மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 10 ஜூன், 2020

ஆன்மீகம் : தினம் ஒரு கோயில் - 5

கோவில்களைப் பற்றி எழுத ஆரம்பித்த போதுதான் நாம் அடிக்கடி செல்லும் கோவிலாக இருந்தாலும், மக்கள் வழி வழியாகச் சொல்லும் கோவிலின் வரலாறு, சிறப்புக்களைக் கேட்டிருந்தாலும் விரிவான வாசிப்பில்தான் புராணக்கதை, வரலாறு சொல்லும் கதை என எல்லாமும் அறிய முடிந்தது.

மேலும் கோவில் குறித்தான நிறையச் செய்திகளை இன்னும் தேடித்தேடி வாசிக்கச் சொல்கிறது. சிவகங்கை மாவட்டக் கோவில் வரிசையில் இன்று பார்க்கப் போகும் கோவில் தென் திருப்பதி என்று அழைக்கப்படும் அரியக்குடி. புரட்டாசி சனிக்கிழமை மக்கள் கூட்டம் அலைமோதும் இடம் இக்கோவில்.

தேவகோட்டையில் இருந்து காரைக்குடிக்கு வண்டியில் வேலையாகப் பயணிப்பதென்றால் நான் தேர்ந்தெடுக்கும் வழி கண்டதேவி, உஞ்சனை, அரியக்குடி வழிதான்... போக்குவரத்து நெரிசல் இன்றி, சிறிய ரோடுதான் என்றாலும் அரியக்குடி ஊருக்குள் தவிர மற்ற இடங்களில் குண்டுகுழி இல்லாத ரோடாய்... இருபுறமும் வயல்களும், ஆர்.எஸ்.பதி மரங்களும், தோட்டங்களுமாய் பயணிக்க அழகான, சுகமான வழியாக இருக்கும்.

அரியக்குடி அடிக்கடி போனாலும், கோவில் மேல் தளத்தில் இருக்கும் மூலைக் கருடனையும் அவருக்குச் சுவரில் அடிக்கும் சிதறு தேங்காயும் எனக்கு வித்தியாசமாய்த் தெரியவில்லை. வரலாறை வாசிக்கும் போதுதான் மூலக்கருடனுக்கு ஏன் அங்கு தனிச் சன்னதி, விடலைத் தேங்காய் எதற்காக உடைக்கப்படுகிறது என்பதெல்லாம் அறிய முடிந்தது.

அரியக்குடி திருவேங்கடமுடையான் திருக்கோயில்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வானம் மற்றும் வெளிப்புறம்
ரியக்குடி என்னும் சிறிய ஊர் காரைக்குடி ரயில் நிலையத்தில் இருந்து மூன்று கி.மீ. தூரத்தில் இருக்கிறது. அரியக்குடி, உஞ்சனை வழியாக காரைக்குடியில் இருந்து தேவகோட்டைக்குப் பயணிக்கலாம்.
திருவேங்கடமுடையானின் தீவிர பக்தரான சேவுகன் செட்டியாரிடம் அருள் வாக்குக் கேட்க வரும் மக்கள் தங்கள் காணிக்கைகளை அவர் வைத்திருக்கும் உண்டியலில் செலுத்தி வந்ததாகவும் அத்துடன் தனது வருமானத்தில் இருந்தும் பணம் போட்டு வருடா வருடம் புரட்டாசி மாத திருவோண நட்சத்திரத்தன்று அரியக்குடியில் இருந்து திருப்பதிக்கு பாதயாத்திரையாகச் சென்று தன் காணிக்கையைச் செலுத்தி வந்ததாகவும், வயதான காலத்திலும் இதைத் தொடர்ந்து செய்ததாகவும், ஒருமுறை அவர் திருமலை ஏறும் போது மயங்கி விழுந்ததாகவும் அப்போது அவருக்கு காட்சி தந்து 'திருவேங்கடவனைத் தேடி வரும் பக்தனைத் திருவேங்கடவனே தேடி வருவான்' என்று சொன்னதாகவும், அதன் பின் தன் கோவிலுக்கான இடத்தைத் தானே செட்டியாருக்குக் காட்டியதாகவும் அந்த இடத்தில் சுயம்புமூர்த்தியான திருவேங்கடமுடையானுக்கும் அலர்மேலுமங்கைத் தாயாருக்கும் கோவில் கட்டியதாகவும் தல வரலாறு கூறுகிறது.
திருப்பதி ஏழுமலையானே இங்கு வந்து குடிகொண்டதால் இது 'தென்திருப்பதி' என்றும் அழைக்கப்படுகிறது. திருப்பதி செல்ல முடியாதவர்கள் இங்கு வந்து வழிபட்டால் திருப்பதி ஏழுமலையானைத் தரிசித்த மனநிறைவு பெறுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது. கோவில் கட்டுவதற்கான இடத்தைக் கருடன் வட்டமிட்டுக் காட்டியதால் இங்கு மூலக்கருடனுக்குத் தனிச் சன்னதி இருக்கிறது.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வானம், மேகம் மற்றும் வெளிப்புறம்
மூலவரான திருவேங்கடமுடையான் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். பெருமாள் சன்னதிக்கு வலதுபுறத்தில் அலர்மேலுமங்கைத் தாயார் சன்னதியும் இடது புறத்தில் ஆண்டாள் சன்னதியும் இருக்கின்றன.
மேலும் சேனை முதலியார், தேசிகர் என்னும் நம்மாழ்வார், இராமர் சன்னதியும் கோவிலுக்குள் இருக்கின்றன.
வேண்டுபவர்களுக்கு வேண்டியதைக் கொடுக்கும் மூலக்கருடனுக்கு தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும் விடலைத் தேங்காய் உடைக்கப்படுகிறது.
புரட்டாசி மாத திருவோண நட்சத்திரத்தன்று இவ்வூர் நகரத்தார்கள் எங்கிருந்தாலும் இங்கு வந்து விடுவார்கள். அன்று கோவில் முன் களிமண்ணால் பெரிய அகல் கட்டி, அதில் பசு நெய் ஊற்றி, துணிகளைத் துண்டு துண்டாக கிழித்துப் போட்டு அக்னிச்சுவாலை உண்டாக்கி 'கோவிந்தா... கோவிந்தா...' எனக் கோஷமிட்டுப் பெருமாளை வணங்குவர். அதன் பின் முளக்கொட்டுவதைப் போல் கைதட்டிக் கொண்டு அதைச் சுற்றி வருவர். இது மூதாதையர்களுக்கு பிதுர்கடன் செய்வதாக வருடாவருடம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சி இங்கு மட்டும்தான் நடைபெறுகிறது.
அரி என்னும் பெயர் கொண்ட திருவேங்கடமுடையான் துளப ரூபத்தில் திருவடிகள் மூலமாகக் குடி கொண்டிருப்பதால் இந்த ஊர் அரியக்குடி ஆயிற்று என்றும் தன் அரிய பக்தனான சேவுகன் செட்டியாருக்கு அரி அருளிய கோயிற்குடி என்பதால் அரியக்குடி ஆயிற்று என்றும் செவி வழிக் கதைகள் உண்டு.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உட்புறம், , ’Sorkavasal Mandapam Veiw’ எனச்சொல்லும் உரை
இது 500 வருடங்கள் பழமையான கோவில்.
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், படிப்பு போன்றவற்றிக்காக இங்கு வேண்டிக் கொள்ளலாம். பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்கிறார்கள்.

நாளை : தாழையூர்...
நன்றி : படங்கள் இணையத்திலிருந்து.
-'பரிவை' சே.குமார்.

5 எண்ணங்கள்:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

கேள்விப்படாத கோவில் - தகவல்களும் சிறப்பானவை.

நன்றி குமார்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பலரும் அறியாத அரிதான கோவில்...

ஸ்ரீராம். சொன்னது…

சிறப்பான தகவல்கள்.

மாதேவி சொன்னது…

தென் திருப்பதி வணங்கினோம்.

துரை செல்வராஜூ சொன்னது…

40 ஆண்டுகளுக்கு முன் பண விவகார்த்தில் சிக்கித் தலை மறைவாக இருந்த ஒருவரைப் பற்றித் தெரிந்து கொள்வதற்காக அரியக்குடி சென்றிருக்கிறேன்..

மதிய நேரம்.. கோயில் நடை அடைக்கப்பட்டிருந்தது...

அதன்பிறகு அங்கு செல்ல வாய்ப்பு கிடைக்க வில்லை....