மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 17 நவம்பர், 2019

வீராப்பு (பரிசு பெற்ற கதை)

வீராப்பு...

ரியாத் தமிழ்ச் சங்கம் நடத்திய உலகளாவிய சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கதை. கிராமத்து மனிதர்களும் அவர்களின் வாழ்க்கையும் எப்பவுமே வீம்பும் வீராப்பும் நிறைந்ததாய்த்தானிருக்கும். 

அப்படியான அவர்களின் வாழ்க்கையை, எதார்த்த வாழ்க்கையை, ஏற்ற இறக்கங்கள் நிறைந்த வாழ்க்கையை, அறியாமை நிறைந்த வாழ்க்கையை, நேசம் நிறைந்த வாழ்க்கையை, ஆடு, மாடு, கோழி, நாயென அரவணைத்து வாழும் வாழ்க்கையை, தெய்வங்களுடனான பிணைப்பு, திருவிழாக்கள், துக்கம், சந்தோஷம் என எல்லாம் கலந்த வாழ்க்கையைத்தான் எனது பெரும்பாலான கதைகள் பேசும்... அப்படிப்பட்ட வாழ்க்கையைத்தான் இக்கதையும் பேசியது. 

இன்று பாலாஜி அண்ணா தனது வலைப்பூவான 'போற போக்குல'யில் இது குறித்து எழுதி, முகநூலில் பகிர்ந்த பின்னர்தான் கதைகளைப் பகிர்வதில்லை என்ற விரதத்தைச் சற்றே விலக்கி வைத்து வீராப்பை இங்கே இறக்கி வைத்திருக்கிறேன். வாசித்து உங்கள் கருத்தைச் சொல்லுங்க.... அதுக்கு முன் பாலாஜி அண்ணாவின் வலையில் 'வீராப்பு' பற்றி எழுதியிருப்பதை வாசிக்க இங்கே சொடுக்குங்க. நன்றி பாலாஜிண்ணே.

இனி... 
வீராப்பு

ம்ப்பு... ஒனக்கு வெசயம் தெரியுமாப்பு...என்றபடி பொழுது பளப்பளன்னு விடியும் போதே சாமிநாதன் வீட்டு வாசலில் நின்றார் சேதுக்கரசு.

"என்னப்பா... படுக்கய விட்டு எந்திரிச்சி வாறவனுக்கு என்ன வெசயந் தெரியப்போவுது... ஒனக்குத் தெரிஞ்சிதானே இம்புட்டுத்தூரம் வந்திருக்கே... அது என்னன்னுதான் சொல்லுவேப்பா..." என்றபடி கையிலிருந்த சொம்புத் தண்ணீரை முகத்தில் அடித்துக் கழுவி, வாய் கொப்பளித்து தோளில் கிடந்த துண்டால் துடைத்துக் கொண்டார்.

"ஒனக்குத் தெரியாதுன்னுதான் சொல்ல ஓடியாந்தேன்..." என்றபடி இடுப்பு வேட்டிக்குள் இருந்த நிஜாம் லேடி புகையிலைப் பொட்டலத்தை எடுத்துப் பிரித்து, விரல் விட்டு கொஞ்சமாய் கிள்ளி எடுத்து, கையில் வைத்துத் தேய்த்து வாய்க்குள் அதக்கிக் கொண்டு "போயெல வேணுமாப்பா..." என பாக்கெட்டை சாமிநாதனிடம் நீட்டினார்.

"இப்ப வாணாம்... காப்பித்தண்ணி குடிக்காம போயெல போட்டா நல்லாத்தேன் இருக்கும்... அது இருக்கட்டும் வெசயத்தோட வந்தவன் அப்பறம் என்னத்துக்கு கேள்வி கேக்குறே... என்னான்னுதான் சொல்லுவே..." ஏதோ விவகாரம் என்பதால் தெரிந்து கொள்ளும் ஆவலில் இருந்த சாமிநாதனிடம் காபியை நீட்டினாள் பேத்தி அனன்யா.

"ஏம்ப்பா காப்பி...” என்றவர், “அதான் நீ போயெலயப் போட்டுட்டியே... இனி எங்கிட்டு காப்பி..." என்றபடி டம்ளரை வாயில் வைத்து 'உருட்' என உறிஞ்சினார்.

"செலுவப்பய மவன் நட்ட நடுநிசியில வந்துருகானாமப்பு... ஊரெல்லாம் டமாரமாக் கெடக்கு... ஒனக்குத் தெரியுமோ என்னமோன்னுதான் வெள்ளக்கம்மாப் பக்கமா வெளிய இருக்கப் போனவன் சொல்லிட்டுப் போகலாம்ன்னு இங்கிட்டு வந்தேன்..."

"ஆறு மணிக்கெல்லாம் ஊரு பூராம் பரவிருச்சாக்கும்... எனக்கெங்கப்பா தெரியுது... இங்கிட்டு தோட்டத்துப் பக்கம் வந்துட்டு ஊரு வெசயம் ஒன்னய மாதிரி ஆளுக யாராச்சும் சொன்னாத்தான் தெரியுது..."

"ம்..."

"ஆமா அவளும் வந்திருக்காளாமா....?" என்றபடி மீண்டும் காபி டம்ளரை வாயில் வைத்து 'உருட்'டினார்.

"ஆமா குடும்பத்தோடதான் வந்திருக்கானாம்..."

"அப்ப நீ பாக்கலயா...?"

"இல்ல.... பார்வதியக்கா... பால் வாங்க வந்தப்போ சொல்லிட்டுப் போச்சு..."

"ம்... செலுவம் வரச் சொல்லாமயா வந்திருப்பான்... என்ன தயிரியமிருந்தா அவளயும் கூட்டிக்கிட்டு வந்திருப்பான்... சும்மா விடக்கூடாது... ஊர்க் கூட்டத்தக் கூட்டி உண்டு இல்லன்னு பண்ணாம விடக்கூடாதுங்கிறேன்.."

"அட இருப்பு... இன்னும் வந்திருக்கது அவன் மட்டுந்தானா... இல்ல அவளயும் கூட்டியாந்திருக்கானா... எதுக்கு வந்திருக்கான்... என்ன வெவரம்ன்னு எதுவுமே சரியாத் தெரியல... அதுக்குள்ள எதுவுந்தெரியாம நாம அருவா எடுத்து... எப்படியும் இன்னக்கி வெசயம் வெளிய வந்துதானே ஆவணும்..."

"அட கூமுட்ட... நீதானே பார்வதியக்கா சொன்னுச்சுன்னு சொன்னே...." காபி டம்ளரை கட்டைச் சுவற்றில் வைத்தார். காத்திருந்த ஈக்கள் காபி குடிக்க டம்ளருக்குள் சண்டை போட்டன.

"அட அது ஒரு வெவரங்கெட்ட மனுசி... ஒண்ணுக்குப் போக எந்திரிச்சி வந்துச்சாம்... அப்ப ஆளுக காருலயிருந்து எறங்கிப் போனாவளாம்... இருட்டுல யார்யாருன்னு தெரியலன்னு சொன்னுச்சு..." என்றபடி வாயில் இருந்த புகையிலை எச்சியை 'புளிச்'சின்னு தரையில் துப்பினார். அது மண்ணில் உருண்டு திரண்டது. ஈக்கள் அதன் மீதும் உட்கார்ந்து பறந்தன.

"நல்லாத்தேன்... எவுக எறங்கிப் போனாவனே தெரியாம... செலுவம் மவன மட்டும் தெரிஞ்சிச்சாக்கும் அந்த முண்டச்சிக்கி..."

"அதுதான் சொல்லுது... எனக்கென்னதத் தெரியும்... பாப்பம் யாரு வந்திருக்காவன்னு வெளிய தெரியாமயாப் போவும்..."

"ம்... நீ சொல்றது செரிதான்... வெவரந் தெரியாம நாம முந்திக்கிட்டுப் போக்கூடாதுதான்... "

"ஆமாமா... அப்ப நா வாரேம்ப்பா..." என்ற சேதுக்கரசு, வாசலில் நின்ற வேப்ப மரத்தில் குச்சியை ஒடித்து பல் விளக்க கையில் வைத்துக் கொண்டு கிளம்பினார்.

திண்ணையில் அமர்ந்த சாமிநாதன் மனசுக்குள் செல்வம் மகன் செய்தது நினைவில் ஆடியது.

ஏழு பங்காளி வீட்டுக்குன்னு ஒரு நடமொற இருந்துச்சு... நாலஞ்சு ஊருல இருந்தாலும் கருப்பன் கெடா வெட்டுக்கு மட்டும் எல்லாரும் இங்க வந்து கூடிருவாக... அவங்களுக்குள்ள பொண்ணு எடுக்கவோ, கொடுக்கவோ கூடாதுகிறது தலமொற... தலமொறயாத் தொடந்துக்கிட்டு இருக்க பழக்கம்.  'அந்தப் பழக்கத்தை உடச்ச பயதானே செலுவம் மயன்...' என்று நினைத்தவர் 'க்க்கும்...' என்று செருமியபடி தோளில் கிடந்த துண்டால் முகத்தில் அரும்பிய வேர்வையைத் துடைத்துக் கொண்டார். அவரின் மனசுக்குள் சில வருடங்களுக்கு முன்  தன் முகத்தில் கரி பூச்சிய அந்த நிகழ்வு காட்சியாய் விரிந்தது.

"வாங்க சித்தப்பா... என்ன கருக்கல்ல வந்திருக்கீக... ... ராஜாத்தி சித்தப்பாவுக்கு காப்பி போடு..."

"காப்பியெல்லாம் வேணாந்தா.... இப்பத்தான் குடிச்சிட்டு வாரேன்... ஏஞ் செலுவம்... எங்காதுக்கு அரசபுரசலா ஒரு சேதி வந்திருக்கு... ஓனக்கு எதுவுந் தெரியுமா...?"

"என்ன சேதி சித்தப்பா..?"

"எல்லாப் பக்கமும் பேசுறாய்ங்க... நீ தெரியாதுங்கிறே... எங்க ஒம்மவன்..."

"ம்.... அதுவா...? தெரியிஞ் சித்தப்பா... என்ன செய்யச் சொல்லுறீய..?"

"அப்ப ஒத்துக்கிறியா...? ஏழு பங்காளிக்குன்னு ஒரு மொற இருக்குடா... நாளாப்பின்ன ஊரு, நாட்டுக் கூட்டத்துல நம்மளுக்கு மதிப்பிருக்குமா..?"

"என்ன பண்ண சித்தப்பா... சொல்லிப் பாத்தாச்சி... அடிச்சிப் பாத்தாச்சி... செத்துருவேன்னு மிரட்டுறான்... என்னய என்ன செய்யச் சொல்லுறீய...."

"என்ன செய்யச் சொல்லுறீய... என்ன செய்யச் சொல்லுறீயன்னா... நீயே கட்டி வப்பே போல..."

"இந்தாங்க மாமா காப்பி..." என காபியை நீட்டியவளிடம் "அதான் வாணாமுன்னு சொன்னேனுல்ல... ஏம் போட்டே... செரி குடுத்தா...." என்றபடி வாங்கிக் கொண்டார்.

"அவுகளும் சொல்லிப் பாத்தாச்சு... அடிச்சி மெரட்டியெல்லாம் பாத்துட்டாக... அவளத்தான் கட்டுவேன்... இல்லேன்னா ரெண்டு பேரும் வெசத்தக் குடிச்சிட்டு செத்துப் போவோமுன்னு மிரட்டுறான்.... இதுக்கா பெத்து வளத்தோம்... என்ன செய்யுறதுன்னு தெரியல மாமா..." சேலை முந்தானையால் வாயைப் பொத்திக் கொண்டாள். கண்ணீர் தாரைதாரையாக கன்னத்தில் ஓடியது.

"இப்ப எதுக்கு நீ அழுவுறே... செத்தாச் சாவட்டும் மயிருப்புள்ள... இப்படிப்பட்ட புள்ள இருந்தாயென்ன... செத்தாயென்ன..." என்றவர் குரலைத் தாழ்த்தி "இங்கேரு செலுவம்... அந்தப்பய நாளக்கி விடியயில இங்க இருக்கப்படாது... எதாச்சும் நல்லதச் சொல்லி எங்கிட்டாச்சும் விரட்டிவிடு கழுதய... சோறு தண்ணிக்கி நாயாத் திரிஞ்சி வேல பாத்தா சூத்துக் கொழுப்பு தன்னால அடங்கும்... நாஞ் சொல்றத சொல்லிப்புட்டேன்... அம்புட்டுத்தான்... அவன் ஏதாவது நாடுமாறித்தனம் பண்ணிப்புட்டா அப்புறம் ஊரு ஒறவுன்னு நீதான் பதில் சொல்ல வேண்டி வரும் பாத்துக்க..." என்றபடி காபி டம்ளரை வைத்துவிட்டு, துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு கிளம்பினார்.

"வாங்க சித்தப்பா... என்ன இம்புட்டுத்தூரம்...?" கட்டுத்தொரையில் எருக்கூட்டிக் கொண்டிருந்த வசந்தா, கட்டை விளக்குமாறைப் போட்டுவிட்டு சேலை முந்தானையில் கையைத் துடைத்தபடி வரவேற்றாள்.

"சும்மாதாந்தா... மேலக்கொள்ள ராசப்பன ஒரு வேலயாப் பாக்க வந்தே... ஒ ஞாபகம் வந்திச்சி... இம்புட்டுத் தூரம் வந்துட்டு ஒன்னய பாக்காம போலாமா... அதான் ஒரு எட்டு பாத்துட்டுப் போலாமுன்னு... ஆமா எங்க எம்பேத்தியா... ஆளில்லயோ..." என்றபடி துண்டால் திண்ணையில் கிடந்த தூசியைத் தட்டிவிட்டு அமர்ந்தார் சாமிநாதன்.

"உள்ளதான் இருக்காவ... அவுகளுக்கு இப்ப எங்க மரியாத கொடுக்கணுமின்னில்லாம் தெரியுது... அவுக போக்குலதானே போறாவ... நாலெழுத்துப் படிக்க வச்சது எந்தப்பு..." பொறுமினாள்.

"இந்தா... இப்ப என்ன நடந்து போச்சுன்னு ஒப்பாரி வக்கிறவ... அந்த வெசயத்த நானும் அரசல்புரசலாக் கேள்விப்பட்டேந்தான்... காலயில செலுவத்துக்கிட்ட கூட இது வெசயமாத்தான் பேசிட்டுத்தான் வாரேன்.... ஏழு பங்காளிக்கின்னு ஒரு நடமொற இருக்குல்ல... அத மாத்த முடியாதுல்ல... ரெண்டு பேருக்கும் கேலி மொறதான்... கட்டி வக்கலாந்தான்.... ஆனா வழிவழியா வந்த மொறய விட்டுட முடியுமா...?"

"அதான் சித்தப்பா... அதனாலதான் நானும் தலதலயா அடிச்சிக்கிறேன்... பித்துப் பிடிச்சவ மாதிரி இருக்கா... எதுனாச்சும் பண்ணிப்பாளோன்னு பயமா வேற இருக்கு..."

"நீ ஏன் அப்புடி நெனக்கிறாவ... இங்க வா.... அவளுக்கிட்ட எதுவும் பேச வேணாம்... காதுங்காதும் வச்ச மாதிரி ஒரு பயலப் பாத்து சட்டுப்புட்டுன்னு அவ கல்யாணத்த முடிச்சிப்புட்டா சோலி முடிஞ்சிச்சி... அந்தப் பயலயும் நாளக்கி எங்கயாச்சும் வெளிய அனுப்பச் சொல்லிட்டுத்தான் வாரேன்... எல்லாஞ் செரியாகும்... கருப்பன் இருக்கானுல்லாத்தா... நடமொறய மாத்த விட்டுருவானா என்ன... நீ கவலப்படாத..."என்று மெல்லப் பேசியவர், "சரித்தா கொஞ்சந் தண்ணி கொடு... நாங்கெளம்பணும்" என்றார்.

"இருங்க காப்பி போட்டுக்கிட்டு வாரேன்."

"அதெல்லாம் வேணாம்... விடிஞ்சுட்டு ரெண்டு மூணு காப்பி குடிச்சாச்சு... தண்ணி மட்டும் கொடு போதும்..." என தண்ணி வாங்கிக் குடித்துவிட்டு வந்த வேலை முடிந்த சந்தோசத்தில் கிளம்பினார்.

மறுநாள் விடியல் அவருக்கு செல்வம் மகனும் வசந்தா மகளும் ஓடிப்போயிட்டாக என்பதாய்தான் விடிந்தது.

'ம்மொகத்துல கரியப் பூசிட்டுப் போனதுக திரும்பி வந்திருக்குக... விடக்கூடாது...' எனச் சொல்லிக் கொண்டு முகத்தைத் துடைத்தவர். 'எதுக்கு வெவரம் தெரியட்டும்ன்னு காத்திருக்கணும்... அங்க போன வெவரம் தெரியப்போகுது... என்ன ஆனாலுஞ் செரி நேர போயி பாத்துட்டு வந்துடலாம்' என்ற முடிவோடு செல்வம் வீட்டை நோக்கி நடந்தார்.

"வாங்க சித்தப்பா... நீங்க வருவீங்கன்னு எதிர்பார்த்தேன்..." என்றபடி சேரெடுத்துப் போட்டான் செல்வம்.

"என்னப்பா... காலயில எனக்கு வந்த சேதி உண்மதானா...?" கோபத்தோடு கேட்டார்.

"ஆமா சித்தப்பா... ஒங்க பேராண்டி வந்திருக்கான்..."

"பேராண்டி... எவன்டா எம்பேராண்டி... அம்புட்டு ஒங்கிட்டச் சொல்லிட்டுப் போயும் எம் மொகத்துல மறுநாளே கரியைப் பூசுனவன் பேராண்டியா...?" கோபமாய்க் கேட்டார்.

"இப்ப என்ன செய்யணுங்கிறிய சித்தப்பா... அவனை வெட்டிப் போட்டுடவா... அப்படிப் போட்டுட்டா ஏழு பங்காளிக்கு அவனால ஏற்பட்ட களங்கம் போயிருமா...?"

"என்னடா பேசுறே... அப்ப நீ அவன ஏத்துக்கிட்டுத்தான் வரச்சொல்லியிருக்கே... இல்லயா...?"

"ஆமா நாந்தான் வரச்சொன்னேன்... ரெண்டு பேரும் விரும்புனாங்க... ஓடிப்போனாங்க... ரெண்டு புள்ளயும் பெத்துட்டாக... இனியும் ஒதுக்கி வச்சி என்னாகப் போகுது... அதான் இங்க வரச் சொன்னேன்..."

"... புரட்சி பேசுறியோ... அப்ப நடமொற... பழக்க வழக்கமெல்லாம் தேவயில்லன்னு சொல்றே... அப்படித்தானே..."

"என்ன சித்தப்பா நடமொற... இதெல்லாம் நாம ஏற்படுத்துனதுதானே... வெள்ளச்சாமி மவன் கெளெக்குள்ள கெளெதான் கட்டிக்கிட்டான்.... அன்னக்கி ஊரு குதிச்சிச்சு... இப்ப எவன் கெளெக்கிள்ள கெளெ கட்டாம இருக்கான்.... இல்ல நல்லது கேட்டதுன்னா எவன் அவமூட்டுல போயி நிக்காம இருக்கான்... அன்னக்கி சாதிக்குள்ளயே பாகுபாடு பாத்தாங்க.. அந்த பிரிவுல நாங்க கொடுக்கிறதில்ல... இந்தப் பிரிவுல நாங்க கொடுக்கிறதில்லன்னு சொன்னாக... இன்னக்கி எந்த பிரிவுல கொடுக்காம இருக்காக சொல்லுங்க..."

"அதுக்காக ஒம்மவன் பண்ணுனத ஞாயப்படுத்துறியா... ஏழு பங்காளி வகயறாவே தல  குனிஞ்சு நின்னுச்சுடா... மறந்துட்டியா..."

"ஞாயப்படுத்தல சித்தப்பா... இப்ப இருக்க காலகட்டம் அப்படின்னு சொல்ல வந்தேன்.... நாளக்கி கருப்பனுக்கு கெடா பூச போடுறேன்... அப்ப இந்தக் கலியாணம் தப்புன்னா கருப்பன் அதுகளுக்குத் தண்டன கொடுக்கட்டும்... ரெண்டு ரத்தமும் சேந்து மூணாவது ரத்தங்களும் வந்தாச்சு.... இன்னமும் நாம எதுக்கு எதுத்துக்கிட்டு கெடக்கணும்... என்னத்த கொண்டு போப்போறோம் சித்தப்பா..."

"ஒனக்கு வசந்தா பரவாயில்ல... செத்தாலும் அவ மொகத்துல முழிக்கமாட்டேன்னு சொன்னவ அப்புடியே போயிச் சேர்ந்துட்டா... நீ கூட்டியாந்து ஒறவ வளக்குறியாக்கும்.... பங்காளிகளுக்கிட்ட கலந்து பேசி ஒன்னய ஏழு பங்காளிகள்ல இருந்து ஒதுக்கி வைக்க வேண்டியிருக்கும் பாத்துக்க..."

"அட ஏஞ்சித்தப்பா இன்னமும் பழய நடமொறயவும் பழக்க வழக்கத்தயும் தூக்கி வச்சிக்கிட்டு திரியிறிய... சின்னஞ்சிறுக மனசுக்குப் பிடிச்சி கட்டிக்கிருச்சுக... பழசச் சொமக்காம அதுக நல்லாயிருக்கட்டும்ன்னு வாழ்த்துறதுல என்ன வந்திறப் போவுது... நானும் வீம்பாத்தான் இருந்தேன்... என்னத்தக் கொண்டு போப்போறோமுன்னுதான் அவனோட பெரண்டு மூலமாப் பேசி இங்க வரச்சொன்னேன்... இங்கயே அவுக தங்கப் போறதில்ல... ஆனா வரப்போக இருக்கத்தான் செய்வாக... ஊரு என்ன முடிவெடுத்தாலும் கட்டுப்படுறேன் சித்தப்பா...."

"ம்... எடுக்கும்... எடுக்கும்... எடுக்க வப்பேன் " என்றபடி வேகமாய் சேரைத் தள்ளிவிட்டு எழுந்து நடக்க ஆரம்பித்தார் சாமிநாதன்.

"இந்த வீராப்புனாலதானே ஏழு பங்காளி வீட்டு செல்லத்தாயி... அதான் ஒங்க தங்கச்சி... எங்க அத்த... ஒரம்பா மரத்துல தொங்குச்சு.... அன்னக்கி என்னய்யா நடமொறன்னு எங்கய்யனோ... அப்பனோ... இல்ல நீங்களோ  தூக்கி வீசிட்டு... எங்க அத்த ஆசப்படி சேத்து வச்சிருந்தா அல்பாயுசுல அது போயிருக்காதுல்ல... இன்னமும் வாவரசியா வாழ்ந்துக்கிட்டு இருந்திருக்குமுல்ல..." செல்வத்தின் குரல் அவரின் முதுகுக்குப் பின்னே அறைந்தது.

அந்த வார்த்தைகள் அவரின் நெஞ்சுக்குள் சுருக்கென குத்தியது.

செல்லத்தாயி நினைவில் கண் கலங்கியது.

கண்ணைத் துடைத்தபடி வேகவேகமாக நடக்க ஆரம்பித்தார்...

அவர் செல்லத்தாயி உயிரைப் பறித்த ஒரம்பா மரம் நின்ற இடத்தைக் கடந்துதான் செல்ல வேண்டும்...  ஊர்க் கூட்டத்தைக் கூட்டுவேன் என்ற வீராப்பை அந்த இடத்தில் இறக்கி வைத்துவிட்டுச் செல்வாரா அல்லது சுமந்து செல்வாரா என்பது அவரைத் தவிர யாருக்கும் தெரியாது... ஏறு வெயிலில் வேகமாக நடந்தார்.

-'பரிவை' சே.குமார்.  

2 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை... வாழ்த்துகள்...

Yarlpavanan சொன்னது…

சிறப்பான கதை அமைவு
பாராட்டுகள்