மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015மனசின் பக்கம் : சுதந்திரமாக பேசலாமா?

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.


ந்திய சுதந்திர தினம் குறித்து முகநூலில் சிலர் மோசமான கருத்தைப் பகிர்கிறார்கள். இது மிகவும் தவறான ஒன்றாகும். அரசியல்வாதிகள் செய்யும் அசிங்கங்களுக்கு நம் தாயைப் பழிப்பது நியாயமா என்ன..? இந்தியா என் நாடு... என் தாய் நாடு... என்ற எண்ணம் ஒவ்வொரு இந்தியருக்கும் இருக்க வேண்டும். கேலி கிண்டல் செய்யும் மனிதர்களை எல்லாம் இவ்வளவு சுதந்திரமாக இருக்க வைத்திருக்கும் நாடு நம் நாடு என்பதை மனதில் கொள்ளுங்கள். அரசியல் தலைவர்களும் அவர்களின் வாரிசுகளும் நம் நாட்டை கூறு போட்டு குதறி வைத்திருக்கலாம். இவர்களை விரட்டி அடிப்பதை விட்டுவிட்டு நாட்டின் பெருமையை, ஒரு சிறப்பான தினத்தை கேவலப்படுத்துவதில் உங்களுக்கு அற்ப சந்தோஷம் என்றால் செய்து கொள்ளுங்கள்... ஏனென்றால் நாம் சுதந்திர நாட்டின் பிள்ளைகள். நமக்கு எதுவேண்டுமானாலும் பேச, எழுத சுதந்திரம் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை நான் எங்கிருந்தாலும் என் நாடு இந்தியா என்று சொல்வதையே பெருமையாகவும் கர்வமாகவும் நினைக்கிறேன். என் தாய் நாட்டின் சுதந்திர தினத்தில் ஜாதி, மத, இன வேறுபாடுகளைக் களைந்து எல்லோரும் ஓர் குலம்...  எல்லோரும் ஓர் இனம்... என்ற அன்புள்ளத்தோடு ஒற்றுமையாய் வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன்.


லுவலகத்தில் உடனே முடிக்க வேண்டிய முக்கிய பணியின் காரணமாக கடந்த பத்து நாட்களாக அதிகமான வேலை... ஊருக்குப் பேசுவது.. எழுதுவது... படிப்பது என எல்லாவற்றிலுமே தடங்கல் ஏற்பட்டது. ஒரு வழியாக அந்த வேலையை முடித்து விட்டோம்... இரண்டு நாட்களாக  வேலையில்லாமல் கொஞ்சம் பொழுதைப் போக்கினோம். நேற்று மாலை கிளம்பும் சமயத்தில் மீண்டும் ஒரு வேலை... ஒருவேளை இந்த வேலை விரைந்து முடிக்க வேண்டும் என்றால் மீண்டும் இரவு பகல் வேலை இருக்கும். இங்கும் தற்போது கம்பெனிகளின் நிலை சரியில்லை. எங்கள் கம்பெனிக்கும் இதுவரை வேறு புதிய வேலைகள் கிடைக்கவில்லை என்பதாலும் வேறு கம்பெனி சென்றாலும் புதிய வேலையில் எவ்வளவு நாள் தொடருவோம் என்று அறியாத நிலை... அதனால் எங்கள் கம்பெனி எத்தனை மணி நேரம் வேலை செய்யச் சொன்னாலும் செய்ய வேண்டிய நிலை.  

போன வார வியாழன் அன்று இரவு முழுவதும் பணி இருக்கும் என்பதால் சாப்பாடு வாங்கி வருகிறேன் என்று எங்க இன்சினியர் சொன்னான். நான் வியாழன் அன்று சாய்பாபாவிற்காக விரதம் இருக்கிறேன் என்பதால் என்னிடம் நீ என்ன சாப்பிடுவே என்று கேட்க, இரவு பனிரெண்டு மணிக்கு மேல ஆச்சு எதாயிருந்தாலும் பரவாயில்லை என்று சொல்லிவிட்டேன். அவனும் வாங்கி வந்தான்... என்ன தெரியுமா?

மாட்டுக்கறி போட்ட பீட்சா... பார்த்ததுமே என்ன இது... மாட்டுக்கறியா என்றதும் ஏன் சாப்பிட மாட்டியா...? உங்கிட்ட கேட்டுத்தானே வாங்கியாந்தேன் என்றான். மாட்டேன் என்றதும் ஆடு, கோழி சாப்பிடுவே ஆனா மாடு சாப்பிடமாட்டே... என்னடா இது என்றான். எனக்கு வேண்டாம்... என்று சொன்னதும் ஓ உன்னோட மதத்தின் காரணமாக சாப்பிட மாட்டாயோ என்றவன் ஒரு சீஸ் பிரட்டும், இலைகளைப் போட்ட சாலட்டும் கொடுத்து இதை சாப்பிட்டுட்டு எப்படி வேலை பாக்கப்போறே என்றான் வருத்தமாய். நான் சொன்னேன் இந்த எட்டு வருசத்துல எத்தனையோ முறை இரவு வேலை பாத்திருக்கிறேன்... ஒரு பைசாவுக்கும் பிரயோசனம் இல்லை என்றாலும் இரவு சாப்பாடு கூட நாமதான் சாப்பிட்டுக்கணும்... இன்னைக்குத்தான் நீ வாங்கியாந்தே... அதையும் சாப்பிட முடியலைபாரு என்றதும் சிரித்துக் கொண்டே எழுந்து சென்றான்.


ணையாழி இந்த மாத குறுநாவல் போட்டிக்கு ஒரு கதையை மிகவும் கஷ்டப்பட்டு குறுநாவலாக்கி அனுப்பிவிட்டேன். வெற்றி தோல்வி என்பதை எல்லாம் கணக்கில் எடுக்கவில்லை... கணையாழி போன்ற பத்திரிக்கைகளுக்கு போட்டிக்கென அனுப்பும் போது மிகச் சிறந்த நபர்கள் வாசிக்க கூடும். அவர்கள் மனதில் இவர் நல்லா எழுதியிருக்கிறான் என்ற எண்ணம் வந்தாலே போது மனசுக்குள் நல்லா வருவேடான்னு வாழ்த்துவாங்கதானே... அது போதும். அடுத்து கல்கி குறுநாவல் போட்டிக்கான கதையை எழுத ஆரம்பிக்கணும். தேனம்மை அக்கா கூட தனது பதிவில் கல்கி போட்டியில் எழுதுங்க என நிறையப் பேரை குறிப்பிட்டிருந்தார். அதில் அடியேன் பெயரும் இருந்தது. முயற்சி திருவினையாக்கும் என்பதால் நானும் முயற்சிக்க இருக்கிறேன். நீங்களும் கலந்துக்கங்க நட்புக்களே...


சிவகங்கை மாவட்டத்தில் இரண்டு வக்கீல்கள் கொம்பன் படத்தில் கார்த்தி நடித்திருக்கும் கதாபாத்திரம் எங்க ஜாதிக்கானது... இல்லை எங்க ஜாதிக்கானது என சுற்றுலா போன இடத்தில் முட்ட ஆரம்பித்து... அதை தினமும் ஊதி... ஊதி... வன்மத்தை வளர்த்து ஒரு நாள் இரவு மீண்டும் சுற்றுலாவுக்குச் செல்ல கோர்ட் வளாகத்துக்கு வந்த போது பெரும் மோதலாக உருவெடுத்து ஒரு வக்கீல் மற்றொரு வக்கீலை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு போலீஸில் போய் சரணடைந்திருக்கிறார். 

சினிமா என்பது பொழுது போக்குச் சாதனமே... இரண்டு மூன்று மணி நேரம் பார்த்து ரசிக்கலாம்.  அதன் பிறகு அது குறித்த தாக்கத்தை மனசுக்குள் வைத்துக் கொள்ளக் கூடாது. எதற்காக அதைத் தூக்கிச் சுமக்க வேண்டும். கேவலம் ஒரு சினிமாக் கதாபாத்திரம் ஏற்ற சாதிக்காக ஒரு உயிரை எடுத்திருக்கிறான் படித்த வக்கீல் ஒருவன்... உயிர் என்ன அந்தளவுக்கு மலிவாகப் போச்சா... செத்தவனுக்கு இப்போத்தான் திருமணமாகி இரண்டு மாதக் குழந்தை இருக்கிறதாம்... என்ன சொல்வது? இவர்கள் எல்லாம் திருந்துவது எப்போது? அவன் எப்போது ஜெயிலில் இருந்து வந்தாலும் வெட்டுவோம் என்கிறார்கள் செத்தவனின் உறவுகள். இந்தப் பழிக்குப்பழி இனி தொடரத்தானே செய்யும். பழிக்குப்பழி என்றதும் எங்கள் சொந்தத்தில் நிகழ்ந்த கொடூர சம்பவம்தான் நினைவுக்கு வருகிறது. இந்த விவரங்களை வைத்து பழிக்குபழி குறித்து தனிப்பதிவாக விரிவாக எழுதுகிறேன்.


துபாய்க்கு சுற்றுலா வந்து கடலில் குளிக்கும் போது  தண்ணீருக்குள் சிக்கிக் கொண்டு உயிருக்குப் போராடி காப்பாற்றுங்கள் என்று கத்திய 20 வயது மகளை தனது கண்ணெதிரே சாகவிட்டிருக்கிறார் ஒரு தந்தை. ஆம்... காப்பாற்றச் சொல்லி கத்திய அந்தப் பெண்ணைக் காப்பாற்ற பணியில் இருக்கும் காவலர் குழு தண்ணீருக்குள் இறங்கும் போது என் மகளை அந்நிய ஆடவன் தொடக்கூடாது என அந்தத் தந்தை சண்டையிட்டு அவர்களை இறங்க விடாமல் தடுத்து அந்தப் பெண்ணை இறக்க விட்டிருக்கிறார். இப்போது தந்தை கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். ஒரு உயிரைக் காப்பாற்றும் போது எந்த சாதி, எந்த மதம் என்று ஏன் பார்க்கிறீர்கள்... மனிதத்தை மட்டுமே பாருங்கள்... இருபது வருடம் வளர்த்த பெண்ணை ஒருவன் காப்பாற்றும் பொருட்டு இருபது நிமிடம் தொடுவதால் மதமும் அழிந்து விடாது... அவளின் கற்பும் கெட்டுவிடாது... இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் மதங்களையும் அந்த மூட நம்பிக்கைகளையும் தூக்கிச் சுமப்பார்களோ தெரியவில்லை.... அநியாயமாய் ஒரு உயிர் போய்விட்டது. திருந்துங்கள் மனிதர்களே... அடுத்த மதத்துக்காரனோ ஜாதிக்காரனோ ஆபத்து நேரத்தில் தொடுவது ஒண்ணும் தீட்டு அல்ல என்பதை உணருங்கள் மனிதர்களே...


செல்பி மோகத்தால் துபாயில் ஒரு கொலை நிகழ்ந்திருக்கிறது. நம்ம ராமநாதபுரத்துக்காரர் நண்பர்களுடன் ஹோட்டலுக்கு போயிருக்கிறார். இவர்கள் அமர்ந்து சாப்பிட்ட மேஜைக்கு அருகே ஒரு அரபி இளைஞன் காதலியுடன் அமர்ந்திருக்கிறான். இவர்கள் சந்தோஷமாக சாப்பிட்டு செல்பி எடுத்திருக்கிறார்கள். ஆனால் அந்த அரபியோ இவர்கள் செல்பி எடுப்பது போல் தனது காதலியை போட்டோ எடுக்கிறார்கள் என அவர்களிடம் வார்த்தைப் போரில் ஈடுபட்டிருக்கிறான். ஒரு கட்டத்தில் சண்டை வலுக்க, அவன் இவனைத் தலையில் தாக்கியிருக்கிறான். ஆள் அங்கேயே மூச்சை விட்டுட்டான். போலீஸ் வந்திருக்கிறது... ஆஸ்பிடல் கொண்டு போயிருக்கிறது... எதுவும் நடக்கவில்லை... மகன் சம்பாரிக்கிறான் என்று இருந்த பெற்றோருக்கு பிணம் அனுப்பி வைக்கப்பட இருக்கிறது. அடித்த அரபியோ ஜெயிலில் கிடக்கிறது. செல்பி மோகம் கொலையில் போய் முடிந்தாலும் நம்ம எல்லோரும் செல்பிக்குள் சிறைபட்டுத்தான் கிடக்கிறோம்.ன்பு அண்ணன் கில்லர்ஜி இன்று என்னைத் தேடி வந்திருந்தார். எப்போதும் அவர்தான் தேடி வருவார்... நான் போவதில்லை என்பது வேறு விஷயம்... நிறைய விஷயங்கள் பேசினார்... ஒரு காபியுடன் ஒரு மணி நேரம் புதுக்கோட்டை வலைப்பதிவர் மாநாடு, மற்றும் எழுத்துக்கள் குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம். நிறையப் பேசிய நிறைவான சந்திப்பு... அண்ணா... வாராவாரம் வந்துருங்க...:)னதருமை அண்ணன் குடந்தையூர் சரவணன் அவர்கள் 'அகம் புறம்' என்ற தனது இரண்டாவது குறும்படத்தை நாளையும் எடுக்கவிருக்கிறார். சில நொடி சிநேகம் என்ற தனது முதல் குறும்படத்தில் மிகச் சிறப்பான கருத்தைக் கையாண்டிருந்தார். ஆனால் அந்தப்படம் எதிர்பார்த்த அளவு மக்களைச் சென்றடையவில்லை என்பதில் எனக்கு வருத்தமே. இந்த முறை திரில்லர் கதையை கையிலெடுத்திருக்கிறார். மிகச் சிறப்பாக... எல்லோரையும் கவரும் வண்ணம் கண்டிப்பாக எடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது.  அண்ணனின் கையில் வெற்றிக் கோப்பை கிடைக்க வாழ்த்துகிறேன்... நீங்களும் வாழ்த்துங்கள் நட்புக்களே....புதுக்கோட்டையில் வலைப்பதிவர் மாநாடு மிகச் சிறப்பாக நடைபெறும் என்பதை திரு.முத்துநிலவன் ஐயா அவர்களின் பதிவுகள் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கின்றன. மேலும் புதுக்கோட்டை வலைப்பதிவு சகோதர, சகோதரிகள் எல்லாரும் முனைப்புடன் பணியை ஆரம்பித்திருக்கிறார்கள். சென்ற வருடம் மதுரையில் நடந்த போது கலந்து கொள்ள முடியவில்லையே என்ற ஏக்கம் இருந்தது. அந்த ஏக்கம் இந்த முறையும் தொடரும் போல்தான் தெரிகிறது... விழாவுக்கு செல்ல வேண்டும் என்று முயற்சித்தாலும் இப்போது இருக்கும் அலுவலகச் சூழல் அதற்கு பெரிய முட்டுக்கட்டையாக இருக்கும் என்றுதான் தோன்றுகிறது. கலந்து கொள்ள முடியாவிட்டாலும் 'மனசு' அங்குதான் இருக்கும். விழா மிகச் சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.

-'பரிவை' சே.குமார்.

13 கருத்துகள்:

 1. வணக்கம் நண்பரே..
  நம் சுதந்திர தின வாழ்த்துகள்
  நிறைய தகவல் களஞ்சியம் தந்து இருக்கின்றீர்கள் இருப்பினும் பலதும் மனதை காயப்படுத்தியது
  இந்த நன்நாளில் மதம் மறந்து மனிதம் வளர்ப்போம் என உறுதி கொள்வோம்
  வாழ்த்துககள்

  இன்னும் ஒன்றும் எழுதவில்லை என்று சொன்னீர்கள் வீட்டுக்கு வந்து பார்த்தால் இவ்வளவா ?

  எனினும் வாழ்த்துகள்
  தமிழ் மணம் 1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அண்ணா...
   தங்களைச் சந்தித்த பிறகு அறைக்கு வந்து 'அப்பத்தா' என்னும் தலைப்பில் எழுத நினைத்து அதை குறுநாவல் ஆக்கும் முயற்சியில் விட்டு விட்டு சின்னச் சின்ன செய்திகளைத் தொகுத்தேன். பழிக்குப் பழி என சமீபத்திய கொலை நிகழ்வுகளை வைத்து எழுத நினைத்தேன். கடைசியில் இந்தச் சரக்கே தேறியதால் எழுதி பதிவிட்டேன். எல்லாமே நம் சந்திப்புக்குப் பிறகு எழுதியவையே...

   பாருங்க... அதுவரை எழுத மூடில்லை என்று சொன்னேன் அல்லவா... தங்களுடன் பேசிய பிறகு கொஞ்சம் புத்துணர்ச்சி வந்து அறைக்கு வந்ததும் எழுதிட்டேன்...

   தங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 2. சுதந்திர தின வாழ்த்துகள். பணி இறுக்கம் முடிந்ததா? கணையாழி போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள். சில வேதனை தரும் செய்திகளையும் பகிர்ந்திருக்கிறீர்கள். குடைந்தையூர் சரவணன் ஸாருக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அண்ணா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
   பணி இறுக்கமா? கடந்த வாரம் கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்க விட்டார்கள். வரும் வாரம் (நாளை முதல்) மீண்டும் இறுக்கமான சூழல்தான் அமையும் போல் தெரிகிறது...

   எதிர்த்தால் நான் மட்டுமே எதிர்க்கணும்... மலையாளியும் பாகிஸ்தானியும் பேசவே மாட்டார்கள்... அதனால் எனக்கு மட்டுமே கெட்டபெயர் இருக்கிறது... இப்போ நானும் மலையாளி ஆயிட்டேன்... ஆமா சாமி மட்டுமே போடுறதுன்னு முடிவு பண்ணிட்டேன். இருந்தாலும் அப்பப்ப நமக்குள்ள இருக்க சிங்கம் சீறிடுது... அப்புறம் எங்காளு வந்து எல்லாரும் சும்மா இருக்கானுக... நீ வேலை பாத்துட்டு எதுக்கு எல்லாருக்குமாக பேசி மேல பேரைக் கெடுத்துக்கிறேன்னு சத்தம் போடுவான்... இன்னும் கோவத்தைக் குறைக்கணும் அண்ணா...

   நீக்கு
 3. அதிகமான செய்திகள். நல்ல பகிர்வு. கணையாழியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
  இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 4. சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!..

  பதிலளிநீக்கு
 5. கில்லர்ஜி கூறியிருப்பது போல் மன வருத்தம் தரக்கூடிய பல தகவல்களை பதிந்திருந்தாலும் பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காப்போம் என்ற உறுதி மொழியை இன, மத,ஜாதி, மொழி வேறுபாடு துறந்து எல்லா இந்தியரும் ஏற்போம்.

  பதிலளிநீக்கு
 6. இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் ! கணையாழியில் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள் !

  பதிலளிநீக்கு
 7. பல்வேறு தகவல்கள்! கணையாழி போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்! பதிவர் சந்திப்பு வேலைகள் சுறுசுறுப்பாக இருக்கின்றன. நான் கலந்து கொள்ள ஆவலாக இருந்தாலும் அந்த நாட்களில் உள்ள பணிச்சுமைகள் தடுக்கிறது இந்த முறையும் ஏமாற்றம்தான் மிஞ்சும் போல!

  பதிலளிநீக்கு
 8. போட்டிகளில் வெற்றி பெற வாழ்த்துகள் குமார்.

  பணிச் சுமை.... இங்கேயும் அதே அதே...

  செல்ஃபி மற்றும் பெண் காப்பாற்றப் படுவதை தடுத்த தந்தை செய்திகள் படித்து மனதில் வருத்தம்.

  பதிலளிநீக்கு
 9. போட்டிகளில் வெற்றி பெற வாழ்த்துகள் குமார்...

  ஒரு சில நல்ல விசயங்களோடு மனதை வேதனிக்கும் சில கெட்டதும்...முக்கியமாக செல்ஃபி....தந்தையே தனது மகளைக் காப்பாற்ற விடாமல் செய்தது...மனிதம் எங்கே...எப்படி அவரால் தன் மகளை இழக்க முடிந்தது???? கடவுளே

  நண்பர் குடந்தையாரின் குறும்படத்தில் நாங்களும் கலந்து கொண்டதால்தான் வலைப்பக்கம் வர இயலவில்லை...படம் நன்றாக வந்திருக்கிறது....இன்னும் பல நகாசு வேலைகள் இருக்கின்றதே...குடந்தையார் நிச்சயமாக வெற்றி பெறுவார்....அவரது உழைப்பு வெற்றி பெறும்....

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...