மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 17 ஜூன், 2020

சினிமாவும் வாழ்வியலும் - ஆர்.பாண்டியராஜன்

மீரக எழுத்தாளர் மற்றும் வாசகர் வட்டம் இன்று மாலை நடத்திய காணொளி நிகழ்வில் இயக்குநர் ஆர்.பாண்டியராஜன் அவர்களுடன் 'சினிமாவும் வாழ்வியலும்' என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது.
படம் இதைக் கொண்டிருக்கலாம்: Amirtham Surya
திரு. ஆர். பாண்டியராஜன் அவர்களைப் பற்றிச் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை இருந்தாலும் அவரே வருத்தப்பட்ட, சொல்லித் தெரிய வேண்டிய ஒன்று இருக்கிறது என்றால் அது எம்.ஏ., எம்.பில் முடித்தவர் நான்காண்டுகள் படித்து டாக்டர் பட்டம் வாங்கியிருக்கிறேன் என்றதுதான், ஒருத்தர் கூட டாக்டர் என்று கூப்பிடுவதில்லை ஆனால் நீங்க என்னை டாக்டர் எனச் சொல்லியிருக்கிறீர்கள் என்றார்... அதைத்தான் இங்கு முதலில் சொல்ல வேண்டும் மற்றபடி பாண்டியராஜன் நம் பள்ளிக் கல்லூரி நாட்களைக் களவாடிக் கொண்டவர் என்பதால் ஆசிப் அண்ணன் சொன்னது போல் ஊரறிந்த ஒருவருவருக்கு அறிமுகம் தேவையில்லை.
நிகழ்வு தொடங்கும் முன்னே இடத்தைப் போட்டாச்சு... எப்பவும் போல் கணிப்பொறியில் இணைப்பு பெற்றதால் வீடியோ வேலை செய்யவில்லை. செல்போனில் ஜூம் ஏற்றியும் வேலைக்கு ஆகவில்லை. அப்ப நாளைக்கு மட்டும் எப்படி முகம் காட்ட முடியும் என்று பலருக்குத் தோன்றும்... செல்போனில் சரி செய்ய வேண்டும் அல்லது அறை நண்பர்கள் எல்லாரும் உண்டு உறங்கும் நேரமென்பதால் (விடுமுறை தினத்தில் 7 மணிக்கு மேல்தான் எழுவார்கள்) அவர்களின் கணிப்பொறியை இரவல் வாங்கிக் கொள்ள வேண்டும். அந்தக் கதை இங்கு தேவையில்லைதான்.
நிகழ்வு ஆரம்பிக்கும் முன் நானெல்லாம் துபை வரும் முன்னர் இருமுறை இங்கு வந்திருப்பார் போல அந்த நிகழ்வு, அப்போது ஒருவர் டிவி பரிசாக கொடுத்தது, அதைக் கொண்டு செல்ல, அவசர விடுப்பில் சென்ற ஒருவரை விமான நிலையத்தில் பிடித்தது என அப்போதைய நிகழ்வுகளை நினைவில் நிறுத்திப் பேசிக் கொண்டிருந்தார். உண்மையிலேயே ஒரு பிரபலக் கலைஞன் பழையதை நினைத்துப் பேசியது வியப்பாக இருந்ததுடன் அந்த மனிதனின் நேசம் அதில் தெரிந்தது.
அப்புறம் வழக்கம் போல பேச ஆரம்பித்தார்... அவர் சினிமாவுக்குள் நுழைந்தது... அவர் அப்பா பல்லவன் பஸ்ஸில் டிரைவராக இருந்தது எனப் பேசி, ஆண்பாவம் படத்தில் கதாநாயகனாக நடிக்கக் காரணம் என்ன என்பதைச் சொல்லி, மகன்கள் மருமகள்கள் எல்லாம் சொல்லி எனக்கு ஒரே ஒரு பொண்டாட்டிதான் என்றார் சிரிக்காமல்.
சினிமா தனது வாழ்வுடன் எப்படிப் பயணித்தது... சினிமாவால் தான் பெற்றது என்ன என்பதைச் சொல்ல, தனது திருமணத்துக்கு எம்.ஜி.ஆரும் கலைஞரும் வந்ததைச் சொல்லி, அதெல்லாம் நடக்கும் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை என்றார். இதைப் பற்றிப் பேசும்போது எம்.ஜி.ஆர் வீட்டுக்குப் பத்திரிக்கை கொடுக்கச் சென்று அவர் இல்லாது திரும்பியதாகவும் கலைஞருக்குக் கொடுக்கச் செல்லும் போது இவரின் மாமானார் பெயரைப் பார்த்ததும் எம்.ஜி.ஆருக்கு கொடுத்தியாய்யா என்று கேட்டதாகவும் போனேன் ஆளில்லை என்று சொன்னதும் கொடுய்யா... வருவாரு என்று சொன்னதாகவும் இவர் மறுபடியும் போனபோதும் எம்.ஜி.ஆர் இல்லாதிருக்க, அங்கிருந்தவரிடம் கொடுத்து நாந்தான் கல்யாண மாப்பிள்ளை ரெண்டு நாளா இங்க வந்தும் அவரில்லை கொடுத்துருங்க என்று சொல்லி வந்ததாகவும் சொன்னபோது அனைவரின் முகத்தில் சிரிபின் பிம்பம்.
அதன் எம்.ஜி.ஆர் திருமணத்துக்கு வந்து இவர் சரியாக கட்டாத டையைச் சரிபண்ணி, சம்சா மாதிரி கட்டணும் என்று சொன்னதையும்... கலைஞரும் வந்திருந்ததையும் சொல்லி...இதெல்லாம் நடக்கும்ன்னு கனவாவது கண்டிருப்பேனா... ஆனால் நிகழ்ந்தது, இதை எல்லாம் செய்தது சினிமாவே என்றார்.
தன் திருமணம் முடிந்து சிவாஜியைப் பார்க்கப் போனபோது பாவாடை தாவணியுடன் நின்ற மூத்த தங்கையைப் பார்த்து யாருடா அது... உன் தங்கையா... அவ இருக்கயிலே உனக்கென்ன அவசரம்ன்னு கல்யாணம் பண்ணினே என்று அடித்தவர், முதல்ல புள்ளைக்கு கல்யாணம் பண்ணுனு சொல்லி, பார்க்கும் போதெல்லாம் மாப்பிள்ளை பார்த்துட்டியா என்று கேட்டாராம். தங்கை ரஜினி ரசிகை என்பதால் இவர் ரஜினிக்கு பத்திரிக்கை கொடுக்கும் போது சார் நான் பஸ் டிரைவர் மகன், நீங்க கண்டக்டரா ஓடியிருக்கீங்க... அதனால கண்டிப்பா வரணும்ன்னு சொன்னாராம். ரஜினியும் வந்தாராம்.
வாலி பற்றிப் பேசும் போது அவர் யார் வீட்டுக்கும் அதிகம் போய் விடமாட்டார் ஆனால் என் வீட்டுக்கு வருவார் என்றவர் வாலியுடனும் வைரமுத்துடனும் தன்னால் நட்பாய் இருக்க முடிந்ததற்கான காரணத்தைச் சொல்லும் போது யாரிடமும் அதிகம் பேச மாட்டேன் என்றும் எதைப் பேச வேண்டுமோ அதை மட்டுமே பேசுவேன் என்றும் சொன்னார். வாலி 'காதல் கசக்குதய்யா' என்ற ஒரு பாட்டின் மூலம் தன்னை உச்சத்துக்குக் கொண்டு போனதாகச் சொன்னார். தன் மூத்த மகன் பிறந்த போது பார்க்க வந்தவர் என்னய்யா பேர் வச்சிருக்கே என்று கேட்க, அப்பா வேலை பார்த்த பல்லவன் ஞாபகமா பல்லவன்னு வச்சிருக்கேன் என்றதும் அதோட ராஜனச் சேத்துக்கய்யா என்று சொல்லியதால் பல்லவராஜன் என்று வைத்து, மற்ற இருவருக்கும் ராஜன் சேர்த்ததாகவும் அவரின் ஆசியே தன்னை மேலே உயர்த்தியதாகவும் சொன்னார்.
மேலும் சில காலம் வாலியைப் பார்க்காதிருந்ததாகவும் பின்னொருநாளில் வீட்டுக்குப் போனபோது எங்கே இங்கே ஏன் வந்தாய் எனக் கேட்பாரோ எனப் பயந்ததாகவும் அவர் அப்படியெல்லாம் சொல்லாமல் எப்பவும் போல் உபசரிக்கவும், கொஞ்ச நாளா நான் இங்கிட்டு வரலை என்று மன்னிப்புக் கேட்டபோது நீ பட்ஜெட் படமெடுக்கிறார் நான் பட்ஜெட்டைக் கூட்டிட்டேன் உனக்கு கட்டுபடியாகணுமில்ல... அதான் வரலை... இதுக்கு ஏன் வருந்துறே என்றாராம்.
வாலி எப்போதும் மூணு சரணத்தை எழுதிக் கொண்டு வந்து கொடுத்து முகம் போகும் பாவனையைப் பார்த்து இந்தாய்யா இதுதான் உனக்கு எழுதியது என நான்காவதை தனது மற்றொரு பையில் இருந்து எடுத்துக் கொடுப்பாராம்... அது தனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்றார். காதல் கசக்குதய்யா பாட்டிற்கு மட்டும்தான் அவர் எழுதியதை மாற்றாமல் அப்படியே பயன்படுத்திக் கொண்டதாகச் சொன்னார். எனக்கு மட்டுமல்ல என் மகனுக்கும் நீங்கள் பாட்டெழுத வேண்டும் என்று சொன்னதாகவும், அது பற்றிய பேச்சு ஒரு முறை வரும்போது பாண்டியன் மகனுக்கு நான் பாட்டெழுத அவன் அஞ்சு ரூபாய் கொடுத்தால் போதும் என்றதாகவும் என் பேரனுக்கும் நீங்க எழுதுங்க அப்ப நான் அஞ்சு கோடி தாரேன் என்று சொன்னதாகவும் சொன்னார்.
தன்னை பணம் வாங்க ஊருக்கு வரும்படி சொல்லி, திருமண வீட்டை சாவு வீடு போல் தங்களிடம் காட்டி, ஹோட்டலில் தங்க வைத்து போட்டோ எடுத்து பணம் அப்புறம் தருகிறேன் என அனுப்பிய கதையையும், திரும்பும் போது அங்க செத்தவரைப் பாத்தியா... அழுகுரல் கேட்டியா என தன் உதவியாளரிடம் கேட்டதாகவும் தன்னையே ஒருவன் ஏமாற்றியதை உணர்ந்ததாகவும் சொன்னார்.
மண்பானை என்ற குறும்படம் எடுத்ததையும், அந்தப் படத்துக்கான சூட்டிங்கிற்கு முதல்நாள் ஒரு மேனேஜர் தன்னை ஒரு படத்தில் பத்துநாள் நடிக்க புக் பண்ண வந்து மொத்தப் பணமும் தருகிறேன் நாளை முதல் நடிக்க வேண்டும் என்றபோது நாளை நான் குறும்படம் எடுக்கப் போகிறேன் நாளை மறுநாளில் இருந்து வைத்துக் கொள்ளுங்கள் என்றதும் முடியாது எனச் சொல்லி, போகும் போது பொழக்கத் தெரியாதவன் எனச் சொல்லிச் சென்றதாகவும், தான் படமெடுத்து அந்தக் குறும்படம் அமெரிக்காவில் சிறந்த இயக்கத்துக்காக இரண்டாம் பரிசைப் பெற்றதையும் அதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ந்த போது அதே மேனேஜர் உங்க இயக்குநர் திறமையாளன்ய்யான்னு சொன்னதாகவும் சொன்னார். பிழைக்கத் தெரியாதவன் என்ற வாயே திறமையானவன்னு சொன்னதுதான் தன்னை சினிமா உயர்த்தி வைத்த இடம் என்றார்.
ஆண்பாவம் படத்தில் நடிக்க வேண்டியவர் மறுத்தபோது தானே நாயகன் பொறுப்பை ஏற்றபோது இணை இயக்குநர்கள் எல்லாம் இந்தாளுக்கு ஏய்யா இந்த ஆசை என்று சொன்னதாகவும் படப்பிடிப்பில் யாருமே தன் நடிப்பைப் பற்றி பேசவேயில்லை என்றும் ஒரு முறை நடிகர் பாண்டியனுடன் காரில் போகும்போது 'சார்... உங்க நடிப்பு அருமையா வந்திருக்கு... இந்தப் படத்துக்குப் பிறகு பாருங்க... நீங்க எங்கயோ போகப்போறீங்க...' என்று மனதார வாழ்த்தியதாகவும் அந்த வாழ்த்துத்தான் தன்னை நடிகனாய் உயர்த்தியது என்றும் அடுத்த படமே சிவாஜிக்கும் பத்மினி அம்மாவுக்கும் மகனாய் நடிக்க முடிந்தது என்றும் அதுவும் அந்த இமையங்களுக்கு என்னைப் போல் ஒரு மகன் பாருங்கள் என்றும் சொன்னார்.
ஆரம்பத்தில் பேசும் போது கன்னிராசி படத்துக்கு பிரபு கால்ஷீட் கொடுத்ததெல்லாம் ஆச்சர்யம் என்று சொன்னார். அதில் வரும் காட்சிகள் எல்லாமே தன் வாழ்வில் பார்த்த, நடந்த நிகழ்வுகள் தாம் என்றும் அதையெல்லாம் ஒரு டைரியில் குறித்து வைத்ததே படத்தில் காட்சியானது என்றார். செவ்வாய் தோஷமுள்ள பக்கத்து வீட்டு அக்கா, தன் படத்துக்கு தானே ஊதுபத்தி ஏற்றிக் கொள்ளும் அப்பா, விஜிபியில் தனக்கு வேலை கிடைத்தால் என்னாகும் என்ற நினைப்பு, வீட்டு மாப்பிள்ளைக்கு சாதத்துக்குள் முட்டை, கறியை வைத்தது என எல்லாமே தன் வாழ்வில் நிகழ்ந்தவையே என்றார்.
கன்னிராசி படத்தைப் பார்த்தவர்கள் முன்பாதி நல்லாயிருக்கு பின்பாதி சுமார்தான் என்று சொன்னபோது தன்னோட அம்மா பார்த்துவிட்டு ஒரே ஒரு காட்சியில் வந்த தன்னை ஏம்ப்பா நீ படத்துல இன்னும் ரெண்டு மூனு எடத்துல வந்திருக்கலாமே என்றதுதான் தனக்கான ஆசி என்றும் அப்படி வர தயாரிப்பாளர் ஒத்துக்கணுமே எனச் சிரிப்பாகவும் சொன்னார்.
படம் வெற்றி பெற்றதும் நூறாவது நாளில் கார் வாங்கித்தாரேன் என்று சொன்ன தயாரிப்பாளர் ஏழாவது நாளிலேயே கார் வாங்கித் தந்ததாகவும் சினிமாவால் தன் வாழ்க்கை எப்படி மாறியது என்பதையும் சொன்னார்.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 5 பேர், Amirtham Surya உட்பட
தன் பிள்ளைகளிடம் வேற எதையும் படிக்க வேண்டாம் என்னைப் படித்தால் போதும் என்று சொல்லியிருபதாகவும் தான் இந்த இடத்தை அடைய பட்ட கஷ்டங்கள் அவமானங்கள் எல்லாம் அதிகம் என்றார்.
தான் கலைமாமணி பெற்ற போது அதை பிரிதிவியிடம் கொடுத்த போது அம்மா உங்கப்பாவும் கலைமாமணி எங்கப்பாவும் கலைமாமணி ரெண்டுக்கும் சரியாப்போச்சு என்று சொன்னதாகவும் அதுசரிதான் இந்த இடத்துக்கு வர நான் பட்டகஷ்டம் என்னன்னு எனக்குத்தானே தெரியும் என்றதாகவும் சொன்னார்.
ஆரம்பத்தில் ஜப்பான் இயக்குநர் அஹிரா குரோசேவா பற்றி சொல்லி, என்னடா பாண்டியராஜன் இதெல்லாம் சொல்றான்னு நினைக்காதீங்க... எல்லாமே படிச்சதுதான்... மிகச் சிறந்த இயக்குநர் அவர்... நாம இயக்குநர் என்றால் அவர் நமக்கெல்லாம் மாஸ்டர் என்றார்.
என்னை முதல் முறை துபை அழைத்த போது ரசிகர்களாய் அழைத்தீர்கள்... இப்போது எழுத்தாளர்களாய் அழைத்திருக்கிறார்கள்... அடுத்து இயக்குநர்களாய், தயாரிப்பாளர்களாய் அழைப்பீர்கள் என்றார்.
இன்னும் விரிவாக எதார்த்தமாகப் பேசினார். பேச்சில் பாண்டியராஜனுக்கே உரிய நகைச்சுவை இழையோடியது. ஜூம் பற்றியெல்லாம் ஆரம்பத்தில் நகைச்சுவையாகப் பேசினார். துபைக்கு தான்தான் முதல் முதலில் கள்ளத்தோனியில் வந்தேன் என்றார். முதல் முறை இங்கு வரும்போது இமிக்கிரேசன் பிரச்சினை ஏற்பட்டதை நகைச்சுவையாகச் சொன்னார்.
கேள்வி கேட்க ஆரம்பித்த போது பாட்டி சொல்லைத் தட்டாதே, ஆண்பாவம் போல மீண்டும் ஒரு படம் கொடுக்க முடியுமா என்ற கேள்விக்கு அதை விடச் சிறப்பானதொரு படத்தைக் கொடுப்போம் என்றார் நம்பிக்கையுடன்.
பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன் எல்லாருமே ஒரு காலகட்டத்துக்குப் பிறகு திரையுலகில் ஜொலிக்கவில்லையே அதன் காரணம் கற்பனை வறட்சியா அல்லது நவீன வளர்ச்சியா என ஒருவர் கேட்டதற்கு இன்றைய நவீனமே அதற்கான காரணம் என்றார்.
ஆண்பாவம் படத்தைப் போல் இனி ஒரு படம் தங்களால் கொடுக்க முடியாது... அந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியும் வசனமும் எனக்கு மனப்பாடம் நூறு முறைக்கு மேல் பார்த்திருப்பேன் என்றார் மஜீத். ஆண்பாவமெல்லாம் நான் அடிக்கடி பார்க்கும் படம்... அதுவும் எங்க கொல்லங்குடி கருப்பாயி கூட அடிக்கும் லூட்டி 'நீ மட்டும் எங்கம்மாவை கட்டிக்கலாம் நான் உங்கம்மாவைக் கட்டிக்கக்கூடாதா?' என்ற வசனமெல்லாம் மறக்க கூடியதா...?
அடுத்ததாய் ஆண்பாவம் நகைச்சுவைப் படமென எல்லாரும் சொன்னாலும் அதை ஒருபடி மேலே வைத்திருக்கிறேன் அது ஒரு அருமையான காதல் படம் என்ற இடத்தில்தான் வைத்திருக்கிறேன் என சுரேஷ் சொன்னதும் அதைப் பற்றிப் பேசி, இளையராசாவின் இசை குறித்துச் சொல்லி, அதுவும் குறிப்பாக சீதாவைப் பெண் பார்க்கும் காட்சியில் மாப்பிள்ளை தன் உயரத்தை அளந்து மேலே கொடு போட்டுச் செல்ல, சீதா அங்கு நின்று தான் குட்டை எனத் தெரியக் கூடாது என்பதற்காக குதிகாலை உயர்த்துவதை, தான் காலின் அருகில் கேமாராவை வைத்து எடுத்ததாகவும் அதற்கு இளையராஜா ஏமாற்றுகிறாள் என்பதற்காக எதாவது இசை போடுவார் என்று பார்த்தால் அங்கு போட்ட இசையாலேயே அதைக் காதல் படமாக்கிவிட்டார் என்றதுடன் இளையராஜாவின் மிக அற்புதமான மியூசிக் வரிசையில் தன்னுடைய ஆண்பாவமும் இருக்கிறது என்பதை பெருமையுடன் சொன்னார்.
கேள்விகள் தொடர்ந்தன... எனக்கு உறவினரிடமிருந்து அழைப்பு... கீழே நிற்கிறேன் வாவென.... போய் விட்டு வந்துவிடலாம் என கணிப்பொறியை அப்படியே வைத்து விட்டு ஓடினால் கார்ல ஏறு என்றார்... சிஸ்டம் ஆப் பண்ணாம இருக்கு என்றதும் உன்னோட சிஸ்டம்தான் தெரியுமே... கெடந்தா என்ன என அழைத்துச் செல்ல, ஒன்பதரை மணிக்குத்தான் திரும்பக் கூடு வந்து சேர்ந்தேன்... சிஸ்டம் அப்படியேதான் இருந்தது.
சொல்ல மறந்துட்டேனே பாண்டியராஜன் உள்ளே நுழைந்ததுமே ஷேக் போல படுத்துக்கிட்டு பார்த்துக் கொண்டிருந்த சுபான் அண்ணாச்சியைப் பார்த்து அது யாருய்யா... இப்பவே படுத்துட்டாரு என்றது செம காமெடி... அதுக்கு அப்புறம் ஒரு தலகாணியைத் தூக்கி வைத்து தன்னை உட்கார வைக்க அவர் பட்டபாடெல்லாம் இங்க சொல்ல முடியாது.
பலர் கூடும் நிகழ்வில் ஆரம்பத்தில் மைக்கை அணைத்து வைப்பதே நலம்... சம்பந்தா சம்பந்தமில்லாத கேள்விகள், அடுத்த நபர் குறித்த பேச்சுக்களை எல்லாரும் கேட்காமல் தவிர்க்க முடியும்.
தனது குருநாதர் பாக்யராஜ் பற்றி ஏதாவது பேசுவார் என்று நினைத்தேன் எதுவும் பேசவில்லை. ஒருவேளை கேள்வி நேரத்தில் அவர் பேசியிருக்கலாம். எது எப்படியோ நம்ம வீட்டு மனிதரைப் போல மிகச் சிறப்பாகப் பேசினார் பாண்டியராஜன். வாழ்த்துகள் சார்.
நிறைவான ஒரு சந்திப்புக்கு... கலந்துரையாடலுக்கு வழி வகுத்த அமீரக எழுத்தாளர் வாசகர் குழும நண்பர்களுக்கு நன்றி.
-'பரிவை' சே.குமார்.

6 எண்ணங்கள்:

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
அண்ணா

சந்தர்ப்பத்தை நான் தவற விட்டு விட்டேன் இப்படியான ஒரு சந்தர்ப்பம் வரும்போது நிச்சயம் தெரியப்படுத்துங்கள்

நன்றி
அன்புடன்
ரூபன்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்லதொரு பகிர்வு. ஆண்பாவம் - மறக்க முடியுமா?

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

நிறைவான
மகிழ்வான சந்திப்பு

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

சுவாரசியமான தகவல்கள் பல.

கீதா

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்ல மனிதர்...

சென்னையில் இருக்கும்போது ஒரே ஒருமுறை சந்தித்து உரையாடி உள்ளேன்...

மாதேவி சொன்னது…

மகிழ்ச்சியான சந்திப்பு நாங்களும் படிக்க கிடைத்தது.