அழகான, அபூர்வமான உணர்வுகளுக்கு நம்ம ரசிகர்கள் எப்போதுமே கை கொடுத்திருக்கிறார்கள். இந்தப் படம் மூலம் நான் எடுத்து வைக்கும் விஷயங்களும் அப்படித்தான். எனக்கு எந்த டிரெண்டுக்கும் ஏற்றால் போல் திரைக்கதை செய்யும் வித்தை தெரியும். அதன் மூலம் இந்த காலத்து ரசிகர்களையும் எனக்கு கவர தெரியும்.' ஒவ்வொரு வார்த்தையிலும் அனுபவம் கலந்து பேசுகிறார் இயக்குநர் ஆர்.சுந்தரராஜன். எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் மறக்க முடியாத வெற்றிப்படங்களை கொடுத்த இவர் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பின் "சித்திரையில் நிலாச்சோறு' படத்தின் மூலம் இயக்கத்துக்கு திரும்பியிருக்கிறார்...
அதென்ன 'சித்திரையில் நிலாச்சோறு'...?
"பர்கர்', "பீட்சா'ன்னு நம்ம உணவு முறைகள் வழி மாறி போய் விட்டது. மாம்பலத்துக்கு வழி கேட்டா, இண்டர்நெட் திறந்து சென்னை மேப் பார்க்கிற தலைமுறை உருவாகி விட்டது. ஒரு விதத்தில் இவர்களை நினைத்தால் பயமாகவும் இருக்கிறது. இவர்களுக்கெல்லாம் புத்தி சொல்லி, திருத்தி வழி முறைகள் சொல்லி தருகிற தலைமுறையும் இப்போது இல்லை.
அன்பும் அரவணைப்பும் இப்போது பலரிடம் இல்லை. இது மாதிரியான காலக் கட்டத்துக்கான படமாக என் படம் இருக்கும். சித்திரை மாதத்து பௌர்ணமி நிலா வெளிச்சத்தில் சாப்பிடும் சோற்றுக்கு நிலாச்சோறு என்று பெயர். இப்போதும் பழமை மாறாத சில கிராமங்களில் நிலாச்சோறு சாப்பிடும் மக்களை பார்க்கலாம். அது மாதிரியான ஒரு சித்திரை பௌர்ணமியில் நடக்கும் ஒரு சம்பவம்தான் இந்த கதை. அந்த சம்பவம், அதை தொடர்ந்து போகும் பரபரப்பு மிகுந்த திரைக்கதை என படத்தை எடுத்திருக்கிறேன். பணம் பாசத்தையும் தோற்கடிக்கும் என்பதுதான் படத்தின் ஒன் லைன். அம்மா இல்லாமல் வளரும் குழந்தையை அம்மாவாகவும் மாறி பார்த்துக் கொள்ளும் ஒரு தந்தையின் கண்ணீர். அந்த கண்ணீருக்கு அன்பை மட்டுமே கொடுத்து அப்பாவியாக நிற்கும் குழந்தையென சில உன்னத தருணங்கள் இதில் இருக்கிறது. புதுமுக ஹீரோ பிரகாஷ், வசுந்தரா, குழந்தை சாரா, பூமிகா, அபிதான்னு நிறைய நடிகர்கள் இதற்கு பக்க பலம்.
12 வருடங்களுக்குப் பின் சினிமா இயக்கும் வேலை கொஞ்சம் கஷ்டமாகவும் இருக்குமே... இத்தனை வருட இடைவெளிக்கு காரணம்....?
எல்லாவற்றுக்கும் காரணம் இருப்பதை போல, இதற்கும் காரணம் இருக்கிறது. ரசனை மிக்க படங்களை ரசிகர்களுக்கு தந்த பெருமிதம் எப்போதுமே எனக்கு உண்டு. படத்துக்கு படம் காமெடியை பலமாக வைத்திருப்பேன். காமெடி நடிகர் யாராவது துணைக்கு இருக்க வேண்டும். "பயணங்கள் முடிவதில்லை' "நான் பாடும் பாடல்', சமயங்களில் என் கூடவே இருந்தார் கவுண்டமணி. அவருக்கு ஷூட்டிங் இல்லாத சமயங்களில் கூட படப்பிடிப்பு தளத்துக்கு வந்து விடுவார். ""உங்களை கூப்பிடவே இல்லையே'' என்றால், ""வீட்டில் சும்மா இருக்க முடியவில்லை'' என்பார்.
அவருக்காகவே சீன் எழுதி படப்பிடிப்பு நடத்தியிருக்கிறேன். "பணம் பத்தும் செய்யும்' படத்தில் கவுண்டமணி ஹீரோவாகி விட்டார். அதன் பின் "கரகாட்டக்காரன்' வரை அவரை பிடிக்க முடியவில்லை. "குங்குமச்சிமிழ்', "அம்மன் கோவில் கிழக்காலே' படங்களில் கவுண்டமணி இல்லாத குறையை செந்திலை வைத்து நிறைவு செய்தேன். பின் அவரும் பிஸி. "ராஜாதி ராஜா' படத்தில் ஜனகராஜை கொண்டு வந்தேன். அவரும் பிஸி. "என் ஆசை மச்சான்', "திருமதி பழனிச்சாமி' படங்களில் நானே காமெடியனாக நடிக்க வேண்டிய கட்டாயம். அதை அப்படியே பின்பற்றி விட்டேன். இயக்குநராக படும் கஷ்டத்தை விட, நடித்து மற்ற இயக்குநர்களை கஷ்டப்படுத்தி விட்டேன். மற்றபடி இயக்கம்தான் எப்போதும் நம்ம ரூட்.
சுந்தர்ராஜன் - இளையராஜா கூட்டணி பாடல்கள் இப்போதும் ரசனைக்குரியதாக இருக்கிறது. இத்தனை வருடம் கழித்து அவருடன் சேர்ந்திருக்கும் அனுபவம் எப்படி...
இளையராஜா இல்லாமல் என்னால் படம் எடுக்க முடியாது. கோயம்புத்தூர் பக்கம் இருக்கும் நண்பர்கள்தான் இந்த படத்துக்கு தயாரிப்பாளர்கள். என் சினிமாவை நேசித்து, என்னிடம் கதை கேட்டு தயாரிக்க முன் வந்தார்கள். அப்போது அவர்களிடம் வைத்த ஒரே கோரிக்கை. ""இந்தப் படத்துக்கு நிச்சயம் இளையராஜா வேண்டும்'' என்பதுதான். அவர்களும் ஒப்புக் கொண்டார்கள். அவர் இல்லையென்றால் நிச்சயம் இந்த சினிமாவை எடுக்க வந்திருக்கவே மாட்டேன். படத்துக்கான முதல் பாடலை ஒளிப்பதிவு செய்து விட்டு ராஜா என்னிடம் கேட்டார். ""எப்படிய்யா வந்திருக்கு பாட்டு...'' "ஒரு மனிதன் திருமணம் செய்து கொண்டால் கணவனாகி விடுகிறான். பின் குழந்தைக்கு அப்பாவாக, பேரனுக்கு தாத்தாவாக எத்தனையோ நிலைக்கு மனிதன் போனாலும், நீ என்றைக்கும் இளையராஜாதான்...'' என்றேன். சின்ன சிரிப்பு சிரித்து விட்டு, அடுத்த பாட்டுக்கான கம்போஸிங்க்குக்கு போய் விட்டார். அதுதான் இளையராஜா.
சினிமா மாறி விட்டது... நாளுக்கு நாள் ஸ்டார் நடிகர்கள் சம்பளத்தை உயர்த்தி கேட்குறாங்க... இந்த மாதிரி நிலையில் உங்களை மாதிரியான ரைட்டர் இயக்குநர்களுக்கு இங்கு இடம் இருக்குமா...
சிவாஜி உச்சத்தில் இருந்த நேரத்தில் பாலசந்தர் அவருக்காக எடுத்த "எதிரொலி' அத்தனை பெரிய தோல்வி படமாக மாறிப் போனது. அடுத்தக் கட்டத்திலேயே நாகேஷுக்கு பத்து ஹிட் படங்களை கொடுக்கிறார் பாலசந்தர். அவரின் திரைக்கதைகளுக்கு நாகேஷ்தான் பொருத்தம். கோடம்பாக்கம் மேம்பாலம் கட்டாத காலத்தில் அந்த பக்கம் கார் போனாலே அது சினிமாக்காரனின் கார்தான் என்று சொல்வார்கள்.
ஒரு நாள் அந்தப் பக்கம் வந்த காரை மறித்து பிச்சைக் கேட்ட கிழவிக்கு காரின் உள்ளிருந்த ஒரு கை ஐந்து ரூபாய் பிச்சை போடுகிறது. அந்த கிழவி கருணை முகத்துடன் ""எம்.ஜி.ஆர். நல்லாயிருக்கணும்''னு வானத்தை நோக்கி வேண்டுகிறது. ஆனால் ஐந்து ரூபாய் பிச்சை போட்டவர் எஸ்.எஸ்.ஆர். இப்படி நடந்தவை எல்லாம் சினிமாவில் முரண்தான். ""உங்களுக்கு வயதாகி விட்டதே... இனி சினிமா சரி வருமா'' என்று ஒருவர் கேட்டார். அத்வானி, கலைஞர், பாரதிராஜா எல்லோருக்கும்தான் வயதாகி விட்டது. தயவு செய்து என்னிடம் மட்டும் அந்த கேள்வியை கேட்காதீங்க. 50 வயதுக்கு மேல் பெரியார் கடுமையான உழைத்தார். ஹாலிவுட் காரன் 60 வயதில் சிறந்த சினிமாக்களை உருவாக்குகிறான்.
அரசியல் பக்கம் இப்போது பார்க்க முடிவதில்லையே...
அந்த பக்கம் போனால்தானே பார்க்க முடியும். தனி ஈழம் அமைவதற்கான போராட்டக் குணத்தில் தீவிரமாக இருந்த காலம் அது. இப்போதும் அப்படித்தான் இருக்கிறேன். நடிகர் சங்க உண்ணாவிரதத்தில் தினமும் இரண்டு நிமிஷம் மௌனம் இருக்க சொல்லி ஒரு மாணவன் கேட்டுக் கொண்டான். அதை தொடர்ந்து செய்து வருகிறேன். இந்தப் படத்தில் கூட ஹீரோவுக்கு "முத்துக்குமார்' என பெயர் வைத்திருக்கிறேன். என் போராட்டம் எனக்குள் இருக்கிறது. அதை வைத்து விளம்பரங்கள் தேட நான் விரும்பவில்லை.
-நன்றி : தினமணி சினிமா எக்ஸ்பிரஸ்
-'பரிவை' சே.குமார்
3 எண்ணங்கள்:
வணக்கம்,குமார்!நலமா?///அனுபவம் பேசுகிறது.கை கொடுக்குமா பார்க்கலாம்!
ஆர் சுந்தர்ராஜன் பற்றி நானும் எழுதலாம்னு இருக்கேன்.
go0d
கருத்துரையிடுக