மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 24 மார்ச், 2014

சில சினிமாக்கள் : ரம்மி என்றால் தெகிடியா?

டந்த வாரத்தில் ஒரு சில காரணங்களால் இணையத்தில் அதிக நேரம் செலவிடவில்லை. எழுதும் எண்ணமும் கொஞ்சமும் இல்லை. நண்பர்களின் எழுத்துக்களையும் வாசிக்கவில்லை. இந்த இடைப்பட்ட நாட்களில் சில தமிழ்ப்படங்களைப் பார்த்தேன். அவற்றின் விமர்சனமாக அல்லாமல் சும்மா ஒரு பதிவாக பகிரலாமே என்று எழுத ஆரம்பித்ததுதான் இந்தப் பகிர்வு. இல்லைன்னா ஆளைக் காணோம் கடையை மூடிட்டான்னு நினைச்சிருவீங்கன்னுதான் இந்தப் பகிர்வு. தொடர்கதையைக் கூட கடந்த வாரத்தில் தொடர முடியவில்லை. அதைப் படிக்கும் ஒரு சிலரும் சரக்கு தீர்ந்து போச்சு போலன்னு நினைச்சிடக்கூடாது பாருங்க... அதனால இந்த வாரம் எப்படியும் அதைத் தொடரணும்... சரி வாங்க சினிமாவுக்குள்ள போவோம்.

நினைத்தது யாரோ


நீண்ட நாட்களுக்குப் பிறகு விக்ரமனின் இயக்கத்தில் வெளிவந்த படம். காதலால் பாதிக்கப்பட்ட ஐந்து பேர் ஒரே வீட்டில் தங்கி காதலை எதிர்க்கிறார்கள். சினிமா இயக்குநர் ஒருவரைப் பேட்டி எடுக்கப் போகும் இடத்தில் அவரது காதல் கதையை இவர்களிடம் சொல்ல முடிவில் இவர்கள் மனம் மாறினார்களா என்பதை விக்ரமன் தன் பாணியில் சொல்லியிருக்கிறார். புதுமுகங்கள் இயக்குநர் சொல்லியதைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள் இயக்குநராக வரும் ரெஜித் மேனன் நல்ல தேர்வு. சமீப காலமாக தமிழ் சினிமாவில் தாடி, மீசையுடன் பரட்டைத் தலையோடு அறிமுகமாகும் நாயகர்களில் அழகாக காட்டப்பட்டிருக்கிறார். கொஞ்சம் நடிக்கவும் செய்கிறார். நாயகி நிமிஷா அழகாக இருக்கிறார். அக்மார்க் விக்ரமன் நாயகியாக படத்தில் வந்து போகிறார். பாடல்கள் ஆஹா... ஓஹோ என்றெல்லாம் இல்லை. படத்தின் இறுதிக் காட்சியில் தமிழின் முன்னணி இயக்குநர்கள், சூர்யா, விமல் எல்லாம் வருகிறார்கள்.


தெகிடி



குறும்படம் இயக்கி வெற்றி பெற்ற இயக்குநர் ரமேஷின் முதல் படைப்பு இந்த தெகிடி. க்ரைம் கதையை காதல் கலந்து முற்றிலும் புதுமையான வடிவத்தில் தந்திருக்கிறார் இயக்குநர். கிரிமினாலஜி படித்த நாயகனுக்கு தனியார் துப்பறியும் நிறுவனத்தில் வேலை கிடைக்க விரும்பிய வேலை கிடைத்த மகிழ்ச்சியில் கொடுக்கும் வேலைகளைச் சிறப்பாகச் செய்கிறார். இவர் யாரைப்பற்றிய விவரங்களைச் சேகரிக்கிறாரோ அவர்கள் கொல்லப்படுகிறார்கள். இதற்கிடையே தான் இவரைப் பற்றித்தான் விவரம் சேகரிக்கப் போகிறோம் என்று தெரியாமல் காதலில் விழ, அவரைக் காப்பாற்ற போராடுகிறார். போலீஸூக்குப் போனாலும் நாயகன் தானே எல்லாவற்றையும் செய்வது ஏற்புடையதாக இல்லை. நல்ல திரில்லர் கதை, வித்தியாசமான கதைக்களம் இருந்தும் படத்தில் பெரிய எதிர்பார்ப்பில்லாமல் போவது சலிப்பாக இருக்கிறது. முடிவில் முக்கிய வில்லன் இன்னும் இருக்கிறான் என்பது போல் அவனது விசிட்டிங் கார்டைக் காட்டுவது இரண்டாம் பாகத்திற்கான வாடிவாசலாகத் தெரிகிறது. இருந்தும் படம் விறுவிறுப்புக் குறைந்தாலும் ஏமாற்றவில்லை. நாயகன் அசோக் செல்வன் சிறப்பாகச் செய்திருக்கிறார். நண்பராக வரும் காளி நகைச்சுவை கலந்து கலக்கியிருக்கிறார். நாயகி ஜனனிக்கு வந்து போகும் வேலை மட்டுமே. பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை.


ரம்மி


அடியே என்ன ராகம் நீ பாடுறேங்கிற பாடலால் என்னைக் கவர்ந்த படம். படம் நல்லாயில்லை என்ற விமர்சனங்கள் நட்பு வட்டத்தில் இருந்து வந்தாலும் பார்க்க வேண்டும் என்று பார்த்த படம். சிவகங்கை மாவட்டத்தில் நடக்கும் கதையில் இரு நாயகர்கள். இருவருக்கும் வேறு வேறு சூழல், காதலை எதிர்க்கும் கிராமத்தில் தங்கிப் படிக்கிறார்கள். அங்கு காதலிக்கவும் செய்கிறார்கள். காதலித்தால் உயிரை எடுக்கும் தலைவரின் மகளைக் காதலித்ததால் உயிரை விடுகிறான் ஒருவன். தன் தந்தையையே கழுத்தறுக்கிறாள் மகள். விஜய் சேதுபதியின் நடிப்பு படத்துக்குப் படம் மெருகேறிக் கொண்டே போகிறது. இனிகோ கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாகச் செய்திருக்கிறார். நாயகிகளும் சொன்னதைச் செய்திருக்கிறார்கள். சூரி இதில் ரொம்பப் பேசிக் கொல்லவில்லை. நகைச்சுவைக்கும் பஞ்சம்தான். தலைவரின் மகள் என்று ஆரம்பக் காட்சிகளில் காட்டவேயில்லை ஏன்? ஊரில் காதலிப்பவர்களை எதிர்க்கும் தலைவரின் மகளுடன் ஒரே கிணற்றில் குளிக்கும் போது யாருமே பார்க்காதது ஏன்? என படத்தில் ஏகப்பட்ட ஏன்கள்... லாஜிக் இல்லாத காட்சிகள் இருப்பதால் படம் பார்ப்பவர்களை கவரவில்லை. ஆனால் பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகின்றன. தென் மாவட்டத்தைக் கதைக்களமாகக் கொண்டு நல்ல கதைகளைச் சொல்லமுடியும் என்ற போதிலும் மதுரைக்கு அந்தப் பக்கம் என்றாலே அரிவாளும் கொலைகளும் மட்டுமே காட்டப்படுவது இதிலும் தொடர்கிறது என்பது வேதனையான விஷயமே.

இன்றிரவு வட்டியும் முதலும் ராஜூ முருகனின் ....


பார்த்துவிட்டு விரைவில் பேசலாம்...
-'பரிவை' சே.குமார்.

12 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

படங்களின் சுருக்கமான விமர்சனமா.... :)))

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

"நினைத்தது யாரோ" பார்க்க வேண்டும்...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல பகிர்வு..

இத்தனை படம் பார்க்கும் பொறுமை உங்களுக்கு இருக்கிறதே - வாழ்த்துகள் :)

கார்த்திக் சரவணன் சொன்னது…

தெகிடி எனக்குப் பிடித்திருந்தது நண்பா...

Unknown சொன்னது…

தேகிடி என்பதற்கு அர்த்தம் சொல்லுங்கள் ,ரம்மியா இல்லையா என்று சொல்கிறேன் !
+6

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

விமர்சனங்கள் அருமை நண்பரே

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

tha.ma/7

ஜீவன் சுப்பு சொன்னது…

//படத்தின் இறுதிக் காட்சியில் தமிழின் முன்னணி இயக்குநர்கள், சூர்யா, விமல் எல்லாம் வருகிறார்கள்.//

என்ன ஜி சொல்றீங்க .... சூர்யா , விமல்லாம் எப்பங்க ஜி டைரக்ட் பண்ணுனாங்க .... என்னமோ போங்கோ ஜி ...

'பரிவை' சே.குமார் சொன்னது…

படித்துக் கருத்திட்ட
ஸ்ரீராம் அண்ணா...
தனபாலன் சார்...
வெங்கட் அண்ணா...
நண்பர் ஸ்கூல் பையன்...
பகவான் ஜி
ஜெயக்குமார் அய்யா...

அனைவருக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நண்பா ஜீவன் சுப்பு...

என்ன இப்படிச் சொல்லிட்டீங்க... இயக்குநர்கள், சூர்யா, விமல்ன்னு தானே எழுதியிருக்கேன். கமா போடும் போது தனித்தனி வார்த்தைகள் தானே... நீங்க கவனிக்கலையோ... என்னமோ போங்க நண்பா...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜீவன் சுப்பு சொன்னது…

மன்னிச்சு ... மன்னிச்சு ... மன்னிச்சு !

r.v.saravanan சொன்னது…

நான் தெகிடி மற்றும் ரம்மி பார்த்தேன் இதில் தேகிடி பிடிச்சிருந்தது ரம்மி நன்றாக வந்திருக்க வேண்டிய படம் குக்கூ பார்த்துட்டு எழுதுங்க நான் இன்னும் பார்க்கல