மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 12 ஜூன், 2020

ஆன்மீகம் : தினம் ஒரு கோயில் - 7

தினம் ஒரு கோயில் பதிவென முகநூலுக்கு எழுதும் போது எங்கள் மாவட்டக் கோவில்கள்தான் என்பது தீர்க்கமான முடிவாக இருந்தது. இந்தத் தொடருக்கு அழைத்த நண்பர் சத்யா, திருமயம் கோவிலைக் குறிப்பிட்டு எழுதச் சொன்னார் என்றாலும் சிவகங்கை மாவட்டத்தின் அருகில் இருந்தும் புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் கோவிலாததால் பின்னர் எழுதுகிறேன் என்று சொன்னேன். நேற்று அந்தக் கோவில் குறித்த வரலாறுகளை வாசிக்கும் போது ஆச்சர்யமாக இருந்தது. அந்த மலையைக் கடந்து எத்தனையோ முறை பயணித்திருந்தும் ஒருமுறை கூட கோவிலுக்குச் சென்றதில்லை. இவ்வளவுக்கும் திருமயம் மலை மீது ரெண்டொரு முறை ஏறியிருக்கிறேன். விரைவில் முகநூலில் எழுதுவேன். அதன் பின் இங்கும் பகிர்வேன்.

இன்று பார்க்க இருக்கும் கோவிலான கொல்லங்குடி... காளையார் கோவில் மண்ணோடு தொடர்புடையதுதான். வேலு நாச்சியாரை வெள்ளையரிடமிருந்து காப்பாற்றி உயிரை விட்ட உடையாளுக்கான கோவில் இது. இதுவும் அய்யனார் கோவிலாக பல வருடங்கள் இருந்து உடையவள் உள் நுழைந்ததும் அவள் வசமான கோவில்தான்... ஆக பெண்கள் வீட்டுக்குள் வந்து உரிமையை கையில் எடுத்துக் கொள்வதை அந்தக் காலத்திலேயே பெண் தெய்வங்கள்தான் சொல்லிக் கொடுத்திருக்கின்றன என்பது மறுக்க முடியாதது.

மிக உக்கிரமான தெய்வம்... இங்கு காசு வெட்டிப்போடுதல் என்னும் ஒரு சடங்கு இருக்கிறது. அதாவது நம் சொத்தை அபகரித்தவர், பணத்தை வாங்கி ஏமாற்றியவர், நமக்குத் தொல்லை கொடுப்பவர் இப்படி நமக்குப் பிரச்சினையாக இருக்கும் நபருக்குக் கூலியை (கூலியை என்றால் கெட்டதை) கொடு என வேண்டி வெட்டிப் போட்டால் உண்மையில் அந்த ஆள் பிரச்சனைக்கு உரியவன் என்றால் காளி வேலையைக் காட்ட ஆரம்பித்துவிடுவாள். அதே நேரம் பொய்யாக நாம் ஒருவன் மீது வீண் பழி சுமத்தி காசு வெட்டிப் போட்டிருந்தால் காளி நம்மளைக் காலி பண்ணி விடுவாள்.

கொல்லங்குடி காளி நீ கேளு எனச் சண்டையில் சொன்னாளே எதிரிக்கு கதக்குன்னு இருக்கும்... கொல்லங்குடி, மடப்புரம் என காளி நமக்குப் பயத்தைக் காட்டிக் கொண்டுதான் அருள்பாலிக்கிறாள். எங்க ஊருக்குப் பக்கத்தில் சில வருடங்களுக்கு முன் எங்க உறவினரின் கனவில் தோன்றி, அதன் பின் கோவிலாக மாறியிருக்கும் இடையங்காளி காளிகளில் உக்கிரமில்லாதவள்... சிறுமியாய் பாவாடை சட்டை போட்டு சிரித்த முகத்துடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். இந்தக் கோவில் பற்றியும் எழுத வேண்டும்... இது மிகச் சமீபத்திய நிகழ்வு... அவள் சொன்ன இடத்தில் தேடிக் கண்டுபிடித்து கோவில் ஆக்கினார். விரிவாய் பின்னொரு நாள் பார்க்கலாம்.

இப்பக் கொல்லங்குடி வெட்டுடையாளின் வாசலுக்குப் போவோம்.

கொல்லங்குடி வெட்டுடைய காளியம்மன் திருக்கோயில்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வானம், மேகம், மரம் மற்றும் வெளிப்புறம்
தேவகோட்டை (36.5 கி.மீ) - சிவகங்கை (14 கி.மீ) வழித்தடத்தில் காளையார்கோவிலில் இருந்து 4.7 கி.மீ தூரத்தில் இருக்கும் சிறிய ஊர் கொல்லங்குடி . பேருந்து நிற்குமிடத்தில் இருந்து உள்புறமாகப் பயணித்தால் 1.7 கி.மீ தூரத்தில் இருக்கிறது வெட்டுடைய காளியம்மன் கோவில்.
இக்கோவில் சுமார் 700 வருடங்கள் பழமையானது.
முதலில் இது வெட்டுடைய அய்யனார் கோவில். பின்புதான் அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறாள்.
இக்கோவிலில் வீற்றிருக்கும் வெட்டுடைய காளி உக்கிரமான தெய்வம். இங்கு காளியாக வீற்றிருப்பவர் ராணி வேலுநாச்சியாரை ஆங்கிலப் படையிடமிருந்து காப்பாற்ற தன் உயிரைக் கொடுத்த உடையாள் என்ற வீரப்பெண்மணிதான் என்பது வரலாறு கூறும் செய்தி.
முத்து வடுகர் இறந்த பின்பு மருதிருவர் துணையுடன் வெள்ளையருக்கு எதிரான போராட்டத்தைத் தொடர்ந்த வேலுநாச்சியார் குதிரையில் காட்டு வழியாக அரியாக்குறிச்சி நோக்கிப் பயணப்படும்போது அவரை மாடு மேய்த்துக் கொண்டிருந்த உடையாள் என்னும் கன்னிப்பெண் பார்த்தாள். வேலுநாச்சியார் சென்ற சிறிது நேரத்தில் அவரைப் பின் தொடர்ந்து வந்த ஆங்கிலச் சிப்பாய்கள் வேலுநாச்சியார் இந்தப் பக்கம் போனாரா என விசாரிக்க, உடையாள் மாற்றுப்பாதையில் சென்றாகச் சொல்ல, வேலு நாச்சியார் கிடைக்காத வேகத்தில் தங்களிடம் பொய் சொன்ன உடையாளை வெட்டிப் போட்டுவிட்டுச் சென்றனர்.
ராணியைக் காப்பதற்காக இரு துண்டுகளாக வெட்டுப்பட்ட உடையாளை அப்பகுதி மக்கள் வணங்க ஆரம்பித்தார்கள். உடையாள் ‘வெட்டுடையாள்’ ஆனாள். வேலுநாச்சியார் தனக்காக உயிரைத் தியாகம் செய்த வெட்டுடையாளின் கோயிலுக்காகப் பல கிராமங்களை மானியமாகக் கொடுத்ததுடன் தனது வைரம் பதித்த திருமாங்கல்யத்தையும் அம்மனுக்காகக் கொடுத்தார். அது இப்போதும் அம்மனுக்கு அணிவிக்கப்படுகிறது.
தன்னைக் காக்க தன்னுயிரைக் கொடுத்த உடையாளின் பெயரில் பெண்கள் படையை அமைத்திருந்தார் வேலு நாச்சியார் என்பது குறிப்பிடத்தக்கது. கோவில் இருக்கும் கொல்லங்குடி ஆயுதங்கள் செய்யும் இடமாக, கொல்லர்கள் குடியிருந்த இடமாக இருந்ததால் கொல்லர்குடி என்று அழைக்கப்பட்டு பின்னாளில் கொல்லங்குடி ஆகியிருக்கிறது என்பதையும் வேலுநாச்சியாருக்காக உடையாள் உயிரைத் தியாகம் செய்ததையும் சிவகங்கை பகுதி வரலாற்று ஆய்வாளர்களும் தமிழ் ஆய்வாளர்களும் உறுதியுடன் சொல்லியிருக்கிறார்கள்.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்
இக்கோவில் குறித்து இங்கு பூஜை செய்யும் வேளார்கள் கூறும் புராணக்கதையின்படி,
ஆரம்பத்துல இங்கு காளிகோவில் இல்லை. ஈச்சங்காடாய் இருந்த இப்பகுதி காரஞ்செடிகளும் முட்புதர்களுமாய் இருந்தது. இங்கு அய்யனார் கோவில் ஒன்று இருந்துள்ளது. காட்டுப்பகுதி என்பதால் மக்கள் யாரும் வருவதில்லை... இங்கு தங்கி ஒரு வேளார் குடும்பம் மட்டும் அய்யனாருக்கு பூகை செய்து வணங்கி வந்தனர். அந்தக் குடும்பத்திகாரி, கருப்பன் என இரண்டு பையன்கள். இருவரும் முறை வைத்து அய்யனாருக்குப் பூஜை செய்து வந்தனர். முறை வைத்து என்பது என்னன்னா அவர்களுக்குள் எத்தனை பங்காளியோ அதைப் பொறுத்து பூஜை செய்வதற்கு ஆறு மாதம் அல்லது ஒரு வருடம் ஒரு குடும்பம் எனப் பிரித்துக் கொள்வார்கள். எங்கள் பக்கம் கிராமக் கோவில்களில் வேளார்கள்தான் பூஜை செய்வார்கள் என்பதால் இந்த முறை எல்லாக் கிராமக் கோவில்களிலும் கடைபிடிக்கப்படும் முறையாகும். எங்க ஊர் மாரியம்மனுக்கு இந்த வருடம் வந்து பூஜை செய்பவர் அடுத்த வருடம் வருவதில்லை... வேறொருவர் வருவார்.
மூத்தவரான காரி, கேரளாவுக்குச் சென்று பில்லி, சூனியம் தீர்க்கும் மாந்திரீகம் பயின்று திரும்பினார். தான் பயின்ற வித்தைகளை வைத்துச் சிறு தேவதைகளையும் துஷ்ட தேவதைகளையும் ஏவி விட்டுக் கொண்டிருந்தார். இவர் பூஜை செய்யும் காலத்தில் அய்யனார் சந்நிதிக்கு முன்பு மணல் பரப்பில் சில அட்சரங்கள் எழுதப்பட்டிருப்பதையும், அதுவும் மணலில் எழுதப்பட்ட அந்த அட்சரங்கள் அழியாமல் இருப்பதைக் கண்டு ஆச்சர்யப்பட்டவர் அது காளியின் அட்சரங்கள் என்பதை அறிந்து அங்கு காளியைப் பிரதிஷ்டை செய்தார்.
அய்யனார் ஈச்சங்காட்டில் இருந்து வெட்டியெடுக்கப்பட்டு இந்த இடத்தில் கோவில் கட்டி அதில் வைக்கப்பட்டவர் என்பதால் வெட்டுடைய அய்யனார் ஆனார் அந்த வெட்டுடைய அய்யனார் கோவிலில் காளி வைக்கப்பட்டதால் வெட்டுடைய காளியம்மன் என்று அழைக்கப்பட்டார்.
இத்திருக்கோவிலுக்குள் அய்யனாரும் அம்மனும் நேர் எதிர் சன்னதியில் இருக்கிறார்கள். அய்யனார் கிழக்குப் பார்க்கவும், அம்மன் மேற்குப் பார்க்கவும் வீற்றிருக்கிறார்கள்.
காலையில் வெட்டுடைய அய்யனார் மீதும், மாலையில் வெட்டுடைய காளியம்மன் மீதும் சூரிய ஒளி விழுவது அற்புதமான காட்சியாகும்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் பிரச்சினைகளைத் தீர்க்கச் சொல்லி காசு வெட்டிப் போடுவார்கள். இந்தக் காசை வெட்டுவதற்கு முன் அம்மனை வணங்கி, காசு வெட்டுவதற்கென உள்ள இடத்தில் அதை வெட்டிவிட்டு, 'சோனையா' என்னும் காவல் தெய்வத்திடம் நம் குறைகளை முறையிட்டுவிட்டு வந்தால் நாம் நினைத்த காரியம் ஜெயமாகும்.
இங்கு வலது காலை மடக்கி, இடது காலைத் தொங்கவிட்டு கம்பீரமாக வீற்றிருக்கிறாள் காளி.

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
பண மோசடி, சொத்து அபகரித்தல், தொழிலுக்கு வரும் இடையூறுகள் போன்றவற்றிற்காக இங்கு காசு வெட்டிப் போட்டு வேண்டிக் கொள்கிறார்கள். அம்மனின் நீதி சரியாக இருக்கும் என்ற நம்பிக்கை இப்பகுதி மக்களிடம் நிறையவே இருக்கிறது. ஒருவேளை நாம் வேண்டுமென்றே அடுத்தவன் கெட்டுப் போக வேண்டும் என்று வேண்டிக் கொண்டால் நம்மைத் திருப்பி அடிக்கவும் தயங்கமாட்டாள் வெட்டுடையாள்.
சிவகங்கை மாவட்டத்தில் முதல் முதலில் தங்கத்தேர் செய்யப்பட்ட கோவில் இது.
இக்கோவில் வரலாறு புராணக் கதை மற்றும் நாம் அறிந்த வரலாற்றுக் கதை என இரண்டு விதமாக இருந்தாலும் அம்மன் சொல்வது ஒன்றுதான்... அது 'தவறு செய்பவர்களுக்குத் தண்டனை நிச்சயம் உண்டு'
அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இக்கோவில் இயங்கி வருகிறது.
நாட்டுப்புறப் பாடகி கொல்லங்குடி கருப்பாயி பிறந்த ஊர் இது.

நாளை நாட்டரசன் கோட்டை
நன்றி : படங்கள் இணையத்திலிருந்து...
-'பரிவை' சே.குமார்.

7 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கொல்லங்குடிபெயர் விளக்கம் உட்பட வரலாற்று தகவல்களும் அருமை...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

கொல்லங்குடி - சிறப்பான தகவல்களுடன் பதிவு. தொடரட்டும் கோவில் உலா.

கோமதி அரசு சொன்னது…

இந்த கோவில் போய் இருக்கிறோம். விரிவான தலவரலாறு .

தவறு செய்பவர்களுக்கு தண்டனை நிச்சயம் உண்டு என்பதை படிக்கும் போதுமேனி சிலிர்க்கிறது.

நாட்டரசன் கோட்டை கண்ணாத்தா கோவிலா? அதுவும் போய் இருக்கிறோம்.

ஸ்ரீராம். சொன்னது…

கோவில் தகவல்கள் சுவாரஸ்யம்.

துரை செல்வராஜூ சொன்னது…

கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மனைப் பற்றி விரிவான செய்திகள்...

தரிசனம் செய்வதற்கு அவளே அருள் புரிவாள்...

மாதேவி சொன்னது…

தினம் ஒரு கோவிலில் கொல்லங்குடி அம்மன் அறிந்தோம்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

கேள்விப்பட்டுள்ளேன். சென்றதில்லை. கோயிலுக்குச் செல்லும் நாளுக்காகக் காத்திருக்கிறேன்.