சும்மா கிராமத்து நினைவுகளைக் கிறுக்க ஆரம்பித்து இது 25வது பகிர்வு. சென்ற கிராமத்து நினைவுகளில் அண்ணன் ஜோதிஜி அவர்கள் அதிகமான கிராமம் சார்ந்த பதிவுகளைப் பகிர்ந்தது நீயாத்தான் இருக்கும் என்று சொல்லியிருந்தார். எனக்கு என்னவோ எங்க பூமியும் அந்த மக்களும் எப்போதும் மனசுக்குள் மத்தாப்பாய்.... ஊத்தாங்கிணறு என்று சொல்வார்கள்... தண்ணீர் ஊற ஊற இறைத்துக் கொண்டேயிருந்தாலும் அது ஊறிக்கொண்டேதான் இருக்கும்... அது போலத்தான் இன்னும் எங்கள் ஊர் குறித்தான் பல நினைவுகள் என்னுள்ளே எழுதுவதற்காக குவிந்திருக்கின்றன.
எங்கள் ஊர் மாரியம்மன் கோவில் செவ்வாய்க்கு எதாவது கலை நிகழ்ச்சி வைப்போம். சிறிய ஊர் என்பதாலும் சுத்துப்பட்டு கிராமங்களும் சிறிய கிராமங்கள் என்பதாலும் எந்த நிகழ்ச்சி என்றாலும் கூட்டம் வருவதில்லை. இப்போதெல்லாம் கலை நிகழ்ச்சிகளை குறைத்துவிட்டோம். நாடகம், ஒயிலாட்டம், திரைப்படம் என வைத்துப் பார்த்து எதுவும் ஒத்து வராததால் கரகாட்டத்தில் இறங்கினோம். முதல் முறை கரகாட்டத்துக்கு பாம்பு நடனம், மயில் நடனம் என வித்தியாசமாகச் செய்து கொண்டிருந்து இரு சகோதரிகளைக் கூட்டி வந்தோம். ஆபாசமோ அருவெறுப்போ இல்லாமல் ரொம்ப அருமையாக இருந்தது. எல்லாருக்கும் மிகவும் பிடித்திருந்தது. என்ன அந்தப் பெண்களுக்கு கொடுத்த காசில் ஒரு கரகாட்டமே நடத்தியிருக்கலாம்.
அதற்குப் பிறகு சாதாரண கரகாட்டக் குழுக்களைக் கொண்டு வந்தோம். அவர்கள் வந்ததும் அவர்களுக்கு சாப்பாடு உபசரிப்பு எல்லாம் முடித்து அவர்களிடம் ஆபாசமாக ஆடக்கூடாது என கண்டிப்புடன் சொல்லிவிடுவார்கள். அப்படியும் நேரம் ஆக ஆக ஊத்திய சரக்கு எங்க போகும்... கொஞ்சம் அப்படியிப்படி ஆட ஆரம்பிச்சிடுவானுங்க... காலையில் பார்த்தால் பெருசுக எல்லாம் எவ்வளவு சொல்லியும் அவன் புத்தியக் காட்டிட்டாம்ப்பா... இனி அடுத்த வருசம் கரகாட்டம் வைக்கக் கூடாது என்று சொல்லுவார்கள்.
கரகாட்டம் என்பது மிகவும் சிறப்பான கலை... ஆனால் அதை பொதுவெளியில் ஆடும் போது ஆபாசமாகவும் அருவெறுப்பாகவும் பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைக்கும் விதத்திலும் ஆட ஆரம்பித்து விட்டார்கள். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. இப்போது அப்படித்தான் ஆடச் சொல்கிறார்கள். நாங்கள் கரகாட்டத்தை புனிதமாகக் கருதுகிறோம் என்று சொன்னால் அவர்கள் வீட்டில் அடுப்பெரியாது. ஏன் வள்ளி திருமணம், சத்தியவான் சாவித்திரி, பளக்கொடி, தூக்குத்தூக்கி, அர்ஜூனன் தவசு... இவற்றில் எல்லாம் கலந்த ஆபாசம் அரிச்சந்திர மயான கண்டத்தையும் விடவில்லை. இப்போதெல்லாம் நாடகம் என்றால் இரட்டை அர்த்த வசனம் இல்லாமல் நடத்தப்படுவதில்லை. அதிலும் குறிப்பாக வள்ளி திருமணத்தில் ஆரம்பம் முதல் கடைசி வரை இரட்டை அர்த்த வசனங்கள்தான்.... நாரதரும் முருகரும் வள்ளியும் கூட பேச ஆரம்பித்துவிட்டார்கள். மற்ற நாடகங்களில் பபூன் டான்ஸ் வரும்போது மட்டும் இருக்கிறது.
தேவகோட்டை பேருந்து நிலையத்துக்கு உள்ளே வருடா வருடம் தமிழ்ப்புத்தாண்டுக்கு கரகாட்டம் வைப்பார்கள். ஒவ்வொரு வருடமும் போலீஸ் பாதியிலேயே நிறுத்தும் அளவுக்கு மோசமாக பேச ஆரம்பித்து விடுவார்கள். நிலமை மிக மோசமாக இருக்க கடந்த சில வருடங்களாக கரகாட்டத்துக்கு அனுமதியில்லை என்று சொல்லி நடத்த விடுவதில்லை. கிராமங்களுக்கு அனுமதி கொடுத்தாலும் இரண்டு போலீஸ் வந்து அங்கேயே இருப்பார்கள். அருகில் இருக்கும் கிராமங்கள் என்றால் எஸ்.ஐ. ஒரு விசிட் அடிப்பார். மூவருக்கும் காபி, சாப்பாடு மற்றும் கிராமத்தினரின் கவனிப்பும் கண்டிப்பாக இருக்கும்.
இப்படி கரகாட்டங்கள் வைத்துக் கொண்டு வந்த போது ஒரு வருடம் நம் சகோதரன் ஒருவன் கரகாட்டம் ஏற்பாடு பண்ணும் ஏஜெண்டுடன் நட்பில் இருந்தான். ஊரில் கூட்டம் போட்டு கரகாட்டம் வைக்கிறோம் என்று சொன்ன போது இளைஞர் மன்றம் இந்த வருடம் கரகாட்டத்துக்கு ஏற்பாடு பண்ணுங்கப்பா... ஊர்ல இருந்து கொஞ்சம் பணம் தாறோம். மீதத்தை நீங்க போட்டுக்கங்க என்று சொல்லிவிட்டார்கள். உடனே சகோதரனும் அப்போது மிகப் பிரபலமாக இருந்த தஞ்சை துர்காவைத்தான் குறத்தியாக் கொண்டு வரணும் என்று சொல்லி அதற்கான ஏற்பாட்டில் இறங்கிவிட்டான்.
முதல் நாள் இரவு கோவிலுக்கு எதிரே கிடக்கும் பொட்டலில் சுத்தம் செய்து நான்கு பக்கம் கம்பு ஊன்றி விளக்குகள் எல்லாம் கட்டி சீரியல் லைட்டுக்கள் எல்லாம் போட்டு கோவிலைச் சுற்றி கொடிகள் கட்டும் போது அங்கும் கொடிகள் கட்டி துர்க்காவின் ஆட்டத்தை ரசிக்க ஊரே தயாராகி இருந்தது. எப்பவும் போல் வந்திறங்கியதும் சாப்பாடு உபசரிப்பு எல்லாம் முடிந்து கரகாட்டம் ரொம்ப நல்லா இருக்கணும், ஆபாச பேச்சுக்கள் வேண்டாம்... பொம்பள புள்ளைங்கதான் அதிகம் பார்ப்பாங்க... சாதித் தலைவர்களைப் பற்றி யார் பாடச் சொன்னாலும் பாடக்கூடாது என எல்லாம் சொல்லி விட்டார்கள்.
இந்த சாதித் தலைவர்கள் பற்றி பாடச் சொல்லும் போது தேவரைப் பற்றி பாடச் சொல்லி ஒரு கூட்டம் பணம் கொடுக்கும். உடனே இன்னொரு கூட்டம் இம்மானுவேல் பற்றி பாடு என்று அடுத்து பணம் கொடுக்கும், இதைப்பார்த்த இன்னொரு கூட்டம் வீரன் அழகுமுத்துக் கோன் பற்றி பாடுங்க என்று சொல்லி பணம் கொடுக்கும் இப்படி போட்டியில் ஆரம்பிக்கும் நிகழ்வு பின்னர் அடிதடிக்கு மாறிவிடும். பாக்க வந்த கூட்டம் பத்த வச்சிட்டுப் போயிடும் நிகழ்ச்சி நடத்திய கிராமம் பத்திக்கிட்டு எறியும். அதனால முன்னெச்சரிக்கையா இதெல்லாம் சொல்லிடுவோம். குறவன் வேடம் போடுபவரும் மைக்கைப் பிடித்ததும் இதெல்லாம் சொல்லி விட்டுத்தான் ஆரம்பிப்பார்கள்.
ஆரம்பத்தில் நையாண்டி மேளம் ஒரு அரை மணி நேரத்துக்கு அடிப்பார்கள் பாருங்கள்... அப்பப்பா.... நம்மளையும் ஆட வைத்துவிடும்... அந்த அடி... அதுவும் ஊரைச் சுற்றி கூம்பு ஒலிபெருக்கிகளும்... கோவிலுக்கு அருகே ஆறடி உயர பாக்ஸ்களும் வைத்து சும்மா கும்... கும்ன்னு ஊரே அதிருமில்ல... அப்புறம் இரண்டு பேர் கரகாட்டம் ஆடுவார்கள். அதுக்கு அப்புறம்தான் குறவன் குறத்தி... இவர்களுடன் பபூனும் இணைந்து கொள்வார். அப்புறம் என்ன விடிய விடிய கச்சேரிதான்.
சரி துர்காவை பாதியிலேயே விட்டுட்டோமே... உண்மையிலேயே துர்கா நல்ல சிவப்பா சிம்ரன் (அப்போ) கணக்காத்தான் இருந்துச்சு. ஆரம்பத்துல ரொம்ப நல்லா ஆடுச்சு... ஒவ்வொரு பெருசா கழண்டுக்கிச்சுங்க... எங்க சித்தப்பா மட்டும் எங்க கூட அமர்ந்திருந்தார். அவரும் தம்பிகளா நீங்க யாரும் வீட்டுக்குப் போயிடாம கடைசி வரைக்கும் இருந்து எந்தப் பிரச்சினையும் வராம பாத்துக்கங்க என்று சொல்லி மெதுவாகக் கிளம்பிவிட்டார். நானும் எஸ்கேப் ஆகப் பார்த்தேன்... இளைஞர் மன்றத் தலைவரே போன எப்படின்னு இழுத்து உக்கார வச்சிட்டானுங்க... ஒரளவு கூட்டமும் இருந்துச்சு... எல்லாக் கரகாட்டக்காரிகளுக்கும் போல் துர்க்காவுக்கு கட்டைக் குரல் இல்லை... நல்லாத்தான் பாடுச்சு... ஆனா பாதிப்பாட்டை முழுங்கிரும்... ஒரு மணி ரெண்டு மணி வரைக்கும் நல்லாத்தான் போச்சு.
நம்ம மச்சான் ஒருத்தன் பத்துப் பத்து ரூபாயா மாத்தி வச்சிருந்திருப்பான் போல... அவனும் துர்காதான் இந்த வருடம் என்று கூட்டி வந்த சகோதரனும் துர்காவிடம் டீல் பேசிட்டானுங்க... ஒரு பத்து ரூபாயைக் கொடுத்து ஆளைக் கையைக் காமிச்சிட்டானுங்கன்னா போதும் எப்படியும் அந்த ஆளை உண்டு இல்லைன்னு பண்ணிட்டுத்தான் மறுவேலை.... கரகாட்டத்தில் குறத்திகள் எல்லாருமே முன்னால் உக்காந்திருக்கும் நபர்கள் மேல் ஓடிப்போய் அமர்வதும் அவர்கள் கையைப் பிடித்து இழுப்பதும் என எல்லாம் செய்வார்கள். துர்காவும் அதுபோல் ஆட்டத்தை ஆரம்பித்தாச்சு... ஒவ்வொரு ஆளா கையைக் காமிச்சிட்டானுங்க... அவர்களைப் பார்த்துக் கொண்டே ஆடி கொடுத்த பத்துரூபாய்க்கு காரியத்தை கச்சிதமா முடிச்சி வச்சிடும்...
எனக்குத் தெரியும்... கண்டிப்பாக நம்மளையும் மாட்டிருவானுங்கன்னு... டேய் எனக்குத் தூக்கம் வருது நான் கிளம்புறேன்னு சொன்னதும் நல்லாயிருக்கே.... உங்க சித்தப்பா என்ன சொல்லிட்டுப் போனாரு... நீ போனியன்னா அவரு நாளைக்குத் திட்டுவாருப்பா என்று சொல்லி அடக்கிவிட சரி பலியாடை பக்குவமா பிடிச்சு நிப்பாட்டுறானுங்கன்னு ரொம்ப சூதனமா தள்ளிப் போய் உக்காந்துக்கிட்டேன். இம்புட்டுக் கூட்டத்துல கடைசியா நிக்கிற நம்மளைத் தேடியா வரப்போறான்னு தைரியத்தோட நின்னுக்கிட்டு இருந்தேன். காசைக் கொடுத்து காதுக்குள் எதோ சொல்ல கொஞ்ச நேரத்தில் கிளி என்னை ஒரு லுக்கு விட்டது. ஆஹா கன்னி வச்சிட்டாய்யான்னு கொஞ்சம் மெதுவா பின்வாங்கி நாச்சியம்மத்தா கோவில் வாசலில் போய் அமர்ந்தேன் இனியா வரப்போறான்னு அசட்டுத் தைரியத்தோட.
கொஞ்ச நேரத்தலு மறுபடியும் ஒரு டாப் கியர் கொடுத்து கூட்டத்துல புகுந்தா நானும் டக்குன்னு சுதாரிச்சி எந்திரிச்சி ஓட ரெடியா இருந்தேன். பாத்துட்டானேன்னு மறுபடியும் ஆட்டத்தில் குதித்தாள். கொஞ்ச நேரத்துல டக்குன்னு ஓடியாந்துட்டா... பக்கத்துல அவளைப் பார்த்ததும் நாச்சியம்மத்தா கோவில் ஓரமா எங்க வீட்டுப் பக்கம் கொஞ்சமா முள்ளுக் கிடக்கும்... முள்ளாவது ஒண்ணாவது அதுக்கு குதிச்சி ஓடினா... அவ சுத்திக்கிட்டு விரட்டி வாரா... நேர மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு முன்னால போய் உக்காந்துட்டேன். அவ அந்த டிரஸ்ஸோட கோயில்ல ஏற மாட்டான்னு தெரியும்... வாசல்ல நின்னு சும்மா வா ஒண்ணும் செய்ய மாட்டேன்னு கூப்பிட்டுப் பார்த்தா... ம்ஹூம்... அவகிட்ட மாட்டினா நாளைக்கு ஊருக்குள்ள நம்ம கெத்து என்னாகுறதுன்னு கோயிலை விட்டு இறங்கவே இல்லை... எங்கண்ணன் வீட்டு வாசலில் கயிற்றுக்கட்டிலில் படுத்துக்கிட்டே இதையெல்லாம் பாத்துக்கிட்டே இருந்திருப்பாரு போல. அவளுக்கு ஒரு சத்தம் போட இரு வராமயா போயிடுவேன்னு சொல்லிட்டுப் பொயிட்டா... அதுக்கு அப்புறம் அங்கிட்டு கொஞ்ச நேரம் எட்டிப் பார்த்துட்டு வீட்டுல போயி படுத்துட்டேன்.
மறுநாள் காலையில எல்லாருக்கும் பணம் கொடுக்கணும்... எங்க சித்தப்பா என்னைய கூப்பிட்டாரு... நாங்க எல்லாரும் சித்தப்பா வீட்டு பணம் கொடுக்கப் போனோம். அப்போ துர்கா எங்கிட்ட நல்லாப் பேசிக்கிட்டே வந்துச்சா... அப்போ எல்லாரையும் துரத்தியாச்சும் புடிச்சிருக்கேன்... நீங்கதான் தப்பிச்சிட்டீங்க... கூப்பிடுறேன் அப்புடியும் வரலையேன்னு சொன்னுச்சு... நான் ஒண்ணும் சொல்லலை... அப்போ மச்சான் அவருதான் இப்போ பணம் தரணும்... இளைஞர் மன்றத் தலைவர்... ராத்திரி அவரை துரத்திப் பிடிச்சிருந்தியன்னா உனக்கு இப்போ பணம் கிடைக்காதுன்னு சொன்னதும் அடப்பாவி இதை ராத்திரி நீ சொல்லலைன்னு சொன்னுச்சு...
திருமணமான முதல் வருடமா.... துர்காக்கிட்ட பேசிக்கிட்டுப் போறதை என் மனைவி பார்த்துட்டு வீட்டுக்குப் போனது என்ன அவகிட்ட கொழஞ்சு கொழஞ்சு பேசினீங்க... நீங்களும் உங்க சித்தப்பாவும் விட்டா அவளை வீட்லயே கொண்டு போயி விட்டுட்டுத்தான் வருவீங்க போலன்னு சொல்ல எங்க அண்ணன் ராத்திரி முள்ளுக்குள்ள அவன் விழுந்து ஒடுன ஓட்டத்தை நீ பாக்கலையேன்னு கேட்டு சிரிச்சாரு... அப்போத்தான் எனக்கு கால்ல குத்துன முள்ளு வலிச்சது.
இந்த வருடம் மே மாதம் திருவிழா... மறுபடியும் துர்காவுக்கு பாக்கு வைக்கலாமான்னு பங்காளிக்கிட்ட கேக்கணும்...
நினைவுகள் தாலாட்டும்...
-'பரிவை' சே,குமார்.
11 எண்ணங்கள்:
இனிமையான நினைவுகள்....
நீங்கள் சொல்வது போல, இப்போதெல்லாம் கரகாட்டத்தில் ரொம்பவே ஆபாசத்தினையும் கலந்து விட்டார்கள் - விலை போவதைத் தானே விற்க முடியும் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்......
இந்த வருடமும் அசத்துங்க..!@
#எனக்கு கால்ல குத்துன முள்ளு வலிச்சது.#
இந்த வலி மறக்காதுன்னு நம்புறேன் !
த ம +1
அட்டகாசமான நிகழ்வுகள் ... எவ்வளவு எழுதினாலும் சொல்ல இன்னும் நிறைய இருப்பது என்னவோ கிராமத்தில் மட்டும்தான் ... நிறைய எழுதுங்கள்
கிராமத்து நிகழ்வுகள். பெண்கரகாட்டக்காரர்கள் நம்மஊரில் எல்லாம் இல்லை.
விஜயதசமிக்கு ஆண்கள் கோயிலுக்கு கரகம்எடுப்பார்கள்.
என் கிராமத்து நினைவுகளையும் தூண்டிவிட்டீர்கள்!
சின்ன வயதில் பார்த்தது. பகிர்வு நன்று.
கரகாட்ட நினைவுகள் அருமை! இந்த வருடம் அசத்த வாழ்த்துக்கள்!
மிகவும் ரசித்துப் படித்தேன் ஐயா! நல்ல நினைவுகள் அருமை!!
மிகவும் ரசித்துப் படித்தேன் ஐயா! நல்ல நினைவுகள் அருமை!!
மிகவும் ரசித்துப் படித்தேன் ஐயா! நல்ல நினைவுகள் அருமை!!
கருத்துரையிடுக