மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

தணியுமோ சா'தீ'...!


'சாதிகள் இல்லையடி பாப்பா...' என்று குழந்தைகளிடம் சொன்னான் பாரதி. ஆனால் நாம் பள்ளியில் சேர்க்கும் போதே என்ன சாதி என்று சேர்க்கை விவரக்குறிப்பில் எழுதிக் கொடுத்துவிட்டுத்தான் வகுப்பறைக்கு அனுப்புகிறோம். அங்கு பாரதி சொன்னான் என்று சொல்லிக் கொடுத்தாலும் நான் இன்னார்தான்... இந்தச் சாதிதான் என்பதை பள்ளிக்கூடம் அழகாகச் சொல்லிக் கொடுக்கிறது. அப்புறம் எப்படி சாதிகள் இல்லையடி பாப்பான்னு சொல்லி சாதி என்னும் தீய விதையை முளைக்காமல் செய்வது...?

சில வருடங்களுக்கு முன்னர் வரை கல்லூரிகளில் சாதிப்பற்றும் சாதீய அடிதடிகளும் கொடிகட்டிப் பறக்கும்... இப்போது குறைந்திருப்பது போல் தெரிகிறது.  எங்கள் கல்லூரி அன்று சாதி என்னும் சகதிக்குள்தான் கட்டிடங்களாய் நின்றது ஆனால் இன்று நிறைய மாற்றங்களைச் சந்தித்து சிறப்பான கல்லூரியாக உயர்ந்து நிற்கிறது.  நாங்கள் படிக்கும் போது அரிவாள் வெட்டுக்களும் அடிதடிகளும் நிறைந்திருந்தது. அடிதடிகளோ காலவரையற்ற கல்லூரி மூடலோ இல்லாத வருடம் எதுவுமேயில்லை என்று சொல்லலாம்.  அந்தளவுக்கு ஜாதீய மோதல்களும் நீ பெரியவனா... நான் பெரியவனா என்ற அடிதடி ஆட்டங்கள் நிறைந்திருக்கும். இன்று கல்லூரிக்குள் ஜாதீய தாக்கங்கள் குறைந்து இருப்பது போல் தெரிகிறது. தூரத்துப் பச்சை கண்ணுக்கு அழகாக இருக்கும் என்பார்கள். அது போல் இருக்கலாமோ என்று நினைத்தாலும் அன்றைக்கு இருந்த சூழலுக்கும் இன்றைய சூழலுக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதைக் காண முடிகிறது. மாற்றங்கள் நன்மையைக் கொடுத்தால் நல்லதே.

சா'தீ'.... இது இன்று உயிர்க்கொல்லும் விருட்சமாக நம் முன்னே நிற்கிறது. இதை முழுவதுமாக அழித்துவிடலாம் என்றெல்லாம் கனவுக்கோட்டை கட்ட முடியாது. ஏனென்றால் அன்று இருந்த சாதி வெறிக்கும் இன்றைய சாதி வெறிக்கும் நடுவில் ஏகப்பட்ட மாற்றங்கள்... அன்று பெரும்பாலும் அடிதடியில் முடிந்தது... இடைப்பட்ட காலங்களில் கொலை வாளினை எடடா என்று கவிஞன் சொன்னதை தப்பாக புரிந்து கொண்டு மாற்றி மாற்றி வெட்டிக் கொண்டார்கள். இன்று இன்னும் மேலே போய்விட்டார்கள். இந்த சாதியின் வெறி எந்தளவுக்கு முன்னேறியிருக்கிறது என்பதை சமீபத்திய தேர் எரிப்பு சம்பவம் சொல்லும். எப்படிப்பட்ட கொடுமை அது... இதற்கு மேல் என்ன செய்ய வேண்டும்.... சொல்லுங்கள்.

இந்த நிகழ்வுக்கு பின்னர் நடந்த நிகழ்வுகளை அனைவரும் அறிவோம். கவிஞர் பழனி பாரதி தனது முகநூல் பக்கத்தில் தீச்சுவாலையின் படமிட்டு 'தேர் எரிகிறதே... 
தேவி எங்கே போயிருக்கிறாள்..?' 
என்று எழுதியிந்தார். இங்கே சாமி இருக்கு... இல்லை என்ற இருபாலரும் பலவிதமான கருத்துக்களைப் பகிர்ந்திருந்தார்கள். அது குறித்து நான் பேசவரவில்லை... ஏனென்றால் நான் தீவிர சாமிப் பற்றுள்ளவன்... எனவே எது குறித்துப் பேசினாலும் சர்ச்சைதான்.... காரணம் இருக்கு என்று நினைப்பவன் வழியும் இல்லை என்று நினைப்பவன் வழியும் நன்றாகவே பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே இங்கு சாமி குறித்த விவாதத்திற்கு பயணப்பட விரும்பவில்லை...  நாம் பேச வந்தது சா'தீ' என்னும் கொடுர ஜ்வாலையைப் பற்றித்தான்... எனவே அதன் பின்னே செல்வோம். திரு. பழனி பாரதியின் கவிதையைப் படித்ததும் அதை வைத்தே நானும் கவிதை ஒன்றை நீளமாக எழுதினேன்... இன்னும் பதிவிடவில்லை...  
தேர் எரிகிறது...
தேவியும் எரிகிறாள்...
வெற்றியுடன் 
வேடிக்கை பார்த்துச்
சிரிக்கிறது 
சா'தீ'ச் சுவாலை... 
என்று ஆரம்பித்து இன்னும் சில சா'தீ'ய சாடல்களோடு முடித்திருக்கிறேன்.... இன்னும் கொஞ்சம் நெருப்பின் ஜ்வாலையைக் கூட்டினால் நல்லாயிருக்குமே என்பதால் அப்படியே வைத்துவிட்டேன். 

இந்தச் சா'தீ' எத்தனையோ உயிர்களைக் குடித்திருக்கிறது... இந்த சாதீய மோதலில் இவன் மட்டுமே அடிக்கிறான்... அவன் அடிவாங்கிக் கொண்டே இருக்கிறான் என்பதெல்லாம் சுத்தப் பொய்... இவனும் அடிக்கிறான்... அவனும் அடிக்கிறான்... சாதி என்னும் சகதியை இங்கே அம்புட்டுப் பயலும் சந்தனமாகத்தான் பூசிக் கொண்டு திரிகிறான். இவனுக்காக அவனை ஓட ஓட அடிக்கிறார்கள் என்பதெல்லாம் அரசியல்வாதிகள் அரசியல் நடத்த கட்டும் கதைகள்... அதை நம்பி அவனுக பின்னால் போய் பாதாளத்துக்குள் விழுந்து சாகிறார்கள் பரிதாபத்துக்குரிய சாதி ஆடுகள். என்ன செய்வது... இங்கே படிப்பு கற்றுக் கொடுப்பதைவிட சாதி கற்றுக் கொடுப்பதே பெரிதாகத் தெரிகிறது.

இவன்... அவன்... என்ற வாசகங்கள் குறிப்பிட்ட சாதிக்கானது அல்ல... எல்லாச் சாதியினருக்கும்தான்... ஒரு இடத்தில் இந்த ரெண்டு சாதிக்காரணும் அடித்துக் கொள்கிறான் என்றால் மற்றொரு இடத்தில் அந்த ரெண்டு சாதிக்காரனும் அடிச்சிக்கிறான். ஆக இது எல்லா இடத்திலும் மாறி மாறி நடந்து கொண்டுதான் இருக்கிறது. இலக்கியம் வளர்க்கலாம் வாருங்கள் என்று அழைத்தால்  நாமோ சா'தீ'யைத் தூக்கி சட்டையாக அணிந்து கொண்டு ஆங்காங்கே இயக்கம் வளர்த்துக் கொண்டிருக்கிறோம். அரசியல் கட்சிகள் சா'தீ'யை வைத்து தங்கள் பொழப்பை நடத்திக் கொண்டிருக்கின்றன. அதிலும் இன்றைய தமிழக அரசியல்.... அய்யோ... சாக்கடையிலும் கேடுகெட்ட சாக்கடையாகிவிட்டது.... இப்ப அரசியல்வாதிகள் எல்லாருமே எப்படியாவது கட்சி நடத்தணுமின்னு நினைக்கிறானுங்க... செத்த வீட்ல பொணத்தைப் போட்டுக்கிட்டு அரசியல் நடத்துறானுங்க... இதைவிட கேவலம் என்ன இருக்கு..? சாதி ஒரு பக்கம் அழிவைக் கொடுத்தால் தமிழக அரசியல் ஒரு பக்கம் அழிவை நோக்கி பயணிக்க வைத்துக்  கொண்டிருக்கிறது.

சாதி மோதலால் தேரோட்டங்களும், திருவிழாக்களும் நிறைய இடங்களில் நிறுத்தப்பட்டுவிட்டன. இனி இந்த மோதல்கள் குறைந்து எல்லோரும் ஒன்றாகி திருவிழாக்கள் நடப்பது என்பது அரிது. தேரோட்டங்களை எல்லாம் நம் தலைமுறைக்குப் பின்னர் வரும் தலைமுறை காண்பதரிது... வேண்டுமென்றால் வரும் காலங்களில் எல்லா ஊரிலும் சாதித் தேர்களை ஓட்டுவார்கள்... கண்டு ரசிக்கலாம்... ஆனால் அதிலும் ஒரு பிரச்சினை இருக்கு... எந்தச் சாதிக்காரன் நடத்துகிறானோ அவன் சாதியினர் மட்டுமே கலந்துக்க முடியும்... மற்ற சாதிக்காரன் கலந்துக்க முடியாது... அப்படி போனார்கள் என்றால் ரத்தக் களறிதான்... அடிதடிதான்... அங்கே தூண்டி முள்ளில் புழுவை மாட்டி தண்ணிக்குள் போட்டுவிட்டு மீனுக்காக காத்திருக்கும் நிலையில் இருக்கும் அரசியல்வாதிகள் மைக் பிடித்து அரசியல் பண்ண ஒரு சிறந்த களமாகத்தான் அது இருக்கும். இதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்றால் வீடுகளில் வீடியோ கேமில் தேர் ஓட்டி மகிழலாம்.

என்னைப் பொறுத்தவரை இந்த சாதி, சவக்காரம் எல்லாம் பார்ப்பதில்லை... எனக்கும் சாதி இருக்கு... அதன் மீது பற்றும் இருக்கு... ஆனால் அடுத்தவனை அடித்து மிருக மனம் கொண்டு அலையும் அளவுக்கு பற்றில்லை... என்னைப் பொருத்தவரை எல்லோரும் ஓர் இனம்... எல்லோரும் ஓர் குலம்தான்... படிக்கும் காலத்தில் எங்கப்பா நாம இந்தச் சாமி கும்பிடுறவங்க... அவங்க வீட்ல எல்லாம் சாப்பிடக்கூடாது என்று கத்திக் கொண்டுதான் இருப்பார். ஆனால் நான் மூன்று வேலையும் என் நண்பன் வீட்டில் சாப்பிட்டுவிட்டு வருவேன். அந்தத் தாயின் அன்பின் முன்னால் எனக்கு அவர்களின் சாதி சிறுமையாகவோ என் சாதி பெரிதாகவோ தெரிவதில்லை.  படிப்பறிவில்லை என்றாலும் அந்தப் பாசத்துக்கு முன்னே எல்லாமே பொடிப்பொடியாகிவிடும். என்னைப் பற்றி என் நண்பனுக்குத் தெரியும்... அவனைப் பற்றி எனக்குத் தெரியும்... இந்தப் பாசமும் அன்பும் இன்றும் எங்களுக்குள் தொடர்கிறது. 

திருமணத்திற்குப் பிறகு 'என்னங்க அவங்க வீட்ல சாப்பிட்டுக்கிட்டு... நம்ம சாதி சனம் என்ன சொல்லும்...?' அப்படின்னு சொல்ற மனைவி அமைந்திருந்தால்... ஒருவேளை மனைவி சொல்லே மந்திரம் என்னும் வாக்கைப் பிடித்துக் கொண்டு நானும் மாறியிருக்கலாம்.... 'இல்லை அப்படித்தான் சாப்பிடுவேன் இப்ப என்ன உனக்கு...' என சண்டையும் இட்டிருக்கலாம். எப்படி என்றாலும் தலையணை மந்திரம்தானே ஜெயிக்கும்... ஆனால் என்னவள்... எனக்கு வாய்த்தவள் அப்படி அல்ல... என்னைப் போலவே.... இன்றும் அண்ணன் வீட்டுக்கு போனேன் அங்கயே சாப்பிட்டுட்டு வந்துட்டேன் என்று சொல்வார். இதைவிட வேறென்ன வேண்டும். எங்களுக்கும் சா'தீ'ச் சுவாலை எல்லாம் இல்லை...  உறவுகளின் உன்னதம் மட்டுமே இருக்கிறது.

நண்பர் நாடோடி இலக்கியன், அவரின் நண்பர் ஒருவர் 'எல்லாச் சாதிக்காரர்கள் வீட்டிலும் சாப்பிடுவியா?' எனக் கேட்ட கேள்விக்கு சொன்ன பதிலை முகநூலில் பகிர்ந்திருந்தார்.  'கண்டிப்பா, ஆனா ஒரே ஒரு கண்டிஷன் தான். சாப்பாடு நாக்குக்கு சொரணையா இருக்கணும். இல்லீன்னா நான் சார்ந்த சாதியுமே எனக்கு ஆகாதுன்னேன்' என்று சொல்லியிருந்தார். நானும் இந்தச் சாதிக்காரந்தான்... ஆம் சாப்பாட்டுச் சாதி...  சாதியையும் மதத்தையும் தூக்கிச் சுமந்து என்னைத் அள்ளிக்கிட்டுப் போகப்போறோம். மறைந்த நம் ஐயா கலாம் அவர்கள் மதத்தையோ சாதியையோ தூக்கிக்கிட்டு திரியவில்லை... மாறாக மனிதத்தை அரவணைத்தார்... அவர் இறந்த அன்று சாதி, மதம் எல்லாம் முன்னுக்கு வராமல் பின்னால் நிற்க, மனிதம் மட்டுமே முன்னுக்கு வந்தது... அதுவே கண்ணீர் சிந்தியது... அதுதான்... அதுமட்டும்தானே அய்யா வேணும்... மனுசன் இறந்தப்போ இவன் சாதிமானுய்யா என்று சொல்வதைவிட... மனுசன்யா என்று நாலுபேர் சொல்ல வேண்டும்... சில துளிகள் கண்ணீர் விழ வேண்டும்... அதுதான் வாழ்ந்ததற்கான அடையாளம்.

இன்றைய நிலையில் சாதியை முழுவதுமாக ஒழித்து விடலாம் என்று நம்புவது முட்டாள்தனம்... ஏனென்றால் அது விருட்சமாகி விண்ணைத் தொட்டுவிட்டது. அழிப்பது என்பது ஆகாயத்தில் கோட்டை கட்டுவது போல்தான்.... யாராலும் அழிக்க முடியாது... நம்மளாலே சாராயக்கடையையே மூட முடியலையே... அம்மா... அம்மான்னு கத்துனாலும் அது சும்மா போய்க்கிட்டே இருக்கே... அப்புறம் எப்படி சாதியை ஒழிக்கிறது...இதுல என்ன கூத்துன்னா சாராயக்கடையை ஒழிக்கணுமின்னு கத்துற எந்த அரசியல்வாதியும் சாதியை ஒழிக்கணுமின்னு கத்த மாட்டான். ஏன்னா சாதி ஒழிந்தால் சாதிக்கட்சிகளுக்கு வேலை இல்லையே... அந்த நாதாரிங்க பொழப்பே இதை வச்சித்தானே ஓடுது. 

சாதிக்கட்சி என்றதும் எப்படி நீ எழுதலாம் என்று கேட்க ஆட்கள் இருக்கும் ஏன்னா சாதிக்கட்சிகள்ல சிலது மட்டுமே தனித்து தெரிகின்ற காரணத்தால் எதிர்ப்பதற்கு ஆள் இருக்கும். இங்க ஒண்ணு சொல்லிக்கிறேன் எல்லாச் சாதிக்கும் கட்சியிருக்கு... கொடியும் இருக்கு என்பதை யாரும் மறுக்க முடியாது. ஏன் என்னோட சாதிக்கும் ஒரு கட்சி இருக்கு... ஒரு கொடியிருக்கு... ஏன் தலைவர் கூட இருக்காரு... தேர்தலுக்கு தேர்தல் தவறாம போட்டியும் போடுவாரு... ஆனா சாதிக்காரப்பய எவனும் ஓட்டுமட்டும் போடமாட்டான்... இது எல்லாச் சாதியிலயும் நடக்குறதுதான்... இல்லையின்னாத்தான் இன்னேரம் சாதிக் கட்சி தலைவரெல்லாம் முதல்வராயிருப்பானுங்களே...

இந்த முகநூல்ல நடக்குற கூத்து அதைவிட, தன்னோட சாதி குறித்தான பதிவுகளுக்கும். சாதிக் கட்சி தலைவர் குறித்த தம்பட்டங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க பல நண்பர்கள் இருக்கிறார்கள். சாதி, சாதி என குழு சேர்த்துக் கொண்டு அவர்கள் செய்யும் கூத்து இருக்கே. அப்பப்பா... என்னைக்கு மார்க் கதவை இழுத்து மூடப் போறான்னு தெரியலை.... சாதி பேசியே சில இலக்கியங்கள் எழுதிய சிவக்குமாரை ஓட வைத்ததை நாம் அறிவோம். எழுத்தாளர் பெருமாள் முருகனின் நாவல் பிரச்சினையில் அங்கே சாதி சந்தி சிரித்தது. இப்ப பேருக்கு பின்னால படித்தபடிப்பு போல சாதி வேற... சாதிச் சண்டைகள் நேரும் போதெல்ல்லாம் படிப்பறிவு இல்லாதவனுக சாதியை தூக்கிக்கிட்டு அலையுறானுங்கன்னு சொல்லுவாங்க.... ஆனா இப்ப படிச்சவன்தாய்யா சாதியை தூக்கிக்கிட்டு அலையுறான்...  ஒருத்தன் பிரபலமாயிட்டா அவன் என்ன சாதியின்னு தேடி எடுத்து எங்கள் சிங்கம்ன்னு போடுறானுங்க... இந்த முகநூல் இலக்கியம் வளர்க்குதோ இல்லையோ.... சாதியை சத்தமில்லாமல் வளர்க்கிறது.

அதே போல இப்ப ஊரில் நல்லது கெட்டது எல்லாத்துக்கும் பிளக்ஸ் அடிக்கிறானுங்க... முன்னெல்லாம் சாதாரணமா அடிக்கப்பட்ட பிளக்ஸ், பின்னர் நடிகர், அரசியல் தலைவர்களைத் தாங்கி வந்தது. குறிப்பா நாலு வரியின்னாலும் நல்ல வாசகங்கள் அடங்கியிருக்கும். ஆனா இப்பொழுது அடிக்கும் பிளக்ஸ்களில் சாதித் தலைவர் ஒரு பக்கம் சிரிக்க... சாதி நடிகர் ஒரு பக்கம் சிரிக்கிறார்...இடையில் 'இது .......... கோட்டை' என்று ஆரம்பித்து (புள்ளிகள் வைத்த இடத்தில் சாதி ஜொலிக்கும்)  அடேய்... உடேயின்னு வசனம். அப்புறம் பேருக்கு பின்னால புதிதாய் சாதி வேறு... இதெல்லாம் நல்லதுக்குதானா என்றால் இல்லைவே இல்லை என்று அடித்துச் சொல்லலாம்... சாதியை வளர்க்கும் செயல் இது... இதுதான் அடிதடிகளுக்கும் வெட்டுக் குத்துக்களுக்குமான ஆரம்பப்படி... ஆம் இவன் வைக்க, இதற்கு எதிராக அவன் வைக்க... இவன் தலைவனை அவன் கேவலப்படுத்த... அவன் தலைவனை இவன் கேவலப்படுத்த... அப்புறம் என்ன தலைவர்கள் பிளக்ஸில் சிரிப்பார்கள்... வைத்தவனின் பிள்ளைகள் பிணத்தில் விழுந்து அழுவார்கள்.

எங்க ஊரில் இந்த முறை திருவிழாவிற்கு படிக்கும் பையன்கள் வைத்திருந்த பேனரில் எல்லாம் சாதியும் அது சார்ந்த வசனங்களும்... அதில் வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் ஒரு போஸ்டரில் சூப்பர் ஸ்டாராக நினைக்கும் பிரபல நடிகரும் பக்கத்துப் போஸ்டரில் திறமையான இயக்குநராய் அறிமுகமாகி நடிகராய் ஜொலிப்பவரும் சிரித்துக் கொண்டிருந்தார்கள். நாங்களெல்லாம் ஏன்டா சாதி அது இதுன்னு அடிச்சி வச்சிருக்கீங்க... தேவையில்லாத வேலை எதுக்குன்னு பேசிக்கிட்டு இருந்தோம். அப்போ அங்கு வேகமாக வந்த எங்க ஊர்க்காரர் ஒருவர் பிரபலத்தையும் இயக்குநரையும் மாறி மாறிப் பார்த்தார். இயக்குநரைக் கைகாட்டி அவன் நம்மாளு... நம்ம சாதிக்காரன்... அவனைப் போட்டீங்க... ரைட்டு... அப்படின்னு சொல்லிட்டு பிரபலத்தை கைகாட்டி இவன் இந்தச் சாதிக்காரன்... இவனை எதுக்கு இதுல போட்டீங்க... அதும் இது எங்க.... கோட்டையின்னு போட்டு இவன் படமா...? என்றாரே பார்க்கலாம்.  இந்தச் சாதி நடிகர்களைக் கூட சாதியை வைத்துப் பிரித்துப் பார்க்கச் சொல்கிறதே... சாதியை ஒழிப்போம் என்று நினைத்தால் இவர்கள் சாதி விளக்குக்கு சரக்கு ஊற்றுகிறார்களே என்ற வருத்தம்தான் மேலிட்டது.

இதுல இன்னொரு கூத்து, பட்டிமன்றம் பேச வந்த படித்தவர்கள் வரும்போதே கோவிலுக்கு அருகே இருந்த பிளக்ஸ் எல்லாம் பார்த்து படிச்சாச்சு... மேடையில் பேசும்போது கைதட்டலுக்காகவும் சில சில்லூண்டிகளின் விசில் சத்தத்துக்காகவும் இவர் உங்கள் சாதியில் பிறந்தார்... அவர் உங்கள் சாதியில் பிறந்தார்... உங்க சாதிக்காரங்க ரொம்ப நல்லவங்கன்னு பேசினார்கள். என்ன உலகம் இது... படித்தவர்கள் இடத்திற்குத் தகுந்தாற்போல் சாதி பேசுவதால் கிடைக்கும் கைதட்டலுக்கு மயங்கலாமா? அது கொடுக்கும் அற்ப சந்தோசம் மட்டும் போதுமா? சாதியை ஒழிப்போம் என்று சொல்லிக் கொண்டு எல்லா இடத்திலும் வளர்க்கும் விதமாக அதை ஒலிக்கலாமா..? 

சரிங்க... பேசினா பேசிக்கிட்டே போகலாம்... சா'தீ' இன்னும் எரித்துக் கொண்டேதான் இருக்கும்... குப்பை மேடு முதல் கோவில் வரை எரிக்கத்தான் செய்யும்... உயிர்களைக் கொன்று உள்ளம் குளிர அதில் சந்தோஷம் கொண்டு சதிராடும். சா'தீ'யை ஒழிப்போம் என்றெல்லாம் சூளுரைக்க வேண்டாம். எத்தனை பெரியார் வந்தாலும் திருந்த மாட்டீங்கடான்னு நாம வசனம் எல்லாம் பேசவேண்டாம்.  தாமாக திருந்தாத ஜென்மங்களைத் திருத்த பெரியார் எதற்கு வரவேண்டும். அப்படி வந்தால் அவரையும் சாதிக்குள் கொண்டு வந்து வைத்து அழகு பார்ப்பார்கள் இன்றைய சா'தீ'யவாதிகள். ஏனென்றால்  தேவர், அழகு முத்து, அம்பேத்கார் ஏன் கப்பலோட்டிய தமிழன் வ.ஊ.சி, சாதிகள் இல்லையடி பாப்பா என்று சொன்ன பாரதி என எல்லோரையும் ஒவ்வொரு சாதியும் தூக்கி வைத்துக் கொண்டிருக்கும் போது புதிதாக நம் நாட்டாராக இருந்த காமராஜைக் கூட ஒரு சமூகம் தங்கள் தலைவன் என்று கொண்டாட ஆரம்பித்துவிட்டது. எம் மக்கள் என அனைத்து மக்களுக்காகவும் போராடியவர்கள் எல்லாரும் ஏதோ சாதிக்காக சாதிக்க வந்தவர்கள் போன்ற மாயைக்குள் சாமிகளாக ஆக்கப்பட்டு அவரகள் வாழ்ந்த உன்னத வாழ்க்கை சாதிமான்களால் மறைக்கப்பட்டு வருகிறது என்பது வருத்தமான விஷயம்..

நாம் சா'தீ'யை ஒழிக்க வேண்டாம்... அதன் எரியும் நாக்கில் எண்ணெய் வார்க்காது இருப்போம்... அப்படியாவது அதன் ஜ்வாலை கட்டுக்குள் வருகிறதா எனப் பார்ப்போம்.  சாதிகள் இல்லையடி பாப்பா... என்ற பாரதியின் பாட்டை குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்போம்... சாதி ஒழிய அல்ல... முண்டாசுக் கவிஞனை நம் சந்ததி மறக்காமல் இருக்க... அதே நேரம் 
'சாதிகள் இருக்குதடி பாப்பா... 
ஆனால் சாதிச் சண்டைகள் இல்லையடி பாப்பா... 
ஆயிரம் சாதிக்குள்ளும் அன்பு நிறைந்திருக்குதடி பாப்பா' 
என்று பாட வைப்போம்.

'எல்லோரும் ஓர் குலம்... எல்லோரும் ஓர் இனம்' என்று வாழப் பழகுவோம். நாளைய உலகமாவது சாதிச் சண்டைகள் இல்லாத உலகமாக மாறட்டும்...


-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

பழிக்குப் பழி..?


ழிக்குப் பழி வாங்குவது என்பது சின்ன வயதுப்  பிள்ளைகளிடம் இருக்கும் செயல்... 'நீ என்னை அடிச்சிட்டியா... நானும் உன்னை அடிக்கிறேனா இல்லையா பாரு' என்று சவால் விட்டு அவனையோ அல்லது அவளையோ திருப்பி அடித்தால்தான் ஓய்வார்கள். இது சின்ன வயதில் மனதிற்குள் தோன்றும் வன்மம். இந்தப் பழிக்குப் பழி ரொம்ப நேரம் நீடிக்காது. அடித்துக் கொண்டு புரண்டாலும் உடம்பில் ஒட்டிய மண்ணைத் துடைக்கும் நேரத்திற்குள் மீண்டும் நட்பாகி சந்தோஷமாக விளையாட ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் இதே பழி வாங்கும் எண்ணம் பெரியவர்களிடம் வரும் போது அது கொலையில் முடிந்து தீராப் பகையில் கொண்டு போய் விட்டு விடுவதுடன் தொடர் கொலைகளுக்கு ஆரம்பப்புள்ளி ஆகிறது.

'என்னோட எதிரி அவன்... ரொம்ப சந்தோஷமா... நல்லாயிருக்கானே... நல்லா இருக்கலாமா... கூடவே கூடாது' என்று நினைத்து அவனைப் பற்றி அவனுக்கு நெருக்கமானவர்களிடம் போட்டு விட்டு அவர்கள் அடித்துக் கொள்வதைப் பார்த்து சந்தோஷம் அடையும் குரூரப் புத்தி கொண்டவன் தனது எதிரியை மறைமுகமாக பழி வாங்கி விட்டோம் என்று மனசுக்குள் சந்தோஷப்பட்டுக் கொள்வான்.  ஆனால் அவனது சந்தோஷம் நீடிக்குமா என்றால் அதுதான் இல்லை... இவனால் பாதிக்கப்பட்டவனுக்கு எப்படியும் இதற்கெல்லாம் காரணம் யார் என்று தெரியவரும் போது  அவன் இவனைப் பழி வாங்கக் காத்திருந்து அதற்கான நேரம் சரியாக அமையும் பட்சத்தில் அதை கச்சிதமாகச் செய்து முடிப்பான்.  இந்தப் பழிவாங்கும் நடவடிக்கை இருவரின் குடும்பத்துக்குள்ளும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

இப்ப எதுக்கு இதைச் சொல்ல வாறேன்னா ரெண்டு நாளைக்கு முன்னால மனசின் பக்கத்துல ரெண்டு வக்கீலு கொம்பன் படத்தின் நாயகன் எஞ்சாதி... ஓஞ்சாதியின்னு பொஞ்சாதிக்கு அடிச்சிக்கிட்ட மாதிரி அடிச்சிக்கிட்டு படிச்ச நாதாரிங்க போட்ட சண்டையில ஒருத்தன் செத்துட்டான்னு சொல்லியிருந்தேன் இல்லையா... கொன்னவன் ஜெயிலுக்குப் பொயிட்டான்... கொஞ்ச நாள்ல ஜாமீன்ல வருவான்... அவனை நாங்க போடுவோம்ன்னு செத்தவனோட குடும்பம் இப்பவே சொல்லிக்கிட்டு இருக்கு...  அவன் எப்ப வந்தாலும் சொன்னபடி அவனைப் போடுவானுங்க... அப்புறம் அவனோட ஆளு இவங்கள்ல ஒருத்தரைப் போடுவாங்க... அப்புறம் இவங்க அங்க ஒருத்தரை... இப்படி பழிக்குப் பழி தலைமுறை தலைமுறையாத் தொடரத்தான் செய்யும்... பகை வளர்க்கும் பகை இது. இது பத்தையில நெருப்பை வச்ச மாதிரி... எல்லாப் பக்கமும் பிடித்து எரியாமல் விடாது.

எனக்குத் தெரிந்த ஒரு அம்மா, ரொம்ப பணக்காரக் குடும்பமெல்லாம் கிடையாது... கஷ்டப்பட்டவங்கதான்... அவங்களோட மகன் தன்னோட மனைவியுடன் சண்டை போடுவதையே வாடிக்கையாக வைத்திருப்பான் போல...  இந்த அம்மாவும் வாயை வச்சிக்கிட்டு சும்மா இருக்காது போல... புருஷன் பொண்டாட்டி சண்டையின்னா அவங்க கத்திட்டு சமாதானம் ஆயிருவாங்கன்னு போக வண்டியதுதானே... அதை விட்டுட்டு அப்பத்தான் மாமியாருங்கிற பவுசைக் காட்டும் போல... அவன் அடிக்கும் போதெல்லாம் நல்லா போடுடான்னு சொல்லி அவனை ஏத்திவிடும் போல... ஒரு சில நாட்களில் அவளை வெட்டுடான்னு ஏத்திவிடுவாக போல... ஒரு நாலைஞ்சு மாசத்துக்கு முன்னால பொண்டாட்டி கூட சண்டை போட்டிருக்கான்... சண்டை  ரொம்ப வலுத்துப் போக, சண்டாளன் கோவத்துல பொண்டாட்டியை வெட்டிக் கூறு போட்டுட்டான். அவனையும் கொலை செய்யத் தூண்டிய அம்மாவையும் அதற்கு உடந்தையாக இருந்த அண்ணன் பொண்டாட்டியையும் தூக்கி உள்ள போட்டுட்டாங்க.

அந்தப் பொண்ணோட பொறந்தவனுங்க உன்னை பழிக்குப் பழி வாங்காம விடமாட்டோம்டான்னு ஒரு வெறியோட திரிஞ்சிருக்கானுக. ஜெயில்ல இருந்து மூணு பேரும் ஜாமீன்ல வந்துட்டாங்கன்னு தெரிஞ்சதும் காரியத்தை முடிக்க காலநேரம் பாத்துக்கிட்டு இருந்திருக்கானுக... சில நாளுக்கு முன்னால கோர்ட்டுக்கு கையெழுத்துப் போடப் போயிருக்காங்க இவங்க நேரம் கலாம் ஐயா செத்ததால அரசாங்கம் விடுமுறை விட்டிருச்சு. உடனே அண்ணன் பொண்டாட்டி அப்பன் வீட்டுக்குப் போக, ஆத்தாளும் மகனும் பஸ் ஏறி மக வீட்டுக்குப் போயிருக்காங்க... தங்களோட உடன்பிறப்பை சாகக் கொடுத்தவனுங்க ஏற்பாடு பண்ணுன ஆளுங்க வழியில பஸ்ஸை மறித்து எல்லோரையும் இறங்கச் சொல்லிவிட்டு பஸ்ஸூக்குள்ள வச்சே ஆத்தாளையும் மகனையும் அரிவாளால் ஆய்ந்து போட்டுட்டு பொயிட்டானுங்க. பழிக்குப் பழி வாங்கிட்டோம்ன்னு சந்தோஷப்பட்டுகிட்டாலும் ஒரு வயதான பொம்பளையை வெட்டிச் சாய்க்க எப்படி மனது வந்தது? பாவம் கையெடுத்துக் கும்பிட்டிருக்கும் போல கையில வெட்டியிருகானுக... ஒரு பத்துப் பதினைந்து போட்டோவை மச்சான் வாட்ஸ் அப்பில் அனுப்பியிருந்தான்... கொடூரம்ன்னா கொடூரம் அம்புட்டுக் கொடூரம்... பாக்க முடியாம அப்பவே அழிச்சிட்டேன். இந்த பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கையால் யாருக்கு லாபம்? இவங்களை வெட்டியவனின் சாவு எந்த விதத்தில் அமையும்..? எவனோ ஒருத்தன் அவனை வெட்டுவான்? இப்படித்தானே மாறி மாறி போய்க் கொண்டிருக்கும். பழி வாங்குவதால் ஒரு பிரயோசனும் இல்லை என்பதை ஏன் நாம் உணருவதில்லை..?

'உன்னை நான் பழிக்குப் பழி வாங்குறேனா இல்லையா பார்' என்று சண்டையில் பேசிக் கொண்டாலும் அதை எல்லாம் மறந்து வாழும் சிறுவர்கள் உலகமே சிறப்பானது. அது கள்ளங் கபடமில்லாதது. அடித்து உருண்டு ஒருவர் முகத்தில் ஒருவர் நகத்தால் கீறிக் கொண்டாலும் 'பார்றா நீ கீறுனதை... ' என்று ஒருவருக்கு ஒருவர் காட்டிக் கொள்வதில் ஆகட்டும்... 'சரிடா... இனி அப்படிச் செய்ய மாட்டேன்' என்று சொல்லி அணைத்துக் கொள்வதில் ஆகட்டும்.... அவர்களின் முன்னே பத்து நிமிடம் கூட வாழாத பழிக்குப் பழி என்னும் சொல் பழி வாங்கப்படுகிறது. பெரியவர்கள் மத்தியில் அந்தச் சொல்லுக்கு பலம் சேர்க்கப்படுகிறதே தவிர அதை தூக்கி எறிய நினைப்பதில்லை. அந்தச் சொல்லை அங்காளி பங்காளி எல்லாம் எண்ணெய் ஊற்றி வளர்க்கத்தான் செய்வார்களே தவிர யாரும் அதை விட்டுத் தள்ளுன்னு சொல்றது இல்லை.

பழி வாங்கும் எண்ணம் மனசுக்குள் வந்தாலே அந்த வன்மம் வளர்ந்து வளர்ந்து... மிகப் பெரிய விருட்சமாகிறது. அந்த விருட்சம் விழுதுகளைப் பற்றி கவலைப்படுவதில்லை... எனக்கு இப்ப வேண்டியது அவனை எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்பது மட்டுமே என்ற எண்ணத்தின் உந்துதலே மிகப்பெரிய தவறுகளைச் செய்ய வைக்கிறது. அதனால் ஒருவன் பாதிக்கப்படுகிறான்... மற்றொருவன் வாழ்க்கை இழக்கிறான் என்பதுடன் முடிவதில்லை... அதன் பிறகான நாட்களில் அவர்களின் வாரிசுகளும் தங்களின் வாழ்வின் வசந்தத்தை இழக்கிறார்கள் என்பதை யாரும் நினைப்பதில்லை. அந்த நேரத்தில்  என்ன நினைக்கிறார்களோ அது நடக்க வேண்டும் அவ்வளவே. ஆனால் வாழ்க்கை...?

இந்தப் பழிவாங்கல் மனிதர்களிடம் மட்டுமல்ல... ஐந்தறிவு ஜீவன்களிடமும் இருக்கத்தான் செய்கிறது. நாங்கள் பள்ளியில் படிக்கும் போது எங்க மாமாவின் தோட்டத்தை லீசுக்கு எடுத்து அப்பா பார்த்துக் கொண்டிருந்தார். எங்கள் தோட்டத்தைத் தாண்டி உறவினர் ஒருவரின் தோட்டம்... அவரும் தினமும் அந்த வழியாகத்தான் போவார். ஒருநாள் போகும் போது நல்லபாம்பு ஒன்று குறுக்கே நிற்க, இவரும் அதை அடித்து விட்டார். அடிபட்ட பாம்பு குடல் வெளியில் தெரிய அருகில் இருந்த புதருக்குள் புகுந்து விட்டது. தேடிப்பார்த்தார்... மற்றவர்களும் தேடினார்கள்... கண்டு பிடிக்க முடியவில்லை. சரி இந்தளவுக்கு அடிபட்டது எங்கிட்டு பொழைக்கப் போகுதுன்னு பொயிட்டாங்க... ஆனா பாருங்க... மறுநாள் அதே இடத்துல செடிகளுக்கு மத்தியில் வயித்தை இழுத்துக்கிட்டு அவருக்காக வந்து கிடக்குது அந்தப் பாம்பு.. ஆனா அதால ஓடிவந்தெல்லாம் அவரையோ அல்லது மற்றவர்களையோ கொத்த முடியாத நிலை. 'ஷ்ஷ்.. ஷ்ஷ்...'ன்னு தலையைத் தூக்கிக்கிட்டு காத்திருக்கு... அவரு அந்த வழியா போனப்போ அதைப் பார்த்துட்டாரு... சரிதான் நமக்காகத்தான் காத்திருக்குன்னு எங்க வீட்ல கம்பு வாங்கி அதை அடித்து பால், காசு, அரிசி எல்லாம் போட்டு புதைச்சாங்க.

சரி விஷயத்துக்கு வருவோம்... எந்த விஷயத்துக்காகவும் யாரையும் பழி வாங்க நினைக்க வேண்டாம். கெடுவான் கேடு நினைப்பான் என்பது போல நமக்கு ஒருத்தன் கெடுதல் நினைத்தாலும்... அதைச் செய்தாலும் நாம் நம் பாதையில் பயணித்தால் எவன் நமக்கு கேடு நினைத்தானோ அவன் அதை அனுபவித்துக் கொண்டிருப்பான்... கொலை செய்தவனைப் பழி வாங்குவதால் என்ன லாபம்... அவன் இருந்து அணு அணுவாக சித்ரவதை அனுபவித்து தான் செய்த பாவமே இப்ப அனுபவிக்கிறேன் என்று புலம்பிச் சாக வேண்டும். அதை விட்டு ஒத்தைப் போடு போட்டு நல்ல சாவை எதற்காக அவனுக்கு கொடுக்க வேண்டும். பழி வாங்கும் எண்ணம் எந்த விஷயத்திலும் மனசுக்குள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மற்ற கெட்ட எண்ணங்களுக்கு மூட்டை கட்டி வைத்துவிட்டு நன்மையே செய்வோம்... நல்லதையே அடைவோம்.
-'பரிவை' சே.குமார்.

சனி, 15 ஆகஸ்ட், 2015

தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 31)

முந்தைய பகுதிகள் :


30-வது பகுதியின் இறுதியில்...

"இதுல என்னத்தான் கேக்குறதுக்கு இருக்கு... நீங்க என்ன சொல்லுறீங்களோ அதுதான்... அப்பா ஆசை... எதுக்கு தடுக்கணும்... எட்டாம் நாள் வச்சிப்போம்... மூணாம் நாளு எண்ணெய் தேச்சுக்குளிச்சிட்டு நாங்க பொயிட்டு ரெண்டு நாள்சென்டு வாரோம்..." என்றான் மணி.

"சரிப்பா.... எல்லாருக்கும் சொல்லிவிட்டுரலாம்..." என்று முடித்தார்கள்.

அன்று இரவு யாருக்குமே தூக்கம் வரவில்லை. "நேத்து இங்க படுத்திருந்தா... இந்தா இங்கன... எங்கூட பேசிக்கிட்டு... இன்னைக்கு அநாதையா கெடக்கா... இப்படி பட்டுன்னு பொயிட்டாளே...." என்று புலம்பி அழுத கந்தசாமியை தேற்றிக் கொண்டிருந்தான் கண்ணதாசன்.

இனி...

காளியம்மாள் இறந்து மூன்று நாளாகிவிட்டது...

மூன்றாம் நாள் எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு நெருங்கிய சொந்தங்கள் எல்லாம் கிளம்பிச் சென்றார்கள். கேதம் கேட்டு வந்து கொண்டிருந்த ஜனங்களும் சன்னமாகக் குறைய ஆரம்பித்து ஒன்றிரண்டாக வர ஆரம்பித்தார்கள். மணியும் குமரேசனும் நான்காம் நாள் வேலைக்கு கிளம்பிப் போய்விட்டார்கள். ரமேஷூம் பிஸினஸ் விசயமாக மீண்டும் கோயம்புத்தூர் போய்விட்டான். அழகப்பனும் கண்ணதாசனும்தான் அங்கிருந்து கேதம் கேட்டதுடன் கருமாதிக்கான வேலைகளையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கந்தசாமி முகத்தில் முளைத்த தாடியைக்கூட எடுக்காமல் ஒழுங்காக சாப்பிடாமல் ஆள் மிகவும் மெலிந்து காணப்பட்டார்.

வயல்களுக்கு ஊடே வரப்பில் மண்வெட்டியுடன் சுறுசுறுப்பாக வலம் வந்த கந்தசாமி இப்படி பாதி உடம்பாய் ஆகிவிட்டதை நினைத்து கண்ணதாசந்தான் ரொம்ப வருந்தினான். அப்பா இறக்கும் போது சின்னப் பையனாக இருந்தவன்... அம்மாவின் இறப்பின் போது மனைவி என்னும் தாயின் அரவணைப்புக்குள் இருந்ததால் கொஞ்சநாளில் இழப்பை ஏற்றுக் கொண்டு வாழ ஆரம்பித்து விட்டான்... அவனுக்கு எல்லாமே சித்தப்பாதான் என்று இருந்தவன்... அப்படிப்பட்ட சித்தப்பா இழக்கக்கூடாததை இழந்த ஒரு மனிதனாக தன் கண்முன்னே உடைந்து கிடப்பது கண்டு அவனுக்கு சாப்பிடப் பிடிக்கவில்லை... அவரை நினைத்து பல நேரங்களில் அழுது தீர்த்தான்.

"மச்சான்... இராமேஸ்வரம் போறதுக்கு வேனுக்கு சொல்லிடுங்க... அப்புறம் யார் யார் போறோங்கிறதை முடிவு பண்ணிக்கணும்... சும்மா எல்லாரையும் இழுத்துக்கிட்டுப் போக வேண்டாம்... ஊர் பெரிய மனுசங்க ரெண்டு மூணு பேரு... பங்காளி வீட்ல... அப்புறம் சம்பந்திங்க.. நாம... அம்புட்டுத்தான்... அவுகளைக் கூட்டணும் இவுகளைக் கூட்டணுமின்னு யாரையும் இழுக்க வேண்டாம்...." என்றார் அழகப்பன்.

"ஆமாத்தான்... அதெல்லாம் ரொம்ப இழுத்தம்ன்னா வண்டியியல உக்காந்து போகவும் முடியாது... அது போக இது என்ன சந்தோஷ பயணமா... எல்லாரையும் கூட்டிக்கிட்டுப் போயி கடல்ல ஆட்டம் போட்டுட்டு வர்றதுக்கு... வேனு... நம்ம கணேசனுக்கிட்ட சொல்லிட்டேன்... நல்ல பய... வாடகை பாத்து வாங்கிப்பான்... அனுசரிச்சு ஓட்டுற பய... காலையில சாப்பாட்டுக்கு இட்லி அவிச்சுக் கொண்டு போகணும்... மத்தியானம் இங்க வந்து விரதம் விட்டு சாப்பிட்டுக்கலாம்... சமையலுக்கு ஆள் சொல்லலாம்ன்னு பாத்தேன்... அதுக்கு கண்ணகி நாங்கள்லாம் இருக்கமுல்ல பாத்துக்கிறோம்ன்னு சொல்லுது..."

"இது நல்லாயிருக்கே... எல்லாரும் போகும் போது கண்ணகி வராமயா... அது வரணும் மச்சான்... நம்ம கனகுக்கிட்ட சொல்லி சமைக்கச் சொல்லலாம்... "

"இல்லத்தான் எல்லாரும் பொயிட்டாளும் இங்க வாங்கக் கொடுக்க... பாக்க ஆளு வேணுமில்ல... அவ இருந்தாத்தான் சரி வரும்..."

"ம்.... அப்புறம் நாம போறது கர்ம காரியம் பண்ண... நேத்து ராஜாத்தி அக்கா எங்கிட்ட வந்து கருமாதி செய்ய தேவிபட்டிணமா இல்லை ராமேசுவரமா போறீகன்னு கேட்டுச்சு.... நானும் தேவிபட்டிணத்துல சுத்தம் இல்ல... போறது போறோம் நல்லா வாழ்ந்து வாவரசியா செத்த மனுஷி இராமேஸ்வரத்துலதான் செய்யணுமின்னு சொன்னேன்..."

"ம்..."

"அதுக்கு அப்புறம் அது சொன்னுச்சு பாருங்க... எனக்கும் ஒரு சீட்டுப் போட்டுக்கங்க... எல்லாரும் கலாம் ஐயாவை செம்முன எடத்தை பாத்துட்டு வாராகளாம்... நீங்க போகாமய வருவீக... நானும் அதை பாத்துருவேனுல்லன்னு சொன்னுச்சு... எனக்கு சுர்ருன்னு வந்துச்சு...  ஏத்தா... ஒரு மனுஷியை சாகக் குடுத்துட்டு காரியம் பண்ணப் போறோம்... நீ அவரை செம்முன இடம் பாக்க வாறேன்னு சொல்லுறியே... தெரிஞ்சுதான் பேசுறியான்னு கத்திவிட்டுட்டேன்... பேசாம போயிருச்சு..."

"அவரை செம்முன இடத்தைப் பாக்கணுந்தான்... அதுக்கு ஒரு நேரங்காலம் வேண்டாம்... அவரோட இழப்பு மாதிரித்தானே... நமக்கு நம்ம வீட்டு இழப்பு... நல்ல மனுஷி... அது இப்பன்னு இல்லை எப்பவும் அப்படித்தான்... அதையெல்லாம் கூட்டிக்கிட்டே போகக்கூடாது... சரித்தான்... மளிகைச் சாமானுக்கு லிஸ்டைக் கொடுத்துட்டு இருக்கவுக சாப்பிடுறதுக்கு காய்கறியெல்லாம் எதுவுமில்லையாம்... வாங்கிட்டு வந்துருறேன்..." என்று சொன்னவன் கந்தசாமி அருகில் சென்று அமர்ந்தான்.

"சித்தப்பா..."

"ம்... என்னப்பா...?" கண்கள் கலங்கியிருக்க உலர்ந்த உதடுகளைப் பிரித்து மெதுவாகக் கேட்டார்.

" எப்பவும் போல இருங்க சித்தப்பா... இனி சின்னம்மா வரவா போகுது... எல்லாந்தான் முடிஞ்சிருச்சே...? நம்ம அம்பட்டையனை வரச் சொல்றேன்... சேவிங்க் பண்ணிக்கிறியளா? உங்களை இப்படிப் பாத்ததில்லையா... என்னால பாக்கச் சகிக்கலை சித்தப்பா..." கலங்கிய கண்களோடு சொன்னான்.

"வே... வேண்டாம்ப்பா கருமாதி வரைக்கும் இப்படியே இருக்கட்டும். அதான் மொட்டை போடுவோம்ல்ல... என்ன இந்த வீட்டுக்குள்ள நானும் அவளுமாத்தானே இருப்போம்... எங்கிட்டுப் பாத்தாலும் அவ நெனப்பாவே இருக்கு... படுத்தா உறக்கம் வரலை... பசிக்கலை... என்னமோப்பா அவ எங்கூடவே இருக்க மாதிரி இருக்கு..." கலங்கினார்.

"மனசை தேத்திக்கங்க சித்தப்பா... உள்ள வச்சி உக்கி உக்கி தவிச்சிங்கன்னா மறுபடியும் நெஞ்சுவலி வந்தாலும் வந்திரும்... எங்களுக்கு நீங்க வேணும் சித்தப்பா... போயிலைப் பொட்டலம் வாங்கிக்கிட்டு வரவா..."

"ம்... ஒண்ணு கெடக்கும்... சரி ஒரு நிஜாம் லேடி வாங்கிக்கிட்டு வா... உங்க சின்னத்தா போயில போட்டா கத்துவா... இனி அதை வாயில அதக்கும் போது யாரு கத்தப் போறா... அந்த எழவையும் விட்டுடலாம்ன்னு இருக்கேன்... வாயில வைக்கும் போதெல்லாம் அவ நெனப்பு வந்து தொலைக்குமே... ம்... என்னைய தவிக்க விட்டுட்டு அவ நிம்மதியா உறங்குறா..."

"சரி... பிள்ளைகளோட கலகலப்பா இருங்க... இனி உங்களுக்கு உங்க பேத்திகதான் சின்னம்மா மாதிரி..." என்றபடி கிளம்பினான்.

அவன் கிளம்பிய சிறிது நேரத்தில் அழகப்பனும் கொஞ்சம் வேலையிருக்கு பாத்துக்கங்க.... சாப்பாட்டுக்கு வந்துடுறேன் என்று கிளம்ப, கந்தசாமி கட்டிலில் படுத்துக் கொண்டு துக்கத்தை ரொம்பச் சுமக்காமல் எப்பவும் போல் விளையாட்டுதனமாக சண்டையிட்டுக் கொண்டிருந்த பேரன்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். விட்டுக்கு உள்ளே மகள்களும் மருமக்களும் காளியம்மாளின் நினைவுகளை மீட்டெடுத்துக் கொண்டிருக்க, கண்ணகி சமைத்துக் கொண்டிருந்தாள்.

ருமாதிக்கு முதல் நாள் இரவு படையல் போட்டு சாமி கும்பிட்டார்கள்... சொந்த பந்தம் எல்லாம் தேங்காய் பழம் , சுவீட் எல்லாம் வாங்கி வந்திருந்தார்கள். இரவு சாப்பிட்டு விட்டு மறுநாள் யார்யார் போறோம்... எத்தனை மணிக்கு என்பதை எல்லாம் விவரமாகப் பேசிக் கொண்டார்கள். அடுத்த நாள் அதிகாலை வேன் வர, இட்லி சாம்பார் சட்டிகளுடன் தண்ணீர் பாட்டில்களையும் ஏற்றிக் கொண்டு இராமேஸ்வரம் நோக்கி கிளம்பினார்கள்.

அங்கு காரியமெல்லாம் முடித்து மதியம் மூன்று மணிக்குத் திரும்பினார்கள். வீட்டில் சாப்பாடு தயாராக இருக்க, கந்தசாமியும் மகன்களும் விரதம்விட மற்றவர்கள் சாப்பிட்டதும் தங்கள் வீடுகளுக்கு கிளம்பினார்கள். ஆச்சு... காளியம்மாள் இறந்து இன்றோடு எட்டு நாள்... எங்கு பார்த்தாலும் காளியம்மாளின் இறப்புக் குறித்த பேச்சாகத்தான் இருந்தது. இன்று கருமாதியும் முடிந்து விட்டதால் இனி காளியம்மாளின் நினைவுகளை கந்தசாமியும் அவரின் வாரிசுகளுமே தூக்கிச் சுமப்பார்கள். அமாவாசை விரதத்தின் போதும்... அவளின் பிறந்தநாள்... இறந்தநாள்... என சில நாட்களில் மட்டுமே அவளை மனசுக்குள் நிறுத்துவார்கள். அப்புறம் நகர்ந்து போகும் வாழ்க்கையில் இது இயற்கைதானே... நாளை நமக்கும் இதுதானே... என்ற நினைப்போடு ஏற்றுக் கொண்டு வாழ ஆரம்பித்து விடுவார்கள்.

றுநாள் குமரேசன் வாசலில் அமர்ந்து புத்தகம் ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தான். அப்போது சித்ரா அவனைக் கடந்து சென்றாள்.

"அண்ணி..." என்ற அவனது அழைப்புக்கு நின்றவள் "என்ன தம்பி?" என்றாள்.

"அண்ணி... நீங்க அன்னைக்கே மாமரக் கொல்லை முழுதும் வேணுமின்னு சொன்னீங்க... அதை எடுத்துக்கங்க... எனக்கு இடமெல்லாம் வேண்டாம்... ஆனா எனக்கு ஒரே ஒரு ஆசை அண்ணி.... அம்மா வாழ்ந்த இந்த வீட்டை நான் மட்டும் எடுத்துக்க விரும்பலை... நான் வீட்டை வேலை பாத்துடுறேன்... நீங்க மாமரத்துக் கொல்லையில என்ன வேணுமின்னாலும் பண்ணிக்கங்க... ஆனா நல்லது கெட்டதுக்கு நாம எல்லாரும் இந்த வீட்ல ஒண்ணு கூடணும் அண்ணி... நம்ம பிள்ளைகளும் இதுல ஒண்ணா இருக்கணும் அண்ணி... அது மட்டுந்தான் என்னோட ஆசை... கொல்லையை எடுத்துக்கிட்டு இதை ஏத்துக்கங்க..."

"தம்பி.... அது...."

"என்னண்ணி... தயங்காமச் சொல்லுங்க... தனியா வீடு கட்டணுமா?"

"ஐயோ... அதெல்லாம் இல்லப்பா... ஏதோ நான் விவரங்கெட்டதனமா பேசிப்புட்டேன்... அயித்தை என்னைய நல்லாத்தான் நெனச்சிச்சு... ஆனா நான் அதை அப்படி நினைக்கலையே... எங்க வீட்டுக்கு கூட்டிப்போயி ஒரு நா ஒரு பொழுது வாய்க்கு ருசியா அதுக்கு செஞ்சு போட்டிருப்பேனா... காசு... பணம்... சொத்துன்னு ஆவ்... ஆவ்வுன்னு திரிஞ்சு என்னத்தை கொண்டு போகப்போறேன்... நல்ல மனுசங்களோட அன்பு இல்லாம வாழ்ந்து என்னாகப் போகுது சொல்லுங்க... இந்தா அயித்தை செத்தப்போ வந்த ஜனமெல்லாம் அவங்களை எப்புடி கொண்டாடுனாங்க... அதுதான் தம்பி வேணும்... அதுதான் நிறைவான வாழ்க்கை... " கண் கலங்கினாள்.

"அண்ணி.... கொல்லையை நான் நல்ல மனசோடதான் தாறேன்னு சொல்றேன்... அபி ஒண்ணும் சொல்லமாட்டா... நீங்க எடுத்துக்கங்க..."

"வேண்டாந்தம்பி... எல்லாரும் ஒண்ணாவே இருப்போம்... இன்னைக்கு மாதிரி கடைசி வரைக்கும் சண்டை சச்சரவு இல்லாம... இதே பாசத்தோட இருப்போம்... அந்தக் கொல்லை கெடக்கட்டும்... ரெண்டு பேருக்கும் பிரிச்சபடியே இருக்கட்டும்... பாத்துக்கலாம்... பல நேரத்துல நா உங்ககிட்ட மோசமா நடந்துக்கிட்டு இருக்கேன்... எதையும் நெனச்சுக்காதீக..."

"என்னண்ணி நீங்க...? நா உங்க மேல கோபப்படுறதா...? நீங்க எனக்கு அம்மா மாதிரி... நல்லது கெட்டது எல்லாத்துலயும் இனி நீங்கதானே என்னை வழி நடத்தணும்... பழசைப் பேசாதீங்க அண்ணி... உங்க நல்ல மனசு எப்பவும் இப்படித்தான்... அது வெளியில தெரியலை... அம்புட்டுத்தான்... சரி கண்ணைத் தொடைங்க... போங்க...." என்றான்.

அவள் போகவும் வெளியே போய்விட்டு வந்த அழகப்பனும் மணியும் 'என்ன அத்தாச்சியும் கொழுந்தணும்... என்ன பேசிக்கிட்டு இருந்தீங்க... ' என்று அவனிடம் கேட்க, எல்லாத்தையும் சொன்னான்... 'அவளா... உண்மையாவா..? எங்கம்மா செத்து அவளைத் திருத்திருச்சா?' என்று நம்பாமல் கேட்க, 'எல்லாரையும் காலமும் நேரமும் ஒரு நாள் மாற்றும் மச்சான்... மாற்றம் வர்றது நல்லதுதானே விடு... ' என்று சொன்னார் அழகப்பன்.

ரண்டு நாளைக்குப் பிறகு,

அழகப்பனும் ரமேஷூம் கட்டிலில் அமர்ந்திருக்க, கந்தசாமி சேரில் அமர்ந்து முகஷை ஏதோ கேட்டுக் கொண்டிருந்தார்.... மணி வாசல் படிக்கட்டில் அமர்ந்து அன்றைய பேப்பரை வாசித்துக் கொண்டிருந்தான். குமரேசன் நிலைப்படியில் சாய்ந்து நின்றவாறு "அத்தான் நாளைக்கு கிளம்பணும்... எல்லாரும் அவுக அவுக வேலையை பாக்கணுமில்ல... இங்கயே முடங்கிக் கிடந்தா என்னாகுறது... " என மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தான். 

"ம்... ஆமா மாப்ள... எல்லாம் போட்டது போட்டபடி கிடக்குதுல்ல... நாளும் பொழுதும் ஓடிருச்சு... இனி அவுக அவுக பொழப்புத் தழப்பைப் பாக்கணுமில்ல... " என்றார் அழகப்பன்.

"ஆமா... ஆமா... இங்கயே உக்காந்திருந்தாலும் அத்த நினைப்புல இருந்து யாரும் மீளாதுக... அங்கிட்டு அங்கிட்டு போனாத்தான் கொஞ்சம் மறந்து... தெளிவாகுங்க..." என்றான் ரமேஷ்.

"அத்தான்... அப்பாவை எங்க கூட கூட்டிப் போகலாம்ன்னு பாக்குறேன்... ஏன்னா அண்ணன் வீட்ல அவரை வச்சிக்கிறது கொஞ்சம் கஷ்டம்... சின்ன வீடு வேற... எங்க வீடுன்னா கொஞ்சம் பிரியா இருப்பாருல்ல..." என்றான் குமரேசன்.

அதுவரை பேசாமல் இருந்த கந்தசாமி, "இல்ல... நா வரலைப்பா... எங்கயும் வரலை..." என்று அழுத்தந் திருத்தமாகச் சொல்ல எல்லோரும் அவரையே பார்த்தனர்.

(வேரும் விழுதுகளும் அடுத்த சனிக்கிழமை நிறைவு பெறும்)
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

மனசின் பக்கம் : சுதந்திரமாக பேசலாமா?

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.


ந்திய சுதந்திர தினம் குறித்து முகநூலில் சிலர் மோசமான கருத்தைப் பகிர்கிறார்கள். இது மிகவும் தவறான ஒன்றாகும். அரசியல்வாதிகள் செய்யும் அசிங்கங்களுக்கு நம் தாயைப் பழிப்பது நியாயமா என்ன..? இந்தியா என் நாடு... என் தாய் நாடு... என்ற எண்ணம் ஒவ்வொரு இந்தியருக்கும் இருக்க வேண்டும். கேலி கிண்டல் செய்யும் மனிதர்களை எல்லாம் இவ்வளவு சுதந்திரமாக இருக்க வைத்திருக்கும் நாடு நம் நாடு என்பதை மனதில் கொள்ளுங்கள். அரசியல் தலைவர்களும் அவர்களின் வாரிசுகளும் நம் நாட்டை கூறு போட்டு குதறி வைத்திருக்கலாம். இவர்களை விரட்டி அடிப்பதை விட்டுவிட்டு நாட்டின் பெருமையை, ஒரு சிறப்பான தினத்தை கேவலப்படுத்துவதில் உங்களுக்கு அற்ப சந்தோஷம் என்றால் செய்து கொள்ளுங்கள்... ஏனென்றால் நாம் சுதந்திர நாட்டின் பிள்ளைகள். நமக்கு எதுவேண்டுமானாலும் பேச, எழுத சுதந்திரம் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை நான் எங்கிருந்தாலும் என் நாடு இந்தியா என்று சொல்வதையே பெருமையாகவும் கர்வமாகவும் நினைக்கிறேன். என் தாய் நாட்டின் சுதந்திர தினத்தில் ஜாதி, மத, இன வேறுபாடுகளைக் களைந்து எல்லோரும் ஓர் குலம்...  எல்லோரும் ஓர் இனம்... என்ற அன்புள்ளத்தோடு ஒற்றுமையாய் வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன்.


லுவலகத்தில் உடனே முடிக்க வேண்டிய முக்கிய பணியின் காரணமாக கடந்த பத்து நாட்களாக அதிகமான வேலை... ஊருக்குப் பேசுவது.. எழுதுவது... படிப்பது என எல்லாவற்றிலுமே தடங்கல் ஏற்பட்டது. ஒரு வழியாக அந்த வேலையை முடித்து விட்டோம்... இரண்டு நாட்களாக  வேலையில்லாமல் கொஞ்சம் பொழுதைப் போக்கினோம். நேற்று மாலை கிளம்பும் சமயத்தில் மீண்டும் ஒரு வேலை... ஒருவேளை இந்த வேலை விரைந்து முடிக்க வேண்டும் என்றால் மீண்டும் இரவு பகல் வேலை இருக்கும். இங்கும் தற்போது கம்பெனிகளின் நிலை சரியில்லை. எங்கள் கம்பெனிக்கும் இதுவரை வேறு புதிய வேலைகள் கிடைக்கவில்லை என்பதாலும் வேறு கம்பெனி சென்றாலும் புதிய வேலையில் எவ்வளவு நாள் தொடருவோம் என்று அறியாத நிலை... அதனால் எங்கள் கம்பெனி எத்தனை மணி நேரம் வேலை செய்யச் சொன்னாலும் செய்ய வேண்டிய நிலை.  

போன வார வியாழன் அன்று இரவு முழுவதும் பணி இருக்கும் என்பதால் சாப்பாடு வாங்கி வருகிறேன் என்று எங்க இன்சினியர் சொன்னான். நான் வியாழன் அன்று சாய்பாபாவிற்காக விரதம் இருக்கிறேன் என்பதால் என்னிடம் நீ என்ன சாப்பிடுவே என்று கேட்க, இரவு பனிரெண்டு மணிக்கு மேல ஆச்சு எதாயிருந்தாலும் பரவாயில்லை என்று சொல்லிவிட்டேன். அவனும் வாங்கி வந்தான்... என்ன தெரியுமா?

மாட்டுக்கறி போட்ட பீட்சா... பார்த்ததுமே என்ன இது... மாட்டுக்கறியா என்றதும் ஏன் சாப்பிட மாட்டியா...? உங்கிட்ட கேட்டுத்தானே வாங்கியாந்தேன் என்றான். மாட்டேன் என்றதும் ஆடு, கோழி சாப்பிடுவே ஆனா மாடு சாப்பிடமாட்டே... என்னடா இது என்றான். எனக்கு வேண்டாம்... என்று சொன்னதும் ஓ உன்னோட மதத்தின் காரணமாக சாப்பிட மாட்டாயோ என்றவன் ஒரு சீஸ் பிரட்டும், இலைகளைப் போட்ட சாலட்டும் கொடுத்து இதை சாப்பிட்டுட்டு எப்படி வேலை பாக்கப்போறே என்றான் வருத்தமாய். நான் சொன்னேன் இந்த எட்டு வருசத்துல எத்தனையோ முறை இரவு வேலை பாத்திருக்கிறேன்... ஒரு பைசாவுக்கும் பிரயோசனம் இல்லை என்றாலும் இரவு சாப்பாடு கூட நாமதான் சாப்பிட்டுக்கணும்... இன்னைக்குத்தான் நீ வாங்கியாந்தே... அதையும் சாப்பிட முடியலைபாரு என்றதும் சிரித்துக் கொண்டே எழுந்து சென்றான்.


ணையாழி இந்த மாத குறுநாவல் போட்டிக்கு ஒரு கதையை மிகவும் கஷ்டப்பட்டு குறுநாவலாக்கி அனுப்பிவிட்டேன். வெற்றி தோல்வி என்பதை எல்லாம் கணக்கில் எடுக்கவில்லை... கணையாழி போன்ற பத்திரிக்கைகளுக்கு போட்டிக்கென அனுப்பும் போது மிகச் சிறந்த நபர்கள் வாசிக்க கூடும். அவர்கள் மனதில் இவர் நல்லா எழுதியிருக்கிறான் என்ற எண்ணம் வந்தாலே போது மனசுக்குள் நல்லா வருவேடான்னு வாழ்த்துவாங்கதானே... அது போதும். அடுத்து கல்கி குறுநாவல் போட்டிக்கான கதையை எழுத ஆரம்பிக்கணும். தேனம்மை அக்கா கூட தனது பதிவில் கல்கி போட்டியில் எழுதுங்க என நிறையப் பேரை குறிப்பிட்டிருந்தார். அதில் அடியேன் பெயரும் இருந்தது. முயற்சி திருவினையாக்கும் என்பதால் நானும் முயற்சிக்க இருக்கிறேன். நீங்களும் கலந்துக்கங்க நட்புக்களே...


சிவகங்கை மாவட்டத்தில் இரண்டு வக்கீல்கள் கொம்பன் படத்தில் கார்த்தி நடித்திருக்கும் கதாபாத்திரம் எங்க ஜாதிக்கானது... இல்லை எங்க ஜாதிக்கானது என சுற்றுலா போன இடத்தில் முட்ட ஆரம்பித்து... அதை தினமும் ஊதி... ஊதி... வன்மத்தை வளர்த்து ஒரு நாள் இரவு மீண்டும் சுற்றுலாவுக்குச் செல்ல கோர்ட் வளாகத்துக்கு வந்த போது பெரும் மோதலாக உருவெடுத்து ஒரு வக்கீல் மற்றொரு வக்கீலை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு போலீஸில் போய் சரணடைந்திருக்கிறார். 

சினிமா என்பது பொழுது போக்குச் சாதனமே... இரண்டு மூன்று மணி நேரம் பார்த்து ரசிக்கலாம்.  அதன் பிறகு அது குறித்த தாக்கத்தை மனசுக்குள் வைத்துக் கொள்ளக் கூடாது. எதற்காக அதைத் தூக்கிச் சுமக்க வேண்டும். கேவலம் ஒரு சினிமாக் கதாபாத்திரம் ஏற்ற சாதிக்காக ஒரு உயிரை எடுத்திருக்கிறான் படித்த வக்கீல் ஒருவன்... உயிர் என்ன அந்தளவுக்கு மலிவாகப் போச்சா... செத்தவனுக்கு இப்போத்தான் திருமணமாகி இரண்டு மாதக் குழந்தை இருக்கிறதாம்... என்ன சொல்வது? இவர்கள் எல்லாம் திருந்துவது எப்போது? அவன் எப்போது ஜெயிலில் இருந்து வந்தாலும் வெட்டுவோம் என்கிறார்கள் செத்தவனின் உறவுகள். இந்தப் பழிக்குப்பழி இனி தொடரத்தானே செய்யும். பழிக்குப்பழி என்றதும் எங்கள் சொந்தத்தில் நிகழ்ந்த கொடூர சம்பவம்தான் நினைவுக்கு வருகிறது. இந்த விவரங்களை வைத்து பழிக்குபழி குறித்து தனிப்பதிவாக விரிவாக எழுதுகிறேன்.


துபாய்க்கு சுற்றுலா வந்து கடலில் குளிக்கும் போது  தண்ணீருக்குள் சிக்கிக் கொண்டு உயிருக்குப் போராடி காப்பாற்றுங்கள் என்று கத்திய 20 வயது மகளை தனது கண்ணெதிரே சாகவிட்டிருக்கிறார் ஒரு தந்தை. ஆம்... காப்பாற்றச் சொல்லி கத்திய அந்தப் பெண்ணைக் காப்பாற்ற பணியில் இருக்கும் காவலர் குழு தண்ணீருக்குள் இறங்கும் போது என் மகளை அந்நிய ஆடவன் தொடக்கூடாது என அந்தத் தந்தை சண்டையிட்டு அவர்களை இறங்க விடாமல் தடுத்து அந்தப் பெண்ணை இறக்க விட்டிருக்கிறார். இப்போது தந்தை கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். ஒரு உயிரைக் காப்பாற்றும் போது எந்த சாதி, எந்த மதம் என்று ஏன் பார்க்கிறீர்கள்... மனிதத்தை மட்டுமே பாருங்கள்... இருபது வருடம் வளர்த்த பெண்ணை ஒருவன் காப்பாற்றும் பொருட்டு இருபது நிமிடம் தொடுவதால் மதமும் அழிந்து விடாது... அவளின் கற்பும் கெட்டுவிடாது... இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் மதங்களையும் அந்த மூட நம்பிக்கைகளையும் தூக்கிச் சுமப்பார்களோ தெரியவில்லை.... அநியாயமாய் ஒரு உயிர் போய்விட்டது. திருந்துங்கள் மனிதர்களே... அடுத்த மதத்துக்காரனோ ஜாதிக்காரனோ ஆபத்து நேரத்தில் தொடுவது ஒண்ணும் தீட்டு அல்ல என்பதை உணருங்கள் மனிதர்களே...


செல்பி மோகத்தால் துபாயில் ஒரு கொலை நிகழ்ந்திருக்கிறது. நம்ம ராமநாதபுரத்துக்காரர் நண்பர்களுடன் ஹோட்டலுக்கு போயிருக்கிறார். இவர்கள் அமர்ந்து சாப்பிட்ட மேஜைக்கு அருகே ஒரு அரபி இளைஞன் காதலியுடன் அமர்ந்திருக்கிறான். இவர்கள் சந்தோஷமாக சாப்பிட்டு செல்பி எடுத்திருக்கிறார்கள். ஆனால் அந்த அரபியோ இவர்கள் செல்பி எடுப்பது போல் தனது காதலியை போட்டோ எடுக்கிறார்கள் என அவர்களிடம் வார்த்தைப் போரில் ஈடுபட்டிருக்கிறான். ஒரு கட்டத்தில் சண்டை வலுக்க, அவன் இவனைத் தலையில் தாக்கியிருக்கிறான். ஆள் அங்கேயே மூச்சை விட்டுட்டான். போலீஸ் வந்திருக்கிறது... ஆஸ்பிடல் கொண்டு போயிருக்கிறது... எதுவும் நடக்கவில்லை... மகன் சம்பாரிக்கிறான் என்று இருந்த பெற்றோருக்கு பிணம் அனுப்பி வைக்கப்பட இருக்கிறது. அடித்த அரபியோ ஜெயிலில் கிடக்கிறது. செல்பி மோகம் கொலையில் போய் முடிந்தாலும் நம்ம எல்லோரும் செல்பிக்குள் சிறைபட்டுத்தான் கிடக்கிறோம்.



ன்பு அண்ணன் கில்லர்ஜி இன்று என்னைத் தேடி வந்திருந்தார். எப்போதும் அவர்தான் தேடி வருவார்... நான் போவதில்லை என்பது வேறு விஷயம்... நிறைய விஷயங்கள் பேசினார்... ஒரு காபியுடன் ஒரு மணி நேரம் புதுக்கோட்டை வலைப்பதிவர் மாநாடு, மற்றும் எழுத்துக்கள் குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம். நிறையப் பேசிய நிறைவான சந்திப்பு... அண்ணா... வாராவாரம் வந்துருங்க...:)



னதருமை அண்ணன் குடந்தையூர் சரவணன் அவர்கள் 'அகம் புறம்' என்ற தனது இரண்டாவது குறும்படத்தை நாளையும் எடுக்கவிருக்கிறார். சில நொடி சிநேகம் என்ற தனது முதல் குறும்படத்தில் மிகச் சிறப்பான கருத்தைக் கையாண்டிருந்தார். ஆனால் அந்தப்படம் எதிர்பார்த்த அளவு மக்களைச் சென்றடையவில்லை என்பதில் எனக்கு வருத்தமே. இந்த முறை திரில்லர் கதையை கையிலெடுத்திருக்கிறார். மிகச் சிறப்பாக... எல்லோரையும் கவரும் வண்ணம் கண்டிப்பாக எடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது.  அண்ணனின் கையில் வெற்றிக் கோப்பை கிடைக்க வாழ்த்துகிறேன்... நீங்களும் வாழ்த்துங்கள் நட்புக்களே....



புதுக்கோட்டையில் வலைப்பதிவர் மாநாடு மிகச் சிறப்பாக நடைபெறும் என்பதை திரு.முத்துநிலவன் ஐயா அவர்களின் பதிவுகள் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கின்றன. மேலும் புதுக்கோட்டை வலைப்பதிவு சகோதர, சகோதரிகள் எல்லாரும் முனைப்புடன் பணியை ஆரம்பித்திருக்கிறார்கள். சென்ற வருடம் மதுரையில் நடந்த போது கலந்து கொள்ள முடியவில்லையே என்ற ஏக்கம் இருந்தது. அந்த ஏக்கம் இந்த முறையும் தொடரும் போல்தான் தெரிகிறது... விழாவுக்கு செல்ல வேண்டும் என்று முயற்சித்தாலும் இப்போது இருக்கும் அலுவலகச் சூழல் அதற்கு பெரிய முட்டுக்கட்டையாக இருக்கும் என்றுதான் தோன்றுகிறது. கலந்து கொள்ள முடியாவிட்டாலும் 'மனசு' அங்குதான் இருக்கும். விழா மிகச் சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.

-'பரிவை' சே.குமார்.

திங்கள், 10 ஆகஸ்ட், 2015

கிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி



கிராமத்து வாழ்க்கையில் அனுபவித்த சந்தோஷங்களில் முக்கியமானவைகளில் மழை நாட்களும் ஒன்று. இன்று இந்த பாலைவனப் பூமியில் மழையைப் பார்ப்பது என்பதே அரிதாகிவிட்டது. ஊருக்குப் போன் பண்ணும் போது மழை பெய்கிறது என்றால் 'நல்ல மழையா..? தண்ணி நிறைந்து ஓடுதா...?' எனச் சந்தோஷமாகக் கேட்கச் சொல்கிறது. பள்ளியில் படிக்கும் காலத்தில் மழையில் நனைந்த நினைவுகளையும், அதன் பின்னான விளையாட்டுக்களையும் குறித்து கிராமத்து நினைவுகள் பகுதியில் மழைக்காலம் என்னும் தலைப்பில் முன்பே பகிர்ந்திருக்கிறேன். எனவே இப்போது மழைத் தண்ணி பற்றிப் பார்ப்போம்.

மழை பெய்ததும் மேட்டுப் பகுதியில் இருந்து தாழ்வான பகுதி நோக்கி தண்ணீர் ஓடும்... அது பார்க்க சின்ன ஆறு போல் காட்சியளிக்கும். பெருமழை பெய்து முடிந்து தண்ணீர் ஓடும்போது அதன் மீது விழும் சிறு தூறலின் துளிகள் தெறித்து எழுவது அவ்வளவு அழகாக இருக்கும். இதேதான் கண்மாய் தண்ணீர் மீது மழைத்துளி விழும்போதும்... அந்த அழகை எல்லாம் நேரில் ரசித்திருந்தால் மட்டுமே சிலாகித்துப் பேசமுடியும். மற்றபடி சினிமாவில் மழை பெய்வதைப் பார்த்தேன்... முகநூலில் மழை பெய்ததைப் பகிர்ந்திருந்தான் பாரு... செம... என்றெல்லாம் பேசத்தான் முடியுமே தவிர அதை அனுபவித்த அந்த சுகானுபவத்தை ஒருபோதும் உடம்பில் சில்லிட வைக்க முடியாது.

நகரங்களை விட கிராமங்களில்தான் மழைத்தண்ணீர் ஓடும் அழகை அதிகம் ரசிக்க முடியும். காரணம் என்னவென்றால் பத்துப் பதினைந்து வீடுகள் நெருக்கமாய் இருக்கும்... அவற்றிற்கு இடையே சந்துகள் இருக்கும்... பெய்யும் மழைத்தண்ணி வீடுகளின் ஓடுகளிலும் கூரைகளிலும் விழுந்து வெளியாகி சந்துக்களின் வழியாக தாழ்வான பகுதிகளான வயல்களை நோக்கியோ அல்லது ஊரை ஒட்டியிருக்கும் சிறு ஊரணிகளை நோக்கியோ பயணிக்கும்... சலசலவென ஓடிவரும் தண்ணீரில் குதிகால் நனைய எதிர்புறமாக ஓடுவது... குறுக்கே அணை கட்டி தண்ணீரை நிரப்பி அணையில் ஓட்டையிட்டு திறந்து விடுவது... காகிதக் கப்பல், கருவை , வேப்பமர இலைகளைப் பறித்து அதில் விடுவது... என எல்லாமுமே மழையில் நனைந்தபடியே நடக்கும். அப்படி அனுபவித்த அந்த இன்பம் அலாதியானது.  இப்ப லேசா நனைந்தாலே சளி பிடிக்கும் என்கிறோம். ஒரு தும்மல் தும்மினாலே டாக்டரிடம் ஓடுகிறோம். அன்று தும்மியபடியே மழையில் ஆடிய நாட்கள் நிறைய உண்டு. ஏன் மழை விட்டதும் ஈர மணலில் கபடி விளையாடுவதும்... சண்டையிடுவதும் கூட நடக்கும்.

மழை ஓட்டு வீட்டின் மீது சடச்சடவென பெய்யும் போது அந்த வீட்டுக்குள் அமர்ந்து அந்த இசையைக் கேட்பது கூட ஒரு சுகம்தான். மழை வேகம் பிடிக்க ஆரம்பித்தவுடன் மழை நீர் ஓடுகளில் நெளிவான பாதையில் பயணித்து கீழே விழ ஆரம்பிக்கும். மழையின் வேகத்துக்கு ஏற்ப நீரும் ஓடுகளின் வழியே வழிந்து தரையைத் தொட்டு பயணிக்கும். அந்த மழை நீரை பாத்திரங்களில் பிடித்து வைத்து சமையலுக்கும் குடிக்கவும் பயன்படுத்துவார்கள். மழை விழ ஆரம்பித்ததும் பிடிக்க மாட்டார்கள். ஓட்டில் இருக்கும் அழுக்கெல்லாம் போகட்டும் என்று கொஞ்சம் நேரம் தண்ணீரை பிடிக்காமல் இருந்து பின்னர் பிடிப்பார்கள். அண்டா, குண்டா, அலுமினியப் பாத்திரங்கள், காசாணித் தவலைகள் என எல்லாவற்றிலும் நீரை நிரப்பி வைப்பார்கள்.

மழை நீரில் சமைத்தால் சாதம் பூப்போல இருப்பதுடன் மறுநாள் கஞ்சி குடிக்கும் போது அதில் இருக்கும் நீச்சத்தண்ணியும் (நீராகாரம்) மணமாக இருக்கும். கண்மாய்த் தண்ணீரில் சமைத்தாலும் இப்படித்தான் இருக்கும்.  கண்மாயில் தண்ணீர் குறைந்து தெளிவில்லாமல் கிடக்கும் நீரை மண்டித் தண்ணீர் என்போம். சமையலுக்காகவே அதைக் கொண்டு வந்து பானையில் ஊற்றி தேத்தாங்க் கொட்டையை வைத்து தண்ணீருக்குள் உரசி உரசி மண்டித் தண்ணீரை நல்ல தண்ணீராக மாற்றி சமையலுக்கு பயன்படுத்துவார்கள். 

மழை நாட்களைத் தொடர்ந்து வீட்டிற்கு யாராவது வந்தால் கூட மழைத்தண்ணி இருந்தா கொடுத்தா... பைப்புத்தண்ணி தாகம் நிக்கிது இல்லை என்பார்கள். கிராமங்களில் வீட்டுக்கு வீடு மணலைப் பரப்பி அதன் மீது மண்பானையில் தண்ணீர் நிரப்பி குடிக்கப் பயன்படுத்துவார்கள். அதில் மழைத் தண்ணீரை ஊற்றி வைத்தால் தொண்டைக்குள் இறங்கும் போது அப்பப்பா... என்ன... சில்லு... ஆஹா... செம்பு... செம்பா தண்ணி போய்க்கிட்டே இருக்கும். அதிலும் குறிப்பாக தண்ணீர் வாசமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே வெட்டி வேர் கொண்டு வந்து போட்டு வைப்பார்கள்.


மழைக் காலம் முடிந்தாலும் அண்டா, குண்டாக்களிலும் இருக்கும் தண்ணீரை மழைத்தண்ணி.. மழைத்தண்ணி என்று வைத்து வைத்துக் குடிப்பார்கள். அதுவும் ஓட்டில் இருந்து வழியும் இந்த மழை நீரைப் பிடிப்பதற்காகவே தகரம் வாங்கி அழகாக வளைத்து நாலைந்து ஓடுகளைச் சேர்த்து அடித்து வைத்திருப்பார்கள். அதாவது நாலைந்து ஓடுகள் வழியாக வழியும் தண்ணீரெல்லாம் அந்த தகரத்தின் வழியே வந்து மொத்தமாக குடத்தில் விழும்.  மேலே படத்தில் இருப்பது போல் மொத்தமாக தகரம் வளைத்து ஓரு ஓரத்தில் மட்டும் விழ வைப்பார்கள்.

எங்கள் வீட்டில் கூட ஆரம்பத்தில் ஓடுகளின் மூலம் விழும் தண்ணீரைப் பிடிக்க அம்மா, அக்காவெல்லாம் பரபரப்பாக இருப்பார்கள். நாங்கள் பாத்திரங்களை எடுத்துக் கொடுப்போம். நனைந்து கொண்டே தண்ணீர் பிடிப்பது கூட சுகம்தான் இல்லையா... அப்படியாவது மழையில் நனையலாமே என்ற நப்பாசைதான்... டேய் நனையாதேடா என அம்மா கத்திக் கொண்டு நின்றாலும் நாம நனையாம இருப்போமா என்ன... அப்போதுதான் எல்லா வேலையும் பாக்குறது. அப்படித்தான் இந்த தண்ணீர் பிடிக்கும் நிகழ்வும்.

கூரை வீடாக இருந்தால் அதில் தண்ணீர் பிடிக்க முடியாது. அவர்கள் எல்லாம் பக்கத்து வீடுகளில் குடம் கொடுத்துப் பிடித்துக் கொள்வார்கள். எங்கள் வீட்டில் கூட முன்னால் கிடந்த இடத்தில் ஒரு கிடுகு கொட்டகை போட்டபோது கிடுகு கொட்டகை மற்றும் ஓட்டு வீடு இணையும் இடத்தில் தகரம் அடைத்து தண்ணீர் உள்ளே விழாதவாறு வைத்துவிட்டோம். அத்தோடு மழை நீர் பிடிக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் மழைத்தண்ணி குடிக்காமல் இருக்க முடியுமா என்ன மழை பெய்ய ஆரம்பித்ததும் அருகே இருக்கும் பஞ்சம்மா வீட்டுக்கு குடங்களைக் கொண்டுக்கிட்டு ஓடுவோம். குடம் குடமாக பிடித்துத் தூக்கி வருவோம். சில நேரங்களில் பஞ்சம்மாவே பிடித்து நிறைத்து வைப்பார். மழை விட்டதும் போய் தூக்கி வருவோம். பெரும்பாலும் அக்கா தூக்கி வந்துவிடும். சில நேரங்களில் நானும் தம்பியும் உதவியாய்...  மழைத்தண்ணி மீது அம்புட்டு ஆசை.

பள்ளியில் இருந்து வரும்போது செம்மண்ணில் நிறைந்து நிற்கும் மழைத்தண்ணியில் ஆட்டம் போட்டு வந்த காலம் எல்லாம் கனாக்காலம் போங்க. ம்... இப்பவும் மழையில நனைய ஆசைதான்... ஊரில் இருக்கும் வரை மழையில் நனைந்து கொண்டு வண்டியில் பயணம் செய்திருக்கிறேன். இங்க தினமும் வேர்வையில் நனைகிறேன்...

-'பரிவை' சே.குமார்.

சனி, 8 ஆகஸ்ட், 2015

தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 30)

முந்தைய பகுதிகள் :


29-வது பகுதியின் இறுதியில்...

"ம்... நீங்க மனசை திடமா வச்சிக்கங்க..." என்றபடி அவரிடம் இருந்து விலகிய அழகப்பன் கோவிந்தனிடம் வந்து "அந்த வாடிப்பட்டி மேளமாட்டம் இங்க காரைக்குடியில் ஒரு குரூப் இருக்கானுங்களே அவனுகளுக்குச் சொல்லச் சொல்லுங்க சித்தப்பா..." என்றபடி கண்ணதாசனிடம் அமர்ந்தார். 

நிமிடங்கள் யுகங்களாய் கடக்க, சொந்த பந்தம் வர ஆரம்பித்ததும் வீடெங்கும் அழுகுரல் நிரம்பி வழிந்தது. அப்போது ஒரு கார் வந்து நிற்க, அதிலிருந்து 'அம்மோவ்' என்று கதறிபடி ஓடி வந்து படியில் விழுந்தான் குமரேசன்.

இனி...

குமரேசன் கதறியபடி படியில் வந்து விழ, "ஏய்... அவனைப் பிடிங்கப்பா... " என்று கோவிந்தன் கத்த, அங்கு நின்றவர்கள் அவனைத் தூக்க, அவர்களிடமிருந்து திமிறி காளியம்மாள் மீது விழுந்தான். அவன் பின்னே ஓடிவந்த அபியும் கதறி அழ சுந்தரி, கண்ணகி என எல்லோரும் அவளைக் கட்டிக் கொண்டார்கள்.  திவ்யா அழுது கொண்டே அம்மா பின்னே நிற்க, முகேஷ் கலங்கிய கண்களுடன் அழகப்பனிடம் ஓட்டிக்கொண்டான்.

அம்மா முகம் பார்த்து அழுத குமரேசன் அங்கிருந்து எழுந்து 'அப்பா' எனக் கந்தசாமியைக் கட்டிக் கொள்ள, இருவரும் வெகுநேரம் அழுதனர். 'பார்றா... ஆம்பளப்புள்ள என்னமா அழுகுறான்னு... இப்புடி ஆம்பளப்புள்ளக அழுது நா பாத்ததில்லை... எப்பவுமே குமேரசன் பாசக்காரப்பய... ரொம்பநாள் அம்மாக்கிட்டயே வளர்ந்த பய, கல்யாண விஷயத்துலதான் கொஞ்சம் அப்படி இப்படி நடந்துக்கிட்டான்னாலும் கந்தசாமியும் சேரி, காளியம்மாளும் சேரி விட்டுக் கொடுக்கலையே... அந்தப்புள்ளயும் நம்ம சாதிதேன்... இவுக தேடிப் பாத்துக் கட்டியிருந்தாலும் இப்புடி ஒரு புள்ளைய பாத்திருக்க முடியுமா என்ன...' பெரியண்ணன் பக்கத்திலிருந்தவர்களிடம் மெதுவாகச் சொன்னார்.

"அத்தான்..." என குமரேசன் வர, எழுந்து அவனை அணைத்த அழகப்பன், அருகே உக்கார வைத்து தைரியம் சொல்ல, கண்ணதாசனும் அவனருகே வந்து உட்கார்ந்து கைகளைப் பிடித்துக் கொண்டான்.

"அண்ணன் வந்துக்கிட்டிருக்காம்... வரும்போது பேசினேன்... ஆமா என்ன இன்னும் கண்மணியக் காணோம்...?" என்றான்.

"இப்பத்தான் பேசினேன்... வந்துக்கிட்டு இருக்காம்...  அவன் கோயமுத்தூரில் இருந்து வந்துக்கிட்டு இருக்கான். நேர இங்க வந்துடுறேன்னு சொல்லி சாதி சனத்தைக் கூட்டிக்கிட்டு பச்சைக்கு வாங்கிக்கிட்டுப் போயிடுன்னு சொன்னானாம்.... அதான் சாமான் வாங்கிக்கிட்டு வருதாம்... அது மாமியா கூட முடியாததோட நானும் வாறேன்னு சொல்லிச்சாம்... சரி வேனுலதானே கூட்டிப் போறோம்ன்னு கூட்டிக்கிட்டு வருதாம்... வந்துரும்..." என்றார் அழகப்பன்.

"கண்மணி மாமியாவுமா..? பாவம் முடியாதவுக அவுக எதுக்கு வாறாங்க... வரலைன்னு கேக்கப் போறோமா என்ன..."

"மாப்ள... அதுக எல்லாம் பழைய காலத்து ஆளுங்க... பேச்சு வேணுமின்னா படக்குன்னு இருக்குமே தவிர, நல்லதுக்குப் போகாட்டியும் செத்த கேதத்தைத் தள்ளாதுக.. வந்துட்டுப் போகட்டுமே..."

"எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சா?"

"எல்லாம் பண்ணியாச்சு...  சரி குமரேசா... ஆளுக வாறாக... உக்காந்திருக்கது நல்லதில்ல... எந்திரிச்சு கேதங் கேக்கணும்... அதுவும் இன்னைக்கு கட்டி அழுகணுமில்ல... நீ வா ஒரு அஞ்சு பேரு நிக்கலாம்..." என்றான் கண்ணதாசன்.

"ம்... சரிண்ணே..."

"தம்பி தப்புக்காரனுக வந்துட்டானுக... அவனுகளை அடிக்கச் சொல்லிட்டேன்... தண்ணி வேணுங்கிறானுங்க..." என்றபடி வந்தார் கோவிந்தன்.

"என்ன சித்தப்பா... அவனுக வரும்போதே வாங்கிக்கிட்டு வரவேண்டியதுதானே... இப்ப யாரை அனுப்புறது...?"

"அவனுக குடிச்சிக்கிட்டே இருப்பானுக... ரேவதி மகன் கேதஞ் சொல்லப் போயிருக்கானுல்ல... அவனுக்கு போன் பண்ணச் சொல்றேன்... வரும் போது வாங்கிக்கிட்டு வந்துருவான்.. அப்புறம் பூமி குழி வெட்ட வந்துட்டானாம்... நம்ம ஆளுக ரெண்டு பேரு போயி நல்ல இடமாப் பாத்து வெட்டச் சொல்லணும்... ஏன்னா நம்ம ஐய்யாவு செத்தப்போ ஒரு இடத்தைக் காட்டிட்டு வர, குடி போதையில வைராத்தாவை புதைச்ச இடத்தை நோண்டி எலும்புகிலும்பு எல்லாத்தையும் அள்ளி கள்ளிக்குள்ள போட்டுட்டுப் பொயிட்டானுங்க... அப்புறம் வைராத்தா மகன் கத்திக்கிட்டு இருந்தான்... அதையும் பாக்கணுமில்ல...".

"ஆமா...  கிராமத்துல சுடுகாடுன்னு இருக்கதே ஒரு சின்ன இடம்... அதுல புதுசு புதுசா எங்கிட்டு இடம் தேடுறது... இருந்தாலும் கொஞ்சம் பாத்து வெட்டச் சொல்லணும்... யாரையாச்சும் ரெண்டு பேரை அனுப்புங்க சித்தப்பா..." என்றதும் "டேய் செல்வம்..." என்று கூப்பிட்டபடி எழுந்து சென்றார் கோவிந்தன்.

'டண்டக்கு நக்கும்... டண்டக்கு நக்கும்...' என்று தப்புக்காரனுக அடிக்கவும் சிறுவர்கள் எல்லாம் கூடி வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க... அதுல ஒருத்தன் 'பார்றா... கஞ்சிக்கு செத்தியா... கஞ்சிக்கு செத்தியான்னு அடிக்கிறானுங்க... காளியாயா என்ன கஞ்சிக்கா செத்துச்சு...' என பக்கத்தில் நின்றவனின் காதைக் கடிக்க அவன் 'சும்மா இருடே' என இவனை முறைத்தான்.

சேதி அறிந்த உறவுகளும் பழகிய மனிதர்களும் வந்து சென்று கொண்டிருந்தார்கள். காளியம்மாவை அடக்கம் பண்ணுவதற்கான வேலைகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, மற்றொரு பக்கம் அடக்கம் பண்ணி முடிந்ததும் அங்காளி பங்காளிகள் சாப்பிட சமையல் நடந்து கொண்டிருந்தது. ரேவது வீட்டில் இருந்து காபி கொண்டு வந்து கொடுக்க சிலர் மட்டும் குடித்தார்கள். 'வாயில பச்சத்தண்ணி படாம இருக்கீக மாமா... இந்தக் காபியவாவது குடிங்க' என கந்தசாமியிடம் கெஞ்சிப் பார்த்தும் 'அவ கட்டையாக் கெடக்கயில எனக்கென்ன காபி... வேண்டாந்த்தா...' என மறுத்துவிட்டார்.

கண்மணி உறவுகளோடு பச்சை கொண்டு வர, தப்புக்காரர்கள் பச்சையை அழைத்து வருவதற்கு அடித்து காசு பார்த்துக் கொண்டார்கள். அவளும் வந்து ஒரு பாடு அழுது முடித்தாள். பிள்ளைகள் இரண்டும் திவ்யா, முகேஷூடன் சேர்ந்து கொண்டார்கள்.

"அத்தான்... பிள்ளைங்க வர்றாங்களா...?" மெதுவாகக் கேட்டான் குமரேசன்.

"ம்... ஹாஸ்டல்ல இருந்து கிளம்பிட்டாங்க.... எப்புடியும் எடுக்குறதுக்கு முன்னாடி வந்திருங்க..."

"ம்... அம்மாவுக்கு மூத்த பேத்தி மேல ரொம்பப் பிரியம்... எப்பவும் அவளை ஆஸ்டல்ல போயி விட்டுருக்காக... பாவம் சாப்பாடு பிடிக்குதோ இல்லையோன்னு பொழம்பித் தீர்க்கும்... எம்மருமவளும் ஊருக்கு வந்த ஆயாக்கிட்டத்தானே ஓடியாரும்..."

"ஆமா... பயகிட்ட சொல்லிட்டேன்... அதுக்கிட்ட ரொம்ப முடியலை... ஆயாவுக்கு ரொம்ப சீரியஸ்... நீ கிளம்பி வான்னுதான் சொன்னேன்... அதுக்கே அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிருச்சு.... எப்புடி மாப்ள... திடீர்ன்னு இப்படின்னா.... நம்மனாளே தாங்க முடியலை... பிள்ளைங்க..." கண்ணைத் துடைத்துக் கொண்டார். 

அப்போது வந்து நின்ற காரின் முன்பக்கத்தில் இருந்து மணி இறங்க, பின்னால் இருந்து சித்ராவும் மகாவும் இறங்கினார்கள். மணி இறுக்கமான முகத்துடன் வந்து அப்பாவைக் கட்டிக் கொண்டவன், அப்படியே போய் அம்மா முகத்தையே பார்த்துக் கொண்டு நிற்க, அக்கா, தங்கை, கண்ணதாசன் மனைவி என எல்லாரும் அவன் காலைக் கட்டிக் கொண்டு அழுதார்கள். சித்ரா ஓவென ஒப்பாரி வைத்தவள், 'அயித்தே... என்ன வளத்த அயித்தே...' எனக் கத்திக்கொண்டே போய் எல்லோரையும் கட்டிக் கொண்டு அழுதாள்.

"சித்தப்பா... நம்ம அப்பத்தா..." என்று கத்தியபடி குமரேசனைக் கட்டிக் கொண்ட மகாவுக்கு 'சரிடா... நம்ம குடுத்து வச்சது அவ்வளவுதான்... அழுகாத... விடு...' எனக் கண்ணீரோடு ஆறுதல் சொல்ல, அருகே இருந்த அழகப்பனையும் கண்ணதாசனையும் பார்த்து 'மாமா...', 'கண்ண சித்தப்பா' என்று சொல்லி சிறிது நேரம் அவர்களிடம் நின்றவள் 'ஐயா...' என கந்தசாமியைக் கட்டிக் கொண்டு அழுதுவிட்டு அப்பத்தாவிடம் போய் அமர்ந்தாள்.

கள்கள், அக்கா தங்கைகள், சம்பந்தப்புரங்கள், நெருங்கிய உறவுகள் என எல்லாரும் பச்சை கொண்டு வந்திருந்தார்கள். ஒரு வழியாக சொந்த பந்தம் எல்லாம் வந்து சேர்ந்துவிட்டது. வீட்டுக்குள் அழுகுரல் ஓயவில்லை... கந்தசாமி கண்ணீரோடு அமர்ந்திருந்தார்.

"என்னப்பா... எல்லாரும் வந்தாச்சு... இன்னம் கண்மணி புருஷனை மட்டும் காணோம்... நேரமாகுதுல்ல... மத்த வேலைகளைப் பாத்தாத்தானே நல்லது. அப்புறம் அடக்கம் பண்ணிட்டு இருட்டுக்குள்ள வரமுடியாதுல்ல..." என அழகப்பனிடம் கேட்டார் கோவிந்தன்.

"வந்துட்டாராம் சித்தப்பா... இன்னும் அரை மணி நேரத்துல வந்துருவேன்னு சொன்னார்... உங்க பேரனும் பேத்தியும் வர்றாங்க... இங்க இருந்து யாரும் போயி கூட்டப் போகமுடியாது... ஆட்டோவுல வாறேன்னுதான் சொன்னுச்சுக... ரெண்டும் தனித்தனியா வருங்க... பய ஆட்டோவுல வந்துருவான்... பொம்பளப்புள்ளய தனியா ஆட்டோவுல... அதான் பஸ் ஸ்டாண்டுல நின்னு கூட்டிக்கிட்டு வரச்சொன்னேன். வந்துருவாக... மத்த வேலையைப் பாக்கலாம்..."

"ஆமா... ஆமா... பாடை கட்ட நல்ல கருவைக் கம்பா பாத்து வெட்டியாரச் சொல்லி செல்வத்தை அனுப்பியிருக்கேன். வந்ததும் கட்டிரலாம்... ஆமா பல்லக்கு மாதிரி ஜோடிக்கணுமா...?"

"ம்... கம்புகளைக் கட்டி பூக்களைப் போட்டு வைக்கலாம்... பூத்தான் நிறைய இருக்கே... அப்புறம் ரொம்ப வெயிட்டும் வேணாம்... அம்புட்டுத்தூரம் தூக்கிக்கிட்டுப் போகணுமில்ல..." என்றார் அழகப்பன்.

பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பாடை தயாராக, நீர்மாலை எடுத்து வந்து இறுதி ஊர்வலத்துக்கு கிளம்புவதற்காக காளியம்மாளை குளியாட்டி, அவளின் கல்யாணப் பட்டைக் கட்டி, பொட்டுப் பூ வைத்து தயார் செய்தார்கள். அப்போது ரமேஷின் கார் வந்து நிற்க, அதிலிருந்து இறங்கிய சுந்தரி மகள் "ஆஆஆயாயா....." எனக் கத்திக் கொண்டே வீட்டுக்குள் ஓடினாள். அவள் பின்னே வந்த ரமேஷ் எல்லாரையும் பார்த்துக் கொண்டே நேரே போய் மாமியாரின் காலடியில் மாலையைப் போட்டுவிட்டு வணங்கியவன் மாமனாரிடம் வந்து அவரின் கைகளைப் பிடித்துக் கொண்டு கண்கலங்கினான்.

பின்னர் அழகப்பனிடம் வந்து "ஆக வேண்டியதைப் பாக்கலாமில்லண்ணே...?" என்றவன் மணி, குமரேசன், கண்ணதாசனிடமும் பேசினான்.

"ம்... எல்லாம் ரெடி... தூக்க வேண்டியதுதான்..."

"இன்னம் மாப்ள வரலையேத்தான்...?" என அழகப்பனைப் பார்த்துக் கேட்டான் மணி.

அவர் பதில் சொல்லும் முன்னரே "வந்துருவான்... காரைக்குடி வந்துட்டானாம்... என்ன ஒரு இருபது நிமிஷத்துல வந்து இறங்கிருவான்... பஸ் ஸ்டாண்டுல இருந்து ஆட்டோவுல பத்து நிமிசம்..." என்றான் கண்ணதாசன்.

அப்போது அவர்களின் சித்தப்பா மகனும் குடும்பத்துடன் வந்து சேர, காளியம்மாள் வீட்டில் இருந்து பாடைக்கு பயணப்பட்டாள். கந்தசாமியும் பெண்களும் கதறி அழ, "ஏய் மெதுவாத் தூக்குங்கப்பா... பாடையில அந்தப் பக்கமா தலையை வையுங்க... ஏம்பா ஒரு பழைய தலகாணிய கட்டிட்டிங்களா...? மேல காளியம்மா பொறந்த வீட்டுல இருந்து வந்த கச்சையைப் போடுங்கப்பா" எனக் கத்திக் கொண்டிருந்தார் கோவிந்தன்.

பாடையில் வைத்து ஆடாமல் எல்லாப் பக்கமும் கட்டி மாலைகளைப் போட்டு மகள் குடம், மருமகள் குடமெல்லாம் உடைத்து 'தூக்குங்கப்பா...' என்றபோது வந்து நின்ற ஆட்டோவில் இருந்து சுந்தரி மகன் இறங்க, 'இருங்கப்பா பேராண்டி கடைசியா ஆயா முகத்தைப் பார்க்கட்டும்' என்று ஒருவர் சொல்ல, அவனும் ஆயாவைப் போய் பார்த்துவிட்டு அப்பாவிடம் ஒட்டிக் கொண்டான்.

காளியம்மாளின் உடல் நாலு பேர் சுமக்க, கந்தசாமி கொள்ளிச் சட்டியை தூக்கிச் செல்ல, அவர் பின்னே மற்றவர்கள் நடக்க சுடுகாடு நோக்கி நகர்ந்தது. அங்கு வைத்துச் செய்ய வேண்டிய சடங்குகளை அம்பட்டையன் செய்ய, எல்லாம் முடிந்து அடக்கம் செய்யப்பட்டது. வீட்டில் எல்லாம் அழுகாத மணி அம்மா முகத்தில் மண்ணை அள்ளிப் போடும் போது கதறிவிட்டான். கந்தசாமியும் மகன்களும் மொட்டை அடித்து காரியம் செய்ய, அழகப்பன் மாப்பிள்ளை முறை செய்தார். அங்கு வைத்தே எல்லோருக்கும் பட்டுவாடா செய்துவிட்டு வீட்டுக்கு வந்து குளித்துச் சாப்பிட்டார்கள்.

"ஏம்ப்பா... நாளைக்கு காடாத்திட்டு... மூணா நாலு எண்ணெய் தேய்ச்சுக் குளிச்சிரலாமுல்ல... என்ன கந்தசாமி நீ என்ன சொல்றே..?" மெதுவாகக் கேட்டார் கோவிந்தன்.

"ம்... அப்படியே செய்வோம்..."

"கருமாதி...?"

"அஞ்சாம் நாளே வச்சிரலாம் சித்தப்பா..." என்றார் அழகப்பன்.

"ஏம்ப்பா... எட்டுலயோ பதினொன்னுலயோ வைக்கலாமுல்ல... எதுக்கு அவசரம்...?"

"இல்ல அவனுக வேலைக்கு லீவு போட்டுட்டு வந்திருக்கானுக... பிள்ளைங்க படிப்பு... இதெல்லாம் இருக்குல்ல... அஞ்சாம் நாளுன்னா எல்லாருக்கும் வசதியா இருக்கும்ல..."

"அதுவும் சரிதான்... என்ன கந்தசாமி..."

"சரித்தான்... ஆனா அவசரமா எதுக்குச் செய்யணும்... எட்டாம் நாளு வைக்கலாமே... அஞ்சுக்கும் எட்டுக்கும் எம்புட்டுத் தூரம் இருக்கு... என்னப்பா... நாஞ்சொல்றது" பதில் சொன்னபடியே மாப்பிள்ளையைப் பார்த்தார்.

"இல்ல மாமா... மணி, குமரேசனுக்காக சொன்னேன்... அவனுககிட்ட கேட்டுக்கலாம்..."

"இதுல என்னத்தான் கேக்குறதுக்கு இருக்கு... நீங்க என்ன சொல்லுறீங்களோ அதுதான்... அப்பா ஆசை... எதுக்கு தடுக்கணும்... எட்டாம் நாள் வச்சிப்போம்... மூணாம் நாளு எண்ணெய் தேச்சுக்குளிச்சிட்டு நாங்க பொயிட்டு ரெண்டு நாள்சென்டு வாரோம்..." என்றான் மணி.

"சரிப்பா.... எல்லாருக்கும் சொல்லிவிட்டுரலாம்..." என்று முடித்தார்கள்.

அன்று இரவு யாருக்குமே தூக்கம் வரவில்லை. "நேத்து இங்க படுத்திருந்தா... இந்தா இங்கன... எங்கூட பேசிக்கிட்டு... இன்னைக்கு அநாதையா கெடக்கா... இப்படி பட்டுன்னு பொயிட்டாளே...." என்று புலம்பி அழுத கந்தசாமியை தேற்றிக் கொண்டிருந்தான் கண்ணதாசன்.

(வேரும் விழுதுகளும் வளரும்)
-'பரிவை' சே.குமார்.