மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 28 மார்ச், 2014

'குக்கூ' வசீகரித்ததா?


னந்த விகடனில் தனது வாழ்வில் நிகழ்ந்த, பார்த்த, ரசித்த நிகழ்வுகளை மிக அழகாக சுவராஸ்யமாக எம்பதுக்கும் மேற்பட்ட வாரங்கள் வட்டியும் முதலுமாகக் கொடுத்த திரு. ராஜூ முருகன் அவர்கள் குக்கூ மூலம் இயக்குநராய் அறிமுகமாகியிருக்கிறார். முதல் படத்திற்கு வித்தியாசமான கதைக்களத்தை எடுத்து வெற்றி பெற்ற இயக்குநருக்கு முதலில் வாழ்த்துக்கள்.

காதல் கதை என்றாலே சந்தோஷம், சோகம், காதலர்களைப் பிரிக்கு ஒரு வில்லன் என இருக்க வேண்டும் என்ற பொதுவான கொள்கை ஒன்று தமிழ் சினிமாவில் உண்டு. அதற்கு விதிவிலக்காக சில படங்கள் வந்து வெற்றியும் பெற்றிருக்கின்றன, ஆனால் அப்படிப்பட்ட கதைகளைக் கையாளும் இயக்குநர்கள் மிக மிகக் குறைவு. பெரும்பாலும் காதல் கதை என்றால் வில்லன், பிரிவு என்றிருந்தால்தான் ஒரு பரபரப்பும் படபடப்பும் ரசிகனை ஆட்கொள்ளும் எந்த அதீத நம்பிக்கையில் வரும் படங்களின் வரிசையில் குக்கூவும் வந்திருக்கிறது.

பிறவியிலேயே கண் பார்வை இழந்த இருவருக்குள் நுழையும் காதலில் அவர்கள் ஜெயித்தார்களா என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். முதன் முதலில் பார்க்கும் போது மோதலில் ஆரம்பித்து கொஞ்சம் நட்பாகி... பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் காதலாகி... நகர்கிற கதையில் இடைவேளைக்குப் பிறகு தொய்வு ஏற்படுவதைக் காண முடிகிறது. இருப்பினும்  கதையின் போக்கோடு போகும் போது தொய்வு பெரிதாகத் தெரியவில்லை என்றாலும் இறுதிக் காட்சிகள் ஆஹா ஓஹோ என்று சொல்லும் அளவுக்கு இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து.

கச்சேரியில் பாடுவது, இரயிலில் எதாவது விற்பனை செய்வது என தனது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் கண் பார்வையற்ற நாயகனாக அட்டக்கத்தி தினேஷ்.... இதில் நடித்திருக்கிறார் என்பதைவிட தமிழாக வாழ்ந்திருக்கிறார். முகபாவனைகள்... கண் அசைப்பு... நடை... உடை... என அனைத்திலும் நல்ல கவனம் செலுத்தியிருக்கிறார். இது அவரை தமிழ்ச் சினிமாவில் நல்லதொரு இடத்தைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.


கொடியாக கேரளத்து வரவு மாளவிகா... கண் பார்வையற்ற பெண்ணின் இயல்புகளை மிகச் சரியாகக் கொண்டு வந்திருக்கிறார். தமிழ் முதல் முத்தம் கொடுக்கும் காட்சியில் எனக்கு இதெல்லாம் பிடிக்காது... நான் போறேன் என்று கிளம்பும் இடத்தில் அந்த படபடப்பை கண்ணிலும் கைகளிலும் அருமையாகக் காட்டியிருக்கிறார். தினேஷ் தனியாக செஞ்சுரி அடித்தார் என்றால் இவர் தினேஷூடன் இருக்கும் இடத்திலும் செஞ்சுரி அடித்து மொத்தத்தில் நடிப்பில் டபுள் செஞ்சுரி அடித்து தினேஷைவிட நடிப்பில் கலக்கியிருக்கிறார் என ஆட்டநாயகி விருதைத் தட்டிச் செல்கிறார்.

நாயகனின் நண்பராக வருபவரின் 'வொண்டர் வொண்டரும்' அந்த 'கே...கே...கே...' சிரிப்பும் பார்ப்பவர்களை கண்டிப்பாக சிரிக்க வைக்கும். இசைக்குழுவை நடத்தும் சந்திரபாபு முகச் சாயல் கொண்ட நடிகரும், புரட்சித் தலைவராக வரும் நடிகரும் கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். சந்திரபாபு ரெண்டு பொண்டாட்டிக்காரராக இருந்து மூணு பொண்டாட்டிக்காரராக மாறி பின்னால் வருந்திச் சொல்லும் இடத்தில் மனதில் நிற்கிறார் என்றால் புரட்சித் தலைவராக வருபவர் படம் முழுவதும் வசனம் பேசாமல் புரட்சித் தலைவர் போலவே நடனம் ஆடி... அவர் போலவே முகபாவங்கள் செய்து நாயகன் உதவி என்று வந்து நிற்கும் போது தனது கழுத்தில் கிடக்கும் செயினைக் கழட்டிக் கொடுத்து நெஞ்சில் நிற்கிறார்.

தங்கைக்கு ஆசிரியை பணி கிடைத்தால் நாம் சுகமாக வாழலாம் என்பதால் நண்பன் மூலம் பணம் வாங்கி அவனுக்கே தங்கையைக் கட்டிக் கொடுக்கத் துடிக்கும் அண்ணனும் கொடியை அடையத் துடிக்கும் அவனின் நண்பனும் வில்லன் பங்கைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். கொடி தப்பிப் போகும் போது மெயின் ரோட்டில் கார்கள் செல்வதைப் பார்த்து  ரோட்டைக் கடக்க முடியாமல் பதறி நிற்கும் போது தனது வேனில் ஏற்றிச் செல்பவர் அவளைத் திரும்பித் திரும்பிப் பார்க்கும் போது எல்லாப் படத்திலும் போல் இதிலும் நாயகியை அடையத் துடிக்கும் கதாபாத்திரத்தை இயக்குநர் இங்கு வைத்திருக்கிறாரோ என்று எண்ணும் போது அவரே அடிபட்டுக் கிடக்கும் நாயகனையும் வேனில் ஏற்றி மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றுவதாகக் காட்டும் போது மனித நேயம் மிக்க மனிதராக நம்மில் உயர்கிறது அந்தக் கதாபாத்திரம்... அப்புறம் ஏன்யா அடிக்கடி அந்தாளு கொடியை ஒரு மாதிரி பாக்குறமாதிரிக் காட்டணும்... பாக்குறவன் பதைபதைக்கணுமின்னா...


ஆடுகளத்தில் தனுஷின் நண்பராக வருபவர் இதிலும் கொடுத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தியிருக்கிறார். மேலும் நாயகியின் தோழியாக வருபவர், இரயில்வே நிலையத்தில் இருக்கும் கிழவன், சந்திரபாவுவின் மனைவிகள், கொடிக்கு ரீடராக வருபவன், காலையிலேயே கிளம்பும் போது ரெண்டு குடும்பத்துக்கு நல்லது செய்யணுமின்னு வருவேன்னு சொல்லும் அரசியல் கட்சிக்காரன் என எல்லோரையும் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர். 

 'உங்குரலைக் கேட்டா ரோஸி சிஸ்டர் ஞாபகம் வருவாளே அதான் நீ... நீ அடிச்சப்ப ரத்தம் வந்துச்சே அதான் நீ...' இது போன்று படத்தில் வசனங்கள் அருமையாக இருக்கின்றன. கண் பார்வையற்ற இருவரின் காதலை மிக அழகாக பேசியிருக்கிறது குக்கூ. பாடல்கள் ரசிக்க வைத்தாலும் பின்னணி இசையில் முன்னணியில் நிற்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். படத்தைத் தயாரித்த பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் இயக்குநருக்கு கார் பரிசு கொடுத்திருப்பதாக செய்தியில் படித்தேன். 

படத்தில் இந்தக் கதையைச் சொல்பவராகவும் காதலர்கள் சேர்வதற்கு காரண கர்த்தாவாகவும் நடித்திருக்கிறார் இயக்குநர் ராஜூ முருகன். இயக்குநர்கள் நடிகர் ஆவது என்பது தமிழ்ச் சினிமாவில் ஒரு தொற்று வியாதி போல... உங்கள் இயக்கங்களால் ரசிகர்களின் மனதில் உயர்ந்து நில்லுங்கள் இயக்குநரே.. நடிகனாக ஆசை வேண்டாம்.


படம் அருமை... நடிப்பு அருமை... முதல் படத்தில் முத்திரை பதிச்சிட்டாரு ராஜூமுருகன்னு சொன்னாலும் வீட்டில் இருந்து ஓடிப்போன நாயகி மும்பையில் இருக்கும் செய்தி அறிந்து  கண் தெரியாத ஒருவன் தனியாக மும்பைக்குப் கிளம்பிப் போவதாகக் காட்டுவது அக்மார்க் சினிமாத்தனம்... இது போன்ற சில சினிமாத்தனமான காட்சிகளும் இழுவையான பின்பாதியும் இன்னும் செதுக்கப்பட்டிருந்தால் குயில் இன்னும் அருமையாகக் கூவியிருக்கும். இசைஞானியின் பாடல்கள் படம் முழுவதும் இளையோடுவது ரசிக்க வைக்கிறது என்பது உண்மைதான்... ஆனால் இப்போது வரும் பெரும்பாலான படங்களில் ராஜாவின் பாடல்களைப் பயன்படுத்துவது படம் ஜெயிக்க வேண்டும் என்பதாலா? நாயகன் வேறு இசையமைப்பாளர்களின் பாடல்களை பாடவே இல்லை என்று நினைக்கிறேன்.

தமிழ்ச் சினிமாவைப் பொறுத்தவரை பெரும்பாலான இயக்குநர்கள் முதல் படத்தில் பிரமாண்டமான வெற்றியுடன் முத்திரை பதித்துவிட்டு அடுத்தடுத்த படங்களில் சரக்கில்லாதது போல் சொதப்பலான படங்களை எடுக்க ஆரம்பித்துவிடுகின்றனர்.... ராஜூ முருகன் சார் வரும் படங்களில் இன்னும் சிறப்பான கதைக் களத்துடன் களமிறங்கி நான் எப்போதும் ஜெயிக்கப் பிறந்தவன் என்று வெற்றிக் களிப்போடு முன்னணி இயக்குநராய் வாருங்கள் சார்.

மொத்தத்தில் பின்பாதியை நீட்டி முழக்காமல் சினிமாத் தனங்களைக் குறைத்திருந்தால் 'குக்கூ' இன்னும் வசீகரித்திருக்கும் இருப்பினும் தமிழ்ச் சினிமாவில் இந்த கண்ணிழந்த குயில்களின் 'குக்கூ' ஓசை கண்டிப்பாக அனைவராலும் பேசப்படும்...
-'பரிவை' சே.குமார்.

6 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பரவாயில்லை என்று பிடித்திருந்தது...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல விமர்சனம். நானும் பார்க்க நினைத்திருக்கிறேன். இங்கே வெளியிடவில்லை. அதனால் தொலைக்காட்சியில் தான் பார்க்கணும் போல!

Unknown சொன்னது…

உங்கள் பார்வை சரியானது,என் பார்வையும் அப்படியே தான்!பின் பாதி கொஞ்சம் வழ,வழா தான்!!///மகிழூந்து பரிசு மட்டுமல்ல,இரண்டாவது படமும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

நல்லதொரு விமர்சனம்! நன்றி!

r.v.saravanan சொன்னது…

நான் பார்த்து விட்டேன் குமார் எனக்கு பிடித்திருந்தது இடைவேளைக்கு
பின் இன்னும் கொஞ்சம் கவனமெடுத்திருக்கலாம்
ராஜு முருகன்
இருந்தும் முத்திரை பதித்திருக்கிறார்

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

படம் பார்க்கத் தூண்டும் விமர்சனம்
த.ம.4