மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 19 அக்டோபர், 2015

விரிவோடிய வாழ்க்கை (அகல் போட்டியில் புத்தகம் பரிசு பெற்ற கதை)

கல் மின்னிதழும் பிரதிலிபி இணைய தளமும் இணைந்து நடத்திய செய்தித் தாளில் வந்த செய்தியை அடிப்படையாக வைத்து எழுதும் சிறுகதைப் போட்டியில் பணப்பரிசு பெறாவிட்டாலும் புத்தக்ங்களைப் பரிசாகப் பெற்றிருக்கிறது எனது இந்தச் சிறுகதை. மொத்தமாக வந்த கதைகளில் நடுவர்களின் பார்வையில் 6வது இடத்தைப் பிடித்து திரு. அ. முத்துலிங்கம் அவர்களின் புத்தகங்களைப் பரிசாகப் பெற்றிருக்கிறது.  ஒரு செய்தியை வைத்து கதை எழுதுவது என்பது மிகவும் சிரமமானது. எனக்கு அப்படியெல்லாம் எழுத வராது. என்னைப் பொறுத்தவரை கரு எல்லாம் யோசித்து வைத்து எழுதுவதில்லை. உட்கார்ந்து எழுத ஆரம்பிக்கும் போதுதான் அடுத்தடுத்து என்ன என்பதாய் விரிந்து போகும். அப்படியே பழகிவிட்டேன் இருந்தும் முயற்சித்துப் பார்த்தேன். அதில் புத்தகங்களைப் வென்றிருக்கிறது என் கதை என்பதில் மிகுந்த சந்தோஷம்.

நன்றி அகல் மற்றும் பிரதிலிபி

***************
யலில் உரம் போட்டு விட்டு ரோட்டுக்கு வந்த கந்தசாமிக்கு உடம்பெல்லாம் அரிப்பது போல் இருக்க, 'கம்மாயில போயி மேல ஒரு அலசு அலசிட்டு வந்திடலாம்' என்ற நினைப்போடு கண்மாய் நோக்கி நடந்தார். காலையிலேயே வெயில் உக்கிரமாக இருந்தது. 'ஒரு மழ பேஞ்சா நல்லாயிருக்கும்... ம்... இப்ப போடுற மொட்ட வெயிலுக்கு மழ எங்க வரப்போகுது... மழ இல்லாட்டி கடைசி கட்டத்துல எரவா மரம் போட்டுத்தான் தண்ணி எறைக்கணும்... அதுக்குக்கூட ஆளு கிடைக்கிறது கஷ்டந்தான்... இன்னைக்கு வேலக்கி வர்றவனெல்லாம் ஐநூறைக் கொடு... எழனூறைக் கொடுன்னுல்ல கேக்குறானுங்க... தண்ணி எறைக்காம வெளயிற மாதிரி ஒரு மழ பெய்யணும்... பாப்போம்' என்ற சிந்தனையோடு கண்மாய்க்கரையை அடைந்தார்.

தலையில் இருந்த துண்டை அவிழ்த்து இடுப்பில் கட்டிக்கொண்டு போட்டிருந்த பனியன், கைலி எல்லாம் தண்ணீரில் நனைத்து துவைக்கிற கல்லின் மீது வைத்தார். உரம் எடுத்து வந்த பையையும் நனைந்து உரம் கலக்க எடுத்து வந்த வாளியில் தண்ணீர் பிடித்து அதற்குள் போட்டுவைத்தார். கரையோரத்தில் இருந்த புளியமரத்தில் குச்சி ஒடித்து பல் விளக்கினார். தண்ணீருக்குள் நீர்க்காகங்கள் மூழ்கி மூழ்கி மீன்களைப் பிடித்துத் தின்று கொண்டிருந்தன. 'ம்.... வெளியிலுக்கு இதுக்குள்ளயே கிடக்கலாம்... அம்புட்டு சுகமா இருக்கும்...' என்று நினைத்தவர், சின்ன வயதில் கண்மாய்க்குள் மணிக்கணக்கில் கிடந்ததையும், நீருக்கு அடியில் மூழ்கி நிமிடக்கணக்கில் நீந்தியதையும், கடப்பாரை நீச்சல், மல்லாக்க நீச்சல் என நீச்சலில் பலவகையையும் செய்ததையும் நினைத்து பெருமூச்சை விட்டுக் கொண்டார். இப்போதெல்லாம் இடுப்பளவு தண்ணிக்குள்  அமர்ந்துதான் குளிக்கச் சொல்கிறது.

"என்ன பெரியப்பா? தண்ணியப் பாத்துக்கிட்டு யோசிக்கிறீங்க... உரம் போட்டுட்டு வந்தீகளா?" என்றபடி சோப்பை கல்லில் வைத்துவிட்டு வாயில் பிரஸூடன் கேட்டான் அவரின் தம்பி மகன் சேகர்.

"ஆமாடாம்பி.... களை நெறைய இருக்கு... அதான் கொஞ்சம் களைக்கொல்லி கலந்து தூவிட்டு வந்தேன்... சத்த தண்ணிக்குள்ள கெடந்த உடம்புல பட்டிருக்கிற உரமும், அரிப்பும் அடங்குமின்னுதான்  குளிச்சிட்டுப் போகலாம்ன்னு வந்தேன். தண்ணிக்குள்ள நீர்க்காக்கா நீந்துறதைப் பார்த்தும் சின்ன வயசுல இதுக்குள்ள நானு, உங்கப்பன், மேல வீட்டு கோவிந்தன், ஓட்டு வீட்டு வீரய்யான்னு எல்லாரும் இதுக்குள்ளதான் மணிக்கணக்குல கெடப்போம்ன்னு ஞாபகத்துல வர அப்படியே அதை நினைச்சிப் பார்த்தேன்... என்ன காலம் அது தெரியுமா? ம்... இனியா அது வரப்போகுது... இனி ஒவ்வொருத்தரா வேல முடிஞ்சிருச்சின்னு போக வேண்டியதுதான்.."

அவர் பேசுவதைக் கேட்ட சேகர் வாயில் இருந்த பேஸ்ட் நுரையைத் துப்பிவிட்டு "ஏம் பெரியப்பா... அதுக்குள்ள சாவைப் பத்தியெல்லாம் யோசிச்சிக்கிட்டு இன்னும் நிறைய நாள் நீங்கள்லாம் எங்க கூட இருப்பீங்க" என்றார்.

"அடப்போடா..." என்று சிரித்தவர் "இனிமே காடு வாவான்னு கூப்பிடுற வயசுதான்... நாளை எண்ணிக்கிட்டே இருக்கவேண்டியதுதானே?"

"அதுக்காக... அதெல்லாம் வரும்போது வரட்டும்.... ஆமா இந்தத் தடவை சொசைட்டியில உரங்கொடுப்பாங்களா?"

"முன்னாடியெல்லாம் உரம் கடனாக் கொடுத்துட்டு அப்புறம் அதையும் தள்ளுபடி பண்ணுவானுங்க... இப்ப உரம் மானியமாக் கொடுக்கிறேன்னு சொல்லுறானுங்க... எங்க செய்யிறானுங்க... அதுலயும் கொஞ்ச காசு நம்மாளுக பாக்கத்தான் செய்யிறானுங்க..."

"ஆமா... ஆமா... எல்லாத்துக்குமே இப்பெல்லாம் ஆளுக சப்போர்ட் வேணும்..."
"ம்... பிரசிடெண்ட் தம்பிக்கிட்ட கூட பேசிப் பாத்திருக்கோம்... அவரு எல்லாருக்கும் கொடுக்கணுமின்னு சொசைட்டியில கூப்பிட்டுச் சொல்லியிருக்காரு... பாப்போம் கிடைக்கிதான்னு..." என்றபடி தண்ணிக்குள் இறங்கி நீருக்குள் தலையை அமுக்கி எழுந்தார். சேகரும் தண்ணீருக்குள் இறங்கி அவரைத் தாண்டிச் சென்று நீச்சலடித்துத் திரும்பினான்.

"நம்ம எம்.எல்.ஏ. இங்கிட்டு வரவேயில்லையே....?"

"நம்ம எம்.எல்.ஏன்னு இல்ல எல்லா எம்.எல்.ஏவும் அப்படித்தான்.... தேர்தலப்போதான் அவனுக எல்லாம் வருவானுக... இப்ப அதுக்கும் வேலையில்லாமப் போச்சுல்ல.... காசைக் கொண்டாந்து கொடுத்துடுறானுங்க... இன்னைக்கித்தான் காசுக்காக எவன் நல்லவன் கெட்டவனெல்லாம் பாக்காம ஓட்டைப் போட்டுடுறோமுல்ல... எங்க காலமெல்லாம் நல்லாத்தான் இருந்துச்சு... இனிப் போற காலம் இப்படித்தான்... நாமதான் திருந்தணும்... நாடா திருந்தாது"

"எங்கிட்டு திருந்துறது... காசுக்குதானே ஆசைப்படுறோம்...."

"ஆமா... ஆமா... இன்னைக்கி விவசாயம் எல்லாப் பக்கமும் செத்துக்கிட்டு வருது... இங்கிட்டே நம்ம சுத்துப்பட்டு கிராமங்கள்ல எத்தனை ஊர்ல விவசாயத்தை பாக்க முடியலைன்னு நிப்பாட்டிட்டானுங்க தெரியுமா... நம்ம பக்கம் வானம் பாத்த பூமி ஒரு வருசம் விளையும் ஒரு வருசம் விளையாது... இருந்தாலும் அதுல நாம வெதச்சிக்கிட்டுத்தானே இருக்கோம்... நம்மளோட ஆதாரமே விவசாயந்தானே... ஆனா அது இப்ப பட்டுப்போயிக் கெடக்கு... வடக்க விவசாயியெல்லாம் தற்கொலை பண்ணிக்கிட்டு சாகுறான்... அவனோட குடும்பமெல்லாம் தண்ணியில்லாம காஞ்சி விரிவோடிப் போன வயக்காடாட்டம் ஆயிப்போயிக் கெடக்கதை யாரு நினைச்சிப் பார்க்கிறோம்... சொல்லு..."

கந்தசாமி படிக்காதவர் என்றாலும் எல்லா விவரங்களையும் கை நுனியில் வைத்திருப்பார். டிவிச் செய்திகள், பேப்பர்கள், மற்றவர்கள் சொல்வது என எல்லாவற்றையும் நன்றாக தெரிந்து கொள்வார். அது குறித்து தீவிரமாக விசாரிப்பார்.

"ஆமா பெரியப்பா... நீங்க சொல்றது சரிதான்... நம்ம நாட்டோட முக்கியமான ஒண்ணு விவசாயம்... நாட்டோட உயிர்நாடியே இதுதான்... ம்... அரசுக்கு இது மேல எல்லாம் அக்கறை இல்லை... என்ன செய்வது?"

"நேத்துக்கூட ஒரு செய்தி பார்த்தேன்... நானா படேகர்ன்னு ஒரு இந்தி நடிகர், தற்கொலை செய்து கொண்ட ஆயிரக்கணக்கான விவசாயிகள் குடும்பத்துல முதக்கட்டமா அறுபத்திரெண்டு விவசாயிகளின் குடும்பத்துக்கு அவரால முடிஞ்ச நிதி உதவி பண்ணியிருக்கார். விவசாயிகளே தற்கொலை பண்ணிக்காதீங்க... எங்கிட்ட வாங்கன்னு வேற சொல்லியிருக்காரு... தெரியுமா? எந்த அரசியல்வாதியும் இதப்பத்தி பேசலைங்கிறதுதான் வேதனையான விஷயம்... அரசியலுக்காக எதாச்சும் பேசுவானுங்க... அப்புறம் எல்லாத்தையும் மூட்டைகட்டி வச்சிட்டு அவங்க வாழ்க்கையைப் பாப்பானுங்க..." என்றபடி இடுப்பளவு தண்ணீருக்குள் நின்று கொண்டு துண்டை அவிழ்த்து அலசி... உதறி... தலையைத் துவட்டி தண்ணீருக்குள் இடுப்புக்குள் கீழ் மேலே தெரியாதவாறு நகர்ந்து வந்து டக்கென எழுந்து துண்டை லாவகமாகச் சுற்றிக் கொண்டார்.

"ம்... நானும் படிச்சேன் பெரியப்பா... அப்புறம் நாங்கூட ஒரு குறும்படம் பார்த்தேன்... விவசாயி ஒருத்தனும் அவனோட செல்லப் பெண்ணும்... விவசாயம் பொய்த்துப் போக... அவன் வயலை வயலைப் பாத்துட்டு வாரான்... கையில கயறும் எடுத்துக்கிட்டுப் போவான்... அந்தப்புள்ள அப்பா வயலுக்கு போயி வருத்தப்படுறதை தினமும் ஸ்கூலுக்குப் போகும்போது பின்னாலயே போயி பார்த்து வருத்தப்படும்.. ஒருநா அப்பா தூக்கு மாட்டினாலும் மாட்டிக்கும்ன்னு கயரை எடுத்து ஒளிச்சி வச்சிடும்... ஆனா மறுநா அது காணாமப் போயிடும்.. " தண்ணீருக்குள் இருந்தபடி சொல்லிக் கொண்டே தலையை துவட்டிக் கொண்டிருந்தான் சேகர்.

“ம்.... அவன் செத்துப் போறானாக்கும்... அதுதானே இன்னைக்கி நிலமை...”

“இருங்க பெரியப்பா...” என்றவாறே கரைக்கு வந்தவன்... “புள்ளை அப்பா சாகத்தான் பொயிட்டானுன்னு வயலுக்கு ஓடி தேடுது... அப்ப அப்பன்காரன் கயிரை அரசமரத்துல போடுறான்... அப்பான்னு கத்திக்கிட்டு ஓடுது... அவன் மகளுக்கு அதுல ஊஞ்சல்தான் கட்டுறான்.... கட்டிப் பிடிச்சிக்கிட்டு அழுகுது... விவசாயிகள் தற்கொலை பண்ணிக்காதீங்க... உங்களுக்கு குடும்பம் இருக்கு... அதுல உங்களை உயிரா நினைக்கிற குழந்தைங்க இருக்குன்னு சொல்ல வாரானுங்க... நல்ல கதை... எனக்கு கண் கலங்கிடுச்சு....” என்றபடி கைலியை கட்டிக் கொண்டு துண்டை அலசிப் பிழிந்தான்.

“அது ஒரு வலிடாம்பி... அந்த வலி இங்க யாருக்கும் தெரியலை...” என்றவாறு கல்லில் கிடந்த பனியன், கைலியை அலசிக் கொண்டே, " ம்... அந்த மனுசனுக்கு... அதுதான்டா நாஞ்சொன்னேனே அந்த நானா படேகர் அவருக்கு பெரிய மனசு... அவருக்காச்சும் விவசாயமும் விவசாயிக வாழ்க்கையும் தெரிஞ்சிருக்கே... வடக்குப் பக்கம் போன வருசத்துல மட்டும் ஐயாயிரம் விவசாயிகளுக்கு மேல செத்திருக்காங்க... ஆனா யாருக்கும் அதைப்பத்தியெல்லாம் கவலை இல்லைடாம்பி..."

"ம்...விவசாயத்தை நேசிக்கிற மனுசன்" என்ற சேகர் அவருக்காக காத்திருந்தான். கந்தசாமி உரம் இருந்த பையையும் அதைக் கலந்து வீசிய வாளியையும் கழுவி எடுத்துக் கொண்டார். கரையில் இருந்த முனீஸ்வரனைக் கும்பிட்டு குங்குமத்தை நெற்றியில் இட்டுக் கொண்டு வர, அவனும் அவருடன் நடந்தான்.

"நாட்டுல எத்தனையோ பிரச்சினை இருக்குடாம்பி... ஆனா பாரு... இங்க விவசாயி சாகுறான்... அங்க... அதான் நாடாளுமன்றத்துல எம்.பிக்களுக்கு எல்லாம் சலுகை விலையில உணவு தர்றானாம்... பாத்துக்க... அவன்ல எவன் மக்களுக்காக உழைச்சி மக்களுக்கு ஒதுக்குற பணத்துல சரியா செலவு செய்யிறான்... அம்புட்டுப் பேரும் கோடீஸ்வரனா இருக்கான். தாங்குடும்பம்... தன் மக்கள்ன்னு ஊரை அடிச்சி உலையில போடுறான்... அவனுக்கு அரசு கோடியில உலை வைக்கிது...  நல்ல சாப்பாட்டை சலுகைன்னு கொடுக்கிறான்... இங்க சாதாரண சாப்பாடே கிடைக்காம ரொம்ப பேரு செத்துக்கிட்டு இருக்கான்.”

சேகர் பேசாமல் வர அவரே தொடர்ந்தார். “இவனுக சாப்பாட்டுக்குன்னே கோடிக்கோடியா வருசாவருசம் ஒதுக்குறானுங்க... அவனுக்கு கொடுக்கிற சாப்பாட்டுக்கு என்ன செலவோ அதை வாங்க வேண்டியதுதானே... அந்தக் கோடிகளை தெருக்கோடியில கெடக்கவனோட வாழ்க்கையை மேம்படுத்த பயன்படுத்தலாம்... விரிவோடிப்போன வாழ்க்கை எதுக்குன்னு சாகுற விவசாயிக்கு... விவசாயத்துக்கு ஒதுக்கலாமே... விவசாயத்தை அழியாம காக்கலாமே... அதெல்லாம் செய்யமாட்டானுக... அரசாங்கம் அரசியல்வாதிகளுக்காக கோடிக்கோடியா செய்யிற செலவு எல்லாமே மக்கள் வரிப்பணம்தானே... இப்படி வீணா விரையம் பண்ணுறதுக்குப் பதிலா பயனுள்ள செலவா மாத்துனா நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் உயர்வுதானே... ம்... இதெல்லாம் நடக்குறகாரியமா சொல்லு... ஆனா நடந்தா நல்லா இருக்கும்தானே... நம்ம நாட்டுல இப்படி ஒரு மாற்றம் இனியாவது வரணும்... இப்படி சாப்பாடு சவரட்டனைக்கு செய்யும் தேவையில்லாத கோடிகளை ஒதுக்கி உலக அளவுல விவசாயத்துல தன்னிறைவு பெற்ற நாடா நம்மை நாட்டை மாத்துர பிரதமர் வரணும்... ஆனா இந்த ஆசையெல்லாம் நடக்குமான்னு தெரியலை...  இதெல்லாம் வெறுங்கனவாத்தான் போகும்ன்னு தோணுது..." என்று நிறுத்தினார்.

"நாடாளுமன்றத்துல மட்டுமா நடக்குது நம்ம எம்.எல்.ஏ. ஆஸ்டல்ல கூட இப்படித்தானாமே...?"

"ம்.... எல்லா இடத்துலயும் இதுக்கு கோடிகளை செலவு பண்ணி என்னாகப் போகுது... தெருவுல பட்டினியோட கெடக்கவணும்... விவசாயம் போச்சேன்னு சாகுறவனும் இன்னும் கூடிக்கிட்டேதான் போகப் போறானுங்க... எல்லாம் நிர்ணயிச்ச விதி... தேர்தலப்போ இதை அரசியல் ஆக்குவானுங்க... நாம செம்மறி ஆட்டுக் கூட்டம்...  சுயமா முடிவெடுக்கமாட்டோம்... அவன் நம்மளை மொளகாய் அரச்சிட்டு சலுகை எல்லாம் அனுபவிப்பான்... "

“ம்... உண்மைதான் பெரியப்பா... இப்ப சில இளைஞர்கள் விவசாயத்துல இறங்கியிருக்காங்க... ஒரு சாப்ட்வேர் கம்பெனியில வேலை பாக்குற பசங்க கொஞ்சப் பேர் சேர்ந்து ஏக்கர் கணக்குல நிலம் வாங்கி விவசாயம் பண்ணுறாங்க. தெரியுமா...?”

“நானும் படிச்சேன்... நானும் அதைத்தான் சொல்ல வாறேன்... நாட்டை இளைஞர்கள் கையில் எடுக்கணும்... சாப்பாட்டுக்கு கோடி செலவு பண்ணுற இது மாதிரி வெட்டிச் செலவுகளை எல்லாம் வேரறுந்து நிக்கிற விவசாயத்துக்கும்... வாழ்வறுந்து நிக்கிற மனிதர்களுக்கும் செலவு பண்ணி நாட்டை உலக அரங்கில் முன்னிருத்தணும்... இதெல்லாம் உன்னைய மாதிரி இளைஞர்கள் கையில்தான் இருக்கு... ஆனா எல்லாரும் ஒத்துமையா நின்னு சாதிக்கணும். அப்படிச் சாதிச்சா நம்ம நாட்டை உலக அரங்கில் யாராலும் வெல்லவே முடியாது.” என்றவரைக் சைக்கிளில் கடந்து சென்ற மாணிக்கம் "ஏப்பா... எங்க போனே... நம்ம பிரசிடெண்ட் ஆளனுப்பியிருந்தாரு... " என்றார்.

கந்தசாமி நடையை நிறுத்தி  "என்னவாம்?" என்று கேட்க, "வர்ற செவ்வாக்கிழமை கலெக்டரோட குறை தீர்க்கும் நாள் நம்ம பஞ்சாயத்துல இருக்காம்... அதான் சொல்லிவிட்டிருந்தார்." என்று கத்தியபடி சென்றார்.

"ம்...ம்... என்ன குறை... எதைத் தீக்க... அட நீ வேற போயி வேலை வெட்டியிருந்தாப் பாருப்பா..." என்றபடி நடந்தவர், "பாத்தியாடாம்பி.... குறை தீர்க்கும் நாளாம்... கொடுக்கிற கவரை குப்பையில போடுவானுங்க... நாடெல்லாம் பத்தியெரியிற விவசாயிங்க குறை தீர்க்க நாதியில்ல... கோடிகள்ல சாப்பாடு செஞ்சி பாதியைக் கீழே கொட்டுவானுங்க... ம்... குறை தீர்க்கிறானுங்களாம் குறை... எத்தனை வருசமாத்தான் தீர்ப்பானுங்க... இப்படியே போன கலாம் கண்ட கனவு பலிச்சி இந்தியா வல்லரசாயிடும்டாம்பி..." என்றார் சிரித்துக் கொண்டே, சேகர் ஒன்றும் பேசாமல் அவரோடு நடந்தான். 

-'பரிவை' சே.குமார்.

24 எண்ணங்கள்:

Nagendra Bharathi சொன்னது…

வித்தியாசமான விவசாயக் கதை அருமை

துபாய் ராஜா சொன்னது…

நாட்டு ந்டப்பை மனம் வலிக்கச் சொன்ன கதை அருமை. வாழ்த்துக்கள்.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றவரெல்லாம்
தொழுதுண்டு பின் செல்வார்.

விவசாயிகளின் பெருமை சொல்லும் குறள். ஆனால் இப்போ விவசாயிகள் தான் எல்லோரையும் தொழ வேண்டியிருக்கு. தொழிலதிபர்கள் கோடி, கோடியா கடன் வச்சுகிட்டு சொகுசா வாழுறாங்க. ஆயிரம் ரூபாய் கடனுக்காக விவசாயி தூக்குல தொங்குறான். நெஞ்சு பொறுக்குதில்லை இந்த நிலைமையை நினத்தால்....

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்லதோர் கதை. பாராட்டுகள் குமார்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

இதை வெளியிட வேண்டாம்....

முதல் வரியில் பிரதிபலி என்று வந்திருக்கிறதே - பிரதிலிபி தானே...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
பரிசு விவரம் அறிவிச்சாச்சு அண்ணா... அதனால்தான் பகிர்ந்தேன்.
தவறை திருத்தியாச்சு அண்ணா...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ராஜா...
உண்மைதான்... சரியாச் சொல்லி இருக்கீங்க..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நண்பரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

மோகன்ஜி சொன்னது…

முத்தான கதை குமார். நுட்பமான கதைச்சரடு . வாழ்த்துக்கள்.

KILLERGEE Devakottai சொன்னது…

அருமை நண்பரே மிகவும் யதார்த்தமான கிராமிய நடை ரசித்தேன்.

நல்ல விடயத்தை சொல்லவந்த நீங்கள் கந்தசாமி ஐயா படிக்காதவர் என்று தொடக்கத்தில் குறிப்பிட்டீர்கள் ஆனால் முடிவில் அவர் கொஞ்சம் படித்தவர் போன்றே பேசுகின்றார் இதன் காரணமாகவே இந்தக்கதை பரிசு பெறுவதில் சிக்கல் வந்திருக்கும் 80 எமது கருத்து தவறாக நினைக்க வேண்டாம் என் மனதில் பட்டவை எழுதினேன் வாழ்த்துகள்.
தமிழ் மணம் 3

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

முதலில் வாழ்த்துகள் குமார்! கதை நாட்டு நடப்புகளைப் புட்டுப் புட்டு வைத்து அழகாய் செல்கிறது...பாராட்டுகள்!

துரை செல்வராஜூ சொன்னது…

தங்களுக்கே உரிய இயல்பான நடை..

வழக்கம் போல - கனமான கதைக்களம்..

பாராட்டுகள்.. வாழ்க நலம்..

சென்னை பித்தன் சொன்னது…

இன்றைய நடப்பை அருமையாக மண்மணம் கமழச் சொல்லியிருக்கிறீர்கள்!

ஸ்ரீராம். சொன்னது…

கதை அருமை. செய்தியின் அடிப்படையில் கதையா? இரண்டு எழுதி ஒன்றை எங்கள்ப்ளாக்கில் வெளியிட்டு விட்டேன். இன்னொன்றை ஏதாவது பத்திரிகைக்கு அனுப்பலாமா என்ற யோசனை இருந்தாலும், வழக்கம் போல அனுப்பாமல் இங்கேயே பதிவிட்டு விடுவேன்! தம +1

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பரே
தம +1

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் கருத்தை ஏற்கிறேன். அதே சமயம் கந்தசாமிக்கு உலக விஷயம் எல்லாம் தெரியும் என்பதாய்த்தான் சொல்லியிருப்பேன். ஏனென்றால் கதைக்கான செய்தி எம்.பி. ஹாஸ்டலில் வீணாக்கப்படும் உணவும், அவர்களுக்கு வழங்கப்படும் உணவுக்கான குறைந்த விலையும் இதை மூன்று மனிதர்களின் பார்வையில் சொல்ல வேண்டும். நான் எடுத்தது விவசாயி.... நான் எப்பவுமே நிறைய கதாபாத்திரம் வைத்து எழுதினால் கதையில் தன்மை குறையும் என்று நினைப்பவன்... கந்தசாமிதான் பேச வேண்டும் என்பதால்தான் கனமான கருத்துக்களை அவர் மூலம் சொன்னேன்....

தாங்கள் சொன்னதற்காக தவறாக நினைக்க என்ன இருக்கிறது. கருத்துக்கள்தான் எழுத்தின் தன்மையை இன்னும் மெருகேற்றும்.

இது புதிய முயற்சி... நிறைய கதைகள் வந்ததில் 20 மட்டுமே செய்தியோடு ஒத்து போனது என்றும் செய்தியை வைத்து எழுதுவது சிரமம் என்றும் அவர்கள் சொல்லியிருந்தார்கள். அதில் எனது கதைக்கு புத்தகங்கள் பரிசாய் கிடைத்திருப்பது ஒரு விதத்தில் சந்தோஷமே....

இது முதல் முயற்சிதானே...

நன்றி அண்ணா கருத்துக்கு...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துளசி சார் / கீதா மேடம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
ஆம் அண்ணா....
சிறுகதைகள் எழுதினால் போட்டிகளுக்கு புத்தகங்களுக்கோ அனுப்புங்கள்...
உடனே தளத்தில் வெளியிட வேண்டாம்...
நானெல்லாம் இங்கிருப்பதால்தான் எதற்கும் அனுப்பவதில்லை... முடிவதும் இல்லை...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

இளமதி சொன்னது…

கதை நாட்டுப்பேச்சு வழக்கில் செல்வது அருமையாக இருக்கிறது.
மனம் தொட்ட கதை நடை, கருவும் சிறப்பு!

வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள் சகோதரரே!

Menaga Sathia சொன்னது…

முதலில் வாழ்த்துக்கள் சகோ!! விவசாயத்தோடு நாட்டு நடப்பை பற்றி சொன்ன விதம் அருமை..