மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 15 நவம்பர், 2019

மனசு பேசுகிறது : பொன்னீலன் - 80

Image result for பொன்னீலன் - 80

பொன்னீலன்...

இந்தப் பெயரைக் கேள்விப்பட்டது கல்லூரியில் படிக்கும் போதுதான்... கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும் வரை ஒரு சின்னக் கிறுக்கல் கூட எழுதியதில்லை... வார, மாத இதழ்கள் தவிர்த்து தனிப்பட்ட எழுத்தாளர்களின் புத்தகங்கள் எல்லாம் அதிகம் வாசித்ததும் இல்லை... அதனால் எழுத்துப் பற்றியோ எழுத்தாளர்கள் பற்றியோ பெரிய அல்ல... சிறிய அளவில் கூட அறிவு அப்போது இல்லவே இல்லை.

முருகன் மூலமாக பழனி ஐயாவுடன் நெருக்கமாகி, அவரது வீட்டுக்குச் செல்ல ஆரம்பித்த பின்  அங்கிருக்கும் எண்ணற்ற புத்தகங்களில் சிலவற்றை எடுத்து ஆர்வக்கோளாறில் வாசிக்க ஆரம்பித்த போதுதான் நிறைய எழுத்தாளர்களை அறிய முடிந்தது. அப்போதுதான் ராணி, குமுதம், ஆனந்தவிகடன், பாக்யா, க்ரைம் நாவல், பாக்கெட் நாவல், ராணி காமிக்ஸ் வாசிப்பாளனில் இருந்து ஒரு படி மேலேறி உள்ளூர் முதல் உலகம் வரையிலான எழுத்தாளர்களை வாசிக்க ஆரம்பித்தேன். 

கிராமத்தில் இருந்து பள்ளிக்குச் செல்லும் ஒருவன் 90-களில் எழுத்தாளர்களின் புத்தகங்களைத் தேடித்தேடிப் படித்தேன் என்று சொன்னாலோ நானெல்லாம் பிறக்கும் போதே பிரில் இங்க் ஊற்றிய பேனாவோடும் வெள்ளைப் பேப்பரோடும் பிறந்தவன் என்று சொன்னாலோ அது எத்தனை சதவிகிதம் உண்மை என்று எனக்குத் தெரியாது... ஆனால் நானெல்லாம் அப்படியெல்லாம் தேடிப் படிக்கவுமில்லை.... எழுதவும் இல்லை... கஞ்சிக்கு இல்லாமல் பிறந்திருந்தாலும் தங்கக் கரண்டியில் சாப்பிட்டு வளர்ந்தவன் என்று சொல்பவர்களைப் பார்த்திருக்கிறேன். நானெல்லாம் விவசாயம் பொய்த்துப் போன வருடங்களில் ரேசன் அரிசியைத்தான் சாப்பிட்டேன் என்று சொல்வதில் எப்போதும் யோசிப்பதில்லை. நாம் ஒன்றும் அரண்மனையில் பிறந்து விடவில்லைதானே... 

நாங்கள் கூட்டமாய் ஐயா வீட்டுக்குப் போய்  அம்மா போட்டுக் கொடுக்கும் காபியைக் குடித்தபடி, அரட்டை அடித்து நாட்களைக் கடத்தும் போது இதைப் படிங்க தம்பி என ஐயா கொடுக்கும் புத்தகங்களை வாசித்து வளர்ந்தவர்களில் நானும் ஒருவன் அவ்வளவே. ஐயாவின் பின்னே நடந்ததால்தான் பூவோடு சேர்ந்த நாராய் அந்த மலைக்கு முன்னே மடுவாய் கொஞ்சம் எழுதிக் கொண்டிருக்கிறேன். ஐயாவால் மற்றவர்கள் பெற்றதை விட  நிறையப் பெற்ற சிலரில் நானும் ஒருவன்... முருகன் மூலமே ஐயா வீடு சென்றிருந்தாலும் அவரின் மகனாய் முருகனால் ஆகமுடியவில்லை அந்த இடத்தை நான் எடுத்துக் கொண்டேன்... இன்றுவரை அப்படியே.

பொன்னீலன் அவர்கள் தேவகோட்டை கலையிலக்கயப் பெருமன்றத்தின் வருடாந்திர விழாவுக்கு தொடர்ந்து வந்து கொண்டிருந்தவர்... இப்போதும் வந்து கொண்டிருக்கலாம். கல்லூரியில் படிக்கும்போதுதான் தமிழ்நாடு கலையிலக்கியப் பெருமன்றத்தில் நானும் முருகனும் உறுப்பினரானோம். ஐயாவின் செல்லப் பிள்ளைகள் என்பதால் கலையிலக்கியப் பெருமன்றத்தில் இருந்த பெரிய மனிதர்களுடன் சகஜமாகப் பேசி, அவர்கள் வீட்டுக்குள்... அவர்களின் பிள்ளைகளாய்... உரிமையுடன் சென்று அம்மாக்களிடம் திங்க என்ன இருக்கு எனக் கேட்டு வாங்கித் தின்ன முடிந்தது... முடிகிறது. அந்த அன்பு இன்று வரை தொடர்வதுதான் வாழ்வில் மறக்கமுடியாத நிகழ்வு.

விழாவுக்கு முதல்நாளே பொன்னீலன் ஐயாவெல்லாம் வந்து விடுவார்கள். நிவாஸ் ஹோட்டலில் அறை எடுக்கப்படும் அவர்கள் தங்க... அவர்களைப் போய்ப் பார்க்க... அவர்களுக்கு வேண்டியதைச் செய்ய... பெரும்பாலும் சவரிமுத்து ஐயா, அருள்சாமி ஐயா, பழனி ஐயா, லெட்சுமணன் ஐயா, பூவநாதன் ஐயா, செயலாளராக இருந்த முருகன் அண்ணனுடன் நாங்களும் அங்கே இருப்போம். நிறையப் பேசுவார்கள்... நிறைவாய்ப் பேசுவார்கள்.

பலரைச் சந்திக்கும் வாய்ப்பும் அவர்கள் பேசுவதைக் கேட்க்கும் வாய்ப்பும் அப்போதுதான் கிட்டியது. புதிய தரிசனங்களுக்கு சாகித்ய அகாதெமி வாங்கிய எழுத்தாளர் பொன்னீலன் ஐயா என்று சொல்லும் போது ஆஹா பெரிய ஆளுக போல... ரஜினி, கமல் மாதிரி பக்கத்துல போய் பார்க்க முடியாத ஒரு மனிதரைப் பார்த்து அவருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம் என்னும் போது மனசுக்குள் மட்டற்ற மகிழ்ச்சி குடி கொண்டிருக்கும்... கவனிக்க இப்போது போலவே அப்போதும் நான் மற்றவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டுதான் இருப்பேன்... முருகனே அதிகம் பேசுவான்... ஆனாலும் இவர்களை எல்லாம் சந்திப்பதே வரம் அல்லவா..? அந்த வரம் எங்களுக்கு வாய்த்தது.

ஐயாதான் என்னை எழுதச் சொன்னவர் அப்படி எழுத ஆரம்பித்து கவிதை எனக் கிறுக்கியதில் 'ஒரு கட்-அவுட் நிழலுக்கு கீழே' என்ற பெருங்கவிதை ஐயாவுக்குப் பிடித்துப் போய் அவரே தாமரைக்கும் அனுப்பி விட்டார். அப்போது தாமரை ஆசிரியர் பொறுப்பில் பொன்னீலன் ஐயா இருந்தார். அவர் அதை படத்துடன் ஒன்னறைப் பக்கத்துக்குப் போட்டு, பெயருக்கு கீழே ஒரு கல்லூரி மாணவரின் கவிதை எனவும் போட்டிருந்தார். எனது முதல் கவிதை தாமரையில்... அதற்குக் காரணமாய் இருந்தது எனது ஐயா பழனி இராகுலதாசனும் பொன்னீலன் ஐயாவும்தான். கவிதை வந்தபின் எனக்குத் தனியாக பொன்னீலன் ஐயாவின் கடிதம் ஐயா வீட்டு முகவரிக்கு வந்தது... அந்தக் கடிதம் இன்னமும் ஊரில் பத்திரமாய் இருக்கிறது. அதன் பின் இரண்டு மூன்று கடிதங்கள் எனக்கு வந்தன நிறைய எழுதுங்கள் குமார் என்ற வாசகத்துடன்.

பொன்னீலன் ஐயாவுக்கு  எப்பவுமே பழனி ஐயா மீதும் குன்றக்குடி பெரிய அடிகளார், தற்போதைய பொன்னம்பல அடிகளார் மீதும் மிகுந்த அன்பு உண்டு. அவர்களுக்கும் இவர் மீது ஒரு ஈர்ப்பு. மேடை ஏறி முழங்க ஆரம்பித்தால் ஒரு மணி நேரத்துக்கும் மேல் கூட்டத்தைக் கட்டி வைக்கும் பேச்சு முழக்கமாய் வரும்... ஆளும் ஆஜானுபாகுவாய்... அந்த ஜிப்பாவுக்குள்... பெரிய மீசையுடன்... பார்க்கும் போதே நம்மைக் கவர்ந்து கொள்வார். விழாவில் எல்லா வேலைகளும் பார்க்க வேண்டி இருக்கும். இரவு டிபன் லெட்சுமணன் ஐயா வீட்டில் இருந்து விழா நடக்கும் மண்டபத்துக்கு எடுத்து வர வேண்டும். நாங்கள் ஓடி ஓடி வேலை பார்த்தாலும் பொன்னீலன் ஐயா, அடிகளார் பேசும் போது கேட்டு விட்டுத்தான் போவோம் என பின் வரிசையில் போய் உட்கார்ந்து விடுவோம்.

விழா முடிந்து இரவு சாப்பிட்டதும் என் பிள்ளைகள் நல்லா வேலை பார்த்தாங்க என இழுத்து அணைத்துக் கொள்வார் பொன்னீலன் ஐயா. அந்த நேசம் பாசமெல்லாம் தொடர முடியாத கால ஓட்டம்... எங்கெங்கோ விரட்டி, இப்போது பாலை மண்ணில் கொண்டு வந்து பதியம் போட்டு ஒரு மாமாங்கம் ஆகப் போகுது. எல்லா உறவுகளும் நட்புக்களும் மனசுக்குள் மட்டுமே நிற்க, நல்ல மனிதர்களின் பழக்கங்களெல்லாம் சாதிப் பிரச்சினைகளால் நிறுத்தப்பட்ட திருவிழாக்கள் போல மனசுக்குள் அதன் நினைவுகளை நிறுத்தி மறைந்து விட்டன.

ஆமா இப்ப என்ன பொன்னீலன் ஐயா பற்றின்னு நினைக்கத் தோணுதா...

ஐயாவுக்கு 80 வயதாம்... நண்பரும் 'திருக்கார்த்தியல்' சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியருமான ராம் தங்கம் முயற்சியில் நாளை நாகர்கோவிலில் பொன்னீலன் - 80 என்னும் நிகழ்வு நடைபெற இருக்கிறது. தமிழகத்தின் தலை சிறந்த எழுத்து ஆளுமைகள் கடலெனக் கலந்து கொள்ளவிருக்கும் நிகழ்வாய் அது அமைந்திருப்பது மிகச் சிறப்பு. இந்த விழாவில்தான் கலந்து கொள்ள முடியாது என்றாலும் நானும் பொன்னீலன் ஐயாவுடன் பழகியிருக்கிறேன், பேசியிருக்கிறேன், எனது முதல் கவிதை அவரின் கைபட்டே தாமரையில் மலர்ந்தது என்றெல்லாம் மகிழ்வாய் எழுதியாவது வைப்போமே என்பதாலேயே இந்தப் பதிவு. தாமரை மலருமான்னு கேக்கக்கூடாது.. என் கவிதை தாமரையில்தான் முதலில் மலர்ந்தது. அவர் நல்லாயிருக்கு எனச் சொன்னாதாலோ என்னவோ அவ்வப்போது விட்டாலும்  விடாமல் தொடர்ந்து ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறேன்.

கலையிலக்கியப் பெருமன்றம் நிறைய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தி வைத்தது. இறையன்பு அவர்களுடன் ஒரு நாள் முழுவதும் மதுரை - தேவகோட்டை, தேவகோட்டை - மதுரை என காரில் கதை கேட்டுக் கொண்டே போகும் வாய்ப்பைக் கொடுத்தது, அடிகளார்களிடம் உரிமையுடன் பேச முடிந்தது என்பதெயெல்லாம் எப்போதும் மறக்கவே முடியாது.

பொன்னீலன் ஐயாவின் 80 அகவை விழாவும் எழுத்துத் துறையில் 55 ஆண்டு விழாவும் ஒருங்கே நிகழவிருக்கும் 'பொன்னீலன்-80' விழா சிறக்க வாழ்த்துக்கள். விழாவை முன்னின்று நடத்தும் ராம் தங்கம் உள்ளிட்ட நண்பர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்.

Image result for பொன்னீலன்

பொன்னீலன் ஐயா பற்றி....

இவரின் இயற்பெயர்  ஸ்ரீகண்டேஸ்வர பக்தவத்ஸலன். 

நாகர்கோவில் அருகே மணிக்கட்டிப்பொட்டல் என்னும் ஊரில் பிறந்த முற்போக்கு இலக்கியவாதி. 

இவரின் முதல் சிறுகதைத் தொகுதி 'ஊற்றில் மலர்ந்தது' 1978ல் வெளியானது என்றாலும் 1976ல் வெளியான 'கரிசல்' என்னும் நாவலே இவரை இலக்கிய உலக கவனத்துக்குக் கொண்டு வந்தது.  

இவரின் மிகச் சிறந்த... மிகப்பெரிய படைப்பு என்றால் அது 1992-ல் வெளிவந்த 'புதிய தரிசனங்கள்' என்னும் நாவல்தான்.  இந்த நாவல் 1994-ல் சாகித்ய அகாதெமி விருதைப் பெற்றது. 

இவரின் 'உறவுகள்' என்னும் சிறுகதை இயக்குநர் மகேந்திரனால் 'பூட்டாத பூட்டுக்கள்' என்னும் பெயரில் திரைப்படமாக்கப்பட்டது.

இவர் சிறுகதைகள், கட்டுரைகள், புதினங்கள், வாழ்க்கை வரலாறு என நிறைய எழுதியிருக்கிறார்.

தாமரையில் ஆசிரியர் பொறுப்பில் இருந்திருக்கிறார். நீண்ட காலமாக தமிழ்நாடு கலையிலக்கியப் பெருமன்றத்தின் தலைவராக இருப்பவர்.

மண்ணின் மனத்தோடும் மக்களின் வாசத்தோடும் எழுதும் எழுத்தாளர்களில் இவரும் ஒருவர்.

நன்றி : விக்கிப்பீடியா.

Image result for பொன்னீலன் புதிய தரிசனங்கள்

ரு எழுத்தாளனுக்கு இவ்வளவு பெரிய அளவில் விழா எடுப்பதென்பது சிறப்பு. அப்படி ஒரு வாய்ப்பு பொன்னீலன் ஐயாவுக்கு வாய்த்திருக்கிறது. கொடுத்து வைத்த எழுத்தாளர் அவர்... இதேபோல் இன்னும் பலருக்கு விழாக்கள் நிகழவேண்டும். இந்த எழுத்து என்ன கொடுத்தது என்று சொல்லும் பிரபல எழுத்தாளர்களுக்கு மத்தியில் இந்த எழுத்து எனக்கு நிறையப் பிள்ளைகளைக் கொடுத்து இருக்கிறது என்று சொல்லும் எங்கள் ஐயாவைப் போல்தான் பொன்னீலன் ஐயாவும் பிள்ளைகளின் அன்பை முழுவதாய் பெற்றவர்... நாங்களும் அவரின் பிள்ளைகளாய்த் தொடரத்தான் முடியவில்லை என்றாலும் அவர் கொடுத்த அன்பை பொக்கிஷமாய் மனதிற்குள் வைத்திருக்கிறோம்.

நாளைய விழா சிறப்பாக நிகழ வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கள் பொன்னீலன் ஐயா.

ஐயாவை வணங்கி அவரின் ஆசியை வேண்டி...
-'பரிவை' சே.குமார்.

2 எண்ணங்கள்:

kowsy சொன்னது…

எழுத்தாளர் பொன்னீலன் அவர்கள் பற்றி அறியத் தந்ததுடன் உங்கள் முதலாவது படைப்பு க்கு . அவரே காரணமானதை அறியத் தந்திருக்கிறீர்கள். பொன்னீலன் ஐயாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை...

வணங்குகிறேன்...