மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 24 ஜூன், 2020

நூல் விமர்சனம் : கறுப்பர் நகரம்

ரப்பாலம் வாசித்து நீண்ட நாட்களுக்குப் பிறகு கரன் கார்க்கியின் கறுப்பர் நகரம் நாவலை வாசித்தேன். மரப்பாலம் உலகப்போரைப் பற்றிப் பேசியது என்றால் கறுப்பர் நகரம் முழுக்க முழுக்க விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையைப் பேசுகிறது... அதுவும் அதீத காதலோடும் கொஞ்சம் காமத்தோடும் மிகுந்த வலியோடும் பயணிக்கிறது.

கறுப்பர் நகரம் by கரன் கார்க்கி

கொலையும் அதன் பின்னான ஜெயில் வாழ்க்கையுமாய் பல காலங்கள் கழிந்த நிலையில் அதிலிருந்து விடுதலை கிடைத்து சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க வெளியில் வரும் ஒருவன் தன் கதையை நினைத்துப் பார்த்து, நகரின் மாற்றங்களினால் காணமல் போன அவன் வாழ்ந்த காலத்தையும் அதோடு நிறுத்திப் பார்த்துத் தனது சுடு மூச்சைத்தான் நம் முன்னே விடுகிறான்... அந்த மூச்சு சொல்லும் வாழ்க்கைக் கதை நம்மையும் கட்டிப் போட்டு விடுகிறது.

அவனின் சுதந்திரமெல்லாம் காதல் மனைவியுடன் குடிசைக்குள் வாழ்ந்த அந்த சொற்பக் காலம்... மண் குடிசைக்குள் காதல் மாளிகை கட்டி மகிழ்வாய் வாழ்ந்தவர்களை,  காலம் தன் தீய நாக்குகளால் சீண்டி அடித்து உடைத்து அவர்களைத் துரத்தியதே அவனுள் சுழன்று சுழன்று அடிக்கிறது. கிறுக்கனாய் அலைந்து திரிகிறான்... தொலைந்த நகரத்தில் தொலையாத நினைவுகளுடன். 

இளம் வயதில் சிறைக்குள்ளே போய் கிழவனாய் வெளியே வரும் செங்கேணிக்குச் சென்னையே புதிதாய் பிறந்திருப்பது போல் தெரிகிறது. பல பழயை கட்டிங்கங்களை, பொட்டல்வெளியாய் இருந்த இடங்களை, தாமரை பூத்துக் கிடந்த குளங்களை, மனிதர்களைச் சுமந்த குடிகளை எல்லாம் புதிதாய் முளைத்திருந்த பெரும் பெரும் கட்டிடங்கள் தின்று செரித்து நிற்கின்றன... அதையெல்லாம் பார்க்கும் போது அவனுக்கு இந்த உலகம் பிடிக்கவில்லை. எத்தனை மாற்றங்கள் வெளியில் நிகழ்ந்திருக்கின்றன என்ற போதிலும் அவன் மனசுக்குள் மட்டும் மாற்றமே ஏற்படவில்லை... இன்னும் மனசு முழுவதும் அந்தப் பகுதியும் அவளும்தான்.

அவள்... ஆராயி...

அவனின் காதல் மனைவி.

காதலுக்கு குடிசை என்ன... கோபுரம் என்ன.. சிறு மண்குடிசைக்குள்ளும் அது அழகாகத்தான் முளைவிடம் இல்லையா... அப்படித்தான் முளைக்கிறது இவர்களின் காதல்... அவளின் அக்கா வீட்டுக்காரன் கணேசனின் எதிர்ப்பையும் மீறி இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். அங்கிருந்தால் பிரச்சினை பெரிதாகும் என்பதால் முனியம்மா என்னும் பக்கத்து வீட்டுக்கார அக்கா, தன் தங்கை செல்லக்கண்ணு இருக்கும் ஜெகநாத புரத்துக்கு அவர்களை அனுப்பி வைக்கிறாள்.

புது காதல் ஜோடி... செல்லக்கண்ணுவின் புது குடிசை வீட்டில் வாசம்... சொல்லவா வேண்டும்... வண்டி இழுக்கும் அவன் அவளை அவ்வளவு அன்பாய் வைத்துக் கொள்கிறான். மனைவியின் பின்னே மந்திரிச்சி விட்ட சேவலாட்டம் சுற்றிச் சுற்றி வருகிறான். அன்பாய்... அன்பால் மட்டுமெ நகர்கிறது அவர்களின் வாழ்க்கை... மாமா என்னும் அவளின் மந்திரச் சொல்லுக்குள் மயங்கிக் கிடக்கிறான்... எப்போதும் மலர்ந்து சிரிக்கிறான்.

அங்கிருக்கும் மக்களும் ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசையாய் இருக்கிறார்கள். அவர்களின் கள்ளமில்லாத பேச்சுக்கள்... கடமைக்காகச் செய்யாமல் உண்மையாய் செய்யும் அன்பு என ஒரு வித்தியாசமான உலகத்துக்குள் தாங்கள் நுழைந்து விட்டதாய் நினைத்திருக்கிறார்கள்.

விளிம்புநிலை மனிதர்கள்... அதுவும் ஒரு பொதுவான இடத்தில் குடிசை போட்டு வாழும் வாழ்க்கையில் குடியும் கொலையும் அதனூடே பெண்களுமாய்தான் இருப்பார்கள் என்பது அன்று முதல் இன்று வரை நாம் அறிந்த ஒன்றுதான்... வாதத்திற்கு வேண்டுமானால் அப்படியில்லை எனச் சிலர் வாதாடலாம்... ஆனால் விளிம்புநிலை குடிசை வாசிகளின் வாழ்க்கை இன்னும் அப்படியேதான் இருக்கிறது... அதுதான் அவர்களுக்கு விதிச்ச விதியும் கூட.

ஜெகநாத புரத்திலும் நல்லவர்கள் நிறைந்திருக்கும் இடத்தில்தான் சாராய வியாபரம் படு ஜோராய் நடக்கிறது... அதுவும் இரு பிரிவினராய்... ஒருவருக்கு ஒருவர் காவல் நிலையத்தில் சொல்லி அடிதடி... வெட்டுக் குத்து என நகர்கிறது கதை. இதற்கிடையே சாராயம் விற்கும் பேய்க்காளிக்கு ஆராயி மீது ஆசை, அவளை எப்படியும் அடைந்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு திரிகிறான். அதற்கான முயற்சிகளில் அவ்வப்போது இறங்கவும் செய்கிறான்.

வேலை முடிந்து வரும்போது மனைவிக்கு எதாவது வாங்கி வரும் செங்கேணி, ஒரு சமயம் அவனுக்கு மிகவும் பிடித்த அல்லிப் பூவைக் கூட அவளுக்காய் பறித்து வந்து கொடுக்கிறான்... ஒருமுறை பொம்மை வாங்கி வருகிறான்... இதிலிருந்தே அவள் மீதான அவனின் அதீதக் காதலை நாம் உணர்ந்து புரிந்து கொள்ளமுடியும்... அவன் பூப்பறித்த குளத்தையும் அல்லியையும் இப்பெருநகரத்தில் நகர்ந்த காலம் விழுங்கிச் செமித்திருப்பதை அறிந்து வருந்துகிறான்.

பாளையம், மாவுளி, வேலு, சிவான்னு தனியொரு கோஷ்டி செங்கேணி வீட்டுக்கு அருகில்... ஆரம்பத்தில் அவர்களின் அரட்டையில் கலந்து கொள்ளாதவன் பின்னர் அதை விரும்பி தானும் கலந்து கொள்கிறான். தினம் தினம் உள்ளூர் விஷயங்கள் முதல் உலக விஷயங்கள் வரை பேசுகிறது. கலைஞரும் எம்ஜிஆரும் இவர்கள் பேச்சில் உண்டு. பாளையத்தின் அப்பா தப்படிக்க மாட்டேன் என்று சொன்னதால் வந்த பிரச்சினை, அதன் பின்னான நிகழ்வுகள் என கதை பாளையத்தின் கதையையும் இடையே சொல்லிச் செல்கிறது. பாளையத்தின் மனைவி செந்தாமரை, இவர்கள் இரவு வெகுநேரம் அமர்ந்து பேசும் போது ஏதாவது புலம்பிக்கொண்டே இதக்குடிங்க, இதத் தின்னுட்டுப் பேசுங்க என அன்போடு பழகுபவள். அவளே ஆராயிக்கு பெரும் உதவியாகவும் இருக்கிறாள்.

செங்கேணிக்கு அம்மாவென்றால் அதிக இஷ்டம்... படிக்கமாட்டேன் எனச் சொல்லி அம்மா பின்னே திரிந்ததும் ஊர்ப் பெரியவர் வீட்டில் வேலை பார்த்ததும் அம்மாவுக்கு நிகழ்ந்த நிகழ்வும்  என அந்தக் கதையும் அவன் சொல்வதாய் சின்னதாய் விரிகிறது என்றாலும் அது கொடுக்கும் வலி நமக்குள் மிகப்பெரியதாய் வளர்ந்து வலுவிழக்கச் செய்கிறது... அவனுக்கு ஆராயி அம்மாதான் என்பதை பல இடங்களில் சொல்லி வருகிறான்... அதன் காரணம் விரியும் இந்தக் கதைக்குள்தான் இருக்கிறது.

புருசன் எங்கே இருக்கிறான் என்பது தெரியாததால் பேய்காளியுடன் கூட்டாய் இருக்கிறாள் செல்லக்கண்ணு... அது ஆராயிக்கும் தெரிய வருகிறது... இருந்தும் செல்லக்கண்ணு தன் மீது காட்டும் பரிவு மற்றும் பாசத்துக்காக அது குறித்து அவள் பெரிதும் யோசிக்கவில்லை. அதே சமயம் செல்லக்கண்ணுவின் புருஷன் சிவா திரும்பி வருகிறான் ஒரு வடக்கத்திக்காரியுடனும் லாரியுடனும்... மூவரும் ஒரே வீட்டில் வாழ்கிறார்கள்... வடக்கத்திக்காரி ரொம்ப நல்லவளாகவும் இருக்கிறாள்.

செங்கேணிக்கு கறிக்கடை மீசைக்காரருடனான பழக்கம் ஏற்பட, அவரின் புல்லட், குதிரை வண்டி மீது ஒரு காதல்... அவருடைய குதிரை வண்டியின் கட்டையில் அமர்ந்து வெள்ளைக்காரன் வீட்டுக்குப் பயணித்ததும் அங்கு வெள்ளைக்காரியும் மீசைக்காரரும் கூடிக் கலவி செய்ய, வேலைக்காரி மூலமாய் இவனுக்கும் வாய்ப்பு இருந்தும் குடிபோதையிலும் ஆராயி மீது கொண்ட காதலால் வேண்டாமே என விலக்கி விடுகிறான்.

மீசைக்காரனுடனான நட்பைக் கூட அவன் பெண்களிடம் நடந்து கொள்ளும் விதத்தால் விலக்கிக் கொள்ள நினைத்து, அவன் தன் மீது கொண்டிருக்கும் அன்பால் விட முடியாமல் தவிக்கிறான் செங்கேணி. மீசைக்காரன் பெண் பித்தன் என்றாலும் செங்கேணியிடம் நல்ல முறையில்தான் நடந்து கொள்கிறான்.

அக்காவும் அத்தானும் தங்கள் கோபம் மறந்து இவர்களைத் தேடி வந்து பார்த்துச் செல்கிறார்கள். இவர்களும் அவர்கள் வீட்டில் போய்த் தங்கி வருகிறார்கள். அந்த உறவுப் பாலம் உடையாமல் இருக்கமாய்த்தான் இருக்கிறது.

பழைய மொதலாளியுடன் சாதியப் பேச்சில் சின்னதாய் ஒரு உரசல்... அந்த வேலை விடுத்து எங்கு வண்டி இழுக்கச் சொன்னாலும் இழுக்க ஆரம்பிக்கிறான். அப்படி ஒரு வேலைக்குப் போன இடத்தில் ஒரு விபத்து... அதில் செங்கேணியும் அடிபடுகிறான். அதிலிருந்து இவனை மீட்க ஆராயி பெரும் போராட்டமே நடத்துகிறாள்... அவன் மீண்டெழுந்தாலும் அவனின் தலைக்குள் சூடு ஏறினால் அவன் கிறுக்கனைப் போலாகி விடுவான் என்பதால் அவனை குழந்தையைப் போல் பார்த்துக் கொள்ள வேண்டிய நிலை அவளுக்கு... பார்த்துப் பார்த்து அவனைக் கவனித்துக் கொள்கிறாள். மருத்துவமனையில் அவன் இருக்கும் போது அக்காவும் கணேசனுந்தான் அவளுக்குப் பெரும் உதவியாய் இருக்கிறார்கள்.

கொஞ்சம் உடல் தேறி வந்ததும் வீட்டுக்குள்ளயே இருந்தால் எப்படி வாழ்க்கையை ஓட்டுவது என முடிவு செய்து, ஆராயி மறுத்தும் வேலைக்குப் போகலாம் என முடிவு செய்கிறான். சூடாகும் போது அவளை அடிக்கவும் செய்கிறான்... பின் வருந்துகிறான்... அவன் வேலைக்குப் போய் அங்கு ஏதாவது ஆனால் உயிருக்கே ஆபத்தாகிவிடுமே என அவளுக்குத்தான் பயம். 

இந்தச் சமயத்தில் பேய்க்காளியின் பேச்சைக் கேட்டு வீட்டில் சும்மா இருப்பதற்கு அவன் வெளியூர் செல்வதால் அவனிடம் சாராயம் விற்கும் பையன்கள் வரவு செலவில் ஏமாற்றி விடுவார்கள் என்பதால் பார்த்துக் கொள்ளச் சம்மதிக்கிறான். அவள் மறுத்தும் இங்க உக்காந்திருக்கதை அங்க உக்காந்திருக்கப் போறேன் எனச் சொல்லி அவளின் வாயடைத்து தகரக் கொட்டகையில் போய் அமர்ந்து கொள்கிறான்.

அது வேடன் விரித்த  வஞ்சக வலை என்பதை அவன் அறியவில்லை... அடிப்பட்ட காலைத் தூக்கி ஓடவும் முடியாத சூழலில்  போலீஸில் மாட்டிக் கொள்கிறான். அவர்கள் அவனை அடித்துத் துவைத்து சிறைக்குள் போட்டதில் அவனின் தலைக்குள் சூடு ஏறுகிறது.

பாளையத்தின் முயற்சியால் போலீஸில் இருந்து வீட்டுக்கு வருபவன் பேய்க்காளியைக் கொலை செய்ய முயல்கிறான். அதில் தவறுதலாக ஒரு கொலையை நிகழ்த்தி விடுகிறான் என்றாலும் பேய்க்காளியை அதன் பின் கொன்று தன் கணக்கைத் தீர்த்து விட்டு காதல் மனைவியை, தன் குழந்தையை சுமப்பவளைத் தேடி வீட்டுக்கு வருகிறான். வீட்டில் காணும் காட்சியை அவனால் ஏற்க முடியவில்லை... பைத்தியமாய் புலம்பித் தள்ளுகிறான்.

அலைந்து திரியும் கிழவன் இறுதியில் என்ன ஆனான் என்பதையும் சொல்லி விடுகிறார் ஆசிரியர்... அவனுக்கான வாழ்க்கையில் வேறென்ன இருக்கப் போகிறது... அதுவே இறுதியாய் இருத்தல்தானே நலம்.

குடிசைகள் எல்லாம் இல்லாமல் குப்பையால் மேடாகிக் கிடக்கும் இடத்தில் கிழவன் சுற்றி வரும் போது அவனின் காதல் மனைவியுடனான அந்நியோன்ய வாழ்க்கையும் சாராயமும் குப்பை மேடும் நாய்க் கொட்டகையும் இரவின் நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு பயணிக்கும் ரயிலில் ஓசையுமாய் நம்மோடு பயணிக்கும் விதமாய் அழகாய் நகர்ந்து செல்லும் எழுத்து... கரன் கார்க்கியின் ஈர்ப்புவிசை சூட்சமம் இந்த எழுத்தில்தான் இருக்கிறது.

ஒரு பணக்கார வீட்டுப் பெண் பைத்தியமாய் அந்த ஏரியாவில் சுற்றி வருகிறாள்... அவள் அம்மனைப் போல மஞ்சள் சேலைதான் கட்டித் திரிகிறாள்... இல்லையில்லை உடம்பில் சுற்றித் திரிகிறாள்... காம்ம் சுமக்கும் மனிதர்கள் தங்கள் வெறிக்கு அவளைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். 

சாராயம் விற்கும் பெண்ணும் மனுஷிதான் என்றும் காட்டப்படுகிறது. பெரியாரின் இறப்பு பேசப்படுகிறது. குடிசைக்குள் இருந்தாலும் அந்த மனிதர்களின் மனம் கோபுரக் கலசம்தான் என்பது கதை முழுவதும் நிரவிக் கிடக்கிறது... அதில் பேய்க்காளி மட்டுமே விதிவிலக்கு.

செங்கேணியைக் கிழவன் என்றும் அவன் என்றும் செங்கேணி என்றும் மாற்றி மாற்றி எழுதுவது குழப்பமாய் இருக்கிறது... செங்கேணி என்றே ஏன் ஆசிரியர் எழுதவில்லை என்பது தெரியவில்லை... இந்த மூன்று அழைப்பு மாற்றமும் கதையின் வேகத்துக்குத் தடையாய்த்தான் எனக்குத் தெரிந்த்து.

ஆண்ட சாதி, அடிமை சாதி என்பதெல்லாம் சமீபத்தில் வெகு வேகமாக முளைவிட்டு வளரத் தொடங்கியிருக்கிறது. கதைக்குள் பாளையம் பேசுமிடங்களில் எல்லாம் இது அதிகமாகத் திணிக்கப்பட்டிருப்பது போல் தோன்றுகிறது. இது கதையின் வேகத்தைக் குறைக்கிறது. இது கதைக்குத் தேவையா இல்லையா என்றெல்லாம் எனக்குத் தெரியாது என்றாலும் வலிந்து திணித்திருப்பதாகவே தோன்றியது.

இது யாரைப்பற்றியுமான வரலாறு இல்லை என்றாலும் வெறுமனே புனைவு என்று சொல்லிவிட முடியாது. இதில் வரும் ஒவ்வொருவரும் வாழ்ந்து மரித்துப் போனவர்கள்... சிலர் இப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் என்றும் என்னைச் சுற்றி இருந்த மக்களிடம் வறுமையும்... காதலும்... வாழ்வதற்கான வேட்கையும்... மொழியும்... வைராக்கியமும்... அறியாமையும்... எனப் பலவிதமான சூழல்களை நான் பார்த்து வளர்ந்தவன் என்றும் தன்னுரையில் சொல்லியிருக்கிறார் கரன் கார்க்கி. அவர் பார்த்து, வளர்ந்த வாழ்க்கையே இங்கே கதையாகியிருக்கக் கூடும் என்பதை வாசிக்கும் போது உணரமுடியும்.

செங்கேணி - ஆராயி காதல் வாழ்க்கையை வாசிக்கும் போது இப்படி ஒரு அருமையான காதல் வாழ்க்கை நமக்கு அமையுமா என்ற எண்ணம் மனசுக்குள் கண்டிப்பாக எழும். அதே சமயம் கொலைகாரனாய் நிற்பவன் மூளை பிசகியும் திரிவது பரிதாபத்தையும் வரவைக்கும்.

மரப்பாலம் கொடுத்த உணர்வை கறுப்பர் நகரம் கொடுத்ததா என்றால் அந்தளவுக்கு இல்லை என்றாலும் இது கொடுத்த உணர்வு வேறு விதமானது.

இந்நாவலில் செங்கேணியின் காதல் வாழ்க்கை மட்டுமே முதல் பாகத்திலும் அவன் அடிபடுதல், போலீசில் மாட்டுதல், கொலைகாரனாதல், வாழ்கையை முடித்துக் கொள்ளுதல் என ரணமான பகுதிகள் இரண்டாம் பாகத்திலும் நமக்குக் காட்சிப் படுத்தப் படுகின்றன.

பாரதி புத்தகாலயம் வெளியிட்டிருக்கும் இந்நூலின் விலை. ரூ. 200.

(பாரதி புத்தகலாயத்தின்  BOOKDAY.IN இணைய தளத்தில் வெளியான கட்டுரை)
-'பரிவை' சே.குமார்.

4 எண்ணங்கள்:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்லதொரு நூல் அறிமுகம். சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள் குமார். பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்லதொரு விமர்சனம் குமார்...

ஸ்ரீராம். சொன்னது…

செங்கேணி வீடு திரும்பும்போது குடிசைக்குள் என்ன பார்த்தான் என்பதை எழுதி இருக்கலாம்.  துரோகம்?

நல்லதொரு விமர்சனம்.

Bhanumathy Venkateswaran சொன்னது…

நீங்கள் எத்தனை ஈடுபாட்டோடு இந்த நாவலை படித்திருக்கிறீர்கள் என்பது உங்கள் விமர்சனத்தில் தெரிகிறது. நல்லதொரு விமர்சனம்.