஜி அண்ணா சண்டைக்கு வரலாம்... ஏனென்றால் அவருக்கு சினிமா பிடிக்காது. இருந்தாலும் இதுதான் இன்றைய பதிவுலகின் நிதர்சனம்.... இல்லையேல் நமக்கென ஒரு பெரிய குழுவைக் கட்டிக் காக்க வேண்டும்... அப்போதுதான் பிரபலமாகலாம். அதற்கெல்லாம் நாமும் அதிகம் பேருக்கு கருத்துக்கள் இட வேண்டும். அதைச் செய்ய முடியாத சூழல்... எழுதுவதும் கருத்துக்கள் இடுவதும் அவரவர் விருப்பமே... ஆனால் இங்கும் பதிவு அரசியல் தலைவிரித்து ஆடுகிறது என்பதே உண்மை... எழுத்தால் சிலர் முன்னேறி வரும் போது அவன் எப்படி முன்னே போகலாம் என்ற சண்டைகளும் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது. எப்படியோ அடுத்தவருக்காக இல்லை என்றாலும் நம் மன திருப்திக்காக முடியும் வரை எழுதுவோம்.

*
ள்ளி மாறுவேடப் போட்டியில் பாரதி வேடம் அணிந்து 'அச்சமில்லை... அச்சமில்லை' என மழலைக்குரலில் உரக்கச் சொன்ன விஷாலுக்கு முதல் பரிசு கிடைத்திருக்கிறது. அவனை கொஞ்ச நேரம் மேய்க்க முடியவில்லை... அதிகம் பேசுகிறான் என்று சொன்னாலும் கண்டித்து அடக்கி வைப்பதைவிட அவன் போக்கில் விட்டால்தான் இன்னும் சிறப்பாக வளருவான் என்று நினைக்கிறேன்... அப்படியே வளரட்டும் பேச்சாளனாக மட்டுமில்லாமல் மற்றவர்களுக்கு நிழல் தரும் ஆல மரமாக...

*
ந்திய கிரிக்கெட் வீரர்களில் சச்சின்,கங்குலி, டிராவிட்டுக்கு அடுத்தபடியாக மிகவும் பிடித்த வீரர் என்றால் அது சேவாக்தான்... எதற்கும் பயப்படாத மிகவும் துணிச்சலான வீரர்... மைதானத்தில் நின்றால் மிக லாவகமாக அடிக்கடி நான்கும் ஆறும் விளாசி ரசிகர்களை மகிழ்விக்கும் வீரர்... மைதானத்தில் நிதானமாக விளையாடு என்று யாராலும் கட்டுப்படுத்த முடியாத வீரர்.... சச்சின் கூட ஐம்பது அடிக்க போகிறார் என்றால் நாற்பதில் வேகத்தடை வரும்... பின்னர் பந்துகள் கடக்கும் ரன் ஒன்றிரண்டாகும்... அதே போல்தான் சதம் அடிக்கப் போகிறார் என்றால் தொன்னூறில் வேகத்தடை வரும்... சாதித்த வீரர் என்பதைவிட தன் சாதனைகளை செதுக்கிக் கொண்ட வீரர் என்றே சொல்லலாம்... ஆனால் சேவாக் நான் விளையாடுவது நாட்டிற்காக... எனது தனிப்பட்ட சாதனைகளுக்காக அல்ல என்று விளையாண்டவர்... நான்கு, ஆறு அடித்து போட்ட ஐம்பதுகளும் நூறும்தான் அதிகம்... முன்னூறுக்கும் இருநூறுக்கும் சொந்தக்காரர்.... அந்த ரன்கள் கூட சாதனைக்காக காத்திருந்து வரவில்லை என்பதை போட்டிகளைப் பார்த்த அனைவரும் அறிவார்கள். 


இப்போது விளையாண்டால் முதலவதாய் களமிறங்கி என்னால் ஆட முடியாது என்றும் அன்று நான் ஆட்டமிழந்தாலும் பின்னணி வீரர்கள் கரை சேர்ப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தது அடித்து ஆடினேன். இன்று இந்திய அணியில் நடுவரிசை மிகவும் மோசமாக இருக்கிறது அதனால் என்னால் அப்படியெல்லாம் ஆட முடியாது என்று உண்மையை உரக்கச் சொல்லி தனது ஓய்வை அறிவித்திருக்கிறார்.... சேவாக் கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும் பெயர்... வாழ்த்துக்கள் சேவாக்... இவரைப் போல் யார்க்கர் மன்னன் ஷாகீர் கானும் ஓய்வை அறிவித்திருக்கிறார்... இந்தியப் பந்து வீச்சாளர்களில் துல்லியமாக ஸ்டெம்பைக் கலக்கிய பந்து வீச்சாளர் இவர். இவரையும் வாழ்த்துவோம்... இந்திய கிரிக்கெட் சங்கம் வீரர்களை வழியனுப்புவதில் இன்னும் திருந்தவில்லை... மற்ற நாடுகளைப் பார்த்தாவது திருந்த வேண்டும். இதே சங்கம்தான் சச்சினுக்காக இந்தியாவில் போட்டியை அமைத்து வழி அனுப்பி வைத்தது... மற்றவர்களை கேவலப்படுத்தித்தான் அனுப்புகிறது.... இதுதான் நாளை தோணிக்கும்தான்... ஏனென்றால் இப்போதே தோணியை வெளியாக்கும் முயற்சிகள் சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டன என்பதை நாடே அறியும்.
*

சென்ற வாரத்தில் சில மலையாளப் படங்கள் பார்த்தேன்... அதில் மம்முட்டி, நயன்தாரா நடிப்பில் பாஸ்கர் தி ராஸ்கல் என்ற படமும்... கிளைமேக்ஸ் காட்சியில் வேண்டுமானால் சினிமாத்தனம் இருக்கலாம்... ஆனால் படம் மிகவும் அருமை... அருமையான கதைக்களம்... நல்ல படம். தமிழில் எடுக்க இருப்பதாக செய்தி படித்தேன். இன்னும் SHE TAXI, ஒரு வடக்கன் செல்பி, நீ-நா போன்ற படங்களும் பார்த்தேன்... ஒரு வடக்கன் செல்பி கொஞ்சம் நல்லாப் போச்சு. எனக்கு நிவின் பாலியை ரொம்பப் பிடிக்கும்.. ஒரு எதார்த்த நடிகன்... வடக்கன் செல்பியிலும் நல்லா நடிச்சிருக்கார்... படமும் சென்னை, பழனி, தஞ்சாவூர் என பயணிப்பதால் தமிழ் வாடை அதிகம் இருக்கு...   போதைப் பழக்கத்தில் இருக்கும் ஒரு பெண்ணுக்கும் திருமணமான அவளின் மேனேஜர் மற்றும் அவரின் மனைவிக்கும் இடையில் நடக்கும் கதைதான் நீ-நா.... நீனாவாக தீப்தியும் நளினியாக ஆன் அகஸ்டினும்... அருமையாக நடித்திருக்கிறார்கள்... படமும் பார்க்கலாம்... கொஞ்சம் பொறுமை வேணும்... புத்த பிட்சுக்கள், கோடி மதிப்புள்ள ஓவியங்கள், அதை அபகரிக்க கிளம்பும் வில்லன்கள் என பரபரப்பான கதைக்களமாக அமைத்து டாக்ஸி ஓட்டும் பெண், அவளது பயணம், கொள்ளை அடிக்கத் திட்டமிடும் நாயகனும் அவனது நண்பர்களும் அவர்களின் பயணம் நகைச்சுவையாய் மாற்றி  இறுதியில் ஓவியங்களை யார் எடுத்தார்கள் என்று முடிக்கிறது SHE TAXI. ரொம்ப நல்லாவெல்லாம் இல்லை... பொழுது போகலைன்னா பாக்கலாம்.

*

ல்லாரும் சிவகார்த்திகேயனை தலையில் வைத்து ஆடும்போது நான் விரும்பும் நடிகன் விஜய் சேதுபதி... கொஞ்ச நாளாகவே நட்புக்காக நடிக்கிறேன்... பாசத்துக்காக நடிக்கிறேன்... என தன் பாதையை மாற்றி தனது இடத்தை இழந்து கொண்டிருப்பதைக் கண்டு வருத்தமாக இருந்தது. ஒண்ணுமே இல்லாமல் ரஜினி இடத்தைப் பிடிக்கிறேன் என மற்றவர்கள் முன்னே போய்க் கொண்டிருக்க, திறமை இருந்தும் எதற்காக இவர் பின்னோக்கி போகிறார் என்று எண்ணியிருக்கிறேன். தன்னோட இடத்தை தக்க வைத்துக் கொள்ள மிகவும் அருமையான வாய்ப்பை வழங்கியிருக்கிறது நானும் ரவுடிதான்... கடைசி வரைக்கும் நகைச்சுவையோடு பயணிக்கும் படக்கதையில்... விஜய் சேதுபதி நானும் ரவுடிதான் என சொல்லி அதகளம் பண்ணுகிறார். நயன்தாரா சொல்லவே வேண்டாம்.... நாயகனைவிட இவருக்குத்தான் விசில் பறக்கிறது என்பதை சொல்லித்தான் ஆகவேண்டும். காது கேட்காத பெண்ணாக... கலக்கியிருக்கிறார்... ராதிகா, வில்லன் பார்த்திபன், நண்பராக வரும் ஆர்.ஜே. பாலாஜி, அட பயங்கர வில்லனாகப் பார்த்த ஆனந்தராஜ் சூப்பர் காமெடியானாக என ஆளாளுக்கு சிக்ஸர் அடிக்கிறார்கள். படம் பக்கா.... கமல், அஜீத், தனுஷ் என்ற எனக்குப் பிடித்த நாயகர்கள் வரிசையில் விஜய் சேதுபதியும்.... நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்தால் இன்னும் சிறப்பான இடத்தை அடையலாம்... செய்ய வேண்டும்.

*
கல் - பிரதிலிபி நடத்திய சிறுகதைப் போட்டியில் எனது சிறுகதைக்கு புத்தகங்கள் பரிசாக கிடைத்திருக்கின்றன. போட்டியை நடத்திய இரண்டு இணையத்துக்கும் வாழ்த்துக்களும் நன்றியும்... பாக்யா மக்கள் மனசு பகுதியில் எனது கருத்துக்களை தொடர்ந்து வெளியிடும் எஸ்.எஸ். பூங்கதிர் சாருக்கும் பாக்யா இதழ் நண்பர்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றியும்... குடந்தையூர் சரவணன் அண்ணனின் இரண்டாவது குறும்படமான அகம் புறம் குறித்த போட்டோக்களும் செய்திகளும் முகநூலிலும் அவரின் குடந்தையூர் தளத்திலும் சில நாட்களாக பதியப்படுகின்றன. படத்தின் டீசரும் வெளியாகி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. படம் வரும் 26ஆம் தேதி வெளியாகிறது.  வெற்றி பெற வாழ்த்துவோம். அகம் புறம் குறும்பட டீசர் கீழே...




மனசின் பக்கம் தொடரும்
-'பரிவை' சே.குமார்.

49 எண்ணங்கள்:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

பலதரப்பிலான செய்திகளை விவாதிக்கும் விதமும் பகிரும் விதமும் அருமையாக உள்ளது. வெளிப்படைத்தன்மையைப் பாராட்டுகிறேன்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கொஞ்சம் பொறுங்கள் சகோதரரே...

வர வேண்டிய பகிர்வுகளின் மூலம் விளக்கம் பெறலாம்...

நன்றி...

ஸ்ரீராம். சொன்னது…

பரிசு பெற்றதற்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும். விஷாலுக்கும் எங்கள் பாராட்டுகள். ஜாகீர்கான், மற்றும் சேவாக்கை எனக்கும் பிடிக்கும்.
தம +1

கரூர்பூபகீதன் சொன்னது…

எல்லா விசயங்களையும் கதம்பமாக அழகாக அருமையாக உள்ளது! நன்றி நண்பரே

இளமதி சொன்னது…

வெற்றி உங்களை நோக்கி நகரத்தொடங்கிவிட்டது!
தங்கள் ஆக்கங்கள் எப்பொழுதும் மனம் தொடுபவை சகோதரரே!
வாழ்த்துக்கள்!

இங்கு பகிரப்பட்ட பல விடயங்களுடன் நானும் ஒத்துப் போகிறேன்.

பதிவர்சந்திப்பு நிறைகுறைகளெல்லாம் சாதாரணமானவையே!
குறை என்றால் நிதிக்குறைதான்.. மனதுக்கு நெருடலாக இருக்கின்றது.
//மின்னூலாக்க இருக்கும் கட்டுரைகளைத் தேர்வு செய்து அவர்களுக்கு மட்டும் மின்னஞ்சல் அனுப்பி ஒப்புதல் பெறலாம் என்று நினைக்கிறேன்...//
இதைப் போலவே நானும் கேட்டிருக்கிறேன் அங்கே!..

படவிமர்சனம் அதிலும் பிறமொழிப்படங்கள் குறிப்பாக மலையாளப் படங்கள் வரிசையில் உங்களைப் போன்றோர்தரும் விமர்சனத்தால் தேடிப் பார்ப்பேன்.
இங்கு குறிப்பிட்ட மிக அருமை என நீங்கள் குறிப்பிடும் படங்கள் நெட்டில் தேடிப் பார்க்க எண்ணுகிறேன்!

அகம் புறம் டீசர் பார்த்தேன். நன்றாக இருகிறது. நானும் படம் பார்க்கும் ஆவலில் காத்திருக்கின்றேன்! படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்!

பல்சுவைக் கதம்பமாய் மனசு இன்று மணக்கிறது!
வாழ்த்துக்கள் சகோ!

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை சொன்னது…

பகிர்வுக்கு நன்றி நண்பரே. பற்றாக்குறை யெல்லாம் சரியாகிவிட்டது.
கையேடு விற்பனை மட்டுமே இப்போது இலக்காகி உள்ளது. அதற்கு அதில் பங்கேற்றோர் புத்தகம் வாங்கி உதவினாலே போதுமானது. நண்பர்களும் வாங்கி மற்றவர்க்குத் தந்துதவலாம். 500ருபாய் அனுப்பினால் 4நூல்களை அனுப்பலாம். இந்தவிவரம் இங்குள்ளது - http://valarumkavithai.blogspot.com/2015/10/blog-post_17.html
நிற்க. ஒரு நண்பர் கேட்டிருந்த விளக்கம்பற்றி - அச்சகத்தில் பேசியபடி பக்கம் 150க்கு நாம் வலைநண்பர்களுக்குப் பயன்படும் குறிப்புகளைத் தரவேண்டும். நாம் தெரிவித்திருந்த கடைசி நாள்வரை வந்த குறிப்பு வெறும் 100பேருக்குள்தான் இருந்தது. எனவே நாள் நீட்டித்து சில நண்பர்களிடம் “படிக்க வேண்டிய தளங்கள்“ பற்றிய குறிப்பைக் கேட்டும் கேட்கப்பட்ட யாரும் அனுப்ப வில்லை. கடைசி நேரத்தில் நானும் நண்பர் வைகறையும் கிடைத்த எழுத்தாளர்களின் தளங்களை அவரவர் பெயருடன்-யுஆர்எல் மட்டும் போட்டு அப்படி ஒரு 4பக்கம் சேர்த்து மொத்தம் 331 வலைப்பதிவர் குறிப்புகளைக் கொண்ட கையேடு தற்போது வந்துள்ளது. இதில் “படிக்க வேண்டிய“ என்றும் “பிரபல எழுத்தாளர்கள்“ என்றும் போட்டிருக்கிறதே அதற்கு என்ன அளவுகோல் என்றுதான் அந்த நண்பர் கேட்டிருக்கிறார். அதற்கு கடைசி நேரப் பரபரப்பில் எங்களுக்குப் படிக்க ஏற்கெனவே கிடைத்த யுஆர்எல் தகவல்களைத் தந்தோமே அன்றி அளவுகோல் வைத்துப் பார்க்கவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். அடிப்படையில் நம்பிக்கை வேண்டும். அது இல்லாமல் எதுவும் நடக்காது. விழாவை நன்றாக நடத்துவார்கள் என்று எ ங்கள் மீது நீங்களெல்லாம் வைத்த நம்பிக்கைக்கு பங்கம் வராமல் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்றே நம்புகிறேன்.
அதோடு இனி நன்கொடையாக வாங்குவதில்லை என்றும் முடிவெடுத்து அறிவித்துவிட்டோம். புத்தக விற்பனைக்கு உதவுங்கள் எனபது மட்டுமே இப்போதைய எமது கோரிக்கை. இந்தக் குறிப்புகளை எழுத வாய்ப்பளித்த தங்கள் பதிவுக்கும் எமது நன்றி நண்பரே. வணக்கம்.

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை சொன்னது…

அடுத்து ஓவியங்கள் தொடர்பாக - தாங்கள் மட்டுமல்லாமல் தங்கை சசிகலா திருமிகு ஜி.எம்.பி.,உள்ளிட்ட பதிவர் பலரும் தங்கள் கவிதைகளை ஓவியங்களாக்கி இருப்பார்கள் என்னும் எதிர்பார்ப்போடு வந்து ஏமாற்றமடைந்த நிகழ்வாக “பதிவர் ஓவியக் கண்காட்சி” அமைந்ததற்கு பொறுப்பேற்று மன்னிப்பைக் கோருகிறோம் . நடந்தது என்னவெனில், அப்படியான கவிதைகளைப் பதிவர்களின் பக்கங்களில் போய்த் தேடித்தேடி எடுத்துப் பலமுறை மின்னஞ்சல்வழியே பகிர்ந்துகொண்ட தங்கை மைதிலி, கவிஞர் வைகறையின் கருத்துகளை நம் ஓவியர்கள் -அல்லது ஓவியர்கள் சார்பாக அவற்றை எடுத்து ஓவியர்களிடம் தந்த- குழு, சரியாகப் புரிந்துகொள்ள வில்லை. நான் பலமுறை “வரும் பதிவர்கள் தங்கள் கவிதைகளை ஓவியமாகத் தேடுவார்கள் என்பதை கவனத்தில் கொண்டு ஓவியங்களைத் தீ்ட்டுங்கள. அப்படியே நல்ல பிற கவிதைகளையும் பயன்படுத்தி, ஓவியங்களைப் பதிவரல்லாத பிறரும் ரசிப்பதுபோல அமையுங்கள், எல்லாவற்றையும் முடித்து முன்னரே அனுப்பினால் இந்தக் குறைகள் இன்றி, வருவோரை திருப்திப் படுத்தலாம். இல்லாவிடில் தம் கவிதைக்கான ஓவியங்களைத் தேடும் பதிவர் மிகுந்த அதிருப்தி அடைவர்” என்று முன்னரே தெளிவாகச் சொல்லப்பட்டிருந்தும், அது நடக்கவில்லை. இவ்வளவு ஏன்? கவிதைகளைத் தேடிக்கொடுத்த மைதிலியின் கவிதை ஒன்று கூட இல்லை எனில் மற்றவற்றை என்ன சொல்ல? இதுதான் நடந்தது.இந்த அனுபவத்தைக் கொண்டு, இனி இவ்வாறு நிகழாமல் நடத்தக் கற்போம். மன்னிக்க. ஆனால் நமது பதிவர்கவிதைகளை ஓவியமாக வைக்கவேண்டும் எனும் எமது நோக்கம் தெளிவானது என்று இப்போதும் நம்புகிறேன். அடுத்த எமது “கணினித் தமிழ்ச்சங்க“ ஆண்டுவிழாவில் இந்த அனுபவங்களை எடுத்துக்கொண்டு செயல்படுவோம் நண்பர் குமார் அவர்களே!

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
அண்ணா
எல்லாத்தகவலையும் அழகாக மாலை தொடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள். த.ம4

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
கண்டிப்பாக காத்திருக்கிறேன் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வாழ்த்துக்கும் விஷாலைப் பாராட்டியமைக்கும் நன்றி அண்ணா....
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அன்பே சிவம் சொன்னது…

மனசு...! சுத்தமாக
இருக்கு
மத்ததெல்லாம்...? இப்ப
எதுக்கு

குறைகள் நிலவிலும்
இருக்கு
அதனால் அதன் அழகில் இல்லை
இழுக்கு

கூடி இழுத்த தேரில்
குற்றம் சொல்வது சுலபம்
அதனால் இங்கு
யாருக்கு லாபம்.

அறைக்குள் இருந்து
கொண்டே அடுக்கிடலாம் குறைகளை
சுற்றித்திரிந்தால்தான்
நீக்கிட முடியும் கறைகளை..

யாருக்கு இல்லை குறை
இங்கே யாரிடமு ள்ளது நிறை
சொல்வதில் தேவை இங்கிதம்
அதுதான் நம் தேவை இங்கு நிதம்

அறியாமல் நடந்த சிறு பிழைகளை
சுட்டுவது தவறு அல்ல..
அதற்க்காக சேர்ந்து
கொட்டுவது நியாயமே அல்ல..





'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நண்பரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சென்னை பித்தன் சொன்னது…

கல்யாண விருந்து சாப்பிட்டது போல் உள்ளது!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா...
தங்களின் வாழ்த்துக்கு நன்றி.
ஆமாம் அக்கா... தேர்வு செய்தவர்களுக்கு மட்டும் மின்னஞ்சல் என்றால் பல பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்...

சில படங்கள் பார்க்கலாம் அக்கா... மலையாளப் படங்களில் நல்ல கதை இருக்கும்... பாருங்கள் அக்கா..

குறும்படம் வெற்றி பெற வேண்டும் என்பதே என் பிரார்த்தனை...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா....

வலைப்பதிவர் கையேட்டை வாங்கினால் போதும் என்ற பகிர்வு பார்த்தேன் ஐயா...

படிக்க வேண்டிய பதிவர்கள் என்ற விவரம் எப்படி வந்தது என்பதைச் சொன்னதற்கு நன்றி ஐயா...

ஒரு விழாவை நடத்துவது என்பதும் அதில் நினைத்ததை எல்லாம் செய்வது என்பதும் மிகக் கடினமான ஒன்றுதான்...

சில விஷயங்கள் செய்ய நினைத்து முடியாமல் போவது என்பது தவிர்க்க முடியாததுதான்...

நன்கொடை வேண்டாம் என்பதைத்தான் நானும் சொல்லியிருக்கிறேன்... நண்பர்கள் புத்தகம் மூலம் உதவலாமே என்றுதான் சொல்லியிருக்கிறேன்...

தங்கள் விரிவான பதிலுக்கு நன்றி ஐயா.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

சுவையான தொகுப்பு!

நண்பர் சரவணன் அவர்களின் 'அகம் புறம்' டீசர், அசத்தல்!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...

வணக்கம்...

கவிதை ஓவியங்கள் நோக்கம் வெற்றி என்றாலும் பலரை ஏமாற்றமடையச் செய்தது என்பதை தங்களின் பதிலில் அறிந்து கொண்டேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவிதை என தங்கள் முயற்சி சரிவர இருந்திருந்தால் எல்லாரும் மகிழ்ந்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன்....

இது வேண்டுமென்றே நிகழ்ந்த தவறல்ல... செயல்பாடுகளில் ஏற்பட்ட குறையே என்பதை உங்கள் பதிலில் அறிய முடிகிறது....

இதற்கெல்லாம் பொறுப்பேற்று மன்னிப்புக் கோர வேண்டியதில்லை ஐயா...

நடந்து நடந்ததாகவே இருக்கட்டும்...
நடப்பவை நல்லதாக நடக்கட்டும்...

நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ரூபன்..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

அன்பின் ஐயாவுக்கு
முதல் வருகை என்று நினைக்கிறேன்...

கவிதையில் அழகாகச் சொல்லி விட்டீர்கள்...

இங்கும் நம் நண்பர்களின் சிறப்பான செயலைப் பாராட்டியதுடன் கையேடு குறித்துத்தான் சொல்லியிருக்கிறேன்...

சிலரின் நிறைகுறைகளை படிக்க கேட்க நேர்ந்ததால்தான் அப்படியெல்லாம் பேச வேண்டியதில்லை என்று சொன்னதுதான் இங்கு எழுதியவை... மற்றபடி குறை காணும் எண்ணம் இல்லை... சின்ன ஒரு வீட்டு விசயத்தில் கூட அவரைக் கவனிக்கவில்லை இவரைக் கவனிக்கவில்லை என்ற குறைகளை நாம் கேட்க நேரிடுகிறது... இது பலர் கூடி இழுத்த தேர் குறையே இருந்தாலும் நிறைவாய்ச் சொல்ல வேண்டும் என்பதே என் எண்ணம்.

கவிதை ஓவியத்துக்கு அனுப்பிய பல நண்பர்கள் அங்கு வைக்கப்பட்டதா இல்லையா என்று அறியும் ஆவலில் இருந்தார்கள்... நான் உட்பட... அதனால்தான் யார் யாரின் கவிதைகள் பதியப்பட்டன என முத்து நிலவன் ஐயா சொல்லலாமே என்று சொல்லியிருந்தேன்.

நிலவன் ஐயாவின் பதிலைப் பார்த்தாலே தெரியும்...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்களின் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி ஐயா...

r.v.saravanan சொன்னது…

தங்களின் அன்புக்கு நன்றி குமார் தங்களின் ஊக்கம் எனக்கு மகிழ்வை தருகிறது. தங்களின் வெற்றிக்கும் வாழ்த்துக்கள்

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நண்பரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை சொன்னது…

இப்போதுதான் என் மனம் நிம்மதியானது நண்பர் குமார் அவர்களே.
“ஒவ்வொன்றும் ஒரு பாடம்தான். நாம்தான் அவற்றிலிருந்து கற்க மறந்துவிடுகிறோம்“ என்றொரு பொன்மொழி கேள்விப்பட்டதுண்டு. அதை இப்போது நேரடியாகவே உணர்ந்தேன். தங்களின் அன்பிற்கும் பெருந்தன்மைக்கும் எனது நன்றியும் வணக்கமும்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஐயா...
தங்கள் புரிதலுக்கு நன்றி ஐயா...
எந்த விசயத்திலும் குறை காண கூடாது என்பதே என் எண்ணமாக இருக்கும். கவிதை வந்ததா என்ற ஆவலில் கேட்டதுதான் அது... மற்றபடி சிறப்பான விழா நடத்திய தங்களையும் நம் நண்பர்களையும் வாழ்த்த வேண்டும் என்பதே எனது கருத்து...

எப்பவும் இதே அன்போடு தொடர்வோம் ஐயா.. நன்றி.

அன்பே சிவம் சொன்னது…

அய்யா தங்கள் மனசு சுத்தம்
என்பதைத்தான் முதலிலேயே சொல்லி விட்டேனே..

இங்கு நான் சுட்ட வந்தது

தங்கள் பதிவிலிருந்து
என் அறிவிற்க்கு எட்டியவரை எதுவும் தவறாக தோன்றவில்லை...

இங்கு உள்ள நிலை பற்றி மற்றவர் பரிகசிப்பார்கள் என்ற எண்ணமில்லாமல்..
எடுத்தேன் .. கவிழ்த்தேன் என்று செயல்படும் நம்மவர்கள் சிலர் செயல் நம் தமிழ் வலையுலகத்திற்க்கு சிறப்பு சேர்க்காது.. அதேபோல் உணர்ச்சி வயத்தால் வரும் சில வார்த்தைகள் பின் எதைக்கொடுத்தாலும் திரும்பப்பெற இயலாது. இதை வைத்துத்தான் நம் லட்சணத்தை உலகம் எடை போடும்.. தங்கள் பதிவை வாசிக்க வரும்போதாவது அணைவரும் உணர வேண்டும்..
நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஐயா...
தங்களின் புரிதல் கவிதையில் தெரிந்தது ஐயா..
இது நம் விழா... தவறே இருந்தாலும் அதைச் சொல்வது நம்மை நாமே திட்டிக் கொள்வது போல்தான் என்பதை மீண்டும் சொன்னேன்... அவ்வளவே...
தங்கள் பதிலுக்கு நன்றி ஐயா...

இந்த அன்பும் உறவும் என்றும் நிலைத்திருக்கட்டும்...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சுவையான தொகுப்பு குமார். பாராட்டுகள்.

//சிறுகதை பகிர்ந்தால் 100 பேர் பார்த்தால் சினிமா என்றால் 1000 பேர் வாசிக்கிறார்கள்.// போலவே சாப்பாட்டு பதிவிற்கும் வரும் நபர்கள் அதிகம் தான்.

இதையெல்லாம் பற்றி கவலைப்படாது நம் மனதிற்கு பிடித்த வரை எழுதிக் கொண்டிருப்போம்.....

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
உண்மைதான் மனதிற்குப் பிடித்தவரை எழுதுவோம்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

KILLERGEE Devakottai சொன்னது…

தாமதமான வருகை முதலில் விஷாலுக்கு ''மனசு'' நிறைந்த வாழ்த்துகள்
சினிமாவைப்பற்றி நிறைய எழுதலாம் நண்பரே நார் நாராக கிழித்து...

கதம்பம் மணத்தது நிறைய எழுத ஆசைப்படுகிறேன் மனநிலை சரியில்லை
தமிழ் மணம் 7

துரை செல்வராஜூ சொன்னது…

பல விஷயங்களையும் உள்ளடக்கியதாக இருக்கின்றது - தங்களுடய பதிவு....
திரை விமரிசனம் அழகு..

வாழ்க நலம்...


”தளிர் சுரேஷ்” சொன்னது…

சுவையான தொகுப்பு! பதிவர் விழா சந்தேகங்களையும் தெளிவு படுத்திவிட்டது பதிவு! நன்றி!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Yarlpavanan சொன்னது…

சிந்திக்க வைக்கிறியள்
சிந்திக்க வைக்கும் பதிவு
http://www.ypvnpubs.com/

Thenammai Lakshmanan சொன்னது…

அனைத்தும் அருமை . செல்ல மருமகன் விஷால் குட்டிக்கும் ஸ்பெஷல் வாழ்த்துகள் சகோ. நிச்சயம் ஆலமரமாக அனைத்தையும் அரவணைப்பான். :)

சினிமா பதிவுகள்தான் அனைவரையும் கவர்கிறது என்பது 100 சதம் உண்மை. ஆயிரம் பார்வைகள் நிச்சயம். :)

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை சொன்னது…

அன்பும் சமூகப் பொறுப்பும் மிக்க தாங்களும், திருமிகு தி.ந.முரளிதரன் அவர்களும், திருமிகு மதுரைத்தமிழன் அவர்களும், தமது வலைப்பக்கங்களில் எனது வலைப்பக்கம் பற்றி எழுதிய பின்னர்தான் எனது வலைப்பக்க வாசகர் எண்ணிக்கை அதிகரித்ததை ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறேன். அதை மீண்டும் உறுதிப் படுத்துவது போல, இந்த உங்களின் பதிவு நிறைவளிக்கிறது. மீண்டும் நன்றியும் வணக்கமும். நமது நட்பும் வலைத்தமிழ் வளர்ச்சியும் தொடரட்டும்.

ஞா கலையரசி சொன்னது…

பதிவர் விழா பற்றிய உங்கள் சந்தேகங்களையும் அதற்கு விழா ஒருங்கிணைப்பாளர் அண்ணன் முத்துநிலவன் அவர்கள் கொடுத்த விளக்கங்களையும் படித்தேன். பல்சுவை விருந்தாக தொகுத்துப் பகிர்ந்த விதம் நன்று. பாராட்டுக்கள் குமார்.

Yaathoramani.blogspot.com சொன்னது…

வெளிப்படையான தங்கள் விமர்சனமும்
பொறுப்பான முத்து நிலவன் அவர்களின் பதில்களும்
நம் பதிவர்களின் மன உயர் நிலைக்குச்
சான்றாக உள்ளது
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

வாழ்த்துகள் குட்டிப்பையன் விஷாலுக்கு!!! அவர் நன்றாக வருவார்! தங்களுக்கும் வாழ்த்துகள்!

திரைமணம் நல்ல மணம்!!!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
நாங்கள் சொல்லித்தான் தாங்கள் பிரபலம் ஆக வேண்டும் என்பதில்லை...
நீங்கள்தான் எங்களுக்கு முகவரி தரவேண்டும்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி...
இங்கு சந்தேகங்கள் பகிரப்படவில்லை... மற்றவர்கள் தளங்களில் பகிர்ந்தவைகளை வைத்து கேட்கப்பட்ட விவரங்களுக்கு ஐயாவின் பதில் கிடைத்தது.

மின்னூல் ஆக்கும் முயற்சிக்கு எனது கருத்தைச் சொல்லியிருந்தேன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துளசி சார்...
விஷாலை வாழ்த்தியதற்கு நன்றி.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

நிஷா சொன்னது…

விசாலுக்கு வாழ்த்துகள். பட் இந்த அவன் போக்கில் விட்டால் தான் சிறப்பாக வளருவான் என்பதில் தான் நான் மாறுபடுகின்றேன். அவன் போக்கில் விடணும் என்பது இப்போதைக்கு இல்லை . 16,17 வயதுக்கு பின் அவ்ர்கள் எதிர்கால கல்வி, தொழில், வாழ்க்கை என வரும் சூழலில் தான் அவர்கள் போக்கில் விட வேண்டும்.

இப்போதைக்கு சரி பிழை சொல்லிக்கொடுப்பதோடு அதீத பேச்சுக்களில் இருக்கும் தவறுகளை சுட்டிக்காட்டி கண்டித்து திருத்துவது ரெம்ப அவசியம். சின்ன பையன் தானே என பேசுவதையெல்லாம் ரசித்து விட்டு பின்னாளில் அதை நினைத்து வருந்தாமல் இருக்க இப்பவே முயற்சிக்கணும்.

நிரம்ப பெற்றோர் இவ்விடயத்தில் ரெம்ப தவறு செய்கின்றார்கள். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பதார்கள். இந்த சமுதாயத்துக்கு ஏற்ப நம் குழந்தை எப்படி வரணும் என்பதை அவன் பத்து பன்னிரண்டு வயதுக்குள் நாம் தீர்மானிக்கணும். அதன் பின் நாம் என்ன தான் தலைகீழாக நின்றாலும் முடியாது குமார்.

என் சொந்த அனுபவம் மட்டுமல்ல என் சூழலைல் இருப்போரை கொண்டும் நான் உணர்ந்தவை இவை. குழந்தைகள் தாம் செய்வதின் நல்லது கெட்டது எது என்பதை இனம் பிரித்து அறிய மாட்டார்கள். அப்படித்தான் பேச்சிலும்.. பெரியவர்கள் பேசுவதை அப்படியே பேசுவார்கள். எனவே அவர்களுக்கு முன்மாதிரியாய் நாம் நடக்கவும் வேண்டும்.

அகமும் புறமும் மொத்தமாய் நல்லா இருக்கு குமார்.
சிறுகதை போட்டியில் புத்தகபரிசுக்கும் என் வாழ்த்துகள்