மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 8 மார்ச், 2014

மனசின் பக்கம் : பெண் என்னும் தெய்வங்கள்



களிர் தினம் என்பது பெரும்பாலும் நகரங்களுடன் நின்று விடுகிறது. கிராமங்களில் மகளிர் தினம் என்றால் என்ன என்று கூட அறியாமல் அவரவர் வேலையை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அறியாமை இருள் விலக்கி தங்கள் சுயத்தை தாங்களே சுமக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் தினமும் மகளிர் தினம்தான். சரி விஷயத்திற்கு வருவோம்.

மகளிர் தினம் என்றதும் நினைவில் வருவது எங்க அம்மாதான், செல்லவச் செழிப்பான வீட்டில் பிறந்து சாதாரண கிராமத்தில் வாக்கப்பட்டு ஏழு பிள்ளைகளுக்குத் தாயாகி, எங்களின் படிப்பில் அப்பாவின் அக்கறையைவிட அம்மாவின் அன்பும் பாசமும்தான் அதிகம் இருக்கும். அப்பா திருச்சிப் பக்கம் வேலை பார்க்க எங்களை நடுநிலைப் பள்ளியில் இருந்து மேல்நிலைப் பள்ளிக்கு மாற்றி அங்கிருந்து கல்லூரிக்கு மாற்றி எங்கள் படிப்பைத் தொடர நடையாய் நடந்தவர். நான் எம்சிஏ பண்ணும் போது புதுக்கோட்டை செல்ல வேண்டும் என்பதால் அதிகாலையில் எழுந்து சாப்பாடு தயார்ப்பண்ணி நான் குளித்து கிளம்பும் வரை காத்திருந்து அனுப்பியவர். எனக்கு காலையில் பலகாரம் என்றாலே கடுப்பாக இருக்கும். கஞ்சி இருந்தால் போதும்... எனக்காக பலகாரத்துக்கே போடமாட்டார். அக்காக்கள் வந்திருந்தாலும் அவனுக்கு கொஞ்சம் கஞ்சி வர்ற மாதிரி உலை வையுங்க... காலையில பலகாரம் சாப்பிடமாட்டான் என்று சொல்லிவிடுவார். எங்களது ஒவ்வொரு வளர்ச்சியின் பின்னாலும் தனது சுக துக்கங்களை மட்டுமல்ல தூக்கமும் துறந்து நின்றவர்... இன்றும் அப்படியே இருப்பவர் எங்கள் அம்மா.

அம்மாவைத் தொடர்ந்து என் அன்பு மனைவி, மதுரையில் பிறந்து கல்லூரிப் படிப்பு வரை மதுரையிலேயே இருந்தவர், திருமணத்திற்குப் பின்னர்தான் கிராமத்து வாழ்க்கையை அதிகம் அனுபவித்தார். அதற்கு முன்னர் திருவிழாக்கள், திருமணங்கள் என வருடம் ஒருமுறையோ அல்லது இருமுறையோ அவர்களின் சொந்த ஊர், பாட்டி ஊர் என வந்து சென்றிருப்பார். அவரைப் பொறுத்தவரை எல்லாமே நான்தான்.... தேவகோட்டையில் வேலை செய்யும் போதும்... சென்னையில் வேலை செய்யும் போதும் எங்களைப் பிரிவு அணுகவில்லை... வெளிநாட்டு வாழ்க்கைதான் எங்களை கடந்து ஐந்து வருடமாகப் பிரித்து வைத்திருக்கிறது. இப்போது யாருடைய உதவியும் இல்லாமல் இரண்டு குழந்தைகளையும் வைத்துக் கொண்டு அவர் படும் பாடு சொல்லி மாளாது... இதோ நேற்று சந்தோஷமாய் ஆட்டம் போட்ட விஷால் இன்று டைபாய்டில் படுத்திருக்கிறான். குழந்தைகளோடு போராடி... போராடி... எல்லாவற்றிற்கும் தானே ஓடி... எங்களுக்கு எல்லாமாய் இருக்கிறார் என் அன்பு மனைவி.

மூன்றாவதாக நான் பார்த்துப் பெருமைப்படுபவர் எங்கள் ஐயாவின் மனைவி, எங்களுக்கு எல்லாம் அம்மா... நாங்கள் கல்லூரியில் படிக்கும் காலத்தில் அவரின் மகன் காரைக்குடியில் முதுநிலைப் பட்டம் படித்துக் கொண்டிருந்தார்.  மகள் எங்கள் வயதுதான்... திருச்சியில் இளங்கலைப் பயின்று கொண்டிருந்தார். தினமும் மாலை நாங்கள் எல்லாரும் கூடுவது ஐயா வீட்டில்தான்... எங்களுக்கு என்னென்ன பிடிக்கும் என்பது அம்மாவுக்கு அத்துபடி... அவர்கள் சைவம் என்றாலும் எங்களுக்கு விடுமுறை தினங்களில் அசைவ சாப்பாடு செய்து வைப்பர். ஐயாவுக்கும் அவருக்குமான சின்ன மனவருத்தத்தில் நீண்ட காலம் பேசாமல் இருந்தார்கள். ஐயாவுக்கான எல்லாம் செய்வார்கள். ஆனால் பேசுவது மட்டுமில்லை. எங்கள் திருமணத்தின் போதுதான் அவரின் மகளுக்கும் திருமணம். அப்போதுதான் இருவரும் பேசினார்கள். எதற்காகவும் யாரையும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். இப்போதும் ஊருக்குப் போனதும் ஐயா வீடு சென்றால் அதே வாஞ்சையான அன்புடன் வரவேற்ப்பார்கள்.

நான்காவதாக சொல்ல நினைப்பது இங்கு மளிகைக் கடை நடத்தும் ஒரு அக்கா பற்றி... எங்க தேவகோட்டைக்காரர்தான்... தனது அண்ணன் வைத்துக் கொடுத்த கடையை தானே நிர்வகித்துக் கொண்டு தனது கணவரையும் உடன் வைத்துக் கொண்டு நடத்திக் கொண்டிருந்தார். பெரிய பெரிய ஓட்டல்கள், வேலையாட்கள் தங்கும் முகாம்களுக்கு மொத்தமாக பொருட்களை சப்ளை செய்து வருகிறார். அவரின் கஷ்ட நஷ்டங்களைப் பற்றி கவலைப்படாத கணவர் ஒரு பிரச்சினையில் ஜெயிலுக்குப் போக, அலைந்து திரிந்து ஒரு வழியாக அவரை வெளியில் எடுத்தார். ஆனால் அந்த மனிதர் இவரிடம் சண்டை போட்டுக்கொண்டு மீண்டும் ஊருக்குப் போய் குடியே வாழ்க்கை என இருக்கிறார். இவர் ஒருவராக கஷ்டங்களுக்கு இடையே ஊரில் படிக்கும் குழந்தைகளுக்காக கடையை நிர்வகித்து வருகிறார். இவரின் தியாகம், எதையும் துணிச்சலாய் சந்திக்கும் மனதைரியம் எல்லாம் பாராட்டுதலுக்கு உரியது.

இப்படி இன்னும் நிறையப் பேரை இன்றைய மகளிர் தினத்தில் சொல்லலாம். என் அக்காக்கள், தங்கைகள், என்னுடன் படித்த தோழியர், பழகிய தோழியர், முகநூல் சகோதரிகள், வலையுலக நட்புக்கள் அம்மாக்கள் என எல்லாருக்கும் என் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.
-'பரிவை' சே.குமார்.

14 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள். மகனை மருத்துவரிடம் காட்டச் சொல்லுங்கள். சீக்கிரம் குணமடைய எங்கள் பிரார்த்தனைகள்.

Unknown சொன்னது…

பெண்கள் அன்றி வாழ்வில் இன்பம்யேதடாஎன்றே பாடத் தோன்றுகிறது !பெண்களே வீட்டின் தியாகத் தீபங்கள் !போற்றுவோம் !
த ம +1

இராஜராஜேஸ்வரி சொன்னது…

இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.
அன்பு மகன் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்..!

துரை செல்வராஜூ சொன்னது…

சுக துக்கங்களை மட்டுமல்ல தூக்கமும் துறந்து நிற்கும் தியாகம், எதையும் துணிச்சலாய் சந்திக்கும் மனதைரியம் என பெண்மையின் சிறப்புகளை விவரித்த விதம் அருமை.

விஷால் விரைவில் குணமடைய வேண்டுகின்றேன்..

ராஜி சொன்னது…

குழந்தைகளோடு போராடி... போராடி... எல்லாவற்றிற்கும் தானே ஓடி... எங்களுக்கு எல்லாமாய் இருக்கிறார் என் அன்பு மனைவி.
>>
அவரின் தியாகத்தையும், உழைப்பையும் புரிந்து அவரின் மனம் கோணாமல் நடப்பதே நீங்கள் செய்யும் கைமாறு

அம்பாளடியாள் சொன்னது…

பெண்ணினத்தின் பெருமையெல்லாம் போற்றி நிற்கும் நற் படைப்பிற்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோதரா இறைவன் அருளால் இன்பங்கள் சூழ அன்பு மகனுக்கும்
அவனே நல்லாசி வழங்க பிரார்த்திக்கின்றேன் சகோதரா .
மிக்க நன்றி சிறப்பான பகிர்வுக்கு .

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அம்மாவிற்கு நிகர் யாருமில்லை...

டைபாய்டு விரைவில் நீங்க வேண்டுகிறேன்...

ஜோதிஜி சொன்னது…

என் வாழ்த்துகளையும் சொல்லிடுங்க.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

மகளிர் தினத்தில்
குடும்பத்தினரை
போற்றி விதம் அருமை நண்பரே
தங்களின் மகன் விரைவில் குணமடையவார்
கவலை வேண்டாம்

ராமலக்ஷ்மி சொன்னது…

அருமையாகப் பகிர்ந்துள்ளீர்கள். மகன் விரைவில் நலம் பெற என் பிரார்த்தனைகள்.

Unknown சொன்னது…

பகிர்வு,அருமை!///தாய்க் குலத்துக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்!

r.v.saravanan சொன்னது…

தங்கள் மகன் நலம் பெற வாழ்த்துக்கள் குமார்

மகளிர் தின வாழ்த்துக்கள்

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை சொன்னது…

அருமை அய்யா, பெரும்பாலும், அகமும்முகமும் தெரியாதவர்க்கே வாழ்த்துச் சொல்லிவரும் நிலையில், பெற்றதாய், உற்றதுணைவி, உடன்பிறவா சகோதரி என நம் நெஞ்சில் நிலைத்திருப்பவர்களைப் பார்த்து, “இன்னும் நிறையப் பேரை இன்றைய மகளிர் தினத்தில் சொல்லலாம். என் அக்காக்கள், தங்கைகள், என்னுடன் படித்த தோழியர், பழகிய தோழியர், முகநூல் சகோதரிகள், வலையுலக நட்புக்கள் அம்மாக்கள் என எல்லாருக்கும் என் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்” எனும் உங்களின் உண்மையான வாழ்த்துகள் உணர்வுபூர்வமாக இருந்தன.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சிறப்பான மகளிர் தின பகிர்வு குமார்.....

அனைவருக்கும் மனம் நிறைந்த மகளிர் தின வாழ்த்துகள்.