முந்தைய பதிவுகளைப் படிக்க...
---------------------------------
37. தியேட்டரும் திக்கும்....
முன்கதைச் சுருக்கம்:
கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான். அண்ணனும் மச்சானும் சிங்கப்பூர் செல்ல, வாழ்க்கை கொஞ்சம் மாற்றமான பாதையில் செல்ல ஆரம்பிக்கிறது, மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததும் காதல் இன்னும் இறுக்கமாகிறது. இருவரும் சினிமாவுக்கு செல்ல முடிவு செய்கிறார்கள். தியேட்டர் பயணத்தில் சில சம்பவங்களைத் தாண்டி அவளுக்கு பூ வாங்கி வைத்துவிட்டு மற்றவர்களின் எரிக்கும் பார்வையைச் சுமந்து நடக்கின்றனர்.
"எதுக்கு இப்படி அவசரமா நடக்குறீங்க ராம்... அங்கே போய் காத்துக்கிட்டு இருக்கணும் அதுக்கு மெதுவா பேசிக்கிட்டே போகலாம்..."
"தியேட்டர்ல உள் பக்கமா நிக்கலாம் புவி... இப்படி ரோட்டுல பேசிக்கிட்டு போனா யாராவது பாத்துட்டா..."
"பாத்தா என்ன... கல்யாணம் பண்ணிக்கிட்டு ஓடிப் போயிடுவோம்..."
"ஆமா எல்லாரும் ஓடிப் போயி கல்யாணம் பண்ணிப்போம்ன்னு சொல்லுவாங்க... நீ கட்டிக்கிட்டு ஓடிப் போயிருவோம்ன்னு சொல்றே... என்ன ஜோக்கா..."
"ஜோக்கெல்லாம் இல்ல... நம்மளை அவங்க விரட்டிப் பிடிச்சாலும் கணவன் மனைவியா இருப்போமுல்ல... சும்மா சொன்னேன்.... தியேட்டருக்குத்தான் யாராவது தெரிஞ்சவங்க வருவாங்க... மெதுவா நடங்க ராம்...." என்றபடி அவனது தோளைத் தொங்கினாள். ராம்கிக்கு என்ன நடக்கப் போகுதோ தேவையில்லாத வேலை பார்க்கிறாளேன்னு பயம் துளிர்த்தது.
அதே நேரம் காரைக்குடி பழைய பஸ்ஸ்டாண்டுக்கு எதிரே டீக்கடையில் டீயைக் குடித்துக் கொண்டிருந்த மணி "மாப்ள அவளைப் பார்த்தியா... ஆளு எப்படி சூப்பருல்ல..."
"ம்..."
"பேசாம அவ பின்னாடி போயிருக்கலாம்... எப்படியிருந்தாலும் புதுப்பஸ் ஸ்டாண்ட்ல இறங்கியிருப்பால்ல... சை... அவசரப்பட்டு இறங்கியாச்சு..."
"எதுக்குடா அவ பின்னாடி போகணும்... உனக்கு ஒரு வேலையிருக்கு... அதுவும் முக்கியமான வேலையின்னுதான் மத்தவங்களைக் கூப்பிடாம என்னையக் கூட்டிக்கிட்டு வந்தே... அப்புறம் ஒரு பொட்டச்சி பின்னால போயிருக்கலாம்ன்னு சொல்றே... பொட்டச்சி பின்னால சுத்துறதுக்கா லீவன்னைக்கு பஸ் ஏறி வந்தோம்... வாடா வந்த வேலையை முடிச்சிட்டுப் போவோம்... திருப்பத்தூருக்கு வண்டி நிக்கிது பாரு..."
"இல்ல மாப்ள... அவ பொய் சொன்ன மாதிரி இருக்கு.. பிரண்ட் வீட்டுக்கு போற மாதிரி தெரியலை... வேற ஏதோ பிளானோட வந்த மாதிரி தெரியுது... ஆமா நம்ம ராம்கி லவ் பண்ணுறது இவளைத்தானோ..?"
"சேச்சே.... அவன் போயி இவளை லவ் பண்ணுவானா... அப்படி பண்ணியிருந்தா இந்நேரம் அவ அண்ணன் பிரிச்சி மேஞ்சிருக்க மாட்டானா.. அவன் ஐயாவோட வேலையா வந்திருக்கான்..."
"இல்ல சும்மா கேட்டேன்டா.... அதுக்கு எதுக்கு பதறுறே... ஆமா அவன் பிரண்ட் ஒருத்தன் ராம்நகர்ல ஏறுறதா உங்கிட்ட சொன்னதை நான் கேட்டேனே... ஆனா யாருமே ஏறலையே?"
"ம்... நானும் கேட்டேன்... இதுல வரலைன்னா அடுத்த பஸ்ல வருவான்... பெரியார் சிலைக்கிட்டதான் வேலை வந்துருவான்னு சொன்னான்... நீ இப்ப அவனை எதுக்கு சந்தேகப்படுறே... அவன் ஒரு பொண்ணை லவ் பண்ணினான்... அதை அவனை அடிக்க வந்த அன்னைக்கு நான்தான் உனக்கிட்ட சொன்னேன்... அது ஒரு வருசத்துக்கு மேல ஆச்சு.... குடும்பச் சூழல், அம்மாவின் கனவு எல்லாம் அவனோட காதலை துறக்க வச்சிருச்சு... இப்போ அவன் எவளையும் காதலிக்கலை.. போதுமா... அவ எங்க போறாளோ தெரியலை..."
"அவனுக்கு என்ன பைத்தியமா? லவ் பண்ணின பொண்ணை குடும்பச்சூழலைச் சொல்லி ஒதுக்கியிருக்கான்... இல்லடா மாப்ள அவ அவனை பார்த்த பார்வையில ஒரு காதல் இருக்கிறதை நான் பார்த்தேன்டா... அதான்... "
"இங்க பாரு.... ஒரே காலேஜ்ல படிக்கிறாங்க... பேச்சு, பட்டி மன்றமுன்னு சேர்ந்து போயிருக்கலாம்... ரெண்டு பேரும் பேசிக்கலைன்னாக் கூட பார்க்கிறப்போ சிரிச்சிக்காமலா இருந்திருப்பாங்க.... ஆனா பஸ்ல அவ அவனை பார்த்துச் சிரித்த மாதிரி எனக்குத் தெரியலை..."
"ம்... ஆனா அவ ல்வ்ல விழுந்திருப்பாலோன்னு தோணுது... இப்பல்லாம் எங்க ஊருக்கு வர்றது இல்லை... சரி விடு முத வேலையா நம்ம பசங்ககிட்ட அவ யாரையாவது லவ் பண்றாலான்னு கன்பார்ம் பண்ணனும்டா..."
"அவளைப் பற்றி இவ்வளவு யோசிக்கிறே... என்ன அவளை கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறியா?"
"ஆசை இருக்கு... ஆனா அவளுக்குப் போட்டியிருக்கும்... ஏன்னா இளங்கோவுக்கு கூட அவ மேல ஆசையிருக்கு... அதான் வைரவன்கிட்ட ரொம்ப பிரச்சினை வச்சிக்கலை... எங்க பசங்க எல்லாருக்குமே இந்தப்புள்ள மேல ஒரு கண்ணு... ஆனா அவங்க வீட்ல என்ன முடிவு பண்ணுறாங்கன்னு தெரியலை..."
"ஏன்டா ஒரு பொண்ணு இம்புட்டுப் பேரு போட்டியா? சரியாப் போச்சு போ... அவ படிக்கட்டும்டா... உங்களுக்கு கல்யாணம் பேசும் போது பேசலாம்... விடு" என்றவன் மனசுக்குள் 'மாப்ள ராம்கி உனக்கு ரொம்ப பிரச்சினை வரப்போகுதுடா.... அம்புட்டு ரவுடிப் பயலுகளும் அந்த புள்ளையை கட்டிக்க ஆசைப்படுறாங்கடா..' என்று சொல்லிக் கொள்ள, "மாப்ள" என்ற மணியின் குரல் அவனை சுயநினைவுக்கு கொண்டு வந்தது.
"இங்க பாரு மாப்ள... அவள எவன் லவ் பண்ணினாலும் அவனுக்கு நாந்தான் எமன்... எவன்னு கூடிய சீக்கிரமே கண்டு பிடிக்கிறேன்.. ராம்கியா இருந்தா ஒதுங்கிறச் சொல்லு... சரி வா பஸ்ஸை எடுத்துட்டான்" என்றபடி பஸ்ஸை நோக்கி ஓட சேகர் துடிக்கும் இதயத்துடன் அவன் பின்னால் ஓடினான்.
தியேட்டரில் இருந்து வெளியே வந்ததும் "காபி சாப்பிடுறியா புவி?" என்று கேட்டான் ராம்கி.
"ம்... தலைவலிக்கிற மாதிரி இருக்கு? ஆனா சாப்பிடுற நேரத்துல காபி எதுக்கு... எதாவது சாப்பிட்டுப் போகலாமே..." என்றாள்.
"சரி வா..." என்று தியேட்டருக்கு எதிரே இருந்த ஹோட்டலுக்குள் அழைத்துச் சென்றான்.
இருவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டார்கள். "ரொம்ப தாங்க்ஸ்" என்றாள்.
"எதுக்கு... சினிமாவுக்கு வந்ததுக்கா?"
"இல்ல தியேட்டர்ல ஜென்டிலா நடந்துக்கிட்டதுக்கு..."
"ஓ..."
"இல்ல ஒவ்வொருத்தியும் தியேட்டருக்குப் போன கதையை பெருசா சொல்லுவாளுங்க... ஆனா என்னைய டச் பண்ணாம ரொம்ப டீசண்டா நடந்துக்கிட்டீங்க..."
"இங்க பாரு நான் உன்னோட மனசைத்தான் காதலிக்கிறேன்... எல்லா காதலருக்கும் உள்ள மாதிரி உனக்கு கிஸ் கொடுக்கணும்... உன்னோட கையைப் பிடிச்சிக்கிட்டு நடக்கணுமின்னு எனக்கும் ஆசை இருக்கு... மத்தபடி தியேட்டருக்குள்ள போயி உன்னை அங்க தொடணும் இங்க தொடணுமின்னு எந்த ஆசையும் இல்ல... அப்படி பண்ணினா அதுக்குப் பேர் காதலில்லை... ஆமா எதுக்கு அப்படிக் கேட்ட... நீ அந்த மாதிரி எண்ணத்துலதான் சினிமாவுக்குக் கூப்பிட்டியா? என்றான்.
"சை.... என்ன மாதிரி கேள்வி கேக்கிறீங்க... நீங்களும் சராசரியாத்தான் யோசிக்கிறீங்க... நான் அலையிறவன்னு சொல்லுறீங்களா... எனக்கு உங்களோட ஜென்டில்தனம் எப்பவும் பிடிக்கும்... இன்னைக்கு நீங்க நடந்துக்கிட்டது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு...தாங்க்ஸ் சொன்னேன்... நீங்க எதுக்குன்னு கேட்டதால சொன்னேன்... ஆனா என்னைய அப்படி நெனச்சிட்டிங்கதானே..." என்றாள் கோபமாக.
அவளின் கோபமும் கலங்கிய கண்ணும் அவனுக்கு வருத்தத்தைக் கொடுக்க "சாரி புவி... சும்மாதான் கேட்டேன்..." என்றதும் "சரி சாப்பிட்டு வாங்க... நான் வெளிய நிக்கிறேன்..." என்று சாப்பிடாமல் எழ, "அப்ப வா ரெண்டு பேரும் போகலாம்" என அவனும் எழப் போனான். ஒன்றும் பேசாமல் அமர்ந்து சாப்பிட்டாள்.
சாப்பிட்டு கைகழுவியது அவள் ஒன்றும் பேசாமல் முன்னால் நடந்தாள்.
"புவி கூல் ட்ரிங்க்ஸ் சாப்பிடுறியா?"
"வேணாம் தலைவலியா இருக்கு? போகலாம்..." என்றபடி முன்னால் நடந்தாள்.
"என்னம்மா ஜாலியாத்தான் கேட்டேன்.... இன்னும் கோபம் போகலையா... சாரி..."
"..." ஒன்றும் பேசாமல் நடந்தாள். அவளை மறுபடியும் சிரித்த மூடுக்கு மாற்றுவது எப்படியென்று யோசித்தான். ஆனால் அவள் பேசாமல் முன்னே நடந்தாள்.
"அடியே... என் செல்லச் சிறுக்கி..." என்றான் அவளுக்கு கேட்கும் விதமாக... அவள் அதை ரசித்தாலும் திரும்பவில்லை.
"என்னடி... அடியே... புவனாக்குட்டி... நில்லுடி.." என்றான். அவள் நின்று திரும்பி அவனைப் பார்த்து "ரொம்ப ஓவரு... என்ன புவி போயி டீப் போட ஆரம்பிச்சிட்டிங்க... நல்லாத்தான் டீப் போடுறீங்க... பேசாம கடை ஆரம்பிச்சிடுங்க..." என்று சிரித்தவள் அவனுடன் இணைந்து நடந்தாள்.
பேருந்து நிறுத்தத்தை அடைந்து பேருந்துக்காக காத்திருந்தபோது ஏதேச்சையாக ரோட்டின் எதிர்புறம் உள்ள கடையைப் பார்த்தவள் அதிர்ந்து ராம்கிக்கு பின்னால் மறைந்தாள்.
(புதன்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.
3 எண்ணங்கள்:
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_22.html சென்று பார்க்கவும்... நன்றி...
நல்லாருக்கு........ஒரு பொண்ணு காதலிக்கும் போது எப்புடி நடந்துக்கணும்,ஆண் எப்புடி நடந்துக்கணும் கிறதுக்கு புவி&ராம்கி நல்ல உதாரணம்!தொடரட்டும்,கங்கிராட்ஸ்!!!
அருமை
தொடர்கிறேன் நண்பரே
த.ம.2
கருத்துரையிடுக