மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 26 ஏப்ரல், 2013

கோபிநாத்தின் பாஸ்வேர்டு - 3


மேடை... சின்ன வயதில் இருந்தே எனக்கு ரொம்பப் பிடிக்கும்! அதில் அமர்ந்து இருப்பவர்களிடம் ஏதோ பெரிய வசீகரம் இருப்பதுபோலத் தோன்றும். மேடைகளில் அமர்ந்திருப்பவர் களில் ஒருவர் கூட்டத்தையே பார்ப்பார். ஒருவர் மிகவும் சீரியஸாக பிட் நோட்டீஸை வாசித்துக்கொண்டிருப்பார். ஒருவர் அருகில் அமர்ந்திருக்கும் விழா வி.ஐ.பி-யிடம் தலைசாய்த்து ஒருக்களித்துப் பேசுவார். அந்த நேரம் ஒருக்களிக்கிற ஆள் ஏற்பாடு பண்ணிய போட்டோகிராபர் கட்டாயம் அந்தப் படத்தை க்ளிக்க வேண்டும். அவருக்கான அசைன்மென்ட் அதுதான். மேடைகளின் பக்கவாட்டில் இரண்டு கூலர் ஃபேன் வைத்திருப்பார்கள். ஆனால், ஃபேன் ஏற்பாடு செய்த அந்த இரண்டு பேரைத் தவிர, யார் மீதும் அந்த ஃபேன் காற்று அடிக்காது.
 இப்போதெல்லாம் மேடையில் விருந்தினர்களின் பின் பக்கம் மெகா டி.வி. திரைகள் ஒளிர்கின்றன. அதில் நிகழ்ச்சியின் பத்திரிகை, திறப்பு விழாக் கட்டட நிர்வாகி, முதலாளி படங்கள், சில இடங்களில் அவர்கள் வீட்டுப் பேரப்பிள்ளைகள் போன் பேசுகிற மாதிரியான போட்டோக்கள்கூட வரும். ஒரு பள்ளிக்கூடத்தில் அந்தப் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளின் புகைப்படங்களைக் காண்பித்தார்கள். அந்தந்த பிள்ளை வரும்போது சம்பந்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கைதட்டிக்கொண்டார்கள்.
20 வருடங்களுக்கு முந்தைய மேடைகள் வேறு மாதிரியானவை. வீட்டில் இருந்து எடுத்துவந்த அப்பாவின் வேட்டி, அம்மாவின் சேலை, அக்காவின் தாவணியைவைத்து ஒரு மாதிரியான டிசைனில் இருக்கும். மேடைகளைவிட, மேடைகளின் பின் பகுதிகள் சுவாரஸ்யமானவை. ஓரமாக ஒளிந்து நின்று, பார்வையாளர்கள் கண்ணில்படாமல் டான்ஸ் ஸ்டெப்ஸ்களை டீச்சர்கள் சொல்லிக் கொடுப்பார்கள். ஒரு நிமிடத்தில் உள்ளே போக வேண்டிய ஐந்து வயது பாரதியாருக்கு மத்தியானம் ஒட்டிய மீசை பாதியாகக் கிழிந்து தொங்கும். கோந்து, சொல்யூஷன் எதுவும் உதவாமல், ஃபெவிகாலை எடுத்து ஒட்டி பாரதியாரை ரெடி பண்ணுவார்கள். 'மீசையில் இனி கை வெச்சே...’ என்று ஒரு கொட்டு விழும். பாரதி அழுதுகொண்டே மேடைக்கு வருவார். கண்கள் விரிய வசனம் பேச வேண்டிய நேரத் தில், ஒட்டு மீசை விழுந்துவிடுமோ என்று கண் களை இறக்கி மேலுதட்டைப் பார்க்க குட்டி பாரதியார் முயல்வார்.
'வசனத்தை மறந்துட்டான்... சொல்லுடா... சொல்லு!’ என்று லில்லி டீச்சர் தடுப்புக்குப் பின்னிருந்து கத்துவது மேடையில் இருக்கும் மைக்கில் பட்டு எதிரொலிக்கும். 'இதுதான் சான்ஸ்’ என்று மேடையில் கடைசி வரை ஒன்றும் பேசாமல் நின்றுகொண்டே டீச்சரைப் பழி தீர்க்கும் பாரதியார்களும் உண்டு. மேடையின் அலங்காரங்களுக்கும் நேர்த்திக்கும் நேர் எதிராகவே பின் மேடைகள் இருக்கும். அப்படி இருந்தால்தான் மேடை திருத்தமாகச் செயல்படும்.
சிறு வயதில் மேடையில் ஏறுவதற்கு முன்னதாகவே மேடையில் ஏறிப் பேசிவிட்டுப் போனவர்களைப் பார்த்துப் பயம் வரும். எங்கள் பள்ளிக்கூடத்தில் பின்னிப் பெடலெடுக் கிற பேச்சுப் புலிகள் திருச்சி பேச்சுப் போட்டியில் கலந்துகொள்வதென்றால், கலவரமாகிவிடுவோம். காக்கி நிறக் கால்சட்டை, நீல நிறத்தில் பட்டை பெல்ட், ஹவாய் ஸ்லிப்பர் செருப்பு என்று நாங்கள் போய் நிற்கும்போது, அதற்கு நேர்மாறான பள பளப்போடு நிற்கிற நகரத்து மாணவர்களைப் பார்த்துப் பயம் வரும்.
அவர்கள் எங்களை இளக்காரமாகப் பார்ப்பது போலவே தோன்றும். ''வானம் பொழிகிறது... பூமி விளைகிறது'' என்று நீலச் சட்டையில் சிவப்பு புள்ளி போட்ட செகப்பான பையன் மொக்கையாகப் பேசினாலும், அது நன்றாக இருப்பதுபோலவே தோன்றும். இந்திய கிரிக்கெட் அணி  ஆஸ்திரேலியாவுக்குச் சென்றால் அம்பேலாகிற மாதிரி, எங்கள் பள்ளிக்கூடத்தில் பின்னியெடுக்கும் எங்களுக்கு, திருச்சி என்பது ஆஸ்திரேலியா மாதிரி. 'டேய்... ஒருத்தனாவது பிரைஸ் அடிக்கணும். இல்லேன்னா, அய்யா நேரா பஸ் ஏறச் சொல்லிருவாரு, மலைக்கோட்டைக்குப் போக முடியாது’ என்று ஒருவருக்கொருவர் தைரியம் சொல்லிக்கொள்வோம்.
'எல்லா இடத்துலயும் ஒரே பேச்சுதானே! ஜெயிச்சாலும் தோத்தாலும் நல்லாப் பேசினோம்னு பேர் வாங்கணும்’ என்று நான் எனக்குள்ளேயே சபதம் போட்டுக்கொள்வேன். என் பெயர் அழைக்கப்படும் நேரம் உணர்ந்ததுபோல அரங்கசாமி அய்யா என் தோளில் கைபோட்டு சகஜமாக்கி என் பயம் விலக்க முயற்சி செய்வார். 'நீ விவேகானந்தர் நினைவு நாள் அன்னைக்குப் பிறந்தவன்டா. அப்ப நீ ஒரு விவேகானந்தன்டா... வீரன்டா!’ என்பார். வில்லன் மூன்று அடி அடித்தவுடன் பனியன் மண்ணைத் தட்டிவிட்டு எழுகிற ரஜினி, அடி வெளுத்தெடுப்பாரே... அப்படி ஒரு வீரம் வரும் எனக்கு. விடுவிடுவென்று ஆஸ்திரேலியா கிரவுண்டில் அச்சமில்லாமல் இறங்கி, 'முத்தான முத்தமிழே...’ என்று முதல் பந்தையே சிக்ஸருக்குத் தூக்குவேன்.
என் நண்பர்கள் இடையிடையே கை தட்டுவார்கள். கைதட்டல் வரவர... பேச்சு வேகம் பிடிக்கும். பயம் தகர்ந்து போகும். சில நிமிடங்களில் எல்லாருமே கை தட்டுவார்கள். மற்ற பள்ளி வாத்தியார்களும் கைதட்டும்போது மலைக்கோட்டை ஏறுவது கன்ஃபார்ம் ஆகும். அரங்கசாமி அய்யா டோனி மாதிரி. அவர் முகத்தில் எந்த ரியாக்ஷனும் இருக்காது. ஆனால், பேசியது நன்றாக இருந்தால், இறங்கி வந்தவுடன்... 'வாடா என் நரேந்திரா’ என்று கட்டிக்கொள்வார்.
மேடை ரொம்பப் பிரமாதமானது. அது தருகிற நம்பிக்கையும் உத்வேகமும் அலாதியானது. இந்த மேடைப் பசியில் அலைகிறவர் களைக் கணக்கு வாத்தியார்களுக்குப் பிடிக் காது. இரவு முழுக்க டிராமா ரிகர்சல் முடித்து விட்டுப் பள்ளிக்கு வந்தால், முதல் பீரியடில் தூக்கம் இழுக்கும். ஆனால், டஸ்டர் பறந்து வந்து மூஞ்சியில் விழும். குளித்த ஈரத்தோடு பவுடர் அப்பியதுபோல முகம் முழுக்க வெள்ளையாகும். ஆனால், இப்போதெல்லாம் டஸ்டரை விட்டு அறைந்தால், மாணவர்களே நியூஸ் சேனலுக்கு போன் செய்துவிடுகிறார் கள்.
மேடைகளை மூடிவிட்டு ஃபார்முலாக்களை மனப்பாடம் பண்ணும் வேலைக்கு எல்லாரும் பழகிவிட்டதால், இப்போது டஸ்டர்களுக்கான வேலை துடைப்பது மட்டுமே. டஸ்டர் அடியில் தொடங்கி, நீளக்குச்சியில் நுனி மட்டும் மேலே விழுகிற அடி வரை எத்தனை வலிகள் பட்டாலும் மேடை மீதான காதல் குறையவே இல்லை.
அப்போதிருந்து இப்போது வரை நிறைய மேடைகள் பார்த்தாயிற்று. நவீன மேடைகள் இன்னும் பரபரப்பானவை. அதிலும் காது மடலுக்குப் பின் இயர்போன் அணிந்துகொண்டு நிற்கிற மேடைகள் ரத்தக் கொதிப்பை அதிகரிக்கும். மேடையின் பின்னால் உதவி இயக்குநர்களுக்கு விழுகிற திட்டுகளில் இருந்து கேமராமேன்களுக்கு அளிக்கப்படும் உத்தரவுகள் வரை அத்தனையும் கேட்கும். மேடையில் நிற்கிற விருந்தினரிடம் கேள்வி கேட்டுக்கொண்டே, பின் மேடையின் அமளிதுமளிகளையும் அனுசரித்துக்கொள்ள வேண்டும்.
இதில் உச்சகட்ட அவஸ்தை என்பது நாம் சொல்வது இயர்போன் வழியாகச் சம்பந்தப்பட்டவருக்குக் கேட்கிறதா என்ற சந்தேகம் வந்துவிட்டால், இயர்போன் மாட்டியிருப்பவன் செத்தான். 'நான் சொல்றது கேட்குதா? அடுத்து நாம மேடைக்குக் கூப்பிடப் போற ஆள திடீர்னு மாத்திட்டோம். நான் சொல்றது கேட்குதா... பாஸ் நான் பேசுறது கேக்குதா... தல கேக்குதா... ஆள் மாறிடுச்சு. பழைய பிளான் இல்ல... கேக்குதா... கேக்குதா..!’ என்று டென்ஷனுக்கு ஏற்ப அவர் சத்தம் அதிகரித்துக்கொண்டே போகும். 'அட ராசா... கேட்குதுடா!’ என்று நான் பதிலுக்குக் கத்த முடியாது.

மேடையில் பதில் சொல்லிக்கொண்டு இருப்பவரின் பேச்சுக்கு ஏற்றபடி முகபாவங்களை வைத்துக்கொள்ள வேண்டும். அடுத்த கேள்வியை மனசுக்குள் தயாரிக்க வேண்டும். 'கேக்குதா... கேக்குதா’வுக்குக் காதைத் தவிர, மனசையோ, மூளையையோ கொடுக்கக் கூடாது. கொடுத்தால் முகபாவம் மாறிப்போகும்... ரணவேதனையாக இருக்கும். காதுக்குள் கத்துகிறவனுக்குப் பதில் சொல்ல முடியாமல், கண் முன்னால் பேசுகிறவருக்குக் காது கொடுக்க முடியாமல்... அது ஒரு 'பிராண சங்கடம்’!
'பாஸ்... பாலசந்தர் சார்கிட்ட, அந்த மேட்டர் கேளுங்க. கேரவன்ல டிஸ்கஸ் பண்ணோம்ல..?! அது..!’ எதுவென்று உடனே ஞாபகம் வராது. 'பாஸ்... அதக் கேளுங்க. தல கேக்குதா... அதக் கேளுங்க... மத்தியானம் பேசுனமே அதுதான்... நான் பேசுறது கேட்குதா..? டே... அவர் இயர் பீஸ் வொர்க் பண்ணுதா பாரு?’ என்றவுடன் ஆடியோ இன்ஜினீயர் வால்யூம் லெவலை ஏற்றிவிடுவார்.
'கேக்குதா..? அதக் கேளுங்க..!’ டங் டங்கென்று தலைமீது பத்து சுத்தியல் மாறி மாறி அடிப்பதுபோல இருக்கும். கழுத்துப் பிடறி நரம்புகள் இழுக்கும். கண்ணுக்குக் கீழ்ப் பகுதி கனமாக இருப்பது மாதிரி தோன்றும். மண்டைச் சுழியில் இருக்கிற முடியைக் கொத்தாகப் பிடித்து யாரோ உலுக்கிக்கொண்டே இருப்பதுபோல வலிக்கும்.
ஆனால், நிகழ்ச்சி முடிந்த பிறகு, பின் மேடையில் ஒருவரை ஒருவர் கட்டியணைத்துப் பாராட்டிக்கொள்வோம். தான் பட்ட சிரமங்களை யாருமே பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். 10 நிமிடங்களுக்கு முன்பு வரை கடுகடுப்பாக இருந்தவர்கள் இப்போது எல்லாம் மறந்திருப்பார்கள். நிகழ்ச்சி நன்றாக வந்துவிட்ட சந்தோஷம் எல்லாவற்றையும் மறக்கடித்துவிடும். மேடையின் சிறப்பே அதுதான்.
எத்தனையோ விதமான மேடைகள் வந்துவிட்டாலும், எந்தக் கூடுதல் அந்தஸ்தையும் எதிர்பார்க்காமல் குழந்தைகள் அணிவகுக்கும் மேடைகளே ரொம்ப அழகாகத் தெரிகின்றன. கண்ணன் பாட்டுக்கு ஆடிக்கொண்டே அப்பாவும் அம்மாவும் எங்கே உட்கார்ந்திருக்கிறார்கள் என்று தன் குட்டிக் கண்களால் தேடும் குழந்தைகளின் பாசமும் பரிதவிப்பும் மேடைக்கு நெகிழ்வான அர்த்தங்களை உருவாக்கிவிடுகின்றன.
கூட்டத்தைப் பற்றிக் கவலைப்படாமல் ஜோடனைகள் இல்லாமல் சமூக விஷயங்களை நாடகமாகவோ, புனைவுகளாகவோ முன்னிறுத்தும் தெருமுனை மேடைகள், மேடைகளின் முக்கியத்துவத்தை முன்னிறுத்துகின்றன. சில வருடங்களுக்கு முன்பு வரை மேடைகளின் வழியே சமூகத்தைப் பார்க்கும் வழக்கமும் வாய்ப்பும் நிறைய இருந்தன. தேரடி மேடைகள், தெருமுனை மேடைகள், அரசியல் மேடைகள், பிரச்னைகள் பிரித்துப் போடும் மேடைகள் என ஏதோ ஒரு மேடையை நோக்கி, தோளில் பிள்ளையை வைத்துக் கொண்டுபோன அப்பாக்களை இப்போது காண முடிவதுஇல்லை.
ஷாப்பிங் முடித்துவிட்டு பைக்கில் வரும்போது தெருமுனை மேடை ஒன்றைப் பார்த்து ‘Noise Pollution’ என்று விமர்சிக்கும் மனிதர்களாக மாறிக்கொண்டு இருக்கிறோம். அறிவியல் கண் காட்சி, 3டி சினிமா மாதிரி அவ்வப்போது பிள்ளைகளுக்கு மேடைகளையும் காட்ட வேண்டும்.
நாளை மேடையில் நின்று பேச வேண்டிய பிள்ளைகளிடம் அதை, ‘Noise Pollution’ ஆக மட்டும் அறிமுகப்படுத்துவது நியாயம் இல்லை!
நன்றி : ஆனந்த விகடன், கோபிநாத்
படங்கள் : கே.ராஜசேகரன், இராஜவிபீஷிகா
-'பரிவை' சே.குமார்

1 எண்ணங்கள்:

ஜோதிஜி சொன்னது…

மிக அற்புதமான தளம். ரசித்து ருசிக்க நிறைய விசயங்கள் உள்ளது.