மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 15 ஜூன், 2020

ஆன்மீகம் : தினம் ஒரு கோயில் : 10

தினம் ஒரு கோவில் என்னும் தலைப்பில் பத்துக் கோவில்களைப் பற்றி எழுத வேண்டும் என்ற முகநூல் தொடர் பதிவுக்காக எழுதியவைதான் இவை. அப்படிப் பார்த்தால் இன்றோடு பத்துப் பதிவுகள் முடிந்துவிட்டன. இருப்பினும் எங்கள் மாவட்டத்துக்குள்ளேயே இன்னும் நிறையக் கோவில்களைக் குறித்து எழுத வேண்டும் என்ற எண்ணம் மனதில் உண்டு. அதை இந்தப் பதிவுகளின் ஆரம்பத்தில் இருந்து சொல்லி வருகிறேன். அதனால் இத்துடன் இது முடிந்து விடப் போவதில்லை... இன்னும் தொடர்வேன்... அதற்கென சில நாட்கள் இடைவெளி தேவைப்படலாம்.

நண்பர் சத்யா திருமயம் கோவில் குறித்து எழுதக் கேட்ட விபரமும் இங்கு முன்னரே பகிர்ந்திருக்கிறேன். எனவே அடுத்து எழுதுவது திருமயம் கோவிலாகவும் இருக்கலாம். இது பக்கத்து மாவட்டமான புதுக்கோட்டையில் இருக்கும் கோவில். எனவே முடிந்த வரை சிவகங்கைக்குள் இருக்கும் பெரும்பாலான கோவில்களை எழுதிவிடலாம் என்றே தோன்றுகிறது. வெங்கட் நாகராஜ் அண்ணன் இதை நாம் மின்னூல் ஆக்கலாம் என்ற ஊக்கமும் கொடுத்திருக்கிறார். இதுவரை எந்த மின்னூலும் போட்டதில்லை. அமேசான் போட்டிக்காக நெருஞ்சியும் குறிஞ்சியும் பகிர்ந்தேன். அதையே இப்போது எங்கு இருக்கு என்று கூட பார்ப்பதில்லை. பார்க்கலாம்... முடிந்தால் மின்னூல் ஆக்கலாம்.

வேள்பாரியை எழுதிய சு.வெங்கடேசன் அவர்கள், பறம்பு மலை என்று சொல்வது கிழக்குத் தொடர்ச்சி மலையின் வேறொரு பகுதி... அதே கிழக்குத் தொடர்ச்சி மலையின் கடைசிக் குன்றான பிரான்மலையும் வேள்பாரியின் பறம்பு மலைதான்... இங்குதான் பாரி ஆட்சி செய்தான் என்று இந்த ஊருக்கான வரலாறு சொல்கிறது. எது எப்படி என்றாலும் இந்தக் குன்றும் பாரியின் பறம்புமலையில்தான் இருந்திருக்க வேண்டும்.

இந்த ஊரில் வருடா வருடம் பாரிக்கென தனி விழா நடத்தப்படுகிறது. அப்போது முல்லைக்குத் தேர் கொடுத்த நிகழ்வு மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்தக் கோவிலுக்குச் சென்றதில்லை... ஆனால் இதைப் பற்றி வாசித்தபோது பாதாளம், பூலோகம், கயிலாயம் என மூன்று சிவாலயங்கள். இப்படி ஒரு கோவிலா..? என்ற வியப்புடனேதான் படித்தேன். அருமையான கோவிலைப் பற்றி தெரியாத விஷயத்தைத் தெரிந்து கொள்ள முடிந்தது... மகிழ்ச்சியே.

பிரான்மலை கொடுங்குன்றநாதர் திருக்கோவில்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வானம், மலை, வெளிப்புறம் மற்றும் இயற்கை
சிங்கம்புணரியில் இருந்து 11 கி.மீ தூரத்திலும் திருப்புத்தூரில் இருந்து 20 கி.மீ தூரத்தில் இருக்கிறது.
பாண்டிய நாட்டுக் கோவில்களில் ஐந்தாவதாய் போற்றப்படும் திருத்தலம் என்பதும் 195-வது தேவாரத்தலம் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
சுமார் இரண்டாயிரம் வருடங்கள் பழமையானது இம்மலைக் கோவில் என்று வரலாறு சொல்கிறது. சிவலிங்கத்தைப் போல் காட்சி தரும் இம்மலை 2500 அடி உயரத்துடன் காட்சி தருகிறது. கிழக்குச் தொடர்ச்சி மலைத் தொடரின் கடைசிக் குன்றம் இதுவாகும். அழகர் மலையைப் போல இதுவும் மூலிகைகள் நிறைந்த மலை என்பதால் மூச்சுப் பிரச்சினை உள்ளவர்கள் இம்மலை ஏறும்போது மூலிகைக் காற்றைச் சுவாசிப்பதால் அப்பிரச்சினை திரும் என்கிறார்கள்.
மூன்றடுக்கு சிவன் கோவில் இது. மலை அடிவாரம் (பாதாளம்), நடுப்பகுதி (பூலோகம்) மற்றும் உச்சி (கயிலாயம்) என மூன்று நிலைகளிலும் சிவன் சன்னதி இருக்கும் ஒரே திருக்கோவில் இது மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற வகையில் பெருமைக்குரிய கோவில்களில் இதுவும் ஒன்று.
தங்களில் யார் பலசாலி என்ற போட்டியில் ஆதிசேஷன் மேரு மலையைச் சுற்றிக் கொள்ள, வாயு பகவான் தனது பலத்தால் அதைப் பெயர்த்து எடுக்க வேண்டும் என முடிவு செய்து அதன்படி ஆதிசேஷன் மலையை இறுகப் பற்றிக் கொள்ள, வாயுபகவான் பெயர்த்தெடுக்க முயன்றார். பலமான காற்றின் காரணமாக மேரு மலையிலிருந்து சில துண்டுகள் பெயர்ந்து விழுந்தன. அப்படி விழுந்த ஒரு துண்டே இந்த இப்போது பிரான்மலை என்று அழைக்கப்படும் திருக்கொடுங்குன்றம் என்பது புராணாக் கதை.
கடையேழு வள்ளல்களில் ஒருவனும் முல்லைக்குத் தேர் கொடுத்த தமிழ் அரசன் வள்ளல் பாரி (வேள்பாரின்னு சொன்னா எல்லாருக்கும் புரியும்) ஆட்சி செய்த இடம் இது. அக்காலத்தில் இது பறம்பு மலை... அதன்பின் இது பிறம்புமலையாகி பிரான்மலையாகிவிட்டது என்பது இவ்வூரின் வரலாறு சொல்லும் சேதி. மேலும் இங்கு வந்த திருஞானசம்பந்தர் மலையைத் தூரத்தில் இருந்து பார்த்த போது சிவனைப் போல் காட்சியளித்ததால் தனது கால் சிவன் மீது படக்கூடாது எனத் தொலைவிலேயே நின்று தரிசித்ததால் இது எம்பிரான்மலை என்று அழைக்கப்பட்டதாகவும் பிற்காலத்தில் பிரான்மலை என்று மருவியதாகவும் சொல்லப்படுகிறது.

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
மலை உச்சியில் இருக்கும் குடைவரைக் கோவிலில் மங்கைபாகர் என்னும் பெயரில் சிவன் திருமணக் கோலத்தில், போக நிலையில் அருள் பாலிக்கிறார். இவருக்கு உமாமகேஸ்வரர் என்ற பெயரும் உண்டு. இங்கு பார்வதி தேனாம்பிகை என்று அழைக்கப்படுகிறாள். மங்கைபாகர் நவமூலிகைச் சாற்றால் உருவாக்கப்பட்டவர் என்பதால் அவருக்கு அபிஷேகம் கிடையாது. தேனம்மை என்ற அம்மனின் பெயருக்கு ஏற்ப இம்மலையில் தேனடைகள் நிறைந்திருக்கும்.
இங்கு சிவனுக்கு ஒரு முறை அணிவித்த வஸ்திரத்தை மறுமுறை அணிவிப்பதில்லை. ஒவ்வொரு முறையும் புத்தாடையே அணிவிக்கப்படுகிறது. திருவிழா நாட்களில் அடிக்கடி வஸ்திரத்தை மாற்றினாலும் அது புதிதாகத்தான் மாற்றப்படுகிறது. 16 முழ வேஷ்டியும் துண்டும் சிவனுக்கும் 16 முழச் சேலை அம்மனுக்கும் அணிவிக்கப்படுகிறது.
அகத்திய முனிவர் தான் விரும்பும் போதெல்லாம் இறைவனின் திருமணக் கோலத்தைக் கண்டு மகிழும் வரத்தைப் பெற்றிருந்ததால் அவரின் வேண்டுதலுக்கு இணங்க இறைவன் மங்கையொருபாகனாக காட்சியளித்த தலங்களில் இதுவும் ஒன்றாகும்.
மங்கைபாகருக்கு எதிரில் நந்தி கிடையாது. அகத்தியருக்கு திருமணக் கோலத்தில் காட்சியளித்தபோது நந்தி தேவர் மத்தளம் வாசித்துக் கொண்டிருந்தார் என்பது புராணக் கதையாதலால் இங்கு நந்தி நிறுவப்படவில்லை. மேலும் கொடி மரமும், பலி பீடமும் இங்கு இல்லை.
கையில் நான்கு வேதங்களை வைத்திருப்பதால் இவர் 'வேதசிவன்' என்றும் அழைக்கப்படுகிறார். சந்தனம், புணுகுத் தைலக் காப்பிட்டு அபிஷேகம் செய்து வழிபட்டால் எண்ணியது நிறைவேறும் என்பதும் திருமணத் தடைகள் அகலும் என்பதும் நம்பிக்கை.
அருணகிரிநாதருக்கு முருகன் இங்கு நடனக்காட்சி காடியதாக ஐதீகம். இங்கு வயோதிக கோலத்தில் தனிச்சன்னிதியில் முருகன் இருக்கிறார். இங்கு முருகனுக்கு எதிரில் மயில் வாகனத்துக்குப் பதில் யானைதான் இருக்கிறது. இந்த யானையையும் சன்னதிக்கு எதிரே இருக்கும் பதினெட்டு துவாரங்களுடன் (ஜன்னல்) கூடிய மதில் வழித்தான் பார்க்க முடியும்.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம்
பத்மாசுரனை சம்ஹாரம் செய்ததால் முருகனுக்கு ஏற்பட்ட தோஷம் நீங்க இங்கு சொக்கலிங்கம், இராமலிங்கம் என்னும் இரண்டு சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு தோஷம் நீங்கியதாகச் சொல்லப்படுகிறது. அந்த லிங்கங்கள் இரண்டும் பிராகரத்தில் இருக்கின்றன. அவற்றிக்கு இடையே முருகன் பாலமுருகனாய் காட்சி தருகிறார். தன் மகனுக்கு காவலாய் சிவன் இரண்டு பக்கமும் இருப்பதாய்ச் சொல்கிறார்கள்.
இந்தச் சன்னதியின் முன் மண்டபத்தின் மேற்சுவரில் கைலாயத்தில் சிவ, பார்வதி திருமணம் காணச் சென்ற தேவர்கள் மற்றும் அசுரர்களின் சிற்பங்கள் அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
இக்கோவிலில் ஐப்பசி முதல் பங்குனி வரை சிவன் மீது சூரிய ஓளி விழுகிறது.
மலையின் நடுப்பகுதியில் இருக்கும் கோவிலில் தெற்கு நோக்கிய சன்னதியில் பைரவர் வடுக பைரவராய் எழுந்தருளி இருக்கிறார். வடுகன் என்பது வீரன் என்றும் பிரமச்சாரி என்றும் பொருள்படும் என்று சொல்லப்படுகிறது. சூலம், உடுக்கை, கபாலம் மற்றும் நாகபாசத்துடன் நின்ற கோலத்தில், உக்கிரமாகக் காட்சி தருகிறார். பண்டைய அரசர்கள் வழிபட்டதால் வீரத்தின் அடையாளமாக வாள் ஒன்றும் வைக்கப்பட்டிருக்கிறது. இவருக்கு வலப்புறம் இருக்கும் சன்னிதியில் காசிவிஸ்வநாதர் மற்றும் விசாலாட்சி எழுந்தருளி அருள்புரிகிறார்கள்.
முண்டாசுரன் என்னும் அரக்கன் சிவனைத் தவிர என்னை வேறு யாரும் அழிக்க முடியாது என்ற வரத்தை பெற்றிருந்ததால் மற்றவர்களைக் கொடுமைப்படுத்த ஆரம்பித்தான். பிரம்மனையே அவன் போருக்கு அழைத்த போது அவனின் செருக்கை அழித்து ஆணவத்தை ஒழிக்க வேண்டும் அதற்கு நானே போகிறேன் என சிவன் பூண்ட திருக்கோலமே வடுக பைரவர் ஆகும். ஏவல், பில்லி, சூனியம் மற்றும் காரியத் தடைகளைக் களைபவர் என்பதால் கருப்பு வஸ்திரம் சாத்தி எலுமிச்சை மாலை அணிவித்து வேண்டிக் கொண்டால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை.
மலை அடிவாரத்தில் கிழக்குப் பார்க்க சிறிய லிங்க வடிவில் கொடுங்குன்றநாதரும் நின்ற திருக்கோலத்தில் குயிலமுதநாயகியும் அருட்காட்சி தருகின்றனர். சந்நிதியை வலம் வரும்போது அறுபத்து மூவர் மூலமூர்த்தங்களும், விநாயகர் மற்றும் அம்மையப்பர் சன்னதியும் இருக்கின்றன.
இங்கு மட்டுமே நவக்கிரங்கள் அமர்ந்த நிலையில் இருக்கின்றன. கோவிலின் வடகிழக்குப் பிரகாரத்தின் கூரைப் பகுதியில் தொங்கும் கல்வளையச் சிற்பங்கள் மிக அழகானவை.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் வெளிப்புறம்
மலையடிவார நுழைவாயில் முன்புறத்தில் அடையவளைந்தான் என்ற திருக்குளம் இருக்கிறது. அதனை அடுத்துள்ள ராஜமண்டபத்தைக் கடந்து விநாயகரை வழிபட்டபின் முதலில் உச்சிக் கோயில் (கயிலாயம்) அடுத்தது இடைக்கோவில் (பூலோகம்) அதன்பின் அடிவாரக் கோவில் (பாதாளம்) என வழிபட வேண்டும்.
திசையாயிரத்து ஐந்நூற்றுவர் என்ற புகழ்பெற்ற வணிகர்கள் இப்பகுதியில் வணிகம் செய்திருக்கிறார்கள். அழகிய திருசிற்றம்பலமுடைய கொடுங்குன்றநாதர் கோவிலில் அமைந்திருந்த பூங்காவனத்தில் இவர்களின் பதினோரு குழுக்கள் கூடி, தங்களின் வணிகப் பொருட்களின் மீது சுமைக்கேற்றவாறு தாங்களே ஒரு தொகையை வரியாக பட்டணப்பகுடி (அதாவது நகரின் பங்களிப்பு) என்ற பெயரில் செலுத்துவது என முடிவு செய்து, அவ்வாறு வசூலாகும் பணத்தைக் கோவிலின் திருப்பணிகளுக்கு செலவு செய்ய வேண்டும் என்றும் முடிவு செய்து அதன்படியே திருப்பணிகள் செய்தார்கள் என்ற செய்தி இங்குள்ள கி.பி. 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இம்மலையில் பொழுது விழுந்தான் சுனை, மஞ்சள் சுனை, காசிச் சுனை என்ற நீர்ச்சுனைகளும் , 57 தீர்த்தங்களும் இருக்கின்றன. இங்கு இருக்கும் குஷ்டவிலக்கி சுனை என்னும் தீர்த்தத்தில் நாள்பட்ட தோல் வியாதி உள்ளவர்கள் குளித்துச் சிவனை வழிபட்டால் தோல்வியாதி தீரும் என்று நம்பப்படுகிறது.
இக்கோவிலில் இருக்கும் பெரிய மணியின் ஓசையானது 40 கி.மீ சுற்றளவுக்குக் கேட்கும் என்றும் சொல்லப்படுகிறது.
பிரான்மலையில் இருந்து ஒரு கி.மீ தூரத்தில் இருக்கும் வள்ளல் பாரி முல்லைக்குத் தேர் வழங்கிய இடத்தில் கல்லினாலான தேர் இருக்கின்றது. இங்கு புவியியல் துறை ஆய்வு அலுவலமும் இயங்கி வருகிறது.
குறிஞ்சி நிலத்தில் இக்கோவில் அமைந்துள்ளதால் அந்த நிலத்துக்குரிய தேன், தினை மாவு மற்றும் பச்சரிசி மாவில் செய்த பதார்த்தங்களால் நெய்வேத்தியம் செய்கிறார்கள்.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம்
இங்கு வருடாவருடம் பாரி உத்ஸவம் என்ற ஒரு திருவிழா கொண்டாடப்படுகிறது. இதில் முல்லைக்குத் தேர் கொடுக்கும் நிகழ்வு நடத்தப்படுகிறது. பாரியின் திருவுருவச் சிலையை தேரில் வைத்து பறம்புமலை அடிவாரத்துக்குக் கொண்டு சென்று அங்கு முல்லைக் கொடியின் அருகில் தேரை நிறுத்தி சிலையை மட்டும் கோவிலுக்குக் கொண்டு வந்து சேர்க்கிறார்கள். அதன்பின் அரிசியளப்பு வைபவம் நடைபெறும். அப்போது பக்தர்களுக்கு அரிசி கொடுக்கப்படுகிறது.
சித்திரை மாதத்தில் பெரும் விழாவும் தை மாதத்தில் வடுக பைரவருக்கு சிறப்பு விழாவும் நடைபெறுகிறது.
தலவிருட்சம் உறங்காப்புளி மரமாகும். இம்மரம் பூக்கும் காய்க்கும் ஆனால் பழுக்காது. காய் காய்ந்து கீழே விழுந்து விடும். மேலும் மங்கைபாகர் சன்னிதிக்கு மேலே பாறைகளுக்கு இடையே இருக்கும் செடி ஒன்றும் தலவிருட்சமாய் இருக்கிறது. இச்செடிக்கு பெயர் கிடையாது என்பதால் பெயரில்லா விருட்சம் என்றே அழைக்கப்படுகிறது. இச்செடியும் பூப்பதில்லை, காய்ப்பதில்லை. தீர்த்தம் தேனாழி என்றும் மதுபுஷ்கரணி என்றும் அழைக்கப்படுகிறது.
கருத்து வேறுபாடுள்ள தம்பதியர்கள் இங்கு வேண்டிக் கொண்டால் கருத்து வேறுபாடு நீங்கி சந்தோஷமாக வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.
மலையுச்சிக்குச் செல்ல ஐந்து கி.மீக்கு மேல் நடக்க வேண்டும். செங்குத்தான படிகள் இருந்தாலும் சில இடங்களில் படிகள் இல்லை என்பதாலும் ஏறுவதற்கு மிகவும் கடினமானதாகவும் பல வளைவுகளைக் கொண்டிருப்பதாலும் இது கொடுங்குன்றம் என்று அழைக்கப்படுகிறது.
சித்தர்கள் இன்னமும் சூட்சும வடிவில் இங்கு வாழ்வதாக நம்பப்படுகிறது. மலை உச்சியில் ஒரு முருகன் கோவிலும் இஸ்லாமியப் பெரியவர் ஒருவரின் சமாதியும் இருக்கின்றது.
திருஞானசம்பந்தர் மற்றும் அருணகிரிநாதரால் தேவாரம் பாடப்பட்ட தலம் இது.
ஊமத்துரை இங்கு மறைந்திருந்தார் என்று சொல்லப்படுகிறது. அவர் தங்கியிருந்த இடம் ஊமையன்குடம்பு என்று பெயரில் இப்போதும் இருக்கின்றது. அதேபோல் மருது பாண்டியர்கள் கட்டிய மண்டபங்கள் 19ஆம் நூற்றாண்டில் அழிக்கப்பட்டதாகவும் அதன் அடையாளங்கள் இப்போதும் இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம் மற்றும் இயற்கை
முல்லைக்குத் தேர் கொடுத்த வள்ளல் பாரி வாழ்ந்த ஊர் என்பதால் இவ்வூர் எப்போதும் பசுமையாகவும் வளமாகவும் காணப்படுகிறது.
கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஆகிய முக்காலமும் செய்த பாவங்கள் நீங்க மூன்றடுக்குச் சிவனை பிரான்மலைக்குச் சென்று வணங்குவோம்.

நாளை : இன்று திருமயம் எழுதினால் இங்கு நாளை பகிரலாம்... இல்லையேல் இரண்டு காணொளிப் பகிர்வுகளில் ஒன்றைப் பகிர்வேன்.

நன்றி : படங்கள் இணையத்திலிருந்து...
-'பரிவை' சே.குமார்.

7 எண்ணங்கள்:

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
அண்ணா

முல்லைக்கு தேர் கொடுத்த பாரி பற்றி
அவருக்கு அமையப்பெற்ற தலம் பற்றி
அழகான படங்களுடன் அற்புதமாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

நன்றி
அன்புடன்
ரூபன்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சிறப்பான கோவில் குமார்... இதன் படத்தை "புகழ்" அதிகாரத்தின் பதிவு ஒன்றில் பயன்படுத்தி உள்ளேன்...

கிண்டிலுக்கு நீங்களும் வந்து விடுங்கள்... அண்ணன் ஜோதிஜி அவர்கள் மிகவும் சந்தோசப்படுவார்...

நேரம் கிடைக்கும் போது பதிவுகளை அதற்கேற்றவாறு பிரித்து குறிச்சொற்கள் (Lables) இட்டு சேமித்து வையுங்கள்... அவை எளிதாக மின்னூல் ஆக்கவும், பிறகு கிண்டிலில் சேர்க்கவும் மிகவும் உதவும்...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மிகவும் அழகான கோவில்.

தகவல்களும் சிறப்பாக வந்திருக்கின்றன குமார்.

விரைவில் மின்னூலாக வெளியிட வாழ்த்துகள்.

மாதேவி சொன்னது…

பாரி ஆட்சி செய்த இடம். பாதாளம்,பூலோகம்,கைலாயம் மூன்று நிலை சிவன்கோவில் என சிறப்பாகும் கோவில் கண்டு படித்து மகிழ்ந்தோம்.

துரை செல்வராஜூ சொன்னது…

பிரான் மலை குறித்த தகவல்களை முன்பே படித்திருந்தாலும் தங்கள் கை வண்ணத்தில் படிக்கும்போது மகிழ்ச்சி தான்...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

தமிழகத்தில் நான் பார்க்க ஆசைப்பட்டு, இதுவரை பார்க்க வாய்ப்பில்லாமல் இருக்கின்ற வரலாற்றுப் புகழ்மிக்க இடங்களில் ஒன்று. உங்கள் பதிவால் மறுபடியும் அந்த எண்ணம் மேலோங்கிவிட்டது.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

குமார் அனைத்துக் கோயில் பதிவும் வாசித்துவிட்டேன். தனி தனியாகக் கருத்திடவில்லை

பிரான் மலை பற்றிய தகவல்கள் ரொம்பவே நல்லாருக்கு.

இங்கு எல்லாரும் சொல்லியிருப்பதைப் போல் நான் சொல்ல நினைவுத்து விட்டேன்....அதே கருத்துதான் இதை அனைத்தையும் அப்படியே நீங்கள் புத்தகமாகக் கொண்டுவரலாம். பயனுள்ளதாக இருக்கும்

கீதா