மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 7 அக்டோபர், 2015

மனசின் பக்கம் : சுவிஸ்ல இருந்து புதுகை வரை

வெள்ளந்தி மனுசியாய் மனசில் சிரித்த நிஷா அக்காவின் தங்கை கணவர் எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த விபத்தில் அகால மரணமடைந்து விட்டார். அவருக்கு 9 வயதில் ஒரு மகள் இருக்கிறார் என்றும் அந்தக் குழந்தைக்கு அப்பாவின் இறப்பை தெரியப்படுத்தவில்லை என்றும் கேள்விப்பட்டேன். எவ்வளவு கொடுமை பாருங்கள். சிறிய வயதில் மரணம்... அப்பாவை இழந்த மகள் என என்னை வாட்டிய மனவேதனையில் இருந்து இன்னும் மீள முடியவில்லை. நமக்கே இப்படி என்றால் அக்கா, அவர்தான் அவர் தங்கைகளுக்கும் தம்பிக்கும் அம்மாவாக இருந்தார்... இருக்கிறார் என்பதை நான் அறிவேன்... எனவே அக்கா அந்த வேதனையில் இருந்து விரைவில் மீள்வது என்பது சாத்தியமில்லை என்ற போதிலும் தனக்கு வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் வெள்ளந்தி மனிதர்கள் பதிவில் வந்து நன்றி சொல்லியிருக்கிறார்கள். இதுதான் நிஷா அக்காவின் மனசு. அவர் வேதனைகளில் இருந்து விரைவில் மீளவும் என்றும் எப்போதும் சந்தோசமாக இருக்கவும் இறைவனைப் பிரார்த்திப்போம்.

***
புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழாவிற்கு இன்னும் 4 தினங்களே இருக்கின்றன. சென்ற வருடங்களைக் காட்டிலும் இந்த முறை பதிவர் விழாவுக்கான வேலைகள் இன்னும் சிறப்பாக நடந்து வருகின்றன. போட்டிகள் அறிவித்து நிறையப் பேர்  கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இவர்கள்தான் பரிசு பெறுவார்கள் என்று சொல்லும் விமர்சனப் போட்டியும் அதற்கான பரிசுகளும் அறிவித்திருக்கிறார்கள்.  வரும் 9 ஆம் தேதி இரவுக்குள் அனுப்ப வேண்டும்... பதிவர்களும் பதிவர் அல்லாதவர்களும் கலந்து கொண்டு சிறப்பியுங்கள் நண்பர்களே... விபரம் அறிய இங்கு சொடுக்குங்கள்.

***

லைப்பதிவர் விழாவுக்கு முத்துநிலவன் ஐயா உள்ளிட்ட புதுக்கோட்டைப் பதிவர்கள் அனைவரும் எவ்வளவு தீவிர மாக உழைக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம். மதுரை வலைப்பதிவர் விழாவுக்கு உழைத்த தனபாலன் அண்ணா புதுக்கோட்டை விழாவுக்கும் மிகச் சிறப்பாக உழைக்கிறார் என்பதை நாம் அறிவோம். மதுரை, புதுக்கோட்டை என்றில்லை நாளை கில்லர்ஜி அண்ணாவுடன் இணைந்து தேவகோட்டையில் விழா வைத்தாலும் ஓடி ஓடி வேலை பார்ப்பவர் யாரென்றால் அது எங்கள் தனபாலன் அண்ணாவாகத்தான் இருக்கும். இன்று விழா குறித்து அண்ணன் அவர்கள் எழுதிய அழகான பாடலை முகநூலில் படித்தேன். 

"ஒவ்வொரு பூக்களுமே... சொல்கிறதே...
வலைப்பூவென்றால் போராடும் போர்களமே...
ஒவ்வொரு பூக்களுமே... சொல்கிறதே...
வலைப்பூவென்றால் போராடும் போர்களமே...
ஒவ்வொரு வலைப்பூவுமே... சொல்கிறதே...
கருத்திட்டால் நட்பு ஒன்று வந்திடுமே..." 

என ஆரம்பித்து மிக அழகாக எழுதியிருக்கிறார். அவரின் வலையில் தேடினேன்... கிடைக்கவில்லை... இந்தப் பாடலை சகோதரி தேன்மதுரத் தமிழ் கிரேஸ் அவர்கள் முகநூலில் பகிர்ந்திருக்கிறார்கள்... அங்கு செல்ல... இங்கு சொடுக்குங்கள் மிக அருமையாக எழுதியிருக்கிறார். விழாவுக்காக இரவு பகல் பாராது உழைக்கும் புதுக்கோட்டை நட்புக்கள் அனைவரையும் பாராட்டுவதுடன் அண்ணன் தனபாலன் அவர்களுக்கு பாராட்டுக்களுடன் வாழ்த்துக்களையும் சொல்வோம்.

***


கிருமி படம் பார்த்தேன். போலீசுக்கு தகவல் சொல்லும் உளவாளிக்கு நடக்கும் நிகழ்வுகள்தான் கதை. நாயகந் கதிருக்கு திருமணமாகி குழந்தை இருக்கிறது. அழகான மனைவி, அன்பான அக்காதான் மாமியார், அழகிய பூவாய் குழந்தை எல்லாம் இருந்தும் நண்பர்களுடன் தங்கிக் கொண்டு தண்ணி, சூதாடம் என்று இருக்கிறார். இடையில் போலீசிடமும் மாட்டுகிறார். போலீஸ் உளவாளியாக இருக்கும் சார்லி, இவரை போலீஸ் உளவாளி ஆக்குகிறார். அதன் பின்னான நிகழ்வுகளில் முக்கியமான புள்ளியை போலீசில் மாட்டிவிட அதன் காரணமாக சார்லியின் மரணம், அவரின் குடும்ப நிலை, நாயகனைத் துரத்தும் வில்லன்கள், போலீசின் இரட்டை நிலை என்று பயணிக்கும் கதை கடைசி வரை தொய்வில்லாமல் செல்கிறது. படத்தின் திரைக்கதை விறுவிறுப்பாய் இருப்பதால் பார்க்கலாம்.

***

ண்டி வீரனில் வரும் 'அலுங்குறேன் குலுங்குறேன்' பாடல் அடிக்கடி கேட்கும் பாடலாக ஆகியிருக்கிறது. ரொம்ப அருமையாக இருக்கிறது... அதிலும் முரளியின் மகன் அதர்வாவும் ஆனந்தியும் கலக்கலாய் நடித்திருக்கிறார்கள். ஆனந்தி பல இடங்களில் களவாணி ஓவியாவை நினைவூட்டுகிறார். பின்னணிக் குரலும் ஒருவர்தான் போலும்... அந்தக் குரலும் விளையாட்டுத்தனமான செய்கைகளும் அப்படியே... இது எனக்கு மட்டுந்தானான்னு தெரியலை... ஆனா ஓவியாதான் ஞாபகத்தில் வந்தார். ஆமா அழகா பாவாடை தாவணியில் வர்ற இந்தப் பெண்ணைத்தானே திரிஷா இல்லைன்னா நயன்தாராவுல ரொம்ப மோசமா நடிக்க வச்சிட்டாங்கன்னு அழுது சண்டையெல்லாம் போட வச்சாங்க...


இதே போல் ஜிப்பா ஜிமிக்கியில் மொட்டை ராஜேந்திரன் பாடும் 'ஜிப்பா போட்ட மைனரு' பாடலும் ரொம்பப் பிடிச்சிருக்கு. அந்த அழகான அருவியும், பச்சைப் பசேல் என்ற வயல்வெளியும், மாட்டு வண்டி, அரிக்கேன் விளக்கு என நம்மை சின்ன வயதில் வயல் வரப்புகளில் ஓடி விளையாண்ட நினைவுகளை மீட்டெடுக்க வைத்துவிட்டார் இயக்குநர் நண்பர் ரா.ராஜசேகரன்.

***
புலி படம் பார்க்க பைக்கில் வந்து விபத்துக்குள்ளாகி உயிரைவிட்ட இரண்டு பேரின் வீட்டிற்கும் சென்று பெற்றவர்களுக்கு ஆறுதல் சொல்லி பண உதவியும் செய்த விஜயை பாராட்டுவோம். அதே நேரத்தில் உனக்குன்னு குடும்பம் இருக்கு அதுதான் முக்கியம் அதைப் பாரு என் படமெல்லாம் அப்புறம்தான் என்று சொல்ல அஜீத்தைத் தவிர வேறு யாருக்கும் மனம் வரவில்லையே ஏன்..? படம் ரிலீஸ் அன்னைக்கு கட் அவுட் வைக்கவும் அதற்கு பாலாபிஷேகம் செய்யவும் இன்னும் சொல்லப் போனால் வேல் போட்டு பால்குடம் எடுக்கவும் படம் வெளியாவதில் தாமதம் ஆனால் பள்ளி கல்லூரி செல்லும் பெண்களின் பேருந்துகளை மறித்து வெறியாட்டம் நடத்தவும் ரசிகன் தேவை என்று நினைத்து பேசாமல் இருந்து விடுகிறார்கள் என்று நினைக்கிறேன். குடும்பம், குழந்தை, குட்டி எதுவும் தேவையில்லை... நடிகன் போதும் என்று ஆட்டம் போடும் உனக்கு அவன் செய்வதென்ன...? அவனுக்காக இறந்தால் உன் வீட்டுக்கு வருவான்.... பணம் கொடுப்பான்... அவ்வளவுதான்... உன் உயிர் உன் உறவுகளுக்காகத்தானே ஓழிய கோடிகளை சம்பளமாகப் பெறும் நடிகனுக்காக அல்ல... திரு. அப்துல்கலாம் இறந்த போது செல்ல முடியாதவர்கள்தான் பப்ளிசிட்டிக்காவும் பணத்திற்காகவும் அலங்கார விளக்குகளின் முன்னே அழகாக பவனிவருகிறார்கள் என்பதை மறக்காதீர்கள்.

***
பாக்யாவின் மக்கள் மனசு பகுதியில் கடந்த ஐந்து மாதங்களாக தொடர்ந்து என் கருத்து வெளிவந்து கொண்டிருக்கிறது. கேள்விகளைக் கேட்டு அதை அழகாக தொகுத்து கலர் புகைப்படங்களுடன் வெளியிடும் திரு. எஸ்.எஸ்.பூங்கதிர் சாருக்கு எனது நன்றி.

***
ல்லோருடைய பதிவுகளையும் படிக்கிறேன்... சிலருக்கு கருத்து இடுகிறேன்... பலருக்கு இடவில்லை... கஷ்டமாய்த்தான் இருக்கிறது... என்ன செய்ய வேலையும் கொஞ்சம் அதிகம்... இப்போதுதான் வாழ்க்கையில் புயல் அடித்து ஓய்ந்து எங்கள் இல்லத்தில் தென்றல் வீசுகிறது. வந்த புயலை வாசலோடு அனுப்பிவிட்டோம் என்றாலும் அது கொடுத்த வலிகளும், உறவுகளே வேண்டாம் என்று ஒதுங்க வைத்த நிகழ்வுகளும் எங்களுக்குள் இன்னும் காயவில்லை. அதனால்தான் அதிகம் எழுதவும் முடியவில்லை.  தொடர்ந்து எழுதுங்கள் நண்பர்களே... கண்டிப்பாக வாசிப்பேன்.

***
ன்பு அண்ணன்கள் ஈரோடு கதிர் மற்றும் தேவா சுப்பையா இருவருக்கும் இன்று பிறந்தநாள். காலையில் வாழ்த்து சொல்லியாச்சு என்றாலும் எல்லாரும் மீண்டும் அவர்களை வாழ்த்தலாம். கதிர் அண்ணா இப்போது மிகப் பிரபலமானவர். வேரில் இருந்து நுனி வரையின்னு புத்தகம் போட்டிருக்கிறார். சிறப்பான பேச்சாளர்... எல்லாருடனும் நட்பு பாராட்டுபவர் என்பது மிக முக்கியம். நான் அவருடன் வலைப்பூ மூலமாக தொடர்பில் இருந்தேன். சில சமயம் முகநூல் வாயிலாக சிறிய அரட்டை அடித்திருக்கிறேன். அவ்வளவே... ஆனால் அவரின் பகிர்வுகளையும் அவர் குறித்த செய்திகளையும் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன். அண்ணன் தேவா அவர்களைப் பற்றி.... துபாயில்தான் இருக்கிறார்... எங்க மாவட்டக்காரர்... இரண்டு முறை நேரிலும் சில முறை போனிலுமாய் எங்கள் உறவு என்றாலும் தம்பி என்று சொல்லும் பாசக்காரர். இப்போது இவரின் புத்தகங்கள் அச்சில் இருக்கின்றன. விரைவில் வெளிவர இருக்கின்றன. ஆழ்ந்த சிந்தனை... நம்மை ஆட்கொள்ளும் எழுத்து... இதுதான் தேவா அண்ணா.... இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

***
ருங்க ஒரு முக்கியமான விஷயம், நம்ம சரவணன் அண்ணன்... அதாங்க குடந்தையூர் தளத்தின் உரிமையாளர் குடந்தை சரவணன் அண்ணன் அவர்கள் பக்காவான திரைக்கதையில் எங்க கணேஷ் பாலா அண்ணன், துளசி சார், அரசன் அப்படின்னு நம்ம குரூப் ஆட்களை எல்லாம் நடிகர்களாக்கி ஒரு திரில்லர் கதையை குறும்படமாக எடுத்திருக்கிறார். படத்தின் பெயர் அகம் புறம்.... இந்த மாதத்தில் வெளியிடுவார் என்று நினைக்கிறேன்... அவரின் இளமை எழுதும் கவிதை நீ... என்னும் முதல் நாவல் அழகான திரைக்கதை. அப்புறம் சில நொடி சிநேகம்... நல்லதொரு கருவோடு வந்த முதல் குறும்படம்... இப்போ அகம் புறம்... நான் ஆவலாய்... அப்ப நீங்க...?

***
சிங்கையில் புத்தகம் வெளியிட்டு அதே புத்தகத்தை புதுகை வலைப்பதிவர் விழாவில் வெளியிட இருக்கும் தம்பி தவரூபன் அவர்களை வாழ்த்துகிறேன். வரலாற்று நாயகர்களை அற்புத எழுத்தில் நாமெல்லாம் அறியத் தரும் கணித ஆசிரியர். கரந்தை ஜெயக்குமார் ஐயா அவர்களை வாழ்த்தும் வயதில்லை என்பதால் அவரின் பாதம் பணிந்து இன்னும் நிறைய வரலாற்றுப் புத்தகங்களை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

***
ப்புறம் புதுக்கோட்டை விழாவுக்கு எல்லாரும் கண்டிப்பாக போய்விட்டு வந்து நிகழ்வின் அற்புத நிஜங்களை எங்களுக்காக பகிருங்கள்... வெளிநாட்டில் இருந்து வரமுடியாத சூழலில் இருக்கும் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறோம்.
-'பரிவை' சே.குமார்.

35 எண்ணங்கள்:

நிஷா சொன்னது…

அடுத்த பதிவா?

அம்மாடி! எப்படித்தான் எழுதுகின்றீர்களோ எனக்கு தெரியவில்லைப்பா!

எனக்கான வேண்டல்கள், பிரார்த்தனைகளுக்கு நன்றி!

கவலைப்படுவதனால் எவன் தன் உடலில் ஒரு முழத்தினை கூட்டவோ குறைக்கவோ முடீயும் என சொல்லுங்கள். நான் எதைக்குறித்தும் அதிக கவலைப்படுவதில்லை. அடுத்து என்ன செய்யணும் என சிந்தித்தே பழகிப்போனது. கவலை மனிதனை கொல்லும் வியாதி அல்லவா? அத்தோடு மனதின் சோர்வும், பதட்டமும், அழுத்தமும் என் உடல் நிலைக்கு ஒவ்வாதமை என்பதனால் இயன்ற வரை மனதினை உற்சாகமாய் வைத்திருக்க முயல்வேன். அதற்காகவே நிரம்ப படிப்பதும் எழுதுவது. என் நினைவுகளை திசை திருப்ப எழுத்தும் படிப்பும் தான் எனக்கான மருந்து.

நேற்றைய நாள் முடிந்து போனது. இன்றைய தினம் இந்த நிமிடம் என் கையில், நாளை என்னாகும் என்பது எனக்கு தெரியாது எனும் போது எல்லாம் நன்மைக்கே என எடுத்து வாழ பழகி ரெம்ப நாட்கள் ஆகி விட்டதுப்பா!

நிஷா சொன்னது…

வலைப்பதிவர் விழா குறித்த பதிவுகள் அறிவிப்புக்களுக்கு நன்றி!

திண்டுக்கல் தனபாலன் சாரின் பாட்டை நானும் ரசித்தேன். அவர்கள் உண்மைகள் எனும் தளத்தில் எழுதி இருந்தார் தனபாலன் அவர்களின் ஒவ்வொரு பூக்களுமேபாடல் இங்கே http://valarumkavithai.blogspot.com/2015/10/blog-post_7.html

ஈரோடு கதிர் மற்றும் தேவா சுப்பையா
இருவருக்கும் எமது பிறந்த நாள் வாழ்த்துகளும் சேரட்டும்!

சினி விமர்சனம், புலி பட விஜய் ரசிகர் மரணம் குறித்த கருத்து, பாடல்கள் குறித்த பார்வை, புத்தக வெளியீடுகளுக்கான வாழ்த்து என அனைத்துமே அருமையான எழுத்தும் கருத்துக்களும்.!

உடலுக்கும் மனதுக்கு எழுத்து நிறைவைத்தரும் எனும் போது நடந்தவைகள் குடும்ப கவலைகள் குறித்தெல்லாம் யோசித்து மனதினை கலவரப்படுத்தாமல் ரிலாகசாக இருங்கள்.

உங்கள் உடல் நலன் சீராக என் பிரார்த்தனைகள் தொடரும்.

இளமதி சொன்னது…

உணர்வுக் குவியலாய் விதவிதமான உணர்வுகளைத் தாங்கிய
இன்றைய உங்கள் பதிவு!

நல்ல நிகழ்வுகள் அனைத்திற்கும் உளமார்ந்த வாழ்த்துக்கள்!
மன நெருடலான துயர்தரும் செய்திகளுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
அதிலிருந்து விரைந்து மீண்டிட இறையருளை வேண்டுகிறேன்!

சகோ டி டியின் பாடல் மிக அருமை!
நானும் உங்களைப் போன்றே புதுகை நிகழ்வுக்காகக் காத்திருக்கின்றேன்!

உங்களுக்கும் மன அமைதியையும் தெம்பினையும்
இறைவன் அருளப் பிரார்த்திக்கின்றேன்!

வாழ்த்துக்கள் சகோ!

த ம 2

ஸ்ரீராம். சொன்னது…

முதல் செய்தி வருத்தத்தைத் தருகிறது.

இந்த முறை பதிவர் மாநாடு சம்திங் ஸ்பெஷல்! இதில் டிடியின் உழைப்பைக் கட்டாயம் பாராட்ட வேண்டும்.

பாக்யாவில் தொடர்ந்து உங்கள் படைப்புகள் பிரசுரமாவதற்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

கார்த்திக் சரவணன் சொன்னது…

மனம் கவர்ந்த பதிவு.... வாழ்த்துக்கள்...

கரூர்பூபகீதன் சொன்னது…

கதம்பமாய் ஒவ்வொரு நிகழ்வுகளையும் அருமையான எழுத்தில் பதிவிட்டூள்ளீர்கள்! நன்றி

Geetha சொன்னது…

வணக்கம்மா இந்த தன்னம்பிக்கை தான் நம்மை நிலைநிறுத்தும்மா...

Geetha சொன்னது…

எப்படி இப்படி அத்தனை செய்திகளையும் ஒரே பதிவில்...

வலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை சொன்னது…

நன்றி... நன்றி சகோதரரே...

அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

முதல் செய்தி வருத்தம் என்றால் மிக வருத்தம் இப்போது சமீபத்திலதானே அவரது பிறந்தநாள் வாழ்த்துகள் என்று எல்லோரும் வாழ்த்தி....ம்ம் ..எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள்...

பதிவர் விழா மிக மிகச் சிறப்பாக அமையப் போகிறது இவ்வருடம்...டிடி போற்றப்பட வேண்டியவர் பாராட்டப்பட வேண்டியவர். கௌரவிக்கப்பட வேண்டியய்வர்.!!! நம் இனிய நண்பர்! அவர் பாடல் சுற்றி வருகின்றதே..வலைத்தளத்தில் பார்த்தோம் பாடியும் பார்த்துவிட்டோம்...

பாக்யாவில் தங்கள் கருத்துகள் தொடர்ந்து வெளி வருவதற்குப் பாராட்டுகள், வாழ்த்துகள்!

ஆஹா எங்கள் குழு அகம் புறம்...உங்கள் எல்லோரது ஆதரவுடன் தானே நண்பர் குடந்தை எழுதி இயக்கி இருக்கிறார். அவர் நிச்சயம் வெற்றி பெறுவார்!!! தாங்கள் இங்கு சொல்லியமைக்கும் மிக்க நன்றி! குமார்...

அஜித் நல்ல மனிதர். அவர்தான் இதற்காகவே தனது ரசிகர் மன்றத்தையே கலைத்துவிட்டாரே அந்தத் தைரியம் வேறு எந்த நடிகருக்கு வரும் சொல்லுங்கள்..தல தலதான்!!



”தளிர் சுரேஷ்” சொன்னது…

நிஷா அக்காவின் நிலை சங்கடமானதுதான்! துவளாமல் துணிந்து நிற்கும் அவரது துணிவை, பாராட்டுவோம்! பதிவர் விழா இந்த முறை இன்னும் சிறப்பாக அரங்கேறும் என்பதில் வியப்பில்லை! தனபாலன் அவர்களின் பாடலை ரசித்தேன்! சிறப்பாக எல்லோருக்கும் உதவும் நற்பண்புள்ள மனிதர்! நண்பர்கள் கதிர், தேவா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! பாக்யா பகுதிக்கு நானும் கருத்து எழுதுவதுண்டு! தொடர்ந்து எழுத முடிவதில்லை! வாழ்த்துக்கள்!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

வேதனை, சோதனை, சாதனை என அனைத்தையும் பகிர்ந்தவிதம் அருமை. வருத்தம் தருகிறது முதல் பத்தி.

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
அண்ணா.

...நிஷாவின் துன்பம் வேதனையான விடயந்தான்.
பதிவர் சந்திப்பு சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள் த.ம 6
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

KILLERGEE Devakottai சொன்னது…

கதம்பம் அனைத்து விடயங்களும் நன்று சில மனதை வருத்தியது
ஐ.... தேவகோட்டையில் பதிவர் விழா...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

தனித்தனியே குறிப்பிடயிலவில்லை!
அனைத்தும் நன்று! (நிஷா அக்காவின் தங்கை கணவர் இறப்பு தவிர)

எமது அருமை நண்பர் ஆர்.வி. சரவணன் அவர்களை நீங்கள் வாழ்த்தியதுபோலவே நானும் வாழ்த்துகிறேன். குறும்படம் விரைவில் எதிர்பார்க்கிறேன்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நிஷா அக்கா....
நீண்ட கருத்துக்களை சில நாட்களாய் மனசு சுமக்கிறது... எல்லாம் தங்களால்தான்...

இப்படி இருக்க முடிந்தால் எல்லா நாளும் சுகமே... என்னாலெல்லாம் முடிவதில்லை...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா...

'பரிவை' சே.குமார் சொன்னது…

உடல் நலம் இப்போது கொஞ்சம் வலி இருக்கிறது...
குடும்பக் கவலைகளை மறக்க முடியவில்லை அக்கா...
தனபாலன் அண்ணாவின் கவிதை அருமை அக்கா... இணைப்புக்கு நன்றி.
தங்கள் கருத்துக்கு நன்றி அக்கா.

நிஷா சொன்னது…

வணக்கம் குமார்! எப்படியோ என்னை பத்தி எழுதி வலைப்பூக்கள் பக்கமும் எனக்கு ஒரு அறிமுகம் உருவாக்கி விட்டீர்கள் போல இருக்கின்றது.

வாழ்த்துக்களை காணும் போதும் வருத்தங்களை பகிரும் போதும் மனம் நெகிழ்கின்றதுப்பா!

அனைத்திற்கும் நன்றி!

நிஷா சொன்னது…

எம் துயரை தம் துயராய் நினைத்து உணர்வுகளால் ஒன்றி எம்முடன் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி
இன்பாக்ஸிலும், காமெண்ட்ஸிலும், தொலைபேசியிலும், நேரிலும் எம்மை ஆறுதல் படுத்திய அனைத்து அன்புறவுகளுக்கும் நன்றி!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா...
தங்களின் கருத்துக்கும் வருகைக்கும் எனக்கான பிரார்த்த்னைக்கும் நன்றி அக்கா..

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க கார்த்திக்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நண்பரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துளசி சார்... கீதா மேடம்...
தங்களின் நீண்ட கருத்துக்கு நன்றி...
வருத்தம்தான்... என்ன செய்வது... இதுதானே வாழ்க்கை....
தனபாலன் அண்ணா நமக்கெல்லாம் கிடைத்த முத்து...
அஜீத் ஆஹா... நான் விரும்பும் நடிகன்...
அகம் புறம் நம்ம குடும்பம் சார் நன்றியெல்லாம் தள்ளி வைத்துவிடும்...
வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரா...
தங்களின் நீண்ட கருத்துக்கு நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ரூபன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நண்பரே...
நலமா? நீண்ட நாட்களாயிற்று தங்கள் வருகை மனசில் பூத்து...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா...
தங்களைப் பற்றி அனைவரும் நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்கள்...
உங்கள் நன்றிக்கு நன்றி.

நிஷா சொன்னது…

நன்றிங்க கீதா. அவர்களே! முன்னர் நானும் சட்பட் தான். இப்ப சில வருடங்களாய் தான் வாழ்க்கையை அதன் போக்கில் வாழ கற்றுக்கொண்டேன்!

எதிர்பார்ப்பில்லாத வாழ்க்கை ஏமாற்றங்களை மட்டும அல்ல வலிகளையும் தராது என நான் கற்றுக்கொள்ள இழந்தவைகளும் அனேகம் தான்மா!

குமார் அனுபவமும் வயதும் நமக்குள் தரும் பெரும் கொடைகளில் ஒன்று தான் எது நடந்தாலும் எது வந்தாலும் நன்மைக்கே என ஏற்கும் பக்குவம். நான் இன்றைக்கு என் வாழ்க்கையில் ஜெயித்து நிற்க அடிப்படையான நம்பிக்கை எது நடந்தாலும் அது நன்மைக்கே எனும் ஒரு விடயம். கடந்த ஆக்ஸ்டில்... இரு ஆர்டர்கள் ஒரு வார இடைவெளியில் கேன்சலானது, சட்டென மனசு டல்லானாலும் நல்லா ரெஸ்ட் எடுக்க ஒரு வாய்ப்பு என்பதோடு கஸ்டமர்கள் அடிக்கடி கேட்கும் ஸ்பெஷல் பவ்வேயை அந்த நாட்களில் போடலாம் என உடனே திட்டமிட்டேன். ஆனால் அடுத்த நாளே கையில் வெட்டி நான்கு தையல் போட்டு ஆறுவாரம் மேலாய் எதுவும் செய்ய இயலாமல் போன போது உடனே சொன்னேன்.. அந்த ஆர்டர்கள் கேன்சலானதும் நல்லது தான் என..! மேலோட்டமாய் பார்த்தால் வருமானம் பாதிப்பு.. ஆழ்ந்து நோக்கினால் நமக்கு தேவையான ஓய்வு. அதனால் எது நடந்தாலும் நன்மைக்கே என பாஸிடிவ் திங்க் பண்ணி பாருங்கள். வாழ்க்கை உங்கள் கையில் தான்!

எந்தப்பிரச்சனையும் நம்மால் தீர்க்க முடியாதது எனும்படி கடவுள் நம்மை கைவிட மாட்டார் எனும் நம்பிக்கை இருந்தால் எல்லாமே தூசு தான் குமார்!

r.v.saravanan சொன்னது…

முதல் செய்தி வருத்தம் அளித்தது. இரங்கல்கள்

r.v.saravanan சொன்னது…

அகம்புறம் பற்றி குறிப்பிட்டமைக்கு நன்றி குமார் உங்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டுமே என்ற டென்ஷனில் நான்.