அகல் மின்னிதழ் எப்போது என்னிடம் கட்டுரைக்கான களத்தை மட்டுமே காட்டும். சிறுகதையை விட கட்டுரைகள் அதிகம் எழுதியது அங்கு மட்டுமே. அது ஏனோ தெரியவில்லை நண்பர் சத்யா, 'ஜி அடுத்த இதழுக்கு ஒரு கட்டுரை எழுதுங்களேன்' என்றுதான் முகனூல் அரட்டையில் சொல்வார். அப்படித்தான் தொடர்ந்து கட்டுரைகளாய் அகலில் மட்டும். எனக்கே ஆச்சர்யமாக இருக்கும்... கதைகள் என்றால் ஒகே... கட்டுரை என்னும் போது கொஞ்சம் யோசிப்பேன். இந்த முறை கட்டுரை எழுதி அனுப்பியதும் வாசித்துவிட்டு இப்படி முகனூல் அரட்டையில் சொல்லியிருந்தார்.
'கட்டுரை படிச்சுட்டேன் அற்புதம் ஜி உங்க கட்டுரைகளில் இது தான் டாப். ஆரம்ப கட்ட எழுத்திலிருந்து வேகுவா மெருகேறி சிறப்பா எழுதி இருக்கீங்க...தொடர்ந்து கலக்குங்க ஜி'
நன்றி சத்யா.
சந்தோஷமாக உணர்ந்த தருணம் அது. இன்று அகலில் வெளியாகியிருக்கும் என் கட்டுரை உங்கள் வாசிப்புக்காக.
சந்தோஷமாக உணர்ந்த தருணம் அது. இன்று அகலில் வெளியாகியிருக்கும் என் கட்டுரை உங்கள் வாசிப்புக்காக.
வாசிப்பு
வாசிப்பு என்பது ஒரு சுகானுபவம்தானே..?
வாசிப்புக்கும் எனக்கும் இடையே மிகப்பெரிய தூரம் இருந்தது... அது படிக்கும் காலம் முதல் இப்போது வரை ஏற்ற இறங்கங்களுடன் நகர்ந்தாலும்... பெரும்பாலும் தூரமாகவேதான் இருந்து வந்தது... சமீபத்தில்தான் சற்று பக்கத்தில் வந்திருக்கிறது என்பது கூட மகிழ்வான விஷயம்தானே.
பள்ளியில் படிக்கும் போது வீட்டில் அம்மாவின் விருப்பமாய் 'ராணி' மட்டுமே வாங்கப்படும். செவ்வாய்க்கிழமை கடைகளுக்கு வந்ததும் வாங்கி வர வேண்டும். அதில் அட்டை டூ அட்டை எல்லாரும் வாசிப்போம். சின்னம்மா வீட்டில் ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ், அம்புலி மாமா முதல் வாராந்திர, மாதப் பத்திரிக்கைகள் நாவல்கள் எல்லாம் வாங்குவார்கள். அங்கு சென்றால் புத்தகங்கள் அள்ளி வரலாம் என்பதால் இரு ஊருக்கும் இடையில் இருக்கும் கண்மாயைக் கடந்து சென்று புத்தக மூட்டையுடன் திரும்பி வருவோம். அப்போதுதான் க்ரைம், பாக்கெட் நாவல்களின் தீவிர வாசிப்பாளன் ஆனது.
Picture
கல்லூரியில் படித்தபோது தமிழ்த்துறையோடு சிறிதான தொடர்பு இருந்ததாலும் நண்பன் முருகன் தழித்துறையில் படித்ததாலும் பழனி ஐயாவுடனான நட்பு, உறவாய் மாறி அவரின் வீட்டுக்குள் அழைத்துச் செல்ல, அங்குதான் பெரிய பெரிய புத்தகங்களாய் எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். ஐயா இருந்தால் பேச்சு பல நல்ல விஷயங்களுக்குள் நுழைந்து பயணிக்கும்... அவர் இல்லைன்னா ஒரு பெருங்கூட்டத்தின் அரட்டைதான் அங்கு நிறைந்திருக்கும்... எல்லாருக்கும் காபி, சாப்பாடென அம்மாதான் வேலை பார்த்துக் கொண்டிருப்பார்... என்ன கூட்டம் இங்கே... ஐயா இல்லை போங்க என்று ஒரு வார்த்தை எப்போதும் அவர் வாயில் இருந்து வந்ததேயில்லை... என் பிள்ளைகள் என்றுதான் சொல்வார். ஐயா இருந்தாலும் இல்லையென்றாலும் உபசரிப்பு ஒன்றுதான்... அதில் எப்போதும் மாற்றமிருக்காது.
வீடெங்கும் நிறைந்து கிடக்கும் புத்தகத்தில் எதையும் எடுத்துப் படிக்கும் உரிமை எங்களுக்கு இருந்தது... நல்ல புத்தகமெனில் ஐயாவே இதை வாசிங்க என்று சொல்லிக் கொடுப்பார். சில நேரங்களில் நமக்கே நமக்காகவும் அந்தப் புத்தகத்தைக் கொடுத்துவிடுவார். இந்த வாசிப்பின் நீட்சியாய் கல்லூரி நூலகத்தில் பாடப்புத்தகம் தவிர்த்து சுஜாதா, பாலகுமாரன், ஜெயகாந்தன் என புத்தகங்களை எடுத்து வாசிக்கவும் முடிந்தது. தோழி சுபஸ்ரீ கல்லூரி நூலகத்தில் உணவு இடைவேளை மற்றும் ஆசிரியர் வராத பாடவேளைகளில் தன்னார்வ சேவை செய்ததால் விருப்பப்பட்ட புத்தகத்தைச் சொன்னால் அவர் எடுத்துக் கொடுப்பார். வாசித்துவிட்டு அவரிடம் திருப்பிக் கொடுத்தால் அடுத்த புத்தகம் வரும்.
அதன் பின்னான நாட்களில் வாசிப்பு என்பது மீண்டும் வெகு தூரமாகிப் போனது... பெரும்பாலும் வேலை, வீடு எனச் சென்னையில் வாழ்க்கை நகர்ந்து செல்ல, எழுத்தும் வாசிப்பும் சொல்லாமல் கொள்ளாமல் இனிதே காணாமல் போனது, அமீரகம் வந்த பின்னும் வாசிப்பிலும் எழுதுவதிலும் நாட்டமில்லை... ஏன் வாழ்க்கையிலும் கூட நாட்டமில்லாமலே இருந்தது.
கோவில்களில் தினசரி பூஜை எப்படி நேராநேரத்துக்கு நடக்குமோ அதுபோலானது வாழ்க்கை... அதிகாலை விழிப்பு... குளியல்... அலுவலகம்... மதிய உணவு உண்ணக்கூட அதிக நேரம் எடுத்துக் கொள்ள முடியாத வேலைப்பளு... மாலை அறைக்குத் திரும்புதல்... ஊருக்குப் பேசுதல்... பெரும்பாலும் வருத்தத்தை மட்டுமே சுமக்க வைக்கும் பேச்சு... )வலிகளை இறக்கி வைக்க முடியாமல் வருத்தங்களைக் கூடுதலாய்ச் சுமக்க மட்டுமே முடிந்த வெளிநாட்டு வாழ்க்கையில் எப்போது நிம்மதியான பேச்சுக் கிடைக்கும்) சமையல்... சாப்பாடு... மனசை ஆசுவாசப்படுத்த பாடல்கள் அல்லது படம்... உறக்கம்... மீண்டும் அதிகாலை விழிப்பு... என தினசரி வாழ்க்கை கோவில் பூஜை நேரம்போல சுருங்கிப் போனது.
வெள்ளிக்கிழமை என்பது விடுமுறை தினமான போதும் இதுநாள் வரை அதிக நேரம் தூங்க வேண்டுமென மற்றவர்களைப் போல் நினைத்ததேயில்லை... அதே அதிகாலை விழிப்பு... குளியல் என்பது இப்போதுவரை அப்படியே... சில நாட்கள் மற்றவர்களின் தூக்கம் கெடக்கூடாது என்பதால் மிஞ்சிப்போனால் எழாமல்.... தூங்காமல்... அரைமணி அல்லது ஒரு மணி நேரம் படுக்கையில் கிடக்க வேண்டிய சூழல்... இருப்பினும் வாட்ஸப்பும் முகநூலும் முந்திக் கொள்ள, அவற்றின் பின்னே படுத்தபடி நகர ஆரம்பித்து விடுகிறேன்.
இங்கு வியாழன் இரவு முதல் சனி விடுமுறை என்றால் சனி இரவு வரை கொண்டாட்டம்தான்... குடி மனிதர்களைக் குடித்து மகிழும் நேரம் அது... ரசித்துக் குடிக்க ஆரம்பித்து அவர்களை குடி ரசித்துக் குடிக்கும் வரை தொடரும்... ஒரு வாரத்துக்கான சரக்கை ஒரே நாளில் குடித்து... ஒட்டகத்தைப் போல சேமித்து வைத்து அடுத்த வாரம் முழுவதும் ஓட்ட வேண்டும் என்பதாய்... குடித்துக் குடித்துக் குடித்துக் கொண்டேயிருப்பார்கள்... அரசியலும் அந்நிய நாட்டு நிகழ்வுகளும் பேச்சாய் ஆரம்பித்து சண்டையாய் முடியும்... சில நேரங்களில் அடிதடி, கத்துக்குத்து, கொலை வரை செல்லும்.
அதிகமான குடியால் எழ முடியாமல்... நடக்க முடியாமல்... போட்டது போட்டபடி அதே இடத்தில் படுத்தாலும் மறுநாள் காலை மணக்க மணக்கக் குளித்து மறுபடியும் குடிக்க ஆரம்பிப்பார்கள். இது ஆறுதலில்லாத வாழ்க்கை... குடி ஒன்றே வலி போக்கும் மருந்தென நினைத்துத் தன்னையே அழித்துக் கொள்பவர்கள் இங்கே 90%க்கு மேல்தான். இந்த வாழ்க்கை குறித்து நிறைய எழுதலாம்... இது வாசிப்புக்கான பகிர்வு என்பதால் மாறிய குடிகாரப்பாதையிலிருந்து மறுபடியும் வாசிப்பு என்னும் வளமான பாதைக்குள் நுழைவோம்.
அமீரகம் வந்த பின் வாழ்க்கை மீதான வெறுப்பு அதீதமாய் துளிர்விட்ட தருணத்தில்தான் வலைப்பூ (BLOG) அறிமுகமானது. அதில் எழுத ஆரம்பித்த பின்தான் சிறுகதைகள், கவிதைகள் எழுதுவதை மீண்டும் தூசிதட்ட ஆரம்பித்தேன்... உண்மையிலேயே மனசுக்குப் பிடித்த, வாழ்க்கைக் கதைகள் இங்குதான் எழுத்தாய் மலர்ந்தன... தனிமை இந்த எழுத்தில் தன்னிறைவு பெற ஆரம்பித்தது. கிராமத்து மனிதர்கள் என் கதைக்குள் வலம் வந்தார்கள்... வாழ்க்கை மீதான வெறுப்பு, குடும்பத்தைப் பிரிந்த விரக்தி, அறை... அலுவலகம் என்ற வழக்கமான வாழ்க்கை என எல்லாவற்றையும் இந்த மனிதர்கள்தான் மறக்கச் செய்து எழுத்தின் மூலம் கொஞ்சமாய் எழ வைத்தார்கள். அப்போதும் வாசிப்பு என்பது தூரமாகவே இருந்தது ஆனால் சினிமா மொழி கடந்து இன்னும் நெருக்கமானது. இணையத்தில் புதிய படங்களின் வருகை அதிகரிக்க அதிகரிக்க நானும் அதிகமாய் சினிமா பார்த்தேன்.
வலைப்பூ வழி நட்பான சகோதரர்கள் தமிழ்வாசி பிரகாஷ், தினேஷ் குமார் மற்றும் நிஷாந்தினி அக்கா மூவரும் புத்தக வாசிப்பில் இறங்க, அவர்களின் பின்னத்தி ஏராய் நானும் இறங்கினேன். பெரும்பாலும் பிடிஎப் பைல்களாகத்தான் அவர்களிடமிருந்தும் மற்ற நண்பர்களிடமிருந்தும் பெற்றேன். வேலைக்குப் போக, வர பேருந்தில் 40 நிமிடத்துக்கு மேலாகும் என்பதால் அதுவே வாசிக்கும் நேரமானது.
கல்கியின் பொன்னியின் செல்வனின் ஆரம்பித்து உடையார், கடல்புறா என பாலகுமார், சாண்டில்யனில் பயணித்து ஏறக்குறைய சாண்டில்யனின் எல்லா வரலாற்று நாவல்களையும் வாசித்து முடித்து, அதைப் பற்றி விவாதித்தல்... வலைப்பூவில் எழுதுதல் என சில மாதங்கள் வாசிப்பின் பின்னே நகர்ந்தது... மகிழம்பூப் போல... மல்லிகைப்பூப் போல... வாசிப்பு அத்தனை வாசமாய் இருந்தது... உண்மையில் வாசிப்பு மகிழ்வைக் கொடுத்தது... வலிகளை மெல்லக் குறைத்தது... குறிப்பாக எதற்கெடுத்தாலும் கோபப்படும் குணம் வாசிப்புக்குள் மூழ்கி மெல்லக் கரைந்து போனதும்
பின்னர் ஒரு தொய்வு... வாசிப்பு மீண்டும் தூரமாய்த் தள்ளி நிற்க ஆரம்பித்தது. அமீரக எழுத்தாளர் குழுமத்துக்குள் இணைந்த போது மீண்டும் வாசிப்புக்குள்... பிடிஎப், புத்தகமெனக் கலந்து கட்டி வாசிக்க ஆரம்பித்தோம்... ஆம் அதிகமான வாசிப்பாளர்கள் ஒரு இடத்தில் இருப்பதும் வசதிதான்... இதைப்படி.. அதைப்படி எனச் சொல்லிச் சொல்லி புத்தகங்கள் கிடைத்தன... வாசிப்பு நிறைய நட்பைக் கொடுத்தது... வாசிப்பு நிறைய விஷயங்களை அள்ளிக் கொடுத்தது... ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு விதமாய்... எத்தனை கதைகள்... எவ்வளவு தகவல்கள்... என்ன மாதிரியான எழுத்துக்கள்... வாசிப்பு தொடரத் தொடர ஒவ்வொருவரின் எழுத்தும் வெவ்வேறு விதமாய் மனசுக்குள் தங்கியது. மீண்டும் வாசிப்பில் களம் காண நண்பர்களே முக்கியக் காரணமாக அமைந்தார்கள்.
கிராமத்துக் கதைகள் என்றால் அதனோடு ஒன்றி வாசித்துப் பழகியவன் வரலாற்றுப் புதினங்களையும் ரசித்து வாசிக்க ஆரம்பித்தவன் நமக்கு சரிவராதென்றாலும் தகவல்கள் நிறைந்த நாவல்களையும் வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்..
தங்களின் எழுத்துக்காக அந்தந்த இடங்களுக்கே சென்று வருடக் கணக்கில் தங்கி, விவரங்களைச் சேகரித்து எழுதப்பட்ட நாவல்களை வாசிக்கும் போது ஒரு நாவலுக்காக இத்தனை மெனக்கெடலா என்று ஆச்சர்யமும் அவர்கள் மீதான மரியாதையும் கூடிப் போனது.
சிலர் வரலாறுகளை ஆராய்ந்து... தீவிரமாய்த் தேடிப் படித்து... விவரணைகளுடன் எழுதியிருப்பதை வாசிக்கும் போது என்னால் எழுத முடியும் என்பதைவிட என்னால் இத்தனை விவரங்களுடன் எழுத முடியும் என்று காட்டும் அவர்களின் திறமை மீதும் தனி மரியாதை உண்டாகியது.
சிலரோ இணையம் சொல்வதை உண்மையென நம்பும் விதமாய் புனைவு எழுதுகிறார்கள்... சிலரின் கதைகள் காமத்துக்குள் காவிரியாய்ப் பாய்ந்து வெளிவருகிறது... சிலரோ வாழ்க்கையைப் படம்பிடித்து எளிய மனிதர்களை நம் கண்முன்னே நடமாட விடுகிறார்கள்... எத்தனை வண்ணமான எழுத்துக்களை இப்போதெல்லாம் வாசிக்க முடிகிறது... இதையெல்லாம் கொடுத்தது எழுத்து மூலம் கிடைத்த நட்புக்களே.
இரா.முருகவேளின் முகிலினி வாசித்தபோது பஞ்சாலையும் அதனோடு தொடர்புடைய மனிதர்களுமெனச் சுற்றி வந்த மனசு, கரன் கார்க்கியின் மரப்பாலம் வாசித்தபோது இரண்டாம் உலகப்போர் காலகட்டத்துக்குள் நகர்ந்து சயாம் - பர்மா மரப்பாலம் கட்டும் பணியில் ஜப்பானிடம் மாட்டிய மக்கள்பட்ட துயரக்கடலுக்குள் நீந்திய மனசை, முஹம்மது யூசுஃப்பின் மணல் பூத்த காடு சௌதிக்குள் கைபிடித்து அழைத்துச் சென்று ஒவ்வொரு இடமாக வரலாற்றுச் செய்திகளுடன் சுற்றிக் காட்டி அமைதிப்படுத்தியது... ஆசுவாசப்படுத்தியது.
சோளகர் தொட்டி வீரப்பன் வேட்டை என வனக் காவலர்கள் பழங்குடி மக்களைச் சித்திரவதை செய்ததை, அவர்கள் அனுபவித்த நரகவேதனையை நெஞ்சுக்குள் நிறுத்தி இன்னும் என்னை அதிலிருந்து மீளமுடியாமல் வைத்திருக்கிறது... உண்மையில் இந்த நாவலுக்காக அந்த மக்களோடு சில காலம் தங்கியிருந்த ச.பாலமுருகன் அவர்கள் பாராட்டுக்குரியவர். வீரப்பன் வேட்டை மலைவாழ் பழங்குடி மக்களை என்னவெல்லாம் செய்தது என்ற உண்மையை உரக்கச் சொன்ன ஒரே நாவல் இது. இன்னும் ஒருமுறை படிக்க முடியாத வலி என்றாலும் மீண்டும் அந்த மக்களுடன் வலம் வர வேண்டும் என்ற ஆசையிருக்கத்தான் செய்கிறது. நான் வாசித்தவரை என்னை அதிகம் பாதித்த நாவல் இது. இன்னும் மீளமுடியவில்லை... மாதியும் சித்தியும் இன்னமும் கண் முன்னே கதறுகிறார்கள்.
சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல்... மிக அற்புதமான புத்தகம்... சல்லிக்கட்டு நடக்கும் இடம் மட்டுமே கதைக்களம்... மாடும் அதைப் பிடிப்பவனுமே பிரதானம்... எத்தனை விவரிப்பு... என்ன அழகான காட்சிப்படுத்துதல்... சிறிய நாவல் என்ற போதும் சிறப்பான நாவலாய்... இப்படி ஒரு நாவல் எழுதினால் என்ன என்று தோன்ற வைத்த எழுத்து... குறிப்பாக வட்டார வழக்கில்தான் முழு நாவலும் நகர்கிறது என்றாலும் நம்மை வாடிவாசலில் கட்டிப் போட்டு விடுகிறது என்பதே உண்மை.
சில நாள் முன்பாக முஹம்பது யூசுஃப்பின் இரண்டாம் நாவலான கடற்காகம் வாசித்தேன்... டெல்மா தீவுக்குச் சென்று வந்திருக்கிறேன் என்றாலும் கதையின் மனிதர்களும் அவர்கள் பேசும் இனப்பிரிவினை, சிரியா யுத்தமென வாசிக்கும் போது நிறையத் தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. இந்த நாவலில் எழுத்தாளரின் எழுத்துநடை மெருகேறியிருக்கிறது.
தகவலைச் சொல்வதிலும் ஒரு கலை இருக்கத்தான் செய்கிறது. கதையின் போக்கில் சொல்லத் தெரிந்தவர்களின் எழுத்து வீரியம் பெற்று நம் முன்னே உயர்ந்து நிற்கிறது. தகவல்களுக்காக அதிக சிரத்தை எடுக்கும் போது கதை மாந்தர்களுக்குப் பதில் எழுத்தாளனே நம்மிடம் நேரடியாகச் சொல்வது போல் மாறிவிடும் போது அதன் வீரியம் குறைந்து உயரம் தடைபடுகிறது. எது எப்படியென்றாலும் அந்த எழுத்தாளர்களின் தேடுதலுக்காவேனும் அவர்களைக் கட்டி அணைத்து அன்பைப் பரிமாறலாம்... தப்பேயில்லை... அந்தத் தேடுதலில் 1% கூட என்னிடம் இல்லை... நான் தேடுவதெல்லாம் கிராமத்து மனிதர்களின் மனசை மட்டுமே. அப்படியான எழுத்துத்தான் வாய்த்திருக்கிறது.
கலைஞரின் தென்பாண்டிச் சிங்கம் வாசித்த போது அந்த எழுத்து என்னைத் தொடர்ந்து வாசி என ஈர்த்தது. கலைஞரைப் பிடிக்காது என்றாலும் அந்தத் தமிழ் என்னமாய்க் கொஞ்சி விளையாண்டிருக்கிறது... வார்த்தை விளையாட்டுக்களும் அதில் அடக்கம். சிறப்பான தமிழ் புத்தகமும் முழுவதும் விரவிக் கிடந்தது. கலைஞரின் மற்ற நாவல்களையும் வாசிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது.
விதவிதமான கதைகள்.... வித்தியாசமான எழுத்துக்கள்... பலதரப்பட்ட கதைக்களன்கள் என வாசிப்பின் பாதை நீண்டு கொண்டே போனாலும் வாசிப்பின் மூலம் நம் பார்வை விரிந்து கொண்டு போக ஆரம்பிக்கிறது... நிறையத் தேடல்களை நம்முள்ளே பதியம் போட்டு வைக்கிறது... அடுத்து என்ன... அடுத்து என்ன... என வாசிப்பின் வாசலைத் திறந்து வைக்கிறது. நம் எழுத்திலும் நிறைய மாற்றங்களைக் கொண்டு வரத் தோன்றுகிறது.
வாசிப்பு நிறையக் கற்றுக் கொடுக்கிறது... இப்போதெல்லாம் எதாவது வாசிக்க வேண்டும் என்று தோன்ற ஆரம்பித்து விடுகிறது. விடுமுறை தினங்களில் சினிமா என்னிடமிருந்து விலகி, வாசிக்கச் சொல்கிறது... சில புத்தகங்கள் எடுத்ததும் முடித்தால்தான் கையிலிருந்து விலகுவேன் என்கிறது. வாசிப்பை நான் நேசிக்க ஆரம்பித்திருக்கிறேன் என்பதை விட வாசிப்பு என்னை நேசிக்க மட்டுமில்லாமல் இழுத்து அணைத்துக் கொண்டு விட்டது. அந்த அணைப்புக்குள் பல புத்தகங்களை மாறி மாறி வாசித்துக் கொண்டே இருக்கிறேன்.
வெக்கையின் அறுபது பக்கங்களைக் கடந்து காட்டுக்குள் திரிந்தபடி, பெயரிடப்படாத புத்தகத்தின் ஆறாவது கட்டுரையில் அமிழ்ந்து கிடக்கிறேன்... காடோடியின் பின்னே நூறு பக்கங்களைத் தாண்டி ஆற்றங்கரையில் நின்று கொண்டிருக்கிறேன் மரம் வெட்டச் செல்லும் மனிதர்களுடன்... இடையே நானும் எழுதிக் கொண்டிருக்கிறேன் கிராமத்து வெள்ளந்தி மனிதர்களின் கதையை...
வாசிப்பு உங்களின் பார்வையை விரிவாக்கும்... நிறைய கற்றுக் கொடுக்கும்...
வாசியுங்கள்... நிறைய... நிறைவாய்....
வாசிக்க ஆரம்பித்தால் அவ்வளவு சீக்கிரம் வெளியில் வந்துவிடமாட்டீர்கள்.
ஆம்... வாசிப்பு என்பது சுகானுபவம்தான்.
*******
அகலில் வாசித்து அங்கும் கருத்துச் சொல்லுங்க... உங்கள் கருத்தே அம்மின்னிதழை இன்னும் சிறப்பாக பயணிக்க வைக்கும்... அங்கிடப்போகும் கருத்துக்கு நன்றி.
-'பரிவை' சே.குமார்.
1 எண்ணங்கள்:
வாசிக்கத் தூண்டுகிறீர்கள்
பாராட்டுகள்
கருத்துரையிடுக